தற்காலிகமா? நிரந்தரமா?

ஐரோப்பியர்களுக்குக் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் (Living together) தவிர்க்க முடியாத நெருக்கடியின் விளைவு. இந்தியர்களுக்கு சேர்ந்து வாழ்தல் நெருக்கடி அல்ல;தேர்வு (Choice). இரண்டில் எது ? பந்தம் தொலைத்துக் கொஞ்சும் - கொஞ்ச காலமா? பந்தமென்றறியாத பந்தம் தொடரும் நீண்ட காலமா? தற்காலிகமா? நிரந்தரமா? 


இப்படிக் கேட்டால் இந்தியர்கள் எப்போதும் விரும்புவது நிரந்தரத்தை. ஐரோப்பியர்கள் விரும்புவது தற்காலிகத்தை. இந்தியப் பண்பாட்டின் ஆதரவாளர்கள் நிரந்தரமானதையே ஆதரிப்பார்கள். மணிரத்னம் நிரந்தரத்தின் ஆதரவாளர் என்பதை எப்போதும் சொல்லி வருகிறார். சென்னை, மும்பை,டெல்லி போன்ற பெருநகர மேல்தட்டு இந்தியர்களுக்கு மட்டுமல்ல உலகமயத்திற்குப் பின் அமெரிக்கா, பிரான்ஸ் என உலகநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களுக்கும் அவர்களின் விருப்பம் தான். நெருக்கடி அல்ல. ஆர்க்கிடெக் ஆகணும் - சும்மா தர்க்கத்தைத் தாண்டி பில்கேட்ஸ் ஆகணும் என்ற விருப்பத்தோடு வாழ நினைத்தாலும் தேர்வு செய்யலாம். தேர்வுதான் செய்ய வேண்டும் என்கிறது காதல் கண்மணி. தேர்வா? நெருக்கடியா? என்பதை வெளியில் போனவர்கள் அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டும். அவர்களது அனுபவத்தை
உள்வாங்கிக் கலையாக்குவது கலைஞனின் வேலை.

ஆதி - தாரா (துல்கர்சல்மான் -நித்யாமேனன்), என்ற யுவனும் யுவதியும் ஓடி, ஆடி, பாடி, நடித்து, கடித்துக் களிப்பூட்டும் தொகுப்புகள் ஓ காதல் கண்மணியின் மேல் நீரோட்டம். ‘எனக்காக நீயல்ல; உனக்காக நானல்ல’ என வாழ நினைக்கும் - இந்தத் தன்னிலை(Selfie)யோடு ”ஒருவருக்காக இன்னொருவர் ”என வாழும் இன்னொன்றை இணைப்பதில் - பக்கத்தில் வைப்பதில் தான் மணிரத்னத்தின் வாழ்க்கை பற்றிய - மாற்றம் பற்றிய - பார்வை இருக்கிறது. சுழித்துக்கொண்டு ஓடும் நதியின் அடியாழம் அது. பேசிக் கொண்டும், சமைத்துக்கொண்டும். சங்கீதம் கேட்டுக் கொண்டும், கடந்த காலத்தைத் திரும்பித் திரும்பி நினைத்துக்கொண்டும், நினைவுகள் தப்பிவிடுமோ என்று பயந்துகொண்டும் நகரும் பவானி - கணபதி அய்யரும் (பிரகாஷ்ராஜ் -லீலா சாம்சன்) காதல் கண்மணிகள் தான்.

நிகழ்வுகளின் தொகுப்பு கதை. காட்சிகளின் தொகுப்பு நாடகம். நிகழ்வுகளைக் காட்சிகளாக்கித் தொகுப்பது சினிமா. இந்தக் கலை மணிரத்னத்திற்கு கைவந்தது. நம்பத்தக்க நிகழ்வுகளும், களிப்பூட்டும் காட்சிகளும் இணையாமல் நிற்பது வணிக சினிமாவின் சூத்திரம். வணிக சினிமாவுக்குள் நம்பத்தகுந்த வாழ்க்கையைத் தேட வேண்டியதில்லை. மேற்பரப்பில் மிதக்கும் களிப்பூட்டும் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். அடியாழத்தில் நகரும் நினைவுகளை நிதானமாக அசைபோடலாம். ஆதி - தாரா நிகழ்காலத்தின் பரபரப்பு. கணபதி - பவானி நிலைத்து நிற்கும் ஆழ்கடல். மணிரத்னத்தின் கண்டுபிடிப்பு.

முதுமைக் காலத்தைக் காட்டி இந்திய இளைஞர்களைப் பயமுறுத்தித் தான் இந்தியக்குடும்ப அமைப்பைக் கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது. மணிரத்னம், சுகாசினி, வைரமுத்து எல்லைதாண்டும் ஆபத்திற்குள் எப்போதும் நுழைய மாட்டார்கள். நுழைய வேண்டும் எனச் சொல்வது நவீனத்துவம். நவீன சினிமா வேண்டுமென்றால் அந்த -ரிஸ்க்- எடுக்க வேண்டும்.

பின்குறிப்பு: பாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் -லீலா சாம்சன் படம் ஒன்றைத் தேடினால் கூகிள் தர மறுக்கிறது. உங்கள் நடிப்பை ரசித்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்