விருதுகள் - வெகுமதிகள் - விளையாட்டுகள்

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்புஅடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை.
இந்திய அரசின் கலை இலக்கிய அகாடெமிகளான சாகித்திய அகாடெமி,சங்கீத் நாடக அகாடெமி, லலித் கலா அகாடெமி போன்றனவற்றில் விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது எனத் தொடர்ந்து விமரிசனம் செய்யப்பட்டாலும் ஆளுங்கட்சி, அகாடெமிகளில் இருக்கும் நபர்கள், அவர்களால் நியமிக்கப்படும் தேர்வுக்குழுக்களால் விருப்பு வெறுப்புகளோடுதான் பரிந்துரைகள் நடக்கின்றன.  தமிழக அரசு ஆண்டுதோறும்  வழங்கும் விருதுகள் யாரால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்வியே இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் தொகையோடு கூடிய விருதுகளைத் தமிழக அரசு அறிவித்தது. அதைப் பற்றிப் பேச்சே எழும்பவில்லை. கலைமாமணி விருதுகளும் அப்படித்தான்.


எனக்குத் தெரிய தமிழக அளவில் 25-க்கும் குறையாத இலக்கியத்திற்கான விருதுகள் உள்ளன.கனடாவிலிருந்தும் (தமிழ்த் தோட்டம், இயல் விருது) அமெரிக்காவிலிருந்தும் (விளக்கு) கூடத் தமிழகப் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப் படுகின்றன. அறக்கட்டளைகளின் பெயராலும்,தனிநபர்களின் பெயராலும் வழங்கப்படும்  இந்தவிருதுகளின் பின்னணியில் தனிநபர்களின் இரக்ககுணம் அல்லது கொடைவள்ளல் பிம்பம் இருக்கின்றது. தங்களின் சாதிக்காரர்கள் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விருதுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. தங்கள் மூதாதையரைப் பற்றி உலகம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் சந்ததிகள் அதற்கான ஏற்பாடுகளைப் பலவழிகளில் செய்கின்றனர். பல்கலைக்கழகங்களில் / கல்லூரிகளில் அறக்கட்டளைகளை நிறுவிச் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்கின்றனர். சிலர் விருதுகளை உருவாக்குகிறார்கள். இறந்து போன எழுத்தாளர்களின் (கண்ணதாசன் விருது, ஜெயந்தன்விருது) பெயரில் மட்டுமல்ல, உயிரோடு இருப்பவர்களின் பெயர்களிலும் (கவிஞர் சிற்பி, கவிஞர்வைரமுத்து) கூட விருதுகள் இருக்கின்றன. ஆண்டுதோறும் விருதுகளுக்குரிய பெயர்களைத் தினசரிகளில் வெளியிட்டு நிகழ்ச்சிகள் நடத்திப் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.  வெகுமக்கள் தளத்தில் செயல்படும் (தினத்தந்தி விருது,விகடன் விருது, விஜய் தொலைக்காட்சி விருது) இந்தப் பிம்ப உருவாக்க நோக்கம் தமிழின் எல்லாத் தளத்திலும் வினையாற்றுகிறது. உயிர்மை, காலச்சுவடு போன்ற பத்திரிகைகளின் பின்னணியில் தரப்படும் சுஜாதா விருது, நெய்தல் அமைப்பு வழங்கும் ராஜமார்த்தாண்டன் விருது, சுந்தரராமசாமிவிருது ஆகியனவும் விதிவிலக்கில்லை. ஜெயமோகனை மையப்படுத்தி வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருதுக்கு வேறு நோக்கம் இருக்கமுடியாது.

இந்தியஅளவில் வழங்கப்படும் காளிதாச ஸம்மான், பாஷா பரிஷத், கதா,பிர்லா பவுண்டேசன், தாகூர்விருது, ஞானபீடம் போன்றனவும் தனியார் வழங்கும் விருதுகள் தான். ஆமாம் நண்பர்களே இந்தியஅளவில் உச்சபட்ச விருதான பாரதீய ஞானபீட விருதே தனியார் நிறுவனத்தால் -  தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு ஜெயின் குடும்பத் தினரால் நிறுவப்பட்ட அமைப்பு மூலம்தான் வழங்கப்படுகிறது. இவைகளின் பரிசுகளைப் பெற்றவர்கள் எல்லாம் அவற்றின் நோக்கத்திற்கேற்ப மாறிப்போய்விட்டதாக நான் நினைக்கவில்லை. பரிசுகள்/ விருதுகள் மூலம் படைப்பாளிகள் பொருளாதார ரீதியாகக் கொஞ்சம் பலன் அடைகிறார்கள். அத்தோடு தனது எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றன என்று ஆறுதல் அடைகிறார்கள். இத்தகைய ஆறுதலை- கவனிப்பைக் கல்வி நிறுவனங்கள் வேறுவிதமாக வழங்குகின்றன.

தொடர்ந்து பல்கலைக்கழகங்களையும் அவற்றின் இலக்கிய ஆய்வுகளையும் கேலியும் கிண்டலும் செய்யும் (செய்வதைத் தவறெனச் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்) எழுத்தாளர்கள் தங்களின் நேர்காணலிலும் தனிப்பேச்சிலும் எனது படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக 8 பேர் எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பதைப் பெருமையாகச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். மதுரைப் பல்கலைக்கழகத்தில் , பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாடமாகஇருக்கிறது எனச் சொல்லவும் பார்த்திருக்கிறேன். பாடமாக வைக்கப்பெற்ற நாவல் மூலம் பல லட்சங்கள் சம்பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் பேராசிரியர்களும் அறிவார்கள்; எழுத்தாளர்களும் அறிவார்கள்.  தெரியாத எழுத்தாளர்களுக்குப் பதிப்பகங்கள் பாடம் நடத்துவதும் உண்டு. தனது படைப்பு பாடமாக வைக்கப்பட்டதற்கு ஒருவர்கூடப் பாடமாக எதிர்த்ததாகத் தெரியவில்லை. அனுமதிபெற வேண்டும் ; தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் மட்டுமே உண்டு. பல்கலைக்கழகங்களின் கவனத்தைக் கவர்ந்ததிலும் உச்சம் வைரமுத்து தான். தனது 60 - வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 60 ஆய்வேடு களிலிருந்து 60 கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடச்செய்து பெருமைபட்டுக் கொண்டார். அவரது புகழ்பரப்பும் பணியைச் சிரமம் பாராமல் செய்யும் காவ்யா பதிப்பகம் முன்னின்று செய்து கொடுத்துள்ளது.

கடைசியாக சுஜாதா விருதுக்கு வரலாம் .

கடந்த ஆண்டில் வந்த எட்டுச் சிறுகதைத் தொகுதிகளை வாசிக்கும் நெருக்கடியை இந்தச் சுஜாதா விருதுக்கானஅறக்கட்டளை உருவாக்கித் தந்தது. போனவருடம் ஏழு நாவல்களை வாசித்துத் தேர்வு செய்யச்சொன்னார் மனுஷ்யபுத்திரன்.  போலந்துக்குப் போவதற்கு முன்பு கட்டுரை நூல்களை வாசித்துப் பெயர்களைப் பரிந்துரைக்கச் சொன்னார். எனது வாசிப்பின்மீதும் பரிந்துரை மீதும் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. சுஜாதா விருதுக்கான தேர்வில் இருக்கிறேன் என்பது வெளிப்படையானது. வெளியில் சொல்லிக் கொள்ளாமல் பல விருதுத் தேர்வுக்குழுக்களில் இருந்து படைப்புகளை வாசிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். அதைப்பெருமைக்காகச் செய்வதாக நான் நினைப்பதில்லை. சமகால இலக்கியத்தைக் கற்பிக்கும் ஒரு ஆசிரியரின் கடமையாக நினைத்துச் செய்கிறேன்.

எனது வாசிப்பென்பது கதைக்குள் இருக்கும் மனிதர்களை மட்டும் வாசிப்பதல்ல. அவர்கள் வாழ நேர்ந்தவெளிகளையும், காலத்தையும் வாசிப்பது. கதை நிகழும் வெளியோடு, நினைவிலும் கனவிலும் வந்துபோகும் வெளிகளையும், காலத்தையும் வாசிப்பது. அந்த வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கும்பின்னணியில் செயல்படும் அரசியல், பொருளாதார, சமூகச் சூழலையும் வாசிப்பது. இப்படியான வாசிப்புக்கு இடம் தராத கதைகளை வாசிக்க நேரும்போது ஏன் இப்படியான கதையை இந்த எழுத்தாளர் எழுதுகிறார்? என்ற கேள்வியோடு வாசிப்பதாகவும் அமையும். வாசித்த படைப்புகள் தமிழ் இலக்கியப்பரப்பில் எத்தகைய இடத்தைப் பெறக்கூடியன என்ற தன்னுணர்வோடு வாசிக்கும் எனக்கு, இலக்கியம் ஏன் உருவாகிறது? எப்படி உருவாகிறது? அது வாசிப்பவனிடம் என்னென்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற அடிப்படைகளையெல்லாம் நான் கற்ற - இலக்கியத் துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த அடிப்படைகளோடுதான் தமிழில் எழுதப்படும் எழுத்துகளை வாசிக்கிறேன். கருத்துச் சொல்ல வேண்டியதேவையிருந்தால் கருத்துகளைச் சொல்கிறேன்.  தரவரிசையிட்டுத் தரச்சொன்னால் தந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன். ஓர் அமைப்பில் செயல்படும் ஒருவர் இவ்வளவுதான் செய்யமுடியும். நான் நினைத்ததை மட்டுமே செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என நான் நினைத்தால் பெரும்பான்மையை மதிக்காத மனிதனாகக் கருதப்படுவேன் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

சிறுபத்திரிகை சார்ந்து இயங்கும்பலர் தங்கள் கருத்துகளுக்கான காரணங்களை எப்போதும் சொல்வதில்லை. தங்களின் கருத்தியல் - நம்பிக்கை இது எனக் கூடச்சொல்வதில்லை.  ‘தனது வாசிப்பின் மேல் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் பட்டியலிடுகிறேன்’ எனச் சொன்ன க.நா.சு. வாக நினைத்துக்கொள்ளும் இவர்களால் தமிழ் இலக்கியவிமரிசனம் எந்த எல்லையையும் தொடப்போவதில்லை. ஒரு பட்டியலுக்குப் பதில் இன்னொரு பட்டியல் என்ற அளவில் மட்டுமே யோசிக்கும் இவர்களின் வெற்றுக் கூச்சல்களால் அவ்வப்போது காது கிழிபடுவதைத்தவிர ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஒருமாதத்திற்கு முன்பு என்னிடம் எட்டுத் தொகுதிகள் வந்து சேர்ந்தன. அ முதல் ஏ வரையிலான எட்டுப் பேர்களின் 104 கதைகள். [அ- 9, ஆ-16, இ-10, ஈ-16, உ-13, ஊ-13, எ-14, ஏ-13]  அந்தக் கதைகளை எனது வாசிப்பு முறையில் வாசிக்க ஆரம்பித்து ஏப்ரல் 15 ஆம் தேதி மதிப்பெண்களைப் போட்டு அனுப்பினேன். நேற்றுக் காலை பல்கலைக்கழகத்திற்குப் போனவுடன் கவி. மனுஷ்ய புத்திரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "இந்த ஆண்டுக்கான சுஜாதா - உயிர்மை விருதில் சிறுகதைக்கான விருது பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் வாசிப்பின்படி பாவண்ணனுக்கே முதல் இடம் கொடுத்திருந்தீர்கள். நடுவர் குழுவில் இருந்த மற்ற இருவரும் (எஸ்.ராமகிருஷ்ணன், இரா. முருகன்) அவருக்கே முதல் இடம் கொடுத்திருந்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் விருதுகளை அறிவிக்கப்போகிறேன். தேர்வுக்குழுவில் இருந்ததற்குநன்றி" எனச் சொன்னார்.

சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள பாவண்ணனின் பச்சைக்கிளிகள் தொகுப்பில் 13 கதைகள் உள்ளன. நெருக்கடியான வாழ்க்கைச் சூழல்களுக்குள்ளும்அன்பு, பாசம், மனிதநேயம் எனப் பண்பட்ட மதிப்பீடுகளைக் கொண்ட மனிதர்களைக் கண்டுபிடித்து எழுதிக்காட்டும் பாவண்ணனின் பெயரை ஒரு விருதுக்குரிய பெயரெனச் சொல்லும் வாய்ப்புக்கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற ஏழு தொகுதிகளிலிருந்து பாவண்ணனின் கதைகள் எப்படி இலக்கியவியலின் அடிப்படையில் முதலிடம் பெறத்தக்கன என்று கேட்டால்ஒரு கட்டுரையை எழுதித்தர முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட பாக்குத் தோட்டம் தொகுதியில் 10 கதைகள் இருக்கின்றன. அதை வெளியிட்டுப் பேசும் வாய்ப்பையும் மனுஷ்யபுத்திரன் ஏற்படுத்தித் தந்தார். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் தனது கதைகளால் அன்பான மனிதர்கள் தொடர்ந்து துயரத்தைத் தாண்டி, இனிமையான தருணங்களை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என நம்பிக்கையூட்டும் பாவண்ணனின் இரண்டு சிறுகதைத்தொகுதிகளை வாசிக்கும் நெருக்கடியைத் தந்த மனுஷ்யபுத்திரனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாவண்ணன்! இன்னும்..இன்னும்..தொடர்ந்து எழுதுங்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்