April 05, 2015

முகநூல் பதிவுகள் - இலக்கிய சேவைகள் - தமிழ் ஆய்வுகள் - நெஞ்சு நனைக்கும் நினைவுக்குறிப்புகள்
13 - 03-2015 அன்று இரவு 9 மணி வாக்கில் முகநூலில் நண்பர் பௌத்த அய்யனார்  இப்படி ஒரு  நிலைத்தகவல் போட்டார்.
·      ஆண்டுக் கணக்கு முடிவு வந்து விட்டால் பேராசிரியர்கள் இலக்கியம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதைப் படித்த உடன் அதற்கு உடனடியாக நான் ஒரு எதிர்வினையைத் தர வேண்டும் என நினைத்து இப்படி எழுதினேன்:

ஆண்டுக் கணக்கு இல்லை அய்யனார். மார்ச் 31 இல் முடியும் நிதியாண்டு முடியும் போது இலக்கியம் வளர்க்கும் பேராசிரியர்கள் மட்டும் தான் தெரியுமா உங்களுக்கு. வரலாறு விலங்கியல் உயிரி தொழில் நுட்பம் வளர்ப்பவர்களும் அப்போது தான் கிளம்புவார்கள். ஐனவரி புத்தகச் சந்தையில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இலக்கியம் வளர்க்கக் குவியும் கணக்கு போல இதுவும் ஒரு கணக்கு தான்.
உடனடியாக எதிர்வினையாக எழுதியதற்குக் காரணம் அவர் இந்த நிலைத்தகவலைப் போட்ட 2 மணி நேரத்திற்கு  முன்பு  
·           உலகத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிவர்த்தனைக் கருத்தரங்கம் ஒன்று மதுரையில் தமிழக அரசு அமைப்பான உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சங்கம் விடுதியில் நடக்கும் கருத்தரங்கில் நாளை பிற்பகல் அமர்வில் நாவல் இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இடம் பெறும். தலைமை உரைக்காக மதுரை நோக்கி பயணம். கவிதை, சிறுகதை அமர்வுகளும் நாளைக்கு உண்டு. இன்று சங்க இலக்கிய ஆய்வுகள், அயலகத் தமிழ் படைப்புகள் பற்றிய அமர்வுகள் முடிந்திருக்கலாம்.
என்றொரு நிலைத்தகவலைப் போட்டிருந்தேன். எனவே அய்யனார் என்னை நோக்கித்தான் இப்படி எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் பௌத்த அய்யனாருக்கு என்னைத் தெரியும்; அவரையும் எனக்குத் தெரியும். என்னைக் குறிவைத்துப் போட்டிருக்க மாட்டார் என்று ஏன் நினைத்துக் கொண்டேன் என்பதற்கான விடை இப்போதும் தெரியவே இல்லை.
நான் மட்டும் அல்ல; கடந்த இரண்டு மாதங்களாகக் குறிப்பாக ஜனவரி முதல் பல கருத்தரங்குகள் பற்றி நிலைத்தகவல்கள் போடப்படுகின்றன. என்னைப் போலப் பல பேராசிரியர்களும் தாங்கள் கலந்து கொண்டு கட்டுரை வாசித்த கருத்தரங்குகள், பொறுப்பேற்று நடத்திய கருத்தரங்குகள் பற்றிப் படத்துடன் முகநூலில் பதிவுகள் போடவே செய்கிறார்கள்.  பேராசிரியர்கள் மட்டுமல்ல; பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், செயலாளிகள் எனப் பலரும் தங்களின் அன்றாட நடவடிக்கைகளின் ஆவணமாகவும் நாட்குறிப்பாகவும் முகநூலைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.  தாங்கள் பங்கேற்று விவாதிக்கும் தொலைக்காட்சி விவாதங்களைக் கேட்கும்படி தினசரி 10 -க்கும் குறையாமல் நிலைத்தகவல்கள் வரவே செய்கின்றன. பத்திரிகையாளர்கள் கூடத் தாங்கள் பணிபுரியும் பத்திரிகையில் எழுதும் கட்டுரையை முகநூலில் இணைத்துப் படிக்கும்படி கேட்கின்றனர். சமையலில் நிபுணத்துவம் கொண்ட பெண்கள் தாங்கள் சமைத்த பண்டங்களைப் படத்தோடு போட்டு நாக்கில் எச்சில் ஊறும்படி செய்வதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள். தினசரி கவிதை சமைக்கும் கவிகளும் கவிதாயினிகளும் உளிகொண்டு தாக்கும் உக்கிரக் கவிதைகளையும் நெஞ்சு நனைக்கும் நினைவுக் குவியல்களையும் வரிசைப்படுத்தவும் தயங்குவதில்லை.
இவ்வளவு ஏன்? அய்யனாரும் அவரது பணியின் பொருட்டு மருத்துவ முகாம்கள் நடத்தும் ஊர்களுக்குச் செல்லும் பயணங்கள் பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. அத்தோடு இலக்கியவாதியாக/பத்திரிகையாளராக அவர் சந்தித்த நடிகர்கள், எழுத்தாளர்கள், எனப்பல ஆளுமைகளோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிரவே செய்கின்றார். ஆனாலும் அவருக்குத் தர்மாவேசம் வரத் தவறுவதே இல்லை. அதற்குக் காரணம் அவருக்குள் இருக்கும் சுந்தரராமசாமியின் ஆவியென்பது  எனது கணிப்பு.
சுந்தர ராமசாமி தான் இலக்கியம் என்பது புனிதமான வஸ்து. அது உன்னதத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துக் கொண்டே இருந்தவர். மலினமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் தீவிரமாக எதிர்த்துக் கருத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார். பரிசுகளுக்காக - பரபரப்புக்காக- பதவிகளுக்காக எழுத்தாளன் அலையக்கூடாது என்றும் அவ்வப்போது கருத்துச் சொன்னவர். இலக்கியம் சார்ந்த சகல தரப்பினர் மீதும் விமரிசனங்களை வைத்தாலும்,  அந்த எதிர்ப்பில் எப்போதும் முதலில் எய்யும் அம்பு கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப் பேராசிரியர்களை நோக்கித்தான். மொழி,இலக்கியம் கற்பிப்பதற்காகக் கைநிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு மலினமான வேலைகளைச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எனும் விஷம் தடவிய அம்புகளைத் தனது அம்பறாத்தூணியில் சுமந்தபடி அலைந்தவர். ஆனால் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிவியல், சமூகவியல், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் வேலை செய்யும் பேராசிரியர்களும் இதே போன்றுதான் இருக்கிறார்கள் என்பதையோ, அவர்களையும் பொறுப்பான எழுத்தாளர் என்ற முறையில் கண்டனங்கள் எழுப்ப வேண்டியது அவரது கடமை என்றோ அவர் நினைத்ததில்லை. காரணம் அவருக்குத் தெரிந்த உலகம் இலக்கிய உலகம் மட்டும் தான். கல்வி என்றாலே இலக்கியக் கல்வி என்று தான் இன்றும் தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி இலக்கியக் கல்வியைச் சரிசெய்துவிட்டால், தமிழகம் உன்னதமான மாநிலமாக ஆகிவிடும் என்ற நினைப்பில் தான் அறிக்கைகள், கருத்துகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியான கருத்துகளைச் சொல்லியாக வேண்டிய கடமை சுந்தரராமசாமியின் நேரடிச் சீடரான அய்யனாருக்கு இருப்பதாக நினைப்பதில் தவறொன்றும் இல்லை. அவையெல்லாம் சொல்ல வேண்டியனதான்; சொல்லட்டும். ஆனால் தங்களின் கவனிப்பு எல்லைக்குள் வருகிறவர்களைப் பற்றி மட்டும் குறைசொல்லிக் கொண்டிருந்தால் அது விமரிசனமாகக் கருதப்படாமல் “ பொறாமை” யில் சொல்லப்படும்  கூற்றுகளாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு. தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படித்தான் புலம்புவார்கள் என்று நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்படும்போது சுந்தரராமசாமியின் எதிர்ப்புகளை அப்படித்தான் எடுத்துக்கொண்டார்கள் என்பதைப் பல நேரங்களில் நானே பார்த்திருக்கிறேன். அய்யனாரின் பல முகநூல் குறிப்புகளை அப்படி எடுத்துக்கொள்ளவே தோன்றுகிறது. அய்யனாரையும் அவருக்குள் அலையும் சுந்தரராமசாமியையும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு அவர் கருத்தரங்குகள்/ பேராசிரியர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் எடுத்துப் பரிசீலனை செய்யலாம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சமகால இலக்கியங்கள், அவற்றைப் பின்னின்று இயக்கிய சமூக அரசியல் சிந்தனைகள் பற்றி விரிவான கருத்தரங்குகள் நடந்தன என்பது நினைவுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. பொதுவுடைமை இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் போன்றனவற்றை நவீனத்துவ, பின் நவீனத்துவப் புரிதல்களோடு மார்க்சிய, உளவியல், மானிடவியல், அமைப்பியல் என்னும் விமரிசனக் கருவிகள் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய்விட்டது.
கடந்த ஆறேழு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்களின் ஆய்வுப் போக்கைத் தீர்மானிப்பதில் செம்மொழி நிறுவனம் முக்கியமான பங்கை வகித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் அந்நிறுவனம் செம்மொழி இலக்கியங்கள் சார்ந்து குறிப்பிட்ட வகையான கருத்தரங்குகளுக்கு மட்டும் ஏராளமான நிதியை வழங்குகிறது. மனநிறைவளிக்கும் வகையில் கட்டுரைக்கு மதிப்பூதியம், பயணப்படி, தங்குமிடம், நினைவுப்பொருள் வழங்குவதற்குப் பணம் எனத் தருவதோடு, கேட்பவர்களுக்கும் கூட உணவு, நினைவுப்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. ஒவ்வோராண்டும் நடந்த கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின்  விளைவுகளை மதிப்பிட்டுப் பார்த்தால் மகிழ்ச்சி அடைய முடியாது.
நவீனத் தமிழ் இலக்கியங்களான கவிதை, நாடகம், புனைகதைகள் சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த நான்  தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் எனத் திசைமாறி  ஒவ்வோராண்டும் குறைந்தது 10 கட்டுரைகளை வாசித்திருப்பேன். 2007 -08 ஆம் கல்வியாண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும்  ஜனவரி முதல் மார்ச் வரை ரயிலிலும் பேருந்திலும் பயணம் செய்வதே வேலையாகிவிட்டது.  இடையில் 2 வருடம் (2012,2013) வார்சாவுக்குப் போன நானே இதுவரை 75 கட்டுரைகளை வாசித்துவிட்டேன் என்றால் மற்றவர்கள் எல்லாம் சதத்தைத் தாண்டியிருக்கவே செய்வார்கள். செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் இரட்டை சதம் கூடப் போட்டிருக்கலாம்.    6 ஆண்டுகளில் நான் செவ்வியல் இலக்கியங்களை - சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் என்பன பற்றி நான் எழுதிய கட்டுரைகளைத் திரும்ப வாசித்தபோது மனம் குற்றவுணர்வால் நிரம்பி வழிகிறது. வாசித்த கட்டுரைகளிலிருந்து கல்விப்புல ஆய்வுக்கட்டுரைகள் என ஒரு தொகுப்பு கொண்டுவரலாம் என நினைத்தபோது முழுத் திருப்தியாக ஒரு கட்டுரை கூட இல்லை. திரும்பவும் அவற்றில் வேலை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனால் எந்த இலக்கியவியல் கோட்பாட்டையும், ஆய்வுமுறையையும் பின்பற்றாத கட்டுரையாளர்கள் நூல்களாக அச்சிட்டுத் தமிழ் இலக்கிய ஆய்வுலகத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வேதனையோடு ஒத்துக் கொள்ளவே வேண்டும். இந்த வேதனைதான் செம்மொழி ஆய்வுகள் அதன் போக்கில் போய்க் கொண்டே இருக்கட்டும்; அவற்றை விட்டுவிட்டுத் திரும்பவும் நவீன இலக்கியங்களின் பக்கம் திரும்பி விடு என மனம் சொல்கிறது.
நமது காலத்தின் இலக்கியங்களான புனைகதைகளும் சமகால வாழ்வைக் கவலையோடும் புலம்பலாகவும் எழுதிக் குவிக்கும் கவிதைகளும் பேசப்படாமல் தவிர்க்கப்பட்ட அவலத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பே சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் புனைகதைகள்,  கவிதைகள் சார்ந்த கருத்தரங்குகளை நடத்தத் தூண்டியது. பல்கலைக்கழக நிதிநிலைக்குள் தரப்படும் நிதியிலிருந்து ’வளமான கருத்தரங்குகள்’ சாத்தியமில்லை என்பது தெரியும். ஆனால் எந்தப் பண எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்தரங்குகளில் பங்கேற்கும் சிறுபத்திரிகை மரபும் நான் அறிந்த ஒன்று.
முதல் நாள் அமர்வுகள்:
பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பெற்ற அடுத்த நாளே அவரது படைப்புகளை மையமிட்டு அண்மைக்கால நாவல்களை விரிவாகப் பேசும் கருத்தரங்கொன்றை நடத்தும் திட்டத்தைத் துறைக்கூட்டத்தில் முன் வைத்து அனுமதிபெறப்பெற்றது. பூமணியிடமும் ஒப்புதல் பெறப்பட்டது.  விருது பெறச் செல்லும் முன்பு அக்கருத்தரங்கில் கலந்து கொண்டு செல்கிறேன் எனச் சொல்லி மார்ச் 4, 5 தேதியை ஒத்துக் கொண்டார். கடந்த 25 ஆண்டுகளில் எழுத்தின் வழி நிலை நிறுத்திக் கொண்ட ஜெயமோகன், கோணங்கி, இமையம் ஆகியோரின் பங்கேற்பை உறுதிசெய்தபின் புதிதாக நாவல் எழுத்துக்குள் நுழைந்துள்ள புதியவர்களையும் அழைக்க வேண்டும் என்ற திட்டப்படி இரண்டு நாள் கருத்தரங்கம் முடிவானது. அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கலந்து கொண்டு பங்களிப்பை நிறைவாகச் செய்தனர்.
பல்கலைக்கழகங்களில் இக்கால இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்குகள் நடத்த வேண்டிய தேவையை வலியுறுத்திய எனது உரையைத் தொடர்ந்து,. முதல் கட்டுரையாளராக இமையம் பேசினார். 2000 -க்குப் பின்னான தமிழ்நாவல்களின் விரிவான பரப்பையும் போக்குகளையும் நபர்களையும் தேர்ந்த ஒரு இலக்கிய வரலாற்றாசியரின் பார்வையில் தந்த அவரது கட்டுரைக்கு திரளாக வந்த கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
திறந்த மனத்தோடு விரிந்த தமிழ் நாவல்களின் தளங்களை அறிமுகப்படுத்தினார் இமையம் எனப் பாராட்டோடு தொடங்கிய கோணங்கித் தன்னுடைய எழுத்துமொழியில் தனித்துவத்தைக் கைவிட்டுவிடாமல் பேசத்தொடங்கி நாடோடி, குறத்தியாறு போன்ற ஒரு சில நாவல்களைக் குறிப்பிட்டதோடு தனது நாவல்களும் தனது மொழியும் இயங்கும் தளத்தை விளக்க முயற்சி செய்தார்.அவரைத் தொடர்ந்து,
நவீனத்துவத்தை எழுதுவதில் தொடங்கிய தமிழ்நாவல் இலக்கியம் 2000 -க்குப் பிறகு பெருநாவல்களை எழுதும் உலகப்போக்கோடு இணைந்து கொள்ளத் தொடங்கியுள்ளதை விளக்கிய ஜெயமோகன் வரலாற்றையும் காவியத்தையும் இணைத்து எழுதத் தொடங்கியுள்ளதை அடையாளப்படுத்தி உரையாற்றினார்.
பூமணிக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நினைவுப்பரிசை நெல்லையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான தோப்பில் முகம்மது மீரான் வழங்க எழுத்தாளர்களும் மாணவர்களும் எழுப்பிய கரவொலியும் ஆரவாரமும் உற்சாகத்தால் நிரம்பி வழிந்தது பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை அரங்கு. இம்மூவரின் உரைக்குள்ளும் ” 2000 -க்குப்பின் தமிழில் எழுதப்படும் நாவல்கள் உலக இலக்கியங்களுக்கு இணையாக இருக்கின்றன” என்ற கருத்தோட்டம் உள்ளோடியது.  இந்தக் கருத்தைப் பல்வேறு காரணங்களை முன்வைத்து உறுதிசெய்து பேசினர்.
இரண்டாவது அமர்வில் பூமணியின் நாவல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பேசவும் விமரிசனம் செய்யவும் ஆய்வாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். சாகித்திய அகாடெமி விருதுபெற்ற அஞ்ஞாடி பற்றிய விரிவான உரையை வழங்கிய பேரா. தர்மராஜ், ரோலாந்த் பார்த்தின் பனுவல் பற்றிய அடிப்படைகளோடு பேசினார். அதற்குள் பழக்கம் பண்ணுதல், கதை சொல்லுதல், பதிவு செய்தல் கூறுகளின் உள்ளார்ந்த திறன்களை விரிவாகப் பேசினார்.தலித் விமரிசகராக அறியப்படும் ஸ்டாலின் ராஜாங்கம் பூமணியின் முதல் நாவலான ‘ பிறகு’ வைப்பற்றிய உரையில் நவீனத்துவத்தின் நுழைவைத் தென் தமிழ்நாட்டின் ஒரு கிராமம் எப்படி எதிர்கொண்டது என்பதைச் சாதியமுரண்களின் இயல்போடு எழுதிக் காட்டியிருக்கிறார் என்ற மையத்தைக் கொண்டு விவாதித்தார். வாய்க்கால், வரப்புகள் என்ற இரு குறுநாவல்களின் இயல்பான விவரிப்பில் இழையோடும் கிராமிய வாழ்வின் முடிச்சுகளையும் முரண்களையும் தடையற்ற ஓட்டமாகச் சொல்லி முடித்தார் முனைவர் அ. இருதயராஜ்.
இரண்டாம் நாள் அமர்வுகள்;
முதல் நாள் வாசிக்க வேண்டிய வெக்கை பற்றிய கட்டுரையை நான் வாசித்தேன். 80 களின் அரசியல் சொல்லாடாக இருந்த நிலக்கிழார்கள் அழித்தொழிப்பு என்பதோடு இணைத்து வாசிக்க வேண்டிய பிரதி வெக்கை என்பதை முன் வைத்தது அந்தக் கட்டுரை.  பூமணியின் சிறுகதைகளை வாசிப்பதற்கான பின்புலங்களைத் தொட்டுக்காட்டினார் விமரிசகர் ந.முருகேச பாண்டியன். நிறைவாகப் புதிய நாவலாசிரியர்களுடனான உரையாடல் அரங்கு கலகலப்பாகத் தொடங்கியது. இந்த அமர்வில் இரா.முருகவேள்(மிளிர்கல்) குமாரசெல்வா(குன்னிமுத்து)ஏக்நாத் (கிடைகாடு), செல்லமுத்து குப்புசாமி (கொட்டுமுழக்கு), முஜிப். ரகுமான் ( மகாகிரந்தம்),   அறிமுகத்துக்குப் பின் ஒவ்வொருவரும் தாங்கள் எழுத வந்த பின்னணியைச் சுவாரசியமாகச் சொன்னார்கள். தங்களுக்குக் கிடைத்த தூண்டுகோல், கவனிப்பு, விருது வழங்கல் போன்ற கவனிப்புகள் தொடர்ந்து எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லிவிட்டு எழுத வேண்டும் என நினைத்துவிட்டால் அனைவரும் எழுதலாம் என மாணவர்களுக்கு உற்சாகமூட்டினர். தொடர்ந்து நடந்த விவாதத்தில்  சமகாலத்தமிழ் நாவலுக்குள் எவையெல்லாம் எழுதப்படுகின்றன; எவையெல்லாம் எழுதப்படாமல் இருக்கின்றன; எவை கலையாக ஆகின்றன; எவை ஆகாமல் ஆவணமாக, நீல எழுத்தாக, வெற்று அரசியல் விவாதமாக இருக்கின்றன என்பன குறித்துப் பேசப்பட்டதில் பார்வையாளர்களின் பங்களிப்பு இருந்தது. செம்மொழி சார்ந்த பழைய பெருமையோடு நவீன இலக்கியம் புதிய பெருமைகளைக் கண்டுசொல்லும் கருத்தரங்குகளின் தேவையை இந்த இரண்டு நாள் நிகழ்வுகள் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
பின்னிணைப்பாக மதுரையில் நடந்த உலகத்தமிழ்ச் சங்கக் கருத்தரங்கம் பற்றி ஒரு குறிப்பு
போன வாரம் (மார்ச் 13, 14) மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் நடத்திய கருத்தரங்கம் - இதுவும் பெருங்கணக்குப்படி நடந்த ஒரு கருத்தரங்கம் தான். ஆனால் ஒரு ரகசியக்கூட்டம் போல நடந்தது தான் ஏனென்று தெரியவில்லை. அழைக்கப்பட்டவர்கள் பலதரப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் முறையான அழைப்பிதழ்கள் இல்லை. மதுரையில் இருந்த பலருக்கும் தெரியவில்லை. நடந்த பிறகும் பெரிய அளவில் பேச்சில்லை.பத்திரிகைகளில் செய்தி இல்லை. இத்தனைக்கும் ஊடகத்துறை சார்ந்த குமுதம் மணா, கடற்கரை மத்தவிலாச அங்கதம், தமிழ் இந்து அரவிந்தன், அமுதசுரபி திருப்பூர் கிருஷ்ணன் போன்றவர்களும், கவிஞர்கள்/ எழுத்தாளர்கள் யவனிகா ஸ்ரீராம், கரிகாலன், தேவேந்திரபூபதி, கர்ணன், தமிழ்ச் செல்வி, முத்துகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன் போன்றவர்களும்,  என்னைப் போன்ற பேராசிரியர்கள் பா. ஆனந்தகுமார், வெற்றிச் செல்வன், உதயசூரியன் முதலானவர்களும் வெளிநாடுகளிலிருந்து லண்டன் இளைய அப்துல்லா, சிங்கப்பூர் மா. அன்பழகன், மலேசியா வே.சபாபதி, வீரலெட்சுமி, பிரான்ஸ் சச்சிதானந்தன் எனக்கலவையாகக் கலந்து கொண்டனர். மதுரையில் நட்சத்திர விடுதியான சங்கம் விடுதியின் கருத்தரங்க அறையில் அதிகாரபூர்வ அரசு நிகழ்வாக நடந்தது. தொடக்க மற்றும் நிறைவு விழாவில் அரசின் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  இடையில் அம்மா பெயரும் புகழும் உச்சரிக்கப்பட்டன. அரசின் நேரடிப் பார்வையில் நடந்த இலக்கியக் கருத்தரங்கம் என்பதால் இப்படி இருக்கிறது என நினைத்துக் கொண்டு கொடுத்த சன்மானத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டு வீடு திரும்பினேன்.  பெற்ற தொகை எவ்வளவு என்று சொன்னால் பௌத்த அய்யனார் இன்னொரு பதிவு போடக்கூடும். அதற்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை.
No comments :