March 23, 2015

தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாளுமை.
வரலாற்றில் வாழ்தல் என்பதாக நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. ஒருவர் வரலாற்றின் பகுதியாக இருப்பதும், வரலாற்றை மாற்றுவதற்கான காரணமாக இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்குரியன. ஒருவருக்கு மாற்றப்படும் வரலாற்றின் தொடக்கப்புள்ளியாக மாறும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் அவரும் அவர் சார்ந்த குழுவும் கொண்டாட்ட மனநிலைக்குள் நுழைகின்றனர் எனச் சொல்லலாம். சாகித்திய அகாடெமி திட்டமிட்டுள்ள இந்தக் கருத்தரங்கம் இதுவரை அறியப்பட்ட சிறுகதை வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நகர்த்திப் பார்ப்பதன் மூலம் மாற்று வரலாற்றை முன் வைக்க முயல்கிறது என நினைக்கிறேன். சிறுகதையின் தொடக்கம் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வரலாற்றிற்குப் பதிலாகப் பாரதியின் வசன எழுத்துக்களில் சிலவற்றைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி வடிவம் எனச் சொல்ல முயல்கிறது எனக் கருதிக் கொள்கிறேன்.


பாரதியென்னும் புள்ளியிலிருந்து நவீனத்தமிழ் இலக்கியத்தின் அனைத்துக் கோடுகளும் கிளை பிரிவதாகக் கருதுவதில் பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை. மரபான வடிவங்கள், மரபான சிந்தனை முறை, மரபான வாழ்க்கையைத் தொடர்தல் என்பதற்குப் பதிலாகச் சொல் புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவகவிதை எனத் தன்னைக் கவிதையின் ஆளுமையாகச் சொல்லிக் கொண்ட சி.சுப்பிரமண்ய பாரதியையே நவீன உரைநடையின் தொடக்கமாகவும், உரைநடையில் அவன் எழுதிய காக்காய் பார்லிமெண்ட், ஆறில் ஒரு பங்கு போன்ற கதைகளைச் சிறுகதையின் தொடக்கமாகவும், முழுமை பெறாத அவனது சந்திரிகையின் கதையைத் தமிழ் நாவலின் தொடக்கமாகவும் சொல்லும் முயற்சிகள் எல்லாம் ஆசை பற்றிக் கூறுவதாக அமையாமல், ஏற்றுக் கொள்ளத் தக்க கருத்தாகவும் ஆக வேண்டும். அந்த விவாதங்களுக்குள் செல்வது இப்போது என்னுடைய வேலை அல்ல.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டில் தோன்றிய தமிழ்ப் படைப்பாளிகளில் யார் நவீனத் தமிழ் இலக்கிய அடையாளம் உடையவர் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியாவின் அரசியல் விடுதலைப் போராட்ட காலத்தில் தோன்றி அரசியலோடு இலக்கியத்திற்கும் இடமளித்த மணிக்கொடிக்கும் அதன் தொடர்ச்சியாக நின்று நீண்டு கொண்டிருக்கும்  இலக்கியத்தை மையமாகக் கொண்டு சமூகம், அரசியல், பண்பாடு எனத் தமது அக்கறைகளை விரிக்கும் இதழ்களின் கருத்துக்களுக்கும் விமரிசனப் பார்வைகளுக்கும் முதன்மையான பங்கிருந்தது; பங்கிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லாத கல்வியாளன் நான். ஆனால் நான் சார்ந்த கல்வியுலக ஆய்வுகள் ஒருவரது பிறந்த ஆண்டையும் வெளிப்பாட்டு வடிவத்தையும் மட்டுமே  கருத்தில் கொண்டு அவர்களை இக்கால இலக்கிய கர்த்தாக்களாகக் கணிக்கின்றன. கல்வியாளர்களுக்கு இக்கால இலக்கியவாதிகள் மட்டுமே போதும். அவர்களுக்கு சமகால எழுத்தாளன் என்ற அடையாளமும், நவீனத்துவ, பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் என்ற அடையாளம் எல்லாம் தேவையில்லை. காரணம் அப்படியான வரையறைகளுக்குள் போக விரும்புவதில்லை; வரையறைகளை உருவாக்கும் திராணிகள் கைவரத் தேவையான உழைப்பைச் செலுத்த அவர்கள் தயாராகவும் இல்லை .
ஒரு படைப்பாளியைச் சமகால எழுத்தாளன் எனவும், நவீன எழுத்தாளன் எனவும் அடையாளப்படுத்த வேண்டும் என்றால் காலமும் வெளிப்பாட்டு வடிவமும் போதாது. அவற்றோடு சேர்ந்து தனது சமகால வாழ்க்கைமுறை பற்றிய பிரக்ஞையும், நவீனத்துவத்தின் வரவால் சமகால வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய நேர்மறையான அல்லது எதிர்மறையான பதிவுகளைச் செய்யும் ஆற்றலும் வெளிப்பட வேண்டும்..அப்பதிவுகளின் வழியே சமூக வாழ்க்கையின் போக்கில் மாற்றங்களையும் ஏற்படுத்தத் தக்கக் கருத்தோட்டங்களை உருவாக்கித் தரும் நோக்கம் வெளிப்பட வேண்டும். அத்தகைய எழுத்தாளர்களையே சமகால எழுத்துக்குரியவர்களாகவும், நவீன எழுத்தாளர்களாகவும் சொல்ல முடியும். கருத்தியல் சார்ந்த இத்தகைய அளவுகோல்கள் எதனையும் கல்வித்துறை சார்ந்த (அகடமிக்) ஆய்வுகள் பெரும்பாலானவற்றில் காண முடியவில்லை என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. தி.ஜானகிராமனின் சிறுகதைகளை மையப்படுத்தி, அவற்றில் வெளிப்படும் எழுத்தாளுமையை விளக்குவதன் மூலம் அவரைச் சமகாலத்தைச் சார்ந்தவராக – நவீன எழுத்தின் முகம் கொண்டவராக சொல்ல முடியுமா என விவாதிக்க முயல்கிறது இக்கட்டுரை.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடிக்கருகில் இருக்கும் தேவங்குடியில் 1921 இல் பிறந்த தி.ஜானகிராமன் தனது 61 ஆவது வயதில் இறப்பதற்கு முன்பு எழுதிய எழுத்துக்கள் பலவிதமானவை. நவீனத் தமிழ் இலக்கிய வடிவங்களான நாவல்,சிறுகதை,நாடகம் என்பனவற்றை எழுதியதோடல்லாமல் பயண நூல்களையும் எழுதித் தந்துள்ளார். எனது பட்டப் படிப்புக் காலத்தில் கணையாழியில் வந்த அவரது எழுத்துகளை உதிரி உதிரியாக வாசித்த ஞாபகம் இருக்கிறது. அதே ஞாபகம் தான் அவரது எழுத்துகளில் முழுமையாக நான் வாசித்த முதல் நூல் சிட்டியுடன் சேர்ந்து எழுதிய நடந்தாய் வாழி காவேரி என்ற பயண நூல் என்பதையும் சொல்கிறது. பயண நூல்களாக நான் படித்திருந்தவைகளிலிருந்து வேறுபட்ட மொழிநடையோடு, சொல்லும் செய்திகளின் தன்மையில் நெருக்கத்தையும் நானும் உடன் பயணிப்பதான ஒரு அனுபவத்தையும் தந்த நூல். அதன் காரணமாக அவரது பயண நூல்களான கருங்கடலும் கலைக்கடலும், உதயசூரியன் (ஜப்பான் பயணம்) போன்றவற்றைத் தேடிப் படித்திருக்கிறேன். ஆனால் அடுத்த வீடு ஐம்பது மைல் வாசித்ததில்லை.
புதுச்சேரியில் நாடகாசிரியராகச் சேர்ந்தபோது தமிழில் எழுதப்பட்ட நாடகப் பிரதிகளைத் தொகுக்கும் வேலையைத் தொடங்கினேன். அப்போது கிடைத்த தி.ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார், நாலுவேலி நிலம் என்ற இருநாடகங்களையும் வாசித்திருக்கிறேன். இன்னொரு நாடகமான டாக்டருக்கு மருந்து பல வழிகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் புது வகை அதிகார உருவாக்க  நடைமுறையான தேர்தல் அரசியல் நுழையும் காலகட்டத்தை அடையாளப்படுத்திது நாலுவேலி நிலம். தி.ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் நாடகம் பள்ளிக்கூட நிர்வாகக்கமிட்டியையும் பள்ளிக்கூடத்தையும் தங்கள் விருப்பம் போல் நடத்திவிடத்துடிக்கும் நாகராஜன், கிட்டுப்பிள்ளை, வன்னியர்வாள் முதலான கதாபாத்திரங்களை உருவாக்கி தனது கடமையைச் செய்யும் வடிவேலு வாத்தியாருக்கு எதிராக இருக்கும் நிலையைப் பேசும் நாடகம். இவ்விரு நாடகங்களில் பேசப்பட்டுள்ள பல சிக்கல்களும் நிகழ்வுகளும் அவரது சிறுகதைகளின் மையச் சிக்கல்களாகவும் உள்ளன என்பதைப் பின்னர் அவை பற்றிப் பேசும்போது உணர முடியும்.                 
இன்றைய நிலையில் வாசகர்களின் – ரசிகக் கூட்டத்தின் - மனக்களங்களில் அலையும் காட்சிப் படிமங்களை உருவாக்க ஏற்ற வடிவங்களாக இருப்பவை திரைப்பட ஊடகங்கள். முன்பு இருந்தவை நாடகங்களை நிகழ்த்திக் காட்ட ஏதுவான அரங்கநிகழ்வுகள். கூட்டத்தை இணைக்கவும் இயைபுண்டாக்கவும் அல்ல அவ்வடிவங்களின் சில கூறுகள்  சிற்பக்கலையிலும் ஓவியக்கலையிலும் உண்டு. அவை ஏற்படுத்தும் படிமங்கள் எளிதாகச் சென்று சேரக்கூடியவை. அதே நேரத்தில் அவை கூட்ட மனநிலையைச் சிதைத்துத் தனியர்களாக ஆக்கும் இயல்பு கொண்டவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கண் வழிப்பட்ட இயைபை வேண்டும் இவ்வடிவங்களை ஒத்த காட்சிப் படிமங்களையும் அலையும் பாத்திரங்களையும் உருவாக்கவல்ல எழுத்துக்கலை ஒன்று உண்டு என்றால் அது நாவல் வடிவமே. நாவல் வடிவத்தில் தி.ஜானகிராமன் தனது படைப்பெழுச்சியின் வழி உச்சநிலைகளைத் தொட்டிருக்கிறார் என்பது இலக்கியவாசகர்களாலும் திறனாய்வாளர்களாலும் நிறுவப் பட்ட செய்தி. நாவல் வடிவத்திற்குரிய காலம்  மற்றும் வெளியின் அகலம் காரணமாகப் பாத்திரங்களை சகல பரிமாணங்களோடு- நேர்க்காட்சியில் காணும் மனிதர்களை விடவும் உயிர்த்துடிப்போடும் உடல் வாகுடனும் நினைவில் கொண்டு வந்து நிறுத்திக் கொள்ள வேண்டியவர்களாகவும் எழுதிக் காட்டியுள்ளார். குறிப்பாக நாவலின் மையப்பாத்திரங்களாக உருவாக்கப்பட்ட பெண்களைத் தேடிக் காதலிக்க நினைத்த வாசக உள்ளங்கள் பல உண்டு. சமகால இலக்கிய வாசிப்பு கொண்ட பலரும் செய்வது போலவே நானும் அவரது அம்மா வந்தாளையும் மோகமுள்ளையும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை முழுமையாகவும், வாசிக்கத் தோன்றும் போது விரும்பிய பகுதிகளை அவ்வப்போதும் வாசித்திருக்கிறேன். மரப்பசு, நளபாகம், உயிர்த்தேன் ஆகியனவற்றை வாசித்த நான் செம்பருத்தியையும் மலர் மஞ்சத்தையும் அன்பே ஆரமுதேவையும் வாசிக்க முயற்சித்ததில்லை. பின்னர் நான் வாசித்த தி.ஜானகிராமனைப் பற்றிய விமரிசனங்களும் ஆய்வுகளும் அவரது நாவல்களைப் பற்றி விளக்கிக் காட்டிய போது வேறுபாடுகள் நிரம்பிய பிரதிகளாக அவை இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றின. எனவே காலத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை என நினைத்து விட்டுவிட்டேன். இன்றளவும் அந்த எண்ணத்தில் மாற்றமில்லை.
நாவல்களின் மேல் வைக்கும் இந்த விமரிசனக்குறிப்பு – வேறுபாடுகள் இல்லாத தன்மை- அவரது சிறுகதைகளுக்குக் கூடுதலாகவே பொருந்தும். இந்த விமரிசனக்குறிப்பினை முழுமையான ஆதாரங்களுடன் நிருபித்துக் காட்ட வேண்டுமென்றால், அவரது பிடிகருணை, மனிதாபிமானம், யாதும் ஊரே, அக்பர் சாஸ்திரி, அடி,சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், எருமைப் பொங்கல், ஒரு துளி துக்கம், கமலம், கொட்டுமேளம்,சிவஞானம் ஆகிய 12 சிறுகதைத் தொகுதிகளையும் வாசித்து முடிக்க வேண்டும். முடித்தபின் கதைக்களங்கள், காலப்பின்னணி, முதன்மை மற்றும் துணைமைக் கதாபாத்திரங்கள் என ஒரு அஞ்சறைப் பெட்டி ஆய்வை நிகழ்த்த வேண்டும். அதன் வழியாகக் கிடைக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில், தி.ஜானகிராமனின் சிறுகதைகளின் நிகழிடம் மற்றும் காலப் பின்னணியைப் பற்றிய முடிவாக ,” அவரது கதைகள் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்ட –காவிரிக்கரை கிராமங்களையும் சிறு நகரங்களையும் குறிப்பாக அவற்றில் இருந்த பிராமணர்களின் குடியிருப்புகளான அக்கிரஹாரங்களையும், கோயில் தெருக்களையும் இடப்பின்னணியாகக் கொண்டுள்ளன எனவும், அந்தக் கதைகள் பெரும்பாலும் இந்திய சுதந்திரத்திற்குப் பின்னாக சுமார் முப்பது ஆண்டுகளில் -  அதாவது தி.ஜானகிராமன் வாழ்நாள்: காலமான 1980 கள் வரையிலான காலப் பின்னணியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எனவும் , அந்நிகழ்ச்சிகள் கதாசிரியரின் கேட்ட அனுபவங்கள் அல்ல பார்த்த- நேர்க் காட்சியாகக் கண்ட அனுபவங்கள் எனவும் சொல்லலாம். இந்தக் கதைகளில் இடம்பெற்றுள்ள பாத்திரங்கள் முழுமையும் அங்கேயே நிலை பெற்ற பாத்திரங்கள் போலத்தோன்றினாலும் அரசாங்க உத்தியோகம், உயர்கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு போன்ற காரணங்களால் சென்னை, மதுரை, டெல்லி, சில நேரங்களில் அயல்நாடு என அடுத்த சந்ததியை அனுப்பி விட்டுக் கிராமங்களில் தங்கி இருக்கும் அக்கரஹாரத்து மனிதர்கள் என்றே சொல்லலாம். அவர்களுக்கும் கிராமங்களில் உண்டாகி வரும் புதிய சமூக அடுக்குத் தலைமைகளுக்கும் ஏற்படும் உரசல்களை மெல்லியதாகப் படம் பிடிக்கும் சில கதைகள் அவரால் எழுதப்பட்டுள்ளன.
தி.ஜானகிராமன் தனது சிறுகதைகள் மனிதர்களின் புற வாழ்க்கையை விவரிப்பதன் வாயிலாக, அவர்களின் அகவுணர்வுகளின் ஓட்டத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளன என அந்த விமரிசனக் குறிப்பைக் கொஞ்சம் விரிவாக்கிச் சொல்ல வேண்டும் என்றால் அவர் கதை சொல்லும் முறைக்குள்ளும், பாத்திரங்களின் வெளிப்பேச்சாகவும்  மனப்போராட்டமாகவும் எழுதிக்காட்டும் உரையாடல் மொழி குறித்த. விரிவான விவாதங்களுக்குள் செல்ல வேண்டும் அப்படிச் செய்வதே தவிர்க்க முடியாத  முறையியல்.. நான் அந்த வேலையைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாகச் சிலிர்ப்பு என்னும் தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் எழுத்தாளர் பிரபஞ்சனிடம் தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்து வெளியிட்டுள்ள (2006) தேர்ந்தெடுத்த கதைகளான 29 கதைகளை மட்டுமே திரும்பவும் வாசித்தேன். அந்த 29 கதைகளின் வழியே கிடைக்கும்  இந்த முடிவுகள்-  தி.ஜானகிராமனின் எல்லாச் சிறுகதைகளையும் முழுமையாகப் படித்தபின் வைக்கப்படும் முடிவுகளிலிருந்து பெரிதளவு மாறாது என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே அத்தொகுப்போடு நிறுத்திக் கொண்டேன்.
தி.ஜானகிராமனிடம் அதிகம் காணப்படும் கதை சொல்லும் உத்தியை முன்னிலைக் கூற்றுக் கதைசொல்லல் முறை எனச் சொல்லலாம். நவீனத்துவக் கதைசொல்லிகள் அதிகம் விரும்பும் படர்க்கைக் கூற்றுக் கதை சொல்லலுக்குப் பதிலாக தி.ஜா., முன்னிலைக் கூற்றுக் கதைசொல்லலை விரும்பியதற்குக் காரணம் முன்பெ சொன்னதுபோல அவரது கதைகளின் மையப்பாத்திரங்கள் அவர் நேரில் சந்தித்தவர்கள் அல்லது அவரோடு நெருக்கத்தில் இருந்தவர்கள். எல்லாவற்றையும் தள்ளி நின்று பார்க்கும் தன்மை கொண்ட படர்க்கைக் கூற்றுக் கதை சொல்லலில் கதையை எழுதும் ஆசிரியனுக்குச் சார்புகள் எதுவும் இல்லை என்ற பாவனை உண்டு என்றால், திஜா. அதிகம் பின்பற்றும் முன்னிலைக் கூற்று முறையில் “ நான் பார்த்ததைத் தான் சொல்கிறேன்; எனது விருப்பத்தையோ, சார்பையோ சொல்லவில்லை ” என்ற பாவனை உண்டு. நிகழ்காலப் பின் நவீனத்துவ எழுத்துமுறைகள் தன்மைக்கூற்று கதைசொல்லலையே அதிகம் பின்பற்றுகின்றன. இக்கூற்றுமுறை அடுத்தவர்களைப் பற்றியோ, அவர்களின் அனுபவங்களையோ, பேசும் நோக்கம் கொண்டவை அல்ல. எனது வாழ்க்கை, எனது அனுபவம், என்னை வதைத்தவர்கள், என்னை வாழ வைத்தவர்கள், என்னைப் பகடி செய்தவர்கள், என்னைப் பாராட்டியவர்கள்,நான் கற்றவை, நான் ஏமாந்தவை, நான் சந்தித்தவை, எனது சோகம், எனது கொண்டாட்டம், எனது வலி, எனது பித்தம், எனது அறிவு எனத் தன்னை மையமிட்டுப் பேசும் தன்மையிலானது. பின் நவீனத்துவம் முன் மொழியும் இக்கூற்று முறையே செவ்வியல் இலக்கியங்களின் கூற்று முறையாக இருந்தன என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். 
கதையில் இடம் பெறும் எல்லாப் பாத்திரங்களின் குரலுக்கும் மனப்போராட்டத்திற்கும் சம வாய்ப்பு வழங்கும் நோக்கம் இல்லாமல், ஏதாவது ஒரு பாத்திரத்தின் ஒற்றைக்குணத்தை, நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ சொல்லி விட விரும்பும் தி.ஜானகிராமன் முன்னிலைக் கதைசொல்லல் முறையே  ஏற்றது எனக் கருதியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. குறிப்பிட்ட இடப் பின்னணியில் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தி அதன் குணம் ஒன்றை விரித்துப் பேசும் விதமாக வளர்த்துச் சென்று கதையின் முடிவில் அக்குணத்தின் முரண் அல்லது எதிர்நிலை ஒன்றைச் சொல்லும் தன்மையைக் கொண்டுள்ள அவரது சிறுகதைகளில் பெரும்பாலானவை ஓரங்க நாடகத்தின் கட்டமைப்பான வித்தியாசமான அறிமுகம், அதன் வளர்ச்சி, கடைசியில் எதிர்நிலையான முடிவு என்ற கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஓரங்க நாடகத்தில் பார்வையாளர்களின் இடத்தை தி,ஜானகிராமனின் கதைகளில் இடம் பெறும் கதைசொல்லிகள் எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியக் கதாபாத்திரத்தைப் பற்றிப் பேச இன்னொரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதனைக் கதைசொல்லியாக மாற்றி விடும் உத்தியைப் பல கதைகளில் காண முடிகிறது.
டிராம் வண்டியில் தனது காதுமடலில் ஊதிய இளைஞனைக் கை நகத்தால் கீறி ரத்தம் சொட்ட வைத்தவள் ருக்கு, பேருந்து நிறுத்தத்தில் நின்றவளுக்கு லிப்ட் தருவதாகக் கூறிக் காரை நிறுத்தியவனின் காரில் பின் இருக்கையில் அமர்ந்து இரண்டனாவை மிச்சம் செய்து தனது தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வெளிப்படுத்திய ருக்கு கடைசியில் கூட்டத்தில் ஆண்களின் வலிய கால்களின் மிதிபடலில் இருந்து தப்பிப்பதற்காகத் தனி ரிக்‌ஷாவிற்கு மாறினாள் எனச் சொல்ல, கதையில் அவளது எதிர் வீட்டில் குடியிருக்கும் பத்திரிகையின் உதவி ஆசிரியரைக் கதைசொல்லியாக சிவப்பு ரிக்சா கதையில் உருவாக்கிக் கொள்கிறார்.  ஆணவமும் பணக்காரத்திமிரும் வலியும் வக்கீல் அண்ணா பந்தியில் அமர்ந்த பரதேசியின் சாபத்திற்கு ஆட்பட்டு ஒருமாதத்தில் தன் மகனைப் பலி கொடுத்துவிட்டு அதே பரதேசியின் முன்னால், அவனது அறிவுறுத்தலின் முன்னால் குற்றவுணர்வுடன் நின்றார் எனச் சொல்ல, அவர் சொல்லும் வேலைகளைச் செய்யும் பக்கத்து வீட்டுப் பஞ்சாமியைக் கதைசொல்லியாக்கிக் கொள்கிறார்( பரதேசி வந்தார்)  ஒவ்வொரு கதையிலும் வாசகர்களுக்கு முன் வைக்கப்படும்  பாத்திரம் ஒன்றாக இருக்க, கதை சொல்லி வேறாக இருப்பதைப் பல கதைகளிலும் காண முடிகிறது. அக்பர் சாஸ்திரியில் அவரது கதையைச் சொல்பவன் அவரது வாய்ஜாலத்தைக் கண்டு அமைதியாக இருக்கும் சக பயணி. துணை கதையில் துணையாக வந்தவனுக்கு விபத்து; துணைக்கு அழைத்துப் போன கிழடுகளுக்கு எந்தக் காயமும் இல்லை எனச் சொல்லும் கதாபாத்திரம் விபத்து எதையும் சந்திக்க இன்னொரு பாத்திரம். திருவையாறு தியாகப்பிரும்மம் விழாவிற்குப் போய் தனது உடலைத் தரத் தயாராக  இருந்த தீவிர ரசிகையும், அழகியுமான  பெண்ணிடம் அசட்டுத்தனமாகப் பேசித் திருப்பி அனுப்பப்பட்ட பாடகரின் கதையைச் சொல்பவர் அவருக்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் இன்னொரு வித்வான் தான் கதை சொல்லி(ரசிகரும் ரசிகையும்) சண்பகப்பூவில் சொல்லப்படும் கதை இளம்வயதில் விதவையாகும் சண்பகப்பூவின் கதை, சொல்பவர், அவர்கள் வீட்டில் குடியிருக்கும் கிழவர். கழுகு கதையில் சொல்லப்படும் கதை நான்குமுறை சாவின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய கணக்குப் பிள்ளை சோமு. சொல்பவர் அவரது சாவு நடந்தாலும் சாப்பிட்டால் என்ன வந்து விடும் என ஆசாரம் நிறைந்த மனைவி நீலாச்சியிடம் பேசும் பக்கத்துத் தெருக்காரர். பசியைப் போக்கச் சின்ன வயதிலேயே வீட்டு வேலைக்குச் செல்லத் தயாரான சிறுமியை அழைத்துச் செல்லும் அம்மாவின் பெருந்தன்மையையும், சிறுமியின் பசியைப் புரிந்து கொண்ட தனது மகனின் உள்ளத்தையும் சிலிர்ப்புடன் புரிந்து கொண்டவராகச் சிலிர்ப்பு கதையில் இடம்பெறும் தந்தை வெறும் கதை சொல்லி. அதில் இடம் பெறும் சிறுமியும் அவளை அழைத்துச் செல்லும் அந்தப் பெண்ணும் தான் முக்கியமான பாத்திரங்கள்.
சந்தானம் என்ற சன்யாசியின் கதையைச் சொல்வதற்காகவே நகரத்திலிருந்து கதை சொல்லியை காவிரிக்கரையின் தற்காலிக விவசாயியாக மாற்றி அழைத்துச் செல்கிறார் யாதும் ஊரே கதையில். தருமு என்ற தாசியின் அவல வாழ்க்கையையும் வேண்டுதலையும் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களே கோயில் தெரு கௌரியும் அவளது கணவரும் (கோபுரவிளக்கு) கண்டாமணி கதையில் மெஸ் நடத்தும் மார்க்கபந்துவின் குற்றவுணர்வைச் சொல்லும் நோக்கத்தை அந்த மெஸ்ஸில் சாப்பிட வரும் கதை சொல்லியின் வாயிலாகவே நகர்த்துகின்றார். தாத்தாஜி ராவ்-கோமதி தம்பதியரின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாத வாழ்க்கையைச் சொல்லும் கதைசொல்லியும் அவரது மனைவியும் இரண்டாம் நிலைப்பட்ட பாத்திரங்கள் தான்.
முன்னிலைக் கதை கூற்று முறையிலேயே பெரும்பாலான கதையை எழுதிக் காட்டியுள்ள தி.ஜா., அவ்வுத்தி பயன்படாத இடங்களில் மூன்றாம் நிலையான – படர்க்கைநிலைக் கதைக்கூற்றுக்கு மாறவும் தயங்கவில்லை என்பதைப் பாயசம், பாஷாங்க ராகம், ஆரத்தி,மணம்,செய்தி, தேவர்குதிரை, சத்தியமா? கடன் தீர்ந்தது, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய், தவம், கள்ளி, ஐயரும் ஐயாறும், கொட்டு மேளம் போன்ற கதைகளின் வழி உணர முடிகிறது. எடுத்துக் காட்டாக அடுத்த நாள் படவிழாவைத் தொடங்கி வைக்க வந்துள்ள அகோரமான ஒருவனிடமிருந்து வரும் மணம், முந்திய இரவில் முகத்தையே பார்க்க விடாமல் தன்னைப் புணர்ந்தவனிடமிருந்து வரும் மணம் தான் என நினைக்கும் சினிமாத்தொழிலின் துணை நடிகையின் கதையில் அருகில் இருந்து பார்த்துச் சொல்ல ஒரு கதை சொல்லியை உருவாக்குவது சிரமமான ஒன்று, ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைக்காகத் திருவையாறு சென்று தான் எதுவும் செய்யாமல் தனது மாணவிகள் சேகரித்த தகவல்களைக் கொண்டு நூல் எழுதிப் பட்டமும் பணமும் பெறும் நிலை உள்ளது என அமையும் கட்டுரைத் தனமான கதைக்கு முன்னிலைக் கதை சொல்லல் முறை உதவாது. அப்படிப்பட்ட சமயங்களில் தி.ஜா. படர்க்கைக் கதைக் கூற்றுமுறையைக் கையாண்டுள்ளார்.
தான் வாழ்ந்த காலத்தில் காவேரிக்கரைக் கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் இருந்த அக்கிரஹாரங்களில் இருந்து பிராமணர்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு நகரத்தொடங்கியிருந்தார்கள். கல்வி அதற்கு உதவியது. அத்தகைய சாத்தியங்கள் இல்லாத கோயில், பூஜை, சிறுசிறு உத்தியோகம் போன்றவற்றில் இருந்தவர்கள் அங்கேயே இருந்தார்கள். அவர்களின் மரபான வாழ்க்கை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மாறும் சூழலோடு பொருந்த முடியாமல் அவர்கள் தவித்தார்கள். அந்தத் தவிப்பின் போது வெளிப்படும் குணங்களே தி.ஜானகிராமனால் கதைகளாக எழுதப்பட்டன எனக் கூறத்தோன்றுகிறது.
2011,ஏப்ரல் 26,27 தேதிகளில் சென்னை கன்னிமாரா நூலகக் கருத்தரங்க அறையில் சாகித்திய அகாடெமி ஏற்பாடு செய்த தமிழ்ச் சிறுகதைக்கு நூறு வயது என்ற கருத்தரங்கில் வாசித்த கட்டுரை, வாசித்த நாள்: 26-04-2011
தி.ஜானகிராமன், சிலிர்ப்பு ,தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்,டிசம்பர்,2006,

வ.எண்
தலைப்பு
பாத்திரங்கள்
வெளி /காலம்
குறிப்பு

 1.  
அக்பர் சாஸ்திரி
கதைசொல்லி - நோயாளிக் குடும்பமான பயணியும் மனைவியும்
திடகாத்திரமான அக்பர் சாஸ்திரி, பார்த்துச் சொல்லும் கதை சொல்லும் கதை சொல்லி
ரயில் பெட்டியும் பயணக்காலமும்
 எல்லா நோய்களுக்கும் தன் வைத்தியமும் கை வைத்தியமும் சொன்ன அக்பர் சாஸ்திரி பயணத்திலேயே இறந்து போகும் நிலை.


 1.  
துணை
சப்ரிஜிஸ்டரார் பையன் –கிழவர்களுக்குத் துணையாகப் போனவர் கதைசொல்லி, லேடிக்கிழவர், -98 சின்னக்குழந்தை
பேரன்
ஓய்வூதியம் பெறும் நாள் ,வீட்டிலிருந்து கிளம்பி, திரும்பி வருமிடங்கள்
வரும் வழியில் நடந்த விபத்தில் –வண்டி கவிழ்ந்ததில் துணைக்குப் போனவனுக்கு அதிக காயங்கள்- மெடிக்கல் லீவ் போட வேண்டும்.

 1.  
கள்ளி
கிருஷ்ணன், அவரது பையன், மகள் சுப்பண்ணா-பிடில் வித்வான்
கிருஷ்ணனின் வீடு, சுப்பண்ணா பத்து ரூபாய் கடன் கேட்ட நாள்
நகரம் கள்ளிச் செடிகளை வளர்க்கிறது; அதையே அழகு என நினைக்கிறது; பயன்பாடில்லாத பொருள்களின் மீதான விருப்பம். கிருஷ்ணனுக்குள் இருந்த கிராம மனம் , சுப்பன்னாவுக்குக் கடைசியில் பத்து ரூபாயை கொடுக்க வைக்கிறது

 1.  
ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சி அறிக்கை
அகோரநாதனும் அவரது மாணவிகளும்
திருவையாறு.
தியாகைய்யர் வாழ்ந்த ஊருக்குச் சென்று கள ஆய்வு செய்த நாள்
இது போன்ற ஆய்வுகள் தன் விருப்பம், குரோதம் சார்ந்த கருத்துக்களால் உருவாகிறது என்பதோடு, ஆராய்ச்சி யாளர்களுக்குப் பதவியையும் பட்டங்களையும் பணத்தையும் பெற்றுத் தருகின்றன. அந்தக் கலைக்கு எதுவும் இல்லை என்ற விமரிசனம்.

 1.  
கொட்டு மேளம்
டாக்டர், டாக்டரின் மனைவிபார்வதி, கம்பவுண்டர் ஜீவரத்தினம், கவுன்சிலர் மாரியப்பன், நினைவில் அண்ணி, அண்ணன் சுந்தரத்தாண்டவன், அம்மா,
அரசாங்க ஆஸ்பத்திரி- டாக்டரின் வீடு.
டாக்டரின் தோல்வியடைந்த மனநிலை வெளிப்பாடு. நம்மை நாமே தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது. தர்ம வைத்தியசாலை எனப் போட்டது. அதுவும் பிழைக்கத்தெரியாதவர் என்று தான் நினைக்கப்படும் என்ற உறுத்தல் . அன்றைய நினைவுகள் போல
ராணுவத்தில் கர்னலாக ஆசைப்பட்டு டாக்டராக ஆன அவரது நினைவுகளும், கொடுத்த பணத்தை வாங்க முடியாத ஏமாளித்தனங்களு மாகக் கதை அமைந்துள்ளது. இந்த உலகம் தன்னைப் போன்றவர்களுக்கானதல்ல; தனது பெருமைகளைப் பேச ஆட்களைத் தயார் செய்யும் கவுன்சிலர் மாரியப்பப்பிள்ளை போன்றவர்களுக்கானது என

 1.  
சண்பகப்பூ
சண்பகப்பூ, அம்மா கோசலை, வீட்டில் குடியிருக்கும் கிழவர்,சண்பகப்பூவின் புருஷன்
வீடு
சண்பகப்பூவின் கணவன் மரணம் அடைந்த நாள் தொடங்கி முப்பதாம் நாள் நிகழ்வு வரை .
கதை முழுவதும் சண்பகப்பூவைப் பற்றிய  கிழவரின் நினைவுகள் தான்
வாசிக்கப்பிறந்த அவளைத் திருமணம் செய்து அனுப்பினார்கள். சண்பகப்பூவை நுகர்ந்து பார்த்த புருசன் இறந்து போனான். அவனது மரணம் அவளை எதுவும் செய்யவில்லை. எப்போதும் போல் இருந்தாள். அவளது தமையன் டீச்சர் பயிற்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி அழைத்துச் செல்வதைக் கிழவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்

 1.  
ரசிகரும் ரசிகையும்
பாடகர், பாடகரின் மனைவி, அவரது நண்பர்,
அழகுசிங்கு ஐயங்கார் –அந்த ரசிகையின் சார்பில் கடிதம் எழுதியவர், ரசிகை

திருவையாறு.தியாகையர் நினைவுநாள்
தியாகப்பிரும்மம்
பாடகரின் செருக்கும் மது , மாது மீதுள்ள ஆவல்களும். ரயில் பயணத்தில் குடிக்கும் ஆசை, பாடலோடு தனது அழகுமேல் இருக்கும் தற்பெருமை. பாடும்போது பெண்களைக் கவரவிரும்பும் ஆசை.
அழகுசிங்கு அய்யங்கார் மூலம் கடிதம் எழுதிய ரசிகை, அவளது பாட்டை தியாகைய்யரின் கீர்த்தனத்தோடு ஒப்பிட்டுப் பேசிய பாடகரின் பொய்யான புகழுரையால் கோபமுற்று விரட்டி அடித்தது.

 1.  
கழுகு
கதை சொல்லி, அவரது மனைவி,மகள் நீலாச்சி, மகன், அந்தத் தெருவில் உள்ள பசுபதி உள்பட சிலர் கணக்குப் பிள்ளை சோமு மாமா.
கணக்குப் பிள்ளை சோமு மாமாவைத் தூக்கி ரேழியில் போட்ட ஒரு நாள்.
தெருவில் ஒருவர் செத்து விட்டால் பிணம் இருக்கும்போது சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கையின் பின்னனியில் எழுதப்பட்ட கதை.
ஏற்கெனவே மூன்று முறை சாவின் எல்லையைத் தொட்டு விட்டுத் திரும்பிய கணக்குப் பிள்ளை மாமா இந்த முறையும் ஒரு வட்டமிட்டுத் திரும்புகிறார். அவருக்குப் பதில் பக்கத்து வீட்டில் பிறந்த இரட்டைக் குழந்தையில் ஒன்று செத்துப் போகிறது. இதற்கு முன் இவருக்குப் பதிலாக ஒரு கறவை மாடு

 1.  
தவம்
கோவிந்த வன்னி, ஓட்டல் முதலாளி, சீனாப் பையன், செல்லூர்ச் சொர்ணாம்பாள், வன்னி வேலை பார்த்த முதலாளி, அவருக்கு சொர்ணா கிடைத்த அந்தக் காலம்
சிங்கப்பூரில் கோவிந்த வன்னி சாப்பிடும் ஓட்டல்.தஞ்சாவூரில் இருந்த பேரழகியான தாசி செல்லூர்ச் சொர்ணாம்பாளின் வீடு.
வன்னி வேலை பார்த்த முதலாளி, அவருக்கு சொர்ணா கிடைத்த அந்தக் காலம்
செல்லூர்ச் சொர்ணாம்பாள் என்ற தாசியோடு ஒரு நாள் இருப்பதற்காகப் பத்து வருசம் சிங்கப்பூரில் பாக்காத வேலையெல்லாம் பார்த்துப் பணம் சம்பாதித்துத் திரும்பி, அவளது வயதேறிய, அழகு குறைந்து –கூணல் விழுந்த உடலைக் காணும் அதிர்ச்சி. அவளுக்காக அவன் பட்ட கஷ்டமே தவம்.

 1.  
சிலிர்ப்பு
கதைசொல்லி-மகன்
பெண்ணை அழைத்து வரும் அம்மா, சக பயணிகள்
திருச்சியிலிருந்து மாயவரம் போகும் ரயில்
இரக்கக் குணம் உள்ள மகன் மேல் உள்ள சிலிர்ப்பு.
வறுமை, வேறுபாடு, இல்லாமையால் குடும்ப உறவுகளை விட்டுச் செல்லும் ஒரு பத்து வயதுப் பெண்ணை மையமாக்கி வாழ்க்கையை விசாரித்தல்.

 1.  
சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்
மீனாட்சி -சமையற்கார முத்து பெண்டாட்டி. மகன் சாம்பு- தொழு நோய் உள்ள பெரிய அய்யரிடம் வேலை, அவருக்குச் சொறிஞ்சு விட, நடக்கவிட ஒத்தாசை,

காவேரிக்கரை கிராமம், சென்னை நகரம்.
ஒன்றுக்கும் உதவ மாட்டான் என்ற பையன் நாற்பது ரூபாய் அனுப்பும்போது ஏற்பட்ட சந்தோசம், போய்ப் பார்த்த போது தொழுநோய்க்காரருக்கு உதவியாளா இருக்கிறது நினைத்து குற்றவுணர்வு கொள்ளுதல்

புரியாத மனநிலை கொண்ட சாம்பு – பணத்திற்காக மகனைத் தொற்று நோய்க்காரருக்கு உதவி செய்ய அனுப்ப விரும்பாத தந்தை.

 1.  
சிவப்பு ரிக்‌ஷா
கதைசொல்லி தினசரியின் உதவி ஆசிரியர்.
ருக்கு- ஓய்வுபெற்ற சப்ரிஜிஸ்டரார் பொண்ணு- சிதம்பரத்திலிருந்து சென்னை வந்து படிப்பவள்,
டிராம் வண்டி, ருக்கு வீடு, கதைசொல்லியின் வீடு, பாண்டி பஜார்,
சில வருடங்கள்
டிராம் வண்டியில் தனது காதில் ஊதியவனை நகத்தால் கீறி ரத்தம் வர வைத்தவள் ருக்கு, கல்லூரிப் படிப்பின் போது, ரெண்டனாவை மிச்சப்பண்ண தன்னை அழைத்தவன் காரில் பின் சீட்டில் பயணம் செய்த திறமைசாலி. ஒரு கட்டத்தில் பெண்ணுக்குப் போதிய வலிமை இல்லை என்று ஒத்துக் கொள்வது போல தனக்கென ஒரு ரிக்‌ஷாவை வாங்கிக் கொள்கிறாள்

 1.  
கடன் தீர்ந்தது
சுந்தர தேசிகர், அவரது அக்காள் மகன் ரத்ன தேசிகர், ராமதாஸ்
ஒரு வாரம் இருக்கலாம்.
கோயில் நிலம் ஒன்றை, சென்னையில் இருக்கும் ஒருவருடைய நிலம் என்று சொல்லி விற்று விடும் ராமதாஸின் மனமும், அவனிடம் ஏமாந்த சுந்தர தேசிகரின் அப்பாவிக் குணமும், அவனது நோய்நிலை கண்டு மன்னிக்கும் நிலையும்
குற்றவுணர்வு, மரணத்திற்குப் பின் மன்னிக்க முடியாது என்பதால் கடைசியில் அவனுக்கு மன்னிப்பு வழங்கித் தனது பேரன்பை நிலை நிறுத்திக் கொள்ளும் சுந்தரதேசிகர் வாழ்க்கை. இருபதினாயிரம் ஏமாற்றியவனிடம் இரண்டணாவை வாங்கிக் கொண்டு கடன் தீர்ந்தது எனத் திருப்தி அடையும் மனிதனின் பொறுமைக் குணம்

 1.  
கோயம்புத்தூர் பவபூதி
கதைசொல்லி, அவனது அம்மா, கோயம்புத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர், காலட்சேபம் பண்ணி காலத்தைத் தள்ளுபவர், அவர் பார்க்கப்போன பரமேச்வர பந்துலு, நாகமணி. குறுக்கு எழுத்துப் போட்டியில் பரிசு பெற்றுப் பாராட்டுப் பெற்ற ஹோட்டல்காரன் நாராயணன்.
காவேரிக்கிராமம் ஒன்று, மூன்று நாள், அந்தப் பெரியவர் வாய்ப்பு தேடிய முதல் நாள், அடுத்த நாள் கதைசொல்லி வீட்டுத்திண்ணையில் காலட்சேபம். பரிசு பெற்ற நாராயணனை வர வைத்த சாமர்த்தியம், அடுத்த நாள் கச்சேரி நாராயணன் வீட்டுத்திண்ணையில் ஏற்பாடு
” காலே ஹய்யம் நிரவதி..விபுலாச ப்ருத்வீ” – பவபூதி
காலம் நீண்டு கிடக்கு. இவன் இல்லாட்டா வேறெ யாராவது நம்மைக் கேட்கிறது இல்லாமலா போயிடப் போறான்?

 1.  
தேவர் குதிரை
நடராஜத்தேவர், அவரது மகன் தியாகராஜன், மனைவி, கண்ணுச்சாமி- பஞ்சாயத்துத் தலைவர்
குதிரை பவுண்டில் அடைக்கப்பட்ட நாட்கள்.
எல்லாம் போனாலும் ஆணவமும் சாதிப் பெருமையையும் கைவிடாத தேவரின் நிலைப்பாட்டைச் சொல்லும் கதை

பெருமைக்காக எதையாவது செய்து கொண்டே இருக்கும் தியாகராஜன். ரேக்ளா வண்டிக்கு வாங்கிய குதிரை ஊர்த் தோட்டங்களில் கோயில் மாடு போல திரிய, கண்ணுச்சாமி பவுண்டில் அடைத்து விடுகிறார். ஆனால் தேவர் தண்டம் கட்டாமல் தனது பழைய பெருமையைத் தக்க வைக்கும் சாமர்த்தியம். அவருக்குப் பயந்து கொண்டு குதிரையை யாரும் ஏலம் எடுக்கவில்லை. கண்ணுச்சாமியே மூன்று ரூபாய்க்கு ஏலம் எடுத்து தேவர் வீட்டில் கட்டினார். தேவர் தனது குளத்தை ஊர்ப்பூங்காவிற்கு எழுதி வைத்துக் கண்ணுச்சாமிக்குச் செலவு வைக்கிறார்.

 1.  
பரதேசி வந்தான்
வக்கீல் அண்ணா, அவரது மகன், பஞ்சாமிர்தம்-  எதிர்வீட்டில் இருப்பவன் வக்கீலின் சொல்கேட்டு நடப்பவன் ( கதைசொல்லி) வேலையாட்கள், பாட்டுக்காரி.
வக்கீலின் மகன் கல்யாணநாள், அதுவே மரண நாளும் -முப்பதாவது நாள் காரியம் வக்கீல் வாழ்க்கையில் நீதிபதி, தொழிலில் வக்கீல். எதுவும் பிசகிருக்கக் கூடாது. சங்கீத விமரிசகரும் கூட.
தனது மகன் கல்யாணத்தில் 200 பேருக்கு முதல் பந்தி. அதில் ஒரு பரதேசி வந்து பாடுகிறான். வாஞ்சையுடன் என்பதற்குப் பதிலாக வாங்சையுடன் எனச் சொல்ல, இவர்கள் மாற்றிக் கொள்ளச் சொல்ல அவன் மறுத்துவிட்டுப் போய்விடுகிறான். முதல் பந்தியில் ஒரு பரதேசி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்த்துவிட்ட வக்கீல் அவனை அடித்து இழுத்துப் போய் வெளியே தள்ளுகின்றார். அவன் ஒரு மாதத்திற்குப் பிறகு நீரே கண்ணீரோடு சாப்பாடு போடுவீர் எனச் சாபம் தருகிறான். கச்சேரி கேட்டுக் கொண்டிருந்த மாப்பிள்ளை சமையல் கட்டில் விழுந்து ஹோமாவில் விழுந்து செலவு செய்தும் போய்விட்டான். ஒரு மாதத்தில் அந்த பரதேசி வந்து அவரது ஆணவத்தைச் சுட்டிக் காட்டுகின்றான்.

 1.  
சத்தியமா!
சின்னாணி, ரமணன், கடை குமாஸ்தா, முதலாளி,சின்னாணி, ரமணன் பெற்றோர்
இரண்டு நாள்
வீடுகள்
கிருஷ்ணர் படம் உள்ள காலண்டரின் இடமாற்றம்
எப்படிப் பட்ட பிள்ளைகள் பிழைக்கும் என்பதான விசாரணை.
சத்தியம் தப்பாது இருக்க வேண்டும் என நினைக்கும் மகனின் குணத்தைப் புரிந்து கொள்ளும் அப்பா, புரிந்து கொள்ளாத அப்பா தனது மகனை இந்த உலகத்துக்குப் பொருந்தாதவனாக நினைத்தல்

 1.  
செய்தி
தங்கவேலு இசையை மக்களுக்குப் புரியும் விதமாக ஆக்க வேண்டும் என நினைப்பவன், அவனது தகப்பனார் தெய்வாம்சம் கூடிய அந்த இசையில் மாற்றம்  கூடாது என நினைப்பவர். போல்ஸ்கா.- இந்திய இசையை நாடி வந்த மேற்கத்திய இசை ரசிகன், அவனோடு இன்னும் சிலர், அவர்களை அழைத்து வந்த வக்கீல்

இசைக்கலைஞர் பிள்ளைவாளின் வீடு, வக்கீல் அந்த இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்த இடம்
இந்தியப் பாரம்பரிய இசை –தியாகைய்யரின் இசை அமைதியை முதன்மையாக கருதியது. போல்ஸ்கா அதை – அமைதியை எதிர்பார்த்தே வந்தான். அந்த இசை அமைதி என்னும் செய்தியை அவனுக்கு தந்தது. அதைத் தருவது தான் தியாகைய்யரின் நோக்கமும்.

 1.  
கோபுர விளக்கு
கதைசொல்லி, அவரது மனைவி கௌரி, தருமு என்னும் தேவடியால், அவளது அம்மா, கோயில் மானேஜர்
சந்நிதித்தெரு, தருமு மரணம் நிகழ்ந்த ஒருநாள்அம்மா தேவடியாள் எனத் தெரிந்து மகளை மறுத்த ஆம்படையான், அதனால் அவளும் தொழில் பழகி, கற்பமான தரும் அம்மாவின் வலிறுத்தலால் கண்ணாடியை அறைத்துக் குடித்துச் செத்துப் போகிறாள். அவளைத்தூக்கிப் போட மானேஜர் செய்யும் ஏற்பாடு.
அவளை விரும்பியவர்கள், அவளது மரணத்துக்குப் பின் ஆசாரம் காக்கும் நிலை. அவள் மரணத்துக்குத் துக்கம் கொண்டாடும்  விதமாக ஒருநாள் இருட்டில் –மனதில் இருக்கும் இருட்டு விலகும் விதமாகக் கோபுர விளக்கை அணைத்து வைக்கும் மானேஜர். விபசாரத்திற்குப் பரிந்து பேசும் கதைகளில் ஒன்று.

 1.  
யாதும் ஊரே
கதைசொல்லி –நகரத்திலிருந்து ஒருமாதம் விடுப்பில் வந்து விவசாய வேலைகளைக் கவனிக்கும் ஆள் , அவனது மனைவி,நாலுவீடு தள்ளி இருக்கும் கோணல் கிச்சான், சந்தானம் என்ற பெயர் கொண்ட சன்யாசி
காவிரிக்கரை கிராமம், சன்யாசி வந்து தங்கிய ஒரு நாள்.
சன்யாசிக்கு ஒருநாள் சாப்பாடு போட நினைத்த கோணல் கிச்சானின் சங்கடத்தை ஏற்றுக் கொண்ட கதைசொல்லியின் மனம் யாதும் ஊரே எனச் சந்நியாசியின் வாழ்க்கை இருப்பதைப் பாராட்டிச் சன்யாசத்தின் மேல் கொள்ளும் விருப்பம்.
நகரவாழ்க்கையும் கிராம வாழ்க்கையும் விசாரணை செய்யும் பகுதிகள் உண்டு
சந்நியாசம் சிறந்தது என நம்பத்தொடங்கும் கதைசொல்லிக்கு அவரது மனைவி, சந்நியாசி அழுதது ஏன் என்ற கேள்வி மூலம் அவருக்குள் இருக்கும் அதிகாரம் செய்யும் ஆசையை உணர்த்துதல்

 1.  
கண்டா மணி
மார்க்கபந்து, அவரது மனைவி, வீட்டுச் சாப்பாடு போல செய்து மெஸ் நடத்தும் குடும்பம், 20 பேர் தினசரி சாப்பாடு. ஐராவதம் – விஞ்ஞான வாத்தியாரின் உதவியாளர், இறந்து போனவர்,சந்யாசி –மாசம் ஒருமுறை சாப்பிட வருபவர், கோயில் மிராசுதார் செட்டியார்வாள்.
மார்க்கபந்துவின் வீடு/மெஸ்
சந்நியாசி சாப்பிடும் போது சாம்பாரில் கிடந்து பாம்புக்குட்டி, சாமியாருக்கு ஏதாவது ஆயிடுமோ, சாப்பிட்டவர்களுக்கு ஏதாவது ஆயிடுமோ என்று பயம். யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்றால் யோகேச்வரனுக்கு காண்டாமணி வைப்பதாக வேண்டுதல். காண்டாமணி உறுத்திக் கொண்டே இருக்கிறது.
 குற்றவுணர்வின் செயல்கள் – தவறுக்குப் பதிலீடாகக் கண்டா மணியை சாமிக்கு வழங்குதல். ஆனால் திரும்பத்திரும்ப அதே பாம்பு ஞாபகம். மணியைத் திரும்ப எடுத்துக் கொண்டு சிறிய மணியாக ஐந்து செய்து தருவதாகச் சொல்லுதல். 

 1.  
யோஷிகி
கதைசொல்லி –ஜப்பானுக்குப் போயிருக்கும் ஊர்சுற்றி, யோஷிகி- அவர் நண்பர் குருமூர்த்தியின் நண்பன்  -ஹிரோமி –விடுதியின் பெண் சிப்பந்தி
ஜப்பானில் –கியோத்தாவில் கொக்குஸாய் ஓட்டலில் தங்கியிருந்த மூன்று நாள்.
ஜப்பான்காரர்களின் உழைப்பும் மரபான நாகரிகமும் சொல்ல எழுதப்பட்ட கதை
தனது கடை தீப்பிடித்ததையும், தனது தம்பிக்குத் தீக்காயம்பட்டதையும் மறைத்து விட்டு, சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக இரண்டு நாட்களுக்குப் பதில் ஒருநாள் இருந்து விட்டுப் போகும் யோஷிகி. அவர் சொல்ல வேண்டாம் எனச் சொன்ன அந்தக் கதையை ரயிலடியில் சொல்லும் ஹிரோமி. ரகசியம் காத்துப் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஜப்பான் மனம்.

 1.  
மணம்
நிலா –துணை நடிகை, மயில்சாமி – ஆட்களை ஏற்பாடு செய்பவன்
யார் என்றே தெரியாமல் இரவில் அவளொடு அந்த விடுதியில் தங்கிவிட்டுப் போனவன் –
நிலாவின் வீடு, விடுதி, இருட்டு அறை
அடுத்த நாள் படத்தின் பூஜை முதல் நாள் ஒருவனுடன் தங்க நேரிடுகிறது. மின்சாரம் இல்லாததால் உருவத்தைப் பார்க்கவில்லை. உடம்பில் நல்ல வாசனை – பூக்கள், சாராயம், சுகந்தமான வாசனை
பூஜையைத் தொடங்கி வைக்கும் அந்த உருவம் அகோரமாக இருக்கிறது. உடலின் எந்த உறுப்பும் ரசிக்கும் படியாக இல்லை. ஆனால் அந்த மணம் நேற்றிரவு அவளோடு இருந்த உடலிலிருந்து வந்த வாசனை . துணை நடிகை தேவைக்காக விபசாரம் செய்யும் நிலை. விரும்பாத உடலோடு உறவுகொள்ளும் நிலை.

 1.  
ஆரத்தி
காமாட்சி, அவளது  மன்னி, அண்ணன்
தவிக்க விட்டுப் போன கணவன்
காமாட்சியின் வீடு
நினைவில் திருமணம், புருஷன் வந்து போன நாட்கள், மலேசியா, சிங்கப்பூர் 25 வருடம் இருந்தது. பணம் அனுப்பியவன் தகவலே இல்லாமல் போனது. ஊரார் தன்னை சுமங்கலி என நினைக்கவில்லை. ஆனால் மன்னி மட்டும் ஆரத்தி எடுக்க என்னை அழைத்து அந்த அங்கீகாரத்தை அளித்தது
11 வயதில் 30 வயதைத் தாண்டியவனுக்குத் திருமணம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் மனப் போராட்டம். சுமங்கலிப் பட்டம் போய்விட்டது என நினைத்தவளுக்குத் திரும்பவும் 32 வருடத்துக்குப் பிறகு அந்தப் பட்டம் உண்மையானதில் ஏற்படும் சந்தோசம்.

 1.  
பாஷாங்க ராகம்
விஜயா விஜயராகவன், மகள் ரதிபதிப்ரியா,(கணவர் பலராமன்)
தன் தந்தை பலராமனின் மரணத்திற்குப் பின் முரட்டு இசைப் பிரியர்கள் நிரம்பிய பிருங்கி சபையாரின் துக்கவிசாரிப்புக் கடிதத்திற்கு அவரது மனைவி –விஜயாவின் மனக்குமுறலையும் பலராமனின் இசை அறிவு சூன்யத்தையும் சொல்லி அவளது மகள் எழுதும் கடிதமாக அமைந்துள்ள கதை.
தந்தையால் பாடகனாக ஆக்க விரும்பிக்கொடுத்த சங்கீதப் பயிற்சிகளைக் கைவிட்டு, அந்த வரலாற்றையும், செய்திகளையும் வைத்துக் கொண்டு விமரிசகனாக வாழ்ந்து தம்பம் அடித்த பலராமனோடு வாழாமல் விலகிப்போன மனைவி விஜயாவின் மனம்.

 1.  
பாயசம்
சாமநாது-வடிவாம்மால், சுப்பராயன், அண்ணன் மகன்
சுப்பராயன் மகள் கலியாணம் மண்டப நிகழ்வுகள்
பொறாமையும், அதைத் தட்டிக் கேட்கும் மனக்குரலாக மனைவியின் இல்லாமையும்
                 

 1.  
கோதாவரிக் குண்டு
கதைசொல்லியும் மனைவியும்
தாத்தாஜிராவ்-கங்காபாய்
வீடு, கோயில் மண்டபம் ஒருநாள்
கோதாவரிக் குண்டை அடகு வைத்து ரெட்டிப்பாளைய்ம் மல்லிகைப்பூ வாங்கி விட்டு, மீதிப் பணத்தில் சினிமா பார்க்கும் கங்காபாய் –தத்தாஜி ராவ் தம்பதிகள்===================================================================== சில ஆண்டுகளுக்கு முன்பு சாகித்திய அகாடெமி நடத்திய தமிழ்ச் சிறுகதைக்கு வயது 100 என்ற கருத்தரங்கில் வாசிக்க எழுதப்பெற்ற கட்டுரையின் திருத்திய வடிவம்

No comments :