பின் நவீனத்துவ விமரிசன முறை - எளிய அறிமுகம்

முன்னுரை

மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்- நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத் தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவமும் அத்தகைய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பின் நவீனத்தின் அடிப்படைகள் திறனாய்வுக்குள் மட்டும் அடங்கி விடுவன அல்ல. அது ஒரு வாழ்தல் முறை. அந்த வாழ்தல் முறை சரியான வாழ்தல் முறையா?தவறான வாழ்தல் முறையா ? எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் பதிலாகச் சொல்ல முடியும். நான் மட்டும் அல்ல ஒவ்வொருவரும் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக் கிறோம் என்பதுதான் அதற்கான பதில். ஒருவேளை அதன் நிறைவில் , அதாவது எனது மரணத்தின்போது அல்லது எல்லோரும் அவரவர் மரணத்தின் போது – பின் நவீனத்துவ வாழ்தல் முறை பற்றிய தர்க்கக் கேள்விகளுக்கு விடைகளைத் தந்துவிட்டு மரணிக்கலாம். இந்தக்கட்டுரை பின்நவீனத்துவத்தின் அடிப்படை அறிவும் அதன் வெளிப்பாடுகளும் கல்விப் புலப் படிப்பாளிகளுக்கு- மாணாக்கர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட படிப்பாளிகளுக்கு தேவைப்படுகிறது என்பதை உணர்ந்த நிலையில் அறிமுகமாகவும் ஆய்வுக்கான கருவியாகவும் முன்வைக்கப்படுகிறது.





மரபு- நவீனம் – பின் நவீனம் :
மனிதகுலம் தனியனாகவும் குழுவாகவும் வாழ்வதற்குப் பல்வேறு வகையான நிறுவனங்களையும் அவற்றை இயக்குவதற்கான விதிகளையும் உருவாக்கி, அவற்றை ஏற்றும் மறுதலித்தும் வாழ்ந்து கடத்தியிருக்கிறது. உருவாக்கல், ஏற்றல், மறுதலித்தல் என எல்லாவற்றிற்கும் காரணங்களையும் சொல்ல முயன்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகப் பல புதிய நிறுவனங்களும், புதிய விதிகளும் உருவாக்கப்படும் வேலைகளும் நடந்துள்ளது. இந்த வரிசையில் கடைசியில் வந்து விதிகளும் வேண்டாம்; நிறுவனங்களும் வேண்டாம் ; உருவாக்கமும் வேண்டாம் என முன்மொழியும் வேலையைச் செய்து கொண்டிருப்பதுதான் பின் -நவீனத்துவம்.


மனிதர்கள் வாழ்வதற்கு அவரவர் மொழியில் ஏராளமான வார்த்தைகளை உண்டாக்கிக் கொள்கின்றனர். போதாது என்று கருதும் நிலையில் இன்னும் உருவாக்கவும் , கடன் வாங்கவும் , கடத்திக் கொள்ளவும் செய்கின்றனர் ( வார்த்தைகளில் நடக்கிறது என்று சொன்னதால் ஏதோ மொழியில் மட்டும் நடக்கும் விளையாட்டுக்கள் என்று நினைத்து விடவேண்டாம். இந்த விளையாட்டுக்கள் மனிதன் தொடர்பான அனைத்திலும் நடக்கின்ற விளையாட்டுக்கள்தான். ஆதியிலே வார்த்தை இருந்தது ; தேவனிடமிருந்தது ; அது தேவனாயிருந்தது என்று வேதாகமத்தின் ஆதியாகமம் தொடங்குவதால் நான் வார்த்தையை உதாரணமாகச் சொன்னேன்).

தமிழ் மொழியினை அறிந்தவர்களுக்கு பின் நவீனத்தை விளக்குவதற்கு அம்மொழியில் உள்ள மூன்று வாத்தைகள் எனக்குத் தேவை. நம்பிக்கை, அறிவு, நம்பிக்கையின்மை என்பனவே அந்த மூன்று வார்த்தைகள்.இந்த மூன்று வார்த்தைகளுக்குச் சமமான வார்த்தைகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கத்தான் செய்யும். அப்படியான வார்த்தைகளை உருவாக்கிக் கொள்ளாத மொழி பேசுகிறவர்களும், மொழி மூலம் தொடர்புகொள்ளாத கூட்டத்தினரும் மட்டுமே இன்னும் பின் நவீனத்துவ வாழ் நிலைக்குள் வராதவர்கள் எனக் கருதத் தக்கவர்கள்; அத்தகைய மொழிக்கூட்டத்தினரை விட்டு விடலாம். ஆனால் நம்பிக்கை, அறிவு, நம்பிக்கையின்மை என்ற மூன்று வார்த்தைகளையும் தனது வாழ்வின் அனைத்துக் கூறுகளுக்கும் உரியதாகக் கருதும் ஒருவன் அல்லது ஒரு குழு அல்லது ஒரு சமூகம் பின் நவீனத்துவ நிலைகளுக்குள் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மூன்று வார்த்தைகளும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

வரலாற்றை உருவாக்குதல் என்பதை வெற்று நம்பிக்கைகளின் பேரில் நடத்திய காலகட்டம் ஒன்று உண்டு. அந்தக் காலகட்டத்தை வெற்று நம்பிக்கைகளின்பேரில் அமைந்த காலகட்டம் என்று சொல்லுவது இன்னும் சரியாக இருக்கும். எல்லாவிதமான நம்பிக்கைகளின் பின்னணியில் மதமும் , கடவுளும் அவை வலியுறுத்திய மரபும் (tradition) அந்தக் காலகட்டத்தின் இயங்குநிலைகளாக இருப்பன. வாழ்தலின் அனைத்துக் கூறுகளும் மரபின் பெயரால் தீர்மானம் பெறும். நிகழ்வுகள் தொடங்குவதும் தொடர்வதும் மரபின் காரணமாகவே எனத் தனிமனிதனாலும் சமூகத்தாலும் நம்பப்படும்; மறுப்பு எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இதனைத் தான் மரபான வாழ்தல் முறை அல்லது பாரம்பரிய வாழ்தல் முறை (traditional life style) எனக் கருதுகிறோம். இந்த வாழ்தல் முறையின் காலகட்டம் ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை தொடர்ந்தது எனக்கூறலாம். இந்தியச் சமூகங்களுக்கு இன்னும் கூடத் தொடரத்தான் செய்கிறது. ஆனால் அதிலிருந்து விடுபட்ட மனிதர்களும் கூட்டமும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதும் உண்மைதானே.
 
நம்பிக்கையின் இடத்தில் அறிவை நிறுத்தி மரபு என்று சொல்வதற்குப் பதிலாகக் காரணகாரியங்கள் எனப் பேசும் காலகட்டம் அறிவொளியின் (age of enlighten) காலமாகும். தனிமனிதன் கடவுளின் இடத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு , கேள்விகளற்ற நம்பிக்கை என்பதற்குப் பதிலாக கேள்வி களுக்கான பதில்கள் என்பதால் எல்லாவற்றையும் இட்டு நிரப்பினான். அறிவின் தர்க்கம், அறிவியலின் வளர்ச்சி, அறிவியல் பூர்வமான வரலாறு, அறிவியல் பூர்வமான அர்த்தங்கள், விளக்கங்கள் என அறிவு எல்லா நிலையிலும் மையங்கொண்ட காலகட்டம் ஒன்று உருவானது. அந்தக் காலகட்டத்திற்கு இங்கு வேறுவேறு பெயர்கள் உண்டு.மறுமலர்ச்சிக் காலம், சீர்திருத்தக் காலம், முதலாளித்துவக் காலம், என்றெல்லாம் பெயர்பெற்ற அந்தக் காலகட்டத்திற்கு நவீனக் காலம் என்று மற்றொரு பெயரும் உண்டு, மதமும் அரசும் இணைந்து செயல்பட்ட பழைய நிறுவனங்களின் அதிகாரத்துவத் தன்மைக்கெதிராக மாற்றுக்களை முன்வைத்தது இதன் வெளிப்பாடாகும். ஜனநாயகம், குடியரசு, சட்ட ஆட்சி, சமய நீக்கம், அனைவரும் சமம் என்பனவற்றை முன்மொழிவதாக அதனை நாம் அறிந்துள்ளோம். இவை அதன் பரந்த வெளிப்பாடுகள். அதன் குறிப்பான வெளிப்பாடு , தனிமனிதன் ஒவ்வொருவனின் குரலும் முக்கியம் எனப்பேசுவது முன்னிறுத்துவதும் ஆகும். இந்த வெளிப்பாட்டின் உச்சகட்டமாக மார்க்சீயம் சமத்துவத்தையும் உதிர்ந்து போகும் அரசதிகாரத்தையும் பற்றிய கதைகளை முன்வைத்தது. நவீனச்சிந்தனை முன்வைத்த புதிய நம்பிக்கைகளின் மேல் அதன் எல்லைக்குள் நின்று சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் சிலர் முன்வைத்தனர். அவர்களையும் நவீனத்துவம் தனது எல்லைக்குள்ளேயே வைத்துக் கொண்டு நவீனத்துவவாதிகள் (modernists) அல்லது முன்னணிப் படையினர் (avant garde) எனப் பெயரிட்டு உள்வைத்துக் கொண்டது.

 இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் கூட இதன் தாக்கம் இன்னும் தொடர்கிறது. ஆனால் 1980-களில் பின் நவீனத்துவம் கருத்தாகவும் வாழ்தலாகவும் ஐரோப்பாவில் உணரப்பட்டு உலகம் முழுவதும் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
பின் நவீனத்துவம், நம்பிக்கையின்மை என்ற வார்த்தையின்மேல் எழுந்த கருத்து நிலையும் வாழ்தல் நிலையுமாகும். எல்லாவற்றையும் விளக்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை அதற்குக் கிடையாது. மனித குலத்திற்கான ஒட்டுமொத்த விடுதலையை முன்மொழிவதோ , அதனை நோக்கிய போராட்டங்களை முன் எடுப்பதோ சாத்திய மானதல்ல என்பது பின்நவீனத்துவ நிலையின் வெளிப்பாடுகளில் ஒன்று. ஒரு மனிதன் தனது வினைகளின் பின்னணியில் அறிவின் தர்க்கத்தை மட்டும் வைத்துக் கொள்ளாமல் நம்பிக்கையின் பாற்பட்டும் தொழிற் படுகிறான் என்றால் அவனுள் உண்மையில் செயல்படுவது நம்பிக்கையின்மையாகத் தானே இருக்க முடியும். அவ்வாறு வினையாற்றும் ஒருவனுக்குத் தனது அறிவின்மீதும் நம்பிக்கையில்லை; நம்பிக்கை கொள்ள வேண்டிய கடவுள் மீதும் நம்பிக்கை இல்லை என்பது தானே பொருள்.
 
நவீனத்துவம் xபின் நவீனத்துவம்
பின் நவீனத்துவப் பார்வை கொண்ட இலக்கியம் என்பது ஒருவிதத்தில் பல இடங்களிலிருந்தும் கிடைப்பதில் தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்து ஒன்று சேர்த்து நிறுத்தும் ஒன்றாகும். இந்த விதத்தில் நவீனத்துவத்திலிருந்து அது மாறுபடுகிறது. நவீனத்துவமும் சிதறுண்ட கூறுகளுக்கு முக்கியத்துவம் தரும் போக்கே என்றாலும் அதில் எதிரெதிராக நிறுத்திப் பார்த்தல் என்பது இருக்கும். தொடர்ச்சியற்றதாகக் கதைசொல்லும் முறை நவீனத்துவத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் இன்னொரு கூறு கதை சொல்லுகின்றவனின் இடம் வெளியில் தெரியாமலும் ஆனால் அறியத்தக்க தாகவும் இருப்பது. பின் நவீனத்துவத்தில் இத்தன்மை இருக்காது. எடுத்துக்காட்டாக கேலியும் இரக்க உணர்வும் அருகருகே இருக்கின்றபோது படைப்பில் உண்டாகும் உணர்வு இத்தன்மையானது எனச் சொல்ல முடியாது அல்லவா..?
 
இருபதாம் நூற்றாண்டின் பிந்திய காலத்தின் பண்பாட்டு நிலைகளில் காணப்பட்ட சிதறுண்ட கூறுகளுக்கு நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் முக்கியத்துவம் தந்தன என்றாலும் அம்முக்கியத் துவம் ஒரே விதமானவை யல்ல; வெவ்வேறு நிலையிலானவை. நவீனத்துவம், கழிந்த காலத்தின்மீதும் கடந்த கால நிகழ்வுகளின் மீதும் ஆழமான பிடிப்புடன், பதிவு செய்வதை முழு ஈடுபாட்டுடன் பதிவு செய்கிறது. அதன் வழியாக ஆசிரியரின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறது. ஆனால் பின் நவீனத்துவமோ அதன் எதிர்நிலையில் கடந்த காலத்தின் மீதும் அதன் நிகழ்வுகளின் மீதும், விவரிப்பின் மீதும் , குறியீடுகளின் மீதும் ஆச்சரியப்படும்படியான கேள்விகளை எழுப்பி , அவற்றிற்கு விடுதலை அளிக்க முயல்கிறது. நம்பிக்கை சார்ந்த அர்த்தங்களைப் பெற்றிருக்கும் கூறுகளுக்கு அதிலிருந்து தப்பிக்கின்ற வாய்ப்பை உருவாக்குகின்றது. ஒற்றை வரியில் விளக்குவதாக இருந்தால் சிதைவுண்ட தன்மைக்கு நவீனத்துவம் வருத்தம் கொள்கிறது;பின் நவீனத்துவமோ கொண்டாட்டம் கொள்கிறது.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் இரண்டுக்குமிடையே உள்ள அடுத்த வேறுபாடு அவற்றின் தொனி அல்லது நோக்கம் சார்ந்த வேறுபாடாகும். நிலைநிறுத்தல் என்பதும் அறிவிப்பு செய்தல் என்பதும் நவீனத்துவக் கலைகளின் நோக்கமாகவும் தொனியாகவும் இருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவமோ அதனைச் செய்வ தில்லை. சரியானது/ தவறானது என்ற விவாதங்களுக்குள் நுழையாமலும் , உயர் பண்பாடு- வெகுமக்கள் பண்பாடு என்ற வேறுபாடு களை ஏற்றுக் கொள்ளாமல், உயர் ரசனை- கீழான ரசனை என்ற வேறுபாடுகளை மறுத்துப் பேசுகிறது பின்நவீனத்துவம். எல்லாமே பொருட்படுத்த வேண்டியன தான் என்பது அதன் தொனி. பின் நவீனத்துவத்தின் கருத்தியலை விளக்கும் ந.முத்துமோகன், அதன் சாரத்தை இவ்வாறு தொகுத்துத் தருகிறார்;

பின்னை நவீனத்துவ சிந்தனை சிலதீவிரமான நிலைப்பாடுகளை முன் வைக்கிறது, மரபு ரீதியான பழைய சமூகங்கள் கொண்டிருந்த கருத்து நிலைகளையும் நவீன முதலாளிய சமூகம் அறிவித்திருந்த பல்வேறு சமூக இலக்குகளையும் அது அடிப்படையான மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது. சிந்தனை வாழ்வில் , ஒற்றைக் கோட்பாடுகளிலிருந்து துவங்கி உலகம் தழுவிய அளவிற்கு வளர்க்கப்படும் எல்லாவகைக் கருத்தியல்களையும் அது ஏற்க மறுக்கிறது. அவ்வகைக் கொள்கைகளை பின்னை நவீனத்துவம் ஒட்டுமொத்தப்படுத்துபவை (Totalising), மேலாதிக்கப்பண்பு கொண்டவை (Hegemonising) என்று மதிப்பிடுகிறது. இறைவன் தனிமனிதன், பிரக்ஞை,அறிவும் சமூகம், மனிதவிடுதலை என்பது போன்ற புள்ளிகளை மையமாகக் கொண்டு மொத்த உலக நோக்கும் கட்டி எழுப்பப்படுவதை அது மறுதலிக்கிறது.துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, தற்காலிக மானவை, நிலையற்றவை நேர் கோட்டுத்தனமற்றவை, பன்மியப்பாங்கு கொண்டவை, நேர்க்காட்சித் தளத்தவை ஆகியவை பின்னை நவீனத்தால் பாராட்டப்படுகின்றன.[பின்னை நவீனத்துவம்; கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும்,ப.11] பேராசிரியர் ந.முத்துமோகனின் இந்த விளக்கங்கள் பின் நவீனத்துவத்தைப் புரிய வைக்கப் பெரிதளவு முயன்றுள்ளது என்றே சொல்லலாம்.
 
பின்நவீனத்துவம் ; மூன்று நபர்கள்.
 

தமிழில் பின்நவீனத்துவம், பின்னை நவீனத்துவம், பின்புதுமையியம் என்றெல்லாம் மொழிபெயர்ப்புக் குள்ளாகியிருக்கும் அந்தப் பதம்- போஸ்ட் மார்டனிஸம் (Post Modernism)- 1930 களிலேயே வழக்கில் இருந்தது தான் என்றாலும் இன்று பயன்படுத்தும் புது அர்த்தத்தில் பயன்பாட்டுக்கு வந்தது 1980 களில் தான். அந்தப் பயன்பாட்டை உருவாக்கியதில் மூன்று நபர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. 1980 -ல் ஜெர்மானியக் கோட்பாட்டாளர் ஹேபர்மாஸ் (Habermas) தன்னுடைய, ‘நவீனம் ஒரு முழுமையான திட்டம்’ என்னும் கட்டுரையில் வெளிப்படுத்திய கருத்துக்களே பின் நவீனத்துவச் சிந்தனையின் தொடக்கம் எனலாம். அவரைப் பொறுத்தவரையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோன்றிய அறிவொளிக் காலத்திலிருந்து அதாவது 1750-1850-களில் நிலவிய புதிய சிந்தனைகளே நவீனம் தோன்றக் காரணங்கள். ஜெர்மனியில் காண்டும் , பிரான்சில் வால்டேரும், டி.டி.ரோட்டும் இங்கிலாந்தில் லாக், க்யூம் போன்றவர்களும் சொல்லி வந்த கருத்துக்கள் முக்கியமானவை. பிரித்தானியர்கள், அந்தக் காலகட்டத்தைக் காரணகாரியங்களின் காலம் என்று கூறினர். இந்தக் காரணகாரிய காலத்தில் மரபு, மூடநம்பிக்கைகள், கீழ்ப்படியும் அடிமைத்தனம் , மதஒதுக்குதல் போன்றவற்றைத் தனிநபர்கள் தர்க்கம் சார்ந்தும் காரணகாரியங்கள் சார்ந்தும் கேள்விக்குள்ளாக்கினர். இதையே ஹேபர்மாஸ் நவீனநிலை என்று குறிப்பிட்டுள்ளார். நவீனத்துவம் என்ற பண்பாட்டு இயக்கம் பின்புலமாக இருக்க ஹேபர்மாஸ் வழங்கிய இத்திட்டத்தில் நோக்கம் பற்றிய தீர்மானம், தொடர்ச்சியின் இழப்பு போன்றன கவலையுடன் வெளிப்பட்டிருந்தன. இதனை 1970-களில் பிரான்சில் செயல்பட்ட பின் அமைப்பியல் வாதிகளான மிஷைல் பூக்கோ (Michel Foucault) ழாக் தெரிதா (Jacques Derrida) போன்றவர்கள் விமரிசனத்திற்குள்ளாக்கினார்கள். நீதியை நோக்கிய விசாரணையில் பெரும்பாலும் காரணகாரியம், தெளிவு, உண்மை, முன்னேற்றம் ஆகியன விலகியே நிற்கின்றன என்று தாக்குதல் தொடுத்தனர். இவர்களை இளம்மரபுவாதிகள் என ஹேபர்மாஸ் அடையாளப்படுத்தினார்.
நவீனத்துவத்திற்கு எதிராக நிலைபாடு எடுத்த ஹேபர்மாஸுவிற்குப் பதில் சொல்லத் தொடங்கிய ழான் பிரான்சுவா லையோத்தா (Jean Francois Lyotard) வின் கருத்துக்களே பின்னர் பின்-நவீனத்துவத்தின் தொடக்கமாக அறியப்படுகிறது. லையோத்தா தன் கட்டுரை ஒன்றின் தலைப்பாக பின்-நவீனத்துவ நிலைகள்; அறிவைப்பற்றிய ஓர் அறிக்கை (The Post- Modern Condition:A Report on Knowledge/ Manchester University Press,1979 ) என்று வைத்த பின்பு தான் பின்- நவீனத்துவம் விமரிசனச் சொல்லாடல்களுள் ஒன்றாகி விட்டது. லையோத்தாவே 1982-ல் ‘பின்-நவீனத்துவம் என்றால் என்ன ? வினாவிற்கான விடை’ என்ற கட்டுரை ஒன்றையும் எழுதினார். நவீனத்துவம் பற்றிய ஹேபர்மாஸின் கருத்துக்களுக்குப் பதில் சொல்லியிருந்தார். ‘அதனை (நவீனத்துவத்தை) எதிர்த்துப் பேசுகிறவர்களைப் புதியமரபாளர்கள் என விளிக்கும் சிந்தனையாளர் ஒருவரின் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பின்- நவீனத்துவம் என்ற பெயரில் அவர் சொல்வதெல்லாம் அறிவொளிக்காலச் சிந்தனையைத்தான்; அதாவது முற்றுப்பெறாத நவீனத்துவம் என அவர் நம்புவதைத்தான் நிலைநிறுத்தப் பார்க்கிறார்’ என்று கூறியிருந்தார். அந்தக் கட்டுரை ஹேபர்மாஸிற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக எழுதப்பட்டது. ‘‘அரைஞாண் கயிற்றுக் கீழே அடிக்கப் பார்க்கிறார்’’ என்ற வாக்கியம், பண்பாட்டுத்துறை விமரிசனங்களில் அடிக்கடி பயன்படுத்தப் படுவதுண்டு. இதனையொத்த வாக்கியம் ஒன்றைப் பயன் படுத்தி லையோத்தா ஹேபர்மாஸுக்குப் பதில் சொல்லியிருந்தார்.’‘அனைவரும் தங்கள் கருத்தை ஏற்காதவர்களை மரபுவாதிகள் என்று முத்திரை குத்தவே செய்கின்றனர். எல்லாவகையான சோதனைகளும் முடிவுக்கு வரவேண்டும் எனச் சொல்லுவது மரபுக்கு எப்படி ஆதரவாக முடியும்?’’ என்பது லையோத்தாவின் வினாவாக இருந்தது.. ஹேபர்மாஸ் ஒரு குழுவின் குரலாக வெளிப்பட விரும்புகிறார் என்பது லையொத்தாவின் குற்றச்சாட்டாக இருந்தது. கலாப்பூர்வமான அடையாளம், பாதுகாப்பு என்பதற்காகவும் ,தனி அடையாளம் என்பதற்காகவும் ஒழுங்கையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் இந்தக்குழுவைப் பற்றிச் சொல்வதென்றால் முன்னணிப்படை என்னும் கருத்தியலை நீர்த்துப் போகும்படி செய்யும்குழு என்று சொல்லலாம் என்றார் லையோத்தா. ஹேபர்மாஸ் தனது புதிய அறிவொளித் திட்டத்தின் மூலம் அதிகாரத்துவக்குரல்களின் ஆதிக்கம் தொடரவேண்டும் என விரும்புகிறார் எனவும் குற்றஞ் சாட்டினார். அதிகாரம் என்பது ஆயுதங்களின் மிகுதியாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை; பொருள்களை விளக்கம் செய்கிறேன் என்ற பெயரில் முழுமையாக்கம் செய்வதாகக் கூட இருக்கலாம். கிறிஸ்துவம், மார்க்சீயம் மட்டுமல்ல, ஒருவிதத்தில் அறிவியல் வளர்ச்சி என்ற போலி நம்பிக்கையும்கூட அதனைத்தான் செய்கிறது; அவற்றில் வெளிப்படும் பேரெடுத்துரைப்பு (Meta- narrative) அல்லது மிகை எடுத்துரைப்பு (Super- narrative) உண்மையில் நடக்க வியலாத பலவற்றை விளக்கி – ஒழுங்கில் உள்ள மென்மையான வேறுபாடுகள், எதிர்நிலைகள்,பன்மைத்துவம், எனப் பலவிதமாய் விளக்கி மறு உத்தர வாதத்திற்கு முயற்சி செய்கிறது என்பது அவரது குற்றச் சாட்டுகளின் சாரமாக இருந்தது.
 

ஹேபர்மாஸுக்கு எழுதிய இந்தப்பதில்களிலிருந்தே லையொத்தா தன் பின் நவீனத்துவத்திற்கான வரையறைகளை உருவாக்கினார், அவ்வரை யறைகளைப் பற்றி எளிமையாகச் சொல்வதென்றால், ‘ இயல் கடந்த எடுத்துரைப்பினை நோக்கிய ஆச்சரியமான பார்வை’என்று சொல்லலாம். வளர்ச்சி மற்றும் மனிதகுல ஓர்மை பற்றிய பேரெடுத்துரைப்புகள் (Grand Narratives) நீண்ட காலத்திற்குரியன அல்ல; எனவே அவற்றின் மேல் நம்பிக்கை கொள்வதை விடுத்து தொடர்ச்சியான சிற்றெடுத்துரைப்புகளின் மேல் நம்பிக்கை கொள்ளலாம். இச்சிற்றெடுத்துரைப்புக்கள் (Mini Narratives) கால எல்லை கொண்டனவாகவும் தற்காலிகமானவைகளாகவும் முக்கியமற்றவை களாகவும் ஆனால் அவற்றிற்கிடையே உறவுகள் கொண்டனவாகவும் இருக்கும். அத்துடன் ஒரு சிறிய வெளியில், ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒத்த கருத்துடைய குழுக்கள் இணைந்து வினையாற்றுவதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தரவல்லவனவாக அவை இருக்கும் என்பது முக்கியமானது. இவ்வாறாக, ஒரு பொருள் அல்லது வரலாற்றின் முடிவு என்பதற்கு அறிவொளிக் காலச் சிந்தனை தந்த ஒற்றைத்தளக்கருத்தைக் கட்டுடைப்பு செய்வதாக லையோத்தாவின் பின்நவீனத்துவப் பார்வைகள்- நிலைபாடுகள் இருந்தன. பின் நவீனத்துவ நிலைகள் என்ற லையோத்தாவின் நூலில் உள்ள விவாதங்களை மூன்று அம்சங்களில் பகுத்துக் கூறலாம். தத்துவ விளக்கம் , இலக்கிய விமரிசனம், பண்பாடு பற்றிய கோட்பாட்டு விளக்கங்கள் என்பனவே அந்த மூன்று பகுதிகள். பின்நவீனத்துவம் இன்று மேற்கத்திய மற்றும் வட அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் விவாதிக்கப்படும் ஓர் அறிவுவாதமாகவும் நிலைபெற்றுவிட்ட ஒரு வாழ்க்கைக் கோட்பாடாகவும் கருதப்படுகிறது. ஆனால் அதன் தொடக்கம் கட்டடக்கலை சார்ந்தது என்பது அறியவேண்டிய ஒன்று. கட்டடங்களைப் பொதுவாக பயன்பாட்டு நோக்கிலும், எளிய வடிவத்திலும், முன்மாதிரிகளுடன் ஒத்துப்போகும் தன்மையுடனும் புரிந்து வைத்திருந்ததற்கு மாறாக வேறு நோக்கங்களுடனும் அணுகலாம் என்ற சிந்தனை தோன்றியதின் தொடக்கமே பின்நவீனத்துவத்தின் தொடக்கம் எனவும் நம்பப்படுகிறது. கட்டிடங்களை வெறும் பயன்பாட்டு நோக்கில் பார்க்காமல் அழகு படுத்துதலுடன் தொடர்படுத்திக் கணிப்பது அவசியம் எனக் கூறப்பட்டது. ஒரு கட்டடத்தில் பயன்பாட்டின் பகுதிகள் இருப்பது போல பயன்பாடற்ற ஆனால் அழகுக்கான பகுதிகள் அதைவிடக்கூடுதலாக இருப்பது சாத்தியம் என்றும் அந்தப்பகுதிகளே ஒரு கட்டடத்தை இன்னொரு கட்டடத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றும் கூறப்பட்டது. 1950களில் கட்டடக்கலை சார்ந்த இந்தக்கருத்துக்களை முன்வைத்தவர் களில் முக்கியமானவர் வெஞ்சுரி என்பவர்.
 
லயோத்தாவைப் போலவே பின் – நவீனத்துவக் கொள்கையாளர்களுள் குறிப்பிட வேண்டிய இன்னொரு பெயர் ழான் போத்திரியா (Jean Baudrilard) பிரெஞ்சு எழுத்தாளரான இவர் தனது பாவனைகள் ( Simulations) என்ற நூலை 1981- ல் வெளியிட்டார். 1983-ல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது அந்த நூல். போத்திரியா, ‘உண்மையின் இழப்பு’ என்பதை விளக்கும் விதமாகவே பின்- நவீனத்துவத்திற்குள் நுழைந்தார். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தயாரிப்புகள், விளம்பரங்கள் போன்றவற்றிலிருந்து உருவாகும் பிம்பங்கள் , மனிதர்களின் சமகால வாழ்வில் புகுந்து, அவர்களைக் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையில் -நகலுக்கும் அசலுக்கு மிடையில் நிறுத்தி விட்டன. அதன் காரணமாகப் பண்பாட்டு வெளிப்பாடுகள் ஒருவித அதீதத்தனத்துடன் அலையத் தொடங்கி விட்டன; அவைகளின் வேறுபாடுகள் களையப்பட வேண்டியன என்பது போத்திரியாவின் ஆய்வுகளின் சாரமாக இருந்தன.

என்ன செய்கிறது பின் -நவீனத்துவத்திறனாய்வு:

தத்துவமாகவும் கோட்பாடாகவும் வாழ்நிலையாகவும் உணரப்பட்டு கல்விப் புலங்களுக்குள்ளும் கல்விப் புலங்களுக்கு வெளியேயும் அறிவார்ந்த சொல்லாடலாக இருக்கும் பின் நவீனத்துவம் திறனாய்வுத்தளத்தில் என்ன செய்கிறது என்பதை அறிவது முக்கியமானது.அவை வருமாறு;
 
1. இருபதாம் நூற்றாண்டு இலக்கியப்பிரதிகளுக்குள் காணப்படும் பின் – நவீனத்துவக் கருக்கள், தன்மைகள், நோக்குகள், போக்குகள் போன்றவற்றைக் கண்டறிவதுடன் அவற்றின் தாக்கங்களையும் எடுத்துரைக்கிறது.
 
2. இலக்கிய வடிவங்களைக் கலக்கி- உதாரணமாகத் திகில் கதை, துப்பறியும் கதை, தொன்மத்தின் காலம், உளப்பகுப்பாய்வு நாவல் போன்றனவற்றைக் கலந்து – உருவாக்கும் புனைகதையொன்றின் பின்னணியே பின் -நவீனத்துவத்துவ அடையாளமான , ‘யதார்த்தத்தின் தோற்ற மயக்கம்’ என்பதனைத் தரவல்லது எனக் கூறுகிறது.
 
3. இலக்கியப்படைப்பின் பிரதியுருவாக்கக் கூறுகளாகவுள்ள பரிகாசம், துயரம், உருவகம் போன்றன ஒரு பிரதிக்கும் இன்னொரு பிரதிக்குமிடையில் எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று விளக்குவதுடன் அவை, நடைமுறை வாழ்க்கையை எவ்வாறு காட்ட முயல்கின்றன என்பதையும் பற்றி விவாதிக்கிறது.
 
4. முரணின் பின்னணியைப் பற்றிய விவாதம் பின் -நவீனத்துவ விமரிசனத்தில் முக்கியமானது( பீட்டர் புரூக்கர் தொகுத்துப் பதிப்பித்துள்ள நவீனத்துவம்/ பின் நவீனத்துவம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள உம்பர்ட்டோ எக்கோவின் விளக்கம் கவனிக்கத்தக்கது). நவீனத்துவவாதிகள் கடந்த காலத்தை அழித்து விட முயல்கின்றனர்.ஆனால் பின் -நவீனத்துவமோ கடந்த காலத்திற்குள் மாற்றுப் பார்வையுடன் பயணம் செய்ய வேண்டும் எனக்கருதுகிறது.
 
5. நாவல் போன்ற கதை தழுவிய இலக்கிய வடிவங்களின் எடுத்துரைப்பு முறைகளில் காணப்படும் சுயமோகக் கூறுகளைக் கண்டறிந்து அவற்றின் பின்னணியை விவாதத்திற்குள்ளாக்குகிறது. பொதுவாக இத்தகைய படைப்புகளில் படைப்பாளிகள் சொந்த முடிவு சார்ந்த பயணமும் வழிமுறைகளுமே இடம் பெற்றுள்ளன என்பதை எடுத்துக்காட்டி அப்படைப்புகளின் உள்ளடக்கத்தில் இருப்பதாக நம்பப்படும் இயல்பு நெறித் தன்மையை நீக்க முயல்கிறது.
 
6. உயர் மற்றும் தாழ்ந்த பண்பாடுகளுக்கிடையே இருப்பதாக நம்பப்படும் ¢வேறுபாடுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அத்துடன் அவ்விரு பண்பாடுகளையும் கலக்கிச் செய்த பிரதிகளை தூக்கிப் பிடிக்கிறது.


பின் நவீனத்துவத்தின் மீதான விமரிசனங்கள்:
பின் நவீனத்துவம் கருத்தியலாகவும் வாழ்நிலையாகவும் உணரப்படும் நிலை தோன்றிய போதிலும் அதனை விமரிசனம் செய்கிறவர்களும் எதிர்த்துத் தோற்கடித்துவிடவேண்டும் எனத்துடிப்பவர்களும் உண்டு. எந்த ஒரு கருத்தியலும் விவாதத்திற்கு வரும்பொழுது முதலில் ஏற்கத்தயங்கிப் பின்னர் இது ஒன்றும் புதியன அல்ல; எங்கள் மொழியில்- சிந்தனைப் பாரம்பரியத்தில்- ஏற்கனவே உள்ளதுதான் எனச் சொல்லி அதன் சில அடிப்படைகளை மட்டும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் ஆய்வில் அக்கருத் தியலை அல்லது அணுகுமுறையை அல்லது முறையியலைப் பயன்படுத்தி விடுவது சிலரின் உத்தி முறை. இத்தகைய உத்தி முறை பொதுவாகக் கல்வித்துறைசார் ஆய்வுகளில் அதிகம். தமிழில் மட்டுமே இப்போக்கு உண்டு என்று சொல்ல முடியாது. தேசந்தழுவிய ஒன்றாகவே நான் கணிக்கிறேன். உலக அளவிலும்கூட இப்படி நம்பிக்கை கொள்கிற பேராசிரியர்களும் அறிஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
பின் நவீனத்துவத்திற்கெதிரான கருத்துக்களும் விமரிசனங்களும் மார்க்சிய முகாமிலிருந்து உலக அளவிலும் தமிழக அளவிலும் வெளிவந்தவண்ணமே உள்ளன.பின் நவீனத்துவம் ஆராதிக்கும் சிதறல்கள், பின்னங்கள் போன்றன மார்க்சீயம் முன்னிறுத்தும் உலகத்தொழிலாளர்களின் சமத்துவம் என்பதற்கு எதிரானது என்ற நிலையிலும் , நம்பிக்கையின்மை புரட்சிகர அரசியல் ,போராட்டம், ஒன்று படுத்துதல் போன்றவற்றைச் சீர்குலைக்கும் என்பதாலும் மார்க்சீய விமரிசகர்கள் தொடக்கத்திலிருந்தே பின்நவீனத்துவத்திற்கு எதிரான நிலைபாடுடையவர்களாகவே உள்ளனர்.மார்க்சியம் மனித சமூகத்தின் வரலாற்றை விளக்க தனது வரலாற்றுப்பொருள்முதல்வாதம் என்னும் அடிப்படைக் கருத்தியலை ஆதாரமாகக் கொண்டிருக்கப் பின் நவீனத்துவமோ அதற்கு எதிரான நிலைபாட்டை வெளிப்படுத்துகிறது. இன்னும் சொல்வதானால் பின்நவீனத்துவம் வரலாற்றை எதிர்க்கும் மனப்பாங்குடன் கருத்துரைக் கின்றது.

 வரலாறு பற்றிய மார்க்சியக் கருத்தும் சரி, தேசியவாதம் பேசும் பிற முதலாளிய வரலாற்றாசிரியர்களின் வரலாற்றுவாதமும் சரி, ஒருவிதத்தில் பெருங்கதையாடல்களே என்பது பின்நவீனத்தின் நிலைப்பாடு. இதே மனநிலையையே பின்நவீனத்துவம் மார்க்சீயர்களின் நம்பிக்கைகளான வர்க்கப் போராட்டம், மாற்று மதிப்பீடுகளை முன்வைக்கும் கலை இலக்கிய முயற்சிகள், மாற்று அமைப்புக் களைக் கட்டுதல் போன்றவற்றிலும் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் விட மார்க்சியம் அதிகம் விரும்பும் ‘செயல்படும் தன்மை’ யைப் பின் நவீனத்துவம் அதிகமும் வலியுறுத்துவதில்லை.
 
பின் நவீனத்துவச் சிந்தனையாளர்கள் தங்களை இயல் கடந்த மார்க்சீயர்களாகக் காட்டிக்கொண்டாலும் மார்க்சீய அரசியலுக்கு எதிரான தன்மை பின்நவீனத்துவத்தின் கூறுகளாக உள்ளன; அதனால் அது முதலாளியத்திற்குப் பிந்திய ஏகாதிபத்திய ஆதரவுக்கருத்தியலாக உள்ளது என்பது மார்க்சீயர்களின் வாதம். உலக அளவில் இத்தகைய கருத்துக் களுடன் பின்நவீனத்துவத்தை எதிர்த்த நிலைபாடு டையவராக வெளிப்பட்டவர் ஃப்ரெடரிக் ஜேம்சன் ஆவார் (Post Modernism, or The Cultural Logic of Late Capitalism. Durham, NC., Duke University Press, 1991). லையோத்தாவிடம் பின்நவீனத்துவச் சிந்தனை தோன்றக் காரணமாக இருந்த ஹேபர்மாஸும் பின்நவீனத்துக்கு எதிரான வாதங்களை முன்வைத்து வருபவர் ஆவார். மார்க்சீயர்கள் அல்லாத சிந்தனையாளர்களும் பின்நவீனத்துவ நிலை களுக்கெதிரான கருத்துக்களை கொண்டவர்களே என்றாலும் காத்திரமான எதிர்க்கருத்துக்களை முன்வைக்கவில்லை. இந்த இடத்தில் இந்திய அளவில் நவீனத்துவம்-பின்நவீனத்துவம் பற்றிப் பேசியும் இந்திய சமூகம் மற்றும் இலக்கியங்களை விமரிசனம் செய்தும் வரும் அஷிஷ் நந்தி (Ashis Nandy) யின் கருத்துக்கள் ஒரு மையப்புள்ளியைத் தொட்டுள்ளதை நினைவு படுத்திக்கொள்வது அவசியமானது என்று நி¬னைக்கிறேன். அவரிடம் எடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இந்தியர்களாகிய நம்மிடம் பின்நவீனத்துவ நிலைபாடு எவ்வாறு வெளிப் படுகிறது; அதைநாம் எவ்வாறு உள்வாங்கி அர்த்தமாகிறோம் என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த நேர்காணலின் பகுதிகள் வருமாறு;
 
கேள்வி; தத்துவார்த்தமான ஒரு சந்தேகத்தைக் கேட்டுக்கொண்டே தொடங்கலாம். சகல அறிவுத் துறைகளையும் இன்று ‘பின்நவீனத்துவத்தின் குறியீடுகள் கைப்பற்றியிருக்கின்றன. அதே சமயம், ஏர்னெஸ்ட் கெல்னர் கேலியாகக் குறிப்பிட்டது போல ‘பின்நவீனத்துவ வாதம்’ தெளிவின்மை, கருத்துக்குழப்பங்களின் புகைமூட்டத்தில் மறைந்திருக்கிறது.சில சமயம் இது ஓர் எதிர்க்கலாசாரப் போக்கு என்றும் வேறுசில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அம்சங்களைக்கொண்ட தெளிவற்ற சிந்தனைகளின் தொகுப்பு என்றும் தோன்றுகிறது. நவீனத்துவத்தின் திறமையான நியாயப்படுத்தல் இது என்று கூடத் தோன்றுகிறது. நீங்களோ பின்நவீனத்துவவாதி என்றும் நவீனத்துவ வாதியென்றும் மாறிமாறிக் குறிப்பிடப்படுபவர். இந்த விசயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
 
அஷிஷ் நந்தி; பின்நவீனத்துவத்திற்கு இன்று தெளிவான அர்த்தமிருக்கிறது. எல்லாவற்றையும் அதன் குடைநிழலில் நிறுவும் போக்கு சரியல்ல. நவீனத்துவத்துக்கு தெளிவும் திட்டமுமான அர்த்தத் தளங்கள் இருப்பது போலத்தான் பின்நவீனத்துவத்துக்கும். நவீனத்துவத்துக்கும் அப்பால் உள்ளவை, நவீனத்து வத்தை மீறியவை ஆகிய எல்லாமும் பின்நவீனத்துவமல்ல. ஐரோப்பிய மரபின், விழிப்பின் பின்னணி யில் நாம் நவீனத்துவத்தை அடையாளம் கண்டது போலத்தான் இதுவும்.
நான் பின்நவீனத்துவவாதியல்ல. பின்நவீனத்துவம் ஓர் எதிர்க்கலாச்சாரம்தான். நவீனமயப் படுத்தப் பட்ட சமூகங்களின் அனுபவங்களிலிருந்து உயிர்பெற்ற ஓர் எதிர்க்கலாசாரம். நவீனத்துவம் மனிதர்கள் மேல் செலுத்தும் நெருக்கடிகளுக்கு எதிரான கருத்தியல் மறுப்பு. அதன் முக்கியத்தளமாக இலக்கியத் தையும் மானுட அறிவியக்கங்களையும் நான் கண்டிருக்கிறேன். அந்த நிலையில் பின்நவீனத்துவம் என்பது வட அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் மையம் கொண்ட கல்வித்துறைச் செயல்பாடு. அதற்கு அவசியமும் முக்கியத்துவமும் உண்டென்று கருதுகிறேன்.
 
கேள்வி ; பெருங்கதையாடல்களையும் (grand narration) கோட்பாடுகளையும் மறுப்பது பின்நவீனத்து வத்தின் சிறப்புகளில் ஒன்றாகச் சொல்லப்படுவதுண்டு. அதே சமயம் ,எல்லா எதிர்ப்புகளையும் கடந்து முதலாளித்துவம் என்ற பெருங்கதையாடல் உலகம் முழுவதும் வேரூன்றிவிட்டிருப்பதன் சாட்சியம் நாம். இது முரண்பாடல்லவா.?
அஷிஷ் நந்தி; முரண்பாடாக எனக்குத் தோன்றவில்லை. பெருங்கதையாடல்களுக்கான எதிர்ப்பில் நவீன முதலாளித்துவத்தின் கதையாடலும் அடங்கும் என்று பின்நவீனத்துவவாதிகள் குறிப்பிடுவார்கள். அதில் முரண்பாடிருப்பதாகக் கூறமுடியாது. உண்மையில் பிரச்சினை வேறு . பின்நவீனத்துவவாதிகள் நவீனத்துவத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ள மூன்று நிபந்தனைகளை முன்வைக்கிறார்கள். நவீனமயப் படுத்தலுக்கு முழுமையாக ஆட்பட்ட இடங்களிலிருந்து இந்தக் கருத்து உருவானது என்பதால் ஓரளவு நியாயமானதே.ஆனால் நவீனத்துவத்துக்கு முழுமையாகவோ பகுதியாகவோ ஆட்படாத இடங்களி லிருந்தும் நவீனத்துக்கு எதிராகக் குரல்கள் எழுகிறது. நவீனத்துவத்தை முற்றிலும் புறக்கணித்த இடங் களிலிருந்தும் இதே குரல் ஒலிக்கிறது. உண்மையில் பின்நவீனத்துவச் சூழலில் இந்தக் குரல்களுக்கு இடமிருக்கிறதா? இல்லை .எனினும் இந்தக் குரல்களின் பொதுவான நியாயத்தைப் பின்நவீனத்துவம் அங்கீகரிக்கிறது. அடிப்படையில் பின்நவீனத்துவம் என்பது வட அமெரிக்க-ஐரோப்பியக் கலகம். நவீன மயமாக்கப்பட்டவர்களின், நவீனத்துவத்தின் உள்ளர்த்தங்களை அனுபவித்தவர்களின் கலகம். (ஷாஜஹான் மாடம்பட்டு, நந்தியுடன் நடத்திய உரையாடலின் பகுதிகள்இவை.சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் நவீனத்துவம் மரபு எதிர்ப்பு என்ற தலைப்பில் காலச்சுவடு,இதழ்48-ல் வெளியாகியுள்ளது,)
 
தமிழில் என்ன செய்திருக்கிறது;

1.தமிழ்த்திறனாய்வுக்குள் தனியதிகாரம் செலுத்தி வந்த மார்க்சீயத் திறனாய்வு முறையக் கொஞ்சம் திகைக்கச் செய்தது அமைப்பியல் என்றால் அதன் ஆதிக்கத்தைக் கதிகலங்க வைத்தது பின் – நவீனத்துவம் பற்றிய சொல்லாடல்கள்தான்.அமைப்பியலின் தொடர்ச்சியாக வந்தது பின் அமைப்பியல். இவற்றின் தொடர்ச்சியாகவுமில்லாமல் முரணாகவுமில்லாமல் வந்து ஒட்டுமொத்த மனிதச் சிந்தனையையும் கவனப்படுத்திய ஒன்று பின்நவீனத்துவம். பின்நவீனத்துவத்தின் வரவுக்கு முன் பின்னுமாகத் தமிழில் முக்கியமான இரு திறனாய்வுகள் கவனம் பெற்றுள்ளன. முன்னதாகக் கவனம் பெற்றது என்றாலும் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பது பெண்ணியல் திறனாய்வு.ஆனால் பின்னதாகக் கவனம் பெற்றபோதும் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவது தலித்தியல் திறனாய்வு. இவ்விரண்டும் இவ்வாறாக இருப்பதற்குக் காரணங்கள் அவற்றிற்குள் செயல்படும் சக்திகளே எனலாம். இவ்விருவகைத் திறனாய்வுகளின் கருத்தியலைத் தீர்மானித்ததில் பின் நவீனத்துவச் சொல்லாடல்களுக்குப் பங்குண்டு.
 
2.பின்நவீனத்துவத்தின் வருகை தமிழ்த்திறனாய்வின் விமரிசனத்தளத்தை விரிவடையச் செய்திருக்கிறது.அதுவரை விமரிசனம் செய்வதற்கான களமாகக் கருதப்பட்ட இலக்கியப் பிரதிகளின் வரை யறைகள் மாறிவிட்டன. பிரதி என்பதற்குள் எல்லாம் -எழுதப்பட்டனவும் சொல்லப்பட்டனவும் நிகழ்த்தப்படுவனவும், நிகழ வனவும் என எல்லாம் விமரிசனத்திற்கான பிரதிகள்தான் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

3.ஒற்றுமைப்படுதலையும் ஒத்திசைவுக்கான அடிப்படைகளையும் பற்றிப் பேசியதற்குப் பதிலாக வேறுபாடுகளையும் தனி அடையாளங்களையும் பற்றிப் பேச வைத்துள்ளது. வேறுபாடுகளுடன் இணைந்து செயல்பட்டு அவரவர்க்கான இடங்களைப் பங்கிட்டுக் கொள்வதையும் சாத்தியமாக்கி யிருக்கிறது பின் நவீனத்துவம். இந்தச் சாத்தியங்களின் பின்னணியில, அதுவரை இருப்பதாக நம்பப்பட்ட கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அரசியல் வெளியில் முதலில் வெளிப்படையாக அடையாளப்பட்ட இந்தப் போக்குப் பின்னர் பண்பாட்டு வெளியிலும் இலக்கிய வெளியிலும் கவனமாக நடந்து வருகிறது. பாரதீய ஜனதா கட்சியுடன் அதன் கொள்கைகள் , இலட்சியங்கள் என அனைத்திலும் முரண் படக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்றன கூட்டு வைத்துக் கொண்டு மைய அரசில் அதிகாரத்தைச் செலுத்தியதை வெறும் அதிர்ஷ்டப் பரிசு என்று நினைப்பது மூட நம்பிக்கை சார்ந்த சங்கதி. அந்நிகழ்வு அசலான பின்நவீனத்துவ வெளிப்பாடல்லாமல் வேறல்ல. அதே போல் தலித் இலக்கியவாதிகளில் பலருக்கும் பிராமணரல்லாதார் அரசியல் மற்றும் எழுத்து உவப்பாக இல்லாமல் போக, பிராமண இதழ்களின் ஆதரவும் இலக்கிய நிகழ்வுகளில் அங்கீகாரமும் விருதுகளில் உரிய பங்கும் தரப்படுவதைப் பின்நவீனத்தின் துணையில்லாமல் விளங்கிக் கொள்ள முடியாது.
 
4.தரமான எழுத்து , உன்னதமான கலை, கலைத்தரப்படங்கள் போன்ற பதங்கள் இன்று அர்த்தமிழந்து வருகின்றன. இலக்கியத்தைப் பற்றி மயிர்பிளக்கும் விவாதங்கள் செய்து வந்த இலக்கியப் பத்திரிகைகள், பறையின் ஒலியையும் தப்பாட்டத்தின் அசைவுகளையும் பற்றிக் கட்டுரைகள் வெளியிடுகின்றன. தனுஷின் காதல் கொண்டேனையும் பாலாவின் பிதாமகனையும் அனுசரணையுடன் கவனித்துக் கருத்துரைக்கின்றன. வெகுமக்கள் பண்பாடும் வெகுமக்கள் ரசனையும் ஒதுக்கவேண்டியன என்ற நம்பிக்கையை மறுக்கவும் அவையும் கவனிக்கத்தக்கன என்ற கருத்தியலை உருவாக்கவும் பின் நவீனத்துவம் காரணமாக இருந்துள்ளது. அதேபோல் பின்நவீனத்துவத்திற்கு அழகிப்போட்டிகள் பண்பாட்டுச் சீரழிவின் வெளிப்பாடுகளும் இல்லை; ஆராதனைக்குரிய புனிதங்களும் இல்லை. தற்காலிகமான களியாட்டங்கள்தான்.
 
தமிழில் பின் நவீனத்துவம் ஒரு விமரிசனச் சொல்லாடலாகப் பல விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என உறுதியாகச் சொல்லும் சாத்தியங்கள் உண்டு. என்றாலும் அதன் தத்துவ அடிப்படையை உள் வாங்கிய படைப்புகள் இவையெல்லாம் எனச் சொல்வதில் சிக்கல்கள் உள்ளன. கதையாடல் முறையில், மரபுகளைக் கேள்விக்குள்ளாக்கிக் காட்டும் நிலையில், தொடர்ச்சியற்ற நிகழ்வுகளை அடுக்கிக் காட்டும் விதத்தில் எனத் தனித்தனியாகச் சில படைப்புகளை பின்நவீனத்துவ அடையாளம் கொண்டவை எனக் கூறலாம். தீவிரமான ஆய்வுக்குப் பின்னால் பாரதி, புதுமைப்பித்தன், வேதநாயகம ¢பிள்ளை போன்றவர்களின் நவீனத்துவ தொடக்கப் புள்ளிகளில் பின்நவீனத்துவச் சாயல் இருப்பதைக் கூட எடுத்துக்காட்டலாம். ஆனால் பின்நவீனத்துவம் என்ற சொல்பிரயோகமும் அறிமுகமும் கிடைத்த பின்பு எழுதப்பட்ட எழுத்துக்களில் அதன் கூறுகள் வெளிப்பட்ட எழுத்துக்களாக பிரேம்;ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணண், சாருநிவேதிதா, கோணங்கி, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், விக்கிர மாதித்தியன் போன்றவர்களின் எழுத்துக்களைக் குறிப்பிடலாம். இவர்களின் எழுத்துக்களும் கூட ஏதாவது ஒரு அம்சத்தில் நவீனத்துவத்தின் அடையாளங்களுக்குள் போய்ச் சேர்ந்துவிடுவதும் உண்டு.

 பெருங்கதையாடல்களை உருவாக்காத எழுத்துக்கள் என்ற வகையில் தலித் எழுத்துக்கள், பெண் எழுத்துக்கள் கூட நவீனத்துவ அடையாளத்திலிருந்து தாவி பின்நவீனத்துவ அடையாளத்தைப் பூட்டிக் கொள்வதும் உண்டு.
தமிழில் ஆதரவும் எதிர்ப்பும்
 
தமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்த பலரின் பூர்வீகம் மார்க்சீயமே. அதனைத் தொடர்ந்து அவர்களை பின்நவீனத்துவம் வரை பயணம் செய்ய வைத்தது, மார்க்சீயச் சித்தாந்தம் போதாமை யுடைய சித்தாந்தம் என்று அவர்கள் நம்பியதின் விளைவுகள் எனலாம். கடந்த பத்தாண்டுகளில் (1994-2004) தமிழில் வெளிப்பட்டுள்ள பின்நவீனத்துவத்தை மையப்படுத்திய குரல்களில் சிலரது குரல்களை எதிர்க் குரல்களாகவும் சிலரது குரல்களை ஆதரவுக் குரல்களாகவும் காணமுடிகிறது. தொண்ணூறுகளில் தமிழ்ச் சிந்தனைச்சூழலைத் தீவிரமாகத் தாக்கம் செய்த நிறப்பிரிகை (1990-1997 )இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்ட அ.மார்க்ஸ், ரவிக்குமார், போன்றவர்களின் குரலும் அதில் பங்கேற்று எழுதிய ராஜ்கௌதமன், சாரு நிவேதிதா, பிரேம், கண்ணன்.எம்.,அ.ராமசாமி போன்றவர்களின் குரல்கள் ஆதரவுக்குரல்களாகும். இவர்களில் சிலர் பின்னர் தலித் விமரிசனச் சொல்லாடல்களை உருவாக்குவதிலும் பெண்ணியச் சொல்லாடல்களை உருவாக்குவதிலும் தீவிர அக்கறைகள் காட்டத்தொடங்கினர் என்பது வெளிப்படை. ஆனால் அந்த அக்கறைகளில் பின்னணியில் மார்க்சீயத்தின் ‘மாற்று’ (alternative) என்பதை முன்வைக்காமல் பின்நவீனத்துவத்தின் கருத்தியல்களின் பேரிலேயே விவாதங்களை முன்வைத்தனர். 

பின் நவீனத்துவம் என்பது சிறுபத்திரிகைகள் சார்ந்து விவாதிக்கப்படும் ஒன்றாக இருந்த நிலையை மாற்றிக் கல்வித்துறை சார்ந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்து ஒரு கருத்தரங்கை நடத்தியதின் மூலம் தன்னுடைய தடத்தைப் பதித்தது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தமிழியல் துறை. அதன் முதல் துறைத் தலைவராக-வருகைதரு பேராசிரியராக இருந்த தி.சு.நடராசனும் , இணைப்பேராசிரியரான அ.ராமசாமி (இக்கட்டுரையாசிரியர்)யும் இணைந்து நடத்திய பின்னை நவீனத்துவம் ;கோட்பாடுகளும் தமிழ்ச்சூழலும் என்னும் கருத்தரங்கம் நவீனத் தமிழ்த்திறனாய்வில் செயல்பட்ட கல்வியாளர்களும் திறனாய்வாளர் களையும் ஒன்றிணைத்த ஒரு நிகழ்வாகும். அக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் ஒரு தொகுதி யாக, கோவை விடியல் பதிப்பக வெளியீடாக (1998)- கருத்தரங்கத் தலைப்பிலேயே நூலாக வெளி வந்தது. 

இந்த நூலில் இடம் பெற்றுள்ள எல்லாக் கட்டுரைகளும் நேரடியாகப் பின் நவீனத்துடன் தொடர்பு டையவை என்று சொல்லி விட முடியாது. ஆனால் புதுவகைத்திறனாய்வுச் சொல்லாடல்களைக் கொண்டவை என்பதையும் மறுத்துவிட முடியாது. இக்கருத்தரங்கைத் திட்டமிட்டு நடத்திய முனைவர் தி.சு. நடராசன் அறியப்பட்ட மார்க்சீய முகாமைச் சேர்ந்தவர். இக்கருத்தரங்கில் பின்நவீனத்துவத்தின் மீதான இடதுசாரி விமரிசனத்தொனியுடன் கட்டுரை வாசித்த முனைவர் ந. முத்துமோகன் அதன் பின்னரும் கட்சி சார்ந்த இடதுசாரிக் கருத்தியலாளராகவும் கட்சியின் சித்தாந்திகளில் ஒருவராகவும் அறியப்படுபவர் (முனைவர். ந.முத்துமோகனின் காத்திரமான விமரிசனங்களுக்கு காவ்யா வெளியீடாக வந்துள்ள மார்க்சிய விவாதங்கள்,2002 காண்க). இவரைப் போலவே மார்க்சிய எல்லைக்குள் நின்று பின்நவீனத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் நேர்மறை /எதிர்மறைக்கூறுகளைச் சுட்டிக்காட்டிப் பேராசிரியர் கா.சிவத்தம்பி கணையாழி இதழில் ஒரு தொடர்கட்டுரையொன்றை எழுதினார்.

 விரிவான விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கும் அக்கட்டுரையிலும் பின் நவீனத்துவம் குறித்த சந்தேகங்கள் மார்க்சியனின் கோணத்திலிருந்தே எழுப்பப்பட்டன எனலாம். பின் நவீனத்துவம் குறித்து மார்க்சிய வட்டத்திலிருந்து இத்தகைய பார்வைகள் மட்டுமே வந்துள்ளன என்று சொல்லி விடமுடியாது.
 
மரபு மார்க்சீயமுகாமிலிருந்து பின்நவீனத்துவத்தின் பேரில் முதலில் எதிர்ப்பு மட்டுமே காட்டப்பட்டது. மார்க்சீய விமரிசகர்கள் என அறியப்பட்ட ஞானி, கோ,கேசவன், அருணன், தி.க. சிவசங்கரன், போன்றவர்களும் தங்களை இடதுசாரிச் சாயல் கொண்டவர்களாகக் காட்டிக் கொண்ட பேராசிரியர் களான சிற்பி. பாலசுப்பிரமணியன், பேரா. இரா.பாலச்சந்திரன்(கவிஞர் பாலா) போன்றவர்களும் சில இடங்களில் பின்நவீனத்துவத்திற்கு எதிர் நிலைபாடு உடையவர்களாக வெளிப்பட்டுள்ளனர். இடது சாரிகளைப் போலவே, இடதுசாரிகளாக இருந்து தமிழ்தேசியம் பேசத் தொடங்கிவிட்ட தமிழ்தேசப் பொதுவுடைமைக்கட்சிச் சித்தாந்திகளான அஷ்வகோஷ், வெங்கடராமன் போன்றவர்களும் பின் நவீனத்து வத்தின் எதிர்ப்பாளர்களாகக் காட்டிக் கொண்டவர்களே ஆவர்.தமிழர் கண்ணோட்டம் இதழில் அத்தகைய கட்டுரைகள் பல வந்துள்ளன.


==============================================================

[இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள பெயர்களைப் பற்றி மேலதிக விவரங்கள் சிலவற்றைத்தரலாம் எனக் கருதி இக்குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. கட்டுரையின் பகுதியாகவே, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரும் பின்நவீனத்தை விவாதப்பொருளாக்கியவருமான லையோத்தாவைப்ப பற்றிய அறிமுகம் தரப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பின்நவீனத்துவச் சிந்தனையாளரான போத்திரியா பற்றியும்,இச்சிந்தனையின் தோற்றத்தில் பின்புலமாக இருந்த பின் அமைப்பியலின் வெளிப்பாட்டாளர்களான பூக்கோ, தெரிதா பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப்பட்டுள்ளன]
 
பூக்கோ; பன்முக வெளிப்பாடுகள் கொண்ட அறிவாளியாக அறியப்பட்டிருந்த ழான் பால் சார்த்தரின் இடத்தை அவருக்குப் பின் நிரப்புவதில் நான்கு பேரிடையே கடும் போட்டி நிலவியது. முதலாமவர் இலக்கியத்திறனாய்வாளர் ரோலாண்ட் பார்த், இரண்டாமவர் உளவியல் பகுப்பாய்வாளர் ழாக் லக்கான், மூன்றாவது நபர் அமைப்பியல் மானுடவியலாளர் லெவிஸ்-றாஸ்.இந்தப்போட்டியில் நான்காவதாக நிற்பவர்தான் பூக்கோ. அவர்கள் அனைவரையும் தாண்டிய சிந்தனையாளராக அறியப்படும் இவரது துறையாகக் குறிப்பிட வேண்டியது இது தான் எனச்சொல்ல முடியாது.அறிவுத்தோற்றம், அதன் இருப்பு, அதன் தன்மை என விரியும் அவரது சிந்தனைகள் தத்துவம்,வரலாறு, உளவியல், சமூகவியல், மருத்துவம், பாலினக்கல்வி, இலக்கியம் அல்லது பண்பாட்டியல் திறனாய்வு என விரிந்திருக்கிறது. இவர் பிறந்த (1926) பிரெஞ்சு நகரமான பையொடியர் பின்னர் ஜெர்மானியர்களால் கைப்பற்றப் பட்டது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் அவர் பல இடங்களிலும் கல்வி கற்றார். அறிவின் அதிகாரம் பற்றிப் பேசியவராகவும் மனிதனின் அனைத்துச் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் கட்டமைக்கப் பட்டவை களே எனக்கூறியவராகவும் அறியப்படும் இவரது முக்கிய நூல்கள்; Madness and Civilisation, The order of things, The Archeaology of Knowledge, Discipline and punish. The History of Sexuality, Power/Knowledge Selected interwiews and Other Writings.
 
தெரிதா;பிரென்சு நாட்டு அறிவுஜீவியாக அறியப்படும் ழாக் தெரிதா உண்மையில் 1930 இல் அல்ஜீரிய யூதக் குடும்பத்தில் பிறந்தார். தெரிதா தனது 74 வது வயதில் மரணம் அடைந்தார். இருபதாம் நூற்றாண்டின் மதிக்கத்தக்க அறிவாளியாக வலம் வந்த அவரது சிந்தனைகள் பின் அமைப்பியல் சிந்தனைகளாக அறியப்பட்டன.மேற்கத்திய தத்துவமரபில் இருந்த அர்த்தமையவாதத்தைக் கட்டுடைத் தலை அவரது முக்கிய பங்களிப்பாகக் கருதலாம்.எல்லாவற்றையும் எதிர்வுகளாகப் புரிந்து கொள்ளு வதில் உள்ள அபத்தத்தை விரிவாகப் பேசிய அவரது நூல்களுள் முக்கியமானவை: Writing and Difference, Of Grammatology, Speech and Phenonmenon.Dissemination
 
போத்ரியா ; போத்ரியா 1929-ரெய்ம்ஸில் பிறந்தார்.தொடக்க காலத்தில் ஜெர்மனி பற்றிப் போதிக்கும் ஆசிரியராக இருந்தார், நீட்ஷே, லூதர் ஆகியோர் பற்றி ஆய்வுரைகளை எழுதிய போத்ரியா ஹோல்டர்லின் படைப்புகள் குறித்து ஆர்வம் கொண்டிருந்தார். Les Temps Modernes என்ற புகழ்பெற்ற பத்திரிகையில் 1962-63 வாக்கில் இலக்கிய விமர்சனக்கட்டுரைகளை எழுதினார், புகைப்படக்கலையில் அவருக்கிருந்த ஈடுபாடு தொடர்ந்த ஒன்றாக இருந்தது.1960-களில் பீட்டர் வெய்ஸின் படைப்புகளை ஃபிரெஞ்சில் மொழி பெயர்த்தார். பிரக்டின் படைப்புகளும் அவரால் மொழி பெயர்க்கப்பட்டன. ரோலண்ட் பார்த், ஹென்றி லெஃபாப் போன்றோரின் தாக்கத்தால் சமூகவியலை நோக்கி 60- களில் தனது கவனத்தைத் திருப்பினார், மரபான இடதுசாரி இயக்கங்களுக்கு வெளியே, தனியே வெளிவந்த Utopia மற்றும் Traverse போன்ற முற்போக்கு இதழ்களோடு தொடர்பு கொண்டி ருந்தார். 70-களில் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார். அந்த பயண அனுபவங்கள் அமெரிக்கா (1988) என்ற நூலாக வெளிவந்துள்ளது.பெர்லின் ,அர்ஜெண்டினா, ப்ரேஸில் என அவரது பயணம் விரிகிறது. தனது நேரத்தில் பாதியைப் ஃப்ரான்ஸ் நாட்டுக்கு வெளியே கழிக்கும் போத்ரியா தற்போது ஃப்ரான்ஸ் நாட்டில் உள்ள ஆறு அறிவுஜீவிகளில், சிந்தனையாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். (ரவிக்குமார், வெளி கடக்கும் பாவனைகள் என்னும் கட்டுரையில், பின்னை நவீனத்துவம்; கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் , ப. 149)
 
பார்வை நூல்கள்
 
தி.சு. நடராசன்& அ.ராமசாமி (பதி.ஆசி.) பின்னை நவீனத்துவம்;கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் .விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்,1998
அ.மார்க்ஸ், பின் நவீனத்துவம்- இலக்கியம்,அரசியல். விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர்,1996
Barry Peter, Beginning Theory- An Introduction to literary and Cultural theory.First Indian edition,1999 .Manchester University Press.Manchester and Newyork (1995)
Brooker.Peter.,Ed.Modernism/Post Modernism, Longman ,London,1992.
Lyotard,Jean- Francois ,The Post Modern Condition: A Report on Knowledge, 1993,(Tr) The University of Minnesots Press
Olson Carl, Indian Philosophers and Post Modern Thinkers :Dillogue on the Margins of Culture,2002, Oxford University press, New Delhi
Waugh, Patricia, Ed.Post Modernism: A Reader ,1992, Arnold
Zygmunt Bauman , Post modernity and its Discontents,1997,Polity press,65,Bridge street,Cambridge,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்