December 29, 2015

அடையாளம் அழிக்கும் புனைவு வெளி

இந்த ஐந்து கதைகளும் புத்தம் புதிதான கதைகள். 2015, நவம்பர் மாதத்தில் வந்த இதழ்களில் அச்சான கதைகள். கதைகளை எழுதியவர்கள் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களும்கூட. எழுதியனுப்பிவிட்டு  அச்சேறுவதற்குக் காத்திருக்காமல்  அனுப்பினால் உடனே அச்சாகும் வாய்ப்புள்ள எழுத்தாளர்கள். அதுதான் அவர்களை அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆக்குகிறது. அறியப்பட்ட எழுத்தாளர் என்பது அவர்களின் எழுத்தின் வழியாக அறியப்பட்ட அடையாளமே. எப்படி அறிந்திருக்கிறோம் என்பதோடு அவர்களின் கதைகளின் விவரங்களை முதலில் தந்துவிடலாம்.

December 21, 2015

ஜல்லிக்கட்டு : வட்டாரப் பண்பாட்டு அடையாளம்

படப்பிடிப்புக் கருவிகளுடன் தவிக்கும் செய்தி ஊடகக்காரர்களின் ஒருவார காலத் தவிப்பாக ஆகி விட்டது ஜல்லிக்கட்டு. காளைகளால் நிரம்பி வழியும் வாடிவாசலுக்கும், வழக்கறிஞர்களின் வாதங்களால் நிரம்பி வழியும் நீதிமன்ற வாசலுக்கும் இடையே அலையும் ஊடகங்களின் பரபரப்பு போன ஆண்டு நிகழ்வு. இந்த ஆண்டும் நிகழலாம்; இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரலாம்.

December 14, 2015

சாகித்திய அகாதெமி: இலக்கியவியலின் போர்க்களம்


 “சாகித்திய அகாதெமியின் விருதுகளைத் திரும்பத்தருதல்” என்பதற்குள் இப்போது நுழையவேண்டியதில்லை. ‘திருப்பித் தந்தேயாகவேண்டும்’ என்று எதிர்பார்க்கவும் தேவையில்லை. அது அவரவர் விருப்பமும் நிலைபாடும் சார்ந்தது. அதேநேரத்தில்  அரசதிகாரமும், அதன் துணையில் வளரும் பிளவுசக்திகளும் தொடர்ந்து சகிப்பின்மையை விதைக்கும்போது எழுத்தை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டியங்கும் ஓர் எழுத்தாளன், தனது எதிர்ப்புணர்வைக் காட்டாமலும் இருந்துவிடக்கூடாது. சகிப்பின்மையையும் தேசத்தின் பல்லிணக்கநிலைக்கெதிரான கருத்துநிலையையும் முன்வைத்து இந்தியா முழுவதும் நிகழ்ந்த போராட்டத்தில் தானே முன்வந்து சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எந்தத் தமிழ் எழுத்தாளரும் பங்கேற்கவேண்டுமென நினைக்கவில்லை என்பது தமிழ் எழுத்துலகத்திற்கு ஒரு களங்கம் என்பதிலும் சந்தேகமில்லை. 

December 11, 2015

கலை - கலைஞன் - காலம்

 எஸ். வைத்தீஸ்வரனின் கதையெழுப்பும் விசாரணை

[இந்தக் கட்டுரையை வாசிக்க ஒரு நிபந்தனை உண்டு. கடந்த மாத அம்ருதாவில் கதையை வாசித்திருக்க வேண்டும்]
வாசிப்பு என்பதற்கும் இலக்கிய வாசிப்பு என்பதற்கும் அடிப்படையான வேறுபாடு வாசித்து முடித்தவுடன்,  ‘ஒரு இலக்கியப்பனுவலை வாசித்தோம்’ என்பதை உணர்வதில் இருக்கிறது.

December 09, 2015

பயிலரங்கு அறிவிப்பு

 தமிழியல் ஆய்வுகள் : 
நிகழ்ந்துள்ளனவும்                               நிகழ்த்தப்படவேண்டியனவும்    

December 04, 2015

மழைக்காலப் பாடல்கள்

இந்தவருடத்து மழை
என்னைக் கவிதைகள்
எழுதவைத்துவிட்டது
நன்றி மழைக்கு---

November 30, 2015

காதல்: காமம் - பெண் கவிதைகள்

இந்த மூன்று பெண்களின் - சாய் இந்து, பாலைவன லாந்தர், கவிதா ரவீந்திரன் -கவிதைகளை முகநூலில் மட்டுமே வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  ஓராண்டுகளாக இவர்களின் கவிதைகள் வாரத்திற்கு ஒன்றிரண்டாவது வாசிக்கக் கிடைத்துவிடும். அளவையும் கூற்றுகளையும் வைத்துக் குறுந்தொகை போலவும் நற்றிணை போலவும் அகநானூறு போலவும் என நினைத்துக்கொள்ளும்போது மென்மையான சிரிப்பொன்று ஓடி மறைந்துவிடும். 

November 29, 2015

தொலைந்துபோன அறிவுவாதம்

நீண்டகாலமாக நேரடியாகச் சந்திக்காத நண்பர்கள் பலரைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. நான் இருக்கும் பாளையங் கோட்டைக்கு வந்தவர்களோடு நின்று நிதானமாகப் பேசும் நிலை இல்லை. நான் இல்லை என்பதைவிடஅவர்கள் இல்லை என்பதே உண்மை. அவசர அவசிய வேலை ஒன்றிற்கான பதற்றம் எப்போதும் போல அவர்களிடம் இருந்தது.

November 26, 2015

பேரா. நொபுரு கரஷிமா: நினைவுக்குறிப்பு

ஒரு பெயரை நேர்மறையாகத் தெரிந்துகொள்வதைவிட எதிர்மறையாகத் தெரிந்து கொள்வதே தமிழ்நாட்டில் அதிகம் நடக்கும். பல உதாரணங்கள் இருக்கின்றன என்றாலும், இன்று மரணம் அடைந்துள்ள வரலாற்றறிஞர் பேரா. நொபுரு கரஷிமா (!933, ஏப்ரல், 24 - 2015 நவம்பர், 26) அப்படி அறியப்பட்ட பெயர்களுள் ஒன்றாக இருந்தது என்பதுதான் வருத்தமான வரலாறு. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது (2006-2011) நடந்த செம்மொழி மாநாட்டையொட்டித்தான் அவரது பெயர் பரவலாக அறிய வந்தது.  9 வது உலகத்தமிழ் மாநாட்டைக் கோவையில் நடத்தத் திட்டமிட்ட அரசு, அம்மாநாட்டைப் பொறுப்பேற்று நடத்தும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின்  (IATR ) அனுமதியைக் கேட்டபோது விதிகளையும் நடைமுறைகளையும் எடுத்துக்காட்டி உடனடியாக நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தது.

November 22, 2015

மணற்கேணியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள்


முன்னுரை
ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியின் இயல்பையும் இலக்கிய வரலாற்றையும் அதன் வளர்ச்சிப்போக்கிற்கான காரணங்களோடு அறிந்து கொள்ள வேண்டியது  அடிப்படைத்தேவை. அந்தத்தேவை நிறைவேறும் போதுதான் அந்த நபர் தனது சொந்தப் பண்பாட்டுக்குள் இருப்பதை உணரமுடியும்.  ஒருவரின் தன்னிலை அல்லது இருப்பு என்பதே அவரது தாய்மொழியாலும், அதில் உருவான இலக்கியப்பிரதிகளாலும், அதன் வழியாக உருவாகும் பண்பாட்டுக் கூறுகளாலுமே உருவாக்கம் அடைகிறது. அதனை நிறைவேற்றும் நோக்கம் கொண்டதாக மொழி இலக்கியக் கல்வியின் பாடத்திட்டங்கள் அமையவேண்டும். ஆனால் மொழி இலக்கியக் கல்வியின் சிறப்புப்பாடத்திட்டங்கள் பொதுப்பரப்பின் ஒருபகுதியை விருப்பப் பாடமாக மாற்றி ஆய்வை நோக்கி நகர்த்தவேண்டும். ஆய்வாளர்கள் தாங்கள் தேர்வு செய்யும் சிறப்புத்தலைப்பில் ஆழமான பொதுநிலை அறிவையும், தலைப்பில் புதியன கூறலையும் வெளிப்படுத்தவேண்டும்.

November 16, 2015

திரு.வைரமுத்தின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுகிறது

வெகுமக்கள் அரசியல் தளத்தில் இயங்கும் ஒருநபரின் எதிர்பார்ப்பு ஊடகங்களில் தனது பெயர் உச்சரிக்கப்படவேண்டும் என்பதாக இருக்கிறது. ’நல்லவர்; திறமையானவர்’ என்று மட்டுமே உச்சரிக்கப்படவேண்டும் என்பதில்லை அவரது விருப்பம். விமரிசனமாகக்கூட உச்சரித்தால் போதும். அந்த விமரிசனத்திற்குப் பதில் சொல்லும்விதமாக இவரும் தன் பெயரைத் திரும்ப ஒருமுறையோ பலமுறையோ சொல்லிச்சொல்லித் தன்னை நிலை நாட்டிக் கொள்வார். இதே மனநிலை வெகுமக்கள் ரசனைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் எழுதுவதாக நம்பும் எழுத்தாளர்களிடம் எப்போதும் இருக்கிறது. சுஜாதா கடந்தகால உதாரணம். வைரமுத்து நிகழ்கால உதாரணம்.

November 12, 2015

விவேக்: ஓசைகளின் நேசன்


வாசி எத்தஸ்து கர்தவ்யஹ் , நாட்ய ஸ்யஸ்யா தனஸ்மிருதா
அங்கனே பத்தியஸ்துவானி , வாக்யாரத்னம் ஜயைந்தி ஹீ
- பரதரின் நாட்ய சாஸ்திரம்; இதன் பொருளாவது யாதெனில், எண்ணிய கருத்தை எடுத்துரைப்பது மொழி. அடிமனத்தில் உள்ள கருத்தை அவனுடைய பேச்சு வெளிப்படுத்துகிறது. மொழிக்கே அந்த ஆற்றல் இயல்பாக அமைந்திருப்பதால் அந்த நுட்பத்தை குறிப்பால் பொருள் உணர்த்தும் தொனி என்கிறார்கள்
கருத்து கந்தசாமி, நாயகனாக நடிகர் விஜய் நடித்த யூத் படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் ஏற்ற  கதா பாத்திரத்தின் பெயர். அந்த படத்தில் ஒரு காட்சியில் ஆளுயர பென்சில் ஒன்றைத் தோளில் வைத்துக் கொண்டு தெனாவட்டாக நுழையும் விவேக், அந்தப் பென்சில் எதுக்குன்னு கேட்கும் ஒருவனிடம் இந்த நாட்டுக்கு,

November 09, 2015

விளையாட்டு - வேட்டை - வியாபாரம்

புனைகதையின் இருவேறு வடிவங்களையும்-சிறுகதை, நாவல் -வேறுபடுத்தும் அடிப்படைகளில் 'அளவு'க்கு முக்கியமான இடமுண்டு. அளவு என்பது எழுதப்படும் பக்க அளவல்ல. புனைகதை இலக்கியத்தில் விரியும் காலம் மற்றும் வெளியின் விரிவுகளே சிறுகதையிலிருந்து நாவல் இலக்கியத்தை விரிவாக்கிக் காட்டுகின்றன.  இவ்விரண்டும் விரியும் நிலையில் அதில் இடம்பெறக்கூடிய பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிட வாய்ப்புண்டு.

November 08, 2015

வெ.சாமிநாதன் : நெருங்கி விலகிய ஆளுமை

புகுமுக வகுப்பு வரை கணித மாணவனாக நினைத்துக் கொண்டிருந்த என்னை இலக்கியம் பக்கம் திருப்பியது மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்தான். டேனியல்போர் என்னும் ஆங்கிலேயரின் பெயரில் அமைந்த நூலகத்தின் மாடிப்பகுதியில் தான் செய்தித் தாள்களும் இதழ்களும் அடுக்கப்பட்டிருக்கும். நாள் தவறாமல் தினசரிகளை படிக்கும் அரசியல் உயிரியாக இருந்த என்னைக் கதைகள் படிக்கும் மாணவனாக மாற்றியது  அவற்றின் அருகில் அடுக்கப்பட்டிருக்கும் வாராந்திரிகளும் மாதாந்திரிகளும்.

November 06, 2015

வரலாற்றைக் கவிதையாக்கி வாசித்தல்

பசித்த பூனைகளின் மென்மையையும், வன்மத்தின் பசித்த ஓநாய்களையும் பற்றிப் பேச நினைத்த அந்தக் கவிதை ஓரிடத்தில்,
வரலாறு எப்போதும்
மாமிசங்களால் மட்டுமே
எழுதப்படுகிறது
என்ற வரிகளை எழுதிவைத்திருக்கிறது.

November 04, 2015

தமிழினி: போராட்டக்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்த பயணம்.


ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல் தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.  

November 02, 2015

சுட்டுச்சொற்களின் திசைவழிப்பாதை.வாசிப்புக்கான பாதையைக் காட்டும் எழுத்தே கவனிக்கப் படுகிறது. கிராமங்களில் அந்த விளையாட்டை இப்போதும் விளையாடுகிறார்கள். நெட்டுவாக்கில் குவிக்கப்பட்ட மணலுக்குள் மறைத்து வைக்கப்படும் திரியைக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ஒருவர் மறைத்துவைத்து விட்டுக் கையால் மூடிக் கொள்வார். இன்னொருவர் அந்தத் திரியைக் கண்டுபிடிக்கவேண்டும். மறைத்துவைப்பவர் தனது கைக்குள்தான் வைக்கவேண்டும் என்பதில்லை. மணல் கவிப்பில் கூட எங்காவது வைக்கலாம். அதைச் சரியாக யூகித்து எடுத்துவிட்டால் வெற்றிதான்.

October 25, 2015

ஊடக யுத்தம்: வென்றிலென் என்றபோதும் ?


வென்றி என்பது வெற்றி என்னும் சொல்லின் பழைய வடிவம் என்பதை ஊகிக்கமுடிகிறது. வென்றி என்பது பழைய சொல்லா? வெற்றி என்பது பழைய சொல்லா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
இன்று வெற்றியையெடுக்க அல்லது வெற்றியைக் கைப்பற்றக் களமாட வேண்டும். தனிமனிதர்களும் கூட்டமும் போராட வேண்டும். களம் நிகழ்காலத்தில் போராட்டக் களம். போராட்டங்களில் மௌனமாக இருத்தல் தொடங்கி, ஒத்துழையாமை, உண்ணாநிலை குரல் எழுப்புதல், மறியல், சட்டம் ஒழுங்கைக் குலைத்தல் எனப் பலவடிவங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த வடிவம் போர்க்களம்.ரதகஜதுரகபதாதிகளோடு மோதிவீழ்ந்த போர்க்களம்.

October 20, 2015

கமல்ஹாசன்: இரண்டும் கலந்த கலவைதுன்ப உணர்வுகளும் இன்ப உணர்வுகளும் கலவையாக வெளிப்படும் நாடகத்தையோ அல்லது வேறுவகைப்பட்ட இலக்கிய வகையையோ அல்லது இன்ப துன்பங்களை ஒருசேரத் தரும் நிகழ்வையோ குறிக்கும் சொல்லாக துன்ப இன்ப நாடகம் என்றை சொல்லைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் டிராஜிக் காமெடி (Tragic Comedy) என்று வழங்கும் இச்சொல் பிரெஞ்சு மொழியில் tragicomedie எனவும் இத்தாலிய மொழியில் tragicommedia என்றும் சொல்லப் படுகிறது. இவை அனைத்தும் லத்தீன் மொழிச் சொல்லான Tragicomoedia என்பதிலிருந்து வந்தவைதான். American Heritage Talking Dictionary.


நிரல் நிரைப்படுத்தலின் அழகு : க.சீ.சிவக்குமாரின் ரசாயனக் கலப்பைவார இதழொன்றில் இடம்பெறும் சிறுகதையை வாசிக்கத் தூண்டுவதற்கு உடனடிக் காரணங்கள் சில உண்டு. தொடர்ச்சியான வாசகராக இருந்தால் எழுதியவரின் பெயரே வாசிக்கத் தூண்டிவிடும். சிலநேரங்களில் எழுதியவர் கதைக்குத் தரும் தலைப்பு வாசிக்கத் தூண்டும். கதைகளுக்கு ஓவியங்கள் அச்சிடும் இதழாக இருந்தால் அவையும் கதைகளை வாசிக்கத்தூண்டவே செய்யும். நான் மாணவனாக இருந்த காலத்தில் (1970-80கள்) ஓவியர் ஜெ...(யராஜ்) வரையும் தொப்புள் தெரியும் பெண்களின் ஓவியங்களுக்காகவே நானும் என் வயதொத்த இளைஞர்களும் கதைகள் வாசிப்போம்; பேசுவோம்.

October 08, 2015

அரங்கியல் பெருவெளியை நிரப்பிய ந. முத்துசாமி.அரங்கியலாளர் ஒருவரை அவரது நாடகமேடையேற்றம் சார்ந்தே கொண்டாட வேண்டும்; விமரிசிக்கவேண்டும். அதுவே அவருக்கு  உவப்பானது. விமரிசிக்கிறவனின் நிலைபாட்டுக்கும் சரியானது.  ந.முத்துசாமியின் அனைத்து நாடகங்களும் ஒரே தொகுதியாக கே.எஸ். கருணாபிரசாத் அவர்களால் தொகுக்கப்பட்டு என் முன்னே இருக்கிறது. அவரது நாடகங்களில் முக்கியமான ஒன்று இங்கிலாந்து. அந்நாடகம் கால் நூற்றாண்டிற்குப் பிறகு திரும்பவும் புதிய நெறியாள்கையில் -இடதுசாரி நாடகக்காரராக அறியப்படும் பிரளயனால் மேடையேற்றம் கண்டுள்ளது. நாடகப் பிரதிகளின்  வழியாகவும் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் களத்தின் வழியாகவும் உலக வரைபடத்திற்குள் தமிழ் மொழியையையும் தமிழ் அரங்கியலையும் கொண்டுபோன ந. முத்துசாமியைப் பற்றிப் பேச ஏற்ற தருணம் இது.

October 02, 2015

நாகேஷ்: உடல் மொழியின் பரிமாணங்கள்துன்பத்தை விளைவிப்பதும், அழிவைத் தோற்றுவிக்காததுமான ஒரு பொருளைக் கருத்தாகக் கொண்டு இயற்கையாக உள்ள மனித நிலைக்கு மாறாக, தாழ்ந்த நிலையில் உள்ளவனைச் சித்திரிக்கும் நாடகம் இன்பியல்  (Comedy) நாடகம் .   அரிஸ்டாடிலின் கவிதையியல்

தலைப்பில் தங்கும் கதைப்பொருள் : போகன் சங்கரின் பொதிநிகழ்கால எழுத்தாளனிடம் எதையெழுதலாம் என்று கேட்டால் எதையும் எழுதலாம்;  இதைத்தான் எழுதவேண்டும் என்ற வரையறையெல்லாம் இல்லையென்று சொல்லக்கூடும். அப்படிச் சொல்வது முழுமையான உண்மையல்ல. நிகழ்காலத்தில் எழுதப்படும் எல்லாமும் ஏற்கெனவே இருக்கும் வரையறைகளின் மாற்றுவடிவங்களேயன்றி, முற்றுமுழுதான புத்தாக்கமல்ல.

September 27, 2015

வடிவமைத்துக் கொண்ட வடிவேலு

நகையென்பது சிரிப்பு  அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும்,பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப.
    -  தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் சூத்திரத்திற்கு (3)  பேராசிரியர்  உரை
=========================== 
 

September 25, 2015

துணைவேந்தர்கள் என்னும் தோட்டத்து மேஸ்திரிகள்நமது நாட்டின் உயர்கல்விக்குப் பொறுப்பு வகிப்பன பல்கலைக்கழகங்கள். ஒரு பாடத்தில் பட்டம்பெறவேண்டும் எனக் கல்லூரியில் நுழையும் மாணாக்கர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்பிக்கின்ற முறைகளை வகுப்பது, பாடங்களை முறையாகக் கற்றுள்ளனரா? என அறியத் தேர்வுகள் நடத்துவது என மூன்று முக்கியமான பணிகளைச் செய்கின்றன. அத்துடன் பட்டமேல் படிப்பு படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்குத் தனது வளாகத்திலுள்ள சிறப்புத் துறைகளின் வழியே முதுநிலைப் படிப்புகளையும், அவற்றின் தொடர்ச்சியாக ஆய்வுப்படிப்பு களையும் தருகின்றன. 

September 17, 2015

வில்பூட்டுச் சிறுகதை“நவீனச் சிறுகதைகளில் வடிவ ஒழுங்கைத் தேட வேண்டியதில்லை” என்பதை மனம் ஏற்றுக் கொண்டுவிட்டது என்றாலும், வடிவ ஒழுங்கில் இருக்கும் கதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியையும் மறுப்பதற்கில்லை. தான் எழுதும் சிறுகதையை வடிவ ஒழுங்குடன் எழுதவேண்டுமென நினைக்கும் கதாசிரியர், வடிவ ஒழுங்கிற்காக மட்டும் மெனக்கெடுகிறார் என்பதில்லை.

September 13, 2015

வாழ்தலின் ரகசியத்தைத் தேடுவது?

நகுலன் பற்றியும் நகுலன் கவிதைகள் பற்றியும் நடக்கும் பல விவாதங்களைப் பலநேரங்கள் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு வாசிப்பின்போதும் அவை ‘நான்’ அல்லது ‘தன்’ னின் இருப்பு பற்றிய கேள்வியாகவும், விடை தெரியாத நிலையில் ஏற்படும் குழப்பமாகவும் புரியும். அப்புரிதல் பெரும்பாலும் பிழையானதல்ல என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

September 12, 2015

ஆலயமு மண்டபமு மன்னசத்ர சாலையும்

[கோப்புகளைத் தூசிதட்டியபோது கையெழுத்துப் பிரதியிலிருந்த இந்தக் கட்டுரை கிடைத்தது. முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தபின் எழுதிய முதல் கட்டுரை. அப்போதுதான் சத்துணவுத் திட்டம் அறிமுகமான நேரம்.  விலையில்லா..., குறைந்தவிலைத் திட்டங்களின் காலத்திலும் கொஞ்சம் பொருத்தம் உண்டுதான்]
நாட்டில் வறட்சி ஏற்படுகின்றபொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களில் கண்கூடு. இதே தன்மையொத்த ‘ சத்திரம்- அதன் மூலம் உணவு வழங்கல்’ என்றொரு நிலையைக் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிந்திய தமிழ் இலக்கியங்களில் காண முடிகிறது.

September 07, 2015

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் :

1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் வெளிப்பட்டன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த உள்வாங்கும் மக்களாட்சிமுறை,  நகர்மயமாதல், கிராமசமூகத்திற்குள் நவீனத்துவத்தின் நுழைவு என அந்த வெளிப்பாடுகளைப் பட்டியலிடலாம். 

தமிழ் மரபிலிருந்து விமரிசனப்பார்வையை உருவாக்கவேண்டும்யோகி: தமிழ் இலக்கியச்சூழலில் இலக்கியத்தின்அடைவு நிலையை, தமிழ்நாட்டு இலக்கியம்தான் முடிவுசெய்கிறது. இப்படியிருக்கையில் புலம்பெயர் இலக்கியத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?மலேசியா-சிங்கப்பூர் இலக்கியம் குறித்தும் உங்கள் அபிப்பிராயம் என்ன?

September 06, 2015

உலகப்பார்வையாளர்களுக்கான தமிழ் அரங்கநிகழ்வுசக்திக்கூத்து:
  ‘எதிர்பார்ப்பு’ என்ற சொல்லையும் ‘முன்முடிவு’ என்ற சொல்லையும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாக நினைப்பதில்லை. "எந்தவித எதிர்பார்ப்புகளு மற்று ஒரு கலைப்படைப்பிற்குள் நுழையவேண்டும்; கலைநிகழ்வைக் காணவேண்டும்” என்று  சொல்லப்படும்போதெல்லாம் அது சாத்தியமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துகொண்டே இருக்கும். எழுத்துசார்ந்த படைப்பாயினும்சரி,  அரங்கநிகழ்வாக இருந்தாலும்சரி வாசகர் அல்லது பார்வையாளர் என்பவர் சில எதிர்பார்ப்புகளோடுதான் நுழைகின்றார். நான் ப்ரசன்னா ராமசுவாமியின் சக்திக்கூத்தைக் காணச் சில எதிர்பார்ப்புகளோடு தான் நுழைந்தேன். என்னைப்போலவே பார்வையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக் கூடும்.

September 02, 2015

இச்சையைத் தவிர்க்கும் புனிதப் பசுக்கள் எஸ்.செந்தில்குமாரின் புத்தன் சொல்லாத பதில்.
=======  =======  ======   =====     ======= ========
ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று கதைகள். காலச்சுவடில் ஒரு கதை. உயிர்மையில் ஒரு கதை. பழைய ஆனந்தவிகடனின் சாயலைத் தொடரும் ஜன்னலில் ஒரு கதை என மூன்றுகதைகள் ஓர் எழுத்தாளருக்கு அச்சாவது அவருக்கும் ஆச்சரியமாகவே இருந்திருக்கும். 
முதலில் வாசித்தது காலச்சுவடில் வந்த கதை.  தலைப்பு: கண்மலர்*.

August 22, 2015

நிலவோடு கோபம்

அதுதான்
நாங்கள் இருவரும் அமர்ந்து கதைபேசிக் கலவி செய்து பிரியும் இடம்.
ஆனால் அந்த இடத்தை தன் நிழலால் நிரப்பியிருக்கிறதே அந்த மரம்.
தன் உயரத்தைவிட நீளமாக நிழல் பரப்பியிருக்கும்
அந்த மரம் என்ன மரமாக இருக்கும்?
கொன்றை?
 புங்கை?
புன்னை?
வேங்கை?

August 19, 2015

ஒரு சொம்பின் கதை

“ ஏய்! என்னாச்சு..
ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருக்கிறமாதிரி தெரியுது.
ஓ.. திரும்பவும் அதே நினைவு தானா?
பித்தளைச் சொம்பு கண்ணில பட்டுவிடக்கூடாதே உனக்கு”.

August 11, 2015

நம்பிக்கையளித்த இரண்டு நாட்கள்:தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்னை கோட்டூர்புரத்தில் செயல்படுகிறது . அண்ணாநூலகம் பக்கத்தில் இருக்கிறது. இணையத்தில் தமிழின் என்னவெல்லாம் இருக்கின்றன; என்னவெல்லாம் இருக்கவேண்டும்; இணையத் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அவற்றை எப்படித் தருவது போன்றவற்றை விவாதிக்கலாம்; இரண்டு நாட்கள் முழுமையாக இருந்து கலந்துரையாடல் செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பார்த்தேன். அழைப்பில்  இரண்டு மாதங்களுக்கு முன்பு இக்கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்திய ஆட்சிப்பணியாளர் திரு த.உதயசந்திரனின் ஒப்பம் இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கையூட்டும் தகவல்களே அழைப்பை ஏற்க முதன்மைக்காரணம்.

August 10, 2015

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கிஎது கதை எழுதும்படி தூண்டுகிறது ?

இந்தக் கேள்விக்குப் புதிதாக எழுதத்தொடங்கும் புனைகதையாசிரியர்கள்  சொல்கிற பதில் : மனிதர்கள் மற்றும் மனிதர்கள்

தன்னைப்பாதித்தவர்களையும் பாதிப்பு உண்டாக்கத்தக்க வகையில் செயல்பட்ட/ சொல்லப்பட்ட மனிதர்களையும் எழுதுவதாகக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவதை அப்படியே ஏற்கவும் முடியாது; தள்ளவும் முடியாது.

காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்புகுடும்பம், சமூக அமைப்பின் மிகச்சிறிய நுண் அலகு. எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் விரும்புகின்றன. மதம், இனம், மொழி, பண்பாடு என்பதான காரணிகளால் வேறுபாடுகள் கொண்ட எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையைத் தொலைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் அவை ஏற்படுத்திக் கொண்ட நடைமுறையின் பெயர் திருமணம். திருமணத்தின் வழியாக நிகழும் ஆண் பெண் உறவின் முதன்மை நோக்கம் மனித உற்பத்தி ; வாரிசுகளை உருவாக்குதல். வாரிசுகளின் செயல்பாடுகள் பண்பாட்டின் அடையாளங்கள்.

காட்சி இன்பத்தின் பொருளாதாரம் : ராஜமௌலியின் பாகுபலிமுதலில் அதற்குப் பெயர் டாக்கி (Talkie); மாறிய பெயர் சினிமா (Cinema). பேச்சை முதன்மையாகக் கொண்ட கலை, காட்சியை முதன்மையாகக் கொண்ட கலைவடிவமாக மாறியதன் விளைவு இந்தப் பெயர் மாற்றம்.  காட்சிக்கலையாகச் சினிமா மாறிவிட்டதாக நம்பினாலும் பேச்சை அது கைவிட்டுவிடவில்லை. இன்றளவும் பேச்சின்வழியாகவே சினிமா தனது காட்சியடுக்குகளைப் பெருந்திரளுக்குப் புரியவைக்கிறது; நம்பவைக்கிறது. அதிலும் இந்திய சினிமா பேச்சின் இன்னொரு வடிவமான பாடலையும் விட்டுவிடாமல் தக்கவைத்துக்கொண்டே மாறிக்கொண்டிருக்கிறது.

August 07, 2015

ஆக்கம் - தழுவலாக்கம்·         ஆக்கம் - தழுவலாக்கம் என்றால் என்ன சார்.
·         நாடகத்தில் தழுவலாக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னென்ன?
ஆக்கம் என்பது புதிதாக உருவாக்குவது. புதிதாக உருவாக்குவதற்கு அதன் உட்கிடைப்பொருட்கள் தேவை.  அதைக் கண்டுபிடித்து இணைத்து உருவாக்க வேண்டும். உருவாக்கிய ஆக்கம் பயன்பட வேண்டும்.

August 03, 2015

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு  கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.

July 27, 2015

அரசியல் பேசும் ஊடகங்கள்பாரதிக்கு முன்னாலிருந்த தமிழ்ப்புலவர்கள் எட்டு ஊர்களுக்கு அதிபதியான வட்டாரத்தலைவரை - ஜமீந்தாரை - மூவேழ் உலகுக்கும் அதிபதியே எனக் கவிபாடிப் பரிசில் பெற்றுப்போவார்கள். ஒரு மூட்டை நெல்லையோ, சிறுதானியத்தையோ அக்கவியின் வீட்டிற்கு அனுப்பிவைக்கும் ஜமீந்தாரும் தன்னைத் திரிபுவனச் சக்கரவர்த்தியெனக் கருதிக்கொண்டு அரண்மனை மாடத்தில் காமக்கிழத்தியர்களுடன் உலா வருவான். இது கடந்த காலம் மட்டுமல்ல. நிகழ்கால ஊடகங்களில் சிலவும் அப்படித்தான் இருக்கின்றன.

July 24, 2015

இப்போதிருக்கும் வீடும் நினைவில் வந்து போகும் வீடுகளும்

திருநெல்வேலி , கட்டபொம்மன் நகர்,

ஏழாவது தெரு, செந்தில் நகர், மனை எண் 10. கதவு எண்: 1074 B.

இந்த முகவரிக்கு நான் குடிவந்து 13 ஆண்டுகள் ஓடிவிட்டன. தனிக் குடித்தனம் தொடங்கிய பின் குடியேறும் எட்டாவது வீடு. ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் சின்னச்சின்ன ஆசைகள் அனைத்தையும் கொண்ட சொந்த வீடு.  

இதற்கு முன் குடியிருந்த ஏழு வீடுகளும் வாடகை வீடுகள்.

July 22, 2015

வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள்

நேற்று (19-07-2015) ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளாக இல்லாமல் வேலைநாளாகிவிட்டது. நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது 25 ஆண்டுவிழாவை - வெள்ளிவிழா நிகழ்வை இந்த ஓய்வு நாளில் தான் கொண்டாடியது. தமிழக மக்களுக்காக ஓய்வு ஒளிச்சலின்றிப் பணியாற்றும் அமைச்சர்களுக்கு ஓய்வு நாட்களே இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால் விழாவில் கலந்துகொண்டு திரும்பினேன்.

July 18, 2015

வாழ்தலின்விருப்பந்தேங்கிய சாவின் நெருக்கம்: ராகவனின் இரண்டு கதைகள்


நடந்ததை எழுதுவது நடப்பியல் வாதமா? இயற்பண்பியல்வாதமா? என்ற விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. தமிழில் நடப்பியல்வாதத்திற்குப் பலரை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இயற்பண்பியல்வாதத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தான் சொல்லமுடியும். நகரம் சார்ந்த எழுத்தில் அசோகமித்திரனின் கதைகளைச் சொல்லலாமென்றால், கிராமம்சார்ந்து பூமணியின் தொடக்ககாலச் சிறுகதைகளை எடுத்துக்காட்டலாம். அவர்களிருவரும் விவரிக்கும் விவரிப்புமுறையில் பிசகின்றி ஒவ்வொன்றையும் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

July 15, 2015

ஏற்கத்தக்க தொனியல்லஇந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உணரும் கருத்தாகவும் நிகழ்வாகவும் இருக்கும் சொல் சாதி. பேசத்தக்க பொருளாக இருக்கும் சாதியின் குரூரவடிவமான ’தீண்டாமை’ பேச வேண்டிய பொருள் மட்டுமல்ல; பேசித் தீர்க்கவேண்டிய ஒன்றும்கூட. அனைத்துத் தளத்திலும் விசாரணைகளையும் விவாதங்களையும் கோரும் இச்சொற்களைப் பேசாமல் அறிவுத் துறையினர் தப்பித்துவிட முடியாது. தீர்த்துக் கட்டுவதற்காகப் பேசப்படவேண்டிய தீண்டாமையையும் சாதியையும் பற்றிப்பேசும் சிறுநூலொன்றை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

July 12, 2015

இமையத்தின் வற்றாத ஊற்று: கதையாக மாறாத உரைவீச்சு

இந்தமாத (ஜூலை, 2015) உயிர்மையில் இமையம் எழுதியுள்ள சிறுகதை வற்றாத ஊற்று வெளியாகியுள்ளது. கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் ஆறு. இந்த ஆறுபேரில் இரண்டு பேருக்கு மட்டுமே பெயருண்டு. கதிரவன், பூங்குழலி. புதிதாகத் தொடங்கப்பெற்ற செய்தி அலைவரிசைக்கு வட்டாரச் செய்தியாளனாகத் தேர்வு செய்யப்பெற்று முதலாளியைச் சந்திக்க இருப்பவன். அவனது இடதுபக்கம் அமர்ந்திருந்த பெண்ணின் பெயர் பூங்குழலி. வலது பக்கம் அதே போல் உட்கார்ந்திருந்தவனுக்குப் பெயரில்லை. கதிரவனின் பக்கத்தில் இல்லாமல் 20 பேருக்கு மேல் செய்தியாளர்கள், டெக்னீஷியன்கள், காமிராக்காரர்கள் என நிரம்பிய ஒரு விசாலமான குளிரூட்டப்பட்ட அறையே (கான்பரன்ஸ் ஹால் ) கதைவெளி. கதையை நகர்த்துவதற்காக இமையம்மூன்று பேரை உள்ளே அனுமதிக்கிறார். ஒருவர் அலைவரிசையின் முதலாளி. இன்னொருவர் மானேஜர், மற்றொருவர் செய்திப்பிரிவு ஆசிரியர். இவர்களுக்கும் பெயரில்லை. அலைவரிசைக்கு மட்டும் பெயருண்டு அதன் பெயர் விடிவெள்ளி.

July 09, 2015

நம்பிக்கையிழப்பின் வெளிப்பாடு; அழகிய பெரியவனின் மிஞ்சின கதை


நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்; நமது சூழல் மாறிக்கொண்டிருக்கிறது; நம்மை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது எனத் தனிமனிதன் நினைக்கும்போது பிறப்பது நம்பிக்கை. இதற்கு நேரெதிராகத் தோன்றுவது நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை. அதன் காரணிகளாக இருப்பவை நிராகரிப்புகள்; ஒதுக்கிவைத்தல்.

July 07, 2015

பாரதீய ஜனதாவின் நமதே நமது ::பின் காலனியத்தின் நான்காவது இயல்இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத்தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்  வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன;  நின் புகழைப் பரவுகின்றன. 

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!


கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜனகனமன  என்ற கவிதையின் அதிகாரப்பூர்வ தமிழாக்கம் இது. 1911 இல் கல்கத்தாவில் நடந்த இந்தியதேசியக் காங்கிரஸின் மாநாட்டில் இந்தப்பாடல் பாடப்பெற்றது. பாடியவர் சரளாதேவி சௌதுராணி; தாகூரின் உறவினர் அவர். 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பெற்றபோது அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்தால், இந்தக் கவிதை தேசத்தின் கீதமாக அறிவிக்கப்பெற்றது. 

தினங்களைக் கொண்டாடுதல்எல்லா தினங்களையும் கொண்டாடித் தீர்ப்பதென்று முடிவெடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றோம். நேற்று 06-07-2015 உலக முத்த தினம். முகநூலில்  வாசித்த முத்தக்கவிதைகளைத் தொகுத்தால் சத்தமிடும் முத்தம் என்றொரு தொகுதி நிச்சயம் கிடைக்கும். முத்தமிட்டுக்கொள்ள வாய்ப்பற்றவர்கள் சத்தமாய்ச் சொல்லிக் கவிதையெழுதியிருக்கிறார்கள். சொல்லாமல் முத்தமிட்ட ஜோடிகள் சில கோடிகள் இருக்கலாம்.

July 05, 2015

நல்ல பொழுதுபோக்குப் படம்

நிகழ்காலப் படம் என்பதன் அடையாளங்கள் என்ன? இதனை விளக்க எதிர்மறையிலிருந்து உள்நோக்கி நகரலாம். எது நிகழ்காலப்படமல்ல என்று காட்டினால் ஓரளவு புரியலாம். பாபநாசம் நிகழ்காலப்படமல்ல. அது ஒரு பழைமை பேசும் பழையபடம்

July 02, 2015

காக்கா முட்டையும் தமிழ்த்திரளும்.வெகுஜன சினிமா விரும்பிகளைத் தன்னிலை மறக்கச் செய்து,  தரமான சினிமாவின் பக்கம் நெருங்கிவரச் செய்துள்ளது காக்கா முட்டை. கலை, வணிகம், விருதுகள். விமரிசகர்களின் பாராட்டு என எல்லாவகையிலும் தமிழ்ச் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற படம் இதுவரை இதுபோல் இல்லை என எழுதப்படப்போகிறது. இயக்கமும் கலைநோக்கமும் தனித்துவமாக வெளிப்பட்டதை ஏற்றுக் கொண்ட தமிழகப் பார்வையாளர்களின் ஏற்புநிலை ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.

June 29, 2015

ஒற்றைக் கவிதையை எழுதுவதற்கு முன்...

இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத் துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் 50 ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக்கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.

June 26, 2015

விடுதலை ( ஓரங்க நாடகம்)மலையாள மூலம்; ஜி.சங்கரப்பிள்ளை தமிழில்; அ.ராமசாமி
இளைஞன் :  கேட்டாயா நீ. நான் சொன்னேனே.. அதேதான் கேட்டாயா..? மணி ஏழு..
முதியவன்     : (அமைதியாக) கேட்டேன்.
இளைஞன் :  அப்புறம்.. இப்படி இருப்பதன் அர்த்தம்? அவன் தன் உயிரையும் பணியையும் பணயம் வைத்து இதைச் செய்துள்ளான். நேரம்வரும். ஒரு கயிறு இதுவழியே வரும். அதன் நுனியில் கம்பியை அறுக்கும் அரம். நம்மையும் வானத்தையும் பிரித்து நிற்கும் இந்தக் கம்பிகளை அறுத்து முறிப்பேன். என்னுடைய திட்டங்களை முன்பே சொல்லியிருக்கிறேனே..

June 16, 2015

பேச்சென்னும் லாவகம்பல நேரங்களில் இதை நான் அனுபவத்திருக்கிறேன். கல்லூரிகள் நாடகப்பட்டறை அல்லது நடிப்புப்பட்டறைகள் நடத்துவதற்காக மாணவிகளை அல்லது மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகச் சந்திக்கும்போது பெரும்பாலும் இதுதான் நடக்கும். இதைத் தான் தங்களின் நடிப்புத் திறமை என்று நம்பும் இளைஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண்களிடம் எங்கே கொஞ்சம் நடித்துக் காட்டுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் செய்யும் முதல் காரியும் கைகளை எங்காவது இருக்கிப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கிவிடுவார்கள். பேசுவதற்காக அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வசனம்:

June 13, 2015

உத்தமவில்லன் : இன்பியலில் கரையும் துன்பியல்எழுதியது ஒரேயொரு கவிதை. மனித வாழ்வின் சலனங்கள் அனைத்தையும் உறையச் செய்துவிடும் வல்லமைகொண்ட வரிகள் கொண்ட கவிதை. அந்தக் கவிதைக்குள் அவன் வைத்த அலங்காரச் சொற்றொடர் “நீர்வழிப்படூஉம் புனை”. உத்தம வில்லன் படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து படுத்த நள்ளிரவில் கணியன் பூங்குன்றனின் இந்தச் சொற்றொடரோடு ஔவையின் ‘உயவுநோயறியாது துஞ்சும் ஊர்’ என்ற வரியும் சேர்ந்துகொண்டு தூக்கம் கலைத்துக்கொண்டே இருந்தன.  மரணத்தையும் காமத்தையும் இணைத்த படத்தின் தாக்கம் என நினைத்துக் கொண்டேன்.

June 10, 2015

காமத்தை எழுதுதல்: யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவியை முன்வைத்து. தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள்,  முகநூல், ட்விட்டர் என இணையத்தின் அச்சு ஊடகத்தில் வேலைபார்க்கும் ஒருவருக்கு இணையவெளிப் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட காலம் நமது காலம். தமிழகத்தின் பிரபலமான அச்சு ஊடகங்களுக்குள் பணியாற்றும் யுவாகிருஷ்ணாவின் பெயரை இணையவெளியில் அலையும் ஒருவர் சந்திக்காமல் இருந்தால் ஆச்சரியம்.  நடப்பு நிகழ்வுகளையும் ஆளுமைகளையும் கவனிப்பவராகவும் கருத்துச் சொல்பவராகவும் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ள அவர்,எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையின் இணைய எழுத்தாளர் விருதுபெற்றவர். சரோஜாதேவி யுவகிருஷ்ணாவின் ஆறாவது நூல். சமர்ப்பணம் சாரு நிவேதிதா..

June 03, 2015

மூன்று கதைகள், ஐந்து விமரிசனங்கள், எட்டு நினைவுக்குமிழிகள்அதிஷா அதிஷா

===============================================

ஃபேஷ்புக் பொண்ணு, 2014 இல் உயிர்மை வெளியிடுகளில் ஒன்று.  சிறுகதை என்ற வகைப்பாட்டில் 15 தலைப்புகளில் அச்சிடப்பட்டுள்ள தொகுப்பு. மொத்தமாக வாசித்தபின் இப்பதினைந்தும் சிறுகதைகள் தானா? என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளாமல் நகரமுடியவில்லை.

சேகுவோரா

[மலையாள மூலம்: கோபன். தமிழில் ;  அ.ராமசாமி]

      காட்சி.1
நாடகம் தொங்கும்பொழுது மேடையில் ஒரு சவப்பெட்டி. அதனுள் விகாரமான தோற்றம் கொண்ட முதியவன் அண்ணாந்து பார்த்தபடி கிடைத்தப்பட்டுள்ளான். சவப்பெட்டியினுள் முழுமையான வெளிச்சம்.
சவப்பெட்டியின் முன்பாக மூன்று ராணுவ அதிகாரிகள் நடந்து வருகின்றனர். சவப்பெட்டியிலிருந்த வெளிச்சம் மங்கிக் குறைகிறது. மேடையில் உள்ள மூன்று மேஜை விளக்குகள் அடுத்தடுத்து எரிகின்றன. சேகுவோராவின் ஓவியம் பின் திரையில் தெரிகின்றது.

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...


முன்னுரை;
மனிதன் என்னவாக இருக்கிறான் என்ற கேள்வி தத்துவம் சார்ந்ததாக இன்று அறியப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வி அடிப்படையில் உலகில் உள்ள மனிதன் உள்ளிட்ட உயிரினங்களும்,  கடல், வான், அண்டம், பூமி, கோள்கள் என இயங்கும் இயற்கைப் பொருட்களும், இவ்வியற்கைப் பொருட்கள் தரும் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பெறும் செயற்கைப் பொருட்களும் எவ்வாறு இருக்கின்றன என்ற அறிதலுக்கான அடிப்படைக் கேள்வியிலிருந்து உருவாகும் அறிவுத்தோற்றவியல் ( Epistemology) கேள்வியே என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

May 21, 2015

வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி  வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

May 20, 2015

தமிழ் அறிவுத்தோற்றவியலின் பரிமாணங்கள்திருக்குறளின் கல்வி கேள்வி அதிகாரங்களை முன்வைத்து
முன்னுரை:

மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன.

குற்றவியலின் தர்க்கங்கள்ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்


ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும்  சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது.

May 09, 2015

தற்காலிகமா? நிரந்தரமா?

ஐரோப்பியர்களுக்குக் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் (Living together) தவிர்க்க முடியாத நெருக்கடியின் விளைவு. இந்தியர்களுக்கு சேர்ந்து வாழ்தல் நெருக்கடி அல்ல;தேர்வு (Choice). இரண்டில் எது ? பந்தம் தொலைத்துக் கொஞ்சும் - கொஞ்ச காலமா? பந்தமென்றறியாத பந்தம் தொடரும் நீண்ட காலமா? தற்காலிகமா? நிரந்தரமா? 

May 07, 2015

எளிமையின் பயங்கரம்கொம்பனை முன்வைத்துத் தமிழின் வட்டார சினிமாக்களைப்  பற்றி ஓர் அலசல்

‘அதிகத் திரையரங்குகள்; குறைந்த நாட்கள்; கூடுதல் கட்டணம்; வசூல் வெற்றி’ என்ற சூத்திரம் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் வந்த சகாப்தம், நண்பேன்டா, கொம்பன் மாதிரியான படங்களின்  விமர்சனத்தை மே முதல் வாரம் வாசிப்பது அபத்தமான ஒன்று. 

April 30, 2015

ஆற்றுகை


  • writtentext kum performance text kum vilakkam solla mudiuma si.  (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)

April 23, 2015

விருதுகள் - வெகுமதிகள் - விளையாட்டுகள்

இந்தியாவில்மட்டுமல்ல உலகெங்கும் வழங்கப்படும் எல்லாவகை விருதுகளும் நபர்களின் விருப்பு வெறுப்புஅடிப்படையில் தான் தரப்படுகின்றன. விருதுகளை உருவாக்கியவர்களின் நோக்கம் சார்ந்த விருப்பு- வெறுப்பு ஒருவகை என்றால், விருதுக் குழுவில் இருக்கும் நபர்களின் விருப்பு - வெறுப்பு இன்னொருவகை.  இதற்காக அறிவிக்கப்படும் விருதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளட வேண்டும் என அர்த்தமில்லை.

April 18, 2015

முப்பாட்டன் முருகன் அல்ல; கணியன் பூங்குன்றன்இரண்டு வாரங்களுக்கு முன்  எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

April 05, 2015

முகநூல் பதிவுகள் - இலக்கிய சேவைகள் - தமிழ் ஆய்வுகள் - நெஞ்சு நனைக்கும் நினைவுக்குறிப்புகள்
13 - 03-2015 அன்று இரவு 9 மணி வாக்கில் முகநூலில் நண்பர் பௌத்த அய்யனார்  இப்படி ஒரு  நிலைத்தகவல் போட்டார்.
·      ஆண்டுக் கணக்கு முடிவு வந்து விட்டால் பேராசிரியர்கள் இலக்கியம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதைப் படித்த உடன் அதற்கு உடனடியாக நான் ஒரு எதிர்வினையைத் தர வேண்டும் என நினைத்து இப்படி எழுதினேன்:

March 31, 2015

கவிதைப் பொருள்கொள்ளல்முன்னுரை

 நிகழ்காலத்தில் கல்விப் புலங்களில் விளக்கமுறை ஆய்வு என்ற பெயரிட்டு அழைக்கப்படும் ஆய்வுகளே அதிகம் நடக்கின்றன. இக்கால இலக்கியப்பரப்பு என்பதில் மட்டுமல்ல; மொத்தத் தமிழியல் பரப்பில் கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக ஆதிக்கம் செலுத்தும் ஆய்வு முறையாக அல்லது முறையியலாக  இருப்பது விளக்கவியல் ஆய்வுகளே. இவ்விளக்க முறை ஆய்வுகளைச் சற்று நுணுகி நோக்கினால், அவை வெறும்  விளக்கமுறை ஆய்வுகள் மட்டுமல்ல என்பது  புலப்படலாம்.  ஒருவிதச் செய்முறைத் தன்மை(Applied)  இவ்வகை ஆய்வுகளின் பொதுத் தன்மையாகக் காணப்படுகிறது. 

March 24, 2015

பண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்


முன்னுர
உலக இலக்கிய வரலாற்றின் ஆதியிலக்கிய வடிவம் எது? எனக் கேட்டால் ஐரோப்பியச் செம்மொழிகளான கிரீக், லத்தீன் மொழிகளிலிருந்து தொடங்கும் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றவர்கள் நாடகங்கள் தான் ஆதி இலக்கியங்கள் எனச் சொல்லக் கூடும். ஆனால் அவை கவிதைகளால் ஆன நாடகங்கள் எனத் தடுமாறவும் கூடும். அதேபோல் இந்தியச் செம்மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்திலிருந்து இலக்கிய வடிவங்களை உருவாக்கிக் கொண்டவர்கள்கூட நாடகங்களே ஆதியிலக்கிய வடிவங்கள் என நினைக்கவே செய்வார்கள். ஆனால் வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கணக்கில் கொண்டு கவிதைகளே ஆதியிலக்கிய வடிவம் என்று மயக்கங்கொள்ளவும்  செய்வர். ஆனால் இன்னொரு செம்மொழியாகிய தமிழ்ச் செம்மொழியிலிருந்து உருவாக்கப்பெற்ற இலக்கிய மரபை அறிந்தவர்கள் கவிதையே ஆதியிலக்கிய வடிவம் என்று தயங்காமல் சொல்வர்.

March 23, 2015

தி.ஜானகிராமனின் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்தாளுமை.
வரலாற்றில் வாழ்தல் என்பதாக நினைத்துக் கொள்வதே மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று. ஒருவர் வரலாற்றின் பகுதியாக இருப்பதும், வரலாற்றை மாற்றுவதற்கான காரணமாக இருப்பதும் கூடுதல் மகிழ்ச்சிக்குரியன. ஒருவருக்கு மாற்றப்படும் வரலாற்றின் தொடக்கப்புள்ளியாக மாறும் வாய்ப்புக் கிடைக்கிறதென்றால் அவரும் அவர் சார்ந்த குழுவும் கொண்டாட்ட மனநிலைக்குள் நுழைகின்றனர் எனச் சொல்லலாம். சாகித்திய அகாடெமி திட்டமிட்டுள்ள இந்தக் கருத்தரங்கம் இதுவரை அறியப்பட்ட சிறுகதை வரலாற்றின் தொடக்கப்புள்ளியை நகர்த்திப் பார்ப்பதன் மூலம் மாற்று வரலாற்றை முன் வைக்க முயல்கிறது என நினைக்கிறேன். சிறுகதையின் தொடக்கம் வ.வே.சு. அய்யரின் குளத்தங்கரை அரசமரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்ட வரலாற்றிற்குப் பதிலாகப் பாரதியின் வசன எழுத்துக்களில் சிலவற்றைத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி வடிவம் எனச் சொல்ல முயல்கிறது எனக் கருதிக் கொள்கிறேன்.

March 20, 2015

பின் நவீனத்துவ விமரிசன முறை - எளிய அறிமுகம்

 முன்னுரை

மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்- நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத் தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

March 16, 2015

அரங்கியல் என்னும் கலை அடிப்படைகள்….. கற்பிக்கின்றவர்களுக்கும் கற்கின்றவர்களுக்குமான குறிப்புகள்


கலை இலக்கியப் படைப்புகளை வகுப்பறைக் கல்வி முறையில் கற்பிப்பதுவும், கற்றுக் கொள்வதும் சாத்தியம் தானா?அப்படிக் கற்றுக் கொண்ட ஒருவர் படைப்பில் ஈடுபடுதலும் திறமான படைப்புகளை உருவாக்குதலும் இயலுமா..? 
இவ்வளவு ஏன்../திறமான ஆசிரியர்களால் திறமான படைப்புகள் எதுவும் உருவாக்கப்படுவது சாத்தியமில்லையே…
இவை போன்ற வினாக்களும் ஐயங்களும் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. இந்த வினாக்களும் ஐயங்களும் இன்றுள்ள கலை, இலக்கியப் படைப்புக் கல்வி முறையின் மீதான வினாக்களாகவும் ஐயங்களாகவும் கூட இருக்கலாம்.
ஒரு படைப்பாளி, தனது படைப்பு வடிவம் சார்ந்து எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்போதைய பட்டம் சார்ந்த கலை, இலக்கியக் கல்வி முறையில் உள்ளதா?கற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட வேண்டியனவற்றைத் தவிர்த்துவிட முடியுமா? இந்த யோசனைகளுக்கெல்லாம் கிடைப்பது எதிர்மறை விடைகள் தான். அந்த விடைகளினூடாக தற்போதைய கல்வி ஒரு படைப்பாளியை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அப்படியானால் வேறென்ன நோக்கம் கொண்டது?

March 12, 2015

மார்ச் 27. உலக அரங்காற்று தினம்சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை  உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது. 1961 இல் சர்வதேச அரங்காற்று நிறுவனத்தின் தலைவராக இருந்த ஆர்வி கிவிமா, பின்லாந்தில் செயல்பட்ட அந்நிறுவனத்தின் சார்பில் அரங்காற்று நிகழ்வுகளுக்காக ஒரு தினத்தைக்  கொண்டாட வேண்டும் என முன் மொழிந்தார். 1961 இல் கூடிய அரங்காற்றுக் கலைஞர்களின் மாநாட்டில் அந்த நாள் மார்ச் 27 என உறுதி செய்யப்பெற்றது. கிவிமாவின் முன்மொழிதலை ஏற்றுக் கொண்ட ஸ்காண்டிநேவிய மையம் ஒவ்வோராண்டும் பெருமையோடு நடத்திக் கொண்டு வருகிறது. அந்த நிறுவனத்தோடு உலகத்தின் பல்வேறு மூளை முடுக்குகளில் செயல்படும் நாடகக்காரர்களும் இணைந்து கொண்டு அந்த நாளைக் கொண்டாடத் தவறுவதில்லை. 

March 03, 2015

பூங்குழலியும் மதியழகனும் - கவிதை வாசிப்பு 1 :
கவியின்பம் அல்லது இலக்கிய இன்பம் என்ற தலைப்புகளில் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்ததுபோல இப்போதைய மாணாக்கர்களுக்கு - இப்போது எழுதப்படும் இலக்கியங்கள் பற்றி எடுத்துச் சொல்லும் எழுத்துக்கள் இல்லை. இலக்கியம் பற்றி எழுதப்படுவன எல்லாமும் விமரிசனங்களாக - விமரிசனங்கள் என்ற பெயரில் போற்றுவது, தூற்றுவது, தள்ளி வைப்பது, கூட்டம் சேர்ப்பது, இருட்டடிப்பு செய்வது, வெளிச்சம் போட்டுக் காட்டுவது எனத் தொடர்ந்து நடக்கிறது. நடப்பது நடக்கட்டும். நடப்பது நன்றாக நடக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது

February 11, 2015

கடைசி வாய்ப்பைத் தெரிந்தே தவறவிட்டேன்.தமிழ்மொழியைச் செம்மொழியாக்கிடும் முயற்சிக்குப் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. செம்மொழித் தமிழுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டும் 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எட்டாண்டுகளாகவே அதற்கெனத் தனியாக நியமிக்கப்பட வேண்டிய தலைமை நிர்வாகி - இயக்குநர் - பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பதவிக்கு நான் ஏற்கெனவே இரண்டுமுறை விண்ணப்பம் செய்தேன். இரண்டு முறையும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதா என்பதை நானறியேன். அப்படிப் பரிசீலனை செய்யப்படாமல் போவதற்கு விதிப்படியும் நடைமுறைகளின்படியும் சிலபல காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

February 09, 2015

மணவிழா என்னும் நாடகம்
[ 2007 இல் எனது மகளின் திருமணத்தைச் சமஸ்கிருத வார்த்தைகளின்றி நடத்திட நினைத்தேன். அந்நிகழ்வை ஒரு நாடகப்பிரதியை எழுதுவதுபோல எழுதித்திருத்தினேன். நண்பர் முருகேச பாண்டியன் தான் கட்டியங்காரனைப் போலக் காட்சிகளை நடத்திக்காட்டினார். அந்தப் பிரதியை வேண்டிப் பின்னர் சிலர் அவ்வப்போது தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அந்தப் பிரதியைக் கொண்டு அவர்களின் நாடகத்தை எப்படி மேடையேற்றினார்களோ எனக்குத் தெரியாது. இன்று காலை ஒரு நண்பர் இந்தப் பிரதி வேண்டும் என்றார். எதிர்வரும் 15 ஆம் தேதி மேடையேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவரது நெறியாள்கையின்படி நடக்கும் அந்த நாடகத்தின் பிரதி மட்டும் என்னுடையது. நாடகங்கள் இன்பியலாகவும் துன்பியலாகவும் அமைவதைப் போல திருமணங்களும் அதனதன் போக்கில் முடியக்கூடும். அதற்குப் பொறுப்பு நெறியாளர் மட்டுமே. பிரதியை எழுதியவன் அல்ல]
==========================================================================

January 26, 2015

எழுத்துக்குத் தடை என்னும் பேதமைபெருமாள் முருகனின் மாதொரு பாகனை இன்னும் வாசிக்கவில்லை. மாதொருபாகன் (2010) மட்டுமல்ல; 2011-2013 ஆண்டுகளில் வந்த பல நூல்களைப் படிக்கவில்லை. நான் போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகம் போனது ஒரு காரணம். இங்கே வந்த பிறகு இப்போது புதிதுபுதிதாக வந்து கொண்டிருக்கும் நாவல்களையே படிக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த 2 ஆண்டுப் பாக்கி அப்படியே தான் இருக்கப்போகிறது. பெருமாள் முருகனின் மாதொரு பாகனை வாசிக்காமல் விட்டதற்குப் பெரிதாக வருத்தமில்லை. ஆனால் அவரின் நிழல்முற்றம் (1993) நாவலை வாசிக்காமல் இருந்ததற்காக வருத்தப்பட்டதுண்டு.

நகரும் நதிக்கரையில் நடந்தபடி…நதிக்கரையோரக் கிராம வாழ்வாயினும் நகர வாழ்வாயினும் நீரோடும்  நீருக்குள் சுழலும் நினைவுகளோடும் பின்னிப் பிணைந்ததாகவே இருக்கக்கூடும். கவி கலாப்ரியாவின் மறைந்து திரியும் நீரோடை என்னும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நீரின் சிலிர்ப்பைத் தவிர்த்து நினைவின் சுளிப்பைத் தொடரும் பயணமாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.