December 19, 2014

காலில் ஒட்டாத கரிசல் மண்வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு என்றொரு தொடரைக் குமுதம் இதழில் கி.ராஜநாராயணன் ஆரம்பித்தபோது நான் இந்தியாவில் இல்லை. போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் போலந்து நாட்டுக்காரர் களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களைப் படித்த நண்பர் ஒருவர் ‘உனது பெயரும் அவ்வப்போது இடம்பெறுகிறது’ எனத் தொலைபேசியில் சொன்னார். சொன்ன பிறகும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த பிறகு தான் கிடைத்தது. 

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு தொடரின் தொடக்க அத்தியாயங்களை ஒருசேரத் தொகுத்து வாசித்துவிட்டுப் பின்னர் தொடர்ந்தேன். நானும் தெக்கத்திக்காரன் தான் (மதுரை மாவட்டம்) என்னைவிட இன்னும் கொஞ்சம் தெற்கிலிருந்து கிளம்பியவர் கி.ரா.(பழைய திருநெல்வேலி; இப்போது தூத்துக்குடி மாவட்டம்) இருவரும் பாண்டிச்சேரிவாசியாக ஆக நினைத்துப் பயணப்பட்டுக் கால் நூற்றாண்டு ஓடிவிட்டது. பாண்டிச்சேரிக்குப் போனதில் நான் முன்னத்தி ஏர்; கி.ரா. பின்னத்தி ஏர். நான் போய்ச் சேர்ந்து ஆறுமாதம் கழித்து அவர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக வந்து சேர்ந்தார். அவர் வரும்போது சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியில் இளம் விரிவுரையாளராகப் பணியிலிருந்தேன். நான் பணியில் சேர்ந்த அதே நாள் பணியில் சேர்ந்தவர் முனைவர் கே.ஏ.குணசேகரன். எங்கள் இருவருக்கும் தலைவர் -நாடகப்பள்ளியின் இயக்குநர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.

கி.ராஜநாராயணன் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்கு வருகைதரு பேராசிரியராக வரப்போகிறார் என்பது ஏற்கெனவே உறுதியான செய்தி. ஆனால் என்றைக்கு வரப்போகிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. வந்தால் எங்கே தங்குவார் என்பதும் தெரியாது. ஏற்கெனவே வருகைதரு பேராசிரியராக இருந்த க.நா.சுப்பிரமணியம் தங்கியிருந்த ஜமீந்தார் கார்டன் பகுதியில் இருந்த விருந்தினர் விடுதியில் தங்க வைக்கப்படலாம் என்ற தகவலும் என் காதில் விழுந்திருந்தது. ஜமீந்தார் கார்டன் என் வீடு இருந்த முத்தையால் பேட்டையின் ஒரு பகுதிதான். பல்கலைக்கழகத்திலிருந்து நிகழ்கலைப்பள்ளி இருந்த ரெங்கப்பிள்ளை வீதிக்கு அந்த வழியாகத் தான் சைக்கிளில் போவேன். கி.ரா., புதுவை வந்து சேர்ந்தது தெரிந்தவுடன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன்.

அந்த நினைப்புக்கு மாறாக அடுத்த நாள் காலை பாண்டிச்சேரி ரயிலடிக்கு கட்டாயம் போக வேண்டும் என்றொரு உத்தரவு வந்தது துணைவேந்தர் அலுவலகத்திலிருந்து. “என் மூஞ்சியை குழப்பமில்லாமல் கண்டுபிடிக்கச் சரியான ஆள், நாடகத்துறையில் இருக்கும் அ.ராமசாமி தான்” என்று குறிப்பிட்டுக் கி.ரா. கடிதம் எழுதியிருப்பதால் நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என்றார்கள். உத்தரவு போடாமல் தகவல் சொல்லியிருந்தாலே போதும். நிச்சயம் போயிருப்பேன். மாலை, மரியாதையோடு கி.ரா.வை வரவேற்கப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அலுவலகரீதியாக ஒரு துணைப்பதிவாளரும், துறையிலிருந்து ஒரு இணைப்பேராசிரியரும் வந்திருந்தனர். ஒருவர் கையில் மாலை; இன்னொருவர் கையில் துண்டு. விழுப்புரத்திலிருந்து வந்து சேரும் அந்தக் காலைநேரப் பாசஞ்சர் வண்டியிலிருந்து டிரங்கு பெட்டியை ஓவியர் மாரீஸ்(வரன்) இறக்கி வைக்க,  அதைத் தொடர்ந்து இறங்கினார் கரிசல் காட்டு சம்சாரி கி.ராஜநாராயணன், அவரோடு நிழலாகத் தொடர்ந்து கணவதி அம்மாவும். பாண்டிச்சேரியைச் சுற்றிப் பார்க்க வந்து இறங்கிய பயணிகளைப் போல வந்த அவர்கள் இந்த 25 ஆண்டுகளில் பத்துத் தடவைகூட ரயிலேறிக் கோவில்பட்டிக்குப் போயிருக்க மாட்டார்கள். அப்படிப் போகவிடாமல் தடுத்த ஆற்றல் அந்தப் பாண்டிச்சேரி என்னும் புதுச்சேரிக்கு இருக்கிறது. இந்தப் புதுவையைத் தான் கவி பாரதி வேதபுரம் எனத் தனது எழுத்தில் எழுதிப் போனான். கவி பாரதி தனது சொந்த பூமிக்குத் திரும்ப வேண்டும் என நினைத்து வேதபுரத்தைவிட்டு வெளியேறினான். ஆனால் கதைசொல்லி வேதபுரத்தாருக்கு நல்லநல்ல கதைசொல்ல வேண்டி அங்கேயே தங்கி விட்டார். அவர்களுக்கு நல்ல குறிகள் சொல்லவும் தொடங்கி இருக்கிறார்.

கி.ரா.வைக் கெட்டியாகப் பிடித்துப் போட்டு விட்ட புதுச்சேரியின் நினைவுகளாக விரியும் இந்த எழுத்தை முதலில் அவரது புதுச்சேரி நகரத்தின் வாழ்க்கைப் பதிவுகள் என்பதாகவே நான் வாசித்தேன். ஒவ்வொருவரும் அப்படியே வாசிக்க முடியும். அப்படி வாசிக்கத் தூண்டும் தன்னிலைக் கூற்றில் தான் தொடக்கப் பகுதி ஒவ்வொன்றும் விரிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்டது; அதிகாரிகளைச் சந்தித்தது; ஆய்வுக்குத் திட்டமிட்டது; உதவியாளர்களை உருவாக்கிக் கொண்டது; துறை மாணாக்கர்களோடு உரையாடியது; பேராசிரியர்களின் ஆய்விலிருந்து  எழுத்தாளனின் மனம் வேறுபடும் திசை, உள்ளூர்த் தமிழ்ப் பற்றாளர்களின் எதிர்பார்ப்பு, மொழி பற்றிய தனது நிலைப்பாட்டை விவரிப்பது  என விரியும் அன்றாட நடப்புகளின் விவரிப்புகள் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று எழுத்தின் சாயலையே கொண்டிருக்கின்றன. கி.ரா.வும் கூட அந்த நோக்கத்தில் தான் எழுதத் தொடங்கியிருப்பார் எனத் தோன்றுகிறது.

******* 

பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காத கி.ராஜநாராயணனைப் புதுவைப் பல்கலைக் கழகத்தில் வருகைதரு பேராசிரியராக நியமித்துப் புதுவைக்கு அழைத்த துணைவேந்தர் கி.வேங்கடசுப்பிரமணியனை அந்த நேரத்தில் சிலர் பாராட்டினார்கள். ஆனால் பலரும் பலவிதமான விமரிசனங்களிலும் இறங்கினார்கள். பாண்டிச்சேரியின் மண்ணின் மைந்தர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்கக் கூடாதா? என்று கேள்விகள் கேட்டுக் கடிதம் எழுதியதை நானும் அறிவேன். வருகைதரு பேராசிரியர் என்ற வகைப்பாட்டில்  முதலில் அழைத்த எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன் கும்பகோணத்துக்காரர். டெல்லியில் இருந்தவர். இப்போது கோவில்பட்டியிலிருந்து கி.ராஜநாராயணன் என வெளியாட்களுக்கே வாய்ப்புகளை உருவாக்கும் இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எல்லாம் வைக்கப்பெற்றன. ஆனால் துணைவேந்தர் துணிச்சல்காரர். துணிச்சலான முடிவுகளை எடுக்கும் அவரது பின்னணியில் கல்வித் துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற பலரும் அதிகாரிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் திரு மாணிக்கம் பிள்ளை. அரசாங்க விதிகளின் இண்டு இடுக்குகளைப் படித்து, என்ன செய்யலாம்; என்ன செய்யக் கூடாது என்பதை விரிவாக விளக்கக் கூடியவர். இவருக்கும் துணைவேந்தருக்கும் கி.ரா.வின் எழுத்தும் அது உண்டாக்கும் மண்வாசனையும் ரொம்பப்பிடிக்கும் எனச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தின் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றியவர்கள். 

இந்த 25 வருட புதுச்சேரி வாழ்க்கையில் பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராக இருந்த காலகட்ட நிகழ்வுகளை மட்டும்  பேசத் தொடங்கும் வாழ்க்கை வரலாறு போல ஆரம்பிக்கும் இந்த எழுத்து ஒரு கட்டத்தில் விலகி காலம், இடம் என்ற கட்டுதிட்டங்களை மீறிக் கொண்டு தனது அடையாளத்தையும் தகர்த்துக் கொண்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தோடு தொடர்புடைய மனிதர்களைப் பேசுவது என்ற எல்லையை விட்டு விலகும்போது அந்த மாற்றம் நிகழ்வதை ஒரு தேர்ந்த வாசகன் சுலபமாகக் கண்டு பிடித்துவிட முடியும். கி.ரா.வுக்கு உதவியாளராகப் பல்கலைக்கழகத்தால் அனுப்பப்பட்ட தணிகாசலத்தின் பிற்கால வாழ்க்கையை- பெரும் துணிக்கடை அதிபராக ஆன கதையைச் சொல்லத் தொடங்கியபோதே அந்த விலகல் தொடங்கி விடுகிறது. ஒரு புனைகதையின் இயல்பே அதுதான். பெட்டிக்கடைச் செட்டியாரின் கதை, ஆட்டோக்காரர்களின் பொதுப்புத்தி. அப்பொதுப் புத்தியிலிருந்து விலகி நிற்கும் ஒரு தனிமனிதனின்  நியாய மனம், குடிப்பதில் ஒரு பொது ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் மரபு, கடலும் கடல் பற்றிய புராணிகக் கதைகளும், மீன்குழம்புக்கு பின் இருக்கும் தொன்மவியல் சுவாரசியம் என ஒவ்வொரு நிகழ்வையும் எழுதத் தொடங்கும்போது வருகைதரு பேராசிரியர் கி.ரா.வைத் தூர விரட்டிவிட்டுக் கதைசொல்லி கி.ரா. முன்னிலைக்கு வந்து விடுகிறார்.

**************

நாம் வாசிக்கும் எழுத்து ஏற்கெனவே வாசித்த பழக்கப்பட்ட எழுத்தாக இருக்கும் வரை வாசகர்களுக்குப் பிரச்சினை எதுவும் தோன்றுவதில்லை. வாழ்க்கை வரலாறுதான் என்றாலும், கி.ரா. அதைச் சுவாரசியமாகச் சொல்லுவார் எனப் புரிந்து வைத்திருக்கும் அவரது வாசகர்கள் விருப்பத்தோடு படிக்கவே செய்வார்கள். ஆனால் வாசித்துக் கொண்டிருக்கும்போதே வேறொன்றாக மாறுகிறது என்பது புரியவில்லை என்றால் சற்றுக் குழம்பவே செய்வார்கள். அந்த மாற்றம் ஏற்கெனவே இருக்கும் இலக்கியவகை ஒன்றின் அடையாளத்தோடு நெருங்கி வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.

சோதனைகளை யார் செய்கிறார்கள் என்பது முக்கியம். எதையும் தன் போக்கில் சுவாரசியமாகச் சொல்லத் தெரிந்த எழுத்தாளன் செய்யும் சோதனை எழுத்துக்கள் அந்நியமாகக் கருதப்படுவதில்லை. அதற்கு மாறாக எழுத்துக்கான அடிப்படை நோக்கம் இல்லாமல் செய்யப்படும் சோதனை ஆகப் பெரிய சோதனையாக இருந்தாலும் ஏற்கப்படுவதில்லை. தனது விருப்பத்துக்குரிய எழுத்தாளன் செய்யும் சோதனை மூலம் வாசகர்களுக்குப் புதுவகை அனுபவம் கிடைக்கப் பெறும்போது விலகல் இன்றி எழுத்தாளனோடு பயணம் செய்யவே விரும்புகிறார்கள்.

தனது சொந்த வெளியிலிருந்து அந்நிய வெளிக்குள் வாழ நேர்ந்த ஒருவர் - எழுத்தில் சாதனைகளைச் செய்த அனுபவத்தோடு நுழைந்த எழுத்தாளர் அந்தப் புது வெளியை -வேதபுரத்தை- படிப்பதாகவும், வேதபுரத்தாரின் வெளி அடையாளத்திற்குள் இருக்கும் ரகசியங்களைத் தேடுவதாகவும், தேடிக் கண்டுபிடித்த ரகசியங்களைச் சுவாரசியமாகச் சொல்லுவதாகவும் இருக்கிறது இந்த எழுத்து. அப்படிச் சொல்லும்போது ரசிக்கத் தக்கனவாக எவை இருந்தன; ஏற்க முடியாதனவாக இருந்தன எவை என்றும்   கற்ற்அது சாத்தியமில்லாதபோது இதற்கு என்ன பெயரிடலாம் என்ற தவிப்பும் உண்டாகி விடும். வேதபுரத்தாருக்கு... என்ற தொடரைத் தொடர்ந்து வாசித்தபோது அப்படியொரு தவிப்பு உண்டானது. கொஞ்சம் கொஞ்சமாக வரலாற்றெழுத்து என்பதிலிருந்து விலகிப் புனைவெழுத்தாக மாறும் ரகசிய வெளிக்குள் நகர்ந்தது.

கோபல்ல கிராமம் எனும் தனது முதல் நெடும் எழுத்திலேயே அப்படியானதொரு சோதனையைச் செய்து தமிழ் வாசகர்களின் கதை கேட்கும் பரிமாணங்களை விரிவடையச் செய்தவர் கி.ரா., ‘ வேதபுரத்தார்க்கு நல்ல குறி சொல்லு’ என்ற இந்த நெடும் எழுத்தின் மூலம் இன்னொரு பரிமாணத்தை உண்டாக்கியிருக்கிறார். இந்த எழுத்தை  வாசிக்கும் ஒரு வாசகர், கால் நூற்றாண்டுக்கு முந்திய பாண்டிச்சேரியைப் படம் பிடிப்பதாக நினைக்க முடியாது என்றாலும், அந்நகரத்திற்குள் வந்த அந்நிய மனிதன் ஒருவனின் மனப்பதிவுகளை வாசிக்க முடியும். தொடர்ந்து அந்நியர்களை -பிரக்ஞைபூர்வமான நுழைவாகக் கருதி இந்நகரத்திற்குள் வரும்  பாரதி, வ.வே.சு, அய்யர், அரவிந்தகோஷ் போன்ற அந்நியர்களை வரவேற்பதிலும், தனக்குள் ஒருவராக ஆக்கிக் கொள்வதிலும் சுணக்கம் காட்டாத இந்த வேதபுரத்தின் இயல்பும் ஏற்பும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்குள்ளேயே பொதிந்து கிடக்கிறது என்பதையும் இந்த எழுத்து சொல்கிறது.  அதே நேரத்தில் இந்த நகரம் நிகழ்காலத்தின் தேவைக்கேற்ப மாற வேண்டியதாகவும் இருக்கிறது. மாற்றிக் கொள்ளும் மனநிலை கொண்ட வேதபுரத்துக்காரர்களுக்குத் தேவையான குறிகளைச் சொல்லும் வாய்ப்புகள்,  நிகழ்காலத்தின் ஞானவான்களான எழுத்தாளர்களுக்குக் கவிகளும் தான் இருக்கிறது. அவர்கள் தான் இன்றைய வேதபுரத்தின்  ரிஷிகளாகவும் முனிவர்களுமாகத் திரிகிறார்கள். வரலாற்றையும் புனைகதையும் கலந்து கட்டி எழுதியுள்ள இந்த எழுத்தின் கடைசி அத்தியாயம் வாழ்வின் இன்மையையும்,  இன்மையின் வாழ்வையும் சுட்டும் ஆகப் பெரிய தத்துவ விசாரத்திற்குள் நுழைவதாக முடித்து வைக்கப்பெற்றிருக்கிறது. அம்முடிப்பு ஆகப் பெருங்கலைஞனின் நிதானமான முடிவு. தங்களின் வாழ்விடம் ஒவ்வொன்றையும் வேதபுரமாகக் கருதிக் கொள்ளும் மரபு இந்திய ஞானத்தின் ஒரு கிளை. அந்தக் கிளையைப் பற்றிக் கொண்டு பயணம் செய்யும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்விட மனிதர்களுக்குத் தேவையான நல்ல குறிகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியது நிகழ்காலத்தேவை. 

***********

இந்தியத் தொல்கதைகளின் களஞ்சியங்களான பாரதக் கதையும், தெனாலிராமனின் சாகசங்களும் எனக் கதைசொல்லிக்குக் கைகொடுக்கும் கருவிகளோடு நாட்டார் கதைச் செல்வங்களையும் தன்னுடைய சொத்தாகக் கருதும் - அசைபோட்டுப் பார்க்கும் ஒரு கலைஞன் -நவீன எழுத்தாளன்  இயல்பாகவே ஒரு நேர்கோட்டில் கதை சொல்லவோ, வரலாறு எழுதவோ முடியாது. காலம், இடம் என்ற இரண்டினாலும் உருவாக்கப்படும் நேர்கோட்டுத் தன்மையை அழிப்பதன் மூலமாகவே புனைவின் ரகசியத்தையும், புனைவு வெளியில் உலவும் பாத்திரங்களின் அந்தரங்கங்களையும் பேச முடியும். கவிதை, நாடகம் என அறியப்பட்ட வகைப்பாட்டில் இத்தகைய அழிப்புக்குக் குறைவான சாத்தியங்களே உண்டு. ஆனால் கதை எனும் வகைப்பாடு இதனைச் சாத்தியமாக்குவதில் தான் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. இந்த எழுத்தின் மூலம் கி.ரா. வாழ்க்கை வரலாற்று எழுத்து என்பதையும் புனைகதை எழுத்தின் பரிமாணம் என்பதையும் அழித்துவிட்டுப் புதுவகையான எழுத்தொன்றைத் தந்திருக்கிறார்.  நான் படித்த போது எனக்கு இப்படித் தோன்றியது. நீங்களும் படித்துப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றியபடி நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள்.

 நன்றி : மலைகள் இணைய இதழ்

No comments :