தமிழ் என்பது நபர்கள் அல்ல


வெற்றித்தமிழர் பேரவை - 2014,நவம்பர்,11 இல் உத்தர்கண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவருக்குச் சென்னையில் பாராட்டுவிழா ஒன்றை நடத்திய அமைப்பு அல்லது அறக்கட்டளை. இவ்வமைப்பு பாடலாசிரியர் வைரமுத்துவின் தமிழ்ப் பணியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒன்று.
 
இலக்கிய அமைப்புகள் பலவிதமானவை;அவற்றின் செயல்களுக்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. நிதானமாக யோசித்துப் பார்த்தால், தீர்மானிக்கப்பெற்ற இலக்கிய முன் முடிவுகளுக்காகவே அவை செயல்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சாகித்ய அகாடெமி போன்ற அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளும் நோக்கங்களும் ஒருவிதமானவை என்றால், அரசியல் அல்லது சமூக இயக்கங்களின் சார்பு அமைப்புகளாகச் செயல்படும் கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் போன்றவற்றின் நோக்கங்களும் செயல்பாடுகளும் இன்னொருவிதமானவை. இலக்கியத்தின் விதிகளை மட்டுமே முழுமையாகக் கடைப்பிடித்து ஒவ்வொருவரும் பங்கேற்றும் விவாதித்தும் உடன்பட்டும் செயல்படும் அமைப்புகளின் தேவை தொடர்ந்து கனவு காணப்பட்டாலும் எப்போதும் கானல் நீராகத் தூரதூரமாக விலகிக் கொண்டே தான் இருக்கின்றன.

அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் பொதுத்துறை நிறுவனங்களிலும் அரசுத்துறை நிறுவனங்களிலும் செயல்படும் கலை இலக்கிய அமைப்புகள், தனியார் நிறுவனங்களிலும் தனிநபர்கள் நடத்தும் அமைப்புகளிலும் இருந்து செயல்பாடுகளில் விலகலைக் கொண்டிருக்கின்றன என்பதும் புரிய வரும். தனியார் அமைப்புகள் எப்போதும் ஒருவரை மையப்படுத்தி நாயகப் பிம்ப உருவாக்கத்தையே செய்கின்றன. வெற்றித் தமிழர் பேரவை கவி வைரமுத்துவின் தலைமையில் செயல்படும் அமைப்பு. தான் எழுதும் எழுத்துக்களை - இலக்கியத்தை- வெகுமக்கள் தளத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், விற்பனை செய்யவும், தொடர்ந்து இலக்கியப்பரப்பில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளவும் விரும்பும் ஓர் இலக்கியவாதிக்கு இது போன்ற அமைப்புகள் தேவையில்லை. நல்ல உதாரணம் சுஜாதா. அவர் எந்த அமைப்பையும் ஆரம்பித்தவர் அல்ல. பின்னணியில் இருந்து செயல்பட்டவரும் அல்ல. “தன்னுடைய எழுத்து ஜனரஞ்சமானவை; ஜனங்கள் அதை ரசிப்பார்கள் ; அதற்கான கச்சாப் பொருட்களை நான் சரிவிகிதமாக உருவாக்கிக் கலந்து தருகிறேன்” என்று நம்பியவர்; செயல்பட்டவர். வைரமுத்து போன்றவர்களின் எண்ணம் வேறானவை.
 
வைரமுத்து போன்றவர்கள் தங்களது எழுத்து வெகுமக்களிடமும் போக வேண்டும் என நினைப்பதோடு நின்றுவிடுவதில்லை. இலக்கியத்திற்கான அங்கீகாரங்களை - தனியார், அரசு, பொதுத்துறை என அனைத்து அமைப்புகளும் தரும் அங்கீகரிப்பையும் விருதுகளையும் - தாங்களே பெற வேண்டுமென நினைப்பவர்கள். அப்படி நினைக்கும்போது அவற்றை நிறைவேற்ற தனக்கெனவே ஒரு அமைப்பை உருவாக்கி விடுவார்கள். இத்தகைய அமைப்புகள் அவரையே பாராட்டும்; கொண்டாடும். அதே நேரத்தில் ஒரேயொரு படைப்பாளியை மட்டும் மட்டுமே முக்கியமானவராகக் காட்டுகின்றன என்ற குற்றச்சாட்டிலிருந்து விலகிக் காட்டுவதற்காக, அவரால் அங்கீகரிக்கப்பெறும் படைப்பாளிகளாகச் சிலரை ஆண்டுதோறும் அடையாளம் காட்டவும் செய்யும். அதற்காக விருதுகள் வழங்கும். நிகழ்காலத்தின் முக்கிய போக்குகளாக அது நினைப்பதை அடையாளப்படுத்திக் கருத்தரங்குகள், மாநாடுகள், பயணங்கள் ஏற்பாடு செய்யும். கவிப்பேரரசு வைரமுத்து பெயரால் விருதுகள் பெற்றுக் கொண்டவர்கள், அவரால் ஏற்பாடு செய்யப்பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களில் பயணங்கள் பற்றியெல்லாம் இப்போது பேசுவது அவதூறு போலத் தோன்றும். அதனைத் தவிர்த்து விடலாம். இங்கே நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு நடத்தப்பெற்ற பாராட்டு விழா நிகழ்வு பற்றி மட்டுமே பேசலாம்.
 
தருண் விஜய் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பெற்றவர். சம்ஸ்க்ருத மொழியை இந்தியாவின் பண்பாட்டு மொழியாகவும், ஹிந்தியை, இந்தியாவின் தேசிய மொழியாகவும் முன் நிறுத்தி அரசியல் செய்து அதிகாரத்துக்கு வந்துள்ள கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் அப்போக்கிலிருந்து சற்றும் விலகாமல் இந்தியாவின் இன்னொரு மொழியான தமிழை- ஹிந்திக்கெதிராக நிறுத்தப்பட்ட தமிழையும் கவனிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் அனைவரும் அறிந்ததே. ஆகச் சிறந்த அறநூலான திருக்குறள் தமிழில் எழுதப்பெற்றுள்ளது. எனவே அதை எழுதிய திருவள்ளுவர் பிறந்த நாளைத் தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிறார். அத்தோடு “ஆயிரம் உண்டிங்கு சாதியெனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி” எனத் தேசியக் கருத்தியலுக்கு முன்னுரிமை கொடுத்த கவி பாரதி இயங்கிய மொழி தமிழ் எனச் சொல்கிறார். ஆகவே அவர் வசித்த வாரணாசி வீடு அவரது நினைவிடமாக ஆக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறார்.

 தமிழ்ப் பக்தி மரபு, இந்திய வைதீக மரபுக்கு வலுசேர்த்த மரபு என்பதும் அவரது நம்பிக்கை. இந்தக் கருத்தியல் முன்னெடுப்புகளின் தொடர்ச்சியாகத் தான் தஞ்சையில் ஒரு காலகட்டத்தில் ஏகச் சக்கரவர்த்திகளாக விளங்கிய சோழ அரசர்கள் ராஜராஜனையும் அவனது மகன் ராஜேந்திர சோழனையும் கொண்டாட வேண்டும் எனக் கோரப்படுகிறது. இவர்கள் காலத்தில் தான் தமிழ்நாட்டுப் பக்தி மரபு வைதீகத்தோடு இணக்கம் கண்டது என்பது வரலாறு. ஆக தருண் விஜய் தனது கட்சியின் கருத்தியலில் தெளிவாகவே இருக்கிறார்.
இந்தியா என்ற அகண்ட தேசத்தை உருவாக்கியது ஆங்கிலே ஆட்சி அல்ல; அதற்கு முன்பே இந்தத் தேசம் அகண்ட பாரத தேசமாகவே இருந்தது. ஆட்சியாளர்கள் பல நூறுபேர் கூட இருந்திருக்கலாம். ஆனால் சமயம், தத்துவம், கலை, சடங்குகள் எனப் பல நிலைகளில் - பொதுத்தன்மை நிலவியது. அப்பொதுத்தன்மை இமயம் முதல் குமரிவரை இருந்த பரப்பில் ஊடும் பாவுமாகப் பரவி நின்றது. எனவே அப்பண்பாட்டுப் பாரதத்தை மீட்டெடுக்க வேண்டும். அந்நோக்கத்தையே இந்துத்துவம் வலியுறுத்துகிறது எனப் பேசும் பண்பாட்டு அமைப்புகளின் அரசியல் முகமாக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்; பாராளுமன்ற உறுப்பினர் திரு தருண் விஜய் என்பதை அவர் மறக்கவில்லை. இப்போதைய அரசின் நோக்கம்- கட்சியின் செயல் திட்டங்கள் போன்றவற்றை அவர் மறந்துவிடக் கூடியவர் அல்ல. காரணம் ராஷ்டிரிய சுயம் சேவக்கின் அதிகாரபூர்வம இதழான பாஞ்சஜன்யத்தின் ஆசிரியராக இருந்தவர்; அதன் சிந்தனைப்பள்ளியின் உறுப்பினர். அவர் கருத்தியல் பிசகிச் செயல்படுவார் என நினைக்க வேண்டியதில்லை.
 
இதற்குப் பதிலாகத் தருண் விஜய் தமிழுக்குத் தேசிய அங்கீகாரம் பெற்றுத் தரும் ஒருவர் என நம்பிப் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த கவி வைரமுத்துவுக்கும் அவரோடு சேர்ந்து அவரைப் பாராட்டிப் பேசிய தமிழ்ப் பேரறிஞர்களுக்கும் இப்படியொரு கருத்தியல் இருக்கிறதா? இருந்தால் அக்கருத்தியல் தருண் விஜய்யின் கருத்தியலுடன் உடன்பாடு கொண்ட கருத்தியல் தானா என்பதை இங்கே நினைத்துப் பார்க்கலாம்.
இவ்விழாவில் பாராட்டிப் பேசியவர்களில் நான்கு பேர் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக இருந்தவர்கள். திரு. அவ்வை நடராசன், திரு க.ப. அறவாணன், திரு ம.இராசேந்திரன், ஆகிய மூன்றுபேரும் தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள். இருவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாகத் திராவிட இயக்க அரசுகளால் அமர்த்தப்பெற்றவர்கள். அவர்கள் அப்பதவிகளில் இருந்து தமிழுக்கான மாநாடுகளை நடத்தியவர்கள். தமிழ்ப் பேராசிரியரான திரு க. ப. அறவாணன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.பேரா. பெ. சுந்தரம்பிள்ளை திராவிடக் கருத்தியல் உருவாக்கத்தின் முன்னோடிச் சிந்தனையாளர். கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக வைக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதித் தந்தவர். கோவை மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருந்த திரு. க. திருவாசகமும் தமிழறிஞர் போட்டியில் இருப்பவர் தான். மூத்த திராவிட இயக்கத் தலைவரான திரு மு. கருணாநிதியின் படைப்புகளைத் தனது பதவிக் காலத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்தவர்.
 
இவர்கள் நால்வரும் திராவிட கருத்தியல் என ஒன்று உண்டு; அது சம்ஸ்கிருதக் கருத்தியலிலிருந்து வேறுபட்டது என நம்பிய திராவிட இயக்கங்களின் அரசியலோடும், அரசுகளோடும் தங்களை இணைத்துக் கொண்டதன் வழியாகப் பதவிகளையும் பரிசுகளையும் பெற்றவர்கள்; இப்போதும் பெற்றுக் கொண்டிருப்பவர்கள். இப்போதும் தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாட்டுக் கருத்தாக்கம், தமிழுக்கென ஓர் அமைப்பு என நினைக்கின்றபோது முன் நிபந்தனையாக அரசியலாளர்களுக்கு நினைவுக்கு வரும் பெயர்கள். அப்படி நினைவுக்கு வரவேண்டுமெனத் தங்களைக் காட்டிக் கொண்டே இருப்பவர்கள். அந்த வகையில் தான் மைய அரசின் ஒரு குரலை அங்கீகரிக்க வேண்டும்; அதனோடு தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்த வைரமுத்துவுக்கும் உடனடியாக நினைவில் வந்திருக்கிறார்கள். அவர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக மேடையேற்றிப் பாராட்டும்படி செய்திருக்கிறார். (இவர்களோடு மேடையேறிய மரபின் மைந்தன் முத்தையா என்பவரையும், நீதிபதியாக இருக்கும் திரு கே.என். பாஷா என்பவரையும் இங்கு பொருட்படுத்திட வேண்டியதில்லை) .
 
தமிழ்க் கருத்தியல் என்பது தொடர்ச்சியான விவாதத்தை உருவாக்கும் தன்மை கொண்ட - ஒற்றைக் கவிதை மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கணியன் பூங்குன்றனின் கருத்தியல் வழி உருவாக்கிக் கொள்ளக் கூடிய கருத்தியல். உலக இலக்கியத்திற்குத் தனது கவிதையியலின் வழி அடித்தளத்தை உருவாக்கித் தந்த அரிஸ்டாடிலின் இலக்கியக் கோட்பாட்டிற்கு இணையான கோட்பாட்டை முன்மொழிந்த தொல்காப்பியர் உருவாக்கித் தந்த கவிதைக் கோட்பாட்டின்படி உருவான செவ்வியல் கவிதைகளின் தொகுதிகளைக் கொண்டது. தண்டியலங்காரம் முன் வைத்த காவ்யமரபுக்கு முன்பே உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலப்பதிகாரம் என்னும் கதை தழுவிய தொடர்நிலைச் செய்யுளையும் அதன் தொடர்ச்சியாக மணிமேகலையையும் கொண்ட மரபு கொண்டது. அகக் கவிதைகளின் தன்னிலையைப் பக்திக்கவிதையாக மாற்றிய தன்னுணர்ச்சிப் பாடல்களின் வழி கடவுளை வழிபட்ட கவிதை மரபு அதற்கு உண்டு. இதையெல்லாம் திராவிட இயக்கக் கருத்தியலாளர்களும் அரசியலாளர்களில் சிலரும் அறிந்தவர்கள் தான். தருண் விஜய்யைப் பாராட்டிப் பேசிய துணைவேந்தர்களுக்கும் கூட இவையெல்லாம் தெரிந்தவை தான். ஆனால் தெரிந்த உண்மைகள் நிறைவேற்றத் தக்க உண்மைகள் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள். அவை அதிகாரத்துக்கு வரப்பயன்படும் கருவிகள் மட்டுமே தவிரப் பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள் என நம்பாதவர்கள்.
 
ஹிந்தி ஒழிக X தமிழ்வாழ்க என எதிர்வு முழக்கங்களை எழுப்பிய திராவிட இயக்க ஆட்சியாளர்கள் தமிழ் அதிகாரமொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மொழி என நம்புவதில்லை. அதற்கு ஆங்கிலம் வேண்டுமென நம்பியவர்கள். தமிழால் முடியும் எனப் பாரதிதாசன் சொன்னதை மனதார நம்பியிருந்தால் அதற்கான வேலைகளைச் செய்திருப்பார்கள். அகராதிகள் உருவாக்கம், கலைக்களஞ்சிய உருவாக்கம், வளமான தமிழ்க் கவிதை மரபை உலகத்திற்கு எடுத்துச் சொல்ல மொழி பெயர்ப்பு நிறுவனங்கள், நிகழ்காலத்தை எழுதும் அனைத்து வகைப்போக்குகளையும் அங்கீகரித்தல் என ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றியிருப்பார்கள். அவர்கள் வசம் அரை நூற்றாண்டுக் காலம் ஆட்சி அதிகாரம் இருந்தும் தமிழ் என்பதை நபர்களாகக் கருதி , அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைத் தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரமாகச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
 
தமிழ் வளர்ச்சி என்பதை ஆட்சியாளர்கள் தான் சிலைகளின் வடிவமாகவும், நிறுவனங்களின் பெயர்களாகவும் பார்த்தார்கள் என்றில்லை. அவர்களால் நியமனம் செய்யப்பெற்ற தமிழறிஞர்களும் அப்படியே தான் நடந்தார்கள். சிலை வைப்பது, பெயர் வைப்பது, துறைகளை ஆரம்பிப்பது என்பதைத் தாண்டித் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தமிழுக்கு ஒன்றும் செய்துவிடவில்லை. எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! என்ற முழக்கம் வெற்று முழக்கமாக மாறி எங்கும் ஆங்கிலம்! எதிலும் ஆங்கிலம்!! என்ற வெறியாக மாறிவிட்டது. இந்தப் பின்னடைவின் பின்னணியில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் அதேயளவு பங்கு நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இருந்த பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், அவற்றில் இயங்கும் தமிழியல் துறைகள், அதில் பணியாற்றும் என் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள் ஆகியோருக்கும் பங்குண்டு.
 
தமிழ் என்பது மொழி என்பதாகக் கற்பிக்காமல், கற்றுக் கொள்ளாமல் அவற்றில் செயல்படும் நபர்களாக அறிந்து கொண்டவர்களே அதிகம். கவிகள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் வரலாறே தமிழ் இலக்கிய வரலாறு இங்கு கற்பிக்கப்படுகிறது. தமிழில் என்னவெல்லாம் எழுதப்பட்டது; அதன் கருத்தியல் பின்புலம் என்ன என்றெல்லாம் கற்பிக்கப்படாமல் நபர்கள், இடங்கள், முறைகள் சார்ந்த தகவல்களாகவே இலக்கியக் கல்வி இருக்கிறது. இதை மாற்றாமல் தமிழில் மாற்றங்கள் சாத்தியமில்லை.
திருவள்ளுவரையும் ஞானசம்பந்தரையும் பாரதியாரையையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நினைவஞ்சலிகளுக்கு ஏற்பாடு செய்யும்போது தமிழ் வளர்ச்சி கண்டுவிட்டதாக நினைத்துக் கொள்ளுதல் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியாது. செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் அவ்வை நடராசனையே தலைவராக ஆக்கிவிட்டால் தமிழ் வளர்ச்சி அடைந்து விட்டது எனக் கருதிக் கொண்டால், அவரிடம் இருந்த தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ன செய்தது என்பதை மறந்தவர்கள் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. திரு க. திருவாசகமோ, திரு க.ப. அறவாணனோ ஞானபீடப் பரிசைத் தீர்மானிக்கும் குழுவில் இடம் பெற்று வைரமுத்துவுக்கு ஞானபீடப் பரிசு வழங்க ஏற்பாடு செய்துவிட்டால் தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என இவர்கள் சொல்வார்கள். மறந்தும் இது உண்மை எனக் கருதிவிட வேண்டாம். 

தமிழ் என்பதும், அதன் இருப்பு என்பதும் , அதன் வளர்ச்சி என்பதும் நபர்களுக்கான அங்கீகாரம் அல்ல. தமிழ் என்பது இந்தியவியலின் இணைகோடொன்றை வரைவது. தமிழ் அங்கீகாரம் பெறுவது என்பது இந்தியாவில் இருந்த வேறுபட்ட அறிவுத்தோற்றவியலை உலகத்திற்குச் சொல்லும் சக்தியோடு ஒரு செவ்வியல் மொழி இருந்தது என எடுத்துச் சொல்வது. தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரம் என்பது தொல்காப்பியரின் கவிதையியலை ஒட்டி ஒரு கவிதைச் செந்நெறி கொண்ட கவிதை மரபும் எழுத்துமரபும் கொண்ட ஒரு செவ்வியல் மொழி இந்தியாவில் வாழும் மொழியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வது. இதனை ஏற்றுச் செயல்படும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்யின் பேச்சுகள் இருந்தால் அவரைத் தமிழர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடலாம். ஆனால் அவர் அப்படிச் சொல்ல மாட்டார். ஏனென்றால் இத்தகைய பண்புகளோடு இந்தியாவில் ஒரு மொழி - ஒரேயொரு மொழி - சம்ஸ்கிருதம் மட்டுமே இருப்பதாக நம்பும் கூட்டத்தின் பிரதிநிதி அவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்