தனித்தன்மையான கல்வி; தனித்துவமான வாழ்க்கை: எதிர்நீச்சலடிக்கும் எதிர்பார்ப்பு.




வார்சாவில் நான் முழுமையான மொழியாசிரியனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதைக் கொஞ்சம் கசப்போடு தான் முதலில் ஏற்றுக் கொண்டேன். கசப்புக்கான முதல் காரணம் முழுமையான மொழி ஆசிரியனாக என்னை எப்போதும் கருதிக் கொண்டதில்லை. அத்துடன் மொழிக்கல்வியில் ஒரே விதமான கற்கை முறையை எல்லா இடத்திலும் பின்பற்ற முடியாது. ஒருவரின் தாய்மொழியைக் கற்பிக்கும் அதே முறையை எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடாது என்பது மொழியாசிரியர்களுக்குத் தெரியும். தாய்மொழியாக அல்லாமல் ஒரு நாட்டின் இன்னொரு மாநிலமொழியைக் கற்பிக்கும் முறையைக் கூட அயல் தேசத்தில் மொழி கற்பிக்கும்போது பின்பற்ற முடியாது. வார்சாவில் தமிழ் கற்பிக்கப்போகும் முன்பு இந்த முறைகளையெல்லாம் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவனாக நான் செல்லவில்லை. 

சமுதாயவியல் அணுகுமுறை என்னும் திறனாய்வு நெறியை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுப் பட்டம் முடித்தபின் 24 ஆண்டுகள் மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம் உண்டு என்றாலும் எப்போதும் என்னை திறனாய்வு மனம் கொண்டவனாகவே கருதி வந்தேன். பாண்டிச்சேரி, நிகழ்கலைப்பள்ளியில் நடிப்பு, ஒளியமைப்பு போன்ற செய்முறை வகுப்புகளையும் நாடகப் பிரதியாக்கம் மற்றும் பகுப்பாய்வு பற்றிய தாள்களைக் கற்பித்தபோதும் என்னைத் திறனாய்வு நிலையில் நிறுத்தியே கற்பித்தேன். அங்கே அந்தப் பார்வை தேவையில்லை என்று உணர்ந்த போதும் அதிலிருந்து விலக முடிந்ததில்லை. 

வார்சா பல்கலைக்கழகத்தில் முதல் ஒரு மாதம் மிகுந்த குற்றவுணர்வில் தத்தளித்தேன் என்றே சொல்ல வேண்டும். எந்த நிலையிலும் என்னை மொழியாசிரியன் என்று உணரும் வாய்ப்பைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளவில்லையே என்பதுதான் அந்த வருத்தத்திற்குக் காரணமாக இருந்ததது. அதனால் தான் அந்தக் கசப்புநிலை. என்றாலும் அங்கிருந்த கற்பித்தல் முறை எனக்கு வாகானதாக இருந்தது. முதலில் தயங்கத்தோடு தொடங்கிய நான் 2 மாதங்களுக்குப் பின் என் போக்கில் என் வகுப்புகளை மாற்றிக் கொண்டேன். பெயர்ச் சொல் அறிமுகம் நடக்கும்போதே எழுத்துகளின் ஒலிவடிவம் மாணவர்களுக்கு அறிமுகமாக வேண்டும். வினைவடிவ அறிமுகத்தின் போது ஒலிவடிவத்திலிருந்து வரிவடிவத்திற்கு நகர வேண்டும் என்பதாக வகுப்பைத் திட்டமிட்டுக் கொண்டு முதலாமாண்டில் பாடம் நடத்தலாம். ஆனால் முதலாமாண்டிலிருந்து மூன்றாமாண்டிற்குப் போய்விட்ட மாணவிகளுக்கும் அதே முறையைப் பின்பற்ற முடியாது. 

மூன்றாமாண்டில் மூன்றுபேர் இருந்தார்கள். மூவருள் ஒருத்தி அடுத்த ஆண்டு திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டு அனுமதி பெற்றுக் கொண்டாள். வேறெங்கோ கிடைக்கும் மொழிபெயர்ப்புச் சான்றிதழ்க் கல்வியை முழுமையாக இருந்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு திரும்பவும் வருவாள் என மற்ற இரண்டு பேரும் சொன்னார்கள். இப்படி வருவதும் போவதும் வியப்பானதில்லை. ஐரோப்பியக் கல்வியில் ஒருவர் தொடர்ச்சியாகப் பாடங்களைக் குறிப்பிட்ட ஆண்டிற்குள் படித்து முடித்துத்தான் ஆகவேண்டும் என்பதெல்லாம் இல்லை. படிக்க வேண்டிய பாட அலகுகள் (Grade points) மட்டும் தான் வரையறை செய்யப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். மூன்று ஆண்டிற்குள் முடிக்காவிட்டால் வகுப்பு (Class) கிடைக்காது என்ற பயம் எல்லாம் இல்லை தேவையான அலகை முடித்தால் பட்டம் கிடைக்கும். 

நிகழிடத்திலிருந்து விரித்தல் எளிய கற்பித்தல் முறைகளுள் ஒன்று. வினைவழி கற்பித்தல் (Functional teaching) என அதைச் சொல்வதும் உண்டு. நாம் அன்றாடம் புழங்கும் இடங்களிலிருந்து பெயர்ச்சொற்களும், வினைச்சொற்களும் நிரல்படுத்தப்பட்டு இயல்பான வாக்கியங்களும் அடைகளோடு கூடிய வாக்கியங்களும் அவற்றின் பொருண்மை நிலையும் விளக்கப்படுதல் அதன் முக்கிய அம்சம். மூன்றாமாண்டு மாணவிகளுக்கு தமிழில் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், அவை இணைந்து உருவாகும் வாக்கியங்களின் எளிய வடிவம் எல்லாம் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தது. அந்த நிலையில் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியன மொழிக் கல்வியினூடாகத் தமிழின் பண்பாட்டுக் கூறுகளை என்பதாகப் பாடத்திட்டத்தில் வழிகாட்டல் இருந்தது. மொழிக்கல்வியினுடாகத் தமிழ் அறிவியக்கம், அதன் வரலாறு, பண்பாடு, இலக்கியம் எனக் கற்பித்தல் எனக்குச் சாத்தியமானதும் விருப்பமானதும் எனச் சொன்னபோது வகுப்பில் இருந்த மாணவிகள் இருவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். பாடத்திட்டத்திலும் கற்பிப்பதிலும் இருக்கும் சுதந்திரம், தனித்தன்மை பேணல் எல்லா நிலையிலும் இருப்பதை எடுத்துக் கூறியதோடு சில கட்டுப்பாடுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் முன் வைக்கவே செய்தனர். சமூக அமைப்புகள், நிறுவனங்கள், மனித உறவுகள் சார்ந்த இந்திய மதிப்பீடுகளோடு பாடங்களுக்கான விடைகளைத் தேடவோ, வருவிக்கவோ முயலக் கூடாது என்பதை நாசுக்காகவே எனக்கு உணர்த்தினர். 

வீடு என்ற பருண்மையான இடத்தைப் பற்றிய பாடத்தை நம் விருப்பம் போல நடத்திவிடலாம். ஆனால் வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களை உள்ளடக்கிய குடும்பம் என்ற அமைப்பை ஓர் இந்தியப் பேராசிரியர் தன் விருப்பம் போல நடத்திவிட முடியாது. இந்தியக் குடும்பங்களின் உறுப்பினர்களும் ஐரோப்பியக் குடும்பங்களின் உறுப்பினர்களும் வேறானவர்கள். மாணவிகள் மாணவர்கள் என யாரிடமும் உங்கள் தந்தை பெயரை நீங்கள் கேட்கலாம். அவர்களும் சொல்வார்கள். ஆனால் இப்போது என்ன வேலை பார்க்கிறார் எனக் கேட்டால் “ எனக்குத் தெரியாது” என்ற பதில் கிடைக்கக் கூடும். இதே மாதிரியான பதிலே அம்மாவைப் பற்றிக் கேட்கும்போதும் கிடைக்கும். 

பல்கலைக்கழகப் படிப்புக்கு வரும் வயதுடைய ஆணும் பெண்ணும் தங்களின் பெற்றோர்களோடு சேர்ந்து வாழும் வீட்டில் - குடும்பத்தில் - தான் இருப்பார்கள் என எதிர்பார்ப்பது விரும்பத்தக்கதல்ல. அத்தகைய பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்விகளை அவர்கள் விரும்புவதும் இல்லை. தாத்தா - பாட்டி பெயர்களைப் பெருமையாகச் சொல்லும் ஒரு மாணவனோ, மாணவியோ தங்கள் தந்தையையும் தாயையும் அவ்வளவு பெருமையாகச் சொல்லி நான் கேட்டதில்லை. சிலர் தந்தையைக் கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். சிலர் தாயைக் கொண்டாடுகிறவர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களில் ஒருவர் அந்தக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேறொரு குடும்பத்தின் உறுப்பினராக ஆகியிருப்பார். அவருக்கு அந்தக் குடும்பத்திலும் பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களைத் தங்களின் சகோதரர்களாக அல்லது சகோதரிகளாக நினைக்க வேண்டும் என்ற நினைப்பெல்லாம் யாருக்கும் இருப்பதில்லை. 

எந்தப் பெற்றோரும் தன் பிள்ளைகளை உயர்கல்வி வரை நானே செலவழித்துப் படிக்க வைத்து இந்த ஞாலத்தில் அனைவரும் மதிக்கும் மாண்புடையவனாக - பெருமைகொண்டவளாக மாற்றுவேன் என்று கங்கணம் கட்டி வேலை செய்வதில்லை. 18 வயதைத் தாண்டிய ஒவ்வொருத்தியும் ஒவ்வொருவனும் தன்னுடைய எதிர்காலத்துக்கான கல்வியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். அந்தத் தீர்மானத்திற்கேற்ப ஆகும் செலவிற்கு ஏற்ப பகுதி நேர வேலைகளைத் தேடிக் கொள்கிறார்கள். எந்த வேலையையும் நிரந்தர வேலையாக வைத்துக் கொள்ளாத முதலாளித்துவ அமைப்பில் மணிக்கணக்கில் தற்காலிக வேலைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. எந்த வேலை செய்வதும் இழுக்கு எனக் கருதாத ஆண்களும் பெண்களும் தங்கள் தேவைக்காகப் பலவிதமான வேலைகளைத் தேடித் தேடிச் செய்கிறார்கள். 

வார்சாவின் பெரும்பாலான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், பேரங்காடிகள் திரையரங்குகள் என எல்லா இடங்களிலும் மாணவர்களே பணியாளர்களாக இருக்கக் கண்டேன். என்னிடம் தமிழ்ப் படித்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் கைவசம் இருந்தன. திங்கள் முதல் வெள்ளி வரை பார்க்கும் பகுதி நேர வேலைகள் மட்டுமல்லாமல், சனி, ஞாயிறுகளில் வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்துத் திரும்பும் மாணாக்கர்களும் இருந்தார்கள். ஒரு மாணவன் ஒவ்வொரு வாரமும் பக்கத்து நாடான ஜெர்மனின் தலைநகரத்துக்குப் போய்விட்டு வருவான். போக்குவரத்துச் செலவு போக அந்த வாரச் செலவுக்கான பணம் அந்த இரண்டு நாளில் சம்பளமாகக் கிடைக்கும் என்பான். பல்கலைக்கழகத்திற்குக் காலையில் கிளம்பி வரும் மாணவிகளும் மாணவர்களும் வீடு திரும்ப இரவு குறைந்தது 10 மணி ஆகிவிடும். வகுப்பில் இருக்க வேண்டிய நேரம் 5 மணிநேரம் மட்டுமே. கால அட்டவணைக்கேற்ப வேலை பார்க்கும் இடத்தினைத் தேர்வு செய்து போய்த் திரும்பும் மாணவிகள் என் வகுப்பிலேயே உண்டு. 
18 வயதில் தனித்து வாழ நேரிடும் இளைஞர்களும் யுவதிகளும் தங்களுக்கான இணையொன்றைத் தேடிக் கொள்வதையும் மறைப்பதில்லை. என்னுடைய முகநூல் கணக்கில் இணைந்து எல்லா மாணவிகளும் மாணவர்களும் தங்களுடைய காதலன் - காதலி யார் என்பதைப் பகீரங்கமாகக் குறிப்பிடுவதைத் தவிர்த்ததில்லை. அப்படிக் குறிப்பிடுவது ஒருவிதத்தில் வசதி என்றே நினைக்கின்றார்கள். இவனோடு அல்லது இவளோடு சேர்ந்து வாழ்கிறேன் என்று சொல்லி விடுவதன் மூலம் தங்கள் குடும்பத்தினருக்கும், உடன் பயிலும் மற்றவர்களுக்கும் தன் எதிர்காலத்தை முடிவு செய்து விட்டேன் என்பதைச் சொல்லிவிடுவதாக நம்புகிறார்கள். 

படிக்கிற காலத்தில் தன்னோடு சேர்ந்து வாழும் ஒருவனுடன் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக நம்புவதில்லை. தன் உடலுக்குக் கற்பு என்னும் அணி அல்லது கவசம் அணிந்து கொள்ளும் ஆசை ஒருவருக்கும் இல்லை. அதனால் விருப்பம் போல உடலுறவு கொள்வார்கள் என நினைப்பதும் தவறானது. உடலுறவும் அதன் பின்விளைவுகளும் அறிவியல் பூர்வமாகக் கல்விக்குள் இடம்பெற்றிருப்பதால் சேர்ந்து வாழ்தல் என்பது காமம் சார்ந்த ஒன்றாகக் கருதப்படுவதில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் பல உதாரணங்களை அறிந்து கொண்டேன். 

பல்கலைக்கழகத்தில் தங்கிப் படிக்க விடுதிகள் உண்டே தவிர மாணவியர் விடுதி, மாணவர் விடுதி எனத் தனித் தனியாக இல்லை. ஒரே விடுதிக்குள் மாணவியர்கள் அறையும் மாணவர்கள் அறையும் அடுத்தடுத்து இருக்கும். அதேபோல் பொதுவான குளியலறைகள், கழிப்பறைகளே உண்டு. ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனியாக இருப்பதில்லை. விடுதிகளில் சமையல் கூடங்கள் இருக்கும். சாப்பாட்டு மேசைகள் இருக்கும். உணவு பரிமாறுபவர்களே, சமைப்பவர்களோ இருக்க மாட்டார்கள். சாப்பிட்ட தட்டுகளைக் கழுவும் பணியாளர்களோ கூட இருக்க மாட்டார்கள். நம்மூர் விடுதிகளில் போல மணியடித்தால் மாணாக்கர்கள் வந்து உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுப் போகும் பழக்கம் அங்கு கிடையாது. பணம் கொடுத்தால் பொருட்கள் கிடைக்கும் அங்குள்ள மின் அடுப்புகளில் சூடு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சாப்பிட்ட தட்டுகளைக் குப்பைக் கூடையில் போடுவது அல்லது கழுவி வைப்பது என அனைத்தையும் அவரவரே செய்ய வேண்டும். 

பல்கலைக்கழக மாணவ விடுதியில் இடம் கிடைக்காதவர்கள் தங்குவதற்காகவே நண்பர்களைத் தேடிச் சேர்ந்து வாழ்கிறார்களோ என்று கூடத் தோன்றியதுண்டு. என்னுடைய மாணவி காஸ்யா, அவளோடு சேர்ந்து வாழும் காதலனை ஒரு நாற்சந்தியில் ஒரு நாள் அறிமுகப்படுத்தினாள். நாங்கள் இருவரும் இந்திய பானங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே பல்வேறு நாடுகளின் தேநீர்கள் கிடைக்கும் கடையொன்றுக்குப் போனபோது அவன் கடைக்கு அருகே இருந்தான். எனக்கு விருப்பமான தேநீர் எதுவென கேட்டபோது இங்கிலாந்தின் லிப்டன் தேநீர் எனச் சொன்னேன். அவன் தனக்கு இலங்கையின் நுவரெலியாவின் தேநீரை விரும்புவதாகச் சொன்னான். அவனது காதலி - என் மாணவியோ இந்தியாவின் டார்ஜிலிங் தேநீர் என்றாள். மூன்று பேரும் மூன்றுவிதமான தேநீரை அருந்தினோம். ஆசிரியருக்காகவோ, காதலுக்காகவோ தனது ருசி, தனது ரசனை, தனது விருப்பம் என ஒன்றையும் விட்டுவிடத் தயாரில்லாத மனம் இதில் செயல்பட்டதைப் பார்த்தேன். மூன்றுபேரின் தேநீர் வேறாக இருந்தாலும் பணம் கொடுப்பது ஒருவராக இருக்கலாம் என்று சொன்னபடி நான் பணம் எடுத்தபோது அவள் மறுத்தாள்; அவனும் மறுத்தான். அவரவர் பானத்துக்கு அவரவர் கொடுப்பதே சரியானது என வாதிட்டனர். இல்லை நான் அழைத்ததால் தான் காஸ்யா வந்தாள். நான் தான் என் மாணவிக்குத் தருவேன் என்றேன். உங்கள் மாணவிக்கு நீங்கள் தரலாம்; எனக்கு ஏன் தர வேண்டும் என்று கேட்டபோது என்னிடம் பதில் இல்லை. 


அவர்கள் இருவரும் தங்கி இருந்தது அவனது தாத்தாவின் வீடு. அந்த வீட்டிற்கு அவன் தர வேண்டிய வாடகை அதிகம் என்பதால் இவளையும் சேர்த்துக் கொண்டு இரண்டுபேரும் சேர்ந்து அந்த வாடகையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். வார இறுதி நாட்கள் தவிர அவர்கள் சந்தித்துக் கொள்வதே அபூர்வம் என்றான் அவன். இவள் பல்கலைக்கழகம் முடிந்து பகுதி நேர வேலைக்குப் போய்விட்டு வீட்டுக்குப் போகும்போது அவன் வேலைக்குப் போயிருப்பானாம். அவன் வீட்டிற்கு வரும்போது இவள் பல்கலைக்கழகம் வந்து விடுவாளாம். ஒரு முத்தத்தைப் பரிமாறிக் கொள்ள வேண்டுமென்றால் இப்படி எங்காவது திட்டமிட்டுக் கொண்டு சந்தித்தால் முடியும் என்று சொல்லிவிட்டு என் முன்னேயே முத்தத்தைப் பரிமாறிக் கொண்டு பிரிந்தார்கள். வாரக்கடைசியில் சிறப்பு விருந்துகளை ஏற்பாடு செய்து நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடும் களியாட்டங்களின் செலவுகளைக் கூட ஒவ்வொருமே பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காதலிப்பதும், சேர்ந்து வாழ்தலும் அங்கே ஒருவிதத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவை உடல்பசி போக்கும் காமம் சார்ந்த தேவையை முதன்மையாகக் கொண்டதல்ல என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதே நேரத்தில் காமம் சார்ந்த இச்சைகளே இடம் பெறுவதில்லை என்பதும் உண்மை அல்ல. காமமும் முத்தங்களும் தேவையெனில் பரிமாறிக் கொள்ளப்படும் புரிதல் சார்ந்த வினையாக இருக்கிறது. 



தாங்களே திட்டமிட்டுச் சேர்ந்து வாழ்தல் போலவே பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயத்துக்குக் கொண்டு சேர்ந்து வாழ்வும் இளைஞர்களின் பருவம் ஒன்று உண்டு. ஓராண்டு, ஈராண்டு காலம் கூட நிச்சயத்துக்குப் பின்னான வாழ்க்கை தொடர்கிறது. அப்படியான நிச்சயங்கள் அதிகமும் திருமணத்திலேயே முடிகின்றன. சில நேரங்களில் திருமணத்தை அடையாமல் பிரிந்துவிடும் நிலையும் உண்டு. 


“ யார்” என்ற வினா அடியிலிருந்து உருவாகும் யாருடன், யாரோடு, யாருக்காக, யாரெல்லாம் என்ற வினாச் சொற்களைப் பயன்படுத்தி உருவான கேள்விகள் எல்லாம் காதலின் - காதலர்களின் நினைவு சார்ந்த கேள்விகளாக இருந்தன என்பது இப்போதும் நினைவில் இருக்கின்றன. அந்தக் காதலனோடு தான் கல்யாணமா? என ஒருத்தி கேள்வி கேட்க ‘ இன்னும் அந்த முடிவை எடுக்கவில்லை’ என்று இன்னொரு மாணவி சொன்ன பதிலும் நினைவில் வந்து போகின்றன. 


ஆம் ஐரோப்பிய இளைஞர்களின் உலகம் தனித்துவமான கல்வியால், தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டு தங்கள் கால்களில் தாங்களே நிற்கும் சக்தியைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறமையோடு வளர்கிறார்கள். 

கருத்துகள்

vjpremalaha இவ்வாறு கூறியுள்ளார்…
நம் கலாச்சாரம் வார்சாவின் கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. விருப்பங்களிலிருந்து வாழ்க்கைமுறைவரை. ஆனால் ஒரு விசயத்தில் ஒன்றுபடுகிறார்கள். ஐரோப்பிய இளைஞரர்கள் மட்டுமல்ல. எங்கள் கல்லூரி மாணவர்கள் கூட தங்கள் கால்களில் நிற்கிறார்கள். சவால்களை எதிர்கொள்ளும் திறமையோடு வளர்கிறார்கள். வேலைக்குச் சென்று சம்பாதித்து்ககொண்டே படிக்கும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் ஏராளம். கல்வி முறையில் உள்ள சுதந்திரம் (எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். மூன்று ஆண்டிற்குள் முடிக்காவிட்டால் வகுப்பு (Class) கிடைக்காது என்ற பயம் எல்லாம் இல்லை தேவையான அலகை முடித்தால் பட்டம் கிடைக்கும்.)நம்மிடம் வந்தால் பல ஏழை மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்