September 04, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : நவீனத்துவ சினிமாவின் தமிழ் முகம்இரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. படம் பார்க்கலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டு அரங்கிற்குக் கிளம்பியபோது மனதில் இருந்த படங்கள் இவையல்ல. நினைத்துப் போன படங்களைப் பார்க்க முடியாமல் திசைமாறிப் பார்த்த இரண்டு படங்களுமே பிடித்த சினிமாக்களின் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டது தற்செயலின் அடுத்த கட்டம்.  திரைக்கு வந்த முதல் நாளில் இரண்டையும் பார்க்க நேர்ந்துவிட்டதையும்கூடத்  தற்செயல் விளைவின் பகுதியாகவே சேர்த்துக் கொள்ளலாம்.(முதல் படம் கார்த்திக் சுப்பராஜின் ஜிகிர்தண்டா ; சென்னை நகரத்தின் பல் அரங்கு வளாகம் ஒன்றில். இரண்டாவது  ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம்; திருநெல்வேலியில் அரைநூற்றாண்டு கடந்த அரங்கம் ஒன்றில்) சினிமாவைப் பற்றிய சினிமா அல்லது சினிமாவுக்குள் இன்னொரு சினிமா எனத் திரையில் விரிவது தற்செயலின் மூன்றாவது கட்டம்.  அப்படிச் சொல்வதைக் கார்த்திக் சுப்புராஜா ஏற்பாரா? தெரியவில்லை. ஆனால் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அப்படித்தான் சொல்ல வேண்டும்; அப்படித்தான் பார்க்க வேண்டும் என்றே விரும்பியுள்ளார். ஜிகிர்தண்டா பற்றிய விமரிசனத்தை   ‘சினிமாவைப் பற்றிய சினிமா’  என்ற சொல்லாடல் கொண்டு விவரிக்கலாம்.  ஆனால் பார்த்திபனின் படத்தை இன்னும்  கொஞ்சம் தரம் உயர்த்திய சொல்லாடல் கொண்டு விமரிசிப்பது பொருத்தமானது. இவ்விரண்டின் வரவையும் முக்கியமான ஒரு காரணத்திற்காக வரவேற்க வேண்டும். தமிழுக்கு நவீனத்துவ சினிமாவின் முகத்தைக் காட்டிவிட வேண்டும் என்று நினைத்ததற்காக.  பாராட்டும்போது அளவு வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைத்தால் ஜிகிர்தண்டாவை இயக்கிய கார்த்திக் சுப்புராஜுவிடக் கதை திரைக்கதை வசனம் இயக்கம் தந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபனே அதிகம் பாராட்டப்பட வேண்டியவர்.  


ஜில்ஜில் ஜிகிர்தண்டா என்னும் சினிமாவைப் பற்றிய சினிமா.

குறும்படப் போட்டியில் பங்கேற்று பெரிய இயக்குநராக நினைக்கும் ஒருவன் சந்திக்கக் கூடிய தடைகள் எவை? அவற்றை  எதிர்கொள்ள நினைத்து அவன் மேற்கொண்ட திசையற்ற பயணத்தில் தனது புத்திசாலித்தனத்தால் எப்படி வெற்றி பெற்றான் என்பதுதான் ஜிகிர்தண்டாவின் கதைக்கோடு(Storyline). இந்தக் கதைக் கோட்டை மேலும் கீழும் வளைத்தும் சுழித்தும் நீட்டுகிறபோது நிகழ்காலத் தமிழ்ச் சினிமாவை இயக்கும் சக்திகளான  ஊடக வலைப்பின்னல்,  கலை ஈடுபாடில்லாத வணிகர்கள், நகர வாழ்க்கைக்குள் கண்ணுக்குப் புலப்படாமலும், வெளிப்பட்டும் அலைந்து கொண்டிருக்கும் தாதாக்கள், கூலிப்படைகள், அவர்களின் அரசியல் தொடர்புகள் என அனைத்தையும் விமரிசிக்கும் வாய்ப்பைத் தவற விடாமல் செய்துள்ளார் இயக்குநர். கடந்த பத்தாண்டு காலத்தில் அறியப்பெற்ற நிகழ்வுகளையும் மனிதர்களையும் நினைவூட்டும் காட்சிகளை- குறிப்பாக மதுரை என்னும் பெருநகரத்தில் வளர்த்தெடுக்கப்பெற்ற வன்முறையின் ஞாபகங்களை - வன்மையாகப் பார்வையாளர்களுக்கு நினைவில் வரும்படி உருவாக்கியுள்ளார். அதெல்லாம்கூட இயக்குநரின் புதுமை அல்ல. ஒற்றைக் கதைக்கோட்டையே படமாக்கிப் பழகிப் போன தமிழ்ச் சினிமாவிற்குள் ஒரு கதைக் கோட்டிலிருந்து இன்னொரு கதைக்கோட்டை உருவாக்கி இரண்டையும் இணைத்ததில் தான் புதுமயை வெளிப்படுகிறது.

தாதாக்கள், கூலிப்படைகள், அரசியல் தொடர்பு, எதிர்க்க நினைப்பவகளின் கையாலாகாத்தனம் என்ற விமரிசனத்தொனியிலிருந்து, இன்னொரு கதைக்கோட்டிற்குள் நுழையும்போது வயிறார சாப்பிட்டு முடித்தவர்கள்  ஜிகிர்தண்டாவை வாங்கி அருந்தும் உணர்ச்சிக்குள் நுழைய நேரிடும். மதுரைக்காரர்களுக்கு அது அனுபவம்.  மதுரையோடு தொடர்புடைய அந்தப் பானத்தின் பெயரே மதுரை என்னும் வெளியின் கதையாக ஆக்கி விடுகிறது.

நிஜமே கலையாக முடியுமா? நிஜத்தின் சாயல் கலையாக முடியுமா? என்ற கலை சார்ந்த விவாதத்தை நோக்கி நகரும்போது படம் பார்வையாளர்களைப் புதிய எண்ணங்களுக்குள் நுழைக்கிறது. தாதாவான அசால்ட் குமாரே நடிகராக ஆகிவிடும் விருப்பத்தை வெளிப்படுத்துவதும், உயிருக்குப் பயந்தவனாக அதனை ஏற்றுக் கொள்வதாகப் பாவனை செய்வதுமாகக் காட்சிகள் நகர்கின்றன. தனது புத்திசாலித்தனமான திரைக்கதையைச் சொல்லாமல் பொய்யான கதைக்கான ஒத்திகைகளையும் பயிற்சிகளையுமே படமாக்கிக் கொள்வதன் மூலம் அவனுக்குள் இருப்பது வீரம் அல்ல; கோழைத்தனம் என உணர்த்துகிறான் இயக்குநர். படம் புதிய திருப்பத்திற்குள் நுழைகிறது.  நடிப்புப் பயிற்சிகள் என்ற பெயரில் அவனைத் தன் வசப்படுத்தும் காட்சிகள் அதற்குத் துணையாக இருக்கின்றன. கெட்டவன் திருந்திவிடும் கதை முடிவு, உதவி செய்தவளைக் காதலியாக்கிக் கதையை வளர்ப்பது போன்ற வழக்கமான காட்சிகள் எல்லாம் சுப்புராஜ் சறுக்கிய முக்கியமான இடங்கள். தொடக்கத்தையும் முடிவையும் இணைப்பதில் கூட பெரிய சறுக்கலோடுதான் வெளிப்பட்டுள்ளார். தீர்க்கமான கலைக்கோட்பாடும், சினிமா அறிவும் கொண்ட புத்திஜீவியான ஒருவரால் நிராகரிக்கப்பெற்ற குறும்பட இயக்குநர், சினிமாபற்றித் தெரியாத தயாரிப்பாளரின் பிடிவாதத்தை நிறைவேற்றத் தொடங்கி கலையின் நுட்பங்கள் தெரிந்த இயக்குநராக மாறினான் எனக் காட்டுவது ஏற்கக் கூடிய ஒன்றல்ல.  இவ்வளவு சறுக்கல்கள் இருந்தாலும் ஜிகிர்தண்டாவை, சினிமாவைப் பற்றிய சினிமா என்று வகைப்பாட்டில் வைத்து பேசத்தான் வேண்டும்.

தமிழ் வாழ்வின் பண்பாடு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தையும் தீர்மானிக்கும்  பெருநிகழ்வாக இருக்கிறது சினிமா.ஆனால் அதனைத் தயாரித்து  உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் சக்திகளோ சினிமாவுக்கு முற்றிலும் தொடர்பில்லாதவர்கள்; சினிமாவைப் புரிந்து கொள்ளும் திறனற்றவர்கள் என நினைக்கும் ஜிகிர்தண்டா படத்தின் இயக்குநர், அதனைச் சொல்வதற்கு முயலும் படம் தான் இது என்று எப்போதும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லிக்கொள்ள விரும்பாதவரா? அல்லது சொல்லிக் கொள்ள விரும்பாதவர் போல் காட்டிக் கொண்டு வியாபாரம் செய்து விட வேண்டும் என்று நினைப்பவரா? என்ற ஐயம் கூட எனக்கு இருக்கிறது. ஜிகிர்தண்டாவின் ஆரம்பக் கட்ட விளம்பரங்கள் எல்லாம் அந்தப் படத்தை “கும்பல் மனத்தின் இசைக்கலவை” (Musical gangstar) என்று சொல்லியே பார்வையாளக் கூட்டத்தை இழுக்கப் கவரப் பார்த்தது. வெகுமக்கள் திரளைத் திரையரங்கிற்கு வரவைக்க இப்படியான அழைப்புகளே பயன்படும் என இயக்குநர் கருதியிருப்பார் என்றே நினைக்கிறேன். புதுவகையில் கதை சொல்லியிருக்கிறேன் என்றோ, சினிமாவைப் பற்றிய சினிமா என்றோ எதுவும் சொல்லாமல் ரகசியம் காத்ததின் காரணங்கள் படத்தை நோக்கி வெகுமக்கள் திரளை ஈர்க்க வேண்டும் என்பதாகவே இருக்க முடியும். அப்படியான பொய்க்காரணத்தைச் சொல்லிப் பார்வையாளர்களை ஈர்க்க நினைப்பது நவீனத்துவத்(Modernity)தை உள்வாங்கிய  கலைஞனின் நிலைபாடாக இருக்க முடியாது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்னும் மெடா சினிமா


ராதாகிருஷ்ணன் பார்த்திபனின்  “கதை திரைக்கதை வசனம் இயக்கம் ”  சினிமாவைப் பற்றிய சினிமா என்றோ, சினிமாவுக்குள் சினிமா என்றோ பேசி முடித்துவிடக் கூடாத ஒரு படம். அதையும் தாண்டி ஒரு புதுவகையினமாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் சினிமா எனச் சொல்ல ஆசைப்படுகிறேன். நீண்ட நெடிய தமிழ்ச் சினிமாவின் வரலாற்றில் புத்தம் புதிதாக வந்துள்ள வகையினம் (genre) இது.   இந்த புதுவகையை - வகையினத்தை -மெட்டா சினிமா (Meta Cinema) வகையினம் எனத் திரைக்கோட்பாளர் விளக்கிச் சொல்வர். மெட்டா (Meta) என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில்  ‘நின்று தொலைதல்’  எனச் சொல்லலாம்.  

நின்று தொலைவது என்பதை “எனக்கு முன்னால் நிற்கும் கடவுள் அல்லது காதலியின் ரூபம் அங்கேயே காணாமல் போய்விடுவது” போல என்று நினைக்கலாமா? அப்படியும் நினைத்துப் புரிந்து கொள்ளலாம். அதைவிடவும், “உங்களுக்குள் இருக்கும் காதலின் ஈர்ப்பு அல்லது கடவுள் உங்களுக்குள்ளேயே தொலைந்து போக, அவளை/ அவனை அல்லது அந்தக் கடவுளைத் தேடித் தேடி அலைகிறோமே ” அதுதான் எனப் புரிந்து கொள்ளுதல் இன்னும் மேலானது.  

தன்னையே நினைத்துக் கொண்டு ‘தான்’ காணாமல் போக வேண்டும் என்று நினைப்பதும், அதையே கலையின் பகுதியாக மாற்றி எழுதிப் பார்ப்பதும்  பெரும்பாலும் கவிதையின் - கவிகளின்- வேலையாக இருக்கிறது. நாடகக் கலையில்  -குறிப்பாக நவீன நாடகம் என்ற பிரக்ஞை உருவான பின்பான அரங்கச் செயல்பாடுகளில் இந்தத் தன்மை அதிகம் வெளிப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சினிமா உலகம் அவ்வப்போது இந்த நின்று தொலையும் மனநிலையைத் தேடியிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சினிமாவில் அந்த வெளிப்பாடு மிகக் குறைவு; இல்லாமலே இருந்தது.  பார்த்திபன் இந்தப் படத்தில் அதனைக் கண்டடைந்திருக்கிறார்.

 “கதையே இல்லாமல் ஒரு திரைப்படம்” எனப் பார்த்திபனும் ஒரு பொய்யைச் சொல்லியே பார்வையாளர்களைத் திரையரங்கிற்கு இழுக்க முயற்சி            செய்துள்ளார். உள்ளே வந்த பார்வையாளர்களிடம் ஒரு கதைக்குப் பதிலாகப் பல கதைகளைச் சொல்கிறார். ‘சொல்கிறார்’ என்று சொல்வது கூடச் சரியில்லை. ‘சொல்லப்படுகிறது’ எனக் கூறுவதே சரியாக இருக்கும். சொல்லப்படும் கதையே நவீனத்துவத்தை உள்வாங்கிய கதையாக இருக்கக்கூடியது.

“சினிமாவுக்குக் கதை செய்வதைப் பற்றிய கதை” பார்த்திபனால் சொல்லப்படும் கதை. அந்தக் கதையைச் சொல்லும்போது கதை செய்யும் குழுவாக இருக்கு உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், இணை இயக்குநராகச் செயல்படப் போகும் மூத்தவரின் கதை என்பதோடு இயக்குநரின் கதையும் பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது. அவர்களுக்குள் இருக்கும் படிநிலை வரிசைக்கேற்ப அவர்களின் கதைகளின் அளவும் கூடுதல் குறைவாக இருக்கிறது.  வில்லத்தனமான உதவி இயக்குநரின் கதையும் கூட இருக்கிறது. அவர்களுக்குத் தொடர்பில்லாத தற்கொலைக்காகக் காவல் நிலையம் போக நேரிடும்போது அங்கே ஒட்டப்பட்டிருக்கும் குற்றவாளிகளின் பட்டியலில் இருப்பவனும்  கூட இவர்களோடு உதவி இயக்குநராக இருந்தான் எனக் கதை சொல்லப்படுகிறது.

எல்லாருடைய  கதைகளும் சொல்லப்பட்டாலும் இயக்குநர் தமிழின் வாழ்க்கைக் கதைதான் படமாக ஆக்கப்படும் கதையாக நீள்கிறது.  ஆக்கப்படும் கதையும் இயக்குநர் தமிழின் வாழ்க்கைக் கதையின் முழுமை எனச்  சொல்லிவிடவில்லை. பாதிதான் நடந்த கதை; மீதிப்பாதி நடப்பதற்குச் சாத்தியமான கதை. உண்மை பாதி; புனைவு பாதி. உண்மையின் மீது கட்டப்படும் புனைவே சினிமாவுக்கான கதையாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் நவீனத்துவம் தன் இருப்பை உறுதி செய்துள்ளது. 

தனக்குப் பிடித்துப் போனவன் தன்னைவிடச் சினிமாவை அதிகம் காதலிப்பவன் எனத் தெரிந்த பின்னும் விடாப்பிடியாகக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு வாங்கும்  சம்பளத்தில் தன் கணவனைக் கலைஞனாக ஆக்கிவிடத் தயாரானவள் மட்டுமல்ல அவனது மனைவி. தன் அந்தரங்கத்தைக் கூட விட்டுக் கொடுத்துக் காதலை - வளர்த்துக் கொண்டே இருப்பவள். அவளுக்கு எதிரான இன்னொரு பாத்திரம் எதிர் வீட்டிற்கு வருகிறது. அவளுக்கும் காதலும் அதன் தொடர்ச்சியான காமமும் தான் வாழ்க்கை.  கல்யாணம் ஆகாதவன் என நினைத்துக் காதல் கடிதம் கொடுத்தபின் உண்மை தெரிந்தாலும் மோகத்தோடு காதலிப்பவள். இந்த முரண் காலம் காலமாக வாழ்க்கையை சுவாரசியமாக்கும் ஒன்று.  அதிலும் ஒருத்திக்கு ஒருவன் என்று விடாப்பிடியாக மூடத்தனத்தோடு நம்பிக் கொண்டிருக்கும் இந்திய/ தமிழ்ச் சமூகத்தில் இரண்டு பெண் - ஒரு ஆண் என்ற முக்கோணக்கதை புதிய ஒன்றல்ல. 

 நடக்க வேண்டியதை எடுப்பது சினிமாவா? நடக்கும் சாத்தியங்களை எடுப்பது சினிமாவா? என்ற விவாதத்தைக் கிளப்பி மரபின் பெயரால், பண்பாட்டில் பெயரால்,  நம்பிக்கைகளின் பெயரால் நடக்க வேண்டியதை - தாலி கட்டியவனோடு சேர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டும் எனப் பெண்களுக்கும் எல்லா ரசனையையும் விட்டுக் கொடுத்துச் சுற்றம் சூழ எடுத்த திருமணம் என்னும் பந்தத்தை முறித்துவிடக் கூடாது என ஆண்களுக்கும் போதனைகளை அள்ளிக் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. (ஒருமுறை உன் உடலைக் கீறித் துவம்சம் செய்தவனுக்குத் தான் தொடர்ந்து உடலைக் கொடுத்தாக ஆக வேண்டும் என்று கூடத் தமிழ்ச் சினிமா பெண்களை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது).


அப்படியான ஒரு முடிவைச் சொல்வதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது கதை திரைக்கதை வசனம் இயக்கம். அதைவிட முடிவைப் பார்வையாளனிடம் விட்டுவிட வேண்டும்; அதுவே சினிமா என முன்மொழிந்துள்ளார் இயக்குநர். முன்மொழிவது பார்த்திபன் உருவாக்கிய இயக்குநர் தமிழ். அந்த இயக்குநரின் முடிவை ஏற்று விவாதத்தைத் தொடரச் செய்கிறார் இயக்குநர் பார்த்திபன். கொஞ்சம் பின்னோக்கிப் போனால் படத்திற்குள் இருக்கும் இயக்குநர் தமிழின் சொந்தக் கதை, இயக்குநர் பார்த்திபனின் சொந்தக் கதையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பு முழுமையான உண்மை அல்ல. 50 க்கு 50. நடந்தது பாதி நடக்கக் கூடியது பாதி. நிகழ்ந்தது பாதி; நிகழும் சாத்தியங்கள் மீதி.

கதை, அதைத் திரைக்கதையாக ஆக்கும் முறை ஆகியவற்றில் விவாதம் வேண்டும். அந்த விவாதம் தனிமனித  வாழ்க்கையின் மீதான விமரிசனம் போல வெளிப்பட்டு, பெரும்பான்மை மனிதர்களின் வாழ்க்கைக்குள் நுழையும் விதமாக அமைய வேண்டும் என்ற கலைக்கோட்பாட்டை ஏற்று முன் வைத்துள்ளது படம். அதன் தொடர்ச்சியாகத்  தமிழ்ச் சினிமா இதுவரை உருவாக்கிக் கொண்ட மொழியிலிருந்து அறிவுபூர்வமாக விலகியிருக்கிறது. சுனாமி, போரின் அவலம் போன்ற உண்மை நிகழ்வுகளைப் படமாக்குவதா? தன் உயிரையும் பொருட்படுத்தாது சக மனிதர்களைக் காக்கும் சாகசக் கதாநாயகர்களை மையமாக்கிப் படம் எடுப்பதா? எப்போதும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் நல்திறக் கட்டமைப்பும் திருப்பங்களும் நிறைந்த திரைக்  கதையைத்(well made play )  தேர்வு செய்வதா? சோகங்களையும் விதியையும் நொந்துகொண்டே வாழ்ந்து தொலைப்பவர்களைப் படமாக்கலாமா? எனக் கதைகளைத் தேடுவதாகத் தொடங்கும் படம் சாதாரண வெளிகளை  - தெரு, அடுக்கக வீடு, மொட்டைமாடி, பெருநகரங்களுக்குள் நுழைந்து விட்ட நவீனபாணி கட்டடங்கள் போன்றவற்றை ரசிக்கத்தக்க காட்சிகள் நடக்கும் இடங்களாக ஆக்கிக் காட்டியுள்ளது. அப்படி ஆக்குவதற்கேற்ற நடிகர்கள் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர்.  மையக்கதைக்கான நடிகர்கள் தேர்வில் பெரும்பாலும் புதியவர்களையே தேர்வு செய்துள்ள பார்த்திபன், அவர்களிடம் எவ்வகையான நடிப்பு முறை வேண்டும் என்பதைக் கேட்டுப் பெற்றுள்ளார்.

சினிமாவோடு தொடர்பில்லாத இயக்குநரின் மனைவி, அவருக்குப் போட்டியாக வரப்போகும் காதலி, அவரது குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் யதார்த்தபாணிக் கதாபாத்திரங்களாகத் தோன்றுகின்றனர். அதேபோல் சினிமா என்னும் மோகினியும் வறுமை என்னும் துயரமும் ஒருசேரக் குடிகொண்டிருக்கும் இரண்டு பெண்டாட்டிக்காரரான இணை இயக்குநரிடமும் மட்டும் யதார்த்த நடிப்பை நடிக்கச் செய்துள்ளார். காரணம் அவர்களுக்குத் தெரிந்தது அவைதான். ஆனால்  மற்ற பாத்திரங்கள் தங்களை வடிவமைத்துக் கொள்ள விரும்பும் நவீன மனிதர்கள். அதனால் அவர்களிடம் பாத்திரத்திலிருந்து நடிகராகவும், நடிகரிலிருந்து பாத்திரமாக மாறும்  காவ்யபாணி நடிப்பை ( Epic Acting) கற்றுத் தந்து உருவாக்கியுள்ளார். காவ்யபாணி நடிப்பு என்பது ஜெர்மானிய நாடகக் கோட்பாட்டாளரும் நாடகாசிரியரும் கவியுமான பெர்ட்டோல்ட் பிரக்டின் கலையுலகத்திற்குத் தந்த கொடை. அது பார்வையாளர்களைப் பாத்திரத்தோடு ஒன்றவிடாமல் விலக்கி நிறுத்தும் ஒரு வகை நடிப்பு. அவ்வகை நடிப்பு, பார்வையாளனை தொடர்ந்து தன்னுணர்வு கொண்டவனாக வைத்திருக்கவும், விமரிசன உணர்வைத் தூண்டிக் கொண்டே இருக்கவும் பயன்படும்.

இந்தப் படம் முழுவதும் பெர்ட்டோல்ட் பிரக்டின் காவியபாணி கலைக் கோட்பாடு மிகக் கவனமாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு நவீனத் தமிழ்ச் சினிமாவாக வந்துள்ளது. நடிப்பு முறையில் மட்டுமல்லாமல்,  காட்சிகளின் அளவு, காட்சிகளில் இடம் பெறக்கூடிய நடிகர்கள், பின்னணி இசை, இயக்குநர் பார்த்திபனே தோன்றிப் பேசுவது, காட்சியோடு பொருந்த வேண்டிய இசைக்கு மாறான இசைத்துணுக்குகளை அல்லது திரைப்படப் பாடல்களை இசைக்கச் செய்வது, அறியப்பெற்ற பிரபலங்களைத் தோன்றச் செய்வது எனப் பல நிலைகளில் பிரெக்டிய பாணி இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ளது.  காமிரா வழியாகப் பிடிக்கப்பெற்ற படக்காட்சிகளை அடுக்கிய முறையிலும், உரையாடல்கள் திடீரென்று நேர்ப்பேச்சாக மாற்றப்படுவதன் மூலமும், நாம் எந்தச் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி பார்வை யாளர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும்படி காட்சிகள் அடுக்கப் பட்டிருக்கின்றன. அழகு ததும்பும் அமலா பாலும் ஆர்யாவும் தான் நாயகியாகவும் நாயகனாகவும் ஆகப்போகிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களின் எண்ணம் திசை திருப்பப்பட்டு மறைக்கடிக்கப்படுகிறது. சோகம் கப்பிய கண்களோடு குடிசைக்கு முன்னால் கிடார் வாசித்துக் கொண்டிருந்த தாப்ஸியின் கதை திரும்பவும் வராதா? என்ற ஏக்கம் நிறைவேற்றப்படவில்லை. நல்ல கதையை முடிவு செய்தபின் சேரனைப் பார்த்துப் பேசி தமிழ் பெரிய இயக்குநராகி விடுவார் என்ற எதிர்பார்ப்பும் துண்டிக்கப்படுகிறது.

சேரன், தாப்ஸி, ஆர்யா, அமலாபால் மட்டுமல்ல;  பிரகாஷ்ராஜ், விசால், , விஜய் சேதுபதி, போன்றோர் சின்னச் சின்னக் காட்சிகளில் அவர்களாகவே இடம் பெற்றுள்ளனர். மிகத்தைரியமாக தான் இயங்கும் தமிழ்ச் சினிமாவின் கடந்த காலத்தையும் நிகழ்கால இருப்பையும் விசாரணைக்குள்ளாக் கியிருக்கிறார் பார்த்திபன். பார்வையாளர்களுக்கு வாழ்க்கை சார்ந்த அனுபவத்தையும் ரசனையையும் முன்னோக்கிய பார்வையையும் தர வேண்டிய சினிமாவை அரசியல் தலைவர்களை உருவாக்கும் பட்டறையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையைச் சொல்வது வரை நீட்டியுள்ளார். 


குறியீடுகள், படிமங்கள் வழியாகக் கவிதைக்குள் சாத்தியமாகும் ‘நின்று தொலையும் மனநிலை’, பருண்மையான பிம்பங்களை உருவாக்கி அசையும் சினிமாவில் சாத்தியமாகாது என்றே தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அல்லது அதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமோ தேவையோ இங்கு இல்லை. தமிழ் ரசிகர்களுக்கு நாயகனை மையப்படுத்தி எளிமையான ஒரு கதை, ஆறு பாடல்கள், இடையிடையே சண்டைக்காட்சிகள் என அடுக்கிக் கொடுத்தால் பார்த்து விசில் அடித்துவிட்டுப் போவார்கள் என்று தான் என்று நினைத்தார்கள்; நினைக்கிறார்கள். அந்தப் பொது நினைப்பிலிருந்து விலகி நவீனத்துவமனமும் நவீனத் திரைப்பட மொழியும் கொண்ட தமிழ்ச் சினிமாவும் சாத்தியம் தான் எனக் காட்டியிருக்கிறார் பார்த்திபன். கால் நூற்றாண்டுக் காலமாக தானும் நம்பிக் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையைத் தானே  கொலை செய்திருக்கிறார். புதிய பாதை தொடங்கி வித்தக வேடம் போட்ட ஆர். பார்த்திபன்,  ராதாகிருஷ்ணன் பார்த்திபனாக மாற தன்னுணர்வுடன் கூடிய இந்தக் கொலை அவசியமானது. தன்னைக் கொல்லாமல் தானே இன்னொன்றாக மாற முடியாது என்ற அறிதல் தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் சினிமா. தான் அழியும் அல்லது தொலையும் மனநிலைதான் மெட்டா மனநிலை. தமிழின் முதல் மெட்டா சினிமாவைத் தந்த ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு வணக்கங்கள்.  


ஒரு இயக்குநர் தீர்க்கமான கலைக் கோட்பாட்டோடு வெளிப்படும்போது அவரைக் கொண்டாட வேண்டும். கொண்டாடுவது என்பது பாராட்டுவதாகவும் விருது வழங்குவதாகவும் அமைய வேண்டும் எனத் தமிழின் பொது மனம் நம்புகிறது. அதைவிட முக்கியமான கொண்டாட்டமாக நிகழ்காலத்தில் இருக்கக்கூடியது , அந்தப் படத்தைத் திரையரங்கில் போய்க் கூட்டம் கூட்டமாகப் பார்ப்பது. நண்பர்களோடும், குடும்பத்தோடும் போய்ப் பார்ப்பதும், பேசுவதும் இன்றைய தேவையாக இருக்கிறது. ஏதாவதொரு பண்டிக்கைக்கு எதாவது தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கிடையே வரும்; அப்போது பார்த்துக் கொள்வேன் என நீங்கள் நினைத்தால்  ‘கலையை ரசிக்கத் தெரியாதவர் நீங்கள்’  என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளத் தயாரானவர் ஆகிவிடுவீர்கள். 


ஒரு நல்ல சினிமாவைப் பார்ப்பதென்பது விளம்பரங்களுக்கிடையில் பார்ப்பதாக இருக்க முடியாது. அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்; தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளவும் செய்கிறேன். கலையியல் பள்ளிகள் இப்படத்தைத் திரையிட்டு அதன் அனைத்துக் கூறுகளையும் விளக்கிப் பேச வேண்டும் என ஒரு திரைப்பட ரசிகனாகவும் கலை,இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியனாகவும் வேண்டுகிறேன். மனமார்ந்த பாராட்டுகள் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.
1 comment :

Mayura Rathinaswamy said...

I really enjoy the film. Now I want to see once more before it goes out of theater.