September 30, 2014

எண்பதும் நாற்பதும்போலந்து, வார்சா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் கற்பிக்கப்போன பேராசிரியர்கள் பலருக்கும் கிடைக்காது ஒரு அனுபவம் எனக்குக் கிடைத்தது. 2011 அக்டோபர் 10 இல் வார்சா பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இரண்டு நாட்கள் கழித்துத் துறையில் நடக்க இருக்கும் 3 நாள் கருத்தரங்க அழைப்பினைக் கொடுத்துவிட்டு நீங்கள் இருக்கப்போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும்  இரண்டு பெரும் நிகழ்வுகளில் பங்கேற்கப்போகிறீர்கள் என்றார். என்ன நிகழ்வுகள் என்று நான் கேட்கவும் இல்லை; அவர் சொல்லவுமில்லை.


நினைத்துப் பார்த்தால் ஓர் இலக்கிய மாணவனாகவும் ஆசிரியனாகவும் நான் பங்கேற்ற கருத்தரங்குகளின் எண்ணிக்கை சில நூறுகளைத் தாண்டும். பல்கலைக்கழக ஆசிரியனாகக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மட்டும் ஒரு நூறு கட்டுரைகள் வாசித்ததாக எனது தகவல் குறிப்பு சொல்கிறது. அவைகளை விடவும் இலக்கிய அமைப்புகள், பத்திரிகைகள் நடத்திய கருத்தரங்குகளில் தான் நான் அதிகம் பங்கேற்றிருப்பேன். கல்வி நிறுவனங்கள் சார்ந்து நடக்கும் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் நான் கலந்து கொள்வது பற்றி என் மனைவிக்கு அதிக வருத்தம் இருந்ததில்லை. இலக்கியக் கூட்டங்கள், நாடகப் பட்டறைகள், நாடக அரங்கேற்றம்  என்று சொல்லி வார இறுதிநாட்களில் வீடு தங்காமல் தமிழ்நாட்டின் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அலைவதில் எனக்கிருந்த ஆசை மனைவிக்கு விருப்பமானதல்ல. சொல்லித் திருத்தி விட முடியாது என்பதால் சகித்துக் கொண்ட பொறுமைக்கு இந்த இரண்டு ஆண்டுகள் சின்ன இடைவெளி. போலந்தில் இருக்கும் காலங்களில் அதிகம் வீடு தங்குவேன் என்பதில் மகிழ்ச்சி.  அந்த மகிழ்ச்சிக்கும் ஆபத்தோ என்று நினைக்கும் விதமாக மூன்று நாள் கருத்தரங்கிற்கும் தவறாமல் போய்விட்டு இரவு தாமதமாக வந்தேன். அந்நிய நாட்டில் புது வீட்டில் தனியாக இருக்கும் பயம் பற்றிக் கவலை இருந்திருக்க வேண்டும். என்றாலும் தொலைபேசியில் அடிக்கடி பேசிக் கொள்வோம்.

போலந்து நாட்டின் கல்வி யாண்டுகள் அக்டோபரில் தொடங்கி ஜனவரியில் முடியும் குளிர்காலப் பருவம் எனவும்,  பிப்ரவரியில் தொடங்கி ஜூலையில் முடியும் வசந்த காலப் பருவம் எனவும் அழைக்கப்பெறும். முதல் கல்வி ஆண்டின் வசந்த காலப் பருவத்தின் தொடக்கத்தில் - 2012  பிப்ரவரியில் - அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இந்திய வியல் துறையின் 80 ஆவது ஆண்டு விழா என அறிவிப்புச் செய்து திட்டங்களை முன் வைத்தார் துறைத்தலைவர் பேரா தேனுதா ஸ்டாசிக்.  ஏறத்தாழ 9 மாதங்களுக்கு முன்பே திட்டமிடல் கூட்டம் நடந்தது.  போலந்து, வார்சா பல்கலைக்கழகத்தின் முக்கியமான புலங்களுள் ஒன்றாக இருப்பது தெற்காசியவியல் புலம். இதற்குள் இருப்பதாகக் கீழைத்தேயவியல் புலத்தைக் கருதலாம். அல்லது மாற்றுப் பெயராகவும் சொல்லலாம். வார்சா பல்கலைக்கழகத்தில் அது தொடங்கப்பட்டபோது கீழைத்தேயவியல் துறையாகத் தான் இருந்துள்ளது. போலந்து நாட்டு வார்சா பல்கலைக் கழகத்தில் 1932 இல் இந்தியவியல் துறை தொடங்கப் பட்டது. முதலில் கற்பிக்கப்பட்ட இந்திய மொழி சமஸ்கிருதம். பிறகு வங்காளமும், இந்தியும் தற்கால இந்திய மொழிகள் என்ற நிலையில் கற்பிக்கப் பட்டுள்ளன. அதற்குப் பிறகுதான் தமிழ் சேர்க்கப் பட்டுள்ளது. 1973 இல் தொடங்கப் பட்ட தமிழுக்குத் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் பண்பாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் ஒரு பேராசிரியரை அனுப்பி வைக்கிறது. அவருக்கு அங்கு பெயரே தமிழ் இருக்கை (Tamil Chair Teacher) ஆசிரியர் தான்.  தமிழுக்கு அளிக்கப்பட்ட இருக்கை நிலையைப் போல இன்னொரு இருக்கையை இந்திக்கு 1983 இல் தான் இந்திய அரசு வழங்கி இருக்கிறது.  இப்போதும் வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறைக்கு வாரம் ஒருநாள் மதிப்புறு பேராசிரியராக வந்து போகும் கிறிஸ்டோப் பெர்ஸ்கியின் பெருமுயற்சியில் தமிழ் நுழைந்துள்ளது. அவர் வெறும் பேராசிரியர் மட்டுமல்ல. போலந்து நாட்டின் தூதராக ஆறு ஆண்டுகள் டெல்லியில் இருந்தவர் 


இந்த விவரங்களையெல்லாம் சொல்லிவிட்டு  80 ஆண்டுகள் ஆனதையொட்டி இரண்டு நாள் நிகழ்வுகளாக கொண்டாட்டங்களும் கருத்தரங்குகளும் நடக்கும் எனச் சொன்னபடி 2012  நவம்பர் 8, 9 தேதிகளில் நடந்தன. இசைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள், நடன நிகழ்வுகள் ஆகியவற்றோடு கீழைத்தேயங்களின் அறிவுத் தோற்றவியல், பண்பாடுகள், மொழிகள், வரலாறு, நிகழ்கால நடப்புகள் எனப் பலவற்றைப் பற்றிப் பல தலைப்புகளில் கட்டுரைகள் படிக்கப்பெற்றன.

எல்லாப் பேச்சுகளும் போல்ஷ்கியில் தான் என்றாலும் சுருக்கங்கள் ஆங்கிலத்தில் கிடைத்தன. தொடக்க விழாவிற்காக இந்தியவியல் பேராசிரியரும் தமிழறிஞருமான வாசெக், செக் நாட்டிலிருந்து வந்திருந்தார். நிகழ்வுக்கு முந்திய நாளே அவர் வார்சாவுக்கு வந்து விட்டார். அவரோடு மேற்கத்திய விருந்திலும், நிகழ்வின் தொடக்க நாளிலும் உடனிருந்தது முக்கியமான தருணங்கள். ஒவ்வொருவரிடம் என்னை அறிமுகப்படுத்தும்போது, தமிழின் தன்மையைச் சொல்லி அதனைக் கற்பிக்க வந்துள்ளார் எனச் சொன்னதோடு, “ கணியன் பூங்குன்றனின் தேசத்திலிருந்து வந்திருக்கிறார்” எனச் சொல்லி அறிமுகப்படுத்தினார். கோப்பையில் நிரம்பிய வோட்காவோடு தூக்கி மோதும்போது ’தமிழில் எப்படிச் சொல்லலாம்’ என்று கேட்டார். “கொண்டாடுவோம் ” என்று பாரதி சொன்ன பொருளில் சொன்ன போது அதனை ஏற்றுச் சொல்லியபடி கோப்பையை உரசினார். திரும்பத்திரும்ப நினைத்துக் கொள்ள வேண்டிய தருணங்கள் அவை.

வருகைதரு பேராசிரியர்களின் முக்கியமான வேலையே இன்றும் பேசப்படும் தமிழ் மற்றும் இந்தி மொழியின் இருப்பு நிலையைக் கற்பிப்பதுதான். செவ்வியல் மொழியாக இருந்தாலும் தமிழ் பேச்சுமொழியாகவும் இருப்பதால், அதற்கெனச் சொந்த ஊரிலிருந்து ஒரு பேராசிரியரை வரவழைத்துப் பேச்சுத்தமிழையும், தமிழின் நிகழ்கால இருப்பையும் அறிந்து கொள்கிறார்கள். இன்னொரு செவ்வியல் மொழியான சமஸ்கிருதத்திற்குப் பேச்சு வழக்கு இல்லையென்பதால் அதன் வழித்தோன்றலான இந்திக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.  வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளெல்லாம் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் வருகைதரு பேராசிரியர்கள் கிடையாது. இந்திய அரசின் செலவில் வருகை தரு பேராசிரியர்கள் வந்து போகும் இருக்கைகள் தமிழ், இந்தி என்ற இரண்டுக்கு மட்டும் தான்  இந்தியவியல் துறைகள் போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் தொழில் நகரமான போஸ்னானிலும், பண்பாட்டு நகரமான க்ராக்கோவிலும் இருக்கின்றன. அங்கும் தமிழ் அறிமுகப் பாடமாகக் கற்பிக்கப் படுகின்றன.


இந்தியவியல் துறைக்கான கொண்டாட்டங்கள் முடிந்தவுடனே துறைத்தலைவர் சொன்ன இரண்டு நிகழ்வுகளில் ஒன்று முடிந்துவிட்டது; அடுத்த நிகழ்வு தமிழ் விழாவாகவே இருக்கும் என நினைத்துக் கொண்டேன். நான் முனைவர் யாசெக் வாஸ்னியாக்கிடம் சொல்ல, அவர் அதைத் துறைக்கூட்டத்தில் நினைவூட்டினார். அவர் தான் அங்கிருக்கும் நிரந்தரத் தமிழ் ஆசிரியர். ஜெயகாந்தன் சிறுகதைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 


சரியாக 6 மாதங்களுக்கு முன்பே பேச்சை ஆரம்பித்து வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை ஆரம்பிக்கப்பெற்ற 40 ஆவது ஆண்டு விழா 16-05-2013- அன்று கொண்டாடப்பெற்றது. இரண்டு அமர்வுகள் கொண்ட கருத்தரங்க நிகழ்வாகத் திட்டமிடப்பெற்ற அந்த விழாவின் தொடக்க நிகழ்வில் இந்தியத்தூதரகத்தின் முதன்மைச் செயலர் திரு. மீனா கலந்து கொண்டார். பல்கலைக்கழகம் சார்பில் ரெக்டார் என்னும் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். துறையின் தலைவர் திருமதி தேனுதா ஸ்தாயிக்கின் வரவேற்புரையில் துறையின் கடந்த காலம் நினைவு கூரப்பெற்றது. ஓய்வுக்குப் பின்னும் துறையோடு தன்னை இணைத்துடுக் கொண்டுள்ள மூத்த பேராசிரியர் பெர்ஸ்கி தமிழ்ப் பேராசிரியர்களாக வந்து போன ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து பேசினார். அப்போது என்னைக் காண்பித்து என் முகத்தின் வழியாக அவர்களின் முகங்களைக் காண்கிறோம் என்ற போது கொஞ்சம் புல்லரிப்பாகத் தான் இருந்தது. சிறப்பு விருந்திரனராக வந்திருந்த மாஸ்கோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி இந்தியவியல் சார்ந்த நூல்களை வழங்கி வாழ்த்துச் சொன்னார்.

முதல் அமர்வில் முதல் கட்டுரையாகத் தமிழ் இரட்டைக் காப்பியங்கள் (The So-Called Twin Poems in Tamil Literature) பற்றிய துப்யான்ஸ்கி கட்டுரை வாசித்தார். இரண்டாவது கட்டுரை க்ராக்கோ பல்கலையில் வருகைதரு பேராசிரியராக வந்திருக்கும் முனைவர் கோ.ராஜகோபாலின் -அலைந்த நிர்வாணம் (Wandering Naked:Saiva Women Mystics in Search of Spiritiual Empowerment) என்ற கட்டுரை வாசிக்கப்பெற்றது. மூன்றாவதாக நான் -அ.ராமசாமி- புறநானூற்றில் போர்களுக்கெதிரான பெண்கவிகளின் குரல் (Women's Voices Against War in Puranaanuuru)என்ற கட்டுரையை வாசித்தேன். நான்காவது கட்டுரை நினைவுத் தூண்களைத் தேடிய நினைவுகள் (Searching for memorial stones: Memories of fieldwork in Tamil Nadu) என்னும் களப்பணி அனுபவக்கட்டுரை. அதை வாசித்தவர் போஸ்னான் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் நடாலியா ச்விச்சின்கா .

நான்கு கட்டுரைகள் வாசிக்கப் பெற்ற முதல்அமர்வுக்கு இந்தியவியல் துறையில் பணியாற்றும் சமஸ்கிருதப் பேராசிரியர் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இரண்டாவது அமர்வு இன்னொரு இந்தியவியல் துறைப் பேராசிரியர் ஒருங்கிணைப்பில் ஐந்து கட்டுரைகளுடன் தேநீர் இடைவேளைக்குப் பின் தொடர்ந்தது. அதில் கலிங்கத்துப்பரணியில் பேயுருவம் (The Image of Pey in Kalingattupparani)என்ற கட்டுரை ஜோன்னாவும், மாரியம்மன் வழிபாட்டை சக்தி வழிபாடாக முன் வைத்த (A few notes on Sakti Goddessess in Tamil Culture )கட்டுரையைக் கரோலினாவும், திருவையாறு இசைவிழாப் பாரம்ப்ரியம்(Great Tamils: The Tiruvarur Trinity and the beginning of a New era in Carnatic Music) பற்றி நடாலியா சசோவ்ஸ்காவும் வாசித்தனர். இம்ம்மூவரும் தமிழில் ஆய்வு செய்யும் முனைவர் பட்ட ஆய்வு மாணவிகள்.குமரில பட்டரின் திராவிடமொழி அறிவு என்ற நான்காவது (Kumarila's Knowledge of Dravidian languages)கட்டுரையை இந்தியத்தத்துவத்துறையைச் சேர்ந்த முனைவர் மோனிகா நவகோவ்ஸ்காவும் ஐந்தாவது கட்டுரையாக திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழியின் பக்தி மற்றும் பாலியல் இணைவு பற்றிய (What Mother Said in Tirumangaiyaazvar;s Periya tiruvaaimozhi) கட்டுரை முனைவர் யாஸக் வாஸ்யனிக் வாசித்தார். கருத்தரங்க முடிவுக்குப் பின் ஐரோப்பிய வழக்கமான மதுக் கோப்பைகள் உரசும் பெருவிருந்து நடந்து முடிந்தபோது இரவு 10.30. 

போலந்து நாட்டிற்கும் தமிழ்மொழிக்குமான உறவை நேரடியான உறவு எனச் சொல்ல முடியாது. உலக நாடுகள் பற்றிய அறிவைத் தேடுவதில் ஐரோப்பியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் ஒரு பகுதியாகவே தமிழின் மீதான உறவைப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறைகள் இருக்கின்றன. அத்துறைகளில் இந்தியத் தத்துவம், இந்தியவரலாறு, இந்தியப் பண்பாடு, இந்திய மொழிகள் பற்றிய கல்வியைக் கற்பிக்கிறார்கள். இந்திய மொழிக்குடும்பங்கள் பற்றிய கல்வி என்பதில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழியையும் அறிந்தாக வேண்டும் என்ற உண்மையை இந்தியவியல் துறைகளைத் தொடங்கிய பேராசிரியர்கள் உணர்ந்ததின் விளைவே ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பற்றிய படிப்பாக விரிந்துள்ளது. இந்தியத் தொல்மனத்தை அறிய சமஸ்கிருதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழும் என நம்புகிறது  ஐரோப்பிய அறிவுலகம். போலந்து அறிவுலகமும் அதிலிருந்து விலகவில்லை
போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ்ப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டவுடன் அதற்கென அனுப்பி வைக்கப்பட்டவர் பேராசிரியர் இராம. சுந்தரம். அங்கிருந்து வந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். நான் போவதற்கு முன்னால் 1986 இல் மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து  பேராசிரியர் தி.சு.நடராசன் சென்று 4 ஆண்டுகள் இருந்தார்.  கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று பேராசிரியர்கள்  கி.நாச்சிமுத்து, சுப்பிரமணியன், நஷும்தீன் ஆகியோர் அங்கே பணியாற்றியவர்கள். டெல்லிப் பல்கலைக் கழகத்திலிருந்து (இந்திரா) பார்த்தசாரதி, அ.மாரியப்பன் ஆகியோரும்,  பெங்களூர் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழவன் என அறியப்படும் கார்லோஸும், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திலிருந்து  து.மூர்த்தியும், குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத் திலிருந்து கோ. பால சுப்பிரமணியனும் என எனக்கு முன்பு பத்துப் பேர் வார்சாவிற்குப் போய்  தமிழ் கற்பித்து விட்டு வந்தவர்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெருமையாகவே நினைத்துக் கொள்கிறேன்.   வார்சா பல்கலைக்கழகத்தில் நான் கலந்து கொண்ட அந்த இரண்டு பெரும் நிகழ்வுகள்; முதல் நிகழ்வு வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை தொடங்கப் பெற்ற 80 வது ஆண்டு விழா. இரண்டாவது நிகழ்வு இந்தியவியலுக்குள் தமிழ்ப் பிரிவு தொடங்கப்பெற்ற 40 ஆண்டு விழா.


No comments :