July 22, 2014

மன்னிப்பதிலிருந்து அல்ல; மன்னிப்புக் கேட்பதிலிருந்து தொடங்கலாம்.


பேரினவாதக் கருத்தியலும் மேட்டிமைவாத- உயர்சாதிக் குறுங்குழுவாதமும்- மோதிக் கொண்ட ஒரு பூமியாக இலங்கையை விரித்துக் காட்டிப் பேசத்தொடங்கும் பிரசன்ன விதனகேயின் சினிமா ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு இந்தமுறை சென்னை சென்ற போது கிடைத்தது. படத்தின் ஆங்கிலத் தலைப்பு With You Without You. ஆங்கிலத் தலைப்பை அப்படியே நின்னோடா? நீயின்றியா?  என மொழி பெயர்க்காமல்  பிறகு எனத் தலைப்பிட்டு இருந்தார் அதன் இயக்குநர். அவரது தாய்மொழியான சிங்களத்தில் வைத்துள்ள தலைப்புக்கு என்ன பொருள் எனத் தெரியவில்லை.இரண்டு நாட்களாக முகநூலின் குறிப்புகளில் அந்தப் படத்தை வெளியிடுவது தொடர்பான எதிரும்புதிருமான சர்ச்சைகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தன. தமிழ்த் தேசிய ஆதரவாளர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் மனிதர்கள் படத்தை வெளியிடத் தடையாக இருக்கிறார்கள் எனச் சொல்ல, அப்படியெல்லாம் யாரும் சொல்லவில்லை எனப் பதில் குறிப்புகள் சொல்ல, படத்தை வெளியிட்டுப் பேசலாம் வாருங்கள் எனச் சென்னையில் செயல்படும் தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். அழைக்கப்பட்ட இடம் வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவின் முன்னோட்ட அரங்கு. 

இந்தக் குறிப்புகள் சேர்ந்து படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியதோடு கொதிநிலையில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தையும் பெறலாம் என ஒரு மணிநேரம் முன்னதாகவே போய்விட்டேன். நான் போனபோது திரையரங்கு வாசலில் 10 பேருக்கும் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் படம் ஆரம்பிக்கும் முன்பு அனைத்து நாற்காலிகளும் நிரம்பிவிட்டன. உட்கார்ந்திருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பாதியாவது இருக்கும் நின்றிருந்தவர்களின் எண்ணிக்கை. படத்தை வெளியிட வேண்டும் என அக்கறைப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். நல்லதொரு சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அருணோடு கைகுலுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்த இயக்குநரிடமே கைகுலுக்கிவிட்டு வந்தேன்.

திரைக்கதையின் பின்னல்களையும் விடுவிப்புகளையும் மட்டும் வைத்துப் படம் பார்க்கும் பிறநாட்டு மனிதர்களுக்கு வித் யூ வித் அவுட் யூ என்ற ஆங்கிலத் தலைப்பு உருவாக்கும் அர்த்தமே போதும். ஆனால் 30 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின் தன் தேசத்து மனிதர்கள் புதியதொரு வாழ்க்கையைத் தெரிவு செய்ய வேண்டும் எனச் சொல்ல விரும்பும் ஒரு கலைஞனுக்கு - அவன் உண்டாக்க விரும்பிய கருத்தியலுக்குப் பொருத்தமான தலைப்பாக இருப்பது தமிழில் வைக்கப்பட்டுள்ள “ பிறகு” என்னும் தலைப்பே.  அந்தப் படத்தின் கதை மிகச் சிறியது; எளிமையானது.

திரும்பத்திரும்பத் தனது அடகுக் கடையில் தன் வசமுள்ள சின்னச் சின்ன நகைகளை அடகு வைக்க வரும் ஒரு இளம் தமிழ்ப் பெண் மீது மத்திய வயதில் இருக்கும் சிங்கள அடகுக்கடை முதலாளி காதல் கொள்கிறான். அந்தக் காதல்  ‘அவளது இதழில் வழியும் புன்னகையாலும் கண்களில் தெறிக்கும் சுடரொளியாலும் உண்டானது’ என அவன் சொன்னாலும், மறக்க அல்லது மறைக்க நினைக்கும் முந்திய வாழ்க்கைக்கான பரிகாரம் என்பதாக உள்மனம் நினைத்திருக்க வேண்டும். அந்த இளம்பெண்ணோ தனது உறவினர்களைப் பிரிந்து - அல்லது உள்நாட்டுப் போரில் பறிகொடுத்துவிட்டு மலையகத்தமிழ் குடும்பம் ஒன்றிற்கு அனாதையாக இடம்பெயர்ந்தவள். அவளுக்குள் சிங்கள ராணுவம் உண்டாக்கிய அழிவுகளும் பாலியல் வல்லுறவுகளும் நேரடி அனுபவமாக - உடன் பிறந்த சகோதரர்கள் கொல்லப்பட்டதாக, கூட்டுப் பாலுறவால் அழிக்கப்பட்ட இளம்பெண்களைக் காவு கொடுத்த காட்சிகளாக பதிந்து கிடக்கின்றன. என்றாலும் அவளுக்குள் இருக்கும் ஆசை இந்தியாவுக்குப் போகவேண்டும்; விஜய் நடித்த சினிமாக்களைப் பார்க்க வேண்டும் என்பதான ஆசைதான்.  தொடக்கத்தில் ஒரு சிங்களப் பணக்காரனின் பச்சதாப உணர்வினால் உண்டான காதலை ஏற்க அவளுக்கு மனம் இல்லை. அவனைவிட வயது கூடிய தமிழ்க் கிழவர் ஒருவரோடு மனைவியாக அனுப்பப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது என்ற நிலையில் - அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க நினைத்து அவனது காதலை ஏற்றுச் சிங்கள நடுத்தர வயதுக்காரனின் மனைவி ஆகிறாள். புரிந்து கொள்ளுதலோடு தொடரும் அவர்களது குடும்ப வாழ்க்கையில்  தமிழ்ப் பெண்ணின் தாலியை மையமிட்டு ஒரு விரிசல் உண்டான நிலையில் அவளது கணவனின் பழைய வாழ்க்கையைச் சொல்ல வந்தவன் போலக் கதைக்குள் வந்து செல்லும் காமினியின் வரவு முரண்பாட்டைத் திசை திருப்பிவிடுகிறது.

கணவன் x மனைவி முரண்பாடு, தமிழ் x சிங்கள இன மோதலின் விரிசலாக மாறி விடுகிறது. போர்க்குற்றம் செய்து ராணுவத்திலிருந்து விலகிப் புதுவாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் அவனது கடந்தகாலத்தை அறியாமல் கணவனாக ஏற்றுக் கொண்டு சிங்கள ஆணோடு குடும்ப வாழ்க்கையைத் தொடர முடியாமல் தவிக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணின் பார்வையாகவும், தனது முந்திய காலத்துக் குற்றச் செயலுக்கான பரிகாரத்தை - மன்னிப்பைக் கோரிப்பெற்றுப் புதிய வாழ்க்கையைத் தொடங்கித் தொடர நினைக்கும் சிங்கள ஆடவனின் மன உறுத்தலாகவும் மாறிமாறி நகரும் திரைக்கதையைக் கொண்டிருக்கும் இந்தப் படம் சினிமாவின் அனைத்துவிதமான அழகியல் கூறுகளையும் கச்சிதமாகக் கலந்து தந்துள்ளது. ஒவ்வொன்றையும் விளக்கி விவரித்தால் திரைப்பட ரசனை வகுப்பாக மாறிவிடும்.  இரண்டு கதாபாத்திரங்களின் விருப்பம் அல்லது மனஓட்டத்தைக் காட்ட இயக்குநர் தனித்தனியான குறியீட்டுப் பின்னணையைத் தந்துள்ளார். டெலிவிஷனில் ரெஸ்ஸிலிங் காட்சிகளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பவன் நாயகன். தமிழ்ச் சினிமாவின் கற்பனாவாதக் காதல் பாடல்களை - குறிப்பாக விஜய் நடித்த சினிமாக்களின் மீதும் பாடல்களின் மீதும் விருப்பம் ஒண்டவள் பெண். தனிநபர் சார்ந்த இந்த விருப்பங்களுக்குப் பின்னால் இலங்கையின் 30 ஆண்டுக்கால இனவாத அரசியல், பயங்கரவாதத்தடுப்பு யுத்தம், அதில் நேரடியாக ஈடுபட்ட பழைய வாழ்க்கையைக் கொண்ட நாயகனின் பின்புலம், யுத்தத்தால் தனது இரண்டு சகோதரர்களை இழந்த நாயகியின் துயரம் எனக் கதை பின்னப்பட்டு அரசியல் படமாக மாற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியெல்லாம் நடந்து முடிந்துவிட்ட  நிலையில் பிறகான - போருக்குப் பிறகான- வாழ்க்கையை ஒரு சிங்களக்கணவனும் ஒரு தமிழ்ப் பெண்ணும் தொடர வேண்டும் என்றால் என்ன செய்வது? என்ற கேள்விக்குள் நுழைகிறது படம். அதற்கான ஆகப்பெரும் வழிமுறை ஒன்றே ஒன்றுதான். மன்னிப்புக் கோருவது மட்டுமே இணக்கத்தை உண்டுபண்ணும் என்பதை இயக்குநர் தீர்வாக வைக்கிறார். தனிநபர்களாக அந்தப் பெண்ணும் ஆணும் மாறிமாறி ஒருத்தரிடம் இன்னொருவர் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்கள். அவளது ஆசையை - இந்தியாவிற்குப் போய் தமிழ்ச் சினிமாவையும் நடிகர் விஜய்யையும் காட்டிவிடும் முடிவோடு அடகுக்கடையை ஒரு தமிழ் முஸ்லீமிடம் விற்றுவிடுகிறான். உச்சகட்டமாகத் தன்மீது இவ்வளவு அன்பு கொண்ட கணவனைக் காயம்படுத்திவிட்டோமே எனத் தவித்துப் புலம்பும் தமிழ்ப் பெண், மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். படம் முடிந்து விடுகிறது. சிங்களக் கணவனின் முடிவுகள் ஒவ்வொன்றும் நிதானமாக நகர, தமிழ்ப்பெண்ணின் முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்ச்சிவசப்பட்டு எடுப்பனவாகவே இருக்கின்றன. அவள் எடுத்த  தற்கொலை முடிவு உள்பட.  

சிங்களர்கள், தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என மூன்றுதரப்பினரும் இருப்பையும் மனநிலைகளையும் கட்டமைத்துள்ள போர் நடவடிக்கைகளின் ஓசையும் போர்மேகங்களும் கரியமுகமும் தூரத்தில் நகர்ந்து கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறது.   சின்னச் சின்னக் குறிப்புகளால் தனது தேசியத்தின் - தேசத்தின் -நகர்வை -நிகழ்கால வரலாற்றைச் சொல்லியிருக்கும் இந்தப் படம் போருக்குப் பின்னான வாழ்வை, மன்னிப்புக் கோருதலிலிருந்து தொடங்கவேண்டும் என்கிறது. அவர் முன்வைக்கும் மன்னிப்புக் கோரல் என்னும் நிலைப்பாடு அரசின் அல்லது அதிகாரத்தின் நிலைபாடு அல்ல. சில லட்சம் தமிழர்களை அழித்துக் கறைபடிந்த கரத்தோடு இருக்கும் சிங்களப் பேரினவாத அரசு மன்னிப்புக் கோரும் நிலைக்கு இறங்கிவரும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. குறைந்த பட்சமாகக் குற்றவுணர்வு கொண்ட ஓர் அறிக்கையைக் கூட அது வெளியிடாது. சிங்களப் பேரினவாத அரசு மட்டுமல்ல; பயங்கரவாதத்தை ஒடுக்குவதாகச் சொல்லிக் கொண்டு சொந்தநாட்டு மனிதர்களைக் கொன்றுகுவித்த எந்த அரசாங்கமும் குற்றவுணர்வால் தூண்டப்பட்டு மன்னிப்புக் கோரியதாக வரலாற்றில் குறிப்புகள் இல்லை. ஆனால் அந்த அரசுகளின் மனச்சாட்சியாக மாறி ஒவ்வொரு நாட்டுப் படைப்பாளிகளும் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள் என்பதை உலகக் கலை இலக்கியவரலாறு நமக்குச் சொல்கிறது. பிரசன்ன விதனகேயின் இந்தப் படம் அப்படிப்பட்ட படைப்பாளியின் மனச்சாட்சியின் குரல் என எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

பிரசன்ன விதனகே தனது மனச்சாட்சியைச் சரியான திசையில் செலுத்தியிருக்கிறார். மன்னிப்புக் கேட்பதை எங்கிருந்து? எப்படித் தொடங்கலாம்? என்பதைத் தயக்கங்களற்று- குழப்பங்கள் இல்லாமல் சிங்களர்களே தொடங்க வேண்டும் எனக் கூறுவதின் நீட்சியாகக் காலில் விழுந்து கதறி அழும் கணவனைப் போல மாறியாக வேண்டும் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார். பொறுப்புள்ள படைப்பாளியின் மனச்சாட்சி இதனையே வலியுறுத்தும். போர்களின் வழியாகத் துயரங்களை அனுபவித்த இனங்கள் போர்களுக்குப் பிறகான வாழ்க்கையைத் தொடங்க ஒரே வழி மன்னிப்புக் கோருதலும் மன்னித்தலும் அன்றி வேறென்னவாக இருக்க முடியும். இணக்கங்களை ஏற்படுத்த விரும்பும் படைப்பாளிகளின் குரலோடு தமிழ்ப் படைப்பாளிகள் தங்களை இனங்காண வேண்டிய தருணம் இது.

இந்தப் படத்தைப் பார்க்க வந்திருந்த சென்னையின் சில ஆயிரம் பார்வையாளர்களில் சில நூறு பேர்களிடம் இணக்கத்திற்கு மாறான வெறுப்புநிலை இருக்கிறது என்பதும் படத்திற்குப் பின்பான கேள்விகளில் வெளிப்படவே செய்தது. அந்த எண்ணிக்கை சில நூறுகள் தான். கொடுமையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே -அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க அந்தச் சில நூறுபேர்கள் தேவைதான். அவர்கள் அந்தப் பாதையில் செல்லட்டும். அப்படிச் செல்லும்போது கலை இலக்கியவாதிகளின் இணக்க முயற்சிகளைத் தடுத்துவிட மாட்டோம் என்ற உறுதியையும் அவர்கள் முன் வைக்க வேண்டும். இணக்கத்திற்கான வழிமுறைகளைத் தேடுவதில் தான் ஆறாத காயங்களுக்கான மருந்துகளைத் தர முடியும். இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை என்ன என்பதைத் தெரிந்து கொண்டு நமது பார்வைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நன்றி: உயிர்மை, ஜூலை, 2014
No comments :