June 10, 2014

தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்

          
சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது.
மொத்தம் 80 பக்கங்கள். கூறு, மீதமிருக்கும் வாழ்வு, விசுவாசம், மூன்று மழைக்காலங்கள் என  4 கதைகள் . இந்தத் தொகுப்பை இந்த ஆண்டின் சிறந்த தொகுப்பாக நான் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் வாசிக்கத் தக்க / வாசிக்க வேண்டிய கதைகளைக் கொண்ட தொகுப்பு எனச் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

நான் இரண்டு ஆண்டுகள் ஐரோப்பாவில் - போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுத்தேன். அந்நிய மொழியைக் கற்பவர்களுக்கு ஒரு மொழியில் இருக்கும் வினைச்சொற்களைக் கற்றுக் கொடுப்பது கடினமான பணி அல்ல. உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அந்த வினையை அல்லது வினையின் பகுதியைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் பெயர்ச் சொற்களைக் கற்றுக் கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. பெயர்ச்சொற்கள் உருவாக்கும் அர்த்தம் என்பது குறிப்பிட்ட  பண்பாட்டின் பின்னணியில் உருவாக்கும் அர்த்தம் சார்ந்தது.

தமிழ் அல்லது இந்திய சமூகம் வைத்திருக்கும் உறவுப் பெயர்களை ஐரோப்பியர்களுக்குப் புரிய வைப்பது சுலபமானதல்ல. நமது மாமாவும் அவர்களது அங்கிளும் ஒரேவிதமாகப் பொருந்துவதல்ல. நாத்தனார், கொழுநன், அத்தை, சித்தி என்ற உறவுகளை அறியாதவர்களுக்கு அதன் உள்ளார்ந்த அர்த்தங்களைப் புரிய வைக்கப் படாதபாடு பட வேண்டும்.  இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இருக்கும் இந்த உறவுப்பெயர்களையும், அவற்றின் வழியாக நாம் உருவாக்கிக் கொள்ளும் வாழ்க்கைமுறையையும் கட்டுப்பாடுகளையும் ஐரோப்பிய மனிதர்களுக்குப் புரிய வைப்பது ஆகச் சிரமங்கள் கொண்டது என்பதை நேரடியாக உணர்ந்திருந்த எனக்கு, என் ஸ்ரீராமின் மிதமிருக்கும் வாழ்வு தொகுப்பில் இருக்கும் கதைகளை வாசித்தபோது, இதுபோன்ற இந்தியக் கிராமங்களின் பின்னணியில் வாழும் மனிதர்களை முன் வைக்கும் கதைகளில் வெளிப்படும் உறவுகளையும் வாழ்க்கைச் சிடுக்குகளையும் நம்பிக்கைகளையும் மொழிபெயர்த்துச் சொல்லுதல் இன்னும் சிரமமானது என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.

ஸ்ரீராமின் நான்கு கதைகளையும் வாசித்தபின், மாறிக் கொண்டிருக்கும் இந்திய வாழ்க்கையின் மூலம் தொலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை எழுதிக் காட்டுவதைத் தனது எழுத்தாகக் கருதும் எழுத்தாளர் என அக்கதைகள் சொல்கின்றன. முதல் கதையான கூறு. உழைப்புக்குப் பயன்படாது எனத் தீர்மானமான மாடுகளை வாங்கி அதன் இறைச்சியைக் கூறுபோட்டு விற்கும் படையன் மாதாரியின் அந்தரங்க வாழ்வு சார்ந்த குற்றவுணர்வைப் பேசுகிறது. எந்தக் கணத்திலும் ஆண்கள் தங்களை விட்டுக் கொடுக்காத ஆதிக்க மனம் கொண்டவர்கள் என்ற அறிவுஜீவித்தனமான பொதுப்புத்திக்கு மாறாக, உண்மையான சொல்லின் அருகில் நொறுங்கிப் போகும் இயல்பு ஆணுக்கும் உண்டு என்பதைச் சொல்கிறது. மலட்டுத்தனம் யாரிடம் இருக்கிறது என்பதை அறிய உதவும் மிதக்கும் விந்துத் துளியையும், மூத்திரத்தில் முளைக்கும் மொச்சைக் கொட்டையையும் வைத்துப் பின்னப்பட்ட  கதை. 

இதனைப் போலவே பிரிந்து போகவும் திரும்பச் சேரவும் காரணங்கள் தேவைப்படாத கிராமத்துக் குடும்ப உறவைப் பேசும் கதைதான் மிச்சமிருக்கும் வாழ்வு. பிரிந்து போன கணவன் வரவேண்டும் என்ற வேண்டுதலை ஒழித்துவிட்டுத் தன் கூட இருக்கும் மகனின் அடாவடித்தனத்திற்கு முற்று ப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கடவுளிடம் முறையிடும் கோமதியின் மீதி வாழ்வை நீட்டிக்க அண்டாவின் அடியில் இருந்த 2000 ரூபாயின் மூலம் கடவுளா? கடவுளைப் போலக் கண்ணில் படாமல் வந்து போய்விட்ட கணவனா? என்ற நினைக்கும் கதை.  காரணங்கள் தேடாமல் காரியங்கள் ஆற்றும் மனிதர்கள் கிராமங்களில் மட்டுமே வாழ்கிறார்கள் என்றில்லை, பெருநகரத்தில் கோடிகள் புரளும் திரைப்படத்துறைக்குள்ளும் “சின்ன வாய்ப்புக்கிடைத்தால் அடுத்து பெருவெற்றி தான்” என மனிதர்கள் அலைகிறார்கள் எனக் காட்டும் கதையாக எழுதப்பட்டிருக்கிறது மூன்று மழைக்காலங்கள். மழைக்கால நிகழ்வுகளால் பின்னப்பட்ட அந்தக் கதையின் தொடக்கத்தில் சுரபதி ராஜேந்தராக அறிமுகமாகிக் கடைசியில் உள்ளூர் அரசு அலுவலகத்தில் கடைக்கோடிச் சிப்பந்தியாகித் தற்கொலை செய்து கொள்ளும் அபத்தவாழ்க்கைப் பாத்திரம் திரைப்படத்துறைக்குள் அலையும் சில ஆயிரம் இளைஞர்களின் வகை மாதிரிப் பாத்திரம்.


இந்தத் தொகுப்பில் இருக்கும் விசுவாசம் என்ற கதையைப் படிக்கும்போது சுஜாதாவின் பெயரில் வழங்கப்படும் விருதுக்கான பொருத்தம் ஒன்று இருப்பதாகத் தோன்றியது. தன் வாழ்க்கை முழுவதையும் எஜமான விசுவாசத்தின் உச்ச அடையாளமாகக் கழிக்கும் ஒரு மனிதன் மீது அவன் காட்டிய விசுவாசத்தின் ஒருசதவீதத்தைக் கூடக் காட்டாது ரசத்தில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிவதுபோலத் தூக்கி எறிந்த நிலக்கிழார்த் தனத்தின் குரூரத்தைச் சொன்ன கதையாக வாசித்தேன். சொல்முறையாலும் வாசித்தபின் எழுப்பிய உணர்வாலும் சுஜாதாவின் நகரத்தை  நினைவூட்டிய கதை எனச் சொல்ல விரும்புகிறேன். மனிதர்களின் நகர்வுக்காகவே நகரும் நகர மனிதர்களும் அரச அமைப்பும் அப்பாவிக் கிராமத்துக் கிழவனைப் பிணமாகத் தூக்கி எறியாமல், அதற்கான விலையையும் கொடுத்துவிட்டு அப்புறப்படுத்தியதைச் சொல்லும் நகரம் கதையை நான் சுஜாதாவை நினைக்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். அத்தகையதொரு கதையை - விசுவாசம் என்னும் கதையை எழுதியுள்ள என் ஸ்ரீராம் இந்த ஆண்டு சிறுகதைக்கான விருதைப் பெறுகிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  வாழ்த்துகள் ஸ்ரீராம்.
============================================================
மீதமிருக்கும் வாழ்வு -என் ஸ்ரீராம்., 
பாதரசம்    வெளியீடு,
2152,முல்லைநகர் 9வது தெரு  அண்ணாநகர் மேற்கு, 
சென்னை-40  

1 comment :

Vignesh Selvam said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்