May 30, 2014

நடப்பியல் இயக்கமும் தமிழ்ப் புனைகதைகளும்

இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கம் நடப்பியல் (Realisam) இயக்கம். ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன் விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத் தீர்க்க முடியாத அளவுக்கு இரண்டும் பின்னிப் பிணைந்தனவாக இருக்கின்றன. 

நடப்பியலைப் போலவே தான் அதற்கு முன் தோன்றிய இலக்கிய இயக்கங்களும் பின் வந்த இயக்கங்களும் ஏதாவதொரு கலை, இலக்கிய வடிவங்களோடு அதிகம் உறவு கொண்டனவாக இருந்தன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். செவ்வியல் அது மரபுச் செவ்வியல் ஆயினும்சரி, புதுச் செவ்வியல் ஆயினும்சரி கவிதையோடு உறவு கொண்டது. புனைவியல் எப்போதும் கதைதழுவிய கவிதை வடிவமான காப்பியங்களோடு நெருக்கம் கொண்டது. நடப்பியலுக்குப் பின் வந்த பலவும் ஓவியம், சிற்பம், இசை போன்ற கலைவடிவங்களில் அதிகம் பங்களிப்பு செய்தவை.
சாராம்சமாகப் புனைகதை இலக்கியம் நடப்பியலோடு தொடர்புடையது. எழுதுபவர்களின் நோக்கத்திற்கேற்ப நடப்பியல் இயக்கத்தின் பாணியும் வேறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தையும், அந்த இடத்தில் வாழும் மனிதர்களையும் எழுதிக் காட்டும் எழுத்தின் தன்மைக்கும், குறிப்பிட்ட காலத்தையும், அந்தக் காலம் பற்றிய பிரக்ஞையை உணர்ந்தவர்களாக மனிதர்களையும் எழுதும் எழுத்தின் தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு. இரு வேறு காலத்தில் வாழும் மனிதர்களைச் சந்திக்கச் செய்யும் ஒவ்வொரு வகைமாதிரிக்கும் தமிழ்ப் புனைகதையாசிரியர்களையும் அவர்களின் புனைகதைகளையும் உதாரணங்கள் காட்ட முடியும்.
இடங்களின் வழியாக மனிதர்களை எழுதிக்காட்டிய சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, சா.கந்தசாமியின் சாயாவனம், கி.ராஜநாராயணனின் .கோபல்ல கிராமம், .இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி,.ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, அசோகமித்திரனின் 18 வது அட்சக்கோடுநீல பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், வண்ணநிலவனின் ரெயினிஸ் ஐயர் தெரு, பூமணியின் வெக்கை, தோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, சுப்ரபாரதி மணியனின் சாயத்திரை, போன்றன ஒரு வகை மாதிரி. இந்தப் புனைகதைக்காரர்கள் நடப்பியல் வாதத்தை இடச் சித்திரிப்பின் வழியாக உருவாக்கிக் காட்டுவார்கள். காலம், வெளி, மனிதர்கள் என ஒவ்வொன்றையும் வருணித்து- விவரித்து உருவாக்கும் காட்சி சித்திரங்கள் அத்தகைய சூழலில் வசித்த வாசகர்களைத் தங்களின் சூழல் சொல்லப்படுகிறது என நம்பச் செய்துவிடும்.


இடங்கள் சார்ந்து மனிதர்களை முன்னிலைப்படுத்தாமல் இருவேறு காலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மனிதர்கள் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாக நடப்பியலைப் பயன்படுத்திய எழுத்தின் மையத்தைக் குறிக்கப்பயன்படும் சொற்சேர்க்கையாக ‘தலைமுறை இடைவெளி’ என்பதைச் சொல்லலாம். . தலைமுறை இடைவெளி என்பதை எப்போதும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் முரணாகவே புரிந்து வைத்திருக்கிறோம்; அப்படியான புரிதலுக்குக் காரணம் ‘ தலைமுறை” என்பது குடும்பத்தை எல்லையாகக் கொண்ட ஒரு சொல்லாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஒரு குடும்ப வெளிக்குள் நுழையும் புதுவகை பொருள் வரவு அதனால் கிடைக்கும் அறிவுத்தேடல், அதன் வழியாக ஏற்படும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள், அதனால் உண்டாகும் புதுவகை நம்பிக்கைகள் ஆகியனவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தலைமுறைக்கும், அதனைக் கண்டு முகம் சுழிக்கிற அல்லது எதிர்க்கிற பழைய வாழ்க்கை முறையின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளை தலைமுறை இடைவெளி எனப் புரிந்து வைத்துள்ளோம். அந்தப் புரிதல் பிழையான ஒன்றல்ல.
இந்திய வாழ்க்கை முறையில் மேற்கத்திய கல்விமுறையால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளும் புதுவகை வேலை வாய்ப்புகளும் பெருமளவு மாற்றங்களை உண்டாக்கியுள்ளன. கூட்டுக் குடும்பங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துச் சிதைந்து கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள் மட்டும் என்பதான தனிக் குடும்பங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது இந்த இடப் பெயர்வுகள் தான்.. அதன் தொடர்ச்சியாக ”உருவான “வேலைக்குப் போகும் பெண்கள்”” என்ற தனிவகையினரின் அடையாளம் வேறொரு வகை நெருக்கடியைக் குடும்ப அமைப்புக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
தனிக்குடும்பங்களையே சிதைத்து தனித்தனி உயிரிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்போக்கானவை; வரவேற்க வேண்டியவை எனப் பேசுகின்றவர்கள் பிந்திய தலைமுறையினர். இந்த மாற்றங்கள் நமது சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதோடு பண்பாட்டுக் குழப்பங்களையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக் கூடியன; எனவே தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சொல்பவர்கள் முந்திய தலைமுறையினர். இவ்விரு தலைமுறையினரின் வாதப் பிரதிவாதங்களை எல்லாம் பேசக்கூடிய எழுத்துப் பிரதிகளையும் நிகழ்வுப்பிரதிகளையும் பற்றிய விவாதங்களின் போதும், விமரிசனத்தின் போதும் தலைமுறை இடைவெளி என்ற சொல்லாடலை அதிகம் பயன்படுத்துகின்றோம். இவ்வகை எழுத்துக்காரர்கள் தாங்கள் உருவாக்கும் பாத்திரங்களைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். பாத்திரங்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். வாசிக்கிற வாசகர்கள் நம்மால் இப்படிப் பேச முடியுமா எனப் பிரமித்துப் போய் நிற்பார்கள்.
இந்தப் போக்கின் ஆகச் சிறந்த தமிழ்ப் படைப்பாளியாக நினைப்பது ஜெயகாந்தனை. அவரது மொத்த எழுத்துகளையும் இந்த அடிப்படையிலேயே வாசிக்க முடியும் .அவரது பாத்திரங்களின் உரையாடல்களில் வெளிப்படும் அறிவார்ந்த தன்மை பல நேரங்களில் அலுப்பூட்டினாலும், அந்தப் பாத்திரங்களைப் போல நான் இல்லையே என்று வாசிப்பவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். அவரது ’பாரிசுக்குப்போ’ வை வாசிக்கும்போது நான் அப்படி உணர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு அப்படித்தோன்றாமல் போனால் அவர் தலைமுறை இடைவெளியின் முரண்பாட்டை உணராதவர் என்று அர்த்தம்.
மத்திய தரவர்க்க மனிதர்களை இப்படி உரையாட வைத்த நாவல்களை இந்திரா பார்த்தசாரதியும் எழுதியிருக்கிறார். சுஜாதா, வாசந்தி, சிவசங்கரி போன்றவர்களின் தொடர்கதைகளில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளத் தவிக்கும் பாத்திரங்களின் புலம்பல்களை நாம் கேட்க முடியும்.
தலைமுறை இடைவெளியின் காரணமாகக் குடும்ப எல்லைக்குள் ஏற்படும் முரண்பாட்டைக் கிராமிய வெளிக்குள் நகர்த்திய எழுத்தின் மாதிரியாகச் சிவகாமியின் பழையன கழிதலை வாசிக்கலாம். அவரது ஆனந்தாயியையும் அப்படியே வாசிக்கலாம்.
நடப்பியலின் களனாகப் புறவெளியையோ, எதிரெதிர் மனிதர்களையோ நிறுத்திக் காட்டுவதைத் தவிர்த்துவிட்டுத் தனது மனத்தையே வெளியாகவும் காலமாகவும் ஆக்கிக் கொண்டு வர்ணிப்பதும் நிகழ்த்துவதுமான எழுத்தின் அடையாளமாக ஆதவனின் காகித மலர்களை வாசித்திருக்கிறேன்.

No comments :