December 18, 2013

காணாமல் போன ராமசுவாமி

நேற்று (17-12-2013)மாலை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியின் லயோலா அரங்கின் முன்பாக வியாபாராமாயணம் என்னும் நாடக நிகழ்வொன்றைப் பார்த்தேன். அக்கல்லூரியில் தகவல் தொடர்பியல் துறை ஏற்பாடு செய்திருந்தது. அதனோடு மேலும் சிவசுவும் , சித்திரமும் கைப்பழக்கம் கதிரும் இணைந்திருந்தார்கள். பாளையங்கோட்டையில் இவர்களைப் போன்ற தொடர்பாளர்களின் இணைப்புகளால் தான் பல நிகழ்வுகள் நடக்கின்றன. அதன் மூலம் நிறுவனங்களுக்குப் பெருமையும் ஏற்பாடு செய்பவர்களுக்குச் சில தகுதிகளும் உண்டாகின்றன. அதைப் பற்றி எப்போதாவது பேசலாம். இப்போது நாடகத்தைப் பற்றி .


நாடகப் பேராசிரியர் மு.இராமசுவாமி எழுத்தாக்கத்தை ராஜிவ் கிருஷ்ணன் இயக்கியிருப்பதாகக் குறிப்புகள் சொல்லப்பட்டன. நடிகர்களில் ஒருவர் மு.இராமசுவாமி; இன்னொருவர் ஆனந்தசாமி. இசை மணிகண்டன். மேடைநிர்வாகம் சுதர்சன்.

தமிழ்நாட்டின் வடக்கே தொடங்கி தெற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கும் அந்த நாடகத்தின் 20 ஆவது மேடையேற்றம் என கதிர் அறிமுகம் செய்த அந்த நாடகநிகழ்வு, 55 நிமிடங்கள் நிகழ்ந்தது. தரைத் தளத்திலேயே நிகழ்வுகளை விரித்த நாடகக் காட்சிகள் எனக்குத் தெரியாது எனக் கருதி பின் வரிசையில் அமர்ந்திருந்த நான் கொஞ்ச நேரம் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தேன். 10 நிமிடத்தில் அப்படி நின்று கொண்டே பார்க்க வேண்டியதில்லை என்று தோன்றியது. காட்சி மாற்றத்தை உரையாடல் மாற்றத்தைக் கொண்டே உருவாக்கிக் கொண்ட நாடகம், வசனத்தையே முழுமையாக நம்பி இருந்தது. உரையாடல்களின் ஒலியொற்றுமை, அதன் வழியாக உருவாகும்- உருவாக்கும்- நிகழ்கால அரசியல் அரசியல் அர்த்தம் பார்வையாளர்களிடம் அவ்வப்போது சிரிப்பொலியை உருவாக்கியது. 

நிகழ்காலப் பன்னாட்டு வியாபாரம் , விற்பதற்கான பண்டத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்ல, வாங்குபவர்களையும் அதுவே உற்பத்தி செய்கிறது; வாங்க வேண்டும் என்ற மன எழுச்சியையும் விளம்பரங்களின் வழி உற்பத்தி செய்கிறது. அதற்கான அழிவன பற்றியும், அழிப்பன பற்றியும் அதற்கு எந்தவித அக்கறையும் இல்லை; குற்றவுணர்வும் கிடையாது என்னும் கட்டுரைக்கான கருத்தை உரையாடல் வழிச் சொல்லிக் காட்டிய இந்த நாடகத்தை நிகழ்வாகத் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. முறையான ஒலிப்பதிவுக் கருவிகளைக் கொண்டு பதிவு செய்து குறுந்தகடுகளாகவே எல்லாருக்கும் அனுப்பி வைக்கலாம். நேரம் கிடைக்கும்போது போட்டுக் கேட்டுக் கொள்ளலாம். 

இந்த நாடகத்தின் முக்கியமான பங்கைச் செய்திருப்பவர் எனக்கு நாடக அறிவை - அரங்கச் செயல்பாடுகளின் காத்திரமான பணிகளை, பங்களிப்பைச் சொல்லிக் கொடுத்த மு.ராமசுவாமி. கண்வழிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலைவடிவம் அரங்கியல் கலை எனச் சொல்லித் தந்த மு.ராமசுவாமியைப் பார்க்கவே போனேன். அவர் இந்த நாடக மேடையேற்றத்தில் காணாமல் போயிருந்தார். 

கலகக்காரர் தோழர் பெரியார் - என்ற நாடகத்திலேயே காணாமல் போன மு.ராமசுவாமியை இந்த நாடகத்தில் தேடியது என்னுடைய தவறு தான். காணாமல் போனவர் அவராகவே திரும்பக் கிடைப்பது வரை தேடுவதை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

No comments :