May 30, 2013

தமிழர்கள் இப்படி மட்டும் தான் இருக்கிறார்களா ஜெயமோகன்?

இப்படி இருக்கிறார்கள் என்று தலைப்பு வைத்து ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=36719 எழுதிய அந்தக் கட்டுரை ”இப்படிப் பட்ட ஒரு கூட்டம்  தமிழ்ச் சமூகத்தில் இருக்கிறது” என்று எழுதிக் காட்டியதோடு முடித்திருந்தால் தனது வலைப்பூவில் அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளில் ஒன்று என நினைத்து வாசிக்கப்பட்டு விடப்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை வழங்காமல் இப்படிப்பட்ட கூட்டம் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்ல முயன்றதன்
     மூலம் தனது இலக்கு என்ன என்று அடையாளப்படுத்தி இருக்கிறார். அதைச்    
     செய்யும்போதே தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சரியானவர்கள்   
      வளையத்துக்குள் நிறுத்திக் கொண்டு தனது பயணம் சரியாக இருக்கிறது  
     எனக் காட்ட முயல்கிறார். ஆனால் தன்னைச் சுற்றி நிகழும் அற்பத் 
     தனங்களாலும் அறிவற்ற செயல்களாலும் தாண்ட முடியாத தடைகள் 
    தோன்றி  அப்பயணத்தைத் தடுத்துக் கொண்டே இருக்கின்றன எனச் 
     சலிப்படையவும் செய்கிறார்.
ஒரே கல்லில் மூன்று நான்கு காய்களை அடித்து விடும்-அதுவும் ஒரே மரத்திலிருந்து தேங்காய், மாங்காய், முருங்கைக்காய் என விதம்விதமான காய்களை அடித்துக் காட்டும் திட்டத்தோடு  செயல்படும் வல்லமை கொண்ட  ஜெயமோகனோடு அவரளவுக்கு லாவகமாகக் கல் வீசும் திராணியில்லாத மற்றவர்களுக்குச் சட்டென்று கோபம் தான் வரும். அப்படிக் கோபப்படும் நபர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட அப்பாவியின் பிரதிநிதிகளாக முன் நிறுத்திக் கத்தி வீசும் போது சுவாரசியம் கூடிவிடுகிறது. நடந்தது சண்டையா? குதியாட்டமா? கும்மியடிப்பா எனக் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் அதிகம் வெளிப்பட்டது கோபத்தின் கொப்பளங்கள் தான். அதன் மணம் எல்லாருடைய நாசிக்குள்ளும் நுழைந்து நிறைந்து விட்டது என்பதை முகநூல் காட்டியது. நுகர்ந்து பார்த்தால் அது சந்தன வாசனையா? ஜவ்வாது வாசனையா? அல்லது வழக்கமாக ஜீரணம் ஆகாததால் கிளம்பும் கற்பூரவாசனை(!)யா எனச் சொல்லவும் முடியவில்லை. இரண்டு நாள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துவிட்டு என் பங்குக்கு நானும் கொஞ்சம் ஊதிப் பார்க்கிறேன்.
இப்படிப் பட்டவர் என ஜெயமோகன் சுட்டிக் காட்டும் அந்த நபரை “சாதாரண மனிதர்களின் வகைமாதிரி”யாக எடுத்துக் கொள்ள முடியாது என் மனம் சொல்கிறது. அந்த மனிதர் -70 வயதைக் கடந்த அந்தப் பெரியவர் சாதாரண மனிதர் அல்ல. இலக்கியம் என்றால் என்ன என்று தனக்குத் தெரியும் என்று முழுமையாக நம்புபவர். ஜெயமோகன், நாஞ்சில் நாடன், தேவதேவன் போன்ற இலக்கியவாதிகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் அளவுக்குத் தனக்கு இலக்கியம் தெரியும் என நம்புபவர். தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ள வேண்டும்; இலக்கியம் தொடர்பாக நான் கேட்கும் வினாக்களுக்கு விடை சொல்ல வேண்டும்; தெரியவில்லை என்றால் யோசித்துச் சொல்ல வேண்டும்; அப்படியும் தெரியவில்லை என்றால், ‘தெரியவில்லை’ என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஒத்துக்கொண்டால் நான் அந்தப் பதிலைச் சொல்லிப் புரிய வைப்பேன். மொத்தத்தில், நான் வைக்கும் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் யாரையும் இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்வேன்; இல்லையென்றால் நீ இலக்கியவாதி அல்லது எழுத்தாளன் இல்லை என்று சான்றிதழ் கொடுத்து விட்டுச் செல்வேன் என்னும் திட்டத்தோடு வந்தவர்.
இவரின் சார்பாகப் பேசும் வேலை எனக்குக் கிடையாது. இவரின் சார்பாக நின்று பேசினால் ’என் சார்பில் பேச நீ யார்?’ என்று நம் மீதே பாயும் வல்லமை கொண்டவர் அந்தப் பெரியவர். ஆனால் அது தெரியாமல் ஜெயமோகனின் எதிராளிகள் பலரும் அவரைச் ’சாதாரண மனிதர்; அப்பாவி, பொதுமக்களில் ஒருவர்’ என உருவகித்துக் கொண்டு அவரை ஜெயமோகன் அவமதித்துவிட்டார் எனக் கோதாவில் இறங்கி விட்டார்கள். ஜெயமோகன் என்னும் அகம்பாவியால் அவமதிக்கப்பட்ட அந்த (அ)சாதாரண மனிதரின் சார்பில் களம் இறங்கி ஜெயமோகனை உண்டு- இல்லை என்று துவம்சம் செய்துவிட்டார்கள். எனக்கு அந்த வேலை இல்லை என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.  
*************
இலக்கியம் என்பது ஒற்றைப் பரிணாமம் கொண்டதா? எல்லாக் காலத்துக்கும் பொதுவான வெளிப்பாட்டு முறை களையும் நோக்கங்களையும் கொண்டதா?  தன்னோடு உரையாடும் இலக்கியவாதி அல்லது எழுத்தாளன் யார்? என்ன வகையான இலக்கியத் துறையில் ஈடுபட்டுள்ளவர்? அவரிடம் எது குறித்து உரையாடலாம் என்ற அறிதல் இன்றித் தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்ல வேண்டும்; தன் முன்னால் உள்ளவரை அடக்க வேண்டும்; மட்டம் தட்ட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உந்தித் தள்ளும் அகந்தை கொண்ட இந்தப் பெரியவரைப் போன்றவர்கள் இங்கே – தமிழ்நாட்டிலும் தமிழ் மொழியைப் பேசும் பாண்டிச்சேரியிலும் விரவிக் கிடக்கிறார்கள் எனச் சொல்ல வரும் ஜெயமோகன் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டிலிருந்து வேலைக்காக அமெரிக்க,கனடா போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியத் தமிழர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கும் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை; எனக்கு நன்கு தெரிந்த -தமிழ்நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கேரளத்தில் –கர்நாடகத்தில் இப்படிப் பட்டவர்கள் இல்லை. ஒரு வெள்ளையரிடம் அல்லது மலையாளியிடம், கன்னடத்தானிடம் நான் ஒரு எழுத்தாளன் என அறிமுகம் செய்து கொண்டு அதற்கான முழு மரியாதையையும் அர்த்தத்தையும் பெற்று விட முடியும். அதைப் போல தமிழர்களிலேயே ஈழத்தமிழர்களிடம் தன்னை “எழுத்தாளன்” என்று அறிமுகம் செய்து கொள்ள முடியும். அவர்கள் ’எழுத்தாளனை’ உணர்ந்து கொள்ளக் கூடியவர்கள் என்று விதிவிலக்கைச் சுட்டிக் காட்டும் ஜெயமோகன் தான் ஒன்றிரண்டு தடவை சென்று வந்த மலேசிய,சிங்கப்பூர் தமிழர்கள் பொதுவிதிக்குள் இருக்கிறார்களா?விதிவிலக்குக்குள் வருவார்களா எனச் சொல்லவில்லை. விடுவதும் சேர்ப்பதும் ஜெயமோகனின் விருப்பம். விட்டு விடலாம்.
இந்தப் பொதுவிதி சரியானது தானா? என்று கேள்விக்கு எவரொருவரும் சரியான பதிலைச் சொல்ல முடியாது. வெள்ளைக்காரன் அல்லது இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் அல்லது ஈழத்தமிழர்கள் எல்லாரும் ஒவ்வொன்றையும் சரியாகவே புரிந்து கொள்கிறார்கள்; அதிலும் இலக்கியம் அல்லது எழுத்தாளன் என்று வரும் போது மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் தான் (அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும்) எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமலே தனக்கு ’எல்லாம் தெரியும்’ என்ற மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பொதுவிதிக்குப் புள்ளி விவர ஆதாரம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம் இருக்கிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் அல்லது இலக்கியவாதி- தமிழ்நாட்டில் எல்லா வகையான தமிழர்களையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பும் கிட்டுகிறது. இந்தியத் தமிழர்கள் வாழும் அந்நிய நாட்டிலும் இதே நெருக்கடி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் பிறமொழி பேசும் மனிதர்களுக்கிடையேயான சந்திப்பு அல்லது உரையாடல் என்பது தன்னையொத்த கருத்துடைய அல்லது தான் இயங்கும் தளங்களில் பரிச்சயமான மனிதர்களையே சந்திக்க நேரிடும்; உரையாடவும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் ஒரு எழுத்தாளராக- கலைஞனாக- பேராசிரியராக அழைக்கப்பட்டிருந்தால், அழைக்கப்பட்டவரின் அடையாளத்தோடு உங்களின் அடையாளத்தைப் பொருத்திக் கொண்டு தான் உங்களோடு உரையாடுவார்கள்; மதிப்பார்கள்; மரியாதை செய்வார்கள். அங்கு காட்டப்படும் எதிர்வினை அல்லது உறவுநிலை என்பது முழுமையும் உங்களுக்கானது அல்ல. உங்களை அழைத்து அறிமுகப்படுத்தும் நபர் அல்லது அமைப்புக்கான அடையாளத்தோடு தொடர்புடையது. அந்தச் சந்தர்ப்பங்களின் அனுபவங்களை மட்டும் வைத்து கொண்டு மற்ற மொழிக்காரர்கள் சரியாக இருக்கிறார்கள்; தமிழர்கள் தான் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விட்டார்கள் எனச் சாபம் தருவது பொருத்தமாகத் தோன்றவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போலந்தில் வாழும் நான் மொழி, இலக்கியம் சார்ந்த நபர்களையே அதிகம் சந்திக்கிறேன். அவர்களோடு உரையாடுகிறேன். மற்றவர்களோடு உரையாடும் போது அவர்கள் இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி- பொதுவாழ்க்கை பற்றி- அரசியல் பற்றி- இந்திய உணவைப் பற்றிக் கேட்பார்கள். நானும் அவர்களிடம் அதே போன்ற கேள்விகளையே கேட்பேன். பதில் சொல்வார்கள். இந்த உரையாடலும் கூட ஆங்கிலம் தெரிந்த போலந்தியர்களோடு மட்டுமே சாத்தியம். 1980 –க்குப் பின் பள்ளியில் படிக்கப் போனவர்களுக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும். அதற்கு முன்பு கற்று முடித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. போல்ஸ்கி தான் தெரியும். ஆனால் ரஷ்யன் தெரியும். காரணம் அப்போது போலந்து சோசலிசக் கட்டமைப்புக்குள் – வளையத்துக்குள் இருந்தது.  சோவியத் யூனியனின் நட்பு வட்டத்தில் இருந்தபோது கொண்டாடப் பெற்ற பலவும் இப்போது மறக்கப்படும் நினைவுச் சின்னங்களாக ஆகிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் நாடகக்காரர்களால் நினைக்கப்படும் – படிக்கப்படும் குரோட்டோவ்ஸ்கியைத் தெரியாத பல்கலைக்கழக மாணவர்களே அதிகம் இருக்கிறார்கள். சோசலிசக் காலத்தில் சிறந்த படம் எடுத்த ஆந்த்ரே வெய்தா போன்ற சினிமாக்காரர்கள் புதிய பொருளாதார மாற்றத்துக்குப் பின் நிகழ்காலச் சமூகத்தையும் மனப்போக்கையும் புரிந்து கொண்டு புதியவகைப் படங்களைக் கொடுப்பதால் நினைக்கப்படுகிறார்கள்; கொண்டாடப்படுகிறார்கள். ஒரு நாட்டில் கலைஞர்கள் – எழுத்தாளர்கள் மதிக்கப்படுவதும் கொண்டாடப்படுவதும் வெறும் புரிதலை மட்டும் சார்ந்ததோ மனப்பாங்கு சார்ந்ததோ மட்டும் அல்ல; அது ஓர் அரசியல் கேள்வியும் கூட என நினைக்கிறேன். தான் நம்பும் அரசியல் இயக்கம் முன் வைத்த இலக்கியப் போக்கை – பிரதிநிதிகளை- எழுத்தாளர்களை மட்டுமே ஏற்கும் மனநிலையோடு இருக்கிறது பொது மனம். பொதுமனம் மட்டுமல்ல ஓர் இலக்கிய இயக்கம் சார்ந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாசிப்பு மனம் கூட அப்படித் தான் இருக்கிறது.
பாண்டிச்சேரியில் தங்கியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான அந்த நண்பர் ஓர் இலக்கிய வாசகர் என ஜெயமோகன் அறிமுகப்படுத்துகிறார். ஆனால் அவர் எப்படிப்பட்ட வாசகர் என்று தெரியாது. ஜெயமோகனின் புனைகதைகளுக்கு மட்டும் வாசகரா? விமரிசனங்களுக்கும் வாசகரா? நிகழ்காலச் சமூக முரண்பாடுகளை விளக்கிக் காட்டும் அரசியல் எழுத்துகளுக்கும் இந்தியத் தத்துவ ஞான மரபைப் பேசும் சொல்லாடல்களுக்கும் கூட அவர் வாசகர் தானா? என்ற கேள்விகளுக்கு ஜெயமோகனிடம் கூடப் பதில் இருக்குமா? என்று தெரியவில்லை. ஜெயமோகனின் வாசகராக இருப்பதாலேயே நாஞ்சில் நாடனுக்கும் அவர் வாசகராக இருக்கும் சாத்தியங்கள் உண்டா? தேவதேவனின் கவிதைகளுக்கும் நாடகங்களுக்கும் கூட வாசகராக இருக்கிறாரா? என்ற கேள்விகளுக்கு யாரிடம் பதிலைக் கேட்பது? ”அவர் நல்ல வாசகர்; இனியவர்; இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர் என்று ஜெயமோகன் சொல்லி விட்டதால் நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவ்வளவு தான். அதையெல்லாம் விட அவர் எந்தக் கேள்வியும் கேட்காமல் ஜெயமோகனை மட்டுமல்ல; நாஞ்சில் நாடனையும், தேவதேவனையும் ஏற்றுக் கொண்டவர். அதனால் அவரை நல்ல வாசகர் என்று ஜெயமோகன் ஏற்றுக் கொண்டு அவர் வீட்டில் தங்கியிருக்கிறார். அவரும் இதே தமிழ்ச் சமூகத்தில் தான் இருக்கிறார் என்பதை ஜெயமோகன் எப்படி மறந்து விடுகிறார் என்பதுதான் தெரியவில்லை.
இன்று தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் அதிகம் பேரால் வாசிக்கப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களில் ஒருவராக ஜெயமோகன் இருக்கிறார் தானே. அதனால் தானே அவரது வாசகர்களின் வீடுகளில், ஏற்பாடு செய்யும் தங்கும் விடுதிகளில் தங்க முடிகிறது. அவரது நூல்களை வாசித்த தமிழர்களின் அழைப்பின் பேரில் தானே அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் எனச் சுற்ற முடிகிறது. அவரை அழைப்பவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்கள் தானே? உங்களைக் கொண்டாடும் வாசகர்கள் இருக்கும் இதே பரப்பில் –வெளியில் தான் மற்றவர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகனையும் ஜெயமோகனுக்காக நாஞ்சில் நாடனையும் தேவதேவனையும் ஏற்றுக் கொண்டு அழைத்து மரியாதை செய்யும்- எல்லாவற்றையும் கேள்விகள் இல்லாமல் கேட்டுக் கொள்ளும். அந்த நல்ல வாசகருக்குப் பக்கத்து வீட்டுக்காரராக “இப்படி”ப்பட்டவரும் இருக்கவே செய்வார்கள். இருந்துவிட்டுப் போகட்டுமே. சும்மா இருக்காமல் உங்கள் நண்பர் மூலம் வந்து உங்களுக்குத் தேர்வு வைக்கிறார் என்றால் “தேர்வை எழுத முடியாது” என்று சொல்லி அனுப்பி விடுவதே சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு அடிப்பேன்; உதைப்பேன் என்றால் அது சாதாரண மனிதர்களை விடக் கீழானவர்களாகப் படைப்பாளியைக் கீழே இறக்கி விடும் என்றே நினைக்கிறேன். இலக்கியம் படிக்க வந்த மாணவனின் அறியாமைக்காக ஒரு பேராசிரியர் கோபப்படக் கூட முடியாது நண்பர்களே.. அவர் அப்படி இருப்பதில் யாருக்கு என்ன வந்தது? அவருக்குப் பக்கத்து வீட்டில் தானே ஜெயமோகனின் வாசகரும் இருக்கிறார்.  
ஜெயமோகனின் வாசகருக்கு தனது பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி நன்கு தெரிந்தே இருக்கிறது. என்ன வகையான நூல்களை வாசிப்பார் என்பதும் கூடத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவரிடம் ஜெயமோகனின் ‘சங்க சித்திரங்களை’ கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நல்ல வாசகருக்கு- இனியவருக்கு(!) ஜெயமோகன் உள்ளிட்ட இலக்கியவாதிகள் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் எப்படி நடந்து கொள்வார்கள்? தன்னோடு உரையாட வரும் ஒருவரிடம் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதைப் பற்றித் தான் தெரியவில்லை. அதனால் தான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. தன் வீட்டில் வைத்து அவமானப் படுத்தப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரோடு அந்த நல்ல வாசகரின் பிந்திய உறவு எப்படி இருக்கும் என்பது பற்றி ஜெயமோகன் கவலைப்படவில்லை. அவரோடு சேர்ந்து தங்கியிருந்த நுட்பமான மன உணர்வும் அறிவுச் செருக்கும் கொண்ட இலக்கியவாதிகளும் வாசகர்களும் கவலைப்படவில்லை.
ஜெயமோகனின் கவலையும் கோபமும்” இப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள்” என்பதைவிடவும், இப்படிப்பட்டவர்கள் உருவாகக் காரணமான தமிழக அரசியல் வரலாற்றின் மீதுதான் என்பதை நான் சுலபமாக உணர்ந்து கொள்கிறேன்... இப்படிப்பட்டவராக அறிமுகப்படுத்தப்படும் அந்தப் பெரியவர் சி.என்.அண்ணாதுரையைப் பெரிய அறிஞராகவும், அவரது பேச்சையே பேரிலக்கியமாகவும் கருதி வாசித்தவர். கண்ணதாசனின் திரைப்பாடல்களை ரசிப்பதையே இலக்கிய ஆராய்ச்சியாக நினைப்பவர்; தமிழின் தொன்மையை நிலைநாட்டுவதையே சமூகவரலாற்றாய்வின் உச்சமாகக் கருதுபவர். மொத்தத்தில் அவர் திராவிட இயக்கத்தால் காலியாக்கப் பட்ட மூளைக்கூட்டோடு அலைபவர். இவரைப் போன்றவர்களையே திராவிட இயக்கம் உருவாக்கி எங்கும் நிரப்பியிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் தான் சுந்தரராமசாமியைச் சந்தித்த பேராசிரியர். நாட்டுப்புற வரலாற்றாய்வாளர் அ.கா. பெருமாளின் ஆராய்ச்சியைக் காது கொடுத்துக் கேட்காத ஆடிட்டர்; வேம்பூர் ராமசாமியை சுந்தர ராமசாமியாக நினைத்துக் கொண்ட கனடா வாழ் இந்தியத்தமிழர்கள். இத்தகையவர்களைத் திராவிட இயக்கத்தின் வார்ப்பு எனப் பொதுவாகச் சொல்வதைவிட தி.மு.க.வின் வார்ப்பு எனச் சொல்வதே சரியாக இருக்கும். இந்த இலக்கோடு எழுதப் பெற்ற அந்தக் கட்டுரை திமுகவினரைத் தலித்துகளுக்கு எதிரானவர்களாகவும் முன் நிறுத்துகிறது. அதேநேரத்தில் ஜெயமோகனும், ஜெயமோகனோடு சேர்ந்து இலக்கியப் பயணம் செய்து கொண்டு இயங்கும் நாஞ்சில் நாடனோ, தேவதேவனோ அப்படிப்பட்டவர்கள் அல்ல; அவர்களுக்காக இயங்குபவர்கள்; ஆதரவாளர்கள் எனக் காட்டவும் முயல்கிறது.
*************
அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளை முன் வைத்து வெகுமக்களைத் திரட்டாமல் பண்பாட்டுக் காரணங்களை – மொழி, இன அடையாளங்களுக்கு ஆபத்து என்னும் பண்பாட்டுச் சொல்லாடல்களை முன் வைத்து ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அது நிகழ்காலத்தை மறந்து கடந்த காலத்தின் பண்பாட்டு அடையாளங்களை திரும்பவும் நிலைநாட்டிவிடும் நோக்கம் கொண்டது. சமகால வாழ்வையும் முரண்பாடுகளையும், அதற்குள் தனிமனிதர்களின் இருப்பையும் அலைவையும் தவிப்பையும் நுட்பமாகப் பேசும் இலக்கியப் போக்கை உருவாக்காமல் புறநிலையில் தன்னைத் தனது படைப்புகளிலிருந்து விலக்கி வைத்துக் கொண்டு மற்றவர்களுக்குப் போதிக்கும் தன்மை கொண்ட இலக்கிய வகைமைகளையும் எழுத்தாளர்களையுமே ஆதரிக்கும் கொண்டாடும் இயல்பு கொண்டது. அது தனது அரசியல் வெற்றிக்கு உதவும் பரப்பியல்வாத எழுத்துக்களை – ஊடகச் செயல்பாடுகளை- கேளிக்கை வடிவக் கலை வடிவங்களை மட்டுமே ஆதரித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறது என்ற விமரிசனத்தை மறைமுகமாக முன் வைக்கிறார் ஜெயமோகன். அந்த விமரிசனத்தோடு முரண்படுகிறவர்களும் ஏற்காதவர்களும் உரிய பதில்களை எழுப்பியிருக்கலாம். அதற்கான முயற்சியை முன்னெடுக்க நினைத்த ராஜன்குறை அடுத்த அடியை வைக்காமல் மலைத்து நின்று விட்டார். அப்படி மலைக்கச் செய்தது கலைஞர்கள் X சாதாரண மனிதர்கள் என்ற எதிர்வாக ஆக்கி திசை திருப்பியவர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் என நினைக்கிறேன். எண்ணிக்கைப் பெருக்கம் மட்டுமல்லாமல் முகநூல் பிரபலமான மனுஷ்யபுத்திரன் அதிரடியாகக் கலைஞர்களை ஆதரிக்க வேண்டிய கூச்சலுடன் வரிசையாகப் பதிவுகளை இறக்கி விட்ட வேகமும் இன்னொரு காரணமாக மாறி விட்டது. கவிதா முரளிதரன் போன்றவர்கள் நாஞ்சில் நாடனின் தலித் ஆதரவு கேள்விக்குரிய ஒன்று என இன்னொரு பக்கம் இழுத்தார்கள். கட்டுரையில் வெளிப்படும் ஈழ ஆதரவு முகம் கூட நேர்மையானது அல்ல; காரியார்த்தமானது எனச் சிலர் பின்னூட்டம் இட்டார்கள். மொத்தத்தில் ஜெயமோகனின் கட்டுரையை மையமாக்கி எழுப்பிய கும்மியொலி குதூகலமாக ஆகிக் கரைந்து கொண்டிருக்கிறது. 
கட்டுரை நீண்டு கொண்டே போகிறது என்பதால் விவாதப் புள்ளிகளை மட்டும் சுட்டிக் காட்ட முடிக்கலாம் என நினைக்கிறேன். 
·          பண்பாட்டுச் சொல்லாடல்களை முன் வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் எதிர்விளைவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து அரசியல் கட்சிகளாக இருந்து கொண்டிருப்பதற்கும், ஆட்சியை மாறிமாறிப் பிடிப்பதற்கும் அவை முன் வைக்கும் பரப்பியல் வாதச் சொல்லாடல்களே காரணங்கள். அவை சுலபமாகக் கைவிட்டு விட முடியாத இடஒதுக்கீடு, சமூகநீதி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என்பனவற்றில் பற்றுக் கொண்டிருக்கின்றன. இவை தொடர வேண்டும் என்பதற்காகப் பண்பாட்டுக் கொள்கை எதுவும் இல்லாத அந்த இயக்கத்தை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருப்பதும் கல்வி, சுற்றுச்சூழல், அழகியல் வடிவங்கள் போன்றவற்றைத் தொலைத்துக் கொண்டிருப்பதும் சரியான திசைவழி தானா?  இந்தக் கேள்வியை ஜெயமோகன் நேரடியாகக் கேட்கவில்லை என்றாலும் அவர் உள்ளார்ந்து இந்தக் கேள்வியை எழுப்புவதாக நினைக்கிறேன். அந்தக் கேள்வி விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி என்பதை அவசியமானதாகவும், அவசரமானதாகவும் நினைக்கிறேன். பலரும் அப்படி நினைக்க வாய்ப்புண்டு என்பது என் கருத்து.   
·          இதேபோல் திராவிட இயக்கத்தை எப்போதும் எதிர்நிலையில் நிறுத்தி விமரிசனம் செய்த க.நா.சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, சுந்தரராமசாமி போன்றவர்களிடம் எல்லாவற்றையும் ஏற்கும் மனநிலை இருந்ததில்லை என்பதையும் விவாதிக்க வேண்டும். திராவிட இயக்கத்தவர்கள் வாசிக்கிறார்கள்; பேசுகிறார்கள் என்பதானாலேயே சங்க இலக்கியங்களை ஒதுக்கி வைத்தவர்கள் தானே அவர்கள். ஜெயமோகன் கொண்டாடிய- கொற்றவை என்னும் நவீனக் காப்பியம் எழுத உந்துதல் தந்த மகாகாவியமான சிலப்பதிகாரம் பற்றிப் பேசாமல் கம்பராமாயணம் பற்றிப் பேசியதின் காரணங்களையும் விவாதிக்க வேண்டும். அவர்களிடம் செயல்பட்ட மனப் பாங்கு எத்தகையது? அவர்களின் வாரிசுகளாக – வாசகர்களாக நினைத்துக் கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் சொல்ல வேண்டும் தானே.? நவீன இலக்கியப் பிரதிகளை வாசிக்காத பேராசிரியர்களை விநோதமான பார்வையில் பார்த்துக் கேலி செய்யும் நபர்கள் தொல்காப்பியக் கவிதையியல் பற்றித் தெரியாது என வருத்தப்பட்டதுண்டா?  
·          திராவிட முன்னேற்றக் கழகம் இப்படிப் பட்டவர்களை உருவாக்கிப் பரப்பியிருக்கிறது என வருத்தப்படும் ஜெயமோகனால், அதற்கு மாற்றாக எல்லாவகைப் போக்குகளையும் அங்கீகரிக்கும் அரசியல் இயக்கம் ஒன்றைக் கைகாட்டினால் மகிழ்ச்சியடைவேன். அரசியல் இயக்கம் கூட வேண்டாம். இலக்கிய இயக்கங்களையாவது காட்டினால் போதும். அவரை மையப்படுத்தி இயங்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்றவை அத்தகைய முயற்சி என்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதைச் சுலபமாக என்னால் சொல்ல முடியும்.

·          இங்கே எல்லா அமைப்புகளும் இயக்கங்களும் மனிதர்களும் ஒதுக்குவது – ஒதுங்குவது என்ற அடிப்படையிலிருந்தே தங்களின் நகர்தலைச் செய்கிறார்கள். ஒதுக்குவது –ஒதுங்குவது என்பது சாதியக் கட்டுமானத்தின் –தீண்டாமையின்  அடிப்படைக் கூறு. அதன் இயல்பான இருப்பே என்னை ஏற்றுக் கொள்; நான் உனக்கான அடையாளத்தை வழங்குவேன் என்பதாக இருக்கிறது. அதிலிருந்து விலகிய சொல்லாடல்களை எப்படி உருவாக்குவது என்பதைக் கண்டறியவே என் காலம் முடிந்து போகும் போலும். 

2 comments :

அன்பென்று கொட்டு முரசே said...

அருமையான கட்டுரை சார். நுட்பமான வாதங்கள். இந்தச் சச்சரவை நானும் சில நாட்களாகக் கவனித்து வந்தேன். அதில் இருந்த சிடுக்குகள், உங்கள் கட்டுரையில் அவிழ்ந்து விட்டது. நன்றி.. இனி அடுத்த வேலையைக் கவனிக்கலாம். ஜெ.மோ இப்படியொரு கட்டுரை எழுதுவதை விடவும், தன் அமைப்பை நீங்கள் குறிப்பிடும்படியான இலக்கிய அமைப்பாக மாற்ற முயற்சிப்பதே சரியான புரிதலாக இருக்கும். இல்லாவிட்டால் அந்தக் கட்டுரையும் ஜெ.மோவின் மற்றொரு வசைக்கட்டுரையாக மாறி விடும். வாயே திறக்காமல் தேவதேவனும் நாஞ்சில் நாடனும் பட்ட பாடுதான் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

மதுரை ரவி said...

sariyana mayyathai nokki nagaratha aanal nutpangalai vulladakkia katturai.

சரியான மையத்தை நோக்கி நகராமல் எடுத்து வைக்கப்பட்டுள்ள நுட்பங்கள் அடங்கிய கட்டுரை என்பது என் கருத்து.விவாதப் பொருள் குறித்து புதிய குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.ஜெ.மோவின் குதிரைகளின் அருகே அவையும் மேயட்டும்

மதுரை ரவி