March 04, 2013

தேடுதல்…


இசையை நகர்வுப்படங்களாக மாற்றுவதையே
முக்கிய நோக்கமாகக் கொண்ட இந்நாடகம்,
சூழல் சார்ந்த உயர்வை உண்டாக்கவே விரும்புகிறது.
இதில் இடம்பெறும் நடிப்புச் செயல்களோ வார்த்தைகளோ இசையை
மீறியதாக இல்லாமல் ஒத்திசைந்தனவாக அமைய வேண்டும்.
இதற்காகத் தடித்த கம்பி வாத்தியங்களின் –சரோட்அல்லது
தில்ரூபாவின் ராகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அந்த ராகங்களும் பல்தள வெளிப்பாட்டு முறையிலான
ஸ்டீரியோ மூலம் வெளிவர வேண்டும்.
மற்ற நாடகங்களில் பின்னணியுணர்வை உண்டாக்க
இசை பயன்படுவது போல இதில் இல்லை

ராகம்: தர்பாரி கனடா
தாளம்: திரி தாளம்
கருவிகள்: சரோட், தபேலா

தேடுதல்
பாத்திரங்கள்:
முதியவன்      – நாற்பத்தி ஐந்தினைக் கடந்தவன். ஆனால்   
                  முதியவனாகத் தோற்றம் தருகிறான்
இளையவன்    – இருபத்தியிரண்டையொட்டிய வயது
பெண்          - முப்பதினையொட்டியவள்
குழுவினர்      - ஐந்துபேர் கொண்ட இக்குழுவில் இரண்டு பெண்கள்,  
                 மூன்று ஆண்கள். தீர்மானிக்க முடியாத வயதினர்.   
                 இளமையானவர்கள். முதல் மூன்று பேரைவிட உயரம்    
                குறைந்தவர்கள்.

 ============================================================================== 
வெற்று மேடையில்  பலிபீடம் மையத்தில் உள்ளது. இரண்டு ஏட்டுச் சுவடிக் கட்டுகள்,
கண்ணிகள் கொண்ட கயிற்றில் கட்டி பீடத்திற்குப் பின்புறத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட படங்கள் விளக்குகளின் உதவியால் பின் திரையில் படங்களாகின்றன.
கலைடாஸ்கோப் உதவியால் கூட மாறும் சித்திரங்களை உருவாக்கலாம்.

மேடையில் மங்கலான ஒளி, சிதறலான வெளிச்சம். செம்மை படர்ந்த சிதறல்.
பீடத்தின் பின்புறம் இரண்டு மனிதர்கள் முழங்காலிட்டுள்ளனர்.
அவர்களது முகங்கள் மட்டும் பீடத்திற்கு மேல் தெரிகின்றன.
அவர்களது நிலை தேவாலயத் தொழுகை போலவோ, வெட்டப்படுவதற்குக் காத்திருக்கும் குற்றவாளிகளுக்குரியதாகவோ இருக்கலாம்.

இருவரும் நல்ல உயரம். சதைப் பிடிப்பற்றவர்கள். கருப்பு உடையின் மீதான கயிறுகள் ஒரு கரடு ம்முரடானதாக – சாமியார்களின் கழுத்து மாலைகளைப் போல இருக்க வேண்டும்.
முதியவன் ஒழுங்கற்ற தாடியுடன் – இளையவன் சுத்தமாக மழிக்கப்பட்ட முகத்துடன் – முதியவனிடம் மதபோதகனின் தோற்றம்.
இளையவனிடம் திக்குத்தெரியாத குழந்தைத் தனமான வெளிப்பாடு.

பீடத்தில் கிடக்கும் முதியவனிடம் கத்தி உள்ளது.
அவன் எழும்போது வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகிறது.
====================================================================
முதியவன்:      சகோதரனே எழுக! எழுக! 
நேரம் வந்து விட்டது.
இளைஞனின் கையைப் பிடித்துத் தூக்குகிறான். இன்னும் இளைஞன் திக்குத் தெரியாத நிலையில் இருக்கிறான்.
முதியவன் இளைஞனை ஏடுகள் கட்டியுள்ள கயிற்றுக் கண்ணிகளின் அருகில் இட்டுச் சென்று கைகளில் கண்ணிகளை மாட்டி விடுகிறான். அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்ட குற்றவாளியைப் போல – உடல் விறைப்பாக – நிற்கிறான். முதியவன், அவன் எப்படி நிற்கிறான் என்பதைப் பார்வையிடுபவனாகச் சுற்றி வந்து, கைகளை உயர்த்தி நீட்டி, இளைஞனின் தோள்களில் வைத்து, வாழ்த்திப் போற்றுவதுபோல நிற்கிறான். இளைஞனின் உடலில் பரவும் அவன் கைகளால் கூச்ச உணர்வும், சுணக்கங்களும் உண்டாகும் நிலை: என்றாலும் அவன் விறைப்பாகவே நிற்கிறான். உடல் முழுவதும் தடம் பதித்துவிட்டு மெல்லியதாய் ஒரு புன்னகை. ஒருவிதக் கோணல் தனமான புன்னகை – வனதேவதையின் புன்னகை போல … சிலம்பை உடைக்கும் சடங்கை நினைவூட்டும் ஓவியக் காட்சி போல முதியவன் மண்டியிட்டுள்ளான்.
திடீரென்று கடமையை உணர்ந்தவனாய் கைகளால் கால்களைத் தடவிவிட்டு எழுந்து, பீடத்திலிருந்து கத்தியை எடுத்து இளைஞன் மீது காயங்களை உண்டாக்குகின்றான்.
இளைஞனின் உடல் சற்று உயர்ந்து, தலை மட்டும் தோள்களுக்கிடையில் தொங்குகிறது.
ஒளி மங்கலான நிலை. முதியவன் கள்ளப்பார்வையுடன் கத்தியைப் பீடத்திற்குள் மறைத்து விட்டுக் கன்றுக் குட்டியைப் போல துள்ளியோடி தொங்கு திரைக்குள் மறைகின்றான்.
நிசப்தம். மெல்லிய வெளிச்சத்தில் இளைஞனின் நிழலுருவம். அவனது நிழல் பெரிதாகப் பின் திரையில் தெரிவதென ஒளியமைப்பு. இந்தப் பின்னணியில் பல தள ஒளிக்கருவிகளின் வழியே ஆலாபனை வரத் தொடங்குகிறது.

[மீதமுள்ள நிகழ்வு ராகத்தின் இயல்புக்கேற்ப ஒத்திசைந்து நகர்ந்து.
உச்சத்தின் முடிவில் நிறைவு பெற வேண்டும் ]

இசையின் ஒலி கூடும்போது வெளிச்சம் கூடுகிறது. நிழலற்ற வெண்மையான வெளிச்சத்தின் விரல்களில் இளைஞன் நிற்கிறான்.
மெதுவாக ஊர்வலக் கூட்டம் நுழைகிறது. உயரமான நீண்டு விரிந்த கூந்தலோடு கூடிய பெண்ணால் தலைமை ஏற்கப்பட்டு வரும் ஊர்வலம் அது. அவளது அங்க அசைவுகளின் வளைவுகளை ஒளி அமைப்பு துல்லியமாக வெளிக்கொணர வேண்டும். தனது முலைகளைப் பெருமையுடன் தாங்கி வருபவளாக – நிமிர்ந்த நடை- அவளோடு ஐந்து பேர் –கறுப்பான –கயிறுகள் ஓடிய, முரட்டுத்தனம் வெளிப்படும் உடை அணிந்தவர்கள். அவர்களது கயிறுகள் தரையில் புரள்வனவாக உள்ளன.
தலைமையேற்று வந்த அவள், இளைஞனைப் பார்த்து, உயரத்தைக் குறைத்து நிற்கிறாள். நின்று நோக்க, அவனிடத்தில் அசைவுகள் இல்லை. அப்படியே உயர்ந்து நிற்கிறான்.
பீடத்தின் மறுபக்கம் போய் நின்று அவனைத் திகைப்புடன் பார்க்கிறாள். ஐந்து பேரும் குழுமி நின்று இளைஞனை நோக்குகின்றனர். அப்போதைக்கப்போது பெண் பக்கம் திரும்புகின்றனர். அவள் எதுவும் செய்வாளோ என்ற எதிர்பார்ப்பு.
அவளுக்கு ஐந்து பேர் தன்னைப் பார்க்கிறார்கள் என்ற பிரக்ஞை வர, சுற்றிலும் பார்த்து விட்டு, பீடத்தில் இருந்து கத்தியை எடுக்கிறாள். ஒரே வீச்சாக அவனைக் கட்டியுள்ள கயிற்றை வெட்டி விடுகிறாள். நிற்பதற்கான ஆதாரம் இல்லாததால் இளைஞன் உடல் தரையில் குலைந்து விழுகிறது.
எதிர்பாராத இந்த வினையால், பெண் பின்புறம் நகர்கிறாள். அவனையையும் கத்தியையும் மாறிமாறிப் பார்க்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.
கத்தியைப் பீடத்தில் மறைத்துவிட்டுக் குனிந்து அவனைத் தொட முயன்று, மனம் மாறியதால் பின் வாங்குகின்றாள்.
பெண்  ; ஓஓ… அம்ரத்ஸ்ய புத்திரனே! எழுக!!
                [அவள் அவனை எதிர்பார்ப்பவன் போல் நோக்க, 
         மற்றவர்களிடமும் அத்தகைய எதிர்பார்ப்பு.  மெதுவாகத்   
          தரையில் ஒரு கலக்கம். ஒரு வேதனையொலி வருகிறது.
இளைஞன் கால்களுக்குள் பதுங்கி, நகர்ந்து பீடத்தைப் பிடித்து முழங்காலிடுகிறான். கண்களைத் தேய்த்துக் கொள்கிறான். அவன் தொடக்க நிலையில் முழங்காலிட்டது போல முழங்காலிட்டுள்ளான். பார்வையாளர்கள் பக்கம் திரும்பியுள்ளான்.

இளைஞன் : (மெல்லிய தனிக்குரலில்) இதுவும் அதுவே.. எல்லா நேரமும்…  நான்…. நான் என்பது என்ன?
மெதுவாக மற்ற உருவங்கள் இருப்பதை உணர்ந்தவனாய், மெதுவாய் எழுந்து பின் திரையருகில் பதுங்கிப் பாதுகாப்புத் தேடுகின்றவனாய் நிற்கிறான்.
முதலில் தனியாய் நிற்பவனைப் பார்க்கிறான். பின்னர் குழுவினரைப் பார்க்கிறான். குழப்பம் போகவில்லை. பெண் பக்கம் திரும்பி, அவளை நோக்கி, கனவில் நடப்பவன் போல முன்னேறுகிறான்.
பெண்ணிடம் ஒரு பின்னடைவு. முகத்தில் ஒருவித பயம். பீடத்தின் இடதுபுறத்தில் அவர்களது வினைகள், பார்வையாளர்களுக்குத் தெரியும்படி நடக்கிறது. அவன் திடீரென்று அவள் முன்பாக மண்டியிடுகிறான். அவள் பின்னால் நகர்வதை நிறுத்திக் கொண்டு முன்னோக்கி நகர்கிறாள். ஒரு தேவதையிடம் வாஞ்சையோடு மண்டியிடுபவன் போல் மண்டியிட்டு நோக்குகிறான்.
பெண்          : பயப்படாதே… நீ ..
பயப்பட எதுவும் இல்லை.
நான் .. நீ… என்ன…
ஓ.. அம்ரத்ஸ்ய புத்திரனே.
எழுக.!
அவள் அவன் மீது கைகளைப் பதிக்கிறாள். அவன் சில கணங்கள் சிலையாக நிற்கிறான். குழப்பம்
அவன் மெதுவாகக் கண்களை உயர்த்தி அவளைக் கூர்ந்து நோக்குகிறான். இரண்டு பேர்களுடைய கண்களும் சந்தித்துக் கொள்கின்றன. இதற்குமேல் என்ன இருக்கிறது என்பதான அந்த உணர்வை மேடையில் முழுவதும் பரப்புகின்றனர்.
நிசப்தம்.. உயரும் ராகத்தில் ஒலி மட்டும் வருகிறது. நடிகர்களின் ஆழமான மூச்சுவாங்கும் ஒலி. ஐந்துபேரும் செய்வதற்கென்ன இருக்கிறது என்பதான மனநிலையில்..
இளைஞன் நீட்டிய பெண்ணின் கையை இறுகப்பற்றி அதன் உதவியால் எழுகிறான். அவளை  நோக்கி நகர்கிறான். அவள் பின் வாங்கவில்லை. அவள் விறைப்பாக நிற்கிறான். கூடுதலான எதிர்ப்பு மனநிலை.
இளைஞன் நகர்விலிருந்து திடீரென்று நின்று விடுகிறான். உணர்வு வந்தவனாய் சுற்றிலும் பார்க்கிறான். அவனது  கைமுட்டி வாயருகில் செல்ல, உடனே பீடத்தைத் துணையாகப் பிடித்துக் கொள்கிறான். ஒரு வேதனைக்குரல் வெளிப்படுகிறது.
பீடத்தருகில் வேதனையுடன் நிற்கிறான். ஒருகை முகத்தை மறைக்க இன்னொன்றால் பீடத்தைப் பிடித்துள்ளான். அவனது தலை வாட்டத்தோடு தொங்குகிறது. புலம்பல் வெளிப்படுகிறது.
பெண்ணுக்கு எதுவும் புரியவில்லை. குழப்பத்தில் நிற்கிறாள். என்ன செய்வதென்று தெரியாதநிலை. பின்னர் மெதுவாக அதிலிருந்து விடுபட்டு நிச்சயமற்ற பாவத்தோடு வானத்தைப் பார்த்து விட்டு இளைஞனை நோக்கி நடந்து, அவனது தோளில் தனது கைகளை வைக்கிறாள். அவன் அரைப்பார்வை பார்க்கிறான். முகத்தின் வலியின் துயரம்.
        இளைஞன்     : யதார்த்தம் என்பது என்ன..?
                        அது அல்ல… நீயும் அல்ல..!
                        என்னவாக இருந்தாய்…
                        நான்.. நான் என்னவாக இருப்பேன்.
இது ஒன்றுமில்லை..
ஆனால் இது என்னவாக இருக்கும்?

இளைஞனுக்கு இன்னும் குழப்பம். ஆனால் மெதுவாக வளர்ந்து நிமிர்ந்து அவளைப் பார்க்கிறான். அவளை நோக்கி நகர்ந்து கைகளைப் பற்றுகிறான். உடையின் உச்சியைத் தொடும்வரை அவனது கரங்கள் நீள்கிறது. அவனது விரல்கள் அவளது உடையின் பொத்தான்களை அவிழ்ந்து விடுகிறது. வெண்மையான அவளது மார்பகம்.
[வெண்மையான உடலோடு ஒட்டிய உடையை அணிந்திருக்கலாம். கறுப்பு உடையை நீக்கும்போது நிர்வாணமாகிறாள் என்பது குறியீடாகும்]
மெதுவாக அடுத்த அடுக்கு ஆடையையும் களைகிறான். அவளது உடை இப்பொழுது இடுப்பில் தொங்குகிறது.. இடுப்பிற்கு மேல் திறந்து வெண்மையாக நிர்வாணமாக. ஐந்துபேர் கொண்ட குழு அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றனர். அவன் உடைகளைக் களையும் சடங்கில் இருக்கிறான். பெண் பெருமிதமாக – அவனது முயற்சியில் வெற்றியடைய உதவுவதுபோல நிற்கிறாள். அவன் தொடர்கிறான். முழங்காலிட்டுள்ளான். அவளது கீழ்ப்புற உடைகளை களைகிறான். ஐந்துபேரும் சுற்றியுள்ளனர். இப்பொழுது அவன் பார்வையாளர்களின் பார்வையில் இல்லை.
ஐவரும் வட்டமாக நிற்க, பெண்ணின் தலைமட்டும் தெரிகிறது. அவள் நிர்வாணமாக நிற்கிறாள் என்பதான தோற்றம்.

(இப்பொழுது இளைஞன் எழுந்து, அவளது உடலைச் சுற்றி வந்து பார்க்கிறான். ஐந்து பேரும் சுற்றி வருவதை நிறுத்தி விடுகின்றனர். அவர்களது நீண்ட உடையில் உள்ளிருக்கும் இணை மறைந்திருக்கும் ஐந்துபேரின் தலைகளுக்கு மேலே இருவரின் தலைகள் மட்டும் தெரியும்)
இளைஞன் :    நேரம்வந்து விட்டது…

இப்படியே போகலாம்..
[பீடத்தை நோக்கி நகர்ந்து பார்வையாளர்களிடம் முகம் பார்த்து நிற்கிறான். ஐந்து பேரும் பெண்ணை பீடத்தை நோக்கி அழைத்து வருகின்றனர். அங்கே நிறுத்தப்படுகின்றாள். நிர்ச்சலனமான பார்வையுடன் பீடத்தின் மீது விழுகிறாள். ஐந்து பேரும் பீடத்தைச் சுற்றி மண்டியிடுகின்றனர். மூன்று ஆண்கள் பார்வையாளர்களுக்கு முதுகு காட்டியபடி இரண்டு பக்கத்திலும் இரண்டு பெண்கள்
இளைஞன் சிலைபோல பார்வையாளர்களைப் பார்த்தபடி வெள்ளை வெளிச்சத்தில் அவன் முகம் எரிகிறது. இசை முடிவை நோக்கி வந்து விட்டது.
இளைஞன் பார்வையாளர்களிடம் சொல்கிறான். அவனது குரல் சோர்வான தனிக்குரல், எதிரொலிப்பது போல.. இசை மேலும் மேலும் வெறியூட்டுவதாக அவனது குரல் உயர்ந்து, ஒருவித வலிப்பு நிலைபோல ராகம் உச்சத்தை அடைகிறது.]

இளைஞன் :
ஒரு வெள்ளை வெளிச்சம் கனலொளி…   வானமண்டலம்.. சிவப்பு நட்சத்திரங்கள்      
எரிகின்றன.. ஒரு எரிகல் .. முழுகுகிறது..  பூமியினுள் . நட்சத்திரங்கள்…

எரிகின்றன.. சப்தரிஷிமண்டலம்.. ஒரு வினாக்குறிபோல… சொர்க்கத்தில்.. எரிகின்றன.. இருட்டில் தீநாக்குகள்… ஜுவாலைகள்.. இருட்டில் மோதிரங்கள்.. சனியின் எரிகின்றன..
இருட்டில் வானமண்டலங்களில் வால் நட்சத்திரங்கள்.. நான் நினைக்கிறேன்.. எரிகின்றன..
இருட்டில் அப்புறம்.. முப்பத்து முக்கோடி தேவர்களும் வீண்..சூரியக்குவியல்கள்.. இருட்டு.. சொர்க்கத்தில் என்னால் முடியவில்லை.. போ..ஆஹ்..
இருட்டு.. இந்தபூமி.. மரங்களில் இருட்டு.. ஆன்மாக்கள்.. அமைதி.. எரிகின்றன..
       
கடந்த காலத்திற்காக… எதிர்காலத்திற்காக.. இருட்டு .. உலர்ந்த.. இந்தப் புல் புதர்கள்.. எரிகின்றன.. மரங்கள்.. புதர்கள்.. ஜுவாலைகள்.. வசந்தத்தில் எரிகின்றன.. பூக்கள் எரிகின்றன.. மரிக்கின்றன.. சருகாகின்றன. நினைவுகளைப் போல.. அப்புறம்..மரங்கள்.. கவனி.. மௌனவழியில்.. மூங்கில்கள். தேவதாரு மரங்கள்.. தேவதாரு…
[அவன் தொடர்ச்சி விடுபட்டவனாய்.. சுற்றிலும் பார்த்துவிட்டு புரியாதபடி…]
இருட்டில் தேவதாரு மரங்கள்.. இந்த பூமி வறண்டு.. கற்கள்.. கற்பாளங்கள்.. எரிமலைகள்.. குழாய்விளிம்புகள்.. எரியும் மரங்கள்..
[சுற்றிலும் பார்க்கிறான் தளர்வுடன்]
அழுகை.. அழுகை.. கண்ணீர் எரிகின்றன. குஞ்சுகள்.. சிவப்பு.. இருட்டில் பூமி எரிகிறது. மரங்கள்..எரிகின்றன. மலைகளின் ஓரங்களில் பாறைகள்..கற்கள் சிவப்பு.. ரத்தம் ஓடுகின்றது.. எனது சிவப்பு.. இருட்டில் காலுக்கு .. ஆகாஹ்.. (அவனது சுழல் உணர்வு குறைகிறது)
குரல்கள்.. பேசு.. மெதுவாக.. இருட்டில் பேசு.. என் ஆன்மா.. நண்பர்கள்.. சுற்றத்தார்.. உறவினர்கள்.. நான் இருப்பேன்.. ஏன். நீங்கள்.. பேசு.. ? நீங்கள்.. சொல்லு.. நீங்கள். செத்துவிடு.. இல்லை..

வருடங்கள் எரிகின்றன.. இருட்டுகளில்…  நினைவுகளில்… மழையைப்போல.. விழுந்து கொண்டிருக்கின்றன.. நிதானமாக.. வீட்டின் மேலே.. இரவில் உங்கள் குரல்.. அழைக்கின்றன.. இருட்டில் சாளரங்களினூடாக.. என்னால் முடியாது.. போ.. இரு..இரு.. போகாதே.. போகாதே.. தங்கு.. தங்கு.. குரல்கள்.. சாவுகள் பேசு.. அமைதி.. காத்திரு.. காத்திரு.. கண்கள் கனல்,, இருட்டில் மாலையில்.. அமைதி.. முனகல்,, நீர்க்குமிழிகள்.. மரங்களில் அழைக்கின்றன. நம்மை.. குரல்கள்.. சாவுக்காக.. சிவப்பு.. வீசுகின்றன. கடலுக்கு பெருங்கடலுக்கு சூழலுக்கு அலைகளுக்கு.. தடு.. தடு.. மலைப்பாறைகள் மீது.. சாவு மணல் பரப்பின் மீது.. கடற்கரையின் மீது.. கண்கள்.. கனல்.. என்னுடைய எரிகின்றன.. இருட்டில் .. கேள்விகள் எழுகின்றன.. குறைகின்றன.. எரிகின்றன.. தேவதாரு மரங்களுக்குள் .. மரங்களினூடாக கடற்கரையின் மேல்.. முனகல்கள்.. அமைதி.. இருட்டில் எரிகின்றன. கடந்த காலத்திற்காக சாவு.. நினைவுகள்.. சாவு இருட்டில்.. கண்கள்.. கனல்,, கடற்கரை.. மேல் எரிகின்றன. வெள்ளை.. ஒலி.. எனது சிந்தனையில் எரிகின்றன.. இருட்டில்..
[அவன் ஆச்சரியப்படும்படியாக உணர்கின்றான்]
கூழாங்கற்கள்.. மணியில் எரியும் ..இரவுக்காக.. இருட்டு.. கட்டப்பட்டு.. செதில்கள்.. சிப்பிகள்.. சாகின்றன. சிந்தனையில் எண்ணங்கள்.. அப்பா.. இல்லை.. போ.. இது.. இருட்டு.. தேவதாரு.. ஊசியில்லாத.. அப்புறம் குரல்கள்.. ஆழத்தில் அழைப்பு.. மெதுவாக.. மெதுவாக.. என் கண்களில் எரிகின்றன.. இருட்டில் கூழாங்கற்கள் சாகின்றன.. கடற்கரையின் மீது கனல்..இருட்டில் வெளிச்சம்.. (திடீரென்று உச்சத்தில்)
வீதிகளில் வெடிகுண்டுகள், சோடா பாட்டில்கள் உடைந்த செங்கல். சைக்கிள் செயினும் கத்திகளும் போலீஸ் வாகனங்களின் அணிவகுப்பு. என்னை ஆவென்று சொல்ல விடவில்லை. இரவின் மீது படையெடுப்பு. எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. உங்களுக்குப் பேராசை இல்லையா.. ஆகா.. வாகனத்திற்குள் தள்ளப்பட்டு.. மலத்துவாரத்திற்குள் குறுந்தடிகளை நுழைத்து கண்ணீர்புகை வீச்சில்.. அழுது.. அழுது.. இது இன்றும் கேளிக்கை அல்ல. வளர்ந்த மனிதர்கள் அழுகிறார்கள். ஆகா.. சிறைச்சாலையின் சாக்கடை நாற்றத்தில்.. சிலையுருவாய்.. மதிலில்.. சாய்ந்து.. ஒரு நாள்.. இரண்டு நாள்.. மூன்றுநாள்.. என்னால் சொல்ல முடியாது. என் மனைவி வீட்டில் தனியாக ..அடுத்த மாத வாடகைக்கு,, பள்ளிக்கூட கட்டணம்.. கட்ட என்னால்.. இயலாது.. தேவடியா.. பசங்க.. அவர்களை நான் கொல்ல முடியும். அப்புறம் பணம் எங்கே வைப்பேன். வேறு எங்கே வைப்பேன்..ஓ,, கடவுளே.. எப்படி அவர்கள் வாழ்வார்கள்? (கைகளை முகத்திலிருந்து எடுத்து விட்டு கத்தியை உயர்த்தி.. கைகளை நேராக நிறுத்தி வெளிச்சத்தில் கத்தி பளபளக்க]
ஓ கடவுளே எரிகின்றன.. இருட்டில்.. கடவுள் பேசு.. உதைக்க வேண்டும். பேசு கடந்த காலத்திற்காக.. பேசு.. பாசி படர்ந்ததற்காக அவர்களின் மேல் .. சூரியனுக்காகப் பேசு.. பேசு.. இரத்தத்திற்காக ஓடுகின்றன. என் கண்களில் சிவப்பு.. சிவப்பு.. ரத்தம்.. ரத்தம்..
[அவனது குரல் வலிப்பினால் .. வெறியூட்டப்பட்டதாய்… தடுமாறுகிறது.. கண்களில் பீதியூட்டும் தோற்றம்.. அவன் கத்தியை உயர்த்தி. பீடத்தில் பெண்ணைத் தள்ளி சொருகுகிறான். ராகம் அதன் உச்சத்தை அடைந்து சிதறுகிறது.
முழுவதும் நிசப்தம்.. வெளிச்சம் குறைகிறது. இளைஞன் நிற்கிறான். தலைகவிழ்ந்தபடி .. பெருமூச்சுடன்)
இளைஞன் : (மெதுவாக கேட்காத தொனியில்)
                 ரத்தம்.. ரத்தம் சிவப்பு..
                 கடவுளே.! ஓ... கடவுளே!!


               

No comments :