வார்சாவில் இந்தியக் கொண்டாட்டங்கள்



இந்தியக் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை இந்திய போலந்து நட்புறவுக் கழகம் (IPFA) நடத்தப் போவதாக முகநூல் குழுமம் சொல்லியது. போலந்தில் நான் உறுப்பினராக இருக்கும் ஒருசில முகநூல் குழுமங்களில் ஒன்று. “ வார்சாவில் வாழும் இந்தியர்கள்” என்னும் அந்தக் குழுமத்தில் வார்சாவுக்கு வருவதற்கு முன்பே உறுப்பினராக ஆகி விட்டுத்தான் வந்தேன். இந்தியாவிலிருந்து போலந்துக்குக் கிளம்பும் நாள் குறிக்கப் பட்டவுடன் போலந்து, வார்சா எனப் பெயரிட்டு கூகுள், முகநூல் எனத் தேடிய போது கிடைத்த பல விவரங்களில் இந்தக் குழுவும் ஒன்று.
தமிழ் மொழி கற்பிக்கும் பேராசிரியராக வார்சாவுக்கு வரப்போகிறேன் என்ற தகவலைச் சொல்லி அந்தக் குழுவில் என்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்ட போது சென்னையைச் சேர்ந்த பிரஜித் ராதாகிருஷ்ணன் என்னும் இளைஞர் உடனடியாகத் தொடர்பில் வந்து இணைந்து கொண்டார். அவர் சிட்டி வங்கியின் ஊழியர். இங்குள்ள சிட்டி வங்கியின் பல்வேறு கிளைகளில் இந்தியர்கள் பலரும் வேலை செய்கிறார்கள். வங்கியில் வேலை என்றாலும் மக்களைச் சந்திக்கும் பகுதியில் பணியாற்றாமல் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிரிவுகளில் தான் அவர்கள் பணி. பிரஜித் முதலில் தொடர்பு கொண்டார் என்றாலும் வார்சாவில் அவரை நேரில் சந்தித்தது ஒரு வருடத்துக்குப் பிறகுதான். அவரைச் சந்திப்பதற்கு முன்பே அவரோடு சிட்டி வங்கியில் பணியாற்றும் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வார்சாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும் இந்தியர்கள் என்ற பொது அடையாளத்தில் சந்திக்கும் வாய்ப்புகளை நழுவ விடுவதில்லை. இந்திய அரசின் கலை பண்பாட்டு அமைச்சகம் வழியாக வரும் நடனக்குழு, திரைப்பட விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் என கிடைக்கும் வாய்ப்பில் தகவல் தெரிவித்துச் சந்தித்துக் கொள்வோம். இந்திய போலந்து நட்புறவுக் கழகம் நடத்தப் போகும் இந்தியக் கொண்டாட்டம் பற்றிய தகவலைச் சொன்னது பாலாஜி ராம் என்னும் இன்னொரு சிட்டி வங்கிப் பணியாளர்.. தமிழ் நாட்டில் இருந்தவரை கொண்டாட்டங்கள் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கு ஆர்வத்தோடு போனதில்லை. ஆனால் வெளிநாட்டில் வாழும்போது நமது தேச அடையாளமும், மொழி அடையாளமும் நெருக்கமாகி விடுகின்றன. முழுமையாக நம் கருத்தோடு ஒத்துப் போகாத பலரும் நட்பு வட்டத்திற்குள் வருவதைத் தடுக்க நினைப்பதில்லை. பார்ப்பவர்களிடமெல்லாம் தொலைபேசி எண்ணைக் கொடுப்பதும் வாங்குவதும் உடனடியாக நடந்து விடும். அதே போல நடக்கப் போகும் கொண்டாட்ட நிகழ்வுகளை மனம் ஒப்பவில்லை என்றாலும் பார்த்துக் கொண்டிருப்பதும் ரசிக்கத் தொடங்குவதும் நிகழ்ந்து விடுகிறது.

அப்படித்தான் மூன்று மாதங்களுக்கு முன்னாள் வந்த நடனக்குழுவின் நடனத்தைப் பார்த்து முடித்தேன். வார்சா நகரத்தின் மைய இடமான பண்பாட்டு மாளிகையின் முக்கிய அரங்கில் அந்த நடன நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இந்திய அரசின் கலை பண்பாட்டுப் பரிவர்த்தனைப் பிரிவு. போலந்துக்கான இந்திய தூதர் அரங்கில் நின்று ஒவ்வொரு வரையும் வரவேற்றுப் பேசி உட்கார வைத்துக் கொண்டிருந்தார். அதன் ஒருங்கிணைப்பாளராக வந்திருந்தவர் இந்திய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த பிரணாப் முகர்ஜியின் உறவுப் பெண். மருமகளா? மகளா? என்பது நினைவில் இல்லை. நேர்த்தியற்ற நடனம் என்றாலும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு முன்பு நடந்த அற்புதமான செனாய் இசைக் கச்சேரி நகரின் முக்கிய இடத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் போல்ஸ்கி ரேடியோவின் அரங்கில் போதுமான அரங்கக் கட்டுமானங்கள் கூடச் செய்யப்படாமல் நடந்தது. அதையும் முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். நல்லதோ கெட்டதோ நமது நாட்டுக் கலைகள் என மனம் சமாதானம் செய்து கொள்கிறது.

மனம் விரும்பிப் பார்த்த நிகழ்வும் உண்டு. 2012 நவம்பர், 5 முதல் 10 வரை நடத்தப் பெற்ற இந்தியத்திரைப்பட விழா கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப் பெற்றது. குழந்தைகள் படங்கள், ஸ்மீதா படேலை நினைத்துக் கொள்ளும் படங்கள் என சிறப்பு நிகழ்வுகளும் இடம் பிடித்திருந்தன. நடக்க இருந்த இடம் கினா குல்சரா. போலந்து அதிபரின் மாளிக்கைக்கு நேர் எதிரே இருக்கும் அந்த இடத்தைப் பலதடவை நடந்து கடந்திருக்கிறேன். பல்கலைக்கழகத்திலிருந்து அரைகிலோ மீட்டார் தான் இருக்கும். தொடக்க விழா மாலை ஏழு மணி என்றிருந்தது. ஆனால் இந்திப் பேராசிரியர் 5 மணி எனச் சொல்ல 4.30க்கே போய் விட்டோம். இரண்டு மணி நேரத்தைக் கழிப்பதற்காக இண்ட்ரகோ, ஷ்லாட் தெரசா எனச் சுற்றி வந்தோம். தொடக்கவிழாவிற்கு இந்தியச் சினிமாவுக்கு அடையாளங்கள் உருவாக்கிய இயக்குநர்களில் ஒருவரான கோவிந்த் நிஹாலனி வந்திருந்தார். தமிழ்ப் பேராசிரியர் ஆனால் சினிமாவைப் பற்றி நான்கு நூல்கள் எழுதி இருக்கிறேன் எனச் சொன்ன போது கைகளைப் பற்றிக் கொண்டார். ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்களா? எனக் கேட்ட போது கொஞ்சம் கூச்சமாகப் போய் விட்டது. இல்லை என்று சொல்லி விட்டு அவரது படங்களில் நான் பார்த்த படங்களுக்குள் இழுத்துக் கொண்டேன். ஸ்மிதா படேலின் அச்சு அசலாக இருந்த அவரது தங்கை மணிஷா படேல் வந்திருந்தாள். அவளது இழப்பையும் தனது குடும்பம் இந்திய சினிமாவுக்குள் இருப்பதையும் சிறிய உரையில் சொல்லி முடித்தாள். ஐந்து நாள் திரையிடல்களில் ஐந்து படங்கள் தான் பார்க்க முடிந்தது. பகலில் வகுப்புகள் இருந்ததால் இரவுக் காட்சிகள் மட்டுமே வாய்த்தது.

இந்திய போலந்து நட்புறவுக் கழகம் (IPFA) நடத்தப் போகும் இந்திய நாள் நிகழ்வில் என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும் என்ற விவரம் எதுவும் இல்லை. இந்திய தூதரகத்திற்கு இந்நிகழ்வோடு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது. தனியார் நிறுவனங்கள் நிதியளிப்புகள் செய்வதாக விளம்பரங்கள் சொல்லின. இங்குள்ள இந்தியர்கள் சிலரிடம் சொன்ன போது பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. என்றாலும் நான் போய்ப் பார்க்க வேண்டும் என நினத்தேன். அரசாங்கம் இந்தியாவை எப்படிக் காட்டுகிறது என்பதைவிட இந்தியர்கள் இங்கு என்ன மாதிரி தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள் எனப் பார்க்கும் ஆசை தான் காரணம். முந்தின நாள் வரை பனிப்பொழிவு இருந்தது. அன்று பனியோ மழையோ இல்லை; ஆனால் காற்று இருந்தது. தகவல் குறிப்பில் இருந்த நிதி நல்கைக் குழுமங்களின் விளம்பரச் சின்னங்களைக் கொண்டு மனம் ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொண்டது. நம்மூரில் நடக்கும் ஒரு கண்காட்சி போல இருக்கலாம். அவ்வளவு பெரிதாக இல்லாவிட்டாலும் அதன் சாரமான, விற்பனை, உணவு, கொண்டாட்டங்கள் இருக்கலாம் என அந்தக் கற்பிதம் சொன்னது. அதில் கலந்து கொள்வதோடு ஒரு நேர உணவை இந்திய ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவது என முடிவும் செய்தும் விட்டோம். ஒருவேளை அங்கேயே இந்திய உணவகங்கள் கடை விரித்திருந்தால் அவற்றில் சாப்பிடலாம் அல்லது வழக்கமாகப் போகும் இந்திய உணவகம் ஒன்றுக்குப் போகலாம் என முடிவு செய்து முதலில் விழா இடத்துக்குப் பயணமானோம்.

கையில் 20 உல்-ரொகித்னிக்கா,போல் மொக்கோட்டோவிஸ்கி என்ற முகவரி இருந்தது. போல் மொக்கோட்டோவிஸ்கிக்கு மெட்ரோவில் போய் இறங்கத் தெரியும். பல தடவை மெட்ரோவில் போயிருக்கிறேன். போல் மொகட்டோவிலும் இறங்கியிருக்கிறேன் என்பதால் சிக்கல் எதுவும் இருக்காது. கிளம்பியபோது பிற்பகல் 4 மணி. மொகட்டொவிஸ்கியில் இறங்கி உல்-ரொகித்னிக்கா தெருவுக்கு வழி கேட்ட போது நான்கு பேர் தெரியாது எனச் சொல்லி விட்டனர். என்றார். வார்சாவில் முப்பது வயதுக்கு மேலே இருப்பவர்கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலத்தில் விசாரிப்பவர்களுக்கு தோள்பட்டையைக் குலுக்குவார்கள். அதை “ எனக்கு எதுவும் தெரியாது” எனப் புரிந்து கொள்ள வேண்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்வார்கள். தெரியவில்லை என்றால் தயங்காமல் தெரியாது என்று சொல்லி விலகிக் கொள்வார்கள். ஐந்தாவதாக ஒருவர் நெடுஞ்சாலையைக் கடந்து எதிர்த்திசையில் போக வேண்டும் என்றார்
பெருஞ்சாலையைத் தாண்டி ஒரு பெரிய கட்டடத்தின் முன்னால் நின்று இருசக்கர வாகனத்தில் கிளம்ப இருந்தவரை அணுகி விசாரித்தேன். அவர் வாகனத்தில் வார்சாவின் முக்கிய கூரியர் நிறுவனத்தின் பெயர் இருந்தது. அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் பதிலை எதிர்பார்த்தேன். பதில் தெரிந்திருந்தது; ஆனால் சொல்ல முடியவில்லை. மொழிப்பிரச்சினை. ”என் நண்பர் வருவார். ஓரிரண்டு நிமிடம் காத்திரு” என்பதான பதிலைப் போல்ஸ்கியில் சொல்லிக் காக்கச் சொன்னதாகப் புரிந்து கொண்டேன். . எனது புரிதல் சரியாகவே இருந்தது. இரண்டு நிமிடத்தில் வந்தவர் போல்ஸ்கியும் ஆங்கிலமும் கலந்து பேசினார். தொடர்ந்து முன்னே போங்கள். ஐந்து குறுக்குச் சாலைகளுக்குப் பின் இடது பக்கம் இருக்கிறது எனச் சொன்னதாகப் புரிந்து கொண்டு முன்னேறினோம். அவர் சொல்லியபடி போன போது ஐந்து குறுக்குச் சாலைகளுக்குப் பின் ஒரு பெருஞ்சாலை வந்தது. அந்தச் சாலையின் பெயர் உல்-ரொகித்னிக்கா அல்ல. உல் என்றால் குறுக்குச் சாலை அல்லது சின்னத் தெரு என்பதும். அல் என்றால் பெரிய அல்லது நெடுஞ்சாலை என்பதும் தெரியும். அந்தச் சாலையின் பெயர் அல் எனத் தொடங்கி நீண்டது

இடது புறத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் இருந்தது. அதைத் தான் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும். அங்கு பேருந்து ஏறி குறிப்பிட்ட இடத்துக்குப் போகலாம் எனச் சொல்லியிருப்பார் என ஊகித்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்திற்குப் போனேன். போல்ஸ்கியும் ஆங்கிலமும் கலந்த சொன்னதைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று இப்போது புரிந்தது. திரும்பவும் அந்த நிறுத்தத்தில் இருப்பவர்களிடம் முகவரியைக் காட்டி விசாரிக்கத் தொடங்கினேன். இரண்டு பேர் தோள்பட்டையைக் குலுக்கி விட்டனர். இன்னொருவர் எனக்குத் தெரியாது என்றார். பிறகு அவரே பக்கத்தில் இருந்த பேரிளம்பெண்ணிடம் அழைத்துச் சென்று காட்டிக் கேட்டார். மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசித்துப் பார்த்த அந்தப் பேரிளம்பெண், ”இந்த இடம் இந்தப் பகுதியில் தான் இருக்கிறது, ஆனால் அந்த குறுக்குச் சாலை எங்கே இருக்கிறது எனச் சொல்ல முடியவில்லை என்றார். கொஞ்சம் தேடிப் பாருங்கள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

தேடுவதற்கு எந்தப் பக்கம் செல்லலாம்? எதிரிலா? இடது புறமா? வலது புறமா? என யோசிக்காமல் முன்னோக்கிப் போனோம். அங்கே குடியிருப்புகள் தான் இருந்தன. பொதுவழிகள் இல்லை என்பதன் அடையாளமாகத் தடுப்புகள் நின்றன. வலது புறம் திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் பனிக்கட்டிக்குள் மரங்கள் மட்டுமே தெரிந்தன. பெரிய மைதானம் போலத் தென்பட்டது. தெருவிளக்குகளும் எரியத் தொடங்கி விட்டன. திரும்பி வீட்டிற்குச் சென்று விடலாமா என யோசனை கிளம்பினாலும் தேடுவதை நிறுத்தவில்லை. குறுக்குச் சந்துகளின் முனைகளில் பெயர்களை வாசித்துப் பார்ப்பேன். கையில் இருக்கும் தகவலைப் பார்ப்பேன். தேடுவதற்குப் பலன் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. திரும்பவும் பேருந்து நிறுத்தம் நோக்கிச் செல்லும் வழியில் பக்கத்தில் இருந்த இளைஞரிடம் முகவரியைக் காட்டி விசாரித்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஆனால் இடங்கள் பற்றிய அறிவு இல்லை. வேறு பகுதியிலிருந்து ஏதோ ஒரு வேலை காரணமாக போல் மொகட்ட்டோவுக்கு வந்தவர். ஆனால் புத்திசாலி. உடனடியாகத் தனது நவீன கைபேசியில் இருக்கும் வரைபடத்திற்குள் நுழைந்தார். முகவரியைத் தட்டினார். அது நின்ற இடத்திலிருந்து செல்ல வேண்டிய பாதையைக் காட்டியது. தூரத்தில் கார்கள் மட்டும் திரும்பும் சாலையைக் காட்டி அதில் செல்லுங்கள்; அதன் முடிவில் வலது புறம் திரும்புங்கள். அங்கே தான் அந்த இடம் இருக்கிறது என்றார். அவர் சொன்னதைக் கேட்டு நடக்கத் தொடங்கினோம்.

மணி ஐந்தைத் தாண்டி விட்டது.– 3 செண்டிக்ரேட் பனியில் அரைமணிநேரம் அலைந்ததின் களைப்பு. கன்னங்களும் கைகளும் பனியை உணர்ந்தாலும் அடுக்கடுக்காக அணிந்த ஆடைகளால் உடல் வியர்க்கிறது என்பதையும் உணர முடிந்தது. அவர் சொன்ன வழித்தடத்தில் கார்கள் மட்டும் போவதால் நடப்பதற்காகப் பனிக்கட்டிகளை விலக்கி நடைபாதை உருவாக்கப்படவில்லை. பனியின் மீதுதான் நடந்து போனோம். வலதுபுறம் திரும்பிப் பார்த்த போது கொடிகளுடனும் பலவித வண்ண விளக்குகளுடன் ஒரு நட்சத்திர விடுதி தனியாக இருந்தது. அதன் அருகில் பேருந்து நிறுத்தமும் இருந்தது. அந்த நட்சத்திர விடுதியில் ஒருவேளை நடக்குமோ எனப் பார்த்தால் இந்திய தேசியக் கொடியோ, இந்திய அடையாளங்களோ எதுவும் இல்லை. பேருந்து நிறுத்தத்தில் நின்று சிலரிடம் விசாரித்த போது ஒருவருக்கும் அந்தக் குறுக்குச் சாலை தெரிந்திருக்கவில்லை. நட்சத்திர விடுதிக்குப் பின்னால் பனியால் மூடப்பட்ட மைதானத்தின் நடுவில் ஒரு கூடாரம் போல ஒன்று தெரிந்தது. அங்கே போய்ப் பார்க்கலாமா என்று தோன்றினாலும், அதை உறுதிப் படுத்தும் விதமாக ஒருவரும் பதில் சொல்லவில்லை

வீட்டுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை. முடிவு செய்தபடி நகரின் மையப்பகுதியில் இருக்கும் இந்திய உணவகம் போய் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பலாம் எனக் கிளம்பிப் பேருந்தில் ஏறி விட்டோம். போகும்போதே இன்னொரு யோசனையும் வந்து விட்டது. நகர் மையத்திலிருந்து வாடகைக்கார் பிடித்து முகவரியைக் கொடுத்தால் சரியான இடத்தில் இறக்கிவிடும் வாய்ப்பு உண்டு என்பதுதான் அந்த யோசனை. நகர் மையத்தில் இறங்கியவுடன் யோசனையை நடைமுறைப் படுத்தினேன். வாடகைக்கார் ஓட்டுநரிடம் முகவரியைக் காட்டியவுடன் அந்த இடம் ஒரு உணவு விடுதி என்று சொன்னார். இருக்கலாம்; அங்கே இந்திய விழா நடக்கிறது; அங்கே போகவேண்டும் என்றேன். காரைக் கிளப்புவதற்கு முன் என்னிடம் இருந்த முகவரியை வாங்கி அவரது காரில் இருக்கும் திசைகாட்டியில் பதிவு செய்து விட்டுக் கிளப்பினார். கார் நாங்கள் வந்த பேருந்து தடத்திலேயே எதிர்த்திசையில் போனது. நாங்கள் ஏறிய பேருந்து நிறுத்தத்துக்கும் வந்து விட்டது. அதைத் தாண்டியது. அதிகம் போகவில்லை. 100 மீட்டர் தூரம் தாண்டி இடது புறம் திரும்பி பனியால் மூடப்பட்ட மைதானத்திற்குள் நுழைந்தார். கூடாரம் போல மைதானத்தில் இருந்த அந்த இடம் நோக்கியே கார் போனது. 300 மீட்டர் தூரம் போன உடன் பெரிய யானை ஒன்று விளக்குகளால் உருவாக்கப்பட்டு வரவேற்புக் காட்டியது. அதன் கீழே இந்திய போலந்து நட்புறக் கழகம் என்பது ஆங்கிலத்தில் எழுதப் பெற்றிருந்தது.. அங்கேயே இறங்கிக் கொள்ளச் சொன்னார். 500 மீட்டர் தூரத்தை நடந்து கடக்காமல் பத்துக்கிலோ மீட்டர் பேருந்திலும் அதே தூரத்தைக் காரிலும் பயணம் செய்து வந்து சேர்ந்த போது சிரிப்புத் தான் வந்தது. ஆங்கிலம் உபயோகப்படாத நாடுகளில் இதுதான் பிரச்சினை. எங்கும் ஆங்கில வார்த்தைகளை எழுத மாட்டார்கள். ஐரோப்பிய மொழிகள் ரோமானிய லிபியையே பயன்படுத்துகின்றன என்றாலும் உச்சரிப்பு முழுமையும் வேறாக இருக்கும். ஆங்கிலத்தில் அடுத்தடுத்து இடம் பெறும் உயிரும் மெய்யும் போல அல்லாமல் விதம் விதமாக மெய்கள் இணைந்து நிற்கும் சொற்களைச் சொல்வது தமிழர்களுக்குக் கடினம். தமிழில் உயிருக்கு அடுத்து மெய், மெய்யிக்கு அடுத்த உயிர் என அமையும் சொற்களே அதிகம். மெய்கள் இரட்டிக்குமே ஒழிய உயிர்கள் இரட்டிக்காது. அங்கிருந்து கூடாரம் போல உள்ள அந்த இடத்திற்கு நடந்து தான் போகவேண்டும். கார் வாடகையாக 25 ஜுலாட்டி கொடுத்து அனுப்பி விட்டு நடந்தோம். என்னிடமும் மனைவியிடமும் நகரத்தில் எங்கும் செல்ல வாகன அனுமதி அட்டை இருந்த போதிலும் கூடுதல் செலவாக கார் வாடகை தர வேண்டியதாகி விட்டது.

கூடாரமிட்ட அந்த இடம் போல் லோலக் என்பதாக எழுதப்பெற்றிருந்தது. நெருங்கிச் செல்லச் செல்ல இந்திய அடையாளங்கள் தெரிந்தன. வாசலில் வட இந்திய ஆண் முகங்கள். உள்ளே நுழைந்த போது இந்திப் பாடலின் ஓசைகள் கேட்டன. மையமாக உயர்த்தப் பெற்ற கூடாரத்தின் நடுவில் மேடை அமைக்கப்பெற்று இடது புறமும் வலதுபுறமும் நாற்காலிகள் விரிந்திருந்தன. மேசைகளில் மது ஊற்றிய குடுவைகளும் காலி செய்த பாட்டில்களும் சிற்றுண்டிகளும். கூட்டம் நெருக்கமாக மேடையின் முன்னால் நின்றபடி அசைந்து கொண்டிருந்தது. மேடையில் ஒருத்தி இந்தி சினிமா பாடல் ஒன்றுக்கு ஆடிக் கொண்டிருந்தாள். வாளிப்பான உடல். அவள் இந்தியப் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. தோலின் நிறம் போலந்தாகவும் கூந்தலின் நிறம் இந்தியாவாகவும் இருந்தது. ஆடையணிகள் இந்திப் படத்தில் நடனக் காட்சிக்கான ஆடைகள். லாவகமாக ஆடினாள். துடிக்கும் உடலின் அசைவுகள். அசையும் மெல்லிய துகில் மூடிய கரங்கள் அழைத்து அழைத்துத் திரும்பின. அவள் ஆடி முடித்தபோது கரவொலிகள் எழுந்தன.

அடுத்து நடக்கப் போகும் நிகழ்வு பற்றிய அறிவிப்பு இந்தியிலும் போல்ஸ்கியிலுமாக ஒலித்தது. மேசைகள் எல்லாம் உணவு விடுதியின் கண்ணியத்தோடு இருந்தன. பக்கத்தில் இருந்த மதுக் கூடத்திலிருந்து வாங்கிக் கொண்டு போய் உட்கார்ந்து சாப்பிடும் வகையான ஏற்பாடு. நாற்காலிகளுக்குப் பின்னால் இந்தியப் பொருட்கள் விற்கும் சிறுசிறு கடைகள். வண்ணவண்ணமாக ஜொலிக்கும் இந்தியப் பொம்மைகள்; பைகள்; வளையல்கள்;பெண்களின் ஆடைகளுக்கான துணிகள் என விரிக்கப் பெற்றிந்தன. உடம்பில் ஹென்னா எழுதிக் கொள்ள பெண்கள் வரிசையில் காத்திருந்தனர். வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேல் போலந்துக்காரர்கள் தான். அடுத்து ஒரு பாடலுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் ஆடினர். ஆடியவர்கள் இருவரும் போலந்துப் பெண்கள் தான். அடுத்தொரு செவ்வியல் நடனம். அதற்குப் பின் ஒரு பேச்சு. இந்தி, ஆங்கிலம், போல்ஸ்கி எனத் தாவிக் கொண்டிருந்த பேச்சு. அந்த முகம் கராத்தே ஹுசைனியின் சாயலில் இருந்தது. அவரது சகோதரனே தான். அவர் இங்கே முக்கியப் பிரமுகர் என்றும் ஆங்கிலப் பள்ளி ஒன்றை நடத்துகிறார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். ஹுசைனி எனது கல்லூரிக்கால நண்பர். நண்பர் என்பதை விட இணைந்து வேலை செய்தவர்கள் என்பதுதான் சரியானது. அமெரிக்கன் கல்லூரியின் மாணவர் இதழான குரலின் ஆங்கிலப் பகுதி ஆசிரியர் அவர். நான் தமிழ்ப் பகுதி ஆசிரியர். அவ்வளவு தான் எங்கள் பழக்கம். அவர் பேச்சு முடிந்ததும் நட்புக்கு அடையாளமாகக் கயிறு கட்டும் அறிவிப்பு. கொஞ்சம் இந்தி. அதிகம் போல்ஸ்கி என பேச்சுச் சத்தம். இங்கும் அங்கும் அலையும் பெண்களும் ஆண்களும் உரசும் மதுக் கோப்பைகளுக்குள் வெளிப்பனியை விரட்டிக் கொண்டனர். உயர்த்தப் பெற்ற கூடாரத்திற்குள் இந்திய விழா இந்திப் படப் பாடல்களுக்கான ஆடல் பாடல் காட்சிகளாக அரங்கேறிக் கொண்டிருந்தன. இசை மட்டுமே இந்தியச் சினிமாக்களின் இசை. தமிழ்ச் சினிமாவில் கேட்ட இசையும் பிரபுதேவாவின் நடனக் கோர்வையும் இந்திச் சினிமாவின் அடையாளத்தோடு உட்கார வைத்தன.

வார்சா நகரத்துக் கேளிக்கை விடுதிகளில் நடக்கும் நடனத்திலிருந்து பெரிதும் வேறுபடவில்லை. வார இறுதி நாட்களில் நடனக் கேளிக்கையோடு இயங்கும் மதுக்கூடங்களுக்குப் பணம் கொடுத்துப் போவது போலத்தான் இங்கும் வந்து குழுமியிருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் அலுப்பு உண்டாகி விட்டது என்றாலும் இந்திய முகங்களைப் பார்க்கும் ஆசையில் இரண்டு மணி நேரத்தைக் கடந்திருந்தோம். சொந்த நாட்டில் ஒதுக்கி வைத்தன எல்லாம் அந்நிய தேசத்தில் நம்முடையதாகத் தோன்றும் மாயம் கொஞ்சம் புரியவில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்