செவ்வியல் : ஒரு விவாதம்


முகநூலில் எப்போதாவது தொடர் விவாதம் நடப்பதுண்டு. அண்மையில் நான் போட்ட ஒரு முகநூல் பதிவைத் தொடர்ந்து பலரும் பங்கேற்று விவாதித்தனர். அந்த விவாதத்தை  செவ்வியல்: ஒரு விவாதம் எனத் தொகுத்துச் சொல்லலாம் எனத்தோன்றுகிறது. முகநூல் பக்கம் வராதவர்களுக்காக இங்கே தருகிறேன்.
 நான் இரண்டு நாட்களுக்கு முன் படித்த கட்டுரை குறிப்பு ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் தான் வசனம் எழுதிய கடல் படத்தை காட்சிப்படிமங்கள் வழியாகவே ஆன்மீகமான சிக்கல்களையும் மீட்பையும் சொல்லும் ஒரு செவ்வியல் ஆக்கம்எனக் குறிப்பிட்டிருந்தார். இப்போது பார்த்த முகநூல் குறிப்பொன்றில் தமிழ் ஸ்டுடியோ அருண், ”பருத்திவீரன் போன்ற ஒரு மாபெரும் செவ்வியல் தன்மை வாய்ந்த கலைப்படைப்பை கொடுத்த அமீரிடமிருந்துஎன்று எழுதியிருக்கிறார். பலரும் பட இடங்களில் செவ்வியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்மொழி செவ்வியல் மொழிகளில் ஒன்று என்று குறிப்பிடும் போது இருக்கும் அதே அர்த்தத்தில் தான் எல்லோரும் குறிப்பிடுகிறார்களா? என்று கேட்டுக் கொண்டேன். அந்தக் கேள்விக்கு என் மனம் சொன்ன பதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்பதாக இருந்தது. குறிப்பான கலைச்சொல்லை அதன் குறிப்பான அர்த்தத்தை விட்டு விட்டு வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தும்போது மொழிக்கு ஊறு விளைவிக்கிறோம் என்ப்து புரியாமல் இருக்கலாம். நமக்கு நமது மொழியைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற அக்கறையாவது இருக்க வேண்டாமா? CLASSICISAM - என்ற கலைச்சொல்லின் தமிழ்ச் சொல்லான செவ்வியல் என்பதை ஆகச் சிறந்த, நுட்பமான, செய்நேர்த்தியான, தரமான போன்ற அர்த்தங்களில் பயன்படுத்த விரும்புபவர்களைத் தண்டிக்கச் சட்டமா கொண்டு வரமுடியும்? வருத்தம் தான் பட முடியும்.

Shoba Sakthi இதுக்கே வருத்தப்பட்டால் எப்படி? 23ம் புலிகேசி படத்தை பின்நவீனத்துவ கூறுகள் உள்ள படம் என்று எழுதிய கொடுமையை எல்லாம் அனுபவித்துவிட்டோம். புதுப்பேட்டையைக் கூட யாரோ அவன்கார்ட் சினிமா என்று கிளப்பிவிட்டிருந்தார்கள்.

Leena Manimekalai தமிழ் சினிமா விமர்சனம் எனப்படுவது அபத்தவாதத்தின் அதிகபட்ச அரங்கேற்றம். யாரோ அட்டக்கத்தியையெல்லாம், மாற்று தமிழ் சினிமா, உலக சினிமா, புதிய அலை சினிமா என்றெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்ல, அது முகநூலில் வலம் வந்த கொடுமை நினைவுக்கு வந்து தொலைக்கிறது. இப்படி பிதற்றிக்கொண்டிருக்கும் யாரும் தமிழுக்கு வெளியே மாற்று சினிமாவையும் பார்த்ததில்லை, இந்திய சினிமாவின் வரலாறையோ, அதன் மாஸ்டர் ஃபிலிம் மேக்கர்ஸ் பற்றிய அடிப்படை அறிவும் இல்லை, அல்லது சர்வதேச அளவில் புதிய அலை, மூன்றாம் சினிமா பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளைக்கூட வாசித்ததுமில்லை.

Mukunthan Kandiah Mukilan தமிழ் மொழியின் சொற்பயன்பாட்டை அதன் தார்ப்பரியத் தன்மையுடன் பேண வழிவகுக்கும் முறைசார் கட்டமைப்பின்மையால் சில காத்திரமான சொற்களைத் திட்டமிட்டே சில அறிவுகச் சிந்தனையாளர்கள் சிதைத்து மலினப்படுத்துகறார்கள். அந்தக் காலத்தில் தமிழில் 'புரட்சி' என்ற சொல் பட்டிருக்கும்பாட்டை தனியாகவே ஆய்வு செய்து பட்டமெடுக்கலாம். தற்போது பொதுப் புத்தியில் புத்தம் புதியதாக அறிமுகமாகியுள்ள 'செவ்வியல்' சொல் அதேவகையில் மலினமாக்கப்படுவதை திட்டமிட்ட செயலாக ஏன் கருத முடியாது?

Ravi Shankar சிலர் தமிழ் மொழியின் மேன்மையை அறியாமல் திரைப்பட விமர்சனங்களில் சிலவற்றை குறிப்பிட்டு இருக்கலாம். அவர்களை மன்னித்து விடலாம். ஆனால் தங்களது தமிழ் ஆற்றலையும், இலக்கிய நாட்டத்தையும் காட்ட பாமரனுக்குப் புரியாத தமிழ் சொல்லாடல்களையும் பயன் படுத்துவோருக்கு கமர்ஷியல் சமாச்சாரங்கள் எல்லாமுமே சோரம் போனவையாகவே தெரிகின்றன என்பதும் உண்மை

Firthouse Rajakumaaren இப்படியான சொல்லாடல்களை பயன்படுத்தி தங்கள் மேதாவித்தனத்தை கட்ட நினைப்பது அது .வேறொன்றும் இல்லை .
Lakshmi Saravanakumar தமிழ் சினிமாவுக்கும் செவ்வியலுக்கும் அல்லது எந்த இயலுக்கும் தமிழ் சினிமாவுக்கும் துளியும் தொடர்பில்லை.... தமிழ் சினிமா தொடர்ந்து முன்னிறுத்துவது திருமணம் என்னும் சடங்கை நோக்கின சில சம்பவங்களை மட்டுமே...

Mehala Dharma sevviyal enbathu tamilnatil eppothum arasiyalagave matum parkapattum seyalpaduthapaTUM VARUKIRATHU ELLA IDANGALILUM. CINEMA VILUM KODA.
Athisha Vino செவ்வியல்னுலாம் போட்டு எழுதினாதான் சார் சாதாரண சினிமா விமர்சனமும் இலக்கிய கட்டுரையா மாறும்!
Athisha Vino ”பருத்திவீரன் போன்ற ஒரு மாபெரும் செவ்வியல் தன்மை வாய்ந்த கலைப்படைப்பை கொடுத்த அமீரிடமிருந்து” - இது இலக்கிய கட்டுரை

''பருத்திவீரன் போன்ற ஒரு சிறந்த திரைப்படத்தை எடுத்த அமீரிடமிருந்து'' - இது சாதா கட்டுரை. 
Athisha Vino - நமக்கு சாதாவே போதுமுங்க....
Subramanian Ravikumar அப்படியெல்லாம் செவ்வியலான பில்டப் கொடுத்தால்தான்... அவரவர் தலைக்கான ஒளிவட்டத் தகடுகளைத் தலைக்குப் பின் செவ்வியலாகப் பொருத்திக் கொள்ளலாம் இல்லையா?

பவணந்தி தேவராசன் · செவ்வியல்,விளிம்பு,யதார்த்தம்,போன்ற சொற்களைப் பயன் படுத்துவோர் ,அறிவாளி போல் நடிப்பவர்கள்.
Nellai Xavier காவல் கோட்டம் என்கிற ஆகப் பெரிய திருட்டு நாவலை, அட்டையிலேயே செவ்வியல் என்று அச்சடித்து தான் வியாபாரம் செய்கிறார்கள்.

Ariara Velan //குறிப்பான கலைச்சொல்லை அதன் குறிப்பான அர்த்தத்தை விட்டு விட்டு வெவ்வேறு அர்த்தத்தில் பயன்படுத்தும்போது மொழிக்கு ஊறு விளைவிக்கிறோம் என்ப்து புரியாமல் இருக்கலாம். நமக்கு நமது மொழியைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்ற அக்கறையாவது இருக்க வேண்டாமா?// சரியாகச் சொன்னீர்கள் அ.ரா. ஒவ்வொரு சொல்லிற்கும் வரலாறு நுடபமான பொருளும் இருக்கின்றன என்பதனை பலரும் அறிவதும் இல்லை; உணர்வதும் இல்லை. அது சரி, "ஆகப் பெரிய". "ஆகச் சிறந்த" என்பதில் வரும் ஆக என்னும் சொல்லின் பயன்பாட்டு நுட்பம் என்ன?

Siva Sankar ஜெயமோகன் செவ்வியல் என்ற தன்மையை மிகச் சரியாகவே தனது எழுத்துக்களில் (பல பழைய கட்டுரைகளில்) பயன்படுத்தி உள்ளார். தொடர்ந்து செவ்வியல் என்ற தன்மையை குறிப்பதற்கு நமதுசிற்பங்களையும் மாபெரும் கோவில்களின் கட்டிட கலையினையும் சான்றாக கூறுகிறார். எனவே அவர் அந்த வார்த்தையின் முழு அர்த்தத்தையும் தெரிந்தே பயன்படுத்துகிறார். எனினும் இங்கு அது எழுதப்படும்போது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற அர்த்தத்திற்கேற்ப தனது படைப்பு எனவே அது செவ்வியல் தன்மையாக தானே இருக்க முடியும் என்ற நம்பிக்கையில் எழுதியுள்ளார் என எடுத்துக்கொள்ளலாம்.

Singaram Swaminathan · this is included in the harms list of jeyamohan because in his case it is a willfull abuse.in the case of tamilstudio arunit could be aoversight.
அருண் தமிழ் ஸ்டுடியோ ராமசாமி சார், நான் செவ்வியல் என்பதன் பொருள் புரிந்தே அதை பயன்படுத்தி இருக்கிறேன். ஒருவர் தன்னுடைய படைப்பையே செவ்வியல் என்று விளிப்பதற்கும், நான் இன்னொருவரின் படைப்பை செவ்வியல் என்று விளிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. செவ்வியல் என்பதன் பொருளை நான் எங்கனம் சிதைத்துள்ளேன், அதை எப்படி தவறாக பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும். இங்கே கருத்து பதிவு செய்திருப்பவர்கள் குறித்து எனக்கு எவ்வித அக்கறையும் இல்லை. யார், என்ன என்று எதுவும் தெரியாமல், போகிற போக்கில் தங்கள் கருத்துகளை பதிவு செய்யும் கூட்டம் எங்கேயும் இருக்கிறது. ஆனால் உங்களைப் பற்றி எனக்கு தெரியும். உங்கள் ஆளுமை எனக்கு தெரியும். செவ்வியல் என்கிற பொருள் சிதைப்பு எப்படி நடந்திருக்கிறது என்று நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

Murugesa Pandian Natarajan ஏற்கனவே வழக்கில் இருக்கும் சொல்லைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.என் தமிழ் மொழி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவேன் என நினைப்பவர்களை விட்டு விடலாம்.செவ்வியல் என்ற சொல் சிலவேளைகளில் செவ்வியலையும் குறிக்கலாம்.அதுதான் மொழி விளையாட்டு.

Ramasamy Alagarsamy அருண் தமிழ் ஸ்டுடியோ - நான் செவ்வியல் என்ற சொல்லை இந்தப் பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் என்று விளக்கிக் காட்டிவிட்டு, “அது எப்படி தவறு அல்லது மொழியைச் சிதைத்தல் ஆகும் எனக் கேட்டிருந்தால் எனக்குப் பதில் எழுதுவது எளிமையாக இருந்திருக்கும். அப்படிச் செய்யாமல் நீங்கள் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டு விட்டதால் விரிவாகத் தான் எழுத வேண்டும். முகநூல் பின்னூட்டமாக அதை எழுதிக் காட்டிவிட முடியுமா எனத் தெரியவில்லை. என்றாலும் பதிலளிக்க முயல்கிறேன். உடனடியாக எழுதிக் காட்ட முடியாது. கொஞ்சம் நேரம் வேண்டும்.நாளை ...

Ramasamy Alagarsamy Ariyara Velan தமிழ் இலக்கணம் ஆக என்பதை இடைச்சொல் என்கிறது. ஆனால் பேச்சு மொழியில் ஆக என்பது அசைநிலையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் good,very good எனச் சொன்னவுடன் எதிரே இருப்பவர் -yes. very very good - எனச் சொல்லிக் கைகுலுக்குவதைப் பார்த்திருக்கலாம். good என்பதே பெயரடை (Adjective) தான். அதற்கு இன்னொரு அடையாக very என்பதை ஒருவர் இட்டுப் பாராட்டும்போது அதனை ஏற்றுக் கொள்பவர், ஆம் very very good என்று சொல்லி ஏற்றுக் கொள்வார். மொழியைப் பேச்சுமொழியாகப் பயன்படுத்தும் போது இப்படிச் சொல்வது அதற்கு மேலும் அழகூட்டுவதாக ஆகிறது. தமிழில் அதைப் போன்றதொரு பயன்பாட்டில் தான் - ஆக என்பதும் இருக்கிறது. சிறந்த என்பது தமிழில் இருக்கும் பெயரடை. அந்தப் பெயரடைக்கே இன்னொரு அடையாக -ஆக- என்பது நிற்கிறது. முழுமையும் சிறந்த, 100 சதவீதமும் சிறந்த என்பதாக அங்கே பொருள் கொள்கிறோம்.

மணி மு. மணிவண்ணன் There is a difference between "classical" and "classic." (using dictionary definition)

Classical refers to "relating to the most artistically developed stage of a civilization". Tamil as a Classical language fits this definition. தமிழ் ஒரு செம்மொழி என்று சொன்னால் இந்தப் பொருள் வரும்.

Classic refers to "work generally considered to be of the highest rank or excellence, especially one of enduring significance."

சத்யஜித்ரேயின் படங்கள் செவ்வியல் தன்மை வாய்ந்தவை என்றால் இந்தப் பொருள் வரும்.

தற்காலப் படைப்புகள் எவற்றிற்கும் இந்த இரண்டு பொருளில் ஏதும் எப்படிப் பொருந்தும் என்று புரியவில்லை. காலத்தால் நிலைத்து நிற்கும் என்று தற்போது வந்த படைப்பைப் பற்றிச் சொல்வது விளம்பரம். வேறேதும் இல்லை.

Ramasamy Alagarsamy செவ்வியல் (CLASSICISM )தன்மை என்பது அதன் பழைமையிலும் உருவாக்கிக் கொண்ட வரையறைகள் அல்லது அடிப்படைகளைப் பின்பற்றுவதிலும் இருக்கிறது. செவ்வியல் பண்பு அல்லது தன்மை என்பது கலை, இலக்கியத் துறைகளில் அதிகம் உச்சரிக்கப்படும் கலைச்சொல்லாக இருந்தாலும் பல்வேறு அறிவுத் துறைகளுக்கும் பொருந்தக் கூடிய கலைச்சொல்லாகவே இருக்கிறது. தங்கள் துறைகளில் செவ்வியல் பண்பு அல்லது தன்மை செயல்படுவதை அந்தந்தத் துறை சார்ந்தவர்கள் கண்டுணர்ந்து விவாதித்துள்ளனர்.
ஒன்றை நாம் செவ்வியல் தன்மை கொண்டது எனச் சொல்ல வேண்டும் என்றால், அதன் காலப் பழைமை முக்கியம் என்றாலும் அதிலிருந்து விலகிய பார்வைகளும் உண்டு. அப்படி விலகிய பார்வைகளைப் புதுச் செவ்வியல்களாக (NEW CLASSICISM) வரையறை செய்து விளக்குவதையும் மறுப்பதற்கில்லை. அப்படி உருவாகும் புதுச் செவ்வியல் என்பது உருவாகும் ஒன்றின் வகைமாதிரியாகவும் பின்வருவனவற்றில் மாறாத தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாகவும் இருந்திருக்க வேண்டும் என வரையறைகள் சொல்கின்றன. இப்படிப் பட்ட வரையறைகளை நான் சொல்லவில்லை. உலக அளவில் கலை இலக்கியங்களைப் பற்றிய சொல்லாடல்களை நிகழ்த்துபவர்கள் சொல்கிறார்கள். நாமும் நமது சொல்லாடல்களும் தமிழுக்குள் இருந்தாலும் உலகப் பொதுநிலைப் போக்கிலிருந்து விலகி நின்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என நினைத்ததால் தான் முகநூலில் இந்தப் பதிவினைப் போட்டேன்.
பழைமையைப் பேணுதல், வரையறைகளைப் பின்பற்றிப் படைப்பை உருவாக்குதல் என்பது செவ்வியல் கலையின் அடிப்படை என்றாகிற போது உடனடி மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கும் போக்கும் செவ்வியல் படைப்பின் சிறப்பான குணமாக ஆகி விடுகிறது. இந்தக் கூறுகளைக் கவனத்தில் கொண்டு யோசிக்கும்போது கடலும், பருத்தி வீரனும் செவ்வியல் சினிமாக்களாகத் தோன்றவில்லை. கடல் திரைப்படம் நிச்சயம் செவ்வியல் சினிமாவாக ஆக முடியாது. ஏனென்றால் இப்போதுதான் அது உருவாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது. இதன் ஆக்கமுறை, உள்ளடக்கம், அதன் வழியாக உருவாக்கிக் கடத்தப்பட்ட உணர்வுகள், அதன் வழியாகப் பார்வையாளர்களுக்குக் கிடைத்த அனுபவம், வாழ்க்கை விழியங்கள் போன்றனவற்றை உள்வாங்கிக் கொண்ட சில பல சினிமாக்கள் வர வேண்டும். அப்படி வரும்போது கடல் செவ்வியல் படமாக ஆகலாம். கடல் படத்திற்குக் திரைக்கதை- வசனம் உருவாக்கியவர் என்ற வகையில் அதன் சொல்லாடல் விவாதப் பொருள் ஒரு வகையான செவ்வியல் சொல்லாடல் என நினைக்கிறார் என்பதை ஓரளவு விளங்கிக் கொள்கிறேன்.
தீய காரியங்களை அவை தீமையானவைஎன்று தெரிந்தே செய்வதே தீமையின் சாத்தானின் அடையாளம். அத்தீமையை வெற்றி கொள்வது என்பது அது இல்லாமல் அழித்தொழிப்பதில் அடையக்கூடியது இல்லை; மன்னித்து ஏற்றுக் கொள்வதில் இருக்கிறது. மன்னிக்கத் தெரிந்த மனிதத்துவம் கடவுளின் பிரதிபிம்பம். அப்பிரதிபிம்பம் அம்மனிதனுக்குப் பின்வரும் மனிதர்களால் பின்பற்றக் கூடிய கடவுளாக ஆகும் சாத்தியங்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லாடலைத் தான் கடல் படத்தின் சொல்லாடலாக ஆக்கியிருக்கிறார் ஜெயமோகன். இச்சொல்லாடல் ஒருவகையில் செவ்வியல் தன்மை கொண்டதுதான். ஆனால் பட உருவாக்கத்திலும் சொல்முறையிலும் பார்வையாளர்களோடு உறவு கொள்ளும் முறையிலும் செவ்வியல் சினிமாக்கள் பின்பற்றிய கூறுகளைப் பின்பற்றாமல் விலகிச் செல்வதோடு, பாத்திர உருவாக்கத்திலும் கூட செவ்வியல் தன்மைகளிலிருந்து விலகியே இருக்கிறது. ஒரு செவ்வியல் சினிமாவில் காட்சித் திளைப்பை மட்டும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் பாடல் காட்சிகளுக்காக மைய ஓட்டத்திலிருந்து விலகிச் சென்று திரும்பவும் வந்து ஒன்றிணைவதற்கு இடம் ஏது? அப்படி விலக வைத்து வெளியே கொண்டு போய்த் திரும்பவும் கதைப்போக்கோடு இணைக்கும் மணிரத்னத்தின் பொது அடையாளம் இதிலும் இடம் பெற்றுத்தானே உள்ளது.
கடல் படத்தைப் பற்றிய பேச்சு போதும். பருத்தி வீரனுக்கு வருவோம். ஆறு ஆண்டுகளுக்கு முன் வந்த பருத்தி வீரன் முன் வைத்த செவ்வியல் விழுமியம் என்ன? தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட வட்டாரக் கிராம வாழ்க்கையின் ஒரு வகை யதார்த்தத்தை கொஞ்சம் குரூரமாகக் காட்சிப் படுத்திய படம் பருத்தி வீரன். அந்த வகையில் கவனம் பெற்ற படம். ஆனால் அதனை வகைமாதிரியாகக் கொண்டு எத்தனை தமிழ்ச் சினிமாக்கள் வந்துள்ளன?.. தமிழ்ச் சினிமாவில் ஒரு இயக்குநரின் படத்திற்கு அவரது அடுத்த படம் தான் நீட்சி. பின்னோடிகளின் படங்களில் தாக்கம் செய்த தமிழ் இயக்குநர் என யாராவது தென்படுகிறார்களா? என்று தேடத்தான் வேண்டியுள்ளது. பாலு மகேந்திரா கூட அவரது உதவி இயக்குநர்களுக்கு பாடங்கற்றுத் தந்த ஆசிரியராக மட்டுமே அறியப்படுகிறார். அவரது ஏதாவது ஒரு படத்தினை வகை மாதிரியாகக் கொண்டு இவர் படம் இயக்கியுள்ளார் எனச் சுட்டிக் காட்ட முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஏனென்றால் நமது காலம். தனித்துவத்தின் காலம். ஒரு படைப்பாளி தனது முந்திய படைப்பில் உருவாக்கிய அடையாளத்தை அடுத்த படைப்பில் அழிக்க வேண்டும் என நினைக்கும் காலத்தில் வாழ்கிறோம். இன்றைய காலகட்டத்தில் ஒரு கலைஞன் செவ்வியல் படைப்பை உருவாக்க முனைகிறான் என்றால் மாற்றத்தை மறுதலிக்க நினைக்கிறான் என்று அர்த்தம். எனவே செவ்வியல் கலைச்சொல்லை இந்தக் காலகட்டத்துப் படைப்புகளோடு சேர்த்துச் சொல்வதற்குக் கொஞ்சம் தயக்கம் வேண்டும் என நினைக்கிறேன்.
 இன்னும் சில குறிப்புகள்:
1.உலகத்தில் உள்ள மொழிகளின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் இருப்பு, பற்றிய ஆய்வுகளைச் செய்யும் மொழிகள் பற்றிய உயராய்வு நிறுவனங்கள் தமிழைச் செவ்வியல் மொழிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ளன. பழைமையையும் தரநிலையையும் தாக்கம் ஏற்படுத்தியுள்ள நிலையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட செவ்வியல் மொழிகள் மொத்தம் 9. அவை. 1. சுமேரியன், 2, எகிப்தியன், 3. பாபிலோனியன். 4.ஹீப்ரு,5.சீனம்,6. கிரேக்கம் 7.லத்தீன் 8.சமஸ்கிருதம். 9. தமிழ். இவற்றுள் முதல் மூன்றும் வழக்கில் இல்லை. சீனமும் தமிழும் மட்டுமே இன்றும் மக்களின் மொழியாக பேச்சு மொழியாக இருக்கின்றன. இச்செவ்வியல் மொழிகளின் இலக்கணக் கட்டமைப்பையும் சொல் தொகுதிகளையும் பெற்றுக் கொண்டு பல மொழிகள் தோன்றின. அப்படித் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன என்பதாலேயே அவை ஒவ்வொன்றும் செவ்வியல் மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

2. மொழியியல் அறிஞர்கள் உரிய காரணங்களுக்காகச் செவ்வியல் மொழி எனத் தமிழைச் சொன்னால், நமது அரசாங்கமும் ஆட்சியாளர்களும், எல்லா வரையறைகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டுசெம்மொழிஎன எளிமைப் படுத்தி பெயர் சூட்டி மகிழ்கின்றனர். செவ்வியல் மொழி என்ற கலைச்சொல் தரும் அர்த்தத்தைசெம்மொழிஎன்ற பயன்பாட்டு வாதச் சொல்லாட்சி தராது என்பதைச் சொல்லி ஏற்கச் செய்யும் வல்லமையோடு அறிஞர்கள் குழாம் இல்லை என்பது அண்மைக்கால வரலாறு.
தமிழின் செவ்வியல் இலக்கியங்கள் என்பன சங்க இலக்கியங்கள் என அழைக்கப்படும் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் மட்டுமே. ஆனால் அறிஞர்கள் கூடி அமர்ந்த எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் 15 ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களைச் செம்மொழி இலக்கியங்கள் என ஏற்றுக் கொண்டு செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் நமது ரத்தத்திலேயே இல்லை.
சங்க இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக நிறுவி ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டுள்ளது போல, பாரதிதாசனை முன்னத்தி ஏராகக் கொண்டு உருவான தமிழியக்கக் கவிதைப் போக்கைப் புதுச் செவ்வியல் இலக்கியங்களாகச் சொல்ல முடியும். பிறிதொரு முறை அதைப் பற்றிப் பேசலாம்.

Perumal Murugan புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது அவற்றிற்குப் பொருளை நாம்தானே ஏற்றுகிறோம். செவ்வியல் மொழி என்றால் இரண்டு சொற்கள் வருகின்றன. செம்மொழி என்பது பண்புத்தொகை. ஒருசொல் நீர்மைத்து. இப்படிப்பட்டவையே கலைச்சொல்லாக அமைவது நல்லது.

Subramanian Ravikumar செவ்வியல் என்பது பற்றிய விவாதத்தை வெறும் இலக்கணவாதமாக்க வேண்டாம். மேலும் செவ்வியல் என்பதைத் தொழில் நுட்பம் சார்ந்த சொல்லாடலாக்குகிறோமா அல்லது, செவ்வியல் என்று கூறப்படும் மக்களின் பண்பாடு சார்ந்த சொல்லாடலாக்குகிறோமா? செவ்வியல் என்பது குறிப்பாக நிலப்பிரபுத்துவக்காலத்துப் பண்பாட்டைக் கொண்டது என்பது எனது கருத்து. அந்தக் காலகட்டத்தின் கலைகளில், 

எதிரெதிர் சமன்பாட்டுக்கூறுகள் அதிகம். அது கட்டிடம் சிற்பம் ஓவியம் 

இலக்கியம் எதுவானாலும். ஆனால் உள்ளடக்கம் என்பதோ, நிலப்பிரபுத்துவ 

விழுமியங்களின் விதவிதமான வெளிப்பாடாக இருக்கும். இது உலகம் 

முழுக்கப் பொதுவான நடைமுறை... செவ்வியல் பற்றிய விவாதத்தை அந்த 

அர்த்தத்தில் நகர்த்தினால் நன்றாக இருக்கும். அல்லது அர்த்தமுள்ளதாக 

இருக்கும்....

Ramasamy Alagarsamy Perumal Murugan புதிதாக உருவாக்கும்போது பொருளை நாம் தான் ஏற்றுகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ச் செவ்வியல் மொழிகளில் ஒன்றாகக் கருதத் தக்கது என்பது நாம் கண்டுபிடித்து முன் வைத்ததல்ல. தமிழ் செம்மொழியாக ஆக்கப்படுவதில்லை. அது செவ்வியல் மொழியாக இருந்தது...See More
Ramasamy Alagarsamy Subramanian Ravikumarஎனது பதிவைக் கலைச்சொல் பயன்பாடு என்பதாகத் தான் தொடங்கினேன். அதன் நீட்சியாகக் கேட்கப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது எனது கடமையும் கூட.என்றாலும் என்னால் முடிந்த அளவுக்கு உள்ளடக்கம் சார்ந்த விளக்கங்களையும் தந்துள்ளேன். நீங்கள் அதன் எல்லையை விரிவாக்கலாம் என்பது எனது வேண்டுகோள்


Thava Sajitharan Classicism - a dedication to the principles of the art concerned; clarity of execution, balance, adherence to recognized standards of form, and conscious craftsmanship என்ற அகராதி அர்த்தத்தை அனுசரித்து, தனது படைப்பு இத்தகைய தன்மைகளைக் கொண்டிருப்பதாகக் கருதி ஜெயமோகன் அப்படி எழுதியிருக்கலாம் என்று படுகிறது.... இந்த நிலைத்தகவலின் கீழ் பகிரப்பட்டிருக்கும் கருத்துகளை மேலோட்டமாகவே படிக்கக் கிடைத்தது... இந்த விடயத்தை வேறொருவர் சுட்டிக்காட்டியிருக்கவும் கூடும்... ஏனைய வரைவிலக்கணங்களின் அடிப்படையில் மேற்காணும் வாசகம் பொருள்தராது என்பது ஏற்புடையதே..
செவ்வியல்தமிழ், செம்மொழித் தமிழ் எனும் இரு வழக்குகளும் நிலவி வருகின்றன. இவை இரண்டுள் செம்மொழித் தமிழ் எனும் வழக்கே பெரும்பான்மை வழங்கப்பெறுகிறது. இதுவே பொருத்தமாகும்.செம்மை=மொழி சேர்ந்து செம்மொழி ஆனது.(ஈறுபோதல் என்ற நன்னுõல் விதிப்படி). செம்மை என்பதற்குச் சிறந்த, பழமைமயான எனும் பொருள்கள் உண்டு .தமிழ்மொழி சிறந்த பழமையான மொழி என்பதில் வேறு பட்ட கருத்துக்கே இடமில்லை. செம்மொழித் தமிழ் என்று வழங்குவதை விடுத்துச் செவ்வியல்தமிழ் என்றால்தான் இச்சிந்தனைகள் எழும். எனவே செம்மொழித் தமிழ் என வழங்கப்பட்டால் எந்தச் சிக்கலும் எழாது என நினைக்கிறேன்
Ramasamy Alagarsamy செம்மொழித் தமிழ், செவ்வியல் மொழி தமிழ் - என்ற இரண்டில் இரண்டாவது செவ்வியல் இலக்கியங்களைக் கொண்ட மொழி தமிழ் என விரியும் தன்மை கொண்டது. முதலாவது செம்மையான மொழி தமிழ் என அதன் எல்லையை மொழிக்குள் குறுக்கும் இயல்புடையது. உலகச் செவ்வியல் மொழிகளாகப் பட்டியல் இடப்பட்டுள்ள மொழிகள் ஒவ்வொன்றும் ஏன் அவ்வாறு பட்டியல் இடப்பட்டுள்ளன எனப் பார்க்க வேண்டும். முன்மாதிரியான இலக்கியக் கோட்பாடு ஒன்றை - வரையறைகளை- உருவாக்கிக் கொண்டு வழுவாமல் பின்பற்றிய இலக்கியப் போக்கைக் கொண்டிருந்த மொழிகள் என்ற காரணத்தினால் தான் பட்டியலிடப் பட்டுள்ளன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் அப்படிப்பட்டவை. இந்தத் தன்மை ஒவ்வொரு செவ்வியல் மொழியிலும் வெவ்வேறு இயல்புகளோடு காணப்படுகின்றன. இதை உணர்த்தும் நோக்கத்தை விட்டு விட்டு மொழி, செம்மையாக இருக்கிறது என்று குறுகிய எல்லைக்குள் நிறுத்தும் செம்மொழி என்ற சொல்லாட்சி தமிழுக்குப் பெருமை சேர்க்காது. சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். எளிதாக இருப்பதாலேயே உயர்வானது எனக் கருத வேண்டுமா?
Pattabu Padmanabhan · இனிமையும் நீர்மையும் தமிழ்எனலாகும் என்பது பிங்கலந்தை நிகண்டு. இன்று செம்மொழிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள எல்லா மொழிகளும் இரட்டை வழக்குள்ள( பேச்சு வழக்கு,இலக்கிய வழக்கு வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்- தொல்காப்பியர்)) மொழிகளாக இல்லை. சிலமொழிகள் பேச்சு வழக்கை இழந்து விட்டன.சில மொழிகளில் பேசப்படும் இலக்கியங்கள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சமற்கிருதம் பேச்சு வழக்கை இழந்து விட்டது. ஆனால் தமிழ் அப்படியன்று. தமிழ் மொழி இரண்டிலும் வளம் பெற்ற மொழியாக விளங்குகிறது. எனவே செம்மொழி என்று அழைப்பதால் அது குறுகிய எல்லைக்குள் வந்து விடாது. ஒருமொழிஎன்பது அந்தந்த மொழியைப் பேசும் மனிதக்குழுக்களின் அடையாளம். செம்மொழி என்றாலே சிறந்த பழமையான இனிமையான இலக்கிய வளம் வாய்ந்த மொழி என்ற பல்வேறு நிலைகளை உள்ளடக்கி நிற்கும். செம்மை =மொழி = செம்மொழி ஆகும். செம்மை=இயல்= மொழி= செவ்வியல் மொழி ஆகும். செம்மொழி என்பதற்கும் செவ்வியல் மொழி என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை . . சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித் திட்ப நுட்பம் சிறந்தன சூத்திரம் என்பது நன்னுõல் சூத்திரம் . செம்மொழி என்ற சுருக்கச்சொல்லே பெரும் பொருள்களை யெல்லாம் தமிழ் மொழியின் திட்ப நுட்பங்களை எல்லாம் விளக்கி நிற்கும்.
Pattabu Padmanabhan · தொல்காப்பியர் என்பதை மாற்றிப் பனம்பாரனார் எனப்படிக்க
Ramasamy Alagarsamy சூத்திரம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு சூத்திரமாகச் சொன்ன பவணந்தியாரை மேற்கோள் காட்டிப் பேசுகிறீர்கள். நான் விளக்கிக் கொண்டிருப்பது கலைச்சொல் பயன்பாடு பற்றி. இந்திய அரசு தமிழை செவ்வியல் மொழி என அங்கீகரித்ததும், அதைத் திரு மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் செயல்பட்ட மாநில அரசு செம்மொழி எனச் சுருக்கிப் பெயரிட்டுக் கொண்டு பெருவிழா எடுத்துக் கொண்டாடிய வரலாறு மிக அண்மைக்கால வரலாறு. ஆனால் அதற்கு முன்பு சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே ,மொழிகள் பற்றிய ஆய்வு நிறுவனங்களின் செவ்வியல் மொழிகள் பட்டியலில் தமிழ் இடம் பெற்றுவிட்டது. அங்கெல்லாம் CLASSICAL LANGUAGES,CLASSICAL LITERATURE, CLASSICAL TRADITION என்றே குறிப்பிடப் பெற்றன. அவற்றை மொழி பெயர்த்த கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் செவ்வியல் மொழி, செவ்வியல் இலக்கியம், செவ்வியல் மரபு என்றே மொழி பெயர்த்தனர்.ஆனால் அரசின் அங்கீகாரம், நிறுவன உருவாக்கம், அதன் தலைமைப்பொறுப்பில் அரசின் தலைவர் என்று ஆனபோது அறிஞர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்;, வெகுமக்களின் நாவில் உச்சரிக்க சொல்லே போதும் என ஏற்றுக் கொண்டு விட்டோம். கோவை மாநாட்டில் மைய உரையை ஆற்ற வந்த கலாநிதி கா.சிவத்தம்பி செம்மொழி என்பது சரியல்ல; செவ்வியல்மொழி என்று இருப்பதே சரியானது என மேடையிலேயே சொன்னார் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். செவ்வியல் என்பதில் உள்ள இயல் என்பது LOGY,ISM,ICS போன்ற பின்னொட்டுகளின் இடத்தைத் தமிழில் நிரப்பும் பின்னொட்டாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையின் ஆழ அகலங்கள் அனைத்தையும் உள்ளடக்குதல் என்ற பொருளில் வழக்கில் இருக்கிறது. அந்தப் பகுதியைத் தமிழோடு சேர்ப்பதன் மூலம் தமிழின் ஆழ அகலத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும் வாய்ப்பு இருக்கிறது என நான் கருதுகிறேன். அது தேவையில்லை எனக் கருதுபவர்கள் விருப்பம்போலச் சுருங்கச் சொல்வதே சாலச் சிறந்தது என நம்பிக்கையோடு இருக்கலாம்.

கருத்துகள்

மணிவானதி இவ்வாறு கூறியுள்ளார்…
செவ்வியல் பற்றிய ஆழமானக் கருத்துக்களை இப்பதிவின்மூலம் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது. மேலும் போலந்தில் நடைபெற்ற இந்திய விழாவையும் வெளியிட்டிருந்தீர்கள். நல்ல செய்தி. நன்றி பேராசிரியர் அவர்களே.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்