January 12, 2013

தோழர் ஜி.என்ஒரு குறிப்பு:
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றதன் மூலம் தமிழ் எழுத்தாளர்களில் தனக்கான இடத்தை உருவாக்கியவர். நான் மாணவனாக இருந்த காலத்தில் மதுரைத் தெருக்களிலும் சில நண்பர்களோடும் அவரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அப்போது அவரது எந்த எழுத்தையும் வாசித்ததில்லை. அவரது எழுத்துக்களைப் படித்து முடித்தபோது அவரது வாழ்க்கையைப் பார்க்க அவர் இல்லை. அவரது அலைவு வாழ்க்கைப் பின்னர் வந்த எழுத்தாளர்களுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் தொடர்ந்து கொண்டிருந்த ஒன்று.அதனைச் சில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் புனைவுகளாக்கிப் பதிந்தும் வைத்துள்ளனர். அவையெல்லாமே நியாயமான பதிவுகளாகவே படுகின்றன என்றாலும், திலீப்குமாரின் இந்தக் கதை கச்சிதமான ஓரங்க நாடகமாக எனக்குத் தோன்றியது. கதையை நாடகமாக ஆக்கியபோது கதைசொல்லியை திலீப்குமாராகவே வாசித்தேன். அதனால் அவரது பெயரையே பாத்திரத்தின் பெயராக ஆக்கியிருக்கிறென். கதையின் தலைப்பு: ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்.(மூங்கில் குருத்து,க்ரியா,1985). இனிக் கதையை நாடகமாக வாசிக்கலாம்.


பாத்திரங்கள்:
திலீப் - புத்தக விற்பனையகத்தில் வேலை செய்யும் இளைஞன். இன்னும் அதிகம்
அறியப்படாத எழுத்தாளனும் கூட
ஜி.என். – உண்மையில் அவருடைய வயது ஐம்பதுக்கும் குறைவு ஆனால் தோற்றம்
அறுபதுக்கும் மேல்.

வெளிச்சம். மேசையில் உட்கார்ந்து வேலை செய்யும் அந்த இளைஞன் மீது கவிழ்ந்துள்ளது.  மற்ற இடங்களில் பரவியுள்ள மென் வெளிச்சத்தில்
அது ஒரு புத்தகக் கடை என்பது வெளிப்பட வேண்டும்.
கடிகாரத்தின் பெண்டுலம் நிதானமாக அசைந்து ஓசை எழுப்புகிறது.
அந்த ஓசைக்குத் திரும்பிக் காது கொடுத்த அந்த இளைஞன் ஓசை முடியும்போது
திரும்பி தனது கையில் உள்ள கடிகாரத்தில் நேரம் பார்க்கிறான்.

மணி ஆறு.
நாட்காட்டியில் 10-02-1981.

எழுந்து சென்று உள் அறையின் விளக்குகளையும், வெளிப்புற
அலுவலகத்தின் விளக்குகளையும் போடுகிறான்.
ஜன்னலின் அருகில் சென்று, கையை வெளியே நீட்டி எடுக்கிறான்.
மழைத்தூறல் கையில் ஒட்டியிருக்கிறது.
கர்சீப்பை எடுத்துத் துடைத்து விட்டு மேசையின் முன் அமர்ந்து,
ரசீது புத்தகத்தையும் நாள் விற்பனைக் கணக்கையும் சரி பார்க்கிறான்.

திலீப்
முப்பது எழுபத்தி ஐந்து ; அறுபது, நூற்று இருபத்தியேழு; இருபத்தி ஐந்து; பதினெட்டு முப்பது
                        [மெதுவாக வாய்க்குள் சொல்லிக் கொண்டே வருகிறான். ஒவ்வொரு   
                        முறையும் சொல்லும்போதும் பென்சிலால் நாள் கணக்கில் டிக் செய்து
                        கொள்கிறான். கூட்டி முடித்து]
தொளாயிரத்து முப்பத்தி ஏழு
[சொல்லி விட்டு உள்ளேயிருந்து பணத்தை எடுத்து வரிசைப்படுத்தி அடுக்கி எண்ணுகிறான். பணம் நூறு, ஐம்பது, பத்து, ஐந்து ரூபாய் களாகவும் ஒன்று இரண்டு ரூபாயாகவும் இருக்கிறது. இவையில் எப்படியான மாற்றங்களும் இருக்கலாம். எண்ணி முடிக்கும் பொழுது தொள்ளாயிரத்து முப்பத்தி இரண்டு இருக்க வேண்டும்]
”அஞ்சு ரூபாய் குறையுதே”
                         [திரும்பவும் எண்ணுகிறான். தலையில் கைவைத்து யோசித்து]
”அஞ்சு ரூபா எங்கேயோ தவறுதே..”
[அவனது கவனம் சிதைக்கப்படுவது போல கதவு தட்டப்படுகிறது.     
பணத்தை உள்ளே வைத்து எழுந்து வர முயல்கிறான். அந்த மனிதர் ஜி.என். நுழைந்து விடுகிறார். வெள்ளை வேஷ்டி, ஜிப்பா, அழுக்குடன் –காலில் செருப்பு இல்லை. நுழைந்தவுடன் இருமுகிறார். கோழையை துப்ப இடம் பார்த்து விட்டு விழுங்கி விடுகிறார். தலை அசைப்பின் மூலம் அவரது வருகையை ஏற்றுக் கொள்கிறான். அவர் நின்று எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்கிறார்]
ப்ளீஸ்.. உட்காருங்க..     [அவனுக்கு இடது புறத்தில் இருக்கும் சோபாவில் சென்று அமர்கிறார்]
ஜி.என்
தம்பி ஒன்னோட பாஸைப் பார்க்கணும்.. வருவாரில்ல..?
திலீப்
அவர் வெளியூர் போயிருக்காரே.. நாளைக்கு சாயந்தரம் வந்துடுவார். ஆனா கடைக்கு வர இரண்டு நாள் ஆகும். நாளை மறுநாள் கடைக்கு வார விடுமுறை. ஆக நீங்க அவரை திங்கள் காலையில தான் பார்க்க முடியும்.
                  [ஜி.என். கண்களைத் துடைத்து விட்டு, கண்களை விரித்து அவனைப் பார்க்க]
நீங்க யாருங்கிற விவரத்தையும், என்ன விசயமா அவரைப் பார்க்க வந்தீங்க என்பதையும் என்னிடம் சொன்னா.. நான் அவரிடம் சொல்ல முடியும்.
                   [அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. பதிலுக்குப் பதிலாக இருமலே
                   வருகிறது. சுற்றுமுற்றும் தயக்கத்துடன் பார்க்கிறார்.]
ஒங்களோட உடல்நிலை சரியில்லைன்னு நினைக்கிறேன். நீங்க யாருன்னு.. நான் தெரிஞ்சுக்கலாமா..?
ஜி.என்
(களைப்புடன்) நான் நாகராஜன்.. மதுரையிலிருந்து..
திலீப்
தோழர் ஜி.என்..ங்கிறது நீங்க தானே..?
ஜி.என்
தோழர் ஜி.என் (சொல்லும்பொழுது நளினமான சிரிப்பு) ஆம்.. நான் தோழர் ஜி.என். கம்யூனிஸ்ட் மூவ்மெண்ட்ல இருந்து வெளியேறி பல வருஷங்கள் ஓடிப் போய்ச்சு. ஆனாலும் என்னைத் தோழர் ஜி.என். என்றே சொல்றாங்க. ( சிரிப்பு பலமாக வருகிறது)
திலீப்
உங்களைச் சந்தித்ததில் ரொம்பச் சந்தோசம். பல தடவை உங்களை சந்திக்க நினைத்ததுண்டு. (அவரிடமிருந்து சிரிப்பு மட்டுமே.. வருகிறது
அவன் அவரோடு உரையாடத் தயாராகின்றவன் போல் மேசையில் இருப்பவற்றை ஒழுங்குபடுத்துகிறான். ரசீது புத்தகங்களை மேசைப் பெட்டியைத் திறந்து உள்ளே வைக்கிறான்)
ஜி.என்
உன் பெயர் என்ன?
திலீப்
திலீப்குமார்.. திலிப்ன்னு கூப்பிடுவாங்க
ஜி.என்
என்னைத் தெரியுமா.. உனக்கு.. ?
திலீப்
தோழர் ஜி.என்.ங்கிற முகாந்திரம் இல்லாமலேயே உங்களைத் தெரியும்.
ஜி.என்
ஓ.. அப்படியா.. எப்படி?
திலீப்
உங்க திருமணத்துக்கு வந்திருந்தேன்..
ஜி.என்
நீ கோயம்புத்தூர் ஆளா..?
திலீப்
ஆமா.. உங்க மைத்துனன் ராகவனைச் சின்ன வயசில இருந்தே தெரியும். உங்க மனைவியையும் கூடச் சின்ன வயசில இருந்தே தெரியும்.
ஜி.என்
ஓ.. ம்..
திலீப்
நானும் ராகவனும் ஒரே ஸ்கூல்.. உங்க மனைவி அப்ப காலேஜில படிச்சிக்கிட்டு இருந்தாங்க.. அவங்ககிட்ட எல்லாம் நிறைய பேசியிருக்கேன்.. ராகவனை ரொம்ப நாளா பாக்கலை… அவங்க அப்பா இறந்தத விசாரிக்கிறதுக்கு போன மாசம் போயிட்டு வந்தேன்.
ஜி.என்
ராகவனோட அப்பா இறந்துட்டாரா..?  ( கொஞ்சம் அதிர்ச்சியுடன்)
திலீப்
உங்க மாமனார் இறந்தது உங்களுக்குத் தெரியாதா? ..
ஜி.என்
உண்மையாகவா..? எனக்குத் தெரியாது.. என் மனைவி செத்துப் போனப்பறம் அவங்களோட தொடர்பு எதுவும் இல்லை. ( பெருமூச்சுடன்) அவர் மிக நல்ல மனிதர்.
திலீப்
அப்படியா.. அவரோட நான் அதிகம் பழகுனது கிடையாது.
ஜி.என்
அது சாத்தியமில்லை தான்.(அமைதி… அதை குழைப்பவன் போல அவன் டிராயரைத் திறந்து சிகரெட் பெட்டியை எடுத்து ஒன்றைப் பற்ற வைக்கிறான். அவர் அருகில் சென்று நீட்ட பௌவியமாக ஒன்றை எடுத்துக்கொள்கிறார். சிகரெட் பற்ற வைக்கும் அவர் கைகளைக் கவனிக்கிறான். அவன் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, அவரும் அவரது கைகளைத் திருப்பிப் பார்த்துக் கொள்கிறார்… கைகள் முடிச்சுகளோடும் விரல்கள் வளைந்தும் நடுக்கம் கொண்டனவாகவும் உள்ளன. சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்தவரை.. 
திலீப்
என்னோட முதல் சிறுகதை நீங்க ஆசிரியர் குழுவில் இருந்த பத்திரிகையில் தான் வெளி வந்தது. அதில்லாம பல்வேறு தருணங்கள்ல உங்களுக்குக் கடிதங்களும் எழுதியிருக்கிறேன்.
ஜி.என்
ஸாரி.. எனக்கு நினைவு இல்லை.. யாரோட கடிதத்தொடர்பும் எனக்கு நினைவில் இருக்கிறது இல்ல.. நானே ஒவ்வொரு ஊராப் போயி நண்பர்களை எல்லாம் சந்திச்சு விடுகிறேனே அதனாலெ இப்ப எல்லாம் யாரும் எனக்குக் கடிதங்கள் எழுதுறதும் இல்ல. என்னை மன்னிச்சுடு. நீ எதைப் பத்தி கடிதம் எழுதி இருந்தெ.
திலீப்
முன்னெல்லாம் உங்க கதைகளைப் பற்றி எழுதினேன். அப்புறம் ஒரு தடவை, ”ஒருவன் எத்தனை வயதில் நாவல் எழுதலாம்” என்று கேட்டிருந்தேன். நீங்கள் பதிலே எழுதவில்லை. நான் நாவலே எழுத வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். (சிரித்துக் கொள்கிறான்)
ஜி.என்
(அவரும் சிரித்துவிட்டு) ஓ.. அப்படியா.. நான் எழுதாதற்கு அது காரணம் இல்லை. பொதுவா நான் கடிதங்களுக்குப் பதில் எழுதுறது இல்ல. ( அங்கிருந்த நவீன ஓவியத்தைப் பார்த்துவிட்டு) என்ன சொல்ல வருகிறான் இந்தக் கலைஞன்? ஒன்னுமே புரியவில்லை.
எனக்கு இலக்கியத்தில் இருக்கும் பரிச்சயம் இதில் இல்லை. நவீன ஓவியம் எப்பொழுதுமே என் தலைக்கு மீறியே போய்க் கொண்டிருக்கிறது.
திலீப்
( அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி) இன்னொரு கடிதத்தில், “நீங்கள் அதிகம் குடிப்பதாகக் கேள்விப் படுகிறேன்; போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும் பலரும் சொல்கிறார்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் கருதியாவது நீங்கள் விட்டு விட வேண்டும்” என்று எழுதியிருந்தேன்.
ஜி.என்
நீயும் எழுதியிருந்தாயா..? என் மீது அன்பும் பாசமும் கொண்ட பல நண்பர்கள் நான் குடிப்பதை நிறுத்துமாறு சொல்கிறார்கள். ஆனால் .. என்னால் அதை நிறுத்தத்தான் முடியவில்லை. ( திரும்பிப் பார்த்து) சிறிது தண்ணீர் கிடைக்குமா..? ( தண்ணீரை வாங்கி அண்ணாந்து குடிக்கிறார். மூச்சை இழுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்)
திலீப்
உங்களின் ஆரம்பகாலக் கதைகளைத் திரும்பவும் படித்தேன். அவற்றை எழுதும்பொழுது இயக்கத்தில் தீவிரமாகப் பங்கு பெற்றிருந்தீர்கள். ஆனால் கதைகளில் வெளிப்படையான சித்தாந்தச் சார்பு எதுவும் புலப்படவில்லை. கம்யூனிஸ்டுகள் எப்படி உங்களை ஏற்றுக் கொண்டார்கள். (அவனது அனுமதியுடன் ஒரு சிகரெட்டைப் பெற்று பற்ற வைத்துக் கொள்கிறார்)
ஜி.என்
அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகளில் பலபேர் நல்ல படிப்பாளிகள்; பரந்த இலக்கிய அறிவின் காரணமாக என் இலக்கியப் போக்கைச் சந்தேகித்ததில்லை. ஆனால் நான் இயக்கத்தை விட்டு வெளியேறிய உடனே கடுமையாக விமரிசித்தார்கள். “ அதைக் கூட அவர்கள் சுயமாகச் செய்தார்களா? என்பது சந்தேகம் தான்.”
திலீப்
அவர்களுக்கும் உங்களுக்கும் இருந்த அடிப்படையான முரண்பாடுகள் – சித்தாந்த முரண்பாடுகள் தானே..
ஜி.என்
இயக்கத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் பலருக்கும் பிடித்தது மார்க்சியத்தின் மனிதாபிமான உள்ளடக்கம் தான். ஆனால் எனக்கு அப்படியல்ல; என்னைக் கவர்ந்தது அதன் தர்க்க நுட்பமும் பரந்த அணுகலும் தான். மார்க்சியத்தின் இலக்கியக் கோட்பாடு என்னை ரொம்பவும் ஈடுபட வைத்தது. ஆனால் அதன் அழகியல் கோட்பாடு என்னை ஈர்த்ததே இல்லை. அது என்னவென்று எனக்கே விளங்கியதே இல்லை. (சிரித்துவிட்டு.. புகையை இழுத்து சிகரெட்டை அணைக்கிறார்)
திலீப்
ஆமாம்.. நீங்கள் ஒரு கட்டுரையில் ”தத்துவத்தின் துணைகொண்டு அணுகப்படும் அனுபவத்தைவிடவும் அனுபவத்தால் பெறப்படும் தத்துவம் செறிவானது. தத்துவச்சாரலில் மிகவும் இளகிப் போனதாய் இருந்தாலும் கூட தன்னளவில் அசலானது என்ற சிறப்புடையது” என்று எழுதியிருந்தீர்கள். அந்தக் கருத்து எனக்கு ரொம்பப் பொருத்தமானது என்று தோன்றியது.
ஜி.என்
அதை எழுதினப்போ பொறுமையான சிந்தனையோ தெளிவான கருத்துகளோ இருக்கவில்லை.
திலீப்
அப்படியானால் அந்தக் கருத்துக்களை எல்லாம் மாற்றிக் கொண்டு விட்டீர்களா..?
ஜி.என்
( மூக்கை விரலால் தடவிக் கொண்டே) இப்பொழுதெல்லாம் எதையும் தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. கேள்விகளின் எளிமை எனக்கு அச்சத்தைத் தருகிறது. (அமைதி) தத்துவம், இலக்கியம் இவை இரண்டும் தம் தம் தளங்களில் வாழ்க்கையைப் பரிசீலிக்கும் இருவேறு அரூபமான சக்திகள். இவற்றுக்கு ஸ்தூலமான ஜீவிதமோ, விளைவுகளோ இல்லை. அவை ஒன்றுக்கொன்று துணைபுரியும் சாத்தியக்கூறுகளை விடவும் ஏதோ ஒரு மட்டத்தில் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன.
திலீப்
அப்படியானால் உங்களோட இலக்கியக் கொள்கைதான் என்ன?
ஜி.என்
எனக்கு அப்படி ஒரு கொள்கை இருக்கும் என்று நினைக்கிறாயா..? (நீண்ட அமைதி. திலீப் எதுவும் கேட்கத்தோன்றாதவனாக கண்களை மூடி இருக்கிறான்.) ஆமா .. நீ எதாவது எழுதியது உண்டா..?
திலீப்
எப்போதாவது கதைகள் எழுதுவது உண்டு
ஜி.என்
உன் தொகுப்பு ஒன்று இருந்தால் கொடு. நான் படிக்க விரும்புகிறேன்.
திலீப்
என் கதைகளின் அச்சுப் பிரதிகள் கூட என்னிடம் இல்லை
ஜி.என்
அவற்றை எல்லாம் சேகரித்த பின்பு தொகுப்பு கொண்டு வர வேண்டும்.
திலீப்
நானும் கூட என் கதைகளின் பிரதிகளைப் பாதுகாத்தது இல்லை.
ஜி.என்
இப்போ தமிழ்ல உன்னைப் போல நல்ல சில எழுத்தாளர்கள் வந்துக் கிட்டு இருக்காங்க. நீங்கள்லாம் பலதையும் படிக்கணும். ரஷ்ய எழுத்தாளர்கள், பிரெஞ்சு எழுத்தாளர்கள், அமெரிக்க எழுத்தாளர்கள் என்று சில பேரை செலக்ட் பண்ணி படிக்கணும். தமிழ்லேயும் சில பேரையும் விரும்பி நான் படிக்கிறதுண்டு. (அமைதி) ஆமா.. ஒன்னோட ஊர் கோயம்புத்தூர்னு சொன்னயே. இங்கே எங்கே தங்கி இருக்கிற.
திலீப்
குடும்பம் எல்லாம் கோவையில் தான். நான் திருவல்லிக்கேணியில் லாட்ஜில் மாத வாடகைக்கு ரூம் எடுத்திருக்கேன். மெஸ்ஸில் சாப்பாடு.
ஜி.என்
கல்யாணம்..
திலீப்
இன்னும் இல்ல..
ஜி.என்
மெஸ்சில சாப்பிடுறது கஷ்டமாச்சே….. ம்.. பாலுணர்வு பிரச்சினைய எப்படி சமாளிக்கிற. ( இந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவனாக அவன் நிற்க) பாலுணர்வு ஒரு பிரச்சினையா இல்லையா..? ( அவன் தலையை ஆம் என்பது போல ஆட்டுகிறான்) வேசைகளைத் தேடி நீ போவதில்லையா..? ( இல்லை என்பதாகத் தலையை ஆட்டுகிறான்) அப்படியானால் …….. ……. …நீ…. ( சொல்லிவிட்டுப் பலமாகச் சிரிக்கிறார்)
திலீப்
இல்லை.. அது வந்து.. அடுத்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம்னு இருக்கிறேன்.
ஜி.என்
(ஓ என்பது போலத் தலையை ஆட்டி விட்டு) ஆஹா.. நீ கோயம்புத்தூர் ஆளு.. கோயம்புத்தூர் ஒரு நல்ல ஊர் தான். அங்க உள்ள தேவடியாத் தெருவெல்லாம் எனக்குத் தெரியும். அற்புதமான பெண்களின் சுகம் எனக்கு அந்த ஊர்ல கிடைச்சதுண்டு. உனக்கு அனுபவம் இல்லை. உடலுறவுக்குப் பின் திடீரென்று கருங்கலில் விழிக்கும்போது அருகே வெற்றுடம்போடு கிடக்கும் பெண்ணிடமிருந்து வரும் அபூர்வமான மணம்.. ரொம்பவும் சுவாரசியமானது.. அதைச் சொன்னால் தெரியாது. அதைத் துய்த்துணர வேண்டும்.
( நினைவுகளில் லயித்தவராகக் குரல் வருகிறது.
அவன் ஜன்னல் வழியே கைகளை மழை விழவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு உள் அறையின் ஜன்னல்களை மூடுகிறான். விளக்குகளை ஒவ்வொன்றாக அணைக்கிறான். அவர், அவனது அனுமதி இன்றியே சிகரெட் ஒன்றை எடுத்துச் சிகரெட் துகள்களை வெளியேற்றி விட்டுப் பையிலிருந்த கஞ்சாப் பொட்டலத்தை அதில் செலுத்திக் கொள்கிறார். அவன் வந்து அதிர்ச்சியோடு நிற்கிறான்)
நீ கஞ்சா உபயோகிப்பது உண்டா..?
திலீப்
இல்லை. ( அவர் விடும் புகையை சுவாசிக்க விரும்பாதவனாய் தூரத்தில் நின்று கொண்டு) உங்கள் வாழ்க்கையை ஏன் இப்படித் தாறுமாறாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஜி.என்
ஆம்.. நீ சொல்வது சரிதான். நான் என் வாழ்க்கையை ரொம்பவும் தாறுமாறாக ஆக்கிக் கொண்டு விட்டேன். (உடலை இன்னும் தளர்வாகச் சரித்துக் கொண்டு கண்களை மூடி வைத்து ..)
மனம் எப்போதும் உழைப்பின் பயனையே யாசிக்கிறது. உடலோ உழைப்பை அறவே மறுக்கிறது. மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல், லட்சியம் எல்லாவற்றையும் நான் கைவிட்டு விட்டேன். இப்போது உலகத்தின் கண்களில் நான் ஒரு முறிந்து போன மனிதன். உண்மையில் என்னைப் போன்றே உள்ளுக்குள் எல்லோரும் முறிந்துதான் கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாமர்த்தியசாலிகள். தங்கள் முறிவுகளை அவர்கள் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகையாக சிரிக்கிறார்கள். மிகையாக அழுகிறார்கள். நான் மட்டும் வெகுளியாகி எல்லோராலும் வெறுக்கப் படுகிறேன். என் மனைவி என்னை வெறுத்தாள். என் மகள் வெறுக்கிறாள்; என் மகன் வெறுக்கிறான். என் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். என் வயதான தாயும் கூட இன்று திடீரென்று..  ரொம்பவும் திடீரென்று எவருடைய அன்புக்கும் தகுதி அற்றவன் என்று உணர்த்தப்படுகிறேன். இது கொடுமையானது. வெறுக்கப்படுவதை விடவும் மிகவும் கொடூரமானது.
திலீப்
இலக்குகளும் நம்பிக்கைகளும் தேவையற்றவைகள் என நீங்கள் நினைப்பதாக நான் எடுத்துக் கொள்ளலாமா…?
ஜி.என்
நாம் மனிதர்கள். நாம் கள்ளமற்றவர்கள். உழைப்பு, செயல், லட்சியம், இலக்கு போன்ற வார்த்தைகள் நம்மை மிகவும் வசீகரிக்கின்றன. இந்த வசீகரம், இந்தக் கவர்ச்சி, இந்த மாயை நமக்குத் தேவையாக இருக்கிறது. முற்றிலும் புதிதான ஒரு ஒழுங்கை வழங்கி இவ்வாழ்க்கைக்கு வழங்கிவிட  நாம் எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறோம். அதற்காக கோபப்படுகிறோம்; போராடுகிறோம். கொலை செய்கிறோம். மடிந்து போகிறோம். நமக்கு எப்போதும் பாதையை விட இலக்கே முக்கியமாக இருக்கிறது. பாதையின் பயங்கரமான நிலத்தை நாம் அறிய மாட்டோம். நம்மில் முட்டாள்கள் பாதையில் மடிந்து .. இல்லாத இலக்குகளுக்கு இரையாகிப் போவார்கள். புத்திசாலிகள் பாதையின் ஒரு அசிங்கமான மூளையில் நின்று அதையே இலக்கு என்று ஆர்ப்பரித்து ஏமாற்றுவார்கள். மீண்டும் புதிதான கோபங்கள், புதிதான கொலைகள், புதிதான சாவுகள், ஏமாற்றங்கள் நம்மை ஒருபோதும் நம்மை ஏமாற்றுவதில்லை. அவை தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு புதிய நம்பிக்கையைத் தன் மடியில் சுமந்தே வருகிறது. அதைப் போன்றே ஒவ்வொரு நம்பிக்கையும் ஒரு புதிய ஏமாற்றத்தை…
திலீப்
உங்கள் விரக்தியின் உச்சபட்சமான வார்த்தைகளாக எனக்குப் படுகிறது.
ஜி.என்
எனக்கு வியப்பற்றுப் போய்விட்டது. எல்லாம் ! நான் குடிக்கிறேன். நான் வேசைகளிடம் போகிறேன்… ஏன்? ஒரு கொலையை கூடச் செய்து விட்டேன் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். நான் குரூரமானவன் என்று அவர்களே நினைக்கிறார்கள். அது உண்மையாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது. மனிதன் எப்போதும் குரூரத்துக்கும் அன்புக்கும் இடையே திகைத்துக் கொண்டே நிற்கிறான். ஒரு கொலையை , தற்கொலை, சாவை, பெண்ணை, அவளது நிர்வாணத்தை, குழந்தையை ஒரு மலரை,  எல்லாவற்றையும் அவனால் ஏற்கவும் ரசிக்கவும் முடிந்து கொண்டு இருக்கிறது.
திலீப்
அறிவின் தர்க்கங்களை முற்றிலுமாக ஒதுக்கி விடச் சொல்கிறீர்கள். சகலமானவர்களுக்கும் இது சாத்தியமாகின்ற காரியமா? என்ன?
ஜி.என்
மனிதன் தீயாலும் பனிக்கட்டியாலும் ஆனவனாக இருக்க வேண்டும். இந்தத் தீயிக்கும் பனிக்கும் இடையே அறிவே வதைபட்டுப் பிளிருகிறது. ஒன்றுக்குள் மற்றதை இழைத்து விடத் துடிக்கிறது. ஆனால் என்றுமே அதனால் அப்படிச் செய்ய முடிந்ததில்லை. அறிவின் இந்த தரகு அபத்தமானது. “ நல்லது – கெட்டது” என்ற பரமான இருநிலைகளை முதலில் மறுப்பது போல் தோன்றினாலும் முடிவில் அவற்றிடமே சரண் அடைந்து சுருங்கிப் போகிறது. மேலும் நுட்பமான சோகங்களை விளிப்பதைத் தவிர வேறெதையும் அதனால் சாதிக்க முடியாது. இன்று என் நண்பரகளின் அறிவு என் கைகளுக்குச் செம்மை பூசி மகிழ்கிறது.
( தண்ணீர் குடித்து ஆசுவாசம் செய்து கொள்கிறார். பெருமூச்சுடன்)
நான் ரொம்பவும் சோர்ந்து விட்டேன். ஆம் எதையும் சாதிக்காமலேயே நான் ரொம்பவும் சோர்ந்து விட்டேன். இப்போது எல்லாம் முடிந்து விட்டது. நான் செய்ய நினைத்ததைத் துவங்கும் முன்பே மிச்சமின்றி எல்லாம் முடிந்து விட்டது. கதைகள் என்று நான் கறைபடித்திய காகிதங்கள் மட்டுமே இனி மிச்சம்.
திலீப்
நிதானமாகப் பேசுங்கள்…. மூச்சு அதிகம் இரைக்கிறது.
(அவர் அருகில் சென்று நிதானத்துக்குக் கொண்டுவர நினைக்கிறான்..டம்ளரில் நீர் நிரப்பித் தருகிறான்)
ஜி.என்
இல்லை.. இனி எனக்காக மரணம் மட்டுமே காத்திருக்கிறது. மனிதனுக்கு நிச்சயமானது மரணம் ஒன்று தான்.
(சொன்னவர் சரிந்து தரையில் விழுந்து விடுகிறார். அவன் பதற்றத்துடன் அவர் அருகில் சென்று தூக்க முயல்கிறான். ஆனால் அவரே எழுந்து தரையில் கைகளை அறைந்து ஓங்கி அழுகிறார்)
எல்லாம் முடிந்து விட்டது: மிச்சமின்றி எல்லாம் முடிந்து விட்டது. மனிதனுக்கு நிச்சயமானது மரணம் மட்டும் தான்.
(பின்புறமாக அவன், தோள்களைப் பற்றுகிறான். அசைவற்று, கேவல் ஒலிக்கிறது)
திலீப்
ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள். கொஞ்சம் எழுந்திருங்கள்… முகத்தைக் கழுவிக் கொண்டு வாருங்கள்..
(அவர் கழிப்பறைப் பக்கமாகப் போய் விடுகின்றார். அவன் மேசைப் பெட்டியினைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொள்கிறான். அவர் திரும்பி வரும்போது டம்ளர் நிறைய தண்ணீர் தருகிறான். பையில் இருந்து மூன்று புத்தகங்களை எடுத்து அவரிடம் தர முயல்கிறான்)
ஜி.என்
எனக்கொரு சிகரெட் வேண்டும்.
(அவன் நீட்டிய சிகரெட் பெட்டியிலிருந்து எடுத்துக் கொண்டு) தேங்க்.. யூ.. ( அவன் தரும் புத்தகங்களில் ஒன்றை வாங்கிப் பார்க்கிறார்)
திலீப்
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வு நூல்.. (புரட்டிய அவர் கூர்ந்து பார்க்கிறார்.) இந்திய விடுதலைக்கு உதவும் வகையில் வெகுஜனக் கலாசாரத்துறைகள் எவ்வாறு இயங்கின என்பதைப் பற்றிய ஆய்வு நூல்.. இத்தகைய ஆய்வு முதல் முறையாக இப்போது தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜி.என்
அப்படியா..? ரொம்பச் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்த சமூகவியல் ஆய்வுகளைப் படிக்க முடிவதில்லை. அவற்றில் தரப்படும் தகவல்கள் மனதில் நிற்பதே இல்லை..
(அடுத்து ஒரு கவிதைநூலை அவன் தர அதை வாங்கி) இந்தக் கவிஞன் என்னுடைய நண்பர் தான். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தக் கவிதைகள் எழுதப்பட்ட உடனேயே வாசித்தவன் நான். என் கதைகளை அவரும் உடனே வாசித்து விடுவார். ந.பிச்சமூர்த்தியின் அழுத்தமான பாதிப்பு இவரிடம் உண்டு.
திலீப்
இது மொழிபெயர்ப்பு நாவல். ஆல்பெர்ட் காம்யுவின் ஸ்றேஞ்சர் – அந்நியன்..
ஜி.என்
ஓ.. என்னை மிகவும் கவர்ந்த நாவல் இது முப்பது நாற்பது முறை வாசித்திருப்பேன். இரு.. இரு.. அந்த நாவல் எப்படித் தொடங்கும் எனச் சொல்கிறேன். ( ஏற்ற இறக்கத்துடன் ஆங்கிலத்தில் சொல்கிறார்)  மொழிபெயர்ப்பும் அச்சாக்கமும்  நன்றாக உள்ளது. கம்யூ இந்த நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவன். அவனது படைப்புச் சக்தியைக் கொண்டு வந்த நாவல் இந்த ஸ்றேஞ்சர். (சிகரெட் முடிந்திருந்தது)
திலீப்
தோழர் ஜி.என். கிளம்பலாமா?
ஜி.என்
(முன் அறையின் கதவுகளை மூடி விட்டுத் திரும்பும்பொழுது அவர் வெளியேறும் வாசலை மறிப்பவர் போல நின்றிருக்கிறார்.) திலீப்.. எனக்கொரு உதவி செய்ய வேண்டும் நீ..
திலீப்
சொல்லுங்கள்..
ஜி.என்
எனக்கு மிகவும் பசிக்கிறது; தாகமாகவும் இருக்கிறது. (அமைதி) எனக்கு உடனடியாக ஒரு 25 ரூபாய் வேண்டும்.
திலீப்
(யோசிக்கிறான்.). வந்து.. தேதி 25. மாதக் கடைசி..உங்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் தான்… ஆனால் என் வசம் பணம் எதுவும் இல்லை. உங்களுக்கு உதவ முடியாமல் போவதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது.
ஜி.என்
ஒன்னோட பாஸ் கணக்கில் கொடு…
திலீப்
அப்படியெல்லாம் கொடுக்கிற வழக்கம் இல்லை. அவர் அனுமதி இல்லாமல் கம்பெனி பணத்தைக் கையாள்வது சரியல்ல…
ஜி.என்
இல்லை… ஒன் பாஸ் என்னுடைய நண்பர் தான்.. நான் சொல்லிக் கொள்கிறேன்.
திலீப்
எனக்குத் தெரியும். ஆனாலும் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லை. அது எனக்கும் என் பாஸுக்குமான உறவில் சங்கடத்தை உண்டாக்கி விடும்.
ஜி.என்
நீ அதைப் பத்தியெல்லாம் கவலைப் படாதே. அவரைப் பார்க்கும்பொழுது நான் எல்லாவற்றையும் விலக்கி விடுகிறேன். உனக்கு ஒரு பிரச்னையும் வராது.
திலீப்
என் பொஷிசனில் இருந்தால் நீங்கள் அப்படிச் செய்வீர்களா..?  யோசித்துப் பாருங்கள்.. (அவர் பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டிருக்கிறார்.)
ஜி.என்
(சலிப்புடன் இப்படிச் சொன்னால் எப்படி? எனக்கு உதவக் கூடியவர்களை இந்த சமயத்தில் என்னால் சந்திக்க முடியாதே. மழை வேறு பெய்கிறது.. நான் எங்கே போவேன்.. ? நீ தான் எப்படியாவது முயன்று எனக்குப் பணம் தர வேண்டும்.
திலீப்
ம்.. ஒன்று செய்யலாம். இன்று இரவு என்னோடு சாப்பிடுங்கள்.. நாளையும் கூட என் கணக்கில் மூன்று வேளையும் சாப்பிடலாம்
(தூரமாக இருக்குமோ என்று யோசிக்கிறார் என நினைத்து)
விடுதி கூட அருகில் தான் உள்ளது. என்னோடு வாருங்கள். உங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.
ஜி.என்
அது வந்து.. நான் காரமான எதையுமே சாப்பிட முடியாதவனாக இருக்கிறேன். டீயும் பன்னும் மட்டுமே என்னுடைய ஆகாரங்கள்.. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவை தான் உணவு.
திலீப்
மெஸ்சில் தயிர் சாதம் சாப்பிடலாமே..
ஜி.என்
தயிர் சாதத்தை என் வயிறு ஜீரணிக்க மறுக்கிறது. உன்னிடம் வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். உடனடியாக நான் குடிக்க வேண்டும். குடிக்காவிட்டால் என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. குடிக்காவிட்டால் என்னால் நடக்க முடிவதில்லை. கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கி விடுகின்றன. தயவு செய்து.. அதற்கான பணத்தை நீதான் தர வேண்டும்.
திலீப்
என்னைப் போன்ற ஒரு நபரிடம் மாசக் கடைசியில் இந்த அளவுக்குப் பணம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல..
ஜி.என்
நீ விரும்பினால் எனக்கு உதவ முடியும்.
திலீப்
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் இஷ்டம். என் நிலையை நான் முழுமையாக விளக்கி விட்டேன். ( பையை எடுத்துத் தோளில் போட்டபடி கிளம்பத் தயாராகிறான்)
ஜி.என்
(அறிவிப்புப் போல) எனக்கு 25 ரூபாய் கிடைக்காத பட்சத்தில் நான் இங்கிருந்து கிளம்பப் போவதில்லை. (சொன்னவர் மேசை மீது ஏறி அமர்ந்து கொள்கிறார்)
திலீப்
(எல்லா விளக்குகள், விசிறிகள் நிறுத்தியாகி விட்டது. ஒரேயொரு குவிவிளக்கு – அது அறை விளக்கு அல்ல: அது அவர் மேல் விழுகிறது) நான் செய்வதாகச் சொன்ன உதவிகளை எல்லாம் மறுதலித்து விட்டு, ஒரு குழந்தையைப் போல அடம் பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது. (கதவருகில் சென்று) சரி.. வாருங்கள் போகலாம்.
ஜி.என்
(கடுமையுடன்) டேய்.. தாயோளி.. இப்ப நீ பணம் தர்றயா..? இல்லையா..?
திலீப்
( இதை எதிர்பாராதவனாய்) என்ன ஆகி விட்டது உங்களுக்கு..? ஏன் இப்படி பிதற்றுகிறீர்கள்..?
ஜி.என்
(இன்னும் கூடுதலான குரலில்) டே.. தாயோளி..
திலீப்
நீங்கள் ரொம்பவும் அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள். மீண்டும் இவ்வாறு பேசினால் உங்களை வெளியே தள்ளி விடுவேன்..
ஜி.என்
( அவனை நேரடியாகப் பார்க்காமல்) தாயோளி.. (அவன் அவரது கையைப் பிடித்து இழுக்க, அவர் பளாரென்று அறைந்து விடுகிறார்) கூதி மவன்..
திலீப்
(அவன் கைவிரல்களை மடக்கி, அவரது மார்பில் குத்திவிட, கைகளைக் குறுக்கே வைத்து, குனிந்து கொள்கிறார், அவரிடமிருந்து முணங்கலாக வார்த்தைகள் வருகின்றன)
ஜி.என்
தேவடியா மவனே..! (அவன் அவரது பிடறியைப் பிடித்து இழுத்து விடுகிறான். சட்டை கிழிந்து தொங்குகிறது. உள்ளே அவசரமாகத் திரும்பிக் கதவைப் பூட்டுவிட்டுக் கிளம்புகிறான். அவர் மார்பைப் பிடித்தபடி தரையில் உட்கார்ந்திருக்கிறார்.)
திலீப்
வாட்ச்மேன்.. இந்த ஆளை உடனடியாக வெளியேத்து..   (அவன் படபடப்புடன் வெளியேறுகிறான்)
இடம்: மெஸ்ஸின் ஒரு பகுதி
திலீப்
(சாப்பிட்டு விட்டுக் கை அலம்பி, தன் கணக்கில் எழுதி விட்டுத் தலை நிமிரும்பொழுது அவன் அருகில் நிற்கிறார். அவன் நகரும்பொழுது)
ஜி.என்
திலீப்.. ..(அவன் நின்று நிமிர்கிறான்) திலீப்.. உன்னிடம் அப்படிப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்.
திலீப்
அதற்கு ஒன்றும் அவசியம் இல்லை.
ஜி.என்
(உற்றுப் பார்த்து) நீ உன்னோட சிறுகதைத் தொகுதியெ எப்போது வெளியிடப் போறெ..
திலீப்
(கேலியோ என நினைத்து ஒன்றும் சொல்லாமல் பார்க்கிறான்)
ஜி.என்
உன்னைத் தான்.. எப்போது உன்னோட சிறுகதைத் தொகுதி வரப் போகுது. .
திலீப்
அதைப் பற்றி இப்பொழுது யோசனை எதுவும் இல்லை. (அமைதி) சரி நான் போக வேண்டும்.
ஜி.என்
(நகர விடாமல் அவனது கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டவராய்) திலீப்.. நீ எனக்கு இரண்டு ரூபாய் தர முடியுமா..?
திலீப்
(அவன் எதுவும் பேசாமல் சட்டைப் பையில் கையை விட்டு எடுக்கிறான்.
இரண்டு ரூபாய் ஒன்று வருகிறது. அவரிடம் தருகிறான்)
ஜி.என்
ரொம்ப நன்றி
திலீப் அவரை விட்டு விலகி கர்சிப்பால் தலையை மூடியபடி நகர்கிறான்.
அவர் தன் கைகளைத் தூக்கி தலையை மூடியபடி எதிர்த்திசையில் நடக்கிறார்.
மேடை இருளில் மூழ்கி ஒளிவரும்பொழுது முதலில் இருந்த புத்தகக் கடையில் இருக்கிறான்.
காலண்டரில் தேதி பிப்ரவரி 19, 1981 என இருக்கிறது.
கடிதங்களைக் கத்தரியால் வெட்டி எடுத்து வைக்கிறான்.
ஒரு கடிதத்தைச் சற்று உரக்கப் படிக்கிறான்.
தோழர் ஜி.என்.நேற்று மதுரையில் இறந்து விட்டாராம்.
அவரது இறுதிச் சடங்கின்போது உறவினர்களோ குடும்பத்தினரோ யாரும் வரவில்லையாம்.
அவரது நண்பர்களும் எழுத்தாளர்கள் சிலரும் மட்டுமே கலந்து கொண்டனராம். ..
தொடர்ந்து படிக்கிறான்..வார்த்தைகள் வரவில்லை..
கடிதத்தை மடித்து ஒரு புத்தகத்தில் வைக்கிறான்.
அந்தப் புத்தகம் அவரிடம் காட்டிய அந்நியன்.
ஒளி அதன் மீது கவிழ்ந்து மறைகிறது.
மேடையில் இருள்

1 comment :

Anonymous said...

sir,

where can we buy your books? u can mention it...u r just having outer covers...