September 05, 2012

அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாழ்க்கை


தூங்கும் குழந்தைப் பொம்மைகள்
அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை தமிழ்நாட்டின் எல்லா நகரங் களுக்கும் பொதுவானதாக இன்னும் மாறிவிடவில்லை. நான் வசித்துக் கொண்டிருந்த திருநெல் வேலி நகரத்தில் அதிகபட்சம் ஐந்து மாடிக் கட்டங்களைத் தாண்டியதாகக் குடியிருப்புகள் கட்டப்படவில்லை. அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டிக் கொடுக்கும் என்.ஜி.ஓ. காலனிகளும் கூட ஒரு மனையளவு நிலத்தில் இரண்டு வீடுகள் அல்லது கீழே இரண்டு மேலே இரண்டு என நான்கு வீடுகள் கொண்டதாகவும் தான் கட்டப்பட்டுள்ளன. மிகக் குறைந்த
வருவாய்ப் பிரிவினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கூட ஐந்துமாடிகளைத் தாண்டிவிடவில்லை. சுற்றிச் சுற்றி மேலேறும் படிக்கட்டுகள் வழியாகவே மொட்டைமாடிகளுக்குச் சென்று துணி காயப்போடும் பெண்களின் அவஸ்தையை நினத்துக் கொண்டால் போதும். அடுக்கு மாடிக் குடியிருப்பை வேண்டாம் என்று சொல்ல விடலாம். திருநெல்வேலியில் வேண்டாம் என்று சொல்பவர்களின்  பிள்ளைகள் சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தான் தஞ்சம் புகுந்து கொண்டிருக்கிறார்கள்.  இரண்டு பேரும் வேலைக்குப் போகும் சூழலில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பாதுகாப்பானவையாகத் தோன்றுகின்றன.
ஓங்கி உயர்ந்த மரங்களும் வீடுகளும்
வேலை காரணமாகச் சென்னைக்குப் பெயர்ந்துள்ள மகளும் மகனும் தங்களுக்கான வீடுகள் பற்றிச் சொன்ன போது பலமாடிக் கட்டடங்கள் வேண்டாம் என்பதே எனது கருத்தாக இருந்தது. காற்றை மறைக்கும் சுவர்களாகவும் தனியர்களை உருவாக்கும் கூடுகளாகவும் வருணித்து நான் சொன்ன காரணங்கள் உண்மையாக இருந்தாலும், அடிமனத்தில் தனியுடைமையின் பிடிமானம் இருந்திருக்குமோ என்ற எண்ணம் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது. பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களோடு கூடிய தனி வீடு சாத்தியமில்லை. ஆனால் கையகல வீடாக இருந்தாலும் எனக்கான மண்ணில் எனக்கு மட்டுமே ஆன வீடாக இருக்க வேண்டும் என நினைக்கும் தனியுடைமை மனம் தான் அடுக்குமாடிக் குடியிருப்பை வெறுக்குத் தூண்டியிருக்குமோ என்று வார்சாவிற்கு வந்தபின் நினைத்துக் கொள்கிறேன். இந்த மாற்றத்துக்குக் காரணம் இங்கிருக்கும்  அடுக்கு மாடிக்குடியிருப்பு வளாகங்களாகவும் இருக்கலாம்.
அடுக்குமாடி வளாகத்தின் வாகன நிறுத்தம்
பனிக்காலத்தில் இலைகளின்றி நிமிர்ந்த மரங்களும் கட்டிடங்களும்
சாக்ரட்ஸ் வாசலில்
நான் குடியிருக்கும் சோக்ரட்ஸ் கட்டடமே எட்டு மாடிக் கட்டடம் தான். மாடிக்குப் பத்துவீடுகள் வீதம் எண்பது வீடுகள் இருக்கின்றன. கணவன் –மனைவி ஒரு குழந்தை என அயல்நாட்டிலிருந்து வந்து சில ஆண்டுகள் தங்கிப் பணி புரியும் அல்லது ஆய்வுகள் செய்யும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான இந்தக் கட்டடத்தில் அடிப்படைத் தேவைகள் எல்லாம் இருக்கின்றன என்றாலும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் நல்ல மாதிரியாக இதனைச் சொல்ல முடியாது. அதற்குப் பதிலாக என்னுடைய சாளரத்திலிருந்து பார்த்தால் தெரியும் மார்விபோல் வளாகத்தை நல்ல மாதிரி என்று சொல்லத் தயங்க மாட்டேன். மார்வி போல் வளாகப் பாதைகளில் அதிகமாக நடந்து திரிகிறேன் என்றாலும் ஒவ்வொரு நாள் மாலையிலும் வெவ்வேறு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்கள் வழியாகவும் நடந்து செல்வதையே விரும்புகிறேன். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன. சில வளாகங்கள் வட்டமாய், சில சதுரமாய், சில செவ்வகமாய், சில நீள்செவ்வகமாய் வடிவமமைக்கப்பட்டுள்ளன., இன்னும் சில வளாகங்கள் ஐங்கோண, அறுகோண எண்கோண வடிவங்களிலும் கூட இருக்கின்றன.  ஒரு வளாகத்தைப் படங்களோடு காட்டினால் உங்களுக்கும் கூட இதுபோன்ற அடுக்குமாடிக் குடியிருப்பு வளாக வாழ்க்கை பிடித்துப்போகக் கூடும்.  
சக்கரங்கட்டிய கால்கள்
குறைந்தது பத்துமாடிகள் கொண்ட வரிசைகள் நான்கு புறமும் உயர்ந்து நிற்கும் வளாகத்தில் 1000 வீடுகள் இருக்கின்றன என்றால் அதனைச் சிறு வளாகம் என்று சொல்லலாம். மார்விபோல் போல 2000 வீடுகளுக்கும் குறையாத வளாகங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.. அங்கே மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கொண்டாட்ட, களியாட்ட வெளிகள், இயற்கையின் அழகுகள் என எல்லாம் நிரம்பியிருக்கின்றன. குடியிருப்பு வாசல்களை உட்புற மாகவும், வியாபாரக் கேந்திரங்களின் வாசல்களை வெளிப்பு றமாகவும் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன.
மழலையர் மைதானம்

 எண்கள் வழியான பூட்டுகளால் பூட்டப்படும் ஒரு கட்டடத்தின் உள்ளே அந்நியர்கள் நுழைந்து விட முடியாது. நம்மை அழைத்தவர் தரும் அனுமதிக்குப் பிறகே பொதுக் கதவு திறக்கும். பொதுக்கதவுகளுக்குப் பிறகு தனிக் கதவுகளுக்கான திறப்பிற்கு வீட்டின் உரிமையாளர் வந்தாக வேண்டும்.  .ஒவ்வொரு திசையிலிருந்தும் வளாகத்திற்குள் நுழைய இரண்டு வாகனச் சாலைகளும் இரண்டு நடைபாதைச் சாலைகளும் உள்ளே நுழைகின்றன. வாகனச் சாலைகள் நிறுத்துமிடம் நோக்கிப் போய்த் திரும்பும் வரை தான் உள்ளே அனுமதிக்கப்படும். நமது வீடு இருக்கும் வளாகத்தின் எதிர்ச்சாரியில் இருப்பவரின் வீட்டிற்குக் கூட நாம் நினைத்தால் குறுக்காக விரைவு வாகனங்களில் போக முடியாது. வளாகத்தைச் சுற்றிவரும் சாலைகளின் வழியாகவே வரவேண்டும். நடந்து செல்ல, தள்ளுவண்டிகளில் போக, மிதிவண்டிகளில் விரைய மட்டுமே முடியும். அகலமான வண்டிகள் நுழையத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பழுத்துத் தொங்கும் பழங்கள்
நாய்களோடு சேர்ந்து நடக்க
வனம் போல் அடர்ந்த மரங்கள்
வார்சா நகரத்தின் பழைய பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களுக்கும் புறநகர் வளாகங்களுக்கும் அடிப்ப டையான சில வேறுபாடுகள் இருக்கின்றன. பழைய நகரத்துக் காரர்களுக்குப் பூங்காக்களும் விளையாட்டுத் திடல்களும் வளாகத்துக்கு வெளியே பொதுவாக இருக்கின்றன. அவை பெரிதாகவும் கண்கவர் வடிவங் களோடும் இருக்கின்றன. அவை ஒருவிதத்தில் அனைவருக்கும் பொது வானவை. ஆனால் புறநகர்வாசிகளுக்கு இவையெல்லாம் வளாகத்துக்கு உள்ளேயே இருக்கின்றன. சின்ன குளம், ஒரு திறந்தவெளி அரங்கு, மரங்கள் அடர்ந்த வனப்பகுதி, பல வண்ணப் பூக்கள் நிறைந்த பூந்தோட்டம். ஆப்பிள், செர்ரி, ராஸ்பெரி பழங்கள் தொங்கும் மரங்கள், குன்றுபோல் உயர்ந்த மண் திட்டு, மழலைகளுக்கான விளையாட்டுத் திடல், கூடைப்பந்து, கால்பந்துப் பயிற்சிக்கான கம்பங்கள் என எல்லாம் வளாகத்திற்குள்ளேயே இருக்கின்றன.
நடக்கவும் உட்காரவும்
இவையனைத்தையும் மகிழ்ச்சியோடு பயன்படுத்தும் காலம் ஆறுமாதங்கள் தான். அக்டோபரில் தொடங்கும் பனிக்காலம் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லாரையும் வெப்பத் தாங்கிய வீடுகளுக்குள் முடக்கிப் போட்டு விடுகிறது.. அப்போது இளையவர்கள் மட்டும் மண்மேட்டில் படிந்திருக்கும் பனிக்கட்டிகளில் சறுக்கி விழுகிறார்கள். மிதிவண்டி உள்பட எல்லா இருசக்கர வாகனங்களும் மடித்துக் கட்டிப் பூட்டப்படுகின்றன.
டிராம் நிறுத்தம்
சென்ற ஆண்டு நான் போய் இறங்கிய அக்டோபரில் இருந்த மக்கள் நடமாட்டத்தைப் பார்த்து போலந்தில் மக்கள் கூட்டம் மிகக்குறைவாக இருப்பதாக நினைத்தேன். உடம்பை மறைக்கும் ஆடைகளோடு அலையும் மனிதர்களின் முகங்கள் எல்லாம் ஒன்று போலவே தெரிந்தன. ஆனால் பனிக்காலம் முடிந்து முதல் பூப்பூத்து வசந்தம் வந்தபோது மனித உடல்களின் வனப்புகளும் வேகமும் திளைப்பை ஊட்டின. தினசரியும் காலையில் தட்பவெப்பத்தைப் பார்த்துவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பும் ஆண்களும் மதிய வெயிலையும் மாலை மழையையும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்களோடு தான் வருகின்றனர். இடுப்பில் சுற்றித் தொங்கும் ஆடைக்குள் இருகைகளையும் நுழைத்துக் கொள்ள அதிக நேரம் ஆவதில்லை. மழை மற்றும் காற்றுத்தடுப்பு உடைகள் என அப்போதுதான் தெரிகிறது.
சிற்றங்காடிக் கூடம்
ஒரு அடுக்குமாடி வளாகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் சேவை சார்ந்த அலுவலகங்கள்- மின்சாரம், வெப்பநீர், குடிநீர்,எரிவாயுக் குழாய், நிர்வாக அலுவலகம், சுகாதாரப் பராமரிப்பு என அனைத்தும் அங்கேயே இருக்கின்றன. இவற்றின் நிர்வாகம் அனைத்து வீடுகளின் பங்களிப்பு வழியாக நடக்கின்றன. புறநகரில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகங்கள் பழைய சோசலிசக் காலத்துக் கம்யூன் கட்டமைப்பின் நகல்கள் தான். சிறு நகரங்களில் 1990 க்கு முந்திய சோசலிக் கட்டுமான அரசுகள் கட்டிய கம்யூன் வளாகங்கள் இன்னும் இருக்கின்றன. ஆனால் இடிந்து கொண்டிருக்கின்றன. கம்யூன்களின் நல்ல அம்சங்களாக அந்த அமைப்பு இன்னும் தொடர்கிறது. ஆனால் அப்போதிருந்த குடிமைப்பொருட்களின் பொது விநியோக முறை இப்போது இல்லை. குடியிருக்க வீடுகளைத் தர எடுத்துக் கொண்ட முயற்சிகளின் அளவிற்கு, மூன்று நேரத்திற்கும் தேவையான குடிமைப் பொருட்களை வழங்க முடியாமல் போனது தான் சோசலிசத்தின் சோகம். அதனைக் கேட்டுப் போராடிய மக்கள் எழுச்சியின் முன்னால் அதிகாரம் செல்லுபடியாகமல் வீழ்ச்சியுற்றிருக்கிறது.
வாகன நிறுத்தத்திலிருந்து ஒரு வளாகம்
மரங்களும் புல்வெளிக
பாதையோரப் பூக்கூடைக் கடைகள்
மழலையர் திடல்
வளாகத்திற்குள் மணல் மேடு.பனிக்காலச் சறுக்கு விளையாட்டுத் திடல்
மெக்டனால்ட்ஸ் உணவு விடுதி
இப்போது குடிமைப் பொருட்கள் வழங்கும் அங்காடிகளுக்குப் பதிலாக குறு,சிறு மற்றும் பேரங்காடிகள் ஒவ்வொரு வளாகத்திலும் கடை விரித்துள்ளன. அவை எவையும் தனிநபர்களின் அங்காடிகளாக இல்லை. ஒவ்வொரு குடியிருப்புகளின் அருகிலும் மார்க்போல், மோக்போல், லிடில், கேரிபோர், லெய்ஸிமான், சாம்சூப்பர், போன்ற அங்காடிகளின் ஒன்றிரண்டு திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சங்கிலித் தொடர் கடைகள். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றைச் சார்ந்தவைகளே அதிகம். பிற நாட்டுக் கடைகள் தான். இவையல்லாமல், அவுசான், ரியால் போன்ற பேரங்காடிகளும் திறக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் உள்ளடக்கிய பெரும்பேரங்காடிக் கூடங்களும் நகரத்தின் மையங்களில் உயர்ந்து நிற்கின்றன. சில்லறை வர்த்தகத்தில் இன்னும் அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை. ஆனால் மெக்டனால்ஸும், கேஎப்சியும் எத்தனை நிமிடத்தில் அதன் கிளையொன்றுக்குப் போகலாம் என நகரமெங்கும் விளம்பரங்களை வைத்துள்ளன. எல்லா வசதிகளும் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பனிக்காற்றைச் சுவாசித்து வாழப் போலந்துக்காரர்கள் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments :