August 05, 2012

அரங்கியல் கலை என்னும் கூட்டுக்கக்கலை: அரங்கியல் அறிவோம்



உடலின் இயக்கமே உயிரியின் அடையாளம். மனித இயக்கத்தைச் சொல்லத் தமிழில் உள்ள வார்த்தைகள் வினை, செயல், செயல்பாடு போன்றன. உடலின் இயக்கம் எதையாவது அடுத்த உயிரிக்குச் சொல்லும்போது –உணர்த்தும்போது அவ்வியக்கம் வினையாகிறது. அவ்வினையின் வேறுபாட்டிற்கேற்ப வினைச்சொற்களை ஒவ்வொரு மொழியும் உருவாக்கிக் கொள்கின்றன.
வினைகள், தன்வினை பிறவினை என நிலைப்பட்டவை. மனித உயிரியின் வினைகள் பொதுவாக அன்றாடத் தேவை கருதி, வாழ்தலின் இருப்பு கருதி நிகழ்பவை. வினைச் சொற்களின் முக்கிய நோக்கம் தகவல் தொடர்பு உருவாக்கமே.










மனித உயிரிகளின் எல்லா வினைகளும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் சில வினைகள் மட்டும் கூடுதல் கவனம் பெறுகின்றன. அப்படியான கவனத்தை ஈர்ப்பன கலைசார் வினைகள் எனச் சொல்லப்படுகின்றன. ஒரு உயிரியின் ஒரு வினை இன்னொரு உயிரிக்குள் புகுந்து அவ்வினையின் தொடர்ச்சியாக மறு உற்பத்தியைச் செய்யத்தூண்ட வேண்டும். அம்மறு உற்பத்தி உடனடியாக இருக்கலாம்; இடைவெளிக்குப் பின் வெளிப்படலாம்; காலங்கடந்து புகுந்த உயிரியின் தன்னறிவின்றியே கூட நிகழலாம். அத்தகையதோரு உணர்வுத்தூண்டலைச் செய்கிற வினையே கலை எனக் கருதப்படுகிறது. கலைசார் வினைகள் உடனடியாக தகவல் தொடர்பைச் செய்வதில்லை. ஒன்றுபோலவும் செய்வதில்லை. வெவ்வேறு விதமாகத் தகவல் தொடர்பை நிகழ்த்துகின்றன. வெவ்வேறு காலத்திலும் நிகழ்த்துகின்றன. இந்த வேறுபட்ட நிலையே-பொதுநிலை வினை களிலிருந்து கலைசார் வினைகளை வேறுபட்டவையாக மாற்றுகின்றன.  



நடத்தல் என்பது பொதுநிலை வினை. அதிலிருந்து உருவாகும் நடனம் கூடுதல் கவனத்துடன் கவனிக்கப்படும் கலையாகக் கருதப் படுகிறது. புள்ளிகளை இணைத்து உருவாகும் கோடு சாதாரணச் செயல்பாடு, அதே போல் கோடுகளை இணைத்துச் செய்யும் இன்னொரு வினை ஓவியக்கலையாக ஆகிறது. மௌனமும் ஒலியெழுப்புவது அனைவரும் செய்து கொண்டிருக்கும் சாதாரண வினைதான். ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் மௌனமும் ஒலியும் எழுப்பப்படுவதன் மூலம் இசைக்கலை பிறக்கிறது. அதனோடு சாதாரணப்பேச்சு இணைந்து கொள்ளும்போது பாடல் கலை உருவாகிறது. சாதாரணப் பேச்சே தேடி எடுத்த சொற்களால் அடுக்கப்படும் போது தனியான கலையாக – பேச்சுக் கலையாக ஆகி விடுகிறது.
பேச்சைச் சொல்ல உடலைப் பயன்படுத்தாமல் குறியீடுகளைப் பயன்படுத்தும்போது எழுத்து உருவாகிறது. எழுத்தைப் பயன்படுத்தும் தன்மைகளிலிருந்து கவிதையும், கதையும், நாடகமுமான எழுத்துக்கலைகள் உருவாகியுள்ளன. 

எழுத்துக் கலைகளுள் ஒன்றாக நாடகம் கருதப் பட்டாலும், அது அரங்கக்கலையாக வெளிப்படும்போது தனிக் கலையாக இல்லாமல் பல கலைகளின் கூட்டுக் கலையாக அல்லது சேர்மக்கலையாக வடிவம் கொள்கிறது என்பதே அதன் சிறப்புநிலை. அரங்கக்கலைக்குள்  பின்வரும் விதமாகக் கலைச் செயல்பாடுகள் இணைகின்றன.

·          உடலசைவும் பேச்சும் சார்ந்த உத்திகள் நடிப்புக்கலை
·          பாடும் உத்திகளைப் பின்பற்றும் பாடற்கலை
·          இசைக்கோலங்களை உள்வாங்கி நடனமிடும் நடனக்கலை
·          இவற்றை நிகழ்த்துவதற்கான மேடைக் கட்டமைக்கும் அரங்கமைப்பு  வடிவம் சார்ந்த அரங்கக்கலை.
·          அரங்கில் தோன்றுவோருக்காக உடைகளை வடிவமைத்தல், முகமூடிகளை, கூந்தல் கற்றைகளை, உருவாக்கும்  ஆடை வடிவமைப்புக்கலை
·          ஆடைகளின் மேல் அணியும் ஆபரணங்களையும் ஒப்பனைப் பூச்சுகளையும் உள்ளடக்கிய ஒப்பனைக்கலை
·          இவற்றையெல்லாம் அணிந்த மனிதர்களையும் அவர்கள் உலாவும் வெளியையும் பார்வையாளர்களுக்கு காட்டுவதற்கேற்ற ஒளி அமைப்பு முறைகளையும், ஒளியமைப்புக் கருவிகளையும் கையாளும் ஒளியமைப்புக்கலை
·          இவற்றோடு சேர்ந்ததாக எழுப்ப வேண்டிய ஒலியமைப்புக்கலை
·          அதற்காக இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலை
·          இசைக்கருவிகளால் உருவாக்கும் இசைக்கோலச் சித்திரங்கள்
·          இசைக்கோலச் சித்திரங்களுக்கேற்ப மனித உடல்களை ஆட்டுவிக்கும் நடனக்கோர்வைக்கலை
·          இவையெல்லாவற்றிற்கும் வாய்ப்பளிக்கும் விதமான நாடக எழுத்தாக்கக் கலை
எனப் பலவிதமான கலைகளின் கூட்டுக்கலவை தான் அரங்கியல் கலை. அரங்கியற் நிகழ்வித்தலில் மேற்சொன்ன கலைகளும் கலைகளின் உத்திகளும் இடம் பெறுகின்றன. அவை அனைத்தையும் இப்படித் தொகுத்துச் சொல்லலாம்;
1.        நடிப்பு 
2.        இயக்கம்      
3.        காட்சி வடிவாக்கமும் அமைப்பும்      
4.        ஆடை வடிவாக்கமும் உருவாக்கமும்
5.        மேடை ஒளியமைப்பு
6.        ஒப்பனை

No comments :