August 04, 2012

பாடத்திட்ட உருவாக்கமும் பங்கேற்பு அரசியலும்
இந்திய அளவிலான பள்ளிக்கல்விப் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு கேலிச் சித்திரங்கள் கண்டனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். அதே நேரத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் இடம் பெற்றதாகச் சொல்லப்பட்ட சிறுகதை ஒன்றும் கண்டனத்தைச் சந்தித்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புக்கான பகுதி -1 (தமிழ்) பாடத்தில் இடம் பெற்ற டி. செல்வராஜின் நோன்பு சிறுகதை அது.
50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அந்தக் கதையை நிகழ்காலக் கதை என்று சொல்ல முடியாது. மீள்வாசிப்புப் பிரதி என்று வகைப் பாட்டிற்குள் அடங்கக் கூடிய கதை. மீள்வாசிப்புப் பிரதிகள் எப்போதும் எழுதப்படும் பாத்திரங்களின் மீதான ஆசிரியனின் பார்வையைச் சொல்லும் விமரிசனப் பார்வையைக் கொண்டவை.
புனைகதைப் பரப்பில் செயல்படும் எழுத்தாளர்கள் மீள்வாசிப்புக்காகப் பெரும்பாலும் புராண அல்லது இதிகாசப் பாத்திரங்களைத் தேர்வு செய்கிறார்கள். எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுப் பாத்திரங்களும் கூட மறுவாசிப்பிலிருந்து தப்புவதில்லை. பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் தகவல்களைக் கொண்டதாகச் சொல்லிக் கண்டனங்களை எதிர்கொண்ட டி.செல்வராஜின் நோன்பு சிறுகதையை வாய்மொழி வரலாற்றை மீள்வாசிப்புச் செய்த கதை. மானுடக் காதலை விரும்பாது, இறைவனின் மீது காதல் கொண்டவளாக அறியப் பட்ட ஒரு பாத்திரம் ஆண்டாள். ஒரு மனித உயிரிக்குப் புனித பிம்பம் உண்டாக்க வேண்டும் என்றால் அதன் மீது அமானுஷ்யத் தன்மையைப் பூச வேண்டும். மனித உடல் மீது அமானுஷ்யச் சாயம் பூசப் பல வழிகள் உண்டு. சமய நம்பிக்கை எப்போதும் பிறப்பையே அமானுஷ்யத்துடன் இணைத்து விடுவதன் மூலம் அதனைச் சாதித்துக் கொள்ளப் பார்க்கிறது. அமானுஷ்யமான பிறப்புநிலையைக் கொண்டவர்கள் அதியற்புதங்களைச் செய்பவர்களாக ஆக்கப்படுவது ஆச்சரியத்திற்குரியதல்ல.  
அமானுஷ்யப் பிறப்பாளர்களாகவோ, அதியற்புதங்களை நிகழ்த்தியவர் களாகவோ அறியப்படுவதன் வழியாகவே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழகச் சமயப் பரப்பில் புனிதப் பிம்பங்களாக இன்றுவரை அலைந்து கொண்டிருக்கின்றனர். (அதே பெயர்களில் இன்றும் உலாவும் மடாதிபதிகளும் கூட அப்புனிதப் பிம்பத்தின் வாரிசுகளாக ஆகிவிடும் எத்தணிப்பில் அலைகிறார்கள் என்பது தனியாகப் பேச வேண்டியது). பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும், பெரியாழ்வாரால் வளர்க்கப் படுவதற்காக இறைவன் அனுப்பியப் புனிதப் பெண் என அறியப்பட்ட ஆண்டாள் பாத்திரத்தின் வரலாறு, எழுதப்பட்ட வரலாறு என்பதைவிடச் சொல்லப்பட்ட வரலாற்றின் வழி நிலை நிறுத்தப்பட்ட பிம்ப அடுக்குகளைக் கொண்டது. அத்தகைய கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படும்போது ஏற்கெனவே இருக்கும் புனிதப் பிம்பம் மேலும் புனிதப்படுத்தப்படும் என்றால் சிக்கல் எழுவதில்லை.
புனிதப் படுத்தப்பட்ட பிம்பங்களைக் குறித்துச் சொல்லப்பட்ட கதைகளும் எழுதப்பட்ட பிரதிகளும் எல்லா மொழிகளிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆண்டாள் பாத்திரம் மட்டும் அல்லாமல் புராண, இதிகாச, வரலாற்றுப் பாத்திரங்கள் திரும்பத் திரும்பப் புனிதங்களால் கட்டமைக்கப்படும்போது கேள்விகள் எழுப்பப்பட்டதில்லை. அதற்கு மாறாக அத்தகைய பாத்திரங்களைச் சுற்றிக் கட்டமைக்கப்படும் புனிதப் பூச்சுகள் சிறிதளவு கரைக்கப்பட்டாலும் எதிர்ப்புகள் கிளம்பி விடவே செய்கின்றன. அதுவும் பாடத்திட்டம் போன்ற அதிகாரப்பூர்வப் பரப்பிற்குள் அவை நுழைந்துவிடும்போது கடும் எதிர்ப்புகளைச் சந்திக்கின்றன. அப்படித்தான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டதிற்குள் நுழைந்த டி.செல்வராஜின் நோன்பு கதையும் எதிர்ப்பைச் சந்தித்துப் பாடத்திட்டத்திற்குள்ளிருந்து வெளியேற்றம் ஆகியிருக்கிறது.
டி.செல்வராஜின் நோன்பு கதையை ஒட்டி எழுப்பப்பட்ட கண்டனங்களும், அக்கதை நீக்கப்பட்டு வேறு கதை இடம் பெற்றதின் விளைவுகளும் நமது சமூகம் விமரிசனத்தை எதிர்கொள்ளவும், ஏற்கெனவே இருக்கும் கருத்துகளுக்கு மாற்றான கருத்துகளையும் பார்வைகளையும் ஏற்கவும் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன. அதிலும் புனைகதை இலக்கிய வாசிப்பு என்னும் தளத்திற்குள் மீள்வாசிப்புக் கதைகளுக்கு இடமில்லாமல் செய்வதன் மூலம் பழைய பாரம்பரியத்தை எந்தவித விமரிசனத்திற்கும் உட்படுத்தக் கூடாத ஒன்றாகக் கருதும் போக்கை இறுகப்பற்றிக் கொள்கிறோம் என்பது உறுதியாகிறது. இம்மனப்பாங்கு ஆரோக்கியமான போக்கு அல்ல; ஆபத்தான போக்கு எனச் சொல்லும் அதே நேரத்தில் நோன்பு கதையை உள்ளடக்கிய டி.செல்வராஜின் சிறுகதைத் தொகுதி பாடமாக ஆக்கப்பட்ட முறை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்று என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற பிரபலமான வாக்கியத்திற்கு உதாரணமாக அந்த நிகழ்வைச் சொல்லலாம். பகுதி ஒன்று  தமிழில் மொழிப்பாடமாகத் தமிழைப் படிக்கும் மாணவர்களுக்குப் பலவிதமான கதைகளும் அறிமுகமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பலருடைய கதைகள் அடங்கிய தொகுப்புகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக ஆக்கப்பட்டன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அந்த முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆகியிருந்தது. ஆனால் இப்போது திரும்பவும் ஒரே ஆசிரியருடைய – அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகள் பாடமாக ஆக்கப்படுகிறது என்பது பாடத்திட்டக்குழுவின் பொறுப்பின்மையையே காட்டுகிறது. பொறுப்பின்மையாக இருந்தாலும் ஒரு பாடத்திட்டக்குழு ஏற்றுக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கண்டிக்கத்தக்க பாடங்கள் இருக்கின்றன என்றால் அதற்கு முழுப் பொறுப்பையும் அந்தக் குழு தான் ஏற்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. உருவாக்கும்போது எந்தவிதக் கவனமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் நீக்கி விடுகிறோம் எனச் சொல்வது பொறுப்பான செயல்பாடாகக் கருதத் தக்கது அல்ல.

ஒரு பல்கலைக்கழக அளவில் கண்டனத்தை எழுப்பிய பாடத்திட்டத்தை மையப்படுத்திப் பல்கலைக்கழகப் பாடத் திட்டக்குழுக்களின் பொறுப்பின்மையைச் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பொன்றைத் தவறவிட்ட பேராசிரியர் ஒருவரின் செயல்பாடு ஏற்புடையதுதானா என்பதை இங்கே நினைவுபடுத்திப் பார்க்கலாம். இந்திய அளவிலான பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு கேலிச் சித்திரங்கள் கண்டனத்திற் குள்ளாக்கப்பட்டன என்பதை முதல் வரியாகக் குறிப்பிட்டே இக்கட்டுரை தொடங்கப்பட்டது. எதிர்ப்புகள் தமிழ் நாட்டிலிருந்தே எழுப்பப்பட்டன என்பதால் தமிழர்கள் நிச்சயம் அறிவார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அறிஞர் பி.ஆர். அம்பேத்கரை மையப்படுத்திய கேலிச் சித்திரம் சார்ந்த எதிர்ப்பை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராளுமன்றத்திலேயே எழுப்பினார்.
அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ள அம்பேத்கர் ஆமையின் மீது அமர்ந்து பயணம் செய்வதாகவும், அதன் வேகம் அவ்வளவு தான் என்று தெரியாமல் அதைச் சாட்டையால் அடித்துக் கொண்டிருப்பதாகவும் வரையப்பட்ட படத்தில், அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு இன்னொரு சாட்டையை வீசுகிறார் என்பதாகவும் வரையப்பட்டிருந்தது. அந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் அவர்காலத்தில் நிகழ்ந்த ஒன்றின் மீதான விமரிசனமாக அந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்துள்ளார். அதை அம்பேத்கரும் பார்த்திருக்கலாம்; நேருவும் கவனித்திருக்கலாம். இருவருமே அதை ஒரு கேலிச்சித்திரக்காரரின் விமரிசனம் என்ற அளவில் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒதுங்கியிருக்கலாம். ஆனால் இப்போது அக்கேலிச் சித்திரங்கள் பாடத் திட்டத்திற்குள் இடம்பெறும்போது அப்போது தந்த அர்த்தத்தையே தரும் எனச் சொல்ல முடியாது.  அதேபோல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கேலிச் சித்திரமும் அது வரையப்பெற்ற காலத்தின் அர்த்தத்தையே இப்போதும் தரும் எனக் கருத முடியாது. ஏனெனில், அரசியல் நிகழ்வுகள் சார்ந்த கேலிச்சித்திரங்களின் இடம் காலமுறை அடிப்படையில் வெளியாகும் பத்திரிகைகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பத்திரிகைகளில் அவை இடம்பெறும்போது உருவாகும் அர்த்தங்களும் விளைவுகளும் ஒருவிதமானவை. அதே அர்த்தங்களையும் விளைவுகளையுமே பாடப்புத்தகத்தின் பகுதியாக ஆகும்போதும் உருவாக்கும் எனச் சொல்ல முடியாது. நிகழ்காலத்தை மையப்படுத்திய கேலிச் சித்திரங்கள் சில பத்தாண்டுகளுக்குப் பின் – சில பல வரலாற்று நிகழ்வுகளைத் தாண்டிய பின் நேர்மறை விளைவுகளை உருவாக்குவதைப் போலவே எதிர்மறைவிளைவுகளையும் நிச்சயம் உருவாக்கவே செய்யும். அதைப் புரிந்து கொண்ட பின்பே பாடத் திட்டங்களில் இடம்பெறச் செய்வதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். கேலிச் சித்திரங்களின் வழி விமரிசனப் பார்வையை உருவாக்க வேண்டும் என நினைத்த பாடத்திட்டக் குழுவினர் அப்படியெல்லாம் யோசித்தார்களா? என்ற ஐயத்தையே எழுந்துள்ள கண்டனங்களும் எதிர்ப்புகளும் உறுதி செய்கின்றன.
தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளைச் சரியாகச் செய்யாத பாடத்திட்டக்குழுவின் பொறுப்பின்மையைச் சீர் செய்ய வல்லுநர்குழுக்களை அமைப்பது நடைமுறைச் செயல்பாடு. (அதற்கு முன்னால் பாடத்திட்டக் குழுவில் இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கியம்) வல்லுநர் குழுக்கள் அமைக்கும் போது அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படும். அமைக்கப்பட்ட வல்லுநர் குழு என்னென்ன பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற வரையறைகளை உருவாக்கிக் கையளிப்பார்கள். கேலிச் சித்திரங்கள் சார்ந்த கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்த மைய அரசு கல்வியாளர் சுக்தேவ் தோரட் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவொன்றை அமைத்தது. அதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியனும் ஒரு உறுப்பினராக இருந்தார்.
தோரட் தலைமையிலான அந்த வல்லுநர் குழு இந்த இரண்டு கேலிச் சித்திரங்களை மட்டுமல்லாம் இன்னும் இருபது கேலிச்சித்திரங்களையும் நீக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்து அறிக்கையை அளித்துள்ளது. ஆனால் அக்குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குழுவின் அறிக்கையோடு ஒத்துப் போகவில்லை என்று தனது விலகலைத் தெரிவித்துள்ளார்.மாணாக்கர்களுக்கு விமரிசனப் பார்வையை உண்டாக்குவதற்கு இத்தகைய கேலிச் சித்திரங்கள் பாடத்திட்டத்தில் இடம் பெறுவது பொருத்தமானது என நம்பும் பாண்டியன்,”கல்வியாளர்களின் பார்வைக்கே முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய கல்வித்துறைக்கு வெளியே இருக்கும் அரசியல்வாதிகள், தன்னார்வப் பணியாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என நான் கருதவில்லை எனக் காரணத்தைச் சொல்லியுள்ளார்.   அவரது விலகல் மனப்பாங்கின் பின்னணியில் கல்வியாளர்களின் சுதந்திரமும், கல்வித்துறையின் தனித் தன்மையும் காக்கப் பட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. பல்கலைக் கழகப் பேராசிரியன் என்ற நிலையில் நானும் கூட அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ளவே வேண்டியுள்ளது.
இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் அரை நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பு போடப்பட்ட பாதையிலிருந்து கொஞ்சமும் விலகி விடாமல் பயணம் செய்யும் நிறுவனங்களாகப் பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன என்பதை அவை உருவாக்கும் பாடத்திட்டங்களே காட்டுகின்றன.  சுதந்திரத்துக்குப் பிந்திய மைய, மாநில அரசுகள் அவ்வப்போது உருவாக்கும் கல்விக்கான நிபுணர்கள் குழுக்கள் முன் வைக்கும் புதிய கல்விக் கொள்கைகள் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகப் பாவனை செய்யப்படுகின்றனவே ஒழிய முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. அப்பாவனைகளும் கூட உள்ளடக்க மாற்றங்களாக இல்லாமல் பருவமுறைத் தேர்வு,உள்மதிப்பீட்டுத்தேர்வு, தெரிவுமுறைப் பாடமுறை, மதிப்பெண்களுக்குப் பதிலாக தகுதிநிலைக் குறியீட்டை வழங்குதல் போன்ற வடிவமாற்றங்களாகவே இருக்கின்றன. நிகழ்காலத்தேவைக்கான உள்ளடக்க மாற்றங்கள் எப்போதும் கவனப்படுத்தப்பட்டதே இல்லை.  அப்படிப் பின்பற்றப்பட்டிருந்தால் உயர்கல்வியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கு மாறாகப் பல்கலைக்கழகக் கல்வி –குறிப்பாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களின் கல்வி - பின்னோக்கிய பயணத்திலேயே இருக்கின்றன.
அவற்றைப் புரிந்து கொண்ட மைய அரசு அவற்றைக் கைகழுவி விட்டு மையப் பல்கலைக்கழகங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதையும், சிறப்புநிலை நிறுவனங்களை உருவாக்கித் தேவையான தகுதியாளர்களை உருவாக்குவதிலும் அக்கறை கொள்கிறது. அதன் வழி பெரும் பான்மையான மாணவர்களுக்குத் தரமற்ற கல்வியை வழங்கி விட்டுக் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தரமான கல்வியை வழங்கும் பழைய முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பெரும்பான்மை மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்தப் போக்கை வரப்போகும் அந்நியப் பல்கலைக்கழகங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வேகப்படுத்தப்போகின்றன. உயர்கல்வியில் நடக்கும் இத்தகைய போக்குக்குப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது. ஆசிரியர்கள், அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஆட்சிமன்றக்குழுக்கள், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் சங்கங்கள் எனப் பலவும் காரணங்களாக இருக்கின்றன. அதைவிடவும் முக்கியக் காரணமாக இருப்பவர்கள் தங்களுக்கு எத்தகைய கல்வி வேண்டும் எனக் கேட்டுப் போராடாமல் இருக்கும் மாணவர்களே.
உயர்கல்வியை வியாபாரமாகக் கருதினால் கூட அதன் நுகர்வோர்களான மாணாக்கர்களுக்குத் தரமான பொருளை – பாடங்களை- பாடத்திட்டங் களைத் தர வேண்டும் என நினைத்திருப்போம். மாணாக்கர்களை மையப் படுத்தியதாக அமையாமல், ஆசிரியர்களை மையமிட்டே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் பாடஞ்சொல்வதற்குத் தோதான பாடங்களையே பாடத்திட்டக்குழுக்கள் பரிந்துரை செய்கின்றன. அப்படிப் பரிந்துரை செய்யும் விதமாகவே பாடத்திட்டக்குழுக்கள் உருவாக்கப் படுகின்றன. ”பணி மூப்பு அடிப்படை”யில் பாடத்திட்டக்குழுக்களில் இடம் பெற்று விடும் மூத்த பேராசிரியர்கள் எப்போதும் மாற்றங்களின் மீது ஆர்வம் செலுத்துவதில்லை. ஆசிரியராக வந்த போது தாங்கள் தயாரித்த பாடங்களை ஓய்வு பெறும்வரை நடத்துவதன் மூலம் திருப்தியான மன நிறைவையும் பணிநிறைவையும் அடைவதாக நம்புகின்றனர்.  விதி விலக்குகள் எங்காவது இருக்கலாம். திரும்பவும் தோரட் குழுவுக்கு வருவோம்.
தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட குழுவின் கூட்டம் ஜூன் 11 முதல் 15 வரை நடந்துள்ளது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் அறிவுஜீவிகளும் பாடத்திட்ட வல்லுநர்களும் கொடுத்திருந்த பரிந்துரைகளைப் படித்து விட்டுக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஐந்து நாட்கள் நடந்த குழுவின் கூட்டத்திற்குப் பின் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் மூன்றுபேர் தான் கையொப்பம் இட்டுள்ளனர். இரண்டுபேர் தொலை பேசியில் தங்கள் ஒப்புதலை வழங்கியுள்ளனர். ஒருநாள் கூடக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அறிக்கையின் சாராம்சத்திலிருந்து நான் விலகி நிற்கிறேன் எனச் சுட்டிக்காட்டிக் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.  இப்படிச் செய்வது கல்வியாளரின் பொறுப்பான செயல்தானா? என்ற கேள்வி எனக்கு எழுந்ததைப் போலவே பலருக்கும் எழும் என நினைக்கிறேன். .
மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத இருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள், குறிப்புகள், பாடங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டுக் குழு எழுதும் அறிக்கையோடு உடன்படுகிறோம் எனச் சொல்ல முடியும் என்றால், எனக்கு இந்த அறிக்கையோடு உடன்பாடு இல்லையெனச் சொல்லவும் ஒருவருக்கு முடியும் என்ற வாதத்தை மறுப்பதற்கில்லை. ஆனால் ஜனநாயக அமைப்பில் உடன்படுகிற வர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை விட எதிர்ப்பவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வு கூடுதலானது. எல்லாத் தரவுகளையும் வாசித்து விட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நிலைபாட்டை எடுத்து வைத்திருக்க வேண்டும். தனது பொறுப்பான வாதத்தால் குழுவின் உறுப்பினர்களைத் தன்பக்கம் கொண்டு வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ’மற்றவர்களைப் பற்றிக் கவலை இல்லை; எனது கருத்து இது’ எனச் சொல்வது ஜனநாயக நடைமுறையாக அமையாது. அப்படியான கருத்துக் கொண்டவர்கள் ஜனநாயகப் பாதையைக் கைவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப்பாசிசத்தை நோக்கி நகரும் ஆபத்தில் பயணிப்பவர்களாக மாறி விடுவார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன 
=========================================== 
நன்றி : அம்ருதா,ஆகஸ்டு, 2012

1 comment :

vaazhai said...

அம்ருதா ஆகஸ்ட் தங்களின் கட்டுரை படித்தேன். தாங்கள் எழுப்பிய விவாதங்கள் கவனத்திற்குரியவை. பாடநூலில் வலிந்த திணிக்கப்பட்டதாகவே தோன்றும் அம்பேத்கர் பற்றிய கேலிச்சித்திரம் இந்த நேரத்தில் தேவையற்றது. அரசியல் சாசனத்தை உருவாக்க அமைக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட குழுவில் ஆறுபேரும் விலகிவிட அவர்களின் பொறுப்பையும் கூடுதலாக ஏற்று மிகவும் சிரமத்திற்கிடையே மிகவும் நுண்ணிய பார்வையுடன் தனது செயல்பாட்டை தூரிதமாக விரைவுபடுத்தி அரசியல் சாசனத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இப்படியாக எல்லாப் பொறுப்புகளையும் ஒருவர் மீதே ஏற்றிய அக்காலச் சூழலில் அந்த கேலிச் சித்திரம்தான் முரண் கொண்டதே தவிர, அம்பேத்கரின் செயல்பாடு அல்ல. ஓர் எறும்பு தன் எடையை விட ஏழுமடங்கு எடையைக் கொண்ட தனது இரையை இழுத்துச் செல்வது போலத்தான் அம்பேத்கர் வரையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தாமதத்திற்கு காரணம் குழுவின் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் தான் காரணம் என்று பொறுப்பாக்குவது ஒரு செய்தி ஆசிரியனுக்கு வேண்டுமானால் யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் அந்த யதார்த்தத்தை வைத்துக் கொண்டு, உண்மையான யதார்த்தத்தை மறைத்து அம்பேத்கரை மட்டும் பொறுப்பாக்குவது எந்தவகையில் நியாயம்? அதைத்தான் ஆய்வாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே போல்தான் இன்னொரு யதார்த்தமும் பேசப்பட்டு வருகிறது. விமர்சனத்தை தாங்கும் பொறுமையும் பக்குவமும் இல்லையென்று. ஆனால் இங்கு உண்மையான யதார்த்தம் அம்பேத்கரைப் போன்று வேறு எந்தவொரு தேசிய தலைவரும் இப்படியான முரண்பாடுகளாலான விமர்சனத்தை பெற்றிருக்க மாட்டார்.
மற்றபடி பள்ளி மற்றும் பல்கலைப் பாடத்திட்டங்கள் குறித்தும் அந்த பாடத்திட்டக் குழுவின் அறிவார்ந்த திறன் குறித்தும் பல ஐயப்பாடுகள் ஏற்கனவே பல உண்டு. டி.செல்ராஜ் கதை குறித்தான தங்களின் கருத்து ஏற்புடையத்தக்கதுதான். நான் 12 ம் வகுப்பு படித்தபோது, சுந்தர ராமசாமியின் செங்கமலமும் சோப்பும் கதையை பாடமாக வைத்திருந்தார்கள். அந்த ஆண்டே நான் நூலகத்தில் சுந்தர ராமசாமியின் ஸ்டாம்பு ஆல்பம் கதையை படித்துவிட்டு, அந்தக் கதையை விட இந்தக் கதைதானே நன்றாக இருக்கிறது. பிறகு ஏன் இந்தக் கதையை வைத்தார்கள் என்று தோன்றியது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இருகதைகளையும் மீண்டும் வாசித்தபோது, இரு சிறுவர்கள் பற்றிய கதை. ஒரு தவறைச் செய்துவிட்டு அவன் படும் அல்லல், அதற்காகப் பரிகாரம் தேடுதல் சம்பந்தப்பட்டது. சிறுவர்களின் மன உலகத்தை அப்பட்டமாக படம்பிடித்த கதை. அப்படிப் பார்க்கும்போது 12 ம் வகுப்புக்கு அந்தக் கதையை வைத்திருக்கலாம். ஆனால் சுகாதாரம் பற்றிய செங்கமலம் கதை வைக்கப்பட்டிருக்கிறது கண்டு ஒரு வேளை சுந்தரராமசாமிகூட நகைத்திருக்கலாம்.
இது ஒரு வகையென்றால் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் அந்ததந்த பகுதி அறிமுக எழுத்தாளரின் கதை கவிதைகளெல்லாம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுகிறது. ஒரு எ.கா. மதுரை பல்கலையில் இரா.ரவியின் ஐகூக்கள். இப்படியாக கண்டபடி பாடத்திட்டங்கள் நாறிக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவன் எதை தேர்ந்தப் படைப்பு எவர் தேர்ந்த எழுத்தாளர் அவர் கையாளும் இலக்கிய வழிமுறைகள் என்னென்ன? என்று எப்படி அறிந்து கொள்ள முடியும். அவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பாடங்களெல்லாம் எந்த வகையில் தரமுள்ளது என்று விவாதித்தாலே பக்கம் நீண்டு கொண்டே போகும். அப்படியாக தாங்கள் எழுதிய பாடத்திட்டமும் பங்கேங்பு அரசியலும் கட்டுரை பாடத்திட்டம் உருவாதற்கான அதிகாரமுள்ள அமைப்புகளை சாடுகின்றது. நன்றி.