August 02, 2012

நடிப்பு : அரங்கியல் அறிவோம்-3

நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு
எழுதப்பட்ட பிரதிக்குரிய அர்த்தத்தைத் தனது உடல், குரல், மனம் ஆகியவற்றின் ஒருங் கிணைப்பால் உண்டாக்கும் வினை நடிப்பு(Acting) என்பது. இயல்பானதிலிருந்து உண்டாக்கப் படுவது கலையின் பொதுக்கூறு என்ற அடிப்படையில் நடிப்பும் கலையாகக் கருதப்படுகிறதுஇக்கலையின் முதல் கட்டத் திறன் போலச் செய்தல் தான்.  நடிப்புக் கலையில் ஈடுபடும் நபர் நடிகர் என அழைக்கப்படுகிறார்.

இந்நபர் எதையும் கூர்ந்து நோக்கும் தன்மையுடனும், பார்த்ததைத் திருப்பிச் செய்யும் திறனும் கொண்டவராக இருக்க வேண்டும். முதலில் அவர்  கட்டுக்குள் கொண்டு வர வேண்டியன  அவரது சொந்த நடையையும் செய்கைகளையும் தான். நடிப்பு என்ற தொழில் பெயரின் அடிச்சொல் நட என்னும் வினையடி. நடத்தல் என்னும் வினையிலிருந்தே எல்லாம் செயல்பாடுகளும் தொடங்கு கின்றன. அவ்வினையடியிலிருதே நடனம், நடிகர், நடிகன், நடிகை என்ற பெயர்ச் சொற்கள் உருவாகின்றன. எனவே நடிப்பு என்னும் வினைக்கு முதலில் செய்ய வேண்டிய பயிற்சி நடப்பது. இயல்பான நடத்தலிருந்து கட்டுப்படுத்தப்பட்ட நடத்தலை உருவாக்கத் தேவையான பயிற்சிகளே நடிப்புக் கலையின் பயிற்சிகளாகும். நடப்பது என்பது காலின் வினையாக -அசைவாகக் கருதப்பட்டாலும், நடப்பவரின் முழு உடலும் அசைகிறது என்பது அறியப்பட வேண்டிய ஒன்று.

நடப்பதைப் பல விதங்களில் நடிகர் கட்டுப் படுத்த வேண்டும். மௌனத் தால் கட்டுப் படுத்துதலில் தொடங்கி சுவாசித்தலுக்கேற்பவும், ஒலி யெழுப்புவதற்கு அசைவது வழியாகச் சொற்களுக்கும், வாக்கி யங்களுக்கும் ஏற்ப அசையச் செய்தலே நடிப்பின் பயிற்சிகள். தன் உடலிலிருந்து வெளிப்படும் மௌனம், சுவாசம், ஒலி, மொழி எனக் கவனப்படுத்திப் பயிற்சி செய்தல் மட்டும் போதாது. தன்னைச் சுற்றி நிற்கும் பிற நடிகரின் மௌனத்திற்கும், சுவாசத்திற்கும், மொழி வெளிப்பாட்டிற்கும் ஏற்பத் தனது உடலைப் பயன்படுத்தும் பயிற்சிகளையும் நடிகர் கற்றுக் கொள்ள வேண்டும். நடிகர் நடப்பதற்கான பயிற்சியைச் செய்யும் அதே அளவுக்குப் பேசுவதற்கான பயிற்சியையும் செய்ய வேண்டும். நடப்பதையும் பேசுவதையும் கட்டுப்படுத்தும் வேலையை நடிகரின் மனம் செய்கிறது. ஆகவே தான் நடிப்புப் பயிற்சிகள் என்பன உடல், குரல், மனம் ஆகிய மூன்றிற்குமான பயிற்சிகளாக அமைகின்றன.

நடிப்பிடமான மேடைப் பரப்பிற் குள் நுழைவதிலிருந்து அவர் மேல் பார்வையாளர்களின் கவனம் இருக்கும் என்பதால் தன் உணர்வைத் தவற விடாமல் இருக்க வேண்டும். மேடைப் பொருட்களைக் கையாள்வது, உரிய வசனங்களை அதன் பாவங்களுடனும், தொனியுடனும், உள் அர்த்தங்களுடனும் பேசுவதன் மூலம் நடிப்பு திறமையை வெளிக்காட்ட முடியும். மேடையில் இருக்கும் நேரத்தை என்ன உணர்வுக்கு என்ன நேரம் என்பது முதல் எந்தக் காட்சிக்கு எந்த இடம் என்பது வரை திட்டமிட்ட செயலாக நடிப்புக்கலை விளங்கக் கூடியது. அத்துடன் உடன் நடிக்கும் பிற நடிகனுடன் கொள்ளும் உறவும் பாங்கும் சேர்ந்து மேடையில் நடப்பதை உண்மையாக்கும் நிலைக்குப் போகும் போதுதான் நடிப்புக்கலை உச்சத்தை அடைகிறது. தான் நடிகர் என்ற உணர்வுடன் செயல்படும் அதே நேரத்தில் தான் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை ஏற்றிருக்கிறேன் அல்லது மாறியிருக்கிறேன் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும்.

நடிகர்களுக்கான பயிற்சிகளைப் பற்றிய நேரடியான சிந்தனை எனச் சொல்ல முடியாது என்றாலும் பரதரின் நாட்டியக் கலையில் சொல்லப்படும் பயிற்சிகள் நடிப்பிற்கும் உரியன என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு நடியின் பாதங்களில் தொடங்கி உடலின் உச்சந்தலை வரையான ஒவ்வொரு உறுப்புகளையும் அறிந்து கட்டுப்படுத்து வதற்கான பயிற்சிகளை முத்திரைகளாகக் குறிப்பிட்டுள்ளார் பரதர். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் அவ்வளவு விரிவாகப் பேச வில்லையென்றாலும், குறிப்பிட்ட உணர்வினைத் தாங்கியிருக்கும் உடல் எத்தகைய வெளிப்பாட்டு முறைமையில் இருக்கும் என்பதைச் சொல்வதாகக் கொள்ளலாம். கவிதைக்குள் பாத்திரங்கள், என்ன மனநிலையோடு இருக்கும் என்பதைச் சொல்லும்போது, அதன் உடல் அடையும் மாற்றங்களையே மெய்ப்பாட்டியல் பேசுகிறது. பரதருக்கும் தொல்காப்பியருக்கும் அடிப்படையான நோக்க வேறுபாடு உண்டு. நடனத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கங்களைச் சொல்பவர் பரதர். ஆனால் தொல்காப்பியர் கவிதையை அடிப்படையாகக் கொண்டு விளக்கங்களை முன் வைப்பவர். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் தான் இருவரின் விளக்கங்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
தாள லயம் அல்லது ஒலியின் படிநிலைகள் வழியாகவே பயிற்சிகளை மேற்கொண்ட பாரம்பரிய நடிகர்களைத்  தவிர்த்து விட்டு மனிதர்களின் அறிவுசார் சாத்தியங்களை முதன் படுத்திய நவீனத்துவத்தோடு நடிப்பதற்கான பயிற்சிகளை முழுமையாகப் பேசியவராக நான் நினைப்பது ஸ்டானிஸ் லாவ்ஸ்கியைத் தான். நவீன ரஷ்ய அரங்கியலின் முதன்மையானவரும் முன்னோடியுமான கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (1863-1938) உருவாக்கிய நடிப்புப் பயிற்சிகள் இன்றளவும் உலக நாடகப்பள்ளிகளில் படிக்கப் படுகின்றன. நடிப்பு முறைமைகள் என்றாலே உலகம் முழுமையும் ஸ்டானிஸ் லாவ்ஸ்கியின் நடிப்பு முறைமைகள் (System of Acting)  என்றே புரிந்து கொள்ளப்படும். நாடகக்காரர்கள் மட்டுமல்லாமல் திரைப்படக்காரர்களும் அவரது நடிப்பு முறைகளையே அடிப்படைப் பயிற்சியாகக் கொள்கின்றனர். ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமைகள் நடப்பியலோடு நெருங்கிய தொடர்புடையன. அந்த அடிப்படையின் மேல் தான் பின்னர் வந்த பிரக்டின் விலகி நிற்கும் நடிப்பு, அர்த்தோவின் அபத்த நடிப்பு போன்றன உருவாகின.