July 30, 2012

மேடைத் தளங்கள்: அரங்கியல் அறிவோம்,2:



நிகழ்வுகள் நடக்கும் மேடையை பகுதிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்துப் பேசும் முறை ப்ரொசீனிய அரங்கு (PROCENIUM THEATRE) என அறியப்பட்ட படச்சட்டக மேடை யோடு நேரடித் தொடர்புடையது. என்றாலும் இவ்வாறு பகுத்துப் புரிந்து கொள்ளுதல் எல்லாவகை அரங்குகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றுதான். நடிகர்கள், பார்வை யாளர்களைப் பார்த்து நிற்பதை மையமாகக் கொண்டு இப்பகுப்பு முறை அமைகிறது.
  பார்வையாளர்களையும் நடிப்பிடத்தையும் பிரிக்கும் கற்பனைக் கோட்டுக்கு இணையாகச் சம தூரத்தில் வரையப்படும் கோடுகளை இரண்டு குறுக்குக் கோடுகளால் பிரித்துக் கொள்வதன் மூலம் இந்த ஒன்பது பகுதிகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஒன்பது கட்டங்களில் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் நடுவில் இருக்கும் கட்டம் மையமேடை எனவும் நடிகரின்  வலது கைப் பக்கம் இருக்கும் கட்டம் மையவலது எனவும் இடது கைப் பக்கம் இருக்கும் கட்டம் மைய இடது எனவும் பெயரிடப்படும். நடிகரின் முன் பக்கம் நடிவில் இருக்கும் கட்டங்கள் முன் மையம், முன் வலது, முன் இடது எனப் பிரிக்கப்படுகிறது. இதைப்போலவே அவருக்குப் பின் இருக்கும் மூன்று கட்டங்களும் பின் மையம், பின் வலது, பின் இடது எனப் பகுக்கப்படுகிறது.

வலது மற்றும் இடது ஓரங்களில் இருக்கும் ஒவ்வொரு கட்டத்துக்கும் வருவதற்கான பாதைகள் தடுப்புகளுக்கு இடையே இருக்கும். ஆறு கட்டங்களுக்கும் ஆறு பாதைகள் ஏற்படுத்துவது பொருத்தமானது.  மேடைத்தளத்தை ஒன்பது கற்பனையான கட்டங்களாகப் பிரித்துக் கொள்வதன் மூலம் நடிகர்கள் அடையும் பலனை விடப் பின்னரங்கப் பணியாளர்களான ஒளியமைப்பாளர்கள், அரங்கப் பொருள் வடிவ அமைப்பாளர்கள் அடையும் பலன்கள் அதிகம். அத்தோடு எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் இயக்குநருக்கு இந்தக் கற்பனைக் கட்டங்கள் அதிகம் பயன் படக்கூடியன.  

படச்சட்டக மேடையின் வலது மற்றும் இடது பக்கப் பாதைகளில் கற்பனைக்கோடுகள் பல உள்ளன. ஒரு நடிகரின் மேடை நுழைவு என்பது ஒரு மந்திரக் கோட்டைத் ( ) தாண்டுவதே ஆகும். பார்வையாளர்களின் கண்ணில் படும் இடம் எது என்பதைக் கணக்கிட்டு ஒவ்வொரு நடிகரும் அந்த மந்திரக் கோட்டை உருவாக்கிக் கொள்வார்கள். மேடையின் பின்னால் அரைவட்ட வடிவில் இருக்கும் திரைக்கும் படச்சட்டகக் கற்பனைக்கோட்டிற்கு முன்னே வளைந்து ஓடும் அரைவட்டக் கோட்டுக்கும் இடையே உருவாக்கப்படும் புனைவு உலகத்தை உண்மையாக்கிக் காட்ட அரங்கக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த மேடைத்தளங்கள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

1 comment :

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பகிர்வு...
வாழ்த்துக்கள்... நன்றி...