July 22, 2012

ஜரீதா பீடா போட்டேனா.. ஜூர்ர்ன்னு ஏறிடுச்சு:முதல் சென்னைப் பயணம்


திருச்சிக்கு வடக்கே சென்னையை நோக்கி முதன் பயணம் செய்த போது வயது 25. அதற்கு முன்பு தனியாகவும் நண்பர்களோடு கும்பலாகவும் பயணம் செய்த ஊர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் தான் இருந்தன. படிப்புக்காலச் சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் பேருந்தில் தான். பழனி, கோயம்புத்தூர், ஊட்டி எனப் பள்ளிப் படிப்பின்போது சென்ற பயணங்களில் எல்லாம் நாலுவரிசைக்கு ஓருத்தர் எனக் கணக்குப் போட்டு ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
கல்லூரியிலிருந்து தேக்கடி, போடி மெட்டு, கம்பம், வைகை அணையெனப் போன போது பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். ஆனால் கண்டு கொள்ள வில்லை. நண்பர்கள் குழாமாகக் கொடைக்கானல், குற்றாலம் போன்ற இடங்களுக்கும் போனபோது சின்னச் சின்னக் கும்பல்கள் மட்டும்.
தமிழ்நாட்டிற்கு வெளியே திருவனந்தபுரம், கொல்லம் எனக் கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் பெங்களூர், மைசூர் போன்ற கர்நாடக நகரங்களுக்கும் கூடக் கல்விச் சுற்றுலாவாகப் போயிருக்கிறேன். அவையும் மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கொண்ட பேருந்துகள் தான். அந்தப் பயணங்களில் வகுப்புத் தோழிகளின் பார்வையிலிருந்து தப்பிப் போய் ஒருசிகரெட் பிடித்துவிட்டு வந்தால் கூட முகச் சுளிப்பிலிருந்து தப்ப முடியாது. 25 வயது வரை  செய்த பேருந்துப் பயணங்களின் மொத்தத் தூரத்தைக் கணக்கிட்டால் இந்தியாவை இரண்டு முறை சுற்றி வந்திருக்கலாம். அவ்வளவு பயணம் செய்த எனக்கு ஒரு ரயில் பயணம் வாய்க்கவில்லை என்பதை இப்போது நினைத்துக் கொண்டாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

ஆறு வயதில் ரயிலேறி ராமேஸ்வரம் போகும் வாய்ப்பைத் தவறவிட்ட கதை தனியாகச் சொல்ல வேண்டிய கதை. இப்போது சொல்வது சென்னைக்கு ரயிலேறிப் போன முதல் பயணம் பற்றி. முனைவர் பட்ட ஆய்வாளனாகச் சேர்ந்தவுடன் சென்னையில் உள்ள முக்கியமான நூலகங்களுக்குப் புத்தகங்களைத்  தேடிப்  போக வேண்டும் என்ற யோசனை இருந்தது. அந்தப் பயணத்தை முதல் ரயில் பயணமாக ஆக்கிக் கொள்ளும் திட்டமும் தீட்டினேன். அந்தத் திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தை வழங்கிய நண்பர் லாரியில் பயணம் செய்யலாம் என்றார். பேருந்துக் கட்டணத்தில் பாதிதான் ஆகும். அத்தோடு நிம்மதியாகப் படுத்துக் கொண்டே போகலாம்; தெரிந்த லாரி டிரைவர் மூலம் ஒவ்வொரு முறையும் தான் அப்படித்தான் சென்னை சென்று வருகிறேன் என்று சொல்லி ஆசையும் காட்டினார். நண்பரின் தெரிந்த லாரி டிரைவரின் அழைப்புக்காகக் காத்திருந்த வேளையில் சென்னைக்கு ரயிலில் போக வேண்டிய நெருக்கடி வந்து விட்டது.ஆய்வு தொடர்பான பயணத்தை, நாடகம் தொடர்பான பயணம் முந்திக் கொண்டது.
இயல் இசை நாடக மன்றத்தை நோக்கித் தான் எனது முதல் ரயில் பயணம்; முதல் சென்னைப் பயணம். போகும் நேரம் சரியாக அமைந்து விட்டால் அதிகபட்சம் ஒருமணிநேரம் தான் இயல் இசை நாடக மன்றத்தில் இருக்க வேண்டும். உடனே திரும்பி விடலாம். மதியச் சாப்பாட்டுக்குப் பின் வைகை விரைவு வண்டியைப் பிடித்து அடுத்த நாள் இரவே மதுரை வந்து சேர்ந்து விடலாம். இயல் இசை நாடக மன்றத்தில் செய்ய வேண்டிய வேலை 25 பெயர்களைத் தட்டச்சு செய்து ஒரு கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். அவ்வளவு தான். அந்தக் கையெழுத்து மொத்த நாடகக் குழுவும் ரயிலில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யப் பயன்படும்.
புதுடெல்லியிலிருந்து செயல்படும் மைய சங்கீத நாடக அகாடெமி தனது வேர்களைத் தேடும் அரங்கியல் திட்டத்தை 1983 இல் ஆரம்பித்தது. ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே மு.ராமசுவாமியின் இயக்கத்தில் துர்க்கிர அவலம் நாடகத்தைத் தமிழில் இயக்கி மேடையேற்ற நிஜநாடக இயக்கத்திற்கு வாய்ப்பைத் தந்தது. அகாடெமி. நாடகத்தயாரிப்புக்கென ரூ25000/- வழங்கிய தோடு பெங்களூரில் நடக்கும் நாடகவிழாவில் பங்கேற்க வருவதற்கான பயணப்படியையும், அங்கே தங்கியிருக்கும் நாட்களுக்கான உணவுச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தது. பயணப்படி முழுமையான படியாகத் தரப்படாமல்,  மாநில அரசின் கலைஞர்களுக்கான சலுகைக்கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற குறிப்பையும் வழங்கியிருந்தது. சலுகைக்கட்டணம் பெற வேண்டும் என்றால் இயல் இசை நாடக மன்றத்தின் கலைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றாக வேண்டும்.
நாடகத்தின் ஒத்திகைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில்யே உடை, மற்றும் அரங்கப் பொருட்கள் தயாரிக்கும் பணிகளை அவற்றிற்கான கலைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். துர்க்கிர அவலத்தில் நான் ஒரு நடிகன் என்றாலும் பின்னரங்க வேலைகளிலும் பங்குண்டு. குழு நிர்வாகப் பணி என்னுடையது. பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டிய பொறுப்பு அதில் மிக முக்கியம். அதற்கு முதலில் செய்ய வேண்டிய வேலை சென்னைக்குப் போய் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் நிஜநாடக இயக்கத்தை ஒரு நாடக் குழுவாகப் பதிவு செய்ய வேண்டும். அதன் நடிகர்களையும் பின்னரங்கப் பணியாளர்களையும் ’கலைஞர்கள்’ என்ற தகுதியில் சலுகைக்கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதிக்கும்படி ரயில்வே நிர்வாகத்திற்குச் சான்றொப்பக் கடிதம் பெற்றுத் தரவேண்டும். என்னோடு இணைந்து குழு நிர்வாகப் பணியில் ஈடுபட்டவர் ராஜன். யதார்த்தா திரைப்படக் கழகத்தினை மதுரையில் நீண்ட நாட்களாக நடத்தி வந்த நண்பர் சேஷாத்திரி ராஜன் இந்தியாவெங்கும் பயணம் செய்தவர். சென்னையெல்லாம் அவருக்கு ரொம்ப அத்துபடியான ஊர். அவருக்குப் பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. வேறு வழியில்லாமல் நான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டியதாகி விட்டது.
சென்னைக்குப் போவதற்கான டிக்கெட் வாங்கிக் கையில் கொடுத்து விட்டார் மு.ராமசாமி. திரும்பி வருவதற்கு நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள். ”உடனே திரும்பலாம்; வேலை முடியவில்லை என்றால் அறை எடுத்துத் தங்கிக் கொள்ளலாம்.. ரயில் வேண்டாம் என்றால் பேருந்தில் வரலாம்” எனச் சொல்லிப்  பணத்தையும் கொடுத்து விட்டார். இயல் இசை நாடக மன்றத்தில் பொறுப்பில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேசி, மு.ராமசாமிக்குப் பதிலாக அ.ராமசாமி வருகிறார். காரியத்தை முடித்துக் கொடுங்கள் என்று சொல்லி உத்தரவாதத்தையும் வாங்கி விட்டதாகச் சொன்னார். போகும் வேலை எளிதாக முடிந்து விடும் என்பதால் தைரியமாகக் கிளம்பி விட்டேன்.
மதுரையில் பாண்டியனில் ஏறி உட்கார்ந்தால் சென்னை எழும்பூரில் இறங்கி விடலாம். இறங்கியும் விட்டேன். ஒன்றும் பிரச்சினை இல்லை. பிரச்சினைகள் அதற்குப் பிறகுதான் இருந்தன. சென்னையின் நகரப் பேருந்துகளின் வழித்தடங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுவரை லாட்ஜுகளில் தனியாக அறை எடுத்துத்  தங்கியதும் கிடையாது. சொந்தக்காரர்கள் என ஒருவரும் சென்னையில் இல்லை. நண்பர்கள் எனச் சென்னையில் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களின் உதவியையெல்லாம் நாட வேண்டும் என்று தோன்றாததால் முகவரிகளை வாங்கிக் கொள்ளவில்லை. தொலைபேசி பற்றிய ஞானமெல்லாம் அப்போது இருந்ததில்லை.
சென்னை நகரத்தின் தரையை அதற்கு முன் எனது பாதங்கள் பார்த்ததில்லை என்றாலும், எனது கண்கள் பார்த்திருந்தன. பதினாலு மாடி கட்டிடம் நிற்கும் மௌண்ட் ரோடு , எழும்பூர், செண்ட்ரல் ரயில் நிலையங்கள், நேப்பியர் பாலம் தொடங்கிச் சிலைகளாக நீளும் கடற்கரைச் சாலை, அடையாறு பாலம் தாண்டி விரிந்து கிடக்கும் ஆலமரம், மாமல்லபுரம், விமான நிலையம் எனப் பலவற்றையும் கண்கள் நினைவுகளாகத் தேக்கி வைத்திருந்தன. எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். கதாநாயகன் சென்னைக்கு வந்துவிட்டான் என்பதைச் சொல்ல அதில் ஒன்று தானே அடையாளம். இந்த அடையாளங்கள் எதுவும் எனது பயணத்தில் உதவாது என்பதால், இயல் இசை நாடகம் இருக்கும் இடத்திற்குச் செல்லும் பேருந்து வழித்தடங்களையும், பாதைகளையும் குறித்து வாங்கிக் கொண்டு தான் சென்னையில் வந்து இறங்கினேன். இறங்கும் போது காலை 06.30. உடனே அங்கிருந்து கிளம்பிப் போய் இயல் இசை நாடகம் கதவைத் தட்டி விட முடியாது. அரசாங்க அலுவலகங்கள் 10.00 மணி வாக்கில் தானே அசையத் தொடங்கும்.
வேலை முடியவில்லை என்றால் அன்றிரவு தங்க வேண்டியதும் அவசியம் என்பதால் எழும்பூரில் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் இருந்த லாட்ஜ் ஒன்றில்  அறை எடுத்துக் கொண்டு குளித்து முடித்தேன். லாட்ஜிலிருந்து வெளியில் வந்து காலைச் சிற்றுண்டியை முடித்து இயல் இசை நாடக மன்றம் இருந்த அடையாறு பாலத்துக்குப் பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கிப் பாதையை விசாரித்துக் கொண்டு போனேன். பாதையில் மனித நடமாட்டமே இல்லை. மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து கிடந்தன. சாலையில் கிடக்கும் சருகுகளும் குப்பைகளும் நீண்ட நாட்களாக அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பியது.  இயல் இசை நாடகமன்றத்தின் அலுவலகம் இந்தத் தெருவில் தான் இருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால் ஒருவரும் வருவதாகத் தெரியவில்லை.
திரும்பி வந்த பாதையிலேயே திரும்பி நடந்தபோது ’டீச்சர் குடை’யோடு ஒரு பெண் அந்தப் பாதையில் வருவது தெரிந்தது. நிறுத்தி விசாரித்து விட வேண்டும் என மனம் ஆசைப்பட்டது; கண்களும் அவளது கண்களைப் பார்த்தன; அவளும் பார்த்தாள். எதாவது கேட்டால் சொல்லலாம் என்பதுபோல இருந்தது அந்தப் பார்வை. ஆனால் நான் கேட்கவில்லை. எனது தவிப்பைக் கவனிக்காதவள் போலப் பாவனை செய்து கொண்டு கடந்து போனவளைப் பின் தொடர்ந்த போதும், நான் உன்னைக் கவனிக்கவில்லை என்பதாகவே பாவனை காட்டினாள். திருப்பத்தில் அவள் நின்று திரும்பினாள். அவள் திரும்பிய பக்கம் இருந்த அந்தப் பலகையில் தமிழ்நாடு இயல் இசை நாடகம் மன்றம் என்று எழுதப்பட்டிருந்தது. 
காந்திகிராமத்தில் நடத்தப்பட்ட நாடகப்பட்டறையிலும், சென்னையில் பாதல் சர்க்காரைப் பயிற்சியாளராகக் கொண்ட பத்துநாள் பயிற்சி முகாமிலும் கலந்து கொண்ட மு.ராமசுவாமியின் முயற்சியால் தொடங்கப் பட்ட நிஜநாடக இயக்கம் கடந்து வந்த  ஐந்து வருடங்களில் 25 –க்கும் மேற்பட்ட குறுநாடகங்களை மதுரையில் உள்ள கல்வி நிலையங்களிலிலும் மதுரைக்குப் பக்கத்திலுள்ள கிராமங்களிலும் தெருநாடகங்களாக நிகழ்த்தியிருந்தது. அதுவரை தன்னை அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட நாடகக் குழுவாக ஆக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. நடைமுறை அரசியலோடும், அரசதிகாரங்களின் செயல்பாடுகளோடும் முரண்பட்ட மையங்களைக் கேள்விக்குரிய ஒன்றாக ஆக்கிக் கொண்டிருந்த  நிலையில் அரசாங்கத்தின் பதிவுக்குள் போவது ஒருவித சமரச நிலை என்ற எண்ணம் இழையோடிக் கொண்டிருந்ததால் இயல் இசை நாடக மன்றம் போன்ற அரசு நிறுவனங்களைத் தூரத்தில் வைத்திருந்தோம் என்பதை விடவும் எதிர்நிலைப்பாட்டில் இயங்கும் ஒன்றாகவே கருதி கொண்டிருந்தோம்.
துர்க்கிர அவலத்தை சங்கீத நாடக அகாடமிக்காகத் தயாரிப்பதற்கு முன்பு மதுரை நிஜநாடக இயக்கம் மேடையேற்றியிருந்த ஒரே மேடை நாடகம் ஞாநி எழுதிய பலூன்.மதுரையில் காவல் துறையினரால்  தாக்குதலுக்குள்ளான நீதிபதி தார்குண்டேவின் வழக்குச் செலவுகளுக்கான நிதி திரட்டும் பொருட்டு அந்நாடகம் மேடையேற்றம் செய்யப்பட்டது. மக்களின் உரிமைகளை அடிப்படை உரிமைகளை அரசு அமைப்பு காவு கொள்ளும் விதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நாடகம் அது.  அந்த நாடகத்தை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஏற்பாடு செய்த மேடையில் நிகழ்த்தி முடித்த போது ஒவ்வொருவரிடத்திலும் ஒரு விதமான பதற்றம் இருந்தது. ஞாநியின் பேச்சுக்குப் பிறகு மேடையேற்றப்பட்டதால் நாடகம் சுலபமாகப் பார்வையாளர்களுக்குள் புகுந்து கொண்டது. அந்நாடகத்தை மேடையேற்றி விட்டு இரவு உணவுக்குப் போகும் போது நாடகத்தின் நடிகர்களையும் மேடையேற்றத்தோடு தொடர்புடையவர்களையும் ரகசியப் பிரிவு போலீசார் பின் தொடர்வதாகச் சொல்லப் பட்டது. அதனால் எல்லாரும் வெறும் நடிகர்கள் மட்டும்தான் எனச் சொன்னால் போதும்; வேறுவிவரங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனது கையைப் பற்றிப் பாராட்டிப் பேசியவர்களிடம் கூட அ.ராமசாமியின் விவரங்களை மறைத்து நான் ஏற்றிருந்த கவி. சத்யன் பாத்திரமாகவே பேசிக் கொண்டிருந்தேன். மேடையிலிருந்து இறங்கிய பின்னும் பாத்திரத்தின் தன்னிலையைத் தொடர்ந்த அனுபவத்திற்குக் காரணம், என்னிடம் பேசியவர்களில் யாராவது உளவுப் பிரிவுப் போலீஸ்காரர் இருக்கக் கூடும் என்ற  அச்சம் தான். அப்படி யாராவது இந்தார்களா? என்பது இன்று வரை தெரியாது.
இடதுசாரித் தீவிரவாதம் பேசும் நபர்களின் தன்னிலைக்குள் அலையும் காவல்தலையின் சிக்கல் அது. நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்ட இளைஞர்களாகிய எங்களுக்குள் ஒருவித இடதுசாரித் தீவிரவாதமென்னும் கிளர்ச்சி மனோபாவம் இருந்தது உண்மை தான். அந்த மனோபாவத்தில் தான் நிஜநாடக இயக்கத்தின் தலைவராயிருந்த மு.ராமசாமிக்கு அளிக்கப்பட்ட ராஜா சர் முத்தையா செட்டியார் விருதையும், அதற்கான பணத்தையும் வாங்கக் கூடாது என்றெல்லாம் விவாதித்தோம். பெங்களூரில் இருந்து செயல்பட்ட படிகள் குழு “இலக்கு” அமைப்பை உருவாக்கிக் கூட்டங்கள் நடத்த முயன்றபோது அதில் பங்கேற்பதா? வேண்டாமா? எனப் பெரிய விவாதங்களையெல்லாம் செய்தோம். காரணம் படிகள் அமைப்பு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் எனவும், அவ்வகையான தொண்டு நிறுவனங்களுக்கும் கிறித்தவ அமைப்புகளுக்கும் உறவு இருக்கிறது எனவும், அதன் வழியாக அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் கை செயல்படுகிறது என்றெல்லாம் நம்பினோம். அந்த நம்பிக்கைகள் எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என்று அப்போதும் தெரியாது; இப்போதும் தெரியாது. ஆனால் மனதிற்குள் இதுவெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கும்.அதே மனநிலையில் தான் பலூன் நாடகத்தைத் திருநெல்வேலியில் மேடை ஏற்றினோம். அதற்கு ஏற்பாடு செய்தவர் மக்கள் சிவில் உரிமைக்கழக ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் பாளை சண்முகம். வர்க்கப் போராட்டத்தை ஆயுதப் போராட்டத்தாலும் சாத்தியமாக்கலாம் என நம்பிய  அமைப்புகளோடு நட்பு கொண்டிருந்த பாளை சண்முகம் தான் பின்னர் கொடைக்கானலில் விதிகளை மீறிக் கட்டப் பட்ட பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். அதுவெல்லாம் தனியாகப் பேச வேண்டிய அரசியல் கதை. அந்தக் கதையைத் தள்ளி வைத்து விட்டுச் சென்னைக்குப் போய்த் திரும்பிய கதைக்கு வரலாம்.
தொலைபேசியில் பேசி எல்லா ஏற்பாடுகளையும் மு.ரா,. முடித்திருந்ததால் நான் போனவேலை அதிகம் சிரமம் தரவிலை. துர்க்கிர அவலத்தில் அரங்கிலும் பின்னரங்கிலும் செயல்படப் போகும் 25 பேரின் பெயர்களின் தட்டச்சு செய்ய வேண்டும். அதற்கென இருந்த அறைக்குள் போனேன். அங்கே எனக்கு முன்னால் “டீச்சர் குடை”யுடன் நடந்து வந்த பெண் இருந்தாள். இப்போது கொஞ்சம் தைரியமாகச் சிரித்துவிட்டுத் தாளை நீட்டினேன், வெளியில் இருக்கும் அதிகாரி அனுப்பியதாகச் சொன்னேன். என்னை உட்காரச் சொல்லி விட்டு டைப் ரைட்டரில் விரல்களை ஓடவிட்டவள் ஒவ்வொரு பெயரையும் வாசித்து உறுதி செய்து கொண்ட பின்பே அடிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு பெயரையும் என்னைப் பார்ப்பதாகவே  உச்சரிக்கிறாள் என நினைத்துக் கொண்டேன். 25 பெயர்களும் அச்சடிக்கப்பட்டபின் தாளை உருவி என்னிடம் தந்தாள்.”டீச்சர் குடை” டைப்பிஸ்டுகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது எப்படி எனக் கேட்க நினைத்தேன்; கேட்கவில்லை. அவள் தந்த தாளில் அதிகாரி கையெழுத்துப் போட்ட பின் முத்திரையைக் குத்திக் கொடுத்தார் அங்கிருந்த பணியாளர்.
வெளியில் வந்தவுடன்,மதியம் கிளம்பும் வைகை விரைவு வண்டியைப் பிடித்து விட்டால் இன்றிரவே மதுரை திரும்பி விடலாம் என்று மனம் நினைத்தது. கையில் வாங்கிய தாளை உறையில் போட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டு உடனடியாக எழும்பூர் திரும்பி விட்டேன். லாட்ஜுக்குப் போய் அறையைக் காலி செய்து விட்டு எழும்பூர் ரயில் நிறுத்தத்தின் முன்னால் இருந்த புகாரி ஹோட்டலுக்குள் நுழைந்து மாடியில் ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். ரயில் நிலையத்தைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதாகவே எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.  சாப்பிட்டதற்கான தொகையைக் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது தள்ளுவண்டியில் பத்திரிகைகளோடு வெற்றிலை பாக்கும் இருந்தன. கறிக்குழம்பு சாப்பிட்ட பிறகு  வெற்றிலை பாக்குப் போடுவது நீண்ட நாள் பழக்கம்.  வெற்றியில் சுண்ணாம்பைத் தடவி, அதன் மீது பாக்குத்தூளை வைத்து மடித்துப் போட்டபின் கிடைக்கும் சின்ன மயக்கம் தரும் சுகம் கொஞ்சம் போதையானது. 
தள்ளு வண்டிக்காரரிடம் வெற்றிலை பாக்கு கேட்டேன். அவர் பீடாவாகத்தான் தர முடியும் என்று சொன்னதோடு , என்ன பீடா? ஜரிதா பீடாவா? என்று கேட்டிருக்கிறார். எனக்கு அது சாதாரண பீடாவா? என்று காதில் விழுந்தது. ஆமாம் என்று தலையை ஆட்டி வைக்க பீடாவைக் கொடுத்து விட்டு ஒரு ரூபாய் கேட்டார். வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்த கணத்திலேயே தலை கொஞ்சம் சுத்த ஆரம்பித்தது. பீடா விலையாக ஒரு ரூபாய் கேட்ட போது கொஞ்சம் உஷாராகி இருக்க வேண்டும். அது சாதாரண பீடா இல்லை என்று யோசித்திருக்க வேண்டும். ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு வாயில் போட்டு மென்று விட்டேன். வியர்வை வாயில் தொடங்கி மூக்கு வழியாக முகம் முழுவதும் பரவியது மட்டுமே உணரும்படியாக இருந்தது.
அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட வேண்டும் என்று தோன்றியது. வைகை விரைவு ரெயிலுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்பதும் நினைவிலிருந்து மறையவில்லை.. இன்னும் ஒரு மணி நேரத்தில் ரயில் பிளாட்பாரத்துக்கு வந்து விடும். முண்டியடித்து இடம் பிடிக்க வேண்டும். வரிசை நீண்டு இருந்தது கண்ணுக்குத் தெரிந்தது. சாலையைக் கடந்து விட்டால் ரயில் நிலைய முகப்புக்குள் போய் வரிசையில் நின்று விடலாம். அங்கிருக்கும் மின்விசிறியில் வியர்வை குறைய வாய்ப்புண்டு. சாலையில் வண்டிகள் வருகின்றனவா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. குறுக்காக ஓடினேன். சாலையில் வந்த வாகன ஓட்டிகள் திட்டினார்கள். ஆனால் கடந்து விட்டேன். உள்ளே நுழைந்து வரிசையில் நின்று விட நினைத்த போது தலை கிறங்கி விட்டது. அதற்கு பிறகு என்ன நடந்தது எனக்குத் தெரியாது.
தெளிக்கப்பட்ட தண்ணீரின் உதவியால் கண்ணைத் திறந்த போது ரயில்வே சிப்பந்தியான அந்தப் பெண் நான் எடுத்த வாந்தியைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். புகாரி ஓட்டலில் சாப்பிட்ட கோழி பிரியாணி அப்படியே வெளியே வந்து விட்டது. வரிசையில் நின்றவர்கள் குடித்து விட்டு வாந்தி எடுத்ததாக நினைத்துத் திட்டியிருப்பார்கள். பையைத் திறந்து பார்த்தேன். இயல், இசை நாடக மன்றத்தில் வாங்கிய கடிதம் பத்திரமாக இருந்தது. ”என்னப்பா ஊருக்குப் புச்சா; பீடா போட்டுக்கினியாக்கும்; போ மூஞ்சக் கழுவிக்கினு போய் வரிசையில நின்னு டிக்கெட்டு வாங்கிக்கினு ஊரு போயிச் சேரு” ரயில்வே பணிப்பெண் சொன்னார்.
அவமானமாக இருந்தாலும் அந்தப் பெண் உண்மையைக் கண்டு பிடித்துச் சொன்னது கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது. எல்லோரும் குற்றவாளியைப் பார்க்கும் மனத்துடன் என்னைப் பார்க்கிறார்கள் என்று தோன்றியதால் திரும்பவும் வரிசையில் நிற்க மனம் வரவில்லை. எழும்பூர் ரயில் நிலையத்தின் கிழக்குப் பக்க மேம்பாலத்தின் ஓரத்தில் இருந்த திண்டில் உட்கார்ந்தபோது கடலிலிருந்து வந்த காற்று முகத்தின் வியர்வையத் துடைத்து விட்டது. வைகை விரைவு வண்டி கூச்சலுடன் கிளம்பிப் போய்விட்டது. சென்னைக்கு முதல் தடவையாக வந்து கடற்கரையைக் கூடப் பார்க்காமல் போக நினைத்தது சரியில்லை என்று தோன்றியது. ஒரு நாள் தங்கி விட்டு நாளை கிளம்பலாமா என்று மனம் நினைத்தபோது  லாட்ஜ் அறையைக் காலி செய்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. இப்போது திரும்பவும் போய்க் கேட்டாள் திரும்பவும் ஒருமுறை முன்பணம் தரவேண்டும்; வாடகை தர வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் காலி செய்து விட்டதாலேயே நான் வேற்று ஆளாக ஆகிவிடும் மாயம் எப்படி என்று தெரியவில்லை.
ரயில் நிலையத்திலிருந்து அண்ணாசமாதிக்குப் போகும் பேருந்தில் ஏறி கண்ணகி சிலைக்குப் பக்கத்தில் இறங்கினேன். விரிந்து கிடந்த கடலை நோக்கி நடந்த போது ஜரிதா பீடாவின் மஹாத்மியம் பற்றி நினைவுகள் வந்தன. ரஜினிகாந்த் ஜரிதா பீடா போடுவதால் நிலை தடுமாறி விடுகிறார் எனச் சினிமா கிசுகிசுக்களில் படித்தது மனதில் விரிந்தது. செருப்புக்குள் நுழையும் மணல் நடையின் வேகத்தைக் குறைத்தது. கடலின் அலையைத் தொட்டு விட்டுத் திரும்பி விடலாம் என்று தோன்றியது. கடலின் அருகில் போனபோது அலைகள் வந்து மோதியதால் உண்டான சரிவு தடுத்தது. பள்ளத்தில் காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்த போது இரண்டொரு முறை அலை வந்து போனது. இரவே கிளம்பி மதுரைக்குப் போவதா? தங்கி விட்டு நாளைக்குச் சென்னையின் அடையாளங்களான செண்ட்ரல் ரயில் நிலையம், மூர் மார்க்கெட், எல்.ஐ.சி. கட்டிடம் என ஒரு சுற்று வந்து விட்டுப் போவதா? என முடிவு செய்ய முடியவில்லை. திரும்பவும் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய போது அரசு பேருந்து ஒன்று நின்றிருந்தது. பின்புறம் மதுரை என்ற பெயரை வாசித்தவுடன் ஏறி உட்கார்ந்து விட்டேன். எப்போதும் சென்னைக்குப் போனாலும் போன காரியம் முடிந்தவுடன் உடனே திரும்ப வேண்டும் என்ற நினைக்கும் முடிவு அன்று எடுத்தது தான் என நினைக்கிறேன். இப்போது சென்னைக்குப் போனாலும் சென்னை வெளியே தள்ளி விட்டுச் சிரிப்பதை நானே ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்.

 நன்றி : மலைகள் இணைய இதழ்

1 comment :

ponmudivadivel Ponmudi said...

// சாலையில் வண்டிகள் வருகின்றனவா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. குறுக்காக ஓடினேன். //

இதை படிக்கும்போது மனம் அச்சத்தில் அடித்துக்கொண்டது. நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.