அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்



மானுடவியல் அறிஞர் விக்டர்டர்னர் ‘சடங்கிலிருந்து அரங்குக்கு’ (From Ritual To Theatre) என்றொரு புகழ் மிக்க சொற் றொடரைப் பயன்படுத்தியுள்ளார். சடங்கு களிலிருந்து தான் நாடகக்கலை உருவாகியது என மேற்கத்தியச் சிந்தனை களும் அதன் வழியான ஆய்வுகளும் சொல்லியுள்ளன. உலகத்திலுள்ள நாடகப் பள்ளி களும் நாடக ஆர்வலர்களும் ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக் கொண்டுள்ளனர். இந்த ஒத்துக் கொள்ளலின் பேரில் அரங்கச் செயல்பாடுகளுக்கு-குறிப்பாக நடிப்புக்கான பயிற்சிகளுக்கு- மரபான சடங்குநிகழ்வுகளோடு உறவும் முரணும் உண்டு என நம்பி பயிற்சிகளில் சடங்கின் கூறுகளை உள்வாங்கிக் கொள்ளவும் செய்கின்றனர்.
உலக அளவில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட முன்னோடிக் கலைஞன் குரோட்டொவ்ஸ்கி. ஏழைகளின் அரங்கு என்பதை முன்மொழிந்த சோசலிசப் போலந்தின் நாடகக்காரன். அவன் சடங்கையும் நாடகத்தையும் ஒன்றாக்கிப் பார்வையாளர்களை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் எனச் சொன்னவன். இந்திய அளவிலும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்ட நாடகக்காரர்கள் பலருண்டு. என்றாலும் யாரையும் சடங்கை நோக்கிப் பயணம் செய்த நாடகக்காரர்கள் எனத் தனியாகச் சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் இளம் நாடகக்காரரான முருகபூபதியின் நாடக முயற்சிகள் அத்தகைய பயணத்தின் தொடக்கமாகத் தெரிகின்றன. இத்தொடக்கம் வரவேற்கத்தக்க தொடக்கமா ? இது நாம் எழுப்பிக் கொள்ள வேண்டிய கேள்வி .

பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம், சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் அரங்கவியல் படித்துவிட்டு நாடகத் துறையிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் சிலர் தங்களுக்கான தனித்த அடையாளங்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் என்பதையும் நானறிவேன். தங்களுக்கு விருப்பமான நாடகப் போக்கைக் கைக்கொண்டு அவைகளில் நடிப்பது, இயக்குவது, எழுதுவது என்பன அவர்களின் வேலைகளாக இருக்கின்றன. நாடகத்துறையில் தங்களை நிரூபித்துக் காட்டும் வெறி அவர்களின் உத்வேகமாக இருக்கிறது. அந்த வெறியின் காரணமாகத் தங்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் பற்றிக்கூடக் கவலைப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தொடர்ந்து அதற்காகக் கடினமாக உழைக் கிறார்கள்; சோதனை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை நானறிவேன். இவர்களில் தமிழ் அறிவுலகம் கவனித்துப் பேசுகிறவர்களாக இருப்பவர்கள் ஓரிருவர்தான். ச.முருகபூபதி கவனித்துப் பேசப்படுகிறவராக இருக்கிறார். நாடகக்கவி பாஸ்கரதாஸ் அவர்களின் பேரனும் எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகியோரின் இளவலுமான முருகபூபதி தமிழ் சிற்றிதழ்ச் சூழலில் கவனித்துப்¢ பேசப்படுகிறார் என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அவர் கவனிக்கப்படுவதில் இவர்களது பங்களிப்புகளோடு அவருடைய விடா முயற்சி களும், தீர்மானித்துக் கொண்ட தனது இலக்குமேல் கொண்டிருக்கும் விருப்பமும் உள்ளடங்கியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதே நேரத்தில் அவரது தேடலும் வேகமும் பாண்டிச்சேரி நாடகப் பள்ளியின் ஆசிரியர்கள் அவருக்குக் கற்றுத் தந்ததின் விளைவு என்று சொல்வதைவிட அங்கு கிடைத்த சுதந்திரத்தின் விளைவு என்பதையும் சொல்லியாக வேண்டும். முருகபூபதி நாடகம் கற்ற சங்கரதாஸ் நாடகப் பள்ளியின் முன்னாள் ஆசிரியன் என்ற நிலையில் மட்டுமல்லாமல் முருகபூபதியின் தேடலையும் விடா முயற்சி யையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற வகையிலும் இதனைச் சொல்கிறேன்.

 

முருகபூபதியின் தொடக்ககாலத் தயாரிப்புக்களான மரணவீட்டின் குறிப்புகள், சரித்திரத்தின் அதீத ம்யூசியம் போன்றன முழுக்கவும் ஐரோப்பிய நவீனத்துவத்தின் தெறிப்புக்களாக இருந்தன. தஸ்தியெவ்ஸ்கி, சார்த்தர் போன்ற மேற்கத்தியப் படைப்பாளிகளின் தொனியில் வெளிப்பட்ட நாடகங்கள் அவை. ஆனால் இப்போது அவர் தயாரிக்கும் நாடகங்களோ அவற்றிற்கு நேர் எதிரான கருத்தியல் தளத்தைக் கொண்ட நாடகங்களாக உள்ளன. நவீனத்துவத்தை உதறிவிட்டு பின்னோக்கிச் சென்று மரபின் இருப்பில் இருப்பதாக நம்பும் நல்ல அம்சங்களைப் பேசத் தொடங்கியுள்ளன. ஆனாலும் தொடக்கநிலை நாடகங்களிலிருந்த ஒரேயொரு பொது அம்சம் இன்னும் தொடர்கிறது என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். முன்நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் வரும் பார்வையாளர்களை அலுப்பூட்டி விலக்கிவைக்கும் மொழியும், விளக்கம் பெறாத காட்சிப் படிமங்களால் மட்டுமே அவ்வப்போது கவனத்தை ஈர்த்துவிடும் சக்தியும் தான் அந்தப் பொது அம்சம். இப்பொது அம்சம்¢ இப்போது நிகழ்த்தப்பட்ட செம்மூதாய் என்னும் நிகழ்வில் கொஞ்சம் தளர்ச்சி யடைந்துள்ளது என்பது கொஞ்சம் ஆறுதலான விசயம். காட்சிப் படிமங்களின் தொடர்ச்சி யாலும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வார்த்தைக் கூட்டத்தாலும் பார்வையாளனோடு -முன்நிபந்தனைகள் இல்லாமல் வந்த பார்வையாளனோடு- உறவு கொள்வதற்கான முயற்சியை செம்மூதாய் தன்னுள்ளே கொண்டிருந்தது.

செம்மூதாய் நிகழ்வின் கருத்தியல் தளமும் வனத்தாதி, கூந்தல் நகரம், என்ற பெயர்களில் இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளின் கருத்தியல் தளம் ஏறத்தாழ ஒன்று தான். ‘கிராமமும் கிராமம்சார்ந்த வாழ்வியலின் மீதான பற்றுதலும’¢ என்பது தான் அந்தக் கருத்தியல் தளம். நகரங்கள் வீங்கிப் பெருப்பதன் பின்னணியில் கிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன; அதற்குத் துணையாக இருக்கும் அறிவுவாதம் மற்றும் தொழில் நுட்பம் ஆகியன ஒதுக்கப்பட வேண்டியன என்னும் கருத்தியல் தளத்திலிருந்து அரசியலைப் பேச முற்படுவது போலத் தோற்றமளிக்கின்றன இந்நிகழ்வுகள். சாராம்சமாக மேற்குலக எதிர்ப்பு அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்னும் அரசியல் தளத்தில் இயங்க விரும்பியுள்ளன எனக் கூறலாம். இப்படிச் சொல்வது கூட சில யூகங்களின் அடிப்படையில் தான்.ஏனென்றால் கிராமம், கிராமத்தின் அடையாளங்களாகக் காடுகள், மரங்கள், பறவைகள்,பயிர்கள் என விரவிக் கிடக்கும் வார்த்தை மொழியும் இவைகளின் ஊடே வாழ்ந்து கொண்டிருப்பதாக- இருந்ததாக- சொல்லப்பட்ட பெண்கள், குழந்தைகள், பற்றிய குறிப்புக்களும், காட்சி மொழியும் இடம் பெறுமளவுக்கு அதன் எதிர்வாகச் சொல்லப்படும் நகரங்களின் அடையாளங்களோ, ஏகாதிபத்தியத்தின் வெளிப்பாடுகளோ நிகழ்வுகளில் அதிகம் இடம்பெற்றதில்லை என்பது தான் உண்மை.

 

முருகபூபதியின் இந்தக் கருத்தியல் தளம, கோணங்கியின் பிற்காலச் (உப்புக் கத்தியில் மறையும் சிறுகதைத் தொகுப்புக்குப் பிந்திய ) சிறுகதைகளிலும், பாழி, பிதிரா போன்ற நாவல்களிலும் வெளிப்பட்ட கருத்தியல் தளம்தான். இந்தக் கருத்தியல் தளம் மீதும், வெளிப்பாட்டு முறை மீதும் பலருக்கு விமரிசனங்கள் இருக் கலாம். இன்றைய சூழலில் ஒரு கலைஞனின் முதல் பணியே தன் வாழிடத்தைத் தக்க வைப்பதுதான் என்றும், அந்த வாழிடத்தின் ஆதாரங்களைக் காவுகொள்ள முயலும் ஏகாதிபத்தியமும் அதன் முகவர்களும் அவை தரும் எல்லா இன்பங்களையும் அனுபவிக்கும் நகரவாசிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார்கள் எனவும் கூறி இந்நாடக நிகழ்வை வரவேற்கலாம். ஆனால் இதே நேரத்தில், இந்தியாவில் கல்வியைப் பரவலாக்கியது வௌ¢ளையர்களின் வரவுதான் என்ற அடிப்படையிலிருந்து விவாதங்களைக் கிளப்பி முற்ற முழுதாக எதிர்க்கப்பட வேண்டியதல்ல ஏகாதிபத்தியம் என்று ஒருவர் வாதிடவும் கூடும். சுய சாதி மக்களுக்கான நிறுவனங்களை நடத்திட விரும்பும் தேசிய முதலாளிகளுக்கெதிராக அடித்தள மக்களுக்கான திறப்புக்களை ஏற்படுத்தித் தருபவர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளே. எனவே பன்னாட்டு மூலதனத்தை வரவேற்பது என்பது தலித்துக்கள், மலைவாழ் மக்கள், பெண்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கான ஜனநாயக உரிமையைப் பெறுவதற்கான வழிமுறை எனக் கூறி சாதீய இந்தியாவின் வன்முறைக்கெதிராக பன்னாட்டு முதலாளித்துவத்தின் சுதந்திரத்தை ஒருவர் பரிந்துரை செய்யலாம். அந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு இந்நாடகம் ஜனநாயகப் பரவலுக்கு எதிரான நாடகம். எனவே அத்தகைய பார்வையாளர்களோடு இந்த நிகழ்வுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

சொந்த பூமிக்குத் திரும்புதல்-சொந்த அடையாளத்திற்கு-பழைய வாழ்முறைக்குத் திரும்புதல் என்பதில் உறுதி யான தொனியைக் கொண்டிருக்கிறது இந்த நாடகம். முருகபூபதிக்கும் அவரது சகோதரர் கோணங்கிக்கும் இருக்கும் அந்த உறுதியில்-நம்பிக்கையில்- நுழைய மற்றவர்கள் விரும்ப வேண்டியதில்லை; விட்டுவிடலாம்.

செம்மூதாய் தயாரிக்கப் பட்டுள்ள விதமும் நிகழ்த்தப்பட்ட விதமும் சிரத்தையின் வெளிப் பாடுகள் என்பதில் சந்தேக மில்லை. காடு களிலும் மரத்தின் அடியிலும் விலங்கு களைப் போலவும் பறவைகளைப் போலவும் தனது பிள்ளை களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அந்தக் காட்டோடும் இயற்கையோடும் இயைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் செம்மூதாய் தனது சந்ததிகள் காணாமல் போனதால் தவிக்கும் தவிப்பு உக்கிரமாக வெளிப் படுத்தப்பட்டது. நடிகர்களின் மெல்லசைவுகள் வழி இவை பார்வையாளர்களின் கண்ணுக்குள் செலுத்தப் பட்டது. அவர்கள் காணாமல் போனதில் இன்றைய ஏகாதிபத்தியங்கள் மட்டுமல்ல; இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்த வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும்- அதன் குற்றப்பரம்பரைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கும்- பங்கிருந்தது எனக் கோடிகாட்டிவிட்டு , திரும்பவும் கிராமவாழ்வின் ஆதாரங்களை நோக்கிப் பயணம் செய்ய வேண்டியதின் தேவையைச் சொல்ல வருகிறது செம்மூதாய். இத்தகைய அனுமானத்துக்கு வருவதற்கு உதவுவதாக இருக்கும் காட்சிகளும் மொழிக்கோர்வைகளும் நிகழ்வு முழுவதும் தொடர்ந்து கிடைக்கின்றன எனச் சொல்வதற்கில்லை. வார்த்தைகளற்ற முன்பாதி நிகழ்வுகளைப் பொறுமை யாகக் கவனித்துக் கொண்டு வரும் பார்வையாளனுக்குப் பின்பாதியில் விரியும் காட்சிப் படிமங்களும் மனிதர்களை எண்ணால் அழைக்கும்- எண்களால் அடையாளப்படுத்தப்படும் போது உருவாக்கப்படும் இடம் சிறைகள் என்பது உறுதியாவதன் மூலம் -வார்த்தைகளும் சேர்ந்து ஓரளவு தெளிவான சித்திரம் ஒன்றை உருவாக்கிக் காட்டுகின்றன. மேற்கின் மீது விமரிசனம் வைக்கும் இந்நாடகம், மேற்குலகம் கற்றுத்தந்த அரங்க மொழி களையும் (வார்த்தை, உடல் , காட்சி மொழிகளையும் ) அரங்கியல் தொழில் நுட்பங்களையும் (நவீன விளக்குகள், நவீன ஒலி அமைப்புக்கருவிகள்) ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பது ஒரு விநோத முரண். இத்தகைய விநோத முரணைப் பாரம்பரியத்திற்குத் திரும்புதல் பற்றிப் பேசும் எல்லோரிடமும் காண முடிகிறது. முருகபூபதியும் விலக்கல்ல.

இந்நிகழ்வைப் பார்த்த பார்வையாளர்கள் அந்த தேரிக்காட்டின் பின்புலத்தில் வீசியெறிந்த ஒளிவௌ¢ளத்தில் அசைந்து வந்த முகம் தெரியா நடிகர்களின் -கதாபாத்திரங்களின் -நகர்வுகளை ரசித்துப் பார்த்தார்கள். செக்கச் சிவந்த தேரிக்காட்டு மணல் மீது நீலம் பாரித்த ஒளிவௌ¢ளம் படுவதற்கு முன்பு வானம் நோக்கி விசிறியடித்த மஞ்சள் ஒளி நடிகர்களின் உடல் மொழிக்குப் பலவிதப் பரிமாணங்களை உருவாக்குவதற்கு உதவியது . அந்தப் பரிமாணங்களே பார்வையாளனின் இருப்பைத் தக்க வைத்தது என்பதோடு, அவ்வப்போது அவர்களுக்கு ஆச்சரிய மனோபாவத்தையும் உண்டாக்கியது என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. அதற்குக் காரணமாக இருந்தது மு.நடேஷின் ஒளியமைப்பு. பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

ஒரு நாடகநிகழ்வின் மீதான விமரிசனம் என்பது நாடகம் இயங்கும் கருத்தியல் , நிகழ்த்தப்படும் முறை , அரங்கியல் என்னும் சேர்மக்கலையை நாடக இயக்குநர்¢ கையாளும் விதம் பற்றிய பேச்சாகவே இருக்க முடியும். ஆனால் முருகபூபதியின் நாடகங்கள் பற்றிய விமரிசனம் அல்லது பேச்சு அவ்வாறு இல்லாமல் நிகழ்வை நடத்திய இடம் பற்றிய பேச்சாகவும், நாடகத்திற்கு முந்திய ,பிந்திய நிகழ்வுகளைப் பற்றிய பேச்சுக் களாகவும் இருந்திருக்கின்றன. இந்த நாடகத்தைப் பற்றிய விமரிசனத்திலும் அத்தகைய பேச்சு அவசியமாகிறது. அத்தகைய பேச்சை உருவாக்க அவரே விரும்புகிறார் என்றே தோன்றுகிறது. நாடகநிகழ்வின் இடமாக விருதுநகர் மாவட்டக் கிராமம் ஒன்றோ, தங்கம்மாள்புரம் தேரிக்காடோ தொடர்ந்து தேர்வு செய்யப் படுவதும் அவ்விடங்களுக்கு வரும்படி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வாழும் கலை, இலக்கிய ஆர்வலர்களை அழைப்பதும் அவரது பாணியாக இருக்கிறது. அவரது அழைப்பை ஏற்றுப் பலரும் அவ்விடத்திற்குச் செல்கின்றனர். முருகபூபதியின் நாடக நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர். அந்த விதத்தில் அவரது நாடகங்கள், நிகழ்வை நோக்கிப் பார்வையாளர்களை இழுக்கும் அம்சம் கொண்டது. 
கிராமம்தான் இந்த நாடகங்களின் நிகழ்விடம் என்பதில் உறுதியாக இருப்பதால் கிராமம் சார்ந்த மக்களுக்கான நாடகங்கள் அவை; நகரவாசிகள் விரும்பிப் போய்ப் பார்க்கிறார்கள் என்பது அர்த்தமல்ல. முழுக்க முழுக்க அவை சோதனை முயற்சிகள்;சோதனை முயற்சிகளின் ஆதரவாளர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்பும் கலைஇலக்கிய ஆர்வலர்கள் எல்லா இடங்களுக்கும் போகத்தான் செய்வார்கள். இதிலும் அது தான் நடக்கிறது. அந்த அம்சத்தை விலக்கிவிட்டு யோசித்துப் பார்த்தால் இவை ஒரு விதத்தில் மக்களை நோக்கி நாடகங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஏழைகளின் அரங்கிற்கும்,(Poor theatre) வெகுமக்களுக்கான நாடகங்களை நடிகனின் உடல் மற்றும் குரல் வழியே கொடுத்து விட வேண்டும் என்று சொன்ன மூன்றாம் அரங்கின் வடிவத்திற்கும்(Third theatre) மாற்றான வடிவம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி யானால் இந்நாடக நிகழ்வை என்ன வகையான அரங்க நிகழ்வு என வகைப் படுத்திப் புரிந்து கொள்வது என்பது அடுத்து எழுகின்ற கேள்வி. இந்தக் கேள்விக்கு முதலில் சொன்ன சடங்கு நாடகம் (Ritual theatre) என்பதைத் தான் பதிலாகச் சொல்ல வேண்டும்.அப்படிச் சொல்வது வலிந்து சொல்லுவது ஆகாது.சடங்கின் எல்லா அம்சங்களும் நிரம்பிய அந்நிகழ்வை அப்படி அழைப்பது மிகப் பொருத்தமானதும் கூட.

செம்மூதாய் என்னும் நாடகத்தின் கால அளவு ஒருமணி நாற்பது நிமிடம் என்பது எல்லாப் பார்வையாளர் களுக்கும் பொருந்தாது. ஒளிவெள்ளத்தோடு இசை சேர்ந்து வந்த அந்தக் காட்சியில் தொடங்கி அவை இரண்டும் முடியும் போது நாடகம் முடிந்ததாகக் கிளம்பிச் சென்றவர்கள் பக்கத்துக் கிராமங்களில் இருந்து வந்த பாதிப் பார்வையாளர்கள் மட்டுமே. இவர்களுக்கு மட்டுமே நாடக நிகழ்வு நேரம் ஒருமணி நாற்பது நிமிடம். அவ்வாறில்லாமல், அன்று காலையில், மதியத்தில், மாலையில் வந்து சேர்ந்து அங்கேயே ஒன்றிரண்டு வேளை உணவுண்டு விட்டுத் திரும்பவும் நாடகத்தின் முடிவில் நடந்த பந்தியிலும் களியாட்டங்களிலும் பங்கேற்றுத் திரும்பிய நகரவாசிகளுக்கு நாடக நிகழ்வு நேரம் என்பது நிச்சயம் ஒரு மணி நாற்பது நிமிடம் அல்ல. அவர்களைப் பொறுத்தவரை செம்மூதாய் நாடகத்தின் தொடக்கமும் முடிவும் எது என உறுதியாகச் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை. இதன் மூலம் முருகபூபதி தமது தேடலான சடங்கினை நோக்கி நாடகத்தை நகர்த்தி இரண்டையும் ஒன்றாக்கி சடங்கின் புற அம்சங்கள் நிரம்பியதாக ஆக்கிவிடுகிறார் என்பதுதான் உண்மை. அதாவது இயக்குநர் தனது நோக்கத்தில் வெற்றி அடைந்திருக்கிறார் என்பது தான் சொல்ல விரும்புவது. இவையல்லாமல் இந்நாடக நிகழ்வு சடங்கின் வேறுசிலஅம்சங்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளது என்பதையும் சொல்ல முடியும். ‘நிகழிடம் பற்றிய கவனம்’¢ என்ற முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லி விளக்கிக் காட்டலாம்.

இந்தியப் பாரம்பரியத்தில்- அப்பாரம்பரியம் செவ்வியல் பாரம்பரியம் என்றாலும் சரி, நாட்டார் பாரம்பரிய மாயினும் சரி , சடங்குகள் குறிப்பிட்ட இடத்தோடு பிணைக்கப்பட்டவை. மயானக் கொல்லை, சம்ஹாரம், பரிவேட்டை அல்லது நரிவேட்டை என்பன கோயிலின் அருகில் அல்லது இன்ன இடத்தில் நடக்க வேண்டும் என்றால் அங்குதான் நடக்க வேண்டும்; இன்ன உயிரை அல்லது பொருளைப் பலியாக கொடுக்க வேண்டும் என்றால் அதனைத் தான் கொடுக்க வேண்டும். மாற்றங்களைப் பற்றிய பேச்சுக்கே அங்கு இடமில்லை. அந்தச் சடங்குக்குரிய பார்வையாளர்களும் அனுமதிப்பதில்லை; தெய்வங்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த இடத்திலிருந்து பிரித்து எடுத்து வேறு இடத்தில் செய்தால் அதன் உண்மையான அர்த்தமும் இருப்பதில்லை. முருகபூபதியின் நாடகங்கள் தேரிக்காட்டின் செம்மண் பரப்போடு தன்னைப் பிணைத்துக் கொள்ள விரும்புகின்றன என்பது அந்நாடகத்தைப் பார்த்த அனைவரும் அறிந்த விசயம்.

சடங்குகளின் புற மற்றும் அகவடிவங்களை நோக்கிய பயணத்தில் முருகபூபதியின் செம்மூதாய் நாடகம் இலக்கை அடைந்துவிட்ட ஒரு நிகழ்வு என்பதில் அவருக்கு மனநிறைவை அளித்திருக்கக் கூடும்; பார்வை யாளர்கள் பலருக்கு இனம் புரியாத ஒரு நிறைவை அளித்த நாடகம் அதில் பங்கேற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பது எதிர்பார்த்த ஒன்று தான்.கிராமங்களுக்குத் திரும்புதல் -கிராமீய வாழ்தல் முறைக்குத் திரும்புதல் என்பதனை சடங்குகளின் வழியாகத் தான், சடங்குகளின் கூறுகளை உள்ளடக்கிய நாடகநிகழ்வின் வழியாகத் தான் நிகழ்த்திக் காட்ட முடியும் என்று நம்பினால் அந்த முயற்சியை முருகபூபதி தொடர்ந்து செய்யட்டும். அதற்கு முன்பாக சடங்குகள் இடத்தோடு மட்டும் பிணைப்புக் கொண்டவையல்ல; குறிப்பிட்ட சாதிகளோடும் பிணைப்புக் கொண்டவை என்பதையும் நினைவில் கொள்ளட்டும். சடங்கு நாடகங்கள் ஒரு சாதிக்குரிய உள்ளடக்கத்தை அச்சாதியைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு முன்வைக்கும் வேலையைச் செய்யக்கூடிய ஆபத்துக்கள் கொண்டவை என்பதை யாரும் மறுத்து விட முடியாது. இந்த நாடகமே அத்தகைய தன்மைகள் கொண்டதாகவே வெளிப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியச்சூழலில் சடங்குகள் எல்லாமே சாதிகளோடு பிணைப்புக் கொண்டவைகளாகவே இருக்கின்றன. சடங்கிலிருந்து கலையைப் பிரித்தெடுப்பது என்பது மனிதர் களை மதத்தின் பிடியிலிருந்தும் சாதியின் பிடியிலிருந்தும் விலக்கிக் கொண்டு வருவதற்கான முதல் படி ; அதற்கு மாறாக சடங்கோடு கலையை இணைக்கச் செய்யும் முயற்சிகள் எத்தகைய நோக்கம் கொண்டன என்பது தனியாக விளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

இத்தகைய எச்சரிக்கைகளையும் கவனத்தையும் முருகபூபதி மாதிரியான நாடகக் கலைஞர்கள் மட்டும் தான் கவனிக்க வேண்டும் என்பதில்லை. நவீனவாழ்வுக்கு மாற்றாகப் பாரம்பரிய வாழ்முறையைப் பரிந்துரை செய்யும் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எப்போதாவது வெடிக்கப் போகும் அணு உலையின் ஆபத்தை விட தினசரி குறைந்த எண்ணிக்கையில் பலிகேட்கும் வீச்சரிவாள்கள் பரவாயில்லை என்று நினைத்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
======================================================================================================
நாடகம்; செம்மூதாய் . இயக்கம்; ச. முருகபூபதி . நிகழ்ந்த இடம்; தாடகைப் பெருநிலம், தங்கம்மாள்புரம் தேரிக்காடு, விளாத்திகுளம்வட்டம், தூத்துக்குடி மாவட்டம், நாள்;02-01-05.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்