தீர்ப்பளிக்கப்படாத வழக்கு


[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]
THE JUDGEMENT RESERVED 
THE PLAY READING
BY 
A.RAMASAMY 





காட்சி ;1
நாடகம் தொடங்கும்போது முன் மேடையில் ஒரு நபர் சுழல் நாற்காலியில் அமர்ந்துள்ளான். தலையில் கௌபாய் தொப்பி. கையில் ஒன்றரை அடி நீள உருட்டுக்கோல். இருபுறமும் உலோகப் பூண் . அவன் நாடகத்தின் இயக்குநராகக் கருதுபவன்.பெர்முடாஸ், பேன்ஸி பனியன் என வித்தியாசமான ஆடைகள் அணிந்துள்ளான். அவனுக்கு முன் உயரம் குறைந்த மேசை உள்ளது . அதில் நாடகப்பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவன் பார்வையாளர் களுக்கு முதுகு காட்டி அமர்ந்துள்ளான்.

பின் மேடை இருட்டாக உள்ளது. பகலில் நடப்பது என்றால் திரையிட்டு மூடி இருக்கலாம். திரைக்குப் பின் ஒரு நீதிமன்றத்தின் மிகக் குறைந்த வடிவம் இருக்க வேண்டும்.
சுழல் நாற்காலியையும் கையில் உள்ள கோலையும் சுழற்றியபடி திரும்பிய


இயக்குநர்;     
சீமாட்டிகளே! சீமான்களே!! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். நாடகம் பார்க்க வந்த உங்களுக்கு இந்த ஏமாற்றத்தைத் தந்ததற்காக முதலில் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடக்கப்போகிறது நாடக அரங்கேற்றம் இல்லை; இன்னும் சொல்லப் போனால் ஒத்திகையும் கூட இல்லை. வெறும் வாசிப்புத் தான். ஆம் நாடக வாசிப்பு. யார் , யார,¢  எந்த எந்தக் கதாபாத்திரத்தில நடிக்கிறதுன்னு கூட இன்னும¡ முடிவு பண்ணல. என்றாலும் பெருந்திரளாக வந்துள்ள உங்களை ஏமாத்துனதுக்கு மன்னிச்சிடுங்க.
            கவிதை , கதை வாசிக்கிறதுன்னா நான் ஒருவனே வாசித்து விடுவேன். இது நாடக வாசிப்பு .. நாடகத்த வாசிக்கிறதுக்கு அதில எத்தனை கதாபாத்திரங்கள் இருக்கோ அத்தனை நபர்கள் வேணும். இல்லையென்றால் சுவாரசியம் கொஞ்சமும் இல்லாமல் போய்விடும்.
            இப்போ வாசிக்கப்போற நாடகத்தில மொத்தம் பத்துக் கதாபாத்திரங்கள். ஆக உங்கள்ல யாராவது பத்துப் பேரு முன்வந்தால் நாடகத்த சுவாரஸ்யமா வாசிக்கலாம்.
 [ நாடகப்பிரதியைத் திருப்பிப் பார்த்து விட்டு] ஒரு பெண் பாத்திரம் கூட இலலை. அது ஒரு வருத்தமான விசயம் தான். அதனால என்ன.? நாடக வாசிப்பு தானே,.. பெண்களும் கூட முன் வரலாம்].
                        [ ஒரு பெண்ணும் அவளருகே இருந்த ஆணுமாக எழுந்து முன் வருகிறார்கள்]
இயக்குநர்˜:   ஓ ஜோடியா முன் வந்திருக்கீங்களா..  ரொம்ப சந்தோசம்.. இந்த நாடகத்தில ஜோடிகளாகப் பாத்திரங்கள் இல்லை. அதனால உங்க ரெண்டு பேருக்கும் ஏமாற்றம் ஒன்றும் இல்லையே..

பெண் : வெறும் வாசிப்புத்தானே ஜோடிகளா வாசிக்கிறது ... ஜோடி இல்லாம வாசிக்கிறதுன்னு பேசுறதில என்ன அர்த்தமிருக்கு. நடிப்பு என்று வந்தால் ஜோடிகளா நடிக்கிறதில ஒரு த்ரிலும் இருக்கும். சில நேரங்களில் பிரச்சினைகளும் இருக்கும் . பிரச்சினைகள்னு வந்தாக்கூட எனக்குக் கவலையொன்னும் இல்ல. அவருக்குத் தான் பிரச்சினை. அவங்க அப்பா அம்மாகிட்டெ அனுமதி வாங்க வேண்டியவர் அவர் தான். என்ன அறிவழகன். நான் சொல்றது உண்மைதானே.
ஆண்   : சுமதி சொல்றது உண்மைதான். நடிக்கணும்னா.. நான் வரல. வாசிப்பு மட்டும்னா நான் தயார்.
இயக்குநர்: ஓ ! உங்க பெயர் அறிவழகன்.அவங்க பெயர் சுமதி( யார் நடிக்கிறார்களோ அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பினால் சொல்லிக்கொள்ளலாம்) சரி வேற ஏதாவது உங்களைப் பத்திச் சொல்லி அறிமுகப் படுத்திக்கலாம். உங்கள் விருப்பம் போல நீங்களே அறிமுகப் படுத்திக் கொள்ளலாம். [ இருவரும் பூனை நடை நடந்து காட்டி]
ஆண்.1  : சுமதி என்கிற காந்திமதி
பெண்   : அறிவழகன் என்கிற சோமசுந்தரம்
ஆண்  : வயது 27,உயரம் 5 அடி 7 அங்குலம். கட்டுமஸ்தான உடல், அளவுகள் 42:38:43 இன்னும் திருமணமாகவில்லை. படித்த அழகான சிவப்பு நிறமுடைய பெண் தேவை . சாதி ,ஜாதகப் பொருத்தம் பார்க்கப்படும். உட்பிரிவுகள் பற்றிக் கவலை இல்லை.
பெண்   : தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: தபால் பெட்டி எண்.36,தினமலர், எண்.108,தினமணி, PB.No.414, The Hindu, The Indian Express, The Times, The London Times, The Deccan Herald [ நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கேற்ப பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்]
இன்னொருவன் அரங்கின் இன்னொரு பகுதியிலிருந்து எழுந்து வருகிறான். அவனை ஆண் 2 எனக் கொள்ளலாம்.
ஆண்.2  :அவர் இன்னும் காணாமல் போகவில்லை. டி.வி. பார்க்கிறார். கல்லூரிக்குப் போகிறார். மோட்டார்ச் சைக்கிள் ஓட்டத்தெரியும். வேட்டி கட்டத் தெரியாது. ஜீன்ஸ் தான் போடுவார். தகவல் தெரியாதவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி காவல்துறைக்கண்காணிப்பாளர். கருங்கல் பாளையம் , நெல்லை மாவட்டம்.
இயக்குநர் : ஓ முன்றாவது நடிகரும் தயாராக இருக்கிறாரா..? பரவாயில்லை. உங்கள் பெயர் என்ன என்று சொல்லலாமா.
ஆண்.2  : இலக்குவன்  என்ற லட்சுமா..
இயக்குநர்: நன்றி. தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. வாருங்கள்.
ஆண் 3 : [ எழுந்து வந்தபடியே ] நானும் கூட வரத் தயாராக இருக்கிறேன். ஆனால் நாடகத்தை வாசிப்பதோடு நிறுத்தி விடக் கூடாது என்பது எனது நிபந்தனை.
இயக்குநர்: நிபந்தனைகள் எல்லாம் நீங்கள் விதிக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் விருப்பம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
ஆண்   : மேடையேற்றம் தரும் சந்தோசத்தைவிட ஒத்திகைகள் தரும் சந்தோசங்கள் சுவாரசியமானவை. எனவே ஒத்திகையையாவது நடத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..
இயக்குநர்: ஓ.. இவர் ஒரு அனுபவம் மிக்க நடிகர் போல இருக்கிறது. இவரை மாதிரியான ஆட்களால் நடிக்காமல் சும்மா இருக்க முடியாதுதான். முதலில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். நாடகத்தை , மேடையேற்றலாமா ..? ஒத்திகைகள் மட்டுமா..என்பதைப் பிறகு பார்க்கலாம். முதலில் நாடகத்தை வாசிக்கலாம். பிறகு உட்கார்ந்து பேசித் தீர்க்கலாம்.
ஆண்.3 :  நாடகத்த மேடை ஏத்திறது என்ன போனஸ், பஞ்சப்படி, சம்பள உயர்வு மாதிரியான பிரச்சினையா.. பேசித்தீர்க்க.
           [ இதை மெதுவாகச் சொல்லிவிட்டு அறிமுகப் படுத்தும் தொனியில்]

           பழனிக் கூத்தன் ராமச்சந்திரன். பால்.ஆண், பிறப்பு .ஜூலை,28, 1975.தற்காலிக முகவரி  93 ஏழாவது தெரு, அரசு அலுவலர் குடியிருப்பு, பாளையங்கோட்டை.நிரந்தர முகவரி. கபாலீசுவர் கோயில் தெரு , மயிலாப்பூர்,சென்னை.
இயக்குநர்: தங்கள் வரவு நல்வரவாகுக. இன்னும் பலர் வருக.ஆதரவு தருக.
[ குரல் மட்டும் கேட்கிறது]
ஆண்.4 :  இவர் நல்லா பாட்டெல்லாம் பாடுவாரு. கூத்துல வேஷமெல்லாம் கட்டியிருக்காரு . இவரையும் சேர்த்துக்கோங்க..
இயக்குநர்: பாட்டெல்லாம் பாடுனது இருக்கட்டும். பேசுவாறில்ல. அவருக்காக நீங்க பேசுறீங்க. உங்க நண்பருக்காக நீங்க சிபாரிசு செய்றீங்க. நீங்களே வரலாமே. பாட்டெல்லாம் பாடெலயின்னாலும் வாசிக்கத் தெரிஞ்சா போதும். தமிழ் வாசிக்கனும் அவ்வளவு தான். அப்புற ஒன்னு யார் ஒருத்தரும் வர்ரதும் வராததும் அவரவர் விருப்பம். அவரவர் கை. அவரவர் சோறு. அவரவர் வாய். அவரவர் சொல். சரிதானே..
ஆண்.4:   இவர் நவநீத கிருஷ்ணன்.
ஆண்.5:  அவர் கோபால கிருஷ்ணன்.
இயக்குநர்: அவர் கோபால கிருஷ்ணன், இவர் நவநீத கிருஷ்ணன். நாடகத்தில் இரட்டையர்கள்.. இரட்டையாக நாடகம்.. நவநீதகிருஷ்ணன் என்ற கோபாலன். கோபால கிருஷ்ணன் என்ற நவநீதன். நவநீதன்; கோபாலன்.கோவி;நவநீ.
[ இயக்குநர் நடுவில் நிற்க ஆறு பேரும் சுற்றி வந்து கும்மி அடிக்கின்றனர். கும்மியின் முடிவில்  அவர்கள் சிலைகளாக மாறி நிற்க.. அமைதி.. ..]
பெண் :    ( மெது அசைவில் உடல் நெளித்து )  முத்துலட்சுமி என்ற அறிவழகன்.
ஆண் :    அறிவழகன் என்ற இலக்குவன்
ஆண்.2 : இலக்குவன் என்ற பழனி
ஆண்.3 : பழனி என்ற நவநீதன்
ஆண்.4 :   நவநீதன் என்ற கோபாலன்
ஆண்.5 :  கோபாலன் என்ற இயக்குநர்
இயக்குநர் : இயக்குநர் என்ற ராமசாமி.
                [ திரும்பவும் சிலை ரூபம். தன்னுணர்வு வரும்போது]
           அய்யோ.. ஓ.. இந்த ஆசாமிகள் எல்லாம் கை தேர்ந்த நடிகர்களாக இருக்கிறார்களே! நாடக வாசிப்புக்கு அழைத்த என்னையே நடிகனாக ஆக்கி விட்டார்களே! [ கொஞ்சம் முன்னே வந்து மெல்லிய குரலில்] இவர்களைக் கட்டுப்படுத்தி ஆக வேண்டும். இல்லையென்றால் கைமீறிப் போய்விடும். அவர்கள் நாடகத்தை அவர்கள் நடித்துக் காட்டிவிடுவார்கள் [ செருமிக் காட்டி..]
           நண்பர்களே! நீங்கள் ஆறுபேர் தான் முன் வந்துள்ளீர்கள்.வேறு யாரும் முன் வரவில்லை. நாடகவாசிப்புக்குக் கட்டாயம் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒருவர் தேவையில்லைதான். ஒவ்வொருவரும் இரண்டு பாத்திரங்களைக் கூட வாசிக்கலாம். பிரச்சினை ஒன்றும் வந்து விடாது. குழப்பம் நமக்கு இல்லை. நாடக வாசிப்பைப் பார்க்க வந்த இவர்களுக்குத் தான் குழம்பும். எப்படி இருந்தாலும் நாடகத்தை வாசிக்கத் தொடங்கலாம்.
                [ அனைவருக்கும் பிரதி வழங்கப்படுகிறது. கையில் வாங்கிய பிரதியை
ஒவ்வொருவரும் தூக்கிக் காட்டுகின்றனர். அதில் தீர்ப்பு அளிக்கப்படாத வழக்கு எனும் தலைப்பு பெரிதாக எழுதப்பட்டுள்ளது].
           முருகபால்சிங்        - ஆண்.1
           அரசு வழக்குரைஞர்   - ஆண்.2
           நீங்கள் மூணு பேரும் முதலில் முறையே ஐகோர்ட் நாயக், முன்சீப் தேவ், சிவில் யாதவ் பாத்திரங்கள வாசிங்க. அப்புறம் புலிவெட்டி  என்ற புலி , சந்திரகாந்த் அய்யர் என்ற சந்தர், சுகுமாறன் என்ற சுகு என்பதாக மாறிக்கொள்ளலாம். நான் அடைப்புக்குள் இருப்பதை வாசிப்பதோடு நீதிமன்றக்காவலராகவும் இருக்கிறேன்.
           வேற ஆண்கள் யாரும் முன்வரல. அதனால இந்தப்பெண்மணியை நீதிபதியாக அமர்த்தி விடலாம். நாடகத்திலாவது கண்ணியமான பதவிகளைப் பெண்களுக்கு வழங்குவோம்.
பெண் : அப்செக்ஷன் ஸார். உங்கள் வாக்கியங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. நான் பெண்மணி அல்ல. பெண் தான். பெண்மணி என்று சொல்வதன் மூலமாக என்னை அலங்காரப் பொருளாகச் சித்திரிக்கப்பார்ப்பதை ஒத்துக் கொள்ள முடியாது.
இயக்குநர்: யெஸ் யுவர் ஆனர்.
           [ புதிதாக ஒருவர் முன் வந்து]
ஆண்.6.   நான் தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த நாடகத்தை வாசிக்க முன் வந்ததற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். அப்புறம் கதைச் சுருக்கமும் சொல்ல வேண்டும்.
இயக்குநர்: நண்பருடைய விருப்பங்கள் இரண்டையும் முழுமையாக என்னால் நிறைவேற்ற முடியாது.பாதிக்குப் பாதி, பிப்டி பிப்டி நிறைவேற்றலாம். கதைச் சுருக்கம் சொல்ல முடியாது. ஆனால் நாடகத்த வாசிக்க நேர்ந்த காரணத்த சொல்லலாம்.
இயக்குநர்: நண்பருடைய விருப்பங்கள் இரண்டையும் முழுமையாக என்னால் நிறைவேற்ற முடியாது.பாதிக்குப் பாதி, பிப்டி பிப்டி நிறைவேற்றலாம். கதைச் சுருக்கம் சொல்ல முடியாது. ஆனால் நாடகத்த வாசிக்க நேர்ந்த காரணத்த சொல்லலாம்.
ஆண்.6 : எனது வேண்டுகோளை நூறு சதவீதம் நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால் என்னால் உங்களோடு ஒத்துழைக்க முடியாது. முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எந்தக் காரியத்திலும் நான் ஈடுபடுவதில்லை.
இயக்குநர் : உங்கள் கொள்கை வழி நடக்க வழி விடுகிறோம். முழுமையான மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும் இந்த அரைகுறைகளால். நாங்கள் அரைகுறைகள்... வெறும் வாசகர்கள். படைப்பாளிகள் கூட அல்ல. நீங்கள் எங்களோடு ஒத்துழைக்க முடியாமைக்கு நன்றி ( மற்றவர்களிடம்) சரி நண்பர்களே! கொஞ்சம் வார்மிங் அப் செய்து கொள்ளுங்கள். நான் நண்பர் கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு , நன்றியும் கூறி விடை பெற்று வருகிறேன். நண்பருக்காக இல்லை என்றாலும் பார்வையாளர்களுக்கும் அந்த  அதிசயத்தைச் சொல்லித் தான் ஆக வேண்டும். இன்னொரு கோரிக்கையும் இருக்கிறது. நீதிமன்றக்காட்சிகளில் கொஞ்சம் பார்வையாளர்களும் தேவை. இந்தப் பார்வையாளர்களையே அந்தப் பார்வையாளர்களாக ஆக்கி விடலாம். நீங்கள் தயாராகுங்கள்.
[நடிக்க வந்தவர்கள் கைகால்களை அசைத்து வார்ம் அப் செய்கிறார்கள். வசனங்களைச் சொல்கிறார்கள்.
           நாங்கள் அரைகுறைகள்; முழுமையான மனிதர்களுக்கு
           சொல்ல எதுவும் இல்லை.
           நாங்கள் முழுமையானவர்கள்; அரைகுறைகளுக்குச்
           சொல்ல எதுவும் இல்லை.
வார்த்தைகள் வராமல் காற்று மட்டும் வெளி வருகிறது.
திரை விலக்கம் அல்லது ஒளி அமைப்பு மூலம் பின்மேடையும் பார்வை யாளர்களுக்குத் தெரிய வருகிறது. மேடை நீதிமன்றமாகிறது. நடுவில் நீதிபதியாகப் பெண் .கையில் சுத்தியல். கூண்டில் முருக பால் சிங். அரசு வழக்குரைஞர் வினாத் தொடுக்கும் நிலையில் மற்ற மூவரும் பார்வையாளர்களாக. நடுவில் நிற்கும் இயக்குநர் திரும்பவும் சுழல் நாற்காலியின் முன்னால் உள்ள பெஞ்சில் அமர்ந்தபடி]
இயக்குநர்: வாசிக்கப்போற இந்த நாடகம் .. ஒரு இந்தி நாடகம். அந்த நாடகத்தை எழுதின ஆளு பேரு ஹிமேஸ்.. நம்ம ஊர்ல செந்தமிழ் என்று புனைபெயர் வைக்கிற நபர்கள் இருக்கிறது மாதிரி, ஹிமாசலப்பிரதேச எழுத்தாளரான அந்த ஆளு ஹிமேஸ்ன்னு பேர் வைச்சிருக்கார்ன்னு நெனக்கிறேன்.
     இந்த நாடகத்தை ஒரு நாடகவிழாவில நான் பார்த்தேன். பார்த்த உடனே எம் மனசுக்குள்ளே பதிஞ்சு போச்சு. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது .திரும்பவும் முணு நாளைக்கு முன்னாடி கனவிலெ அரங்கேற்றம் நடந்துச்சு. அதில ஆச்சரியம் என்னன்னா.. டெல்லியில பார்க்கிறப்போ இந்தியில நடிச்ச எல்லாரும் கனவில சுத்தமான தமிழ்ல பேசினாங்க. நாடகம் முடிஞ்ச உடனே விழிப்பு வந்துடுச்சு. எந்திரிச்சு கடிகாரத்தப் பார்த்தா நடுசிசி கடிகாரம் டக்.. டக்..ன்னு அடிக்குது. ராத்திரி பன்னிரண்டு மணி வெளியில பார்த்தா கும்மிருட்டு. . அந்தி வானத்தில சின்னதா ஒரு பிறை நிலா. அதுக்கும் பக்கத்தில பளிச்சினு ஒரு நட்சத்திரம்.ரெண்டும் பேசற வசனம்.. கேட்குது.அதே நாடக வசனம்.
ஆண்.3:இந்த ஆளு பெரியகில்லாடியா இருக்கானே..ரொம்ப நல்லா கத விடுறானே..ரொம்ப அளக்கிறான்..
இயக்குநர்: இல்லெ.. கதையில்ல. நெஜம். நெஜமான நிஜம். ஞானசம்பந்தனுக்கு முலைப்பால் ஊட்டிய மாதிரி இயற்கை அன்னை எனக்கு ஆணையிட்டாள். எழுது.. எழுது . இந்தி நாடகத்தைத் தமிழில் எழுது என்று கதறினாள்.கத்தினாள். கெஞ்சினாள்.
           எழுதுகோலை எடுத்தேன்.
           ஏடுகள் இல்லை.
கைகளை அசைத்தேன்..
காற்றில் மிதந்தன விரல்கள்..
காலையில் விழித்தேன்.
காகிதங்கள் முழுவதும் கறுப்பு ..
வார்த்தைகள்.. வார்த்தைகள். வசனங்கள்.. வசனங்கள்.
ஆண்.4.அந்த அபூர்வமான நாடகத்தை மேடையேற்றிவிட வேண்டியது தானே. வெறும் வாசிப்பில் என்ன பிரயோஜனம்.
இயக்குநர்: பிரயோஜனம்.. ? பலன்.? எதில் தான் பிரயோஜனம் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் ஏதொன்றிலும் பெரிய பலன் இருப்பதாகச் சொல்ல முடியாது தான். ஒன்னும் பெரிதாக நடந்துவிடப் போவதில்லை .  ஏதோ பெரிதாக நடந்துவிடப் போவதில்லை. ஏதோ ஒரு ஆத்மதிருப்தி.. பெரிய காரியமொன்றை முடித்து விட்டதான ஒரு பாவனை.. இப்பவும் என்ன.. ? இந்த வாசிப்புக்குப் பின்னால் அந்த ஆத்ம திருப்தியை அடைந்தால் போகிறது. நடிக்கிறவர்களுக்குப் பாவனை செய்து கொள்வது பெரிய வித்தையா என்ன..? பதினைந்து கையெழுத்துப் போட்டு முடிந்தவுடன் ஒரு அதிகாரி அன்று முழுமையாக வேலை செய்து விட்டதாகப் பாவனை செய்து கொள்வதில்லையா... அதுமாதிரி..
ஆண்.5 இந்த ஆளுக்கு நாடகம் போடுறதில ஆர்வமேயில்லையா..? அல்லது இயக்கவே தெரியாதா..?
இயக்குநர்: எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாடகத்தை டைரக்ட் பண்றதோ மேடை ஏத்திறதோ அவ்வளவு சுலபமான வேலை இல்லைங்கிறது எனக்குத் தெரியும்.
     பெரிய பெரிய செட்டப் போடணும் ; ப்ராப்ஸ் எல்லாம் செய்யணும்... விதம் விதமா விளக்குகள் வேணும். உடலைக் கசக்கி ஆடையைப் பிழியற மாதிரி வேலை செய்ற நடிகர்கள் வேணும். அதுக்கெல்லாம் இப்ப யாரு தயாரா இருக்கா.. அப்புறம் இந்த டி.வி. வேற வீட்டுக்குள்ளாற வந்து உட்கார்ந்துக்கிடுச்சா..நாடகம் பார்க்க ஆளும் வரமாட்டேங்குது.. நாடகம் போட்டா ஸ்பான்சரும் கிடைக்க மாட்டேங்குது.. அப்புறம் பவுண்டேசன்காரங்கிட்டயோ.. மல்டி நேஷனல் கம்பெனிகள் கிட்டயோ போயி நிக்கணும்.
           சரி . அந்தக் கதையெல்லாம் போதும்.. நம்ம நண்பர்கள் ரெடியாயிட்டாங்க...? (திரும்பி) ஓ. நாடக வாசிப்பை .. ஒரு ஒத்திகையாவே மாத்தி விடுவாங்க போல இருக்கே.. அப்ப எனக்கு வேலையே இல்லையா. காலியா இருக்கிற காவலர் பதவியெக் கைப்பற்றி உட்கார்ந்துட வேண்டியது தான்.. அப்பப்ப கொஞ்சம் அதிகாரம் பண்றா மாதிரி அடைப்புக் குறிக்குள்ள நுழைஞ்சுக்கிட வேண்டியது தான். நன்றி.. நன்றி.. இதோ தொடங்குகிறது.
                தீர்ப்பளிக்கப்படாத வழக்கு எனும் நாடக வாசிப்பு
    
காட்சி:2
திரும்பவும் காட்சி தொடங்கும்போது நீதிமன்றமாக இல்லை மேடை. காட்சி 1 இல் இருந்த நிலை. நடிகர்களும் இயக்குநரும் வட்டமாகக் குனிந்து உள்ளனர். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒன்றாகக் ஹெபிப்ரே சொல்வது போல கையை உயர்த்திச் சொல்கின்றனர். ஒருவர் பியர் பாட்டிலிருந்து பீச்சி அடிக்கிறார்.
இயக்குநர்  : அமைதி ! அமைதி !! மன்னிக்க வேண்டும் நண்பர்களே! நன்றி ! நன்றி !! நாடகம் முடிந்தது.
பெண்      : நாடகம் ஒன்னும் நடக்கல. நடந்தது ஒத்திகை தான்.
ஆண்.1    : ஒத்திகை கூட இல்லை. வெறும் வாசிப்புத் தான். ஜஸ்ட் ப்ளே ரீடிங்.
ஆண்.2    : அதுக்கே இவ்வளவு கொண்டாட்டமும் களியாட்டமும்
இயக்குநர் : ஆமா .. ஆமா.. நடந்தது நாடகம் இல்லை.. ஒத்திகையும் இல்லை.. வெறும் வாசிப்பு .. அவ்வளவு தான்.நான் நாடகத்தை நடத்த எந்த ஏற்பாடும் பண்ணல. உண்மையில நாடகத்த நடத்தத் திட்டமிட்டிருந்தா இந்த இடத்தில நடத்தியிருக்க மாட்டேன். என்னுடைய நாடகத் துக்குத் தேவையான மேடை இதுவல்ல. அதைப்பார்க்கிறதுக்குப் பார்வையாளர்கள் இருக்க மாட்டாங்க. பங்கேற்பாளர்கள் மட்டும் தான் இருப்பாங்க. நாடகம் நடந்ததா நினைச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லே.
ஆண்.3    : நம்மெ இயக்குநர் வெறும் வெத்து வேட்டு ஆசாமிங்கிறது இப்போ புரிஞ்சு போச்சு. பயம் . மனுசனுக்கு இவ்வளவு பயம் ஆகாது. அதுவும் நாடகக் கலைஞனுக்குப் பயமே இருக்கக் கூடாது. சமூக மாற்றத்துக்கான நாடகம் போட்டு மேடையில செத்துப் போன எத்தனையோ நாடகக் கலைஞர்களோட வரலாறு இருக்கு. வரலாறு நம்மை விடுதலை செய்யும்.
ஆண்.4    : இல்லை. வரலாறு கொலைதான் செய்யும். செய்ற கொலைகளுக்கு நியாயமும் சொல்லும்.வரலாற்றின் பேரில நடந்த - நடக்கிற கொலைகளுக்கு அளவே கிடையாது. வரலாறு .. எல்லாவரலாறுகளும் கொலைகளத் தான் தூண்டுகின்றன. மதத்தின் வரலாறு . இனத்தின் வரலாறு.மொழியின் வரலாறு .சாதிகளின் வரலாறு. தத்துவத்தின் வரலாறு. இன்னும் உள்ள எல்லா வரலாறுகளும் வரலாற்றைச் சொல்லி நடக்கிற கொலைகளூக்கு யாராவது பொறுப்பேற்றுக் கொள்கிறார்களா..?
இயக்குநர் : இப்போ நடக்கிறது நாடகம் இல்லை. இவங்க பேசுறது நாடகப் பிரதியில இல்லை.இவை எதுக்கும் நான் பொறுப்பும் இல்லை.
ஆண்.3    : நீங்க பொறுப்பத் தட்டிக் கழிக்க முடியாது. இந்த நாடகத்த மேடையேத்தித் தான் ஆகணும். மேடையேத்தறதுக்கான செலவுகளை நான் ஏத்துக்கிறேன். என்னோட சமூகப் பொறுப்பக் காட்டறதுக்குக் கிடைச்ச வாய்ப்பா இத நான் கருதுகிறேன். என்னை மாதிரி சமூகப் பொறுப்புள்ள மனிதர்கள் இங்கேயே நிறையப் பேர் இருப்பாங்க. அவங்க கிட்டேயிருந்து நிதி பெற்றுத் தர்ற பொறுப்பும் என்னோடது.
பெண் : ஆமா. நம்பிக்கை வேணும். மக்கள் மேல நம்பிக்கை வேணும். அவங்க மேல நம்பிக்கை வைக்கணும். நல்ல விசயங்களை மக்கள் ஆதரிப்பாங்க. அந்த நம்பிக்கையை கைவிட்டுட்டா மனுசங்க உயிர் வாழ முடியாது.

ஆண்.1    : இந்த நாடகத்த மேடையேத்திறதாக நீங்க முடிவெடுத்தா.. அதுக்கு நா ஒத்துழைக்க முடியாது. நடிக்கிறதில எனக்கு விருப்பம் இல்லேங்கிறதானால இதச் சொல்லல. இந்த நாடகத்தில நடிக்கிறதுக்கான வாய்ப்பே இல்லைங்கிறதானால அப்படிச் சொல்றேன்.
ஆண்.3    : நடிக்கிறதுக்கு வாய்ப்பு இல்லன்னு இல்லேன்னு எப்படிச் சொல்ல முடியும். ஒரு நல்ல நடிகன் தனக்குக் கிடைக்கிற சின்ன ரோல்ல கூடத் தன் திறமையை நிருபிக்கலாமே.
ஆண்.3    : நடிகனோட நடிப்புக் கருவிகள் மூணுன்னு சொன்ன ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் கூற்று ஞாபகம் இருக்கில்ல. பாடி (body ) மைண்ட் (mind ) வாய்ஸ் (voice )ன்னு. நடிகன் அவனோட உடலையும் மனசையும் பயன்படுத்திற அளவுக்குத்தான் குரலையும் பயன்படுத்தனும். இந்த நாடகத்தில உடலையும் மனசையும் பயன்படுத்த முடியுமான்னு தெரியல. என்னோட குரல் மட்டும் தான் இதுக்குத் தேவைப்படுது.
பெண் : அப்ப இந்த நாடகத்த வானொலி நாடகம்னு சொல்ல வர்றீங்களா.
ஆண்.3    :நாடகத்தெ நடிகனோட பார்வையிலிருந்து மட்டும் பார்க்கிறது சரியில்லைன்னு தோனுது. பார்வையாளர்களோட கோணமும் முக்கியமுன்னு தோணுது. பார்வையாளர்களுக்கு என்னவிதமான உணர்வுகள் அந்த நாடகம் உண்டாக்கும்னுங்கூடப் பார்க்கனும். இந்த நாடகத்தப் பார்க்கிற பார்வையாளர்கள் அவங்களோட மனச பயன்படுத்துவாங்கன்னு நினைக்கிறேன்.
ஆண்.4    :அரசியல் பிரச்சினைகளைப் பேசற நாடகத்தெ விரும்பாதவங்களோட வாதம் தான் நண்பரோட வாதம். ( ஆண்.1 நோக்கி )
ஆண்.1    :இப்படி மொண்ணைத்தனமாகக் குற்றஞ்சாட்டினா என்னால ஒங்க கூடப் பேச முடியாது. அதிகாரத்தை வார்த்தைகள் மூலமாத்தான் அம்பலப்படுத்த முடியும்; அடக்கி வைக்க முடியும்னு நீங்க நினைக்கலாம். எனக்கு அந்தக் கருத்து உடன்பாடானது இல்லை.
ஆண்.5    : நமக்குள்ள பிளவுகள் உண்டாகிற வாதங்கள நிறுத்திக்கிடலாமே.
ஆண்.2    : இந்த நாடகம் வெறும் வார்த்தைகளா இருக்கு. பணம் திரட்ட முடியாதுங்கிறது மட்டும்தான்  
            பிரச்சினையின்னு நினைக்கல.. வேற பிரச்சினைகளும் இருக்கிறதா எனக்குத் தோணுது.
இயக்குநர்  : என்ன? செட்.. லைட்.. மேக்கப் .. அந்த மாதிரி பிரச்சினைகளா..? அதெல்லாம் பிரச்சினைகளே இல்ல. செட்டுப் போட கலைஞர் எஸ்.பி. சீனிவாசன்  சாரைக் கூப்பிடலாம். அவர் இல்லையின்னா வேலு சரவணனை கூப்பிட்டுக்கிடலாம். சினிமாவில பிஸியாயிருப்பாரு.மேக்கப் ஆர்டிஸ்ட்டாவும் வைச்சிக்கிடலாம். லைட்டிங் டிஷைனுக்கு டெல்லி ரவீந்திரன் இல்லயின்னா திருச்சூரில இருந்து கோபிநாத்..... பெரிய கில்லாடிங்க.   இந்திய அளவில பேர் வாங்கின ஆசாமிகள்.ம்யூசிக் போடனும்னாக் கூட ஆள் இருக்கு..முனைவர் அரிமளம் பத்மநாபன். பாண்டிச்சேரியில இருக்கார். பெரிய கலைஞர் மட்டுமில்ல. ஸ்காலருங் கூட.
ஆண்.4    : தமிழ்ல நாடகம் போடறதுக்கு இங்கிருந்தெல்லாம் ஆட்கள் வரவேண்டியிருக்கா..? அப்போ நாடகம் பெரிய விசயம் தான்.
இயக்குநர்  : நவீனத் தமிழ் நாடகம்னா சும்மாவா.. அது ஒரு மெகா பட்ஜெட் படம் எடுக்கிற மாதிரி தான். சினிமா கூட போட்டி போடனும்னா இது எல்லாம் செஞ்சாகனும்.
ஆண்.2    : நான் இந்த மாதிரி பிரச்சினைகளைச் சொல்லல. நாடகத்தப் பார்க்கிற பார்வையாளர்கள் எப்படி எதிர்வினை புரிவாங்கங்கிறதுதான் எனக்குப் பிரச்சினை.
ஆண்.3    : பார்வையாளர்கள் அப்படி என்ன பெரிசா செஞ்சிடப் போறாங்க. காகித அம்பு எறிவாங்க. இல்லையின்னா நடிகர்கள் மேலே அழுகல் முட்டை, சாணி எறிவாங்க. அந்த வரலாறெல்லாம் நமக்குத் தெரியும் தானே.. இன்னொரு வரலாறும் இருக்கு. மேடையிலேயே கைது பண்ணி அழைச்சிட்டுப் போவாங்க. வெள்ளைக்கொக்குகளைப் பற்றிப் பாடி மேடையிலேயே கைதான நாடகக்கலைஞர்கள் பற்றித் தெரியாதா.? வரலாறு முக்கியம். திரும்பவும் சொல்றேன். வரலாறு நம்மை விடுதலை செய்யும். வரலாறு நம்மை..
ஆண்.4    : திரும்பவும் சொல்றேன். வரலாறு கொலைகளைத்தான் செய்யும். லாக்கப் சாவு தான் உங்க விருப்பம் என்றால் நீங்க இந்த நாடகத்தை நடிக்கலாம்.மேடையில நடத்தலாம். திரும்பவும் வரலாறு செய்த கொலைகளை நினைச்சுப் பாருங்க. அதிகாரத்தின் பேரால் கட்டப்படும் கோபுரங்கள் வரலாற்றைப் படைக்கப்பார்க்கின்றன.விகாரைகள் கோயில்களாக மாற்றப்பட்டன. கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர்களின் நோக்கமும் வரலாறுதான்.

ஆண்.2    : திரும்பவும் மசூதிகளை இடித்துக் கோயில் கட்ட நினைப்பவர்களும் வரலாற்றின் பேரால் தான் செயல்படுகின்றனர்.
ஆண்.4    : ஆம். வரலாற்றின் பேரால் தான் இடிக்கப்பட்டன. வரலாறு இட்ட கட்டளையால் தான் யூதர்கள் கொலை செய்யப்பட்டார்கள். நந்தனார் எரிக்கப்பட்டது எதன் பேரில். சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டதற்குக் காரணம் வரலாறு இல்லையா. பண்பாட்டின் வரலாறுகள் தான் பெண்களைத் தேவதாசிகளாகக் கோயில் பெண்டுகளாக நடனம் புரிய வைத்தது. அந்த வரலாறு தான் விதவைகளாக மொட்டையடித்தது. அவளை ஆண்களை எரித்த தீயில் உடன்கட்டை ஏறச் சொன்னது.  பழி வாங்குவதன் மூலம் வரலாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.

ஆண்.2    : வரலாறு செய்த கொலைகளைத் தத்துவம் விளக்க முடியும் தானே தத்துவத்தின் பிரதிநிதிகளாக நின்று நாமெ இந்த நாடகத்தெ நடத்திறதப் பத்தி யோசிக்கலாம்.

ஆண்.1    : கலையின் சுதந்திரம் காக்கப்படும் என்பதில் உள்ள நம்பிக்கை எனக்குப் போகல. கலையின் தத்துவம்; தத்துவத்தின் கலை . இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத ஒன்று.
ஆண்.4    : இருக்கிற சட்டங்கள் போதாதென்று புதியபுதிய சட்டங்களைத் தயாரிக்கும் இந்திய சமூகம்- கலையின் சுதந்திரத்தை மதிக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை.
ஆண்.3    : சட்டங்களை இயற்றுவது சமூகமா.? ஒருசில நபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் அதிகார பீடங்கள் உருவாக்கும் சட்டங்களுக்கு சாமானிய மனிதர்களும் சமூகமும் எப்படி பொறுப்பாக முடியும்.
ஆண்.5    : இயற்றப்பட்ட சட்டங்கள் என்னவென்று தெரியாமல் இருப்பதும் எதற்கு என்று கேட்காமல் இருப்பதும் பொறுப்புள்ள மனிதர்களின் இயல்புகள் தானா..?
ஆண்.3    : மௌனம் தான் மக்களின் பதில்.
           மௌனம் தான் அவர்களின் ஆயுதம்.
இயக்குநர் : திரும்பவும் சொல்கிறேன். இது நாடகம் இல்லை. நாடக ஒத்திகையும் இல்லை. நாடக வாசிப்பும் கூட இல்லை. நான் எழுதிய நாடகப் பிரதியில இவையெதுவுமே இல்லை. இவை எதற்கும் நான் பொறுப்பும் இல்லை. ஏ.. மங்களம் பாடுப்பா.
           நன்றி.. என் நாடகத்தப் பார்க்க வந்த .. இல்ல இல்ல கேட்க வந்த உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் காதலிகளுக்கும் மனைவிகளுக்கும், காதலன்களுக்கும் கணவன்மார்களுக்கும் மங்களம். மங்களம். சுபமங்களம். ஜெயம்.ஜெயம்.. சுபோ ஜெயம்.
ஆண்.6    : [ நடிக்க வந்து நடிக்காமல் போனவர்]  உங்க சுபோ ஜெயம் ஒண்ணும் தேவையில்லை. நாடகம் இன்னும் முடியல. தீர்ப்பு இன்னும் வழங்கப்படலயே .. அப்புறம் எப்படி நாடகம் முடியும்.தீர்ப்பு வழங்கிறதுக்காக அடுத்த நாள் நீதிமன்றத்தக் கூட்டுங்க.
இயக்குநர்  : அது வந்து.. அது வந்து.
பெண்      : நண்பரே ! மன்னிக்க வேண்டும். எனக்குத் தரப்பட்ட பிரதியில் வசனம் அவ்வளவு தான் இருக்கு.
           நீதிமன்றத்தக் கூட்டினா நான் எதை வாசிக்க முடியும். நான் நடிகைதான். அதுவும் வாசிக்க வந்த நடிகை.எழுதப்படாத தீர்ப்பை என்னால வாசிக்க முடியாது. [ பார்வையாளர்களைப் பார்த்து] நானே தீர்ப்பு எழுத முடியுமா..? தீர்ப்பு எழுதனும்னா பெரிய பெரிய சட்ட புத்தகமெல்லாம் படிச்ச நீதிபதியா இருக்கணும். இல்லையின்னா தன்னோட தரப்பு நியாயங்களை எழுதித் தள்ளுற நாடக ஆசிரியனா இருக்கணும்.நான் ரெண்டும் இல்லையே . வெறும் நடிகை தானே.
இயக்குநர்  : [நபர் ஆறிடம்] நண்பரே ! நாமெ ரெண்டு பேரும் இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வருவோம்.
           தீர்ப்பு எழுதற பொறுப்ப இந்தப் பார்வையாளர்கள் கிட்ட விட்டுடுவோம். நாளைக்கு யாராவது
           தீர்ப்பு எழுதிக்கிட்டு வந்தா அத வாசிச்சிடலாம்.
ஆண்.5    : ஒன்றுக்கு மேற்பட்ட தீர்ப்பு எழுதப்பட்டிருந்தா என்ன செய்வீங்க.
இயக்குநர்  : அது ஒன்னும் பிரச்சினையில்ல. மெஜாரிட்டித் தீர்ப்பு என்னவோ அதெ ஏத்துக்கிடுவோம். அதுதானே மக்களாட்சித் தத்துவம். அது தந்துள்ள ஒப்பற்ற வழி முறை.
ஆண்.4    : சமமான முடிவுகள் இருந்தா அப்ப என்ன செய்வீங்க.
இயக்குநர் : விடுதலைக்குப் பாதியும் தண்டனைக்குப் பாதியும். தண்டனைக்கு நூறு ஓட்டு.விடுதலைக்கு நூறு ஓட்டு. அப்போ சிக்கல் தான்.
ஆண்.4    : 
அதில என்ன சிக்கல் இருக்கு. குலுக்கிப் போட்டு சீட்டு எடுக்கலாம்.
பெண் : 
இதென்ன பரிசுப் போட்டியா.. குலுக்கல் நடத்த .. அதுக்குப் பதிலா காசு சுண்டிப் போடலாம். தலைவிழுந்தா தண்டனை ; வால் விழுந்தா விடுதலை.
இயக்குநர் : 
தண்டனைக்குத் தலை விடுதலைக்கு வால் தலைக்குத் தண்டனை வாலுக்கு விடுதலை ஆகா என்ன ஒலிநயம்.. அற்புதம். கவிதை. கவிதை. [ சுற்றிச் சுற்றி வந்து ஆடுகின்றனர். ஆட்டத்துக்கு ஏற்ற பாடலாக 'தலைக்குத் தண்டனை; வாலுக்கு விடுதலை ' இருக்கிறது. பாடலின் ஒலி குறையக் குறைய ஒளி குறைகிறது.
-நிறைவு-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்