திரும்பத்திரும்ப வரும் கண்ணகி :

எல்லாச் சின்னங்களும் ஆபத்தானவை; இனம், இன உணர்வு உள்பட என்று நான் சொன்னால் பலர் சிரிக்கிறார்கள். ஏதேனும் ஓர் அடையாளம் தேவை என்கிறார்கள். இப்போது கண்ணகி சில தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம், எப்படி? அவள் கற்புக்கரசி. கணவன் செய்த பச்சைத் துரோகத்தை மன்னித்து ஏற்றவள். தவறாக அவன் கொல்லப்பட்டபோது அரசனிடம் சென்று நீதி கேட்டவள். அவளது கற்பே அவளது பலம். கண்ணகியை நவீனப் பெண் தனது அடையாளமாக ஏற்க மாட்டாள் என்று நான் சொன்னபோது ஒரு எழுத்தாள நண்பர் சொன்னார். ‘ நீங்கள் பார்ப்பணர்; அதனால் தமிழ்ப் பண்பாடு புரியாது உங்களுக்கு’
தொல்காப்பியரும் தமிழுணர்வும், இந்தியாடுடே,2003 ஜனவரி,29,
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் எழுதும் பத்தித் தொடரில் இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பின் முன்னாள் ‘காப்பி எடிட்டர்’ வாசந்தி எழுதிய ஆதங்க வரிகளின் கடைசிப் பகுதி இவை. இவை அச்சிட்டு வெளியான அன்று – இந்தியா டுடே இதழ் கடைகளில் கிடைத்த நாளான 22-01-2003 அன்று, வாசந்தி நான் பணியாற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புத்தகக் கண்காட்சியின் தொடக்க நாள் ‘ சிறப்புரைக்காக’ வந்திருந்தார். அந்தக் கண்காட்சி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இந்துக்கல்லூரிக் கல்விக் கழகத்தின் செயலருமான அ.லெ.சுப்பிரமணியன், இந்தப் பல்கலைக்கழகம், எங்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. சுந்தரம்பிள்ளையின் பெயரால் உள்ளது. மனோன்மணியம் எழுதிய சுந்தரம்பிள்ளை பணியாற்றிய இந்தக் கல்வி நிறுவனத்தில்தான் ,’பாரதியும் புதுமைப்பித்தனும்’ படித்தார்கள் என்று கூறிப் பெருமையுடன் பேசி முடித்தார். அவரது பேச்சு ‘மனோன்மணியம்’ என்ற நாடகத்தை எழுதிய சுந்தரம்பிள்ளையில் தொடங்கியது. சுந்தரம்பிள்ளையின் அடையாளத் தொடக்கம் மனோன்மணியம்.

பின்னர் பேச வந்த வாசந்தி, ‘ பாரதியார் பயின்ற இடம்; புதுமைப்பித்தன் வாசித்த இடம்’ என்று கேள்விப்பட்டவுடன் அந்தத் தரையை மிதித்ததற்காகப் புல்லரித்துப் போனதாகப் பேசினார். லண்டனில் வெஸ்ட் மினிஸ்டர் வீதியில் எழுத்தாளர்கள் அடையும் மகிழ்ச்சியும் புல்லரிப்பும் போன்றது இது என்று பேசினார். இலக்கியத்தில் வாசந்தியின் அடையாளத்தொடக்கம் பாரதி. அதன் பிறகு புதுமைப்பித்தன். நவீன இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒரு படைப்பாளியின் அடையாளம் இவ்வாறு இருக்கிறது என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அந்த வகையில் அன்று வாசந்தியின் பேச்சு நீண்டிருந்தால் கூட்டத்தில் இருந்தவர்கள் ‘அப்படி’ முணுமுணுத்திருக்க மாட்டார்கள் ‘எப்படி’ முணுமுணுத்தார்கள் என்று மேடையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் வாசந்திக்குக் கேட்டிருக்க நியாயம் இல்லை. என்றாலும் அவருக்குச் சொல்லாமல் விடுவது சரியாகவும் இல்லை. என்னை அவர் ‘எழுத்தாள நண்பர்’ என்று குறிப்பிட விரும்ப மாட்டார் என்றாலும் சொல்ல வேண்டியது எனது கடமை.

“ என்ன இருந்தாலும் பாருங்க.. அவங்க மட்டும் இப்படிப் பேசறதுக்குக் கூச்சப்படுறதே இல்லை. தான் ஒரு பாப்பாத்திங்கறதக் காட்டுறதில அவங்களுக்கு இன்னமும் சந்தோசமும் அகம்பாவமும் இருக்கத்தான் செய்யுது.”
இதுவும் இது போன்றதுமான முணுமுணுப்புகள் என் காதில் நிரம்பவே விழுந்தன. இப்படி முணுமுணுக்கும் படியாக என்ன பேசினார் என்று தெரிய வேண்டுமென்றால், எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டைத்தான் திரும்பக் கேட்க வேண்டும். எல்லோரும் அதைக் கேட்பதோ பார்ப்பதோ சாத்தியம் இல்லை என்பதால் சாராம்சத்தையும் பேச்சின் போக்கையும் மட்டும் கூறுகிறேன்.

வாசந்தியின் குடும்பம் ஒரு மகா படிப்பாளி குடும்பம். அவரது தலைமுறையில் மட்டுமல்ல; பல பரம்பரைகளாகப் படித்த பண்டிதக் குடும்பம். சமஸ்கிருதமும் ஆங்கிலமும் கற்றுக் கரைபுரண்டோடிய ஒரு குடும்பத்தின் வாரிசு அவர்.’ – இதுதான் அவரது பேச்சின் சாராம்சம். அந்தச் சாராம்சமான பேச்சு எப்படி நீண்டது என்று கேட்கிறீர்களா..? இப்படித்தான்.
அவர் இதைத்தான் படிக்க வேண்டும் என்று தேர்வு செய்தெல்லாம் படிக்கவில்லையாம். வீடெங்கும் புத்தகங்கள்.. படுக்கையின் இருபுறமும் நூல்களின் குவியல்கள்.. இப்படியாக விரிந்து பரவியது அவரது படிப்பு மட்டுமல்ல. அவரது அருமை மகன்களின் படிப்பு விஸ்தீரணமோ அதனையும் தாண்டியது. அவரது மூத்த மகன் எட்டு வயதாக இருக்கும்பொழுது ‘ குழந்தை வளர்ப்பது எப்படி?’ (ஆங்கிலத்தில் தான்) என்ற நூலைப் படித்தாராம். அந்த நூல் அவரது இரண்டாவது குழந்தையை- பிறக்கப்போகும் குழந்தையை வளர்ப்பது எப்படி? என்று தெரிந்து கொள்வதற்கு வாங்கியது. மூத்தவன், வீட்டில் இருந்த எல்லாப் புத்தகங்களையும் படித்து விட்டு இந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்ததைப் பார்த்துப் புல்லரித்துப் போனாராம் வாசந்தி. தனது தாத்தா, தந்தை, தனது மகன்கள் எனத் தன் பரம்பரையே ஒரு மகாப்படிப்பாளி குடும்பம் எனப் புளகாங்கிதத்துடன் சொல்லி முடித்த வாசந்தியின் கதையைக் கேட்ட பார்வையாளர்களில் பலரும், ‘இப்படியான குடும்பத்தில் பிறந்திருக்க என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்’ எனப் புளகாங்கிதம் அடைந்தார்கள். இப்படிப் புல்லரித்துப் போகவோ, புளகாங்கிதம் அடையவோ தெரியாதவர்கள் அப்படி முணுமுணுத்திருப்பார்கள் என்பது வாசந்திக்குத் தெரியாதா? என்ன..?

கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை? .. படிப்பின் சக்தியும் ஆற்றலும் அறியாத சோத்தால் அடித்த பிண்டங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று அடுத்த இந்தியா டுடே பத்தியில் எழுதக் கூடும். ‘இது ஒன்றும் சுய தம்பட்டமோ.. பரம்பரைப் புராணமோ அல்ல.. அறிவின் புனிதம் பற்றிய ஆச்சரியம்’ என்று உணர்த்தக் கூடும். ‘ அறிவு புனிதமல்ல; அறிவே அதிகாரம்’ என்று நீங்கள் திரும்பவும் முணுமுணுத்தாலோ.. உங்களைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கியும் ஒதுக்கியும் கூடப் போய்விடலாம்..

வாசந்தியின் அடையாளம் படிப்பு… புத்தகங்கள்.... தேடல்கள்.. சின்னங்கள் எழுத்தாணிகள், பேனாக்கள், மைக்கூடுகள், ஆனால் எனது இளமைப்பருவத்தை நினைத்துப் பார்த்தால்… எட்டு வயதில் ஆட்டு மந்தைகளை ஓட்டி வந்த அய்யாவின் பின்னால் ஓடி, ஆட்டுக்குட்டியைப் பிடித்து கொடாப்புக்குள் விட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஆயுத பூஜையன்று, கொத்துவானையும் கருக்கரிவாளையும் வைத்து வணங்கியதும், பொங்கலுக்கு கோழி அறுத்து, வெண்பொங்கல் வைத்துக் காப்புக் கட்டியதும்தான் மனதில் ஆடுகிறது. எங்கள் வீடெங்கும் கேட்ட குரல் ஆட்டுக்குட்டிகளின் குரலும் கோழிகளின் கூக்குரலும்தான். எனது அடையாளங்கள் நேர்க்கால்,கலப்பை, கொத்துவான்கள், மண்வெட்டிகள்,; எனது சின்னங்கள் கமலைக்கல்லும் வீச்சரிவாளும். இந்த அடையாளங்கள் பற்றி வெளியே சொல்ல எனக்குக் கூச்சமாக இருந்தாலும் தயக்கமாக இல்லை. ஏனென்றால் உழைப்பு –உடல் உழைப்பு ஒன்றும் அவமானப்பட வேண்டிய ஒன்று அல்ல என்று நினைக்கத் தொட்ங்கி விட்டதால்.
ஆனால் இங்கே பலரது அடையாளங்கள் வெளியில் சொல்லும்படியாக இல்லையே. ’ சேவைத்தனம் அல்லது அடிமைத்தனம்’ என்பதைத் தங்களின் அடையாளங்களாக முன்வைக்க யார்தான் முன்வருவார்கள்? ஒதுக்கப்பட்டதையும் ஒதுங்க வேண்டியிருந்ததையும் பெருமையாகவோ, தயக்கமில்லாமலோ சொல்லிக் கொள்ள முடியுமா? எனது அடையாளங்கள் ‘ பீவாளி’யாகவும் ‘மூத்திரச்சட்டி’யாகவும் இருந்ததைச் சொல்லத் தயங்காமல், அதையே புனிதமானதாகச் சொல்லிக் கொள்ள முடியுமா? எதிராளிகளின் தூக்கத்தைக் குலைக்கும் மாட்டுத்தோல் பறையும் பன்றிவார் வில்லும் எங்களது சின்னங்கள் என்று வேண்டுமானால் தைரியமாகச் சொல்லலாம்.

இந்தியச் சூழலில், இப்படியான அடையாளங்களையும் சின்னங்களையும் அவரவர்கள் விரும்பியா எடுத்துக் கொண்டார்கள்? அவர்கள் மேல் சாத்தி, உள்ளே இறங்கித் தங்கிக் கொண்டது அந்தச் சாதீயம் தானே? ஒவ்வொரு அடையாளச் சின்னங்களையும் அவரவர்களின் பிறப்போடு சேர்த்தே எழுதி வைத்தது அந்த வர்ணாசிரம (அ)தர்மம் தானே?.’ஒவ்வொருவனும் எவ்வாறு பிறக்கிறான்; எவ்வாறு உருவாகிறான்; எவ்வாறு வாழ்கிறான்; எவ்வாறு சாகிறான்? ‘ என்று பார்த்து அடையாளம் தரப்பட்டால், அதை ஏற்றுக் கொள்ள இங்கு யாருக்கும் தயக்கம் இருக்காது. ஆனால் அறிஞன்(?) மனு எழுதிய ஸ்மிருதி என்ன சொல்கிறது? ‘அவனது பிறப்பு இது; அதனால் இப்படித்தான் உருவாக வேண்டும்; இப்படித்தான் வாழ வேண்டும்; இப்படித்தான் சாக வேண்டும் என்றல்லவா விதிக்கிறது.
‘இந்த மாதிரியெல்லாம் விட்டுவிடக் கூடாது; ஒவ்வொருவரின் காரியங்களும் அதனதன் அளவில் புனிதமானது’ என அருள் பாலிக்கிற ஆன்மீகக் குரு பேசுவது அடையாளம் பற்றியல்லாமல் வேறென்ன..? ‘உங்கள் சின்னங்கள் அழிந்துவிடாதபடி காப்பாற்றுங்கள் ’ என்று கடற்கரை மணலில் உரத்து முழங்கும் சாமியார்கள் பேசுவது அடையாள அரசியல் அல்லாமல் ஆன்மீகச் சொற்பொழிவுகளா? அவரிடம் போய் நவீனப் பெண்ணியம் பேசிவிடத்தான் முடியுமா? ‘ அடையாளங்களே வேண்டாம்; எல்லாச் சின்னங்களும் ஆபத்தானவை’ என்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், உங்களோடு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுவார். ‘ நீங்கள் பெண்களே இல்லை என்றான பின்பு உங்களிடம் பேச ஒன்றும் இல்லை’ என்று ஒதுங்கிக் கொள்ளும் மடாதிபதிகளிடமும் குருமார்களிடமும் சாமியார்களிடமும் ‘நவீனப் பெண்களுக்கு’ சச்சரவும் இல்லாமல் போய்விடுகிறது. அந்த ஆன்மீகவாதிகள் பெண்கள் நலனுக்காகப் பேசுவன எல்லாம் ஆபாசம் அல்லாமல் வேறென்ன? தமிழ்நாட்டில் –இந்தியாவில் செயல்படும் மாதர் சங்கங்களும் பெண்ணுரிமை இயக்கங்களும் மடங்களுக்கு எதிரான போராட்டங்களில் இறங்கினார்கள் என்றால், கண்ணகி சிலைகளைத் தூக்கிக் கொண்டு அலைபவர்கள் அவர்களோடு சேராமல் பின் தங்கி விடுவார்களா என்ன?
‘ஒரு நொடியில் உங்களால் யோசித்துவிட முடியும்தான். அதையே திருப்பிப் போட்டு இன்னொரு நொடியிலும் யோசித்துப் பாருங்கள் வாசந்தி அவர்களே! உங்களுக்குப் புரியாமல் போகாது. பார்ப்பணர்கள் புரிந்து கொள்ள இயலாதவர்கள் என்றெல்லாம் சொல்லி, என்னை முட்டாளாகக் காட்டிக் கொள்ளத் தயாராக இல்லை. பார்ப்பணர்கள் புத்திசாலிகள்தான். எல்லாக்காலத்திலும் எல்லா இடத்திலும் புத்திசாலிகள் தான். புரிந்து கொண்ட எல்லாவற்றையும் சொல்லிவிடவும் தயாராக இருக்க மாட்டார்கள்; எதிர்க்க வேண்டிய எல்லாவற்றையும் எதிர்த்து விடவும் மாட்டார்கள். அதுவும் கூட புத்திசாலித்தனம்தான்.

பிராமணர்களின் அடையாளம் அறிவு; சின்னம் எழுதுகோல். இடைநிலைச் சாதிகளின் அடையாளங்கள் உடல் உழைப்பு; சின்னங்கள் ஆயுதங்கள். ஒதுக்கப்பட்ட சாதிகளின் அடையாளம் சேவை; சின்னங்கள் கருவிகள். ஆம். ஒருவர் உருவாகும் முறைதான் அடையாளம். நவீனச் சொல்லாடல் அதனைத் தன்னிலை (Subjectivity) எனச் சொல்லக் கூடும். தனது ’எதிராளி’க்குக் காட்ட விரும்புவது சின்னம். அடையாளங்களும் சின்னங்களும் ஒன்றல்ல; வெவ்வேறானவை. இந்த வகையில் கண்ணகி அடையாளம் அல்ல; பண்பாட்டின் சின்னம். தவறு செய்யும் அதிகாரம் சிலையாக நிற்கும் கண்ணகியைக் கண்டு அஞ்சுகிறது என்ற வகையில் அந்தச் சிலை சின்னமாகிறது. அந்தச் சிலையை அகற்ற தமிழர் அல்லாதவர்கள் முயன்று வெற்றி அடைந்து விட்டார் என்றால் பறிகொடுத்தவர்கள் அடைவது இழப்புதானே? அந்த இழப்பு, அவர்கள் உருவாக்கிய ஒன்றின் இழப்பு என்றாகிறபோது, அடையாள இழப்பு என்று கருதாமல், வேறெப்படிக் கருத முடியும்? இன்று சிலையாக நின்று அதிகாரத்தைக் கலங்கடித்த கண்ணகி அன்று, கதையின் பெண்ணாக – கதாமாந்தராக இருந்து தவறாக நீதி வழங்கிய நெடுஞ்செழியனின் அதிகாரத்தைத் தவிடுபொடியாக்கினவள் தானே. தங்கள் அடையாளத்தை இழிவு செய்த மொழியை அவமதித்த கனகவிசயர்களின் முடித்தலை நெறிக்கத் தூண்டுகோலாக இருந்தவள் கண்ணகிதானே… இவள்தான் .. இந்த குணங்கள் கொண்ட கண்ணகிதான் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவும் சின்னமாகவும் இருப்பவள்.
இவையெல்லாம் கதைகள்; கற்பனைகள் என்பது உங்கள் வாதமாக மாறலாம். எனது நம்பிக்கையும்கூட அதுவாகத்தான் இருக்கலாம். இந்த மாதிரியான கதைகளும், நம்பிக்கைகளும், அடையாளங்களும், சின்னங்களும், இருக்கின்ற சமூக நிலைமைகளை ஓரடி கூட முன்னோக்கி நகர்த்திட உதவாது என்பது உண்மையாகக் கூட இருக்கலாம். என்றாலும் மக்கள் திரளின் இயக்கத்திற்கு – இயக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கு- இந்த மாதிரியான அடையாளங்களும் சின்னங்களும் தேவைப்படுகின்றன என்பது சுயேச்சையான சிந்தனையாளர்களுக்குப் புரியாத விசயம்தான். ஏனென்றால் ஓர் இயக்கம், தனக்கெதிரான இயக்கும் முன் வைக்கும் அடையாளங்களையும் சின்னங்களையும் சிதைக்க வேண்டிய கட்டாயத்திலும், தனது அடையாளங்களையும் சின்னங்களையும் முன்னிறுத்த வேண்டிய நெருக்கடியிலும் இருக்கிறது. வெகுமக்கள் அமைப்பைக் கட்டி நடத்துபவர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று.
++++++++++++
அடையாளம், சின்னம், அரசியல் என்று பேசும் வெறித்தனத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைப்போம். இலக்கியம் எனும் அமைதிப்பூங்காவிற்குள் நின்று உரையாடுவோம். சிலப்பதிகாரமும் ராமாயணமும் பண்டிதர்களிடம் படாதபாடு பட்டவைகள் தான் என்றாலும் நவீன இலக்கியவாதியும் நவீனப் பெண்ணியவாதிகளும் திரும்பவும் வாசித்துப் பார்க்க வாய்ப்புடைய பிரதிகள் தான். “ அவள் கற்புக்கரசி, கணவன் செய்த பச்சைத் துரோகத்தை மன்னித்து ஏற்றவள். தவறாக அவன் கொல்லப்பட்ட போது அரசனிடம் சென்று நீதி கேட்டவள். அவளது கற்பே அவளது பலம்.” இப்படி வாசித்து விட்டு, ‘ நவீனப் பெண்ணின் அடையாளமாகக் கண்ணகி ஆக முடியாது’ என்று சொல்ல வாசந்திக்கு முழு உரிமையுண்டு. ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்வது ‘ கண்ணகியின் கதாபாத்திரத்தைக் ’குடும்பம்’ என்ற எல்லைக்குள் மட்டும் சுருக்கிவிடும் முயற்சி என்று சொன்னால் அது குற்றச்சாட்டு ஆகாது.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுத மூன்று காரணங்கள் இருந்தன என்கிறது அதன் பதிகம். வாசந்தியின் வாசிப்பு, ’அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்‘ என்பதோடு நிறுத்திக் கொள்கிறது. ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்திய நோக்கத்தில் தான்’ கண்ணகியின் ‘பொதுவெளிப் பிரதேச வாழ்வு’ தொடங்குகிறது. அவளது உருவாக்கத்திற்குள் இரண்டு குணங்கள் உள்ளன. ஒன்று பொறுமை; இன்னொன்று ஆவேசம். குடும்ப வெளிக்குள் பொறுமையாக இருந்தவள். பொதுவெளியில் ஆவேசமாகச் செயல்பட்டாள். அந்த ஆவேசம் தனது கணவனுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிரானது என்றாலும், எதிர்க்கப்பட்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சூழ்ச்சிகள் செய்து மாட்டிவிட்ட பொற்கொல்லன் அல்ல. அதிகாரத்தின் தலைமைப் பீடத்தையும் எதிர்க்கும் அந்த ஆற்றல் அவளுள் எங்கே இருந்தது என்பதுதான் ஆச்சரியம். பொறுமையும் ஆவேசமும் கலந்த கலவையே தெய்வம். அருளும் ஆக்ரோசமும் வழங்குபவள் அம்பாள். கொற்றவையை வழிபட்ட தமிழ்நாட்டுக் குடிகளுக்குக் கண்ணகி பத்தினித் தெயவமானதும், சேரன் செங்குட்டுவனால் சிலை எடுக்கப்பட்டதும் ஆச்சரியப்படும் படியான விசயம்.
‘இதுவெல்லாம் உண்மைகளாகவே இருந்து விட்டுப் போகட்டும். இப்பொழுது நிகழ்காலத்தின் தன்மையைப் பார்க்க வேண்டாமா? காலத்தேரை வேலை மெனக்கெட்டுப் பின்னுக்குத் தள்ளிப் போவதில் ஆகப்போவதென்ன?..‘ வாசந்தி கேட்க நினைக்கும் இந்தக் கேள்வி நியாயமான கேள்விதான். 21 ஆம் நூற்றாண்டில் – ஜனநாயக யுகத்தில்(?) இப்படிப் பேசுவதில் என்ன அர்த்தம்…? 
அர்த்தம் எதுவும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் கண்ணகி ராமன் என்கிற இன்னொரு கதாபாத்திரத்தின் அருகில் நிறுத்தப்படுகிறாள் என்கிறபோது அர்த்தம் உருவாகி விடுகிறது. தொடர்பற்றுத் தோன்றும் அர்த்தம் தான். ஆனால் தோற்றுவிக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை. ராமாயணத்தின் நாயகன் ராமனை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாக, தேசியவாதத்தின் சின்னமாக, நாட்டுப் பற்றின் குறியீடாக முன்னிறுத்தி பாராயணங்கள் செய்யவும், யாத்திரைகள் நடத்தவும், கோயில்கள் கட்டவும் ஏற்பாடுகள் நடக்கும்போது கண்ணகி சிலைகளை ஊர்தோறும் வைப்பதற்கு அர்த்தங்கள் உருவாகி விடுகின்றன.
ராமன் என்னும் குறியீட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்தத் தேசத்தில் இருக்க அருகதை அற்றவர்கள் என்று ஆயுதம் தாங்கிய கும்பல் அச்சுறுத்தும்பொழுது , ஓர் இசுலாமியன் ‘நான் யார்?’ என்று கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? மனிதனாக இந்தத் தேசத்தில் இருப்பதில் மட்டுமே அர்த்தம் எதுவும் இல்லை; இந்துவாக அல்லாதவன் வெறும் ‘சைபர்’ மட்டும்தானா இந்தத் தேசத்தில்? ‘ மதத்தின் பக்கத்தில் ’இனம்’ அல்லது ‘மொழி’ எதிர்வாக ஆக்கப் படுவதில் அர்த்தம் உருவாகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மைதான் ராமனுக்கு எதிராகக் கண்ணகி நிறுத்தப்படுவதில் உண்டாகும் அர்த்தமும். ஒன்றின் அர்த்தம் அதன் எதிரே இன்னொன்று நிறுத்தப்படும்பொழுது உருவாகிறது மொழியியலின் அடிப்படைச் சூத்திரம். இன்னும் சரியாகச் சொல்வதானால் கட்டமைப்பு மொழியியலின் அடிப்படை விதிகளுள் ஒன்று அது.
ஏக பத்தினி விரதனாகவும், கொடிய அரக்கர்களை அழித்து, காட்டிலும் நாட்டிலும் அமைதி உண்டாக்கியவனாகவும் சித்திரிக்கப்படும் ராமனின் பாத்திரம் இவை மட்டும் தானா? தங்களுடைய பண்பாட்டின்படி காட்டில் வாழ்ந்த தாடகையை, விசுவாமித்திரனின் தவத்திற்கு உதவுகிறேன் பேர்வழி என்று கொலைசெய்தது ராமன் தானே. தன்னுடைய மனைவியைத் தேடித் தர உதவுவான் என்பதற்காக சுக்கிரீவனின் அண்ணன் வாலியைக் கொன்று – மறைந்து நின்று- கொன்றுவிட்டு அவன் தம்பிக்குப் பட்டம் சூட்டித் தனது கையாளாக ஆக்கிக் கொண்டது ராமன் தானே! தனது தனயன் ராவணன் செத்துப் போனால், தான் இலங்கைக்கு அரசனாக முடியும் எனக் கருதி, அண்ணனை விட்டுவிட்டு வந்த விபீஷணனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு ராவணனின் பலவீனங்களை அறிந்து போரிட்டவன் ராமன் தானே! ‘இவையெல்லாம் யுத்த தர்மங்களுக்குள் வரக்கூடியன; வெற்றி ஒன்றே ஆண்மையின் இலக்கணம்’ என்ற வாதத்தை முன் வைத்துவிட்டு விட்டீர்கள் என்றாலும், நவீனப் பெண்கள் முற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ராமனின் குணாம்சம் ஒன்று உள்ளதே. அதை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அயலான் பாதுகாப்பில் இருந்த தன் மனைவி ‘ கெட்டுப் போய் இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு’ என்று நினைத்து சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யும்படி சொன்னானே; அவன் சொன்னான் என்றவுடன் தானும் தீயினுள் இறங்கினாளே சீதை, இந்தச் சீதை இன்றைய நவீனப் பெண்களின் அடையாளம் ஆக முடியாது. அவளை தீயினுள் இறங்கச் சொன்ன ராமன் தான் இன்றைய ஆண்களின் அடையாளமாக ஆக முடியுமா? நிச்சயம் ஆக முடியாது!
ராமன் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் அல்ல; நவீன இந்திய தேசத்து மக்களுக்கு அந்த ஒற்றைச் சின்னத்தை மட்டும் பரிந்துரைத்துப் பேசுவது எவ்வகை நியாயம்; அதனை ஏற்காதவர்களை ஆயுதங்களைக் கொண்டு மிரட்டுவது கேடுகெட்ட வன்முறை வடிவம் எனப் பேசாமல், “ கண்ணகி எப்படித் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக முடியும்?” என்று கேள்வி கேட்கும்பொழுதுதான் “ நீங்கள் பார்ப்பணர்; அதனால் தமிழ்ப் பண்பாடு புரியாது, உங்களுக்கு” என்று சுட்டிக் காட்டப்படுகிறது. அதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்? கண்ணகிக்குப் பின்னாலும் ராமனுக்குப் பின்னாலும் நடக்கும் அரசியலில் உங்களுக்குப் பங்கில்லை என்று ஒதுங்கிப் போய்விடலாமே…  
நன்றி: கவிதாசரண் பிப்ரவரி –ஏப்ரல்,2003  

 குறிப்பு:சின்னங்களும் அடையாளங்களும் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் வரும் தகவல் குறிப்புகள் பழையனவாக இருந்த போதிலும், தமிழ்நாட்டின் அறிவுத்தள முரண்பாடாக ஊடாடிக் கொண்டிருக்கும் ஒன்றின் நிகழ்காலப் பொருத்தப் பாட்டைப் பேசுகின்றது என்ற அடிப்படையில் திரும்பவும் பதிவேற்றம் செய்யப்படுகிறது ]

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்