தினமணியில் நேர்காணல்

போலந்தின் தலைநகர் வார்சாவிற்கு வந்து ஆறுமாதங்கள் முடிந்து விட்டன இந்த மாத அனுபவங்களுடன் வழங்கிய நேர்காணல் இது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இங்கு இருக்கப்போகிறேன். முடியும்போது கூடுதல் அனுபவங்களுக்கு வாய்ப்பிருக்கிறது

தினமணியில் இரண்டு பக்கங்களில் அந்த நேர்காணல் அச்சிடப்பட்டுள்ளது.

  • போலந்து நாட்டுக்கும் தமிழ் மொழிக்குமான உறவு எப்படியானது?

பல்கலைக்கழக வாசலில்
போலந்து நாட்டிற்கும் தமிழ்மொழிக்குமான உறவை நேரடியான உறவு எனச் சொல்ல முடியாது. உலக நாடுகள் பற்றிய அறிவைத் தேடுவதில் ஐரோப்பியர்களுக்கு இருக்கும் ஆர்வத்தின் ஒரு பகுதியாகவே தமிழின் மீதான உறவைப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் முக்கியமான பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் துறைகள் இருக்கின்றன. அத்துறைகளில் இந்தியத் தத்துவம், இந்தியவரலாறு, இந்தியப் பண்பாடு, இந்திய மொழிகள் பற்றிய கல்வியைக் கற்பிக்கிறார்கள். இந்திய மொழிக்குடும்பங்கள் பற்றிய கல்வி என்பதில் சமஸ்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மொழியையும் அறிந்தாக வேண்டும் என்ற உண்மையை இந்தியவியல் துறைகளைத் தொடங்கிய பேராசிரியர்கள் உணர்ந்ததின் விளைவே ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழ் பற்றிய படிப்பாக விரிந்துள்ளது. இந்தியத் தொல்மனத்தை அறிய சமஸ்கிருதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழும் என நம்புகிறது  ஐரோப்பிய அறிவுலகம். போலந்து அறிவுலகமும் அதிலிருந்து விலகவில்லை
இந்தியவியல் துறைவாசலில்

  • ·       போலந்து நாட்டுக்குத் தமிழ்ப் பேராசிரியர்களை அனுப்பும் இந்தத்திட்டம் எப்போதிருந்து இருக்கிறது?

நடுவில் இருப்பவர் இந்திப் பேரா.திவாரி,
அடுத்து இருப்பவர் இந்தியவியல் துறையில்
அதிகம் மதிக்கப்படும்
பேரா.பெர்ஸ்கி
போலந்து நாட்டு வார்சா பல்கலைக் கழகத்தில் 1932 இல் இந்தியவியல் துறை தொடங்கப் பட்டது. முதலில் கற்பிக்கப்பட்ட இந்திய மொழி சமஸ்கிருதம். பிறகு வங்காளமும், இந்தியும் தற்கால இந்திய மொழிகள் என்ற நிலையில் கற்பிக்கப் பட்டுள்ளன. அதற்குப் பிறகுதான் தமிழ் சேர்க்கப் பட்டுள்ளது. 1973 இல் தொடங்கப் பட்ட தமிழுக்குத் தொடக்கத்திலிருந்தே இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் பண்பாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் ஒரு பேராசிரியரை அனுப்பி வைக்கிறது. அவருக்கு அங்கு பெயரே தமிழ் இருக்கை ( Tamil Chair Teacher) ஆசிரியர் தான்.  தமிழுக்கு அளிக்கப்பட்ட இருக்கை நிலையை இந்திக்கு 1983 இல் தான் இந்திய அரசு வழங்கி இருக்கிறது.  இப்போதும் வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறைக்கு வாரம் ஒருநாள் மதிப்புறு பேராசிரியராக வந்து போகும் கிறிஸ்டோப் பெர்சிகியின் பெருமுயற்சியில் தமிழ் நுழைந்துள்ளது. அவர் வெறும் பேராசிரியர் மட்டுமல்ல. போலந்து நாட்டின் தூதராக ஆறு ஆண்டுகள் டெல்லியில் இருந்தவர்
வருகை தரு பேராசிரியர்களின் முக்கியமான வேலையே இன்றும் பேசப்படும் தமிழ் மற்றும் இந்தி மொழியின் இருப்பு நிலையைக் கற்பிப்பதுதான். செவ்வியல் மொழியாக இருந்தாலும் தமிழ் பேச்சு மொழியாகவும் இருப்பதால், அதற்கெனச் சொந்த ஊரிலிருந்து ஒரு பேராசிரியரை வரவழைத்துப் பேச்சுத்தமிழையும், தமிழின் நிகழ்கால இருப்பையும் அறிந்து கொள்கிறார்கள். இன்னொரு செவ்வியல் மொழியான சமஸ்கிருதத்திற்குப் பேச்சு வழக்கு இல்லையென்பதால் அதன் வழித்தோன்றலான இந்திக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது.  வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளெல்லாம் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் வருகை தரு பேராசிரியர்கள் கிடையாது. இந்திய அரசின் செலவில் வருகை தரு பேராசிரியர்கள் வந்து போகும் இருக்கைகள் தமிழ், இந்தி என்ற இரண்டுக்கு மட்டும் தான் 
இந்தியவியல் துறை போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் தொழில் நகரமான பாஸ்னானிலும், பண்பாட்டு நகரமான கிராக்கோவிலும் இருக்கின்றன. அங்கும் தமிழ் அறிமுகப் பாடமாகக் கற்பிக்கப் படுகின்றன. இந்த ஆண்டு முதல் கிராக்கோ நகர ஜெக்லோனியன் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்ப் பேராசிரியரை இந்திய அரசாங்கம் அனுப்பத் தொடங்கியுள்ளது.
  • ·       போலந்தில் தமிழ் கற்றுக் கொள்பவர்கள் யார்?

இந்தியவியல் மாணவிகள்
தமிழ் மாணாக்கர்கள்
வார்சா பல்கலைக் கழகத்தில் இப்போது ஒன்பது தமிழ் மாணாக்கர்கள் இருக்கிறார்கள். பட்டப் படிப்பு அளவில் கற்பிக் கப்படும் தமிழ் மொழிப் பிரிவில் இரண்டா மாண்டில் 7 பேரும், மூன்றாமாண்டில் 2 பேரும் இருக்கிறார்கள். ஒன்பது பேரில் ஒருவர் தான் மாணவர். மற்றவர்கள் அனைவரும் மாணவிகள் தான். இவர்களில் இரண்டு பேரைத் தமிழ் பற்றிய அறிமுகம் கிடைத்து, ஆர்வத்தோடு தமிழ் படிக்க வந்தவர்கள் எனச் சொல்லலாம். இரண்டாமாண்டு படிக்கும் போது தமிழ் மொழியின் அமைப்பையும் இலக்கிய வரலாற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். தமிழை வாசிக்கவும் செய்வார்கள். மூன்றாமாண்டில் இலக்கியங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொடர்ச்சியாகப் பேசுவதுதான் அவர்களுக்குச் சிக்கல். இந்தியாவுக்கு வந்து தங்கி இலக்கியங்களையும் பேச்சுத் தமிழையும் கற்க விருப்பம் தெரிவிக்கும் மாணவிகளும் உண்டு. அதற்கான உதவியைத் தமிழக அரசோ, தமிழகப் பல்கலைக் கழகங்களோ செய்யலாம். எட்டுத் திங்கும் சென்று தமிழ் மொழியைப் பரப்புவதைப் போல எட்டுத் திசைகளிலிருந்தும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு வந்து தமிழைக் கற்றுக் கொடுத்து அங்கு அனுப்புவதும், தமிழ் நாட்டிலேயே தங்க வைத்து அந்தந்த மொழிகளைத் தமிழ் மாணாக்கர்களுக்குக் கற்றுத் தருவதும் அவசியம். பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இப்படியெல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டங்கள் வைத்திருந்தார். ஆனால் பிறகு வந்தவர்களால் அதெல்லாம் கைவிடப்பட்டு விட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகமும் மற்ற பல்கலைக்கழகங்களைப் போலவே தொலைநெறிக் கல்வி இயக்ககம் மூலம் பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. 
  • ·       இதுவரை தமிழ் நாட்டிலிருந்து யார் யாரெல்லாம் போலந்து சென்று தமிழ் சொல்லிக் கொடுத்தார்கள்?

இந்தக் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்ல வேண்டும் என்றால் மூன்று பேர் என்று தான் சொல்ல வேண்டும்.
போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறையில் தமிழ்ப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டவுடன் அதற்கென அனுப்பி வைக்கப்பட்டவர் பேராசிரியர் இராம. சுந்தரம். அங்கிருந்து வந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.1986 இல் மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து  பேராசிரியர் தி.சு.நடராசன் சென்று 4 ஆண்டுகள் இருந்தார். அடுத்ததாக நான் திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக் கிறேன். ஆனால் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து மூன்று பேராசிரியர்கள்  கி.நாச்சிமுத்து, சுப்பிரமணியன், நஷும்தீன்) டெல்லிப் பல்கலைக் கழகத்திலிருந்து இரண்டு பேர் (இந்திரா பார்த்தசாரதி, அ.மாரியப்பன்) பெங்களூர் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழவன் என அறியப்படும் கார்லோஸ், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திலிருந்து  து.மூர்த்தி, குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத் திலிருந்து கோ. பால சுப்பிரமணியன் என எனக்கு முன்பு பத்துப் பேர் இங்கு வந்து தமிழ் கற்பித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். 
  • ·       தமிழ் பயிற்றுவிக்கும் உங்கள் அனுபவம் எப்படியானது?

வகுப்பில்
வார்சா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நான் தமிழ் கற்பிக்கும் முறையைப் பற்றிச் சொல்வதோடு இங்கு அயல்மொழியைக் கற்பிக்கும் முறையைப் பற்றிச் சொல்ல வேண்டும். அம்முறை நமது நாட்டு பல்கலைக் கழகங்களில் அயல்மொழி மற்றும் அயல்நாட்டுப் படிப்புகளைக் கற்பிக்க உதவலாம். இந்தியவியல் துறையில் தமிழையும் இந்தியையும் மொழிக் கல்வி என்பதாகக் கற்பிக்கவில்லை. ஒரு மொழியைக் கற்க அது வழக்கில் இருக்கும் தேசத்தின் நிலவியல், வரலாறு, பண்பாடு, சிந்தனைமுறை என அனைத்தும் அவசியம் என்ற அடிப்படையில் அவை எல்லாம் கற்றுத் தரப்படுகின்றன. இவையெல்லாம்  போலிஷ் மொழியில் கற்பிக்கப்படுகின்றன என்பது மிக முக்கியம். தமிழக வரலாறு, தமிழ்மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு போன்றவற்றையும், போலிஷ் மொழியிலேயே கற்பிக்கிறார்கள். தமிழ் கற்றுத் தேர்ந்த போலிஷ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். டாக்டர் யாஷெக் வாஸ்னிக் என்பது அவரது பெயர். ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றி முனைவர் பட்டம் முடித்தவர். அவரோடு தமிழில் ஆய்வுப் பட்டம் மேற்கொண்டுள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களும் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இந்தியாவிலிருந்து சென்றுள்ள நான் மாணாக்கர்களுக்குப் பேச்சுத்தமிழுக்கான விதிகளைச் சொல்வதோடு  சொற்களஞ்சியங்களையும் உருவாக்கித் தருகிறேன்.
ஒரு மொழியைக் கற்பதில் அல்லது கற்பிப்பதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன.
ஒரு மொழியின் கட்டமைப்பையும் மாற்றங்களையும் கற்பது முதல் கூறு. இரண்டாவது கூறு அம்மொழியின் சொல்தொகுதிகளையும் மரபுத்தொடர்களையும் பயன்படுத்தும் புலமையை உருவாக்குவது. வார்ஷா பல்கலைக்கழகத்தில் மொழியின் அடிப்படைக் கட்டமைப்புகள் மாணவர்களின் தாய்மொழியான போலிஷ் மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன- ஒவ்வொரு நாளும் தமிழ் வாழ்வின் நிகழ்வுகளை, இடங்களை, தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் உரையாடல்களின் வழியாக சொல்தொகுதிகளையும், பேச்சு மொழியின் கட்டமைப்பையும் நான் கற்றுக் கொடுக்கிறேன். விருப்பத்தோடு மாணவிகள் கற்றுக் கொள்வார்கள். பேசுவதற்கும் வாசிப்பதற்கும் ஆர்வத்தோடு தான் இருப்பார்கள். தமிழ் வாழ்வு பற்றி படங்களோடு கற்றுக் கொடுக்கும் போது பலவிதமான கேள்விகளை எழுப்புவார்கள். கேள்விகள் இல்லாத வகுப்புகள் எப்போதும் இருந்ததில்லை.
  • ·       போலந்தின் கலாசாரம் பண்பாடு எப்படியானது?

கலாசார மாளிகையின் முன்னால்
ஐரோப்பிய வாழ்க்கையின் பெரும்பாலான கூறுகள் போலந்திலும் விரிந்துள்ளன என்றாலும் தனித்தன்மைகளும் உள்ளன. தனிமனித சுதந்திரம், தனிமனிதர்களின் பொறுப்பு, நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் அவை முறையாகச் செயல்படும் விதமாக உருவாக்கப்பட்ட விதிகளுக்குத் தர வேண்டிய மரியாதை ஆகியவற்றைத் தருவதில் மற்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து போலந்து அதிகம் வேறுபடவில்லை. அதே நேரத்தில் முழுமையான கத்தோலிக்க நாடு என்பதாலும், சோசலிசக் கட்டமைப்பில் இருந்த முன்னாள் சோசலிச நாடு என்ற முறையிலும் வேறுபாடுகளையும் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் மீது வெறுப்பும் விருப்பும் கலந்த பார்வை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். முதலாளித்துவ பொருளாதார முறைக்கு மாறியதால் பொருளாதார வளர்ச்சியும் வாழ்முறையும் மாறியிருப்பதாக நம்புகிறார்கள். அதே நேரத்தில் முதியவர்களின் நினைவுக்குள் சோசலிசம் பற்றிய நல்ல நினைவுகள் இருக்கின்றன எனச் சொல்கிறார்கள். முதலாளித்துவ மாற்றம் 70 வயதைத் தாண்டியவர்களையும் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளி இருக்கிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட இரவு
தொரூண் நகரில்
வார்சா நகரத்தின் முக்கிய வீதியொன்றில்
மொழி மற்றும் சமயம் சார்ந்து இந்தியத் தன்மையோடு நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் பார்த்த வகையிலும் அது உண்மையாகவே இருக்கிறது. முன்னோர் சமாதிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை ஒவ்வொரு ஊரிலும் கல்லறைத் தோட்டங்களில் பார்க்க முடிகிறது. கிறிஸ்துமஸும் ஈஸ்டரும் முக்கியமான பண்டிகைகள். அவற்றுக்குரிய மரபோடு கொண்டாடப் படுகின்றன. புத்தாண்டுக் கொண்டாட்டம் நவீன வாழ்வின் அடையாளமாக இருக்கிறது. வார நாட்களை உழைப்புக்குக் கொடுத்து விட்டு வார இறுதி நாட்களைக் கொண்டாட்டத்திற்கும் ஓய்வுக்கும் கொடுக்கும் ஐரோப்பிய வாழ்க்கையைப் போலந்திலும் காணமுடிகிறது. பாரம்பரிய மான நகரங்கள் அதன் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப்போரில் தரைமட்ட மாக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடங்கள் பழைமையின் அடையாளத் தோடு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை பாரம்பரிய நகரங்களான கிராக்கோவிற்கும் தொரூணுக்கும் சென்று வந்திருக்கிறேன். இன்னும் பல நகரங்களையும் கிராமங்களையும் பார்க்க வேண்டும். போலந்தின் குறுக்காக ஓடும் விஸ்வா ஆறு மக்களின் தாகத்திற்கும் வேளாண்மைக்கும் ஆதாரமாக இருக்கிறது. இன்னும் வேளாண்மைதான் முக்கிய தொழிலாக இருக்கிறது என எனது மாணவிகள் சொல்கிறார்கள்.  போலந்து இலக்கியத்திற்காக மூன்று முறை நோபல் பரிசை வாங்கியிருக்கிறது.

போலந்தின் கலாச்சாரம் பற்றிச் சொல்வதை விடவும் அதன் நிலவியல் மற்றும் தட்பவெப்பம் பற்றிச் சொல்ல வேண்டும். ஆர்டிக் வட்டத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஸ்காண்டிநேவிய நாடுகளை அடுத்த வட்டத்தில் இருக்கிறது போலந்து. வெப்பநிலை கோடைகாலம் மூன்றுமாதம் தான்.  + 20 வரை போகுமாம். குளிர்காலம் ஆறுமாதம். இந்த வருடம் - 26 வரை போனது. டிசம்பர்,ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் வெள்ளைப் படுதா போர்த்தியது போல் பனிக்கட்டியால் மூடப்பட்டுக் கிடக்கும் காட்சியை வீட்டுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருக்கலாம். வீடுகள், கடைகள், அலுவலகங்கள், போக்குவரத்து வண்டிகள் என அனைத்தும் வெப்பமூட்டும் கருவிகளோடு இருக்கின்றன. உள்ளே இருக்கும்போது சாதாரண ஆடைகளில் இருக்கலாம். ஆனால் வெளியில் கிளம்பும்போது நான்கு அடுக்குகளில் ஆடை அணிந்தாக வேண்டும். உடம்பைப் பனியும் குளிரும் தொட்டு விடாமல் பாதங்கள், உள்ளங்கைகள், கழுத்து, காது, மூக்கு என அனைத்தையும் மூடியாக வேண்டும். டிசம்பர் முதல் மூன்று மாதங்கள் இரவு கூடுதலாக இருக்கும். உச்சபட்சமாக 16 மணிநேரம் இரவு இருந்தது. இப்போது பகல் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரலுக்குப் பிறகு 17 மணி நேரம் பகல் இருக்கும் என்றார்கள்.  இந்த விசயத்தில் இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள். அதிகபட்சம் 30 நிமிடம் கூடும் அல்லது குறையும்
===============================================================================================
 நன்றி : கேள்விகளை அனுப்பி எனது பதில்களைப் பெற்று வெளியிடச் செய்த அய்யனாருக்கு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்