புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்

 வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகி ஆங்கிலத்தில் சொல்லும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பன்னாட்டு கைபேசி வியாபார நிறுவனமோ, சொகுசுக்கார் தயாரிப்பு நிறுவனமோ சொல்ல வைக்கின்றன. அதனைக் கேட்பதற்காகக் காலை எட்டு மணி முதல்  மொத்தக் குடும்பமும் தயாராகத் தொலைக்காட்சி முன்னால் அமைதியாக இருக்கிறது.  ஏழு மணிக்கு வழங்கிய சமயச் சான்றோரின் உரையை வழங்கியவர்கள் தங்க ஆபரணங்களை மீன்கடை வியாபாரம் போல் பரப்பி விற்கும் நிறுவனமாக இருக்கிறது.
 நமது பண்டிகைகள் நமது வாழ்வின் சில மகிழ்ச்சியான தருணங்களாக இருந்தன; சில துன்பங்கள் தொலைந்ததின் நினைவுகளாக இருந்தன. சிலவற்றை வரவேற்கும் ஆரவாரமாக இருந்தன. ஆனால் இன்று ஒவ்வொரு அரைமணி நேரத்தையும் வணிக நிறுவனங்கள் பங்கு போட்டுக் கொண்டு பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களோ அவற்றின் விளம்பரத்தைப் பார்த்து பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் ஏக்கத்தின் நாட்களாக பண்டிகை நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கம் பண்டிகை நாட்களை வியாபாரப் பண்டங்களின் நினைவு நாட்களாக ஆக்கி ஆண்டுகள் சில பத்துகள் ஆகிவிட்டன. இப்போது கிராமத்துக் குடிமக்களிடம் இலவசத் தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடைச்சரக்காக்கும் வித்தையைச் செய்யும் வியாபாரிகளிடமும் அவர்களை அண்டிப் பிழைக்கும் ஊடகங்களிடமும் மனிதர்கள் எச்சரிக்கையோடு இருப்பார்களாக; இல்லையென்றால் எல்லா அடையாளங்களும் இல்லாமல் போய்விடும்.

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னும் ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாடும் மக்கள் கூட்டத்தைக் கண்டு ’இந்திய பண்பாட்டை மீட்க வேண்டும்’ என வாதிடுபவர்கள் எப்போதும் எரிச்சல் அடைவதுண்டு. ஜனவரி முதல் தேதியைக் கொண்டாடுவது இன்னும் அடிமைப்புத்தி விலகவில்லை என்பதின் அடையாளம் எனப் பேசுவதுண்டு. அந்த எரிச்சலின் பின்னணியில் இருக்கும் நியாயங்கள் முழுமையாக நிராகரிக்கத் தக்கன அல்ல. அவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் ”ஆங்கிலப் புத்தாண்டைக் கைவிடுங்கள்; இதுதான் இந்தியாவின் புத்தாண்டு” என ஒரு நாளை முன் வைக்கத்தான் செய்வார்கள். அப்படிச் சொல்வதன் இன்னொரு வடிவமே தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகத் தை முதல் தேதியை முன்னிறுத்துகிறது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில் கொண்டாடுவதைக் கைவிட்டு விட வேண்டும்; அதற்குப் பதிலாக தை முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடலாம் என  மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் அறிவித்தது. சட்டசபையில் அந்த அறிவிப்புச் செய்யப்பட்ட போது அப்போதிருந்த மக்கள் பிரதிநிதிகள் ஒருவரும் எந்தவித எதிர்ப்பையும் எழுப்பவில்லை.  சட்டசபைக்கு வெளியே சில தனிநபர்களும், சட்டசபையில் தங்கள் பிரதிநிதி களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் வல்லமையற்ற சில அரசியல் கட்சிகளும் அதற்கு மாற்றுக் கருத்தைக் கூறின. அவர்களும் கூட முழுமையாக எதிர்க்கவில்லை.மரபான சிந்தனையோட்டத்தைத் திசை திருப்பும் அறிவிப்பு தேவையில்லை என்று தான் கருத்துத் தெரிவித்தார்கள். மரபுகளும் நம்பிக்கைகளும் மதிக்கப்பட வேண்டும்; பொதுப்புத்தியைக் குலைக்கும் போக்கை அரசாங்கம் மேற்கொள்ளக் கூடாது என முணுமுணுத்தனர்.

தங்கள் முணுமுணுப்புக்கு மக்கள் பிரதிகள் அடங்கிய சட்டசபையில் அங்கீகாரம் பெறும் வாய்ப்பு இல்லை என்பதால் நீதிமன்றம் மூலம் அந்த அங்கீகாரத்தைப் பெறலாம் என்று முயன்றார்கள். அந்த விசயத்தில் நீதிமன்றமும் கையை விரித்து ஒதுங்கிக் கொண்டது. அதனால் முணுமுணுப்பைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கு போல மரபின் ஆதரவாளர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் அந்த வருடச் சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடினார்கள் என்பதைப் பலரும் மறந்திருக்கக் கூடும். இப்போது மரபின் ஆதரவாளர்கள் ஆட்சி மாற்றத்தின் மூலம் திரும்பவும் அங்கீகாரம் பெற்றிருக்காரர்கள். பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சித்திரை முதல் தேதி தான் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப் புத்தாண்டு தினம் என அறிவிப்புச் செய்துள்ளது. இதற்கு சட்டசபையிலும் சில கட்சிகள் தங்கள் எதிர்ப்பைக் காட்டின. சட்டசபைக்கு வெளியே அவ்வளவு எதிர்ப்புகள் இல்லை. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்ற மனநிலையில் இயங்கும் பெரும்பான்மைக் கூட்டம் தமிழ்ப் புத்தாண்டு சித்திரையின் தொடக்கமாக இருந்தால் என்ன? தை முதல் தேதியாக இருந்தால் என்ன எனக் கண்டு கொள்ளாமல் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சித்திரை முதல் தேதிக்குப் பதிலாக தை முதல் தேதியைப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என நினைப்பதை மரபை மாற்றும் முயற்சி என்று வாதிடுபவர்கள் ”இருப்பது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்” என நினைத்து ஒதுங்கிக் கொள்பவர்கள் மட்டுமல்ல; அடையாள அரசியலின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் கூட அடையாள அரசியல் என்பது பின் நவீனத்துவ மனநிலையின் வெளிப்பாடு என்று கருதி அதன் வயதை 50 ஆண்டுகளுக்கும் குறைவு என மதிக்கிறார்கள். நிச்சயமாக அதன் வயது ஒரு நூறை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆம் அதன் தோற்றம் காலனிய ஆதிக்கத்தில் இருந்த நாடுகளின் மக்கள் அடைய விரும்பிய அரசியல் விடுதலையின் இன்னொரு பரிமாணம். அரசியல் விடுதலையோடு பண்பாட்டு விடுதலையையும் அடைய வேண்டும் என விரும்பிய மக்கள் கூட்டத்தின் மன விருப்பம்.
 
இந்தியத் துணைக் கண்டத்திற்குள் தமிழர்கள் தனி அடையாளத்தோடு- தனிச் சிந்தனை மரபோடு- தனிக் காலக் கணக்கோடு- ஒட்டு மொத்தமாகச் சில தனித்த பண்பாட்டு அடையாளங்களோடு வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அந்தப் பண்பாட்டு அடையாளம் தொடர்ந்து வந்த ஆட்சி அதிகார மாற்றங்களாலும் அவர்களின் கருத்தியல் திணிப்புக்களாலும் கைவிடப்பட்டுத் தடைபட்டுள்ளது. எனவே நாம் அதை மீட்டுக் கொள்ள வேண்டும் எனச் சொல்வதும் இன்னொரு விதத்தில் மரபை ஆராதிக்கும் செயல் தான்.
ஐரோப்பியர்கள் தங்கள் உச்சரிப்பு வசதிக்கேற்ப மெற்ராஸ், கல்கத்தா, பம்பாய், பெங்களூர்,பாண்டிச்சேரி என நகரங்களின் பெயர்களை மாற்றி அழைத்ததை இப்போது முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புதுச்சேரி என மாற்றிக் கொண்டது ஒருவித காலனிய விடுபடலின் அடையாளங்கள்.அந்த அடையாளத் தேடலுக்குப் பின்னே இருப்பது மொழி சார்ந்த அடையாளத் தேடலின் அரசியல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
காலனியத்திற்குப் பிந்திய அடையாளத்தேடலில் ஒற்றைப் போக்குதான் இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்?. மரபை உருவாக்குவதில் சமய நம்பிக்கைகளுக்கு இடம் இருப்பது போல, இனம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும், மொழி சார்ந்த நம்பிக்கைகளுக்கும் கூட இடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.மதம் சார்ந்த அடையாள மீட்புக்கு முயலும் மரபின் இன்னொரு வடிவம் தான் மொழி சார்ந்த அடையாளத் தேடலும் என்பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ளலே ஜனநாயக அரசியலின் அடிப்படையாக இருக்க முடியும். எல்லாவிதத் தேடலுக்கும், சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்கும் வாய்ப்பை அளிப்பது இந்தியாவின் பன்முகப் பரிமாணத்தைத் தேடுபவர்களின் வெளிப்பாடு. அதில்லாமல் மரபின் பெயராலும், அதிகாரத்தின் பெயராலும் மாற்றங்களை மறுப்பது பாசிசத்தின் வெளிப்பாடு.
சித்திரை முதல் தேதியை ஆதரிப்பவர்கள் பாசிஸ்டுகளா? தை முதல் தேதியின் ஆதரவாளர்கள் பாசிஸ்டுகளா? என்ற விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். இவ்விரண்டையும்விட ஆபத்தான இன்னொன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். சித்திரை ஒன்று, தைப் பொங்கல், தீபாவளி, என எல்லாப் பண்டிகை நாட்களையும் இந்தியர்கள் முன்பு எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.இப்போது இந்தியாவின் பெருநகரங்களிலும் நகரங்களிலும் சிறுநகரங்களிலும் இருப்பவர்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். வழக்கமாகச் செய்த புனித நீராடலும் ஆலயத் தரிசனமும், உறவினரைச் சந்தித்தலும் விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. தங்கள் வீட்டுத் தின் பண்டங்களைப் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுத்து அயல் வீட்டுப் பண்டத்தைத் தாங்கள் ருசித்த பண்டிகை நிகழ்வுகள் மறைந்து விட்டன.
நடுத்தர வர்க்க வாழ்க்கையில் தின்பண்டங்கள் செய்வதும் பரிமாறிக் கொள்வதும் நாகரிகமா? அநாகரிகமா? எனப் பட்டிமன்றம் நடத்தினால் அதற்கும் நடுவர்களாக வரப் பாப்பையாவும், ஞானசம்பந்தனும் தயாராகவே இருப்பார்கள். நமது வீட்டில் வாங்கிய இனிப்புகளும் பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய இனிப்புக்களும் ஒரே கடையில் செய்யப்பட்டன என்கிற போது பண்டங்களை மாற்றிக் கொள்வதில் என்ன இருக்கிறது என்பதால் அந்த வழக்கத்தை நிறுத்திக் கொண்டு ஆண்டுகள் பலவாகி விட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்