இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் நேரம் 23 மணி நேரம் தான்


காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்களை முடித்து கணிணியின் திரையைத் திறந்தபோது 06.15,2012 மார்ச் 25 எனக்காட்டியது. எல்லா நாளும் இரவு 11.00 மணியை ஒட்டித் தூங்குவது வழக்கம். எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஆறு மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதிகாலை 05.00 யை ஒட்டி எழுந்து விடுவேன். நேற்று இரவு 11. 00 மணியளவில் தான் தூங்கப் போனேன். ஆனால் எழுந்து பார்த்தபோது கணிணியின் திரை 06.15 எனக் காட்டியது. அலைபேசியின் திரையிலும் 06.15 என்று தான் இருந்தது. அலமாரியில் பத்து நாட்களாகவே வெளியே நல்ல வெளிச்சம். கடந்த இருந்த கடிகாரத்தில் நேரம் 05.15 மணி என்றிருந்தது.
ஐரோப்பிய நாடுகள் குளிர்காலத்தைத் தாண்டி விட்டது என்பதின் அடையாளம் இது. நான்கு நாட்களுக்கு முன்பாகவே வசந்தகாலத்தின் அறிகுறி வந்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். அக்டோபர் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 11 முறை பின்னோக்கித் திருகிய கடிகாரத்தின் முட்களைத் திருகி ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்திக் கொள்ள வேண்டும். கணிணி, அலைபேசி போன்ற தானியங்கிக் காலம் காட்டும் கருவிகள் அன்றிரவு 12.01 ஆனவுடன் 01.01 என மாறிக் கொள்ளும் எனச் சொன்னார்கள். நான் ஐரோப்பாவுக்கு வந்த அக்டோபர் தொடக்கத்தில் அவ்வளவு வேறுபாடு இருந்ததாகத் தோன்ற வில்லை. இரவும் பகலும் ஓரளவு சமமாக இருந்தது. ஆனால் அக்டோபர் கடைசியில் இரவு அதிகமாகத் தொடங்கியது. டிசம்பர் மாதமெல்லாம் மாலை 03,30 க்கெல்லாம் இருட்டத் தொடங்கி காலை 07.30 வரை இருளாகவே இருந்தது. மாலை 04.30 –க்கு வகுப்பை முடித்து வீட்டுக்கு வரும்போது 05.30 ஆகி விடும். ஆனால் நடுராத்திரியில் வீடு திரும்புவது போலத் தோன்றும். வந்தவுடன் இந்தியாவில் இருக்கும் மகளிடமோ மகனிடமோ ஸ்கைப் வழியாகப் பேசி விட வேண்டும். கைகால் அலம்பித் தேநீர் குடித்து விட்டுப் பேசலாம் என நினைத்தால் அவர்கள் தூக்கத்தைக் கெடுப்பதாக ஆகி விடும். நாலரை மணி நேர வேறுபாடு என்பதால் இரவு 10.00 மணிக்குப் பிறகு பேசுவது தூக்கம் கெடுக்கும் வேலை தானே.

 இன்று முதல் கொஞ்சம் ஆறுதல். இந்திய நேரத்திற்கும் போலந்து நேரத்திற்கும் அடுத்த ஏழு மாதங் களுக்கு மூன்றரை மணி நேரம் தான் வேறுபாடு. அத்தோடு இங்கே இனி பகல் நேரம் கூடுதல். மார்ச் முதல் வாரத்திலேயே பகல் வெளிச்சம் அதிகமாகி விட்டது. காலை 5 மணிக்கெல்லாம் கிழக்கு வெள்ளை யாகி விடுகிறது. மாலையில் 7 மணி வரை வெளிச்சம் இருக்கிறது. இது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி ஏப்ரல் 22 இல் உச்சத்தைத் தொடுமாம். 16 மணி நேரம் சூரியனைப் பார்க்கலாமாம். குழல் விளக்கு இருந்தாலே தூக்கம் வராது எனக்கு. சூரியனின் வெள்ளை வெளிச்சத்தில் எப்படித் தூங்கப் போகிறேன் என்பதுதான் கவலையாக இருக்கிறது. சூரியனின் வெளிச்சம் மட்டும் தான் வெள்ளையாக இருக்கிறது. வெளியில் போனால் அதே குளிர் தான். காலையில் 2 டிகிரியில் தொடங்கி மாலைக்குள் எப்போதாவது ஒரு மணி நேரம் 15 முதல் 17 டிகிரியைத் தொட்டு விட்டுத் திரும்பவும் இறங்கத் தொடங்கி விடுகிறது. வெறும் ஸ்வொட்டரோடு வெளியில் கிளம்பி எங்காவது போய் வரலாம் என்று கிளம்பினால் திடீரென்று அரைமணி நேர இடைவெளிக்குள் 10 டிகிரி குறைந்து விடுகிறது. 

குளிர்காலத்தில் போலந்துக்காரர்கள் குளிரை அண்ட விடாமல் தடுக்கும் ஜாக்கெட்டுகளைக் கைவசம் வைத்துக் கொண்டே வெளியே கிளம்புகிறார்கள். பத்து நிமிடத்தில் போய்த்திரும்பும் வேலையாக இருந்தால் கூட கவச உடைகள் இல்லாமல் வெளியே கிளம்பு வதில்லை. குளிர் உடலுக்குள் ஏறும் பகுதிகளானப் பாதங்கள், கழுத்துகள், காதுகள் ஆகியனவற்றை மூடி விடுவது மிக முக்கியம். அதனால் முக்கியமான கவச உடைகள் என அவர்கள் நினைப்பது ஸாக்ஸுடன் கூடிய ஷூக்கள், கழுத்தைச் சுற்றி மறைக்க உதவும் மப்ளர்கள், காதுகளை மூடிவிட உதவும் கருவிகளையும் தான். இந்த வருடம் அதிகபட்சக் குளிராக – 24 டிகிரியில் தெருவெங்கும் உறைபனி கிடந்ததைப் பார்த்தேன். போலந்தின் குறுக்காகவும் வார்சா நகரத்தின் ஓரத்திலும் ஓடும் விஸ்துலா ஆறு பனிப்பாறை போலக் கிடந்தது. வசந்த காலத்தைத் தொடர்ந்து வரப்போகும் கோடையில் அதிகபட்ச வெப்பமாக + 20 வரை போகலாம் எனச் சொன்னார்கள். அக்டோபர் ஒரு மணிநேரத்தைக் கூட்டி ஒரு நாளைக்கு 25 மணிநேரம் என ஆக்குவதாக இருந்தாலும் சரி, மார்ச் மாதம் ஒரு மணி நேரத்தைக் குறைந்து 23 மணி நேரம் என மாற்றுவதாக இருந்தாலும்சரி, அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும்படி வைத்திருக்கிறார்கள். அந்த மாதங்களின் கடைசி சனிக்கிழமை நள்ளிரவில் தான் இந்த மாற்றங்களைச் செய்கிறார்கள். சீக்கிரம் எழுந்துகொண்டாலும்சரி, தாமதமாக விழித்துக் கொண்டாலும்சரி அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாகத் தான் இருக்கும். அதைக் காரணமாக்கிச் செய்யும் வேலையிலிருந்து தப்பிக்க முடியாது. திங்கட்கிழமை வருவதற்குள் எல்லாம் சகஜமான நிலைக்கு வந்து விடும்.

 இந்த கால வேறுபாடு ஐரோப்பா முழுவதும் ஒன்றுபோல இருக்கிறது எனச் சொல்ல முடியாது. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் ஒருவிதமாகவும் ஐக்கிய அரசுகளான ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து போன்றன ஒரு மணி நேரத்தைக் குறைவாகவும், பின்லாந்து போன்ற வடதுருவ ஐரோப்பிய நாடுகள் ஒரு மணிநேரம் கூடுதலாகவும் கணக்கிட்டுக் கொள்கின்றன. போலந்தில் காலை ஒன்பது மணி என்றால் இங்கிலாந்தில் பத்துமணியாக இருக்கும்; பின்லாந் தில் எட்டுமணி. உலகம் முழுவதும் காலக் கணக்குக் காரணமாக இருப்பன பூமிப்பந்தின் மேல் கீழாக ஓடுவதாக நம்பப்படும் கற்பனைக்கோடுகளான பூமத்திய ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் தான். கிரின்வீச் வழியாகச் செல்லும் தீர்க்கரேகையை பூஜ்யம் எனக் கணக்கிட்டு இந்தியாவின் நேரம் கிரின்வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணிநேரம் வேறுபடும் எனப் பூகோள வகுப்பில் படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

 ஒவ்வொரு தீர்க்கரேகைக்கும் இடையேயுள்ள தூரத்தைக் கடக்கச் சூரியன் எடுத்துக்கொள்ளும் நேரம் 4 நிமிடம். கிரீன்வீச்சிலிருந்து 40 டிகிரிக்குள் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுள் தங்கள் வசதிப்படி இரண்டு மணி நேர இடைவெளியைப் பேணு கின்றன. அதே கணக்கைப் பேணு வதாக இருந்தால் இந்தியத் துணைக் கண்டத்திலும் நாம் இரண்டு மணி நேர இடைவெளியைப் பேணு வதாக இருக்க வேண்டும். ஏனென்றால் குஜராத்தின் கட்ச் வளைகுடாவின் விளிம்பில் தான் 60 டிகிரி தீர்க் கரேகையும் வடகிழக்கு மாகாணத் தின் எல்லைக்கிராமங்கள் வழியாக 100 டிகிரி தீர்க்கரேகையும் செல்வதாக உலகவரைபடம் சொல்கிறது. ஆனால் நாம் இந்தியாவின் மையத்தில் நாக்பூர் வழியாக ஓடுவதாக நம்பும் 80 டிகிரி தீர்க்கரேகையை வைத்து இந்திய முழுமைக்கும் நேரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்திய ஒருமைப் பாட்டுக்காக எதனையெல்லாம் இந்தியர்கள் விட்டுக் கொடுக்கிறார்கள் என நினைக்கும்போது மயிர்க் கூச்செரியத்தான் செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்