February 17, 2012

கவி இந்திரன்: மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது


       
உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் எழுதப்படும் கவிதைகளை வாசிப்பதின் வழி யாகத் தமிழ்க் கவிதை மொழியை வளப்படத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு இயங்குபவர் இந்திரன்.அவருக்குச் சாகித்ய அகாடெமி, மொழி பெயர்ப்புக்கான விருதை வழங்கி அங்கீகரித்துள்ளது. விருதுபெற்ற இந்திரனும் விருதை வழங்கிய அகாடெமியின் தேர்வுக் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நான் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ்கலைப்பள்ளிக்கு ஆசிரியராகச் சென்றது ஜூலை,1989. கவி இந்திரன் தொகுத்து மொழியாக்கம் செய்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு நூலான – அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்(1982) - வந்த நேரத்திலேயே வாசித்திருந்தேன். ஒரு மொழி பெயர்ப்புக் கவிதை நூலை வாசிக்கும் மனநிலை தோன்றாமல் வாசிக்கக் கூடிய தொகுப்பு. தமிழ்க்கவிதைகளை வாசிப்பது போலவே அக்கவிதைகளை வாசிக்க முடிந்தது. அக்கவிதைகளின் உள்ளடக்கம் தமிழ்க்கவிதைகளின் உள்ளடக்கத்தோடு நெருங்கிய உறவு கொண்டதாக இருந்ததும் கூட தடையற்ற வாசிப்புக்குக் காரணமாக இருக்கலாம். அத்தொகுப்பு வந்த காலத்தில் பெற்ற கவனத்தை விடவும் 1990 களில் தலித் இலக்கிய முயற்சிகள் வீர்யம் பெறத்தொடங்கிய போது அதிகம் கவனிக்கப்பெற்றது. ஒரு விதத்தில் தமிழ் தலித் இலக்கிய முயற்சிகளுக்கு முன்னத்தி ஏர் ஓட்டிய தொகுப்பு எனக் கூடச் சொல்லலாம். அதன் தொனியே பின்னர் உருவான தமிழ் தலித் கவிதைகளின் தொனியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியது என்பது எனது கணிப்பு. 
அதே போல் அவர் தொகுத்து வெளியிட்ட “ பிணத்தை எரித்தே வெளிச்சம்(1995) “ தொகுப்பும் கூட தமிழ் தலித் இலக்கிய வரலாற்றில் முக்கிய வினையாற்றிய ஒரு நூல். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைக் கன்னடம், மராத்தி, மலையாளம் எனப் பிற இந்திய மொழி எழுத்தாளர்களுடன் வைத்து வாசிக்கும் வாய்ப்பை உண்டாக்கியது. இந்தத் தொகுப்பு உருவாவதற்கு முன்பே புதுச்சேரியில் நாங்கள் பல தடவை சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் ஏற்பட்டது. நண்பர் ரவிக்குமார் பணியாற்றிய சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர் நாற்காலிகளில் அமர்ந்து உரையாடியிருக்கிறோம், அங்கிருந்து சைக்கிளில் கிளம்பி நேரு வீதியின் முடிவில் இருக்கும் தபால் அலுவலகத்தில் நண்பர் மதியழகனைச் சேர்த்துக் கொண்டு தேநீர் குடித்துப் பாரதி பூங்காவில் அமர்ந்தோ, கடற்கரையில் உட்கார்ந்தோ பேசிய காலங்கள் திரும்ப வராதவை.
கவிதை மனம் கொண்ட இந்திரன் தானே எழுதிய கவிதைகளில் நகரத்தின் நெருக்கடிகள், நகர மனிதர்களிடையே நிலவும் தொடர்பின்மை, இயற்கைசாராத வாழ்நிலை, அந்நியோன்யமற்ற மனித மனம் போன்றவற்றைப் பிடித்துக் கட்ட முயன்றுள்ளார். ஒரு தொகுப்பில் இடம்பெறும் கவிதைகளில் இருக்கும் தொடர்பின்மை கூட இந்த வெளிப்பாடுகளின் விளைவு தான் எனச் சொல்லலாம். அவரது அந்நியன், முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள் போன்ற கவிதை நூல்களை வாசித்த போது இப்படி நான் உணர்ந்ததுண்டு. அதே நேரத்தில் அவர் மொழிபெயர்த்தும் தொகுத்தும் அளித்த படைப்புகள் வேறு விதமானவை. அவை எழுதப்பட்ட காலத்தில் அம்மொழியைப் பேசும் மக்களில் ஒதுக்கப்பட்ட - விளிம்புகளில் வாழ்ந்தவர்களின் குரல்களைப் பதிவு செய்த கவிதைகள். அவரது முதல் மொழி பெயர்ப்புத் தொகுப்பான அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தொடங்கிக் கடைசியாக வந்த கவிதைத் தொகுப்பு வரை இந்தக் கவனமே அதிகம் வெளிப்படுகிறது. அவரது மொழிபெயர்ப்புத் தொகுதிகள் பல தரப்புகளை விரிவான பரப்பில் அறிமுகம் செய்துள்ளன. அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் தொகுப்பு (1982)  ஆப்பிரிக்க, அமெரிக்கக் கறுப்பினக் கவிதைகளின் தொகுப்பு. அடுத்தடுத்து வெளியிட்ட காற்றுக்குத் திசை இல்லை (1986) பசித்த தலைமுறை (1994) பிணத்தை எரித்தே வெளிச்சம் (1995) கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் (2003) முதலான தொகுப்புகளில் முறையே இந்திய இலக்கியம், உலக இலக்கியம், இந்திய தலித் இலக்கியம், ஆதிவாசிகள் இலக்கியம் எனத் தனித்தனிப் பொருண்மைகளைக் கவனப்படுத்தியிருந்தார். ஒரிய மொழிக்கவிதைகளைத் தமிழில் அறிமுகப்படுத்தும் விதமாக “ மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள்” என்ற தொகுப்பையும்(2003) வெளியிட்டுள்ளார். ஒரியா, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ஒரிய மொழிக்கவிதைகள் இடம் பெற்ற நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.  
கவிதை மொழிபெயர்ப்புகளுக்காக அறியப் படும் இந்திரன், கலைவிமரிசனத்திற்காகவும் அறியப்பட வேண்டியவர்.ஆங்கிலத்திலும் தமிழிலும் ஓவியம், சிற்பம், திரைப்படம் பற்றிப் பல குறிப்புகளையும் விமரிசனங் களையும் எழுதியுள்ளார். நவீன கலையின் புதிய எல்லைகள்(1987), ரே: சினிமாவும் கலையும்(1989), தமிழ் அழகியல்(1994), தற்கால கலை: அகமும் புறமும்(1996), தேடலின் குரல்கள்: தமிழக தற்கால கலை வரலாறு(2001), நவீன ஓவியம்(2005) ஆகியன தமிழில் எழுதப்பட்ட கலை சார்ந்த நூல்கள். MAN & MODERN MYTH (1994), TAKING HIS ART TO TRIBALS(1999) என்பன ஆங்கில நூல்கள்.

No comments :