காவல்கோட்டம்: இந்தத் தேர்வு சரியென்றால் இதைத் தொடர என்ன செய்யப் போகிறோம்?


தேர்வுகள் என்ன உணர்வைத் தருகின்றன என்பது சந்திக்கின்றவர்களைப் பொறுத்தது. இந்திய மாணவர்களுக்குப் பல நேரங்களில் பயமுறுத்துவனவாக இருக்கின்றன. ஆனால் ஐரோப்பிய மாணவர்கள் அதை எதிர்பார்ப்புடன் - ஆர்வமூட்டும் ஒன்றாக - பார்க்கிறார்கள் என்பது எனது அனுபவம். இந்தியாவில் மாணவர்கள் தேர்வைத் தங்களுக் குரியதாகக் கருதி எப்படிப் பதில் எழுதுவது என்ற கோணத்தில் சிந்திக்கிறார்கள்; தயார் செய்கிறார்கள். ஐரோப்பிய மாணவர்கள் தேர்வு நடத்துவது ஆசிரியரின் வேலை என எடுத்துக் கொண்டு எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள் எனச் சிந்தித்துத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தியத் தேர்தலிலும் இந்த எதிர்பார்ப்பும் பயமுறுத்தலும் தான் செயல்படுகின்றன. எந்தக் கட்சியை அல்லது யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைவிட யாரை அல்லது எந்தக் கட்சிகளைத் தேர்வு செய்து விடக் கூடாது என்பதைக் குறித்தே விவாதங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அந்த விவாதங்களின் விளைவுகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. வெற்றி பெற விரும்பும் கட்சி எங்கள் கொள்கைகள் இவை; எங்கள் நோக்கம் இது; எங்கள் இயக்கத்தை வழி நடத்தப்போகும் தலைமை இத்தகையது; இதுவரை நாங்கள் நாங்கள் இப்படிச் செயல் பட்டோம்; இப்போது சூழல் இவ்வாறு மாறியுள்ளது; அதனால் இப்படிச் செயல்படப் போகிறோம்; அதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலை அணுகிறோம்; ஆகவே எங்கள் கட்சியைத் தேர்வு செய்யுங்கள் எனச் சொல்லி தேர்தலை அணுகும்போது ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் இப்படிப்பட்டவர்கள்; அவர்களின் தலைமை இப்படிப்பட்டது; அவர்களைத் தேர்வு செய்தால் இவையெல்லாம் நடந்து விடும் என அச்சமூட்டியே வாக்காளர்களைத் தங்கள் பக்கம் திருப்பும் தேர்தல் உத்தியே வெற்றிக்கனியைத் தரும் தேர்தல் உத்தியாக இருக்கிறது.

குறிப்பிட்ட கால அளவில் பெருங்கூட்டத்தை ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றியாக வேண்டிய கட்டாயத்தின் பேரில் நடக்கும் தேர்வுகளையும், கூட்டத்தின் திருப்திக்காக- பங்கேற்று மகிழும் திருவிழா அல்லது சடங்காக நடக்கும் தேர்தல்களையும் ஒதுக்கி விடுவோம். சிறு கூட்டத்தோடு தொடர்புடைய தேர்வுகளுக்கு வருவோம். விருதுகள் எப்போதும் பெருங்கூட்டத்தோடு தொடர்புடையன அல்ல. துறை சார்ந்த அங்கீகாரம் அல்லது கண்டு கொள்ளுதல் என்பதாகவே விருதுகள் இருக்கின்றன. நல்லாசிரியர் விருதுகள் ஆசிரியர்கள் கூட்டத்திற்குள் நடக்கும் ஒன்று என்றால், இளம் விஞ்ஞானி விருது அதற்குள்ளும் இன்னொரு சின்னஞ்சிறு கூட்டத்திற்குள் சிலரை அடையாளப்படுத்தும் விருது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் துறை சார்ந்த விருதுகள் வழங்கப்படுதல் நடக்கவே செய்கின்றன. இத்தகைய விருதுகளுக்கு வெளிப்படையாக ஒரு நோக்கம்தான் இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. செய்த வேலைகளுக்கான அங்கீகாரம் அல்லது மரியாதை என்பதாகச் சொல்லப்பட்டாலும் இனிச் செய்ய வேண்டிய வேலைக்கான தூண்டுதலும் இருக்கவே செய்கின்றது. ஒரு துறையில் செயல் படும் நபர்களை ஊக்கப்படுத்தி மேலும் நன்றாக வேலை செய்யச் சொல்லும் தந்திரம் அது. விருது வாங்கியவர் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இல்லையென்றால் கூட அவர்களின் பின்னோடிகள் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் இருப்பதை மறுக்க முடியாது.. ஊக்கத்தொகை வழங்குவதைப் போல ஊக்கவிருதுகள் வழங்கப்படும் உத்தியும் தொழில்துறை உத்தியாகவே கணிக்கப்பட வேண்டியவை. சொந்த வாழ்க்கைத் தேவைக்கான சம்பாத்தியத்தில் இருப்பவர்களின் வேலைத்திறனை மறைமுகமாக அதிகப்படுத்தி அந்தத் துறையை மேம்படுத்தும் அல்லது லாபம் பார்க்கும் நோக்கம் இருக்கவே செய்கிறது ஆனால் சாகித்திய அகாடெமி விருது போன்ற கலை இலக்கிய விருதுகளை தொழில் துறை விருதுகளைப் போலக் கணிக்க முடியாது என்பதுதான் அடிப்படையான வேறுபாடு.
கலைஞர்கள் தாங்கள் விரும்பித் தேர்வு செய்து கொண்ட துறையில் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் சுதந்திரமாக வேலை செய்கிறார்கள். வேலையின் விளைவைப் படைப்பு எனவும் உருவாக்கம் எனவும் கருதுகிறார்கள். அதன் பயன்பாடு தனக்குரியதல்ல; மற்றவர்களுக்குரியது என நம்புகிறார்கள். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு – சமூகத்திற்கு அதன் பயன்பாடு போய்ச் சேரும்போது நல்ல விளைவுகள் உண்டாகும் எனவும், மற்றவர்கள் பார்க்காத ஒன்றைப் பார்த்து அல்லது கண்டு பிடித்துச் சொல்லி யிருக்கிறேன் எனப் பெருமிதம் அடைகிறார்கள். பெருமிதம் அடையும் விதமாக வேலை செய்த என்னை இந்த மனிதர்கள் அல்லது இந்த சமூகம் அல்லது சமூகத்தை வழி நடத்தும் அமைப்புகள்; அதிலும் அவற்றுள் தலையாய அமைப்பாக இருக்கும் அரசு கண்டு கொள்ள வேண்டும். கண்டு கொள்வதோடு என்னைப் பாராட்டிப் பெருமைப் படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படிப் பெருமைப் படுத்தும் அடையாளம் தான் விருது என்பது கலை இலக்கிய விருதுகளுக்குப் பின்னுள்ள தத்துவம் அல்லது நம்பிக்கை.

சாகித்திய அகாடெமி விருது வழங்கப்படும் போது சர்ச்சைகள் எழுவதன் பின்னணியில் இத்தகைய நம்பிக்கைக்களும் தத்துவமும் செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசின் கலை இலக்கிய அமைப்புகளான சாகித்திய, சங்கீத, லலித் கலா அகாடெமிகள் எப்போதும் நபரை மையப்படுத்துவதில்லை; படைப்பு களையே மையப்படுத்துகின்றன என்ற விதிகள் இருக்கின்றன, ஆனால் அது நடைமுறையில் உண்மை இல்லை. 
பல நேரங்களில் துறை சார்ந்த பங்களிப்பு என்னும் அடிப்படையில் நபர்களையே மையப்படுத்தி விருதுகளை வழங்குகின்றன. இசை, நாடகம் போன்ற நிகழ்த்து கலைகளுக்கு விருதுகள் வழங்கும் சங்கீத் நாடக அகாடெமியும், ஓவியம், சிற்பம் போன்ற காண்பியக்கலைகளுக்கு விருதுகள் வழங்கும் லலித் கலா அகாடெமியும் துறை சார்ந்த பங்களிப்பு என்பதை மையப்படுத்தி விருதுகளை வழங்குகின்றன. அதனால் தான் அவற்றின் விருதுகள் சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வதில்லை. ஆனால் எழுத்துக் கலைக்கு விருது வழங்கும் சாகித்திய அகாடெமியும், திரைப்படத் துறையினருக்கு விருது வழங்கும் தகவல் மற்றும் பரப்புத்துறையும் ஆண்டுக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டில் இந்தப் படைப்பு சிறந்தது என முத்திரை குத்தி விருதை வழங்குகின்றன. அதன் காரணமாகச் சர்ச்சைப் புயலில் சிக்கிக் கரைசேர முடியாமல் தவிக்கின்றன. இந்த அடிப்படையை எல்லா ஆண்டுகளிலும் கறாராகப் பார்க்காமல் நீக்குப் போக்காகச் செயல்படும்போது இன்னும் கூடுதலாகச் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் அமைப்பாக இருக்கிறது சாகித்திய அகாடெமி.

சாகித்திய அகாடெமி விருதுக்கான அடிப்படை விதியைச் சரியாகப் பின்பற்றிய இந்த ஆண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளதை எப்படிச் சொல்வது? கடந்த காலத் தவறுகளின் நீட்சி என்றே சொல்லத் தோன்றுகிறது. இதுவரையிலான விருதுத் தேர்வில் ஆண்டின் சிறந்த படைப்பு என்ற அடிப்படை விதியைக் கண்டு கொள்ளாத தேர்வுக்குழு இந்த ஆண்டு மட்டும் அதைக் கவனத்தில் கொண்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. சரி இந்த ஆண்டு முதல் இந்த அடிப்படையைத் தான் பின்பற்றுவார்கள் என்ற உத்தரவாதத்தையாவது அதன் அமைப்பாளர் அல்லது அதன் நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் முன் வந்து சொல்வார்கள் என்றால் அனைவரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளலாம். நடந்தவை மோசமானவையாக இருந்தாலும் விட்டுத் தொலைப்போம். 
சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்தை 2011 –க்கான சிறந்த படைப்பு எனத் தேர்வு செய்த திருப்பத்திலிருந்து நல்லது நடக்கப்போகிறது எனத் திருப்தி அடையலாம். ஆனால் அப்படியொரு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அடுத்த ஆண்டு இன்னொரு ஆளை முடிவு செய்து விட்டு அதற்கான காரணங்களையும் சொல்லாமல் பதுங்கிக் கொள்ளத்தான் போகிறது அதன் தேர்வுக்குழு. தமிழுக்கான சாகித்திய அகாடெமி விருது எப்போதும் நபரை மையப் படுத்தியே நடக்கிறது; இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது. சு. வெங்கடேசன் வயதில் இளையவராக இருக்கலாம்; ஒரேயொரு நாவலை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் அவர் செயல்படும் துறைகளில் அவரது தேடலை- சாதனையை அறியாமல் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். தமிழ்நாட்டில் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அவர். தமிழ்நாட்டின் கலை இலக்கிய அமைப்புகளிலேயே அதிகக் கிளைகளைக் கொண்டதும் உறுப்பினர்களையுடையதும் அதுதான். சு.வெங்கடேசனின் இயக்கம் சார்ந்த செயல்பாடு அதன் கிளையொன்றிலிருந்துதான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வெளிப்பட்டது. அதே கிளையிலும் அக்கிளை அடங்கிய மதுரை மாவட்ட மாவட்ட அமைப்பிலும் அதிகம் எழுதுபவர்களாகவும், கலை இலக்கியச் சொல்லாடல்களை நிகழ்த்து பவர்களாகவும் இன்னும் பலபேர் இருக்கக் கூடும். அவர்களையெல்லாம் தாண்டி மாநில அளவுக்கு அவர் முன்னேறியுள்ளார் என்றால், அந்த அமைப்புக்குள் அவரது செயல்பாடு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை வெளியில் இருப்பவர்களால் கணித்துவிட முடியாது என்றே நினைக்கிறேன் கலை இலக்கிய அமைப்புக்கு அரசியல் தளத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் செயல்பட்ட கட்சி தீர்மானம் செய்த போது கூட அவர்தான் அந்த வாய்ப்பைப் பெற்றார் என்பதைத் தமிழ்நாட்டின் சுத்தக் கலை இலக்கியவாதிகள் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். மதுரை நகரத்துக்குள் அடங்கிய திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டுக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவற விட்டவர். அது நடந்தது போது இன்னும் 10 ஆண்டுகள் இளையவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கும் என்றொரு மரபுத்தொடர் உண்டு. அரசியலில் அதிகாரத்தைத் தரவல்ல தேர்தல் தோல்வி என்னும் கதவு மூடினாலும் கலை இலக்கியத்துறை என்னும் கதவைத் திறந்து தேடிக் கொண்டே இருந்தார். அரசியலை ஆணையில் வைத்துச் செயல்படும் இடதுசாரிகளுக்குக் கலை இலக்கியத்துறை அரசியல் அதிகாரத்தை அடைவதற்கான ஒரு திறப்பு என்பதும் நன்கு தெரியும். மதுரை மாவட்டத்தில் தீண்டாமையின் அடையாளமாக மாறிய உத்தப்புரத்தை அரசியல் நிகழ்வா? கலை இலக்கிய நிகழ்வா? எனப் பிரித்துக் காட்ட முடியாதபடி ஒன்றாக்கி இந்தியக் கவனத்துக்குக் கொண்ட சென்றதில் சு. வெங்கடேசனின் பங்கு எத்தகையது என்பதும் கூட வெளியில் இருந்து செயல்படும் கலை இலக்கியவாதிகள் அறியாதது. அவர் களப்பணியையும் எழுத்துப் பணியையும் பிரித்துப் பார்க்கவில்லை  என்பதற்கு இவையெல்லாம் தான் ஆதாரம் என்று நினைத்து விடவேண்டாம். அவர் எழுதியுள்ள காவல் கோட்டம் நாவலே அத்தகைய ஆதாரம் தான்.

அந்த நாவலை வாசிக்கத் தொடங்கிய போது எனது முனைவர் பட்ட ஆய்வின் தொடக்க ஆண்டுகள் நினைவுக்கு வந்தன (நாயக்கர் காலத் தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமுதாயம் என்பது அதன் தலைப்பு). கி.பி. 15-17 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களை வாசித்துத் தரவுகள் சேகரிப்பதோடு, ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைத்த நாயக்கர் கால வரலாற்று நூல்களையும், ஆதாரங்களையும் தேடித் தொகுத்து வைத்துக் கொண்டு அக்கால கட்டத்தின் சமூக நிறுவனங்கள் எவ்வாறு இருந்திருக்கக் கூடும்; அதில் வெளியில் இருந்து வந்த நாயக்கர்களுக்கும் உள்ளூர் அதிகாரக்குழுக்களுக்கும், அதிகாரமல்லாத மக்களுக்கும் என்னவகையான உறவுகள் இருந்திருக்கலாம் என்ற யூகங்களுக்கும் முடிவுகளுக்கும் சென்று ஆய்வை முடித்தேன்.ஆனால் சு.வெங்கடேசனும் என்னைப் போலவே அந்த நூல்களையெல்லாம் வாசித்துக் குறிப்புகளைத்தொகுத்துள்ளார் என்றாலும்,. ஆய்வாளர் என்ற அடையாளத்தைக் குறைத்துக் கொண்டு புனைகதையாளர் என்ற அடையாளத்தை நோக்கி நகர்ந்துள்ளார் என்ற வேறுபாட்டை உணர்ந்தேன்.

 எழுத்துத் தரவுகள் எல்லாவற்றையும் தொகுத்ததோடு, மதுரை மாவட்டத்தில் முக்குலத்தோர்களும் (குறிப்பாகக் கள்ளர்களும்) நாயக்கர்களும் அடர்த்தியாக வாழும் கிராமங்களில் கிடைத்த பேச்சுமொழித் தரவுகளையும் பிணைத்து ஒரு குறிப்பிட்ட ஊரின் மையத்தை நோக்கி நகர்த்திச் சென்று வரலாற்றுப் புனைவாக்கத்தைச் செய்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அதற்காக அவரைப் பாராட்ட நினைத்த போது வரலாற்றைப் புனைவாக்கும் போது கவனிக்க வேண்டிய சில அம்சங்களைத் தவற விட்டிருந்தார் என்பதால் அதைப் பற்றி எழுதாமல் தவிர்த்து விட்டேன். திரும்பவும் நினைக்கும்போது நாவல் தன்மை பற்றிய கேள்விகளும் பதில்களும் எதிர்மறை எண்ணங்களையே அதிகப்படுத்துகின்றன. அதே நேரத்தில் ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்குவது எனத் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்ட சு. வெங்கடேசன் வேலையும் உழைப்பும் அபாரமானது எனச் சொல்வதற்குத் தயக்கமில்லை. அந்த உழைப்பும் நோக்கமும் கவனிக்கப்பட வேண்டியது என்பதிலும் பாராட்டப்பட வேண்டியது என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. மாவட்டந்தோறும் விமரிசனக்கூட்டங்கள் நடத்தப்பட்ட போது அமைப்பு பலத்தினால் நடக்கிறது என்ற எண்ணமே தோன்றியது.

சாகித்திய அகாடெமிக்கு முன்பே கூட காவல் கோட்டம் இன்னொரு விருதைப் பெற்றது. அப்போது இத்தகைய சர்ச்சைகள் எழவில்லை. ஆனால் சாகித்திய அகாடெமி விருதுக்குரிய படைப்பு எனச் சொல்லும்போது சர்ச்சைகள் எழுகின்றன. காரணம் முன்பே சொன்னது போல் அது  சிறந்த படைப்பு இல்லை என்பதனால் அல்ல என்பதே எனது கருத்து 2010 ஆண்டுப் படைப்புகளில் ” சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக நாஞ்சில் நாடனுக்கு விருது வழங்கப் பட்டது.  அந்த ஆண்டில் அதுதான் ஆகச் சிறந்த தமிழ்ப் படைப்பா? எனக் கேட்டால், நாஞ்சில் நாடனே இல்லை என்று சொல்லக் கூடும். அதே போல் விருது வழங்கப்பட்ட படைப்பாளிகளின் ஆகச் சிறந்த படைப்புக்குத் தான் விருது வழங்கப் பட்டதா? என்றால் ஒருபோதும் அப்படி நடக்கவில்லை, அப்படி நடந்தால் கவிஞர்களை நாடகாசிரியர்களாகவும் நாவலாசிரியர்களாகவும், சிறந்த சிறுகதை ஆசிரியர்களை நாவலாசிரியர்களாகவும், நாவலாசிரியர்களைச் சிறுகதையாசிரியர் களாகவும் அடையாளப்படுத்தும் அபத்தம் எல்லாம் எப்படி நடக்கும்?. அப்படியானால் பிழை எங்கேயிருக்கிறது. இந்த ஆண்டின் ஆகச் சிறந்த படைப்பாகக் கருதி இந்த விருதை வழங்குகிறோம் எனச் சொல்வதிலா? அல்லது காரண, காரியங்கள் எதுவும் சொல்லாமல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் தமிழ் எழுத்தாளர் பெயர் ஒன்றை அறிவிப்பதிலா? .இந்தக் கேள்வியைத் தான் சர்ச்சையின் அடிப்படைக் கேள்வியாக்க வேண்டும் என நினைக்கிறேன்.
 சாகித்திய அகாடெமி என்னும் அரசு சார்ந்த அமைப்பும்சரி, அதில் தேர்வு செய்யப்பட்டு குழுவாகச் செயல்படும் அமைப்புக் குழுவும் சரி, அது உருவாக்கும் தேர்வுக் குழுவும் சரி தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வு நடைமுறையைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் பதில் சொல்லும் பொறுப்பு இல்லாமல் அரசு அமைப்புகள் எப்படி இயங்க முடியும் என்ற கேள்வியைக் கூடத் தள்ளி வைத்து விடுவோம். பதில் சொல்லும் போது கிடைக்கும் இன்னொரு வாய்ப்பு ஒன்று இருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்யும் வாய்ப்பு. அது. அதற்காகவாவது தேர்வுக்குழுவோ, அமைப்புக்குழுவோ தங்கள் நடைமுறையை எழுத்து மூலம் தரலாம். 1996 இல் இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவல் வந்தது. அடுத்த ஆண்டு சாகித்திய அகாடெமி விருது அறிவிக்கப்பட்ட போது சுந்தரராமசாமி தனது எதிர்வினையில் இப்படிச் சொல்லியிருந்தார். சிறந்த படைப்புக்கு விருது என்றால் நான் கோவேறு கழுதையைத் தான் பரிந்துரை செய்வேன். அப்பரிந்துரைக்கான காரணத்தையும் நான் சொல்லத்தயாராக இருக்கிறேன். அதை ஏற்கெனவே நான் எழுதவும் செய்துள்ளேன் என்பதாக அவரது எதிர்வினை இருந்தது. அந்த ஆண்டு இமையம் தனது கோவேறு கழுதைக்காக விருது வாங்கியிருந்தால் சு.வெங்கடேசன் காவல் கோட்டம் சந்திக்கும் சர்ச்சையைப் போலவும், இதற்கும் கூடுதலாகவும் சர்ச்சையைச் சந்தித்திருக்கும் என்பது வேறு விசயம்.
சாகித்திய அகாடெமி விருதுக்கான பெயரை அறிவித்தவுடன் சர்ச்சையக் கிளப்புவதை விட, அதன் ஆரம்பக் கட்டத்திலிருந்தே – தேர்வுக்குரிய பட்டியல் தொகுப்பு முறை, அத்தொகுப்பை பத்துநூல்கள் அடங்கிய சிறு தொகுப்பாக மாற்றுவது, அதற்குப் பின் அந்தப் பத்தை மூன்றாகக் குறைப்பது, அதிலிருந்தோ அதில் இல்லாமலோ புதிதாக ஒன்றைத் தேர்வு செய்து அறிவிப்பது என நடக்கும் தேர்வு முறை- ஒவ்வொன்றையும் வெளிப்படையாக்க வேண்டும் எனக் கேட்கலாம். வெளிப்படையாக்குவது ஜனநாயக நடைமுறை என்பதற்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரிடமும் இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற இலக்கியத்திறனாய்வு நோக்கத்திற்காகவும் கூட இது தேவை. ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவரின் சிபாரிசுப் படி மாதாந்திரச் சிறுகதையைத் தேர்வு செய்து பரிசளித்து விட்டு, ஆண்டுச் சிறந்த சிறுகதையென அந்தப் பன்னிரண்டில் ஒன்றைச் சொல்ல இலக்கியச் சிந்தனை அமைப்பு ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. அப்படித் தேர்வு செய்யும் எழுத்தாளர் அல்லது விமரிசகர் தான் ஏன் இந்தக் கதையை பன்னிரண்டு கதைகளுக்குள் முதன்மையானதாகக் கருதுகிறேன் எனச் சொல்வதற்கு அவர் நம்பும் இலக்கியக் கோட்பாடு அல்லது மதிப்பீடு சார்ந்து காரணங்கள் சொல்லி எழுதித் தர வேண்டும். அதைத்தான் இலக்கியச் சிந்தனை முன்னுரையாகச் சேர்த்து இலக்கியச் சிந்தனைத் தொகுப்பாக வெளியிடும். அந்த முன்னுரைகளையெல்லாம் தொகுத்துப் படித்தாலே இலக்கியம் பற்றிய பார்வைகள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பது ஒரு இலக்கியவாதிக்கு - இலக்கிய மாணவனுக்கு அத்துபடியாகும்.
சர்ச்சைகளை உருவாக்கும் நோக்கத்தைத் தாண்டி,திட்டவட்டமான அடிப்படை களிலிருந்தும் மதிப்பீடுகளிலிருந்தும் வெளிப்படையாக விருதுத் தேர்வைத் தொடங்க வேண்டும் என முதலில் கேட்கலாம். ஊடகங் களையும் கணினி வழி இணையத்தள வசதிகளையும் பயன்படுத்தி அடிப்படைப் பட்டியலைத் தயாரித்து அடுத்த கட்டத்திற்கு நகரத் தொடங்கினாலே வெளிப்படைத் தன்மை ஆரம்பித்து விடும். சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் விருது பெற்றதைச் சரியான தேர்வு எனக்  கொள்ளத் தயாராகும்போது அடுத்த ஆண்டு தவறு நடக்கக் கூடாது என்ற கவனத்தோடு இதை முன் வைக்கலாம். அந்த முதல் அடியைக் கடைசிவரை கொண்டு போய்ச் சேர்ப்பதில் - பாதையை உருவாக்குவதில்- சு.வெங்கடேசனுக்கே அதிகப் பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் இந்த ஆண்டின் விருதாளர் மட்டுமல்ல; தமிழ் நாட்டின் ஆகப் பெரும் கலை இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்னும் அதிகாரம் கைவரப்பெற்றவரும் கூட.
 ===================================================================  


 நன்றி: அம்ருதா/ பிப்ரவரி, 2012

கருத்துகள்

jain kanjiracode இவ்வாறு கூறியுள்ளார்…
எஸ்.ராமகிருஷ்ணன் காவல் கோட்டம் நாவல் ஒரு நாவலே இல்லை என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.நாவலில் கள்ளர் இன மக்களின் வாழ்வியல் அவலங்கள் சொல்லப்படவில்லை. கற்பனை வளம் இல்லை என்றுக் கூறியிருக்கிறார். இதை நீங்கள் ஏற்கிறீர்களா?
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இதே நாவல் பற்றியும் அவர் எத்தகைய இயக்கவாதி என்பது பற்றியும் சமீபத்தில் மிக அதிகமாக சர்ச்சைகளை கிழப்பிய சுட்டி இது

http://maduraimarxist.blogspot.in/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்