ஒரு விருது: பாராட்டு விழா


தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய நூல்களை அச்சிடும் உயிர்மை பதிப்பகம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பீர்களா?

இயல் விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனை வாழ்த்துகிறேன். இப்படியொரு பாராட்டு விழா ஏற்பாடு செய்த உயிர்மை பதிப்பகத்தின் போக்கிற்காகக் கவலைப்படுகிறேன்.

எப்போதும் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் அந்த எழுத்தாளர்களின் எழுத்துகளின் மீது கருத்து சொல்லும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொள்வேன். பல நேரங்களில் அது விமரிசனம் என்ற எல்லையைத் தொடாமல் வெறும் கருத்து என்பதாக மட்டுமே அமையும்.
எஸ்.ராமகிருஷ்ணன் தொடக்கத்தில் எழுதிய சிறுகதைகள் கவனிக்கத் தக்க கதைகளாக எனக்குப் பட்டதில்லை. கதையம்சம் குறைவானவைகளாகக் குறிப்பாகக்  காலப்பிரக்ஞையைத் திட்டமிட்டே விலக்கி வைப்பவை களாகக் கதைகளைத் தருவதையே அவர் தொடர்ந்தார்.  வாசிப்பவனிடம் புதிர்த்தன்மையை உருவாக்கும் நோக்கத்தோடு அதிகப்படியான விவரணைகளைச் செய்து மொழியமைப்பைச் சிதைத்துக் கொண்டே வளர்ச்சி அடைந்தன அவரது சிறுகதைப் படைப்புகள்.
நாடகமாக அவர் எழுதியவை புதிய அடையாளம் எதையும் உருவாக்கிக் காட்டவில்லை. பெரும்பாலானவை தனக்குத் தானே பேசும் அக உரையாடலின் வழி விரிந்தவை. மனவோட்டச் சிறுகதைகளின் இன்னொரு வடிவமாக நாடகப் பனுவலைக் கருதியதின் விளைவுகள். நாடகப்பனுவல்கள் அப்படி இருக்கக் கூடாது என்பதல்ல எனது நிலைப்பாடு. அப்படி அமையும் நாடகப்பனுவல்கள் மிகக் குறைவான பார்வையாளர்களை நினைவில் கொள்ளும் சோதனைச்சாலை அரங்குகளில் மேடையேற்ற வேண்டியவையாக அமையத்தக்கன. முதல் நாடகமான உருளும் பாறைகள் தொடங்கி கடைசியாக வந்த நாடகம் வரை அந்தத் தன்மையில் மாற்றமே இல்லை. விமரிசனப் பார்வையை மையப்படுத்தாமல் நினைவிலிருந்து எழுதும் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகளின் புனைவு மொழி நம்பகத் தன்மையைப் பற்றிய ஐயத்தைத் தக்க வைத்துக் கொண்டவை என்றாலும் வாசிப்பு சுகத்தையும் பயண அனுபவங்களையும் தருவனவாக அமைந்தன. இருந்த இடத்திலேயே உலகத்தைச் சுற்றி வர ஆசைப்படும் நகர்சார் நடுத்தர வர்க்க வாசகர்களுக்குக் கிறங்கவைக்கும் போதையாக விவரணைகளை மாற்றியதன் வழியாகவே ஆனந்தவிகடனின் முத்திரை எழுத்தாளராக ஆனார்.

முத்திரைச் சிறுகதைகளைக் கூட எழுதினார். முத்திரைச் சிறுகதைகளை எழுதிய ஜெயகாந்தனைத் தொடர்கதை ஆசிரியராக- நாவலைத் தொடர்கதையாகத் தரும் ஆசிரியராக ஆக்கிக் கொண்ட ஆ.வி., எஸ்.ரா.வை அப்படி ஆக்காததற்குக் காரணம் அவரது நாவல் மொழி வேறு விதமாக இருந்தது தான். உறுபசி, நெடுங்குருதி, யாமம் போன்ற நாவல்களைத் தொடர்கதைகளாக எழுதி விட முடியாது. யாமம் நாவலை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகளின் ஆகச் சிறந்த எழுத்தாகவும், தமிழின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகவும் எனது வாசிப்பு நினைக்கிறது. யாமம் நாவலை எழுதிய எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவர் இயல் விருது பெற்ற இந்த நேரத்தில் வாழ்த்தோடு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தமிழ் நாட்டிலிருந்தாலும் அவருக்கு நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள ஆசைப்பட்டிருக்க மாட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் வாசிப்பதற்குத் தோதான எழுத்துகளைத் தரும் எழுத்தாளர்கள் எவர் விருது பெற்றாலும் வாழ்த்துத் தெரிவிக்கத் தவறுவதில்லை. தொடர்பு முகவரி இருந்தால். நேரடியாகவும் இல்லையென்றால் முகப்பனுவல் போன்ற சமூக இணையங்களில் யாருடனாவது சேர்ந்தோ எனது மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்து விடுவேன். இப்போது சாகித்ய அகாடெமி விருது பெற்ற சு.வெங்கடேசனுக்கும், பத்மஸ்ரீ விருதுபெற்ற ந.முத்துசாமிக்கும், முகப்பனுவல் வழியாகவே வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தனிநபர்களும் குழுக்களும் ஏற்பாடு செய்துள்ள விருதுகளான விஷ்ணுபுரம் விருது- பூமணி, பாஷா பரிஷத் விருது- சு.வேணுகோபால், சாரல் விருது- வண்ணநிலவன், வண்ணதாசன், போன்றோருக்கும் இப்போது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளக்கு விருது பெற்ற தேவதச்சனுக்கு வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டியதில்லை. காரணம் அந்த விருதைத் தேர்ந்தெடுத்த குழுவில் நானும் இருந்து தான் தேர்வு செய்தேன். இந்த ஆண்டு மட்டுமல்ல; கடந்த ஆண்டு திலிப்குமாரைத் தேர்வு செய்த போதும், அதற்கு முந்திய ஆண்டு கவி. விக்ரமாதித்யனைத் தேர்வு செய்த போதும் நான் இருந்தேன். என்னோடு கவி சிபிச்செல்வனும், தொடர்ந்து தனது இலக்கிய வாசிப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் விருத்தாசலம் சபாநாயகமும் மற்ற இருவர்கள். ஒவ்வோராண்டும் இரண்டு மூன்று சந்திப்பு அல்லது இணைய உரையாடல் வழியாகவே விளக்கு விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுத்தோம். எங்கள் பணிக்காலம் முடிந்து விட்டது.  

விளக்கு விருதைப் போன்றதொரு விருதை அயல் நாட்டுத்தமிழர்கள் அளிக்கும் விருதை எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுள்ளார். அதற்காக வாழ்த்துத் தெரிவிக்க நினைத்த போதே உயிர்மை பதிப்பகத்தின் மனுஷ்யபுத்திரனின் அறிவிப்பு தடுத்து விட்டது. மாபெரும் பாராட்டு விழா நடைபெறும் என அவர் அறிவித்தார். அப்போதே ”பதிப்பாளர்கள் எழுத்தாளர்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்; நல்ல மாற்றம் தான் “என்றே பின்னூட்டம் போட்டேன். ஆனால் அந்த மாற்றம் இப்படியொரு ஆபத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும் என நினைக்கவில்லை, அமெரிக்காவிலிருக்கும் தமிழ் அமைப்புகளின் சார்பில் வழங்கப்படும் விளக்கு விருதைப் போன்றதொரு விருதே இயல் தோட்ட விருது. கனடாவிலிருக்கும் தமிழ் அமைப்புகள் தரும் இந்த விருதில் உள்ள வேறுபாடு தொகை கூடுதல் என்பது மட்டும் தான். அதிகப்படியான தொகை வருவாய் உள்ள விருது உயர்வானது என்ற நிலை எனக்கு உடன்பாடு அல்ல. ஒரு பதிப்பகம் தனது எழுத்தாளர்களைப் பிரபலப்படுத்துவதன் மூலம் தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புவது தவறில்லை என்று வாதிட்டால், உயிர்மை தேவதச்சனுக்கும் இப்படியொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கும் விளக்கு விருதுபெற்ற தேவதச்சனின் படைப்புகளையும் உயிர்மைதானே வெளியிட்டிருக்கிறது. அது சாத்தியமில்லை என்பது என் அனுமானம். அதற்கான முயற்சியை உயிர்மை மேற்கொண்டால் தேவதச்சன் மறுத்துவிடுவார்; ஆனால் எஸ்.ராமகிருஷ்ணன் முன்னின்று செய்திருக்கிறார்.

தனிமனிதர்கள் பிரபலமாக ஆக விரும்புவதை யாரும் தடுக்க வேண்டியதில்லை. நாம் செயல்படும் தளத்தை நன்கு அறிந்தவர்களின் வழியாக அடையும் பிரபலம் சிக்கல்களை உண்டாக்குவதில்லை. அதற்கு மாறாக  நம்மை அறியாதவர்களின் வழியாக அடையும் பிரபலம் பல நேரங்களில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். எஸ்.ராமகிருஷ்ணன் என்னும் கதை சொல்லியை –சினிமாவுக்குக் கதை சொல்லும் ஒரு நபரை- ரஜினிகாந்த் அறிவார். வைரமுத்துவுக்கு அதுவும் கூடத் தெரியாது. அவர் நம்பும் கவிதையை- புனைகதையை ராமகிருஷ்ணன் எழுதியவரில்லை. என்றாலும் இவ்விருவரும் பாராட்டப்போகிறார்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் கலைஞர் மு.கருணாநிதியை வாழ்த்திய அதே சொற்களால்- அதே மாதிரியான சொற்களால் – அவர்களுக்குச் சொந்தமில்லாத சொற்களால்- ராமகிருஷ்ணனை பாராட்டக் கூடும். அந்த வார்த்தைகளை மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கும் ஒலியாகக் கருதி விடும் போதைக்குள் எஸ்.ராமகிருஷ்ணன் தங்கி விடாமல் இருக்க வேண்டுகிறேன். அப்படி ஆகி விட மாட்டார் என்பது தெரியும். அவர் நம்மில் பலரை விடவும் அதிபுத்திசாலி.  

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
சாரு நிவேதிதா தனது நூல் விழாவிற்கு ஜோதிர்மயி, குஷ்பூ ஆகியோரை அழைத்தது குறித்து இந்த அளவு கண்டனம் எழ வில்லையே ஏன்.
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
சாருவின் விருப்பச் சேர்க்கையே குஷ்பு, ஜோதிர்மயி, த்ரிஷா என்பதான அடையாளங்கள் தான். அதனால் வருத்தப்பட ஒன்றும் இல்லை. அத்தோடு நான் தெரிவிப்பது கண்டனம் அல்ல; வருத்தம்
ரவிச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகச்சரியான கருத்துக்கள்!
எம்.ஏ.சுசீலா இவ்வாறு கூறியுள்ளார்…
எப்படி இருக்கிறீர்கள் ராமசாமி...நலம்தானே.விருதுக்குப் பாராட்டுச் சொல்லும் நேரத்தில் விழா பற்றிய என் போன்றவர்களின் ஆதங்கத்தையும் மிக் நேர்மையாக நடுநிலையுடன் முன் வைத்திருக்கிறீர்கள்.அதிலும் வைரமுத்து விஷ்யத்தை மிகவும் ரசித்தேன்...எனது மற்றொரு மொழிபெயர்ப்பு-தஸ்தயெவ்ஸ்கியின் இடியட்/அசடன் வெளியாகி விட்டது என்னும் நற்செய்தினையும் உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்