January 04, 2012

தோருண்: நடந்தே பார்க்க வேண்டிய நகரம்.கிறிஸ்துமஸ் இரவில் வார்சாவைச் சுற்றிவந்தபோது இந்தத்திட்டம் உருவானது. இந்தக் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வார்சா அல்லது ஒரு கிராமம் அல்லது தூரத்திலிருக்கும் நகரம் ஒன்றில் ஓரிரவாவது தங்கலாம் என்று திட்டமிட்டோம். போலந்து நகரங்களைப் பற்றிய குறிப்புகளுக்காக இணையத்துக்குள் செல்ல மனம் விரும்பவில்லை. முதல் அனுபவங்கள் தேவை என்பதால் அதை நான் செய்வதில்லை.  படங்கள், விவரங்கள், வரலாறு என எல்லாவற்றையும் தரும் விக்கிபீடியாக்கள் ஒருவிதத்தில் முதன்முதலாய்ப் பார்க்கும் ஆர்வத்தைக் குறைத்து விடுகின்றன.

வார்சாவிற்கு அடுத்து அதிகம் உச்சரிக்கப்படும் பெயராகக் க்ராக்கோ இருக்கிறது. தமிழ்நாட்டின் சென்னை தலைநகராக இருந்த போதும் மதுரையை இன்றும் பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதுவது போல க்ரோக்கோவைப் போலந்துக்காரர்கள் பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதுகிறார்கள். அங்கு செல்லும் தருணம் இப்போது இல்லை என மனம் சொன்னது. க்ராக்கோவையொத்த இன்னொரு நகரத்தைப் பற்றி யோசித்தபோது தோருண் பற்றிய தகவல்கள் அதிக ஆர்வத்தை ஊட்டின. அந்த ஊர் வரை காரில் செல்லலாம். ஆனால் ஊருக்குள் நடந்துதான் சுற்ற வேண்டும் எனச் சொன்னார் நண்பர் சந்துரு. போலந்தில் இன்னும் ஆறு மாதம் தான் இருப்பார் என்பதால் மகள் வைஷ்ணவிக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையில் புதுப்புது இடங்களைக் காட்டி விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். போவது என்று முடிவு செய்தவுடன் இணையத்திற்குள் புகுந்து தங்குவதற்கு ஒரு விடுதியைப் பதிவு செய்து விட்டுக் காலையில் ஆறரை மணிக்குத் தயாராக இருங்கள் என்றார். தோருன் போவதற்கு மனம் தயாரானது. தோருண் நகரம் வானியல் அறிஞன் நிக்கோலஸ் கோபர்நிகஸ் பெயரோடு அதிகம் பிணைப்பு கொண்ட நகரமாக இருக்கிறது.

29-12-2011 காலை ஏழு மணிக்கெல்லாம் வார்சாவை விட்டு வெளியேறி விட்டோம். சாலைப் போக்குவரத்து விதிகளைச் சரியாகப் பின்பற்றினால் இரண்டரை மணிநேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் என்றார் சந்துரு.விதிகள் மீறப்படும்போது விசிலடித்துக் கூப்பிட்டுத் தண்டத்தொகை அல்லது கையூட்டு வாங்க காவல்துறை வாகனங்கள் எங்கும் காத்திருப்பதில்லை. சாலையின் குறிப்பிட்ட இடைவெளியில் வைக்கப்பட்டுள்ள காமிராக்கள், அதிர்வு மூலம் வேகக்கணிப்பு செய்து தகவல் தரும் கண்காணிப்பு அமைப்புகள் போன்றன விதிகளைப் பின்பற்றச் செய்கின்றன. நகர எல்லைக்குள் 50 கிமீ என்றால் அதைத் தாண்டி விட முடியாது. எல்லா இடங்களிலும் ஆளில்லாத போக்குவரத்து அமைப்புகள் தான். மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டம் அல்லது தண்டனை என்பதால் மீறுகிறவர்கள் குறைவு.
நகரத்தைத் தாண்டி 110 கிலோமீட்டர் வேகத்தில் போன வண்டி தூரம் தூரமாகத் தெரிந்த சின்னச் சின்னக் கிராமங்கள் வேகமாகக் கடந்து சென்றன. போலந்து கிராமங்கள் நம் நாட்டில் இருப்பது போல அடர்த்தியாக வீடுகள் கொண்டவை அல்ல. சின்னச்சின்ன வீடுகளாக இருந்தாலும் தனித்தனியாகவே இருக்கின்றன. தோட்டமும் வீடும் சேர்ந்து இருக்கும் அமைப்புகளே விவசாயிகளின் குடியிருப்புகளாக இருக்கின்றன. விவசாயம் இல்லாத குளிர்காலத்தில் பண்ணைக்குள் இருக்கும் கால்நடைகளைக் கவனிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு விவசாயியும் பசுமாடுகள், பன்றிகள், கோழிகள் வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் வருமானத்தை உறுதி செய்துகொள்கின்றனர். அதற்கேற்ப வீடுகளைச் சுற்றிய கட்டமைப்புகள் இருக்கின்றன.
வார்சா நகர எல்லையைத் தாண்டி இயற்கையான மண்ணில் கால் வைக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த போது பசிக்கும்போது சொல்லி விடுங்கள் நிறுத்தி விடுகிறேன் என்றார் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த சந்துரு.வார்சாவிலிருந்து 100 கிலோமீட்டர் தாண்டியவுடன் கறுப்பு மண் பூமிக்குப் பதிலாகக் காடுகள் நிறைந்த கிராமங்கள் வந்து போயின. மான்கள் நிரம்பிய வனங்கள் என்பதைச் சாலையோரப் படங்கள் காட்டின. அத்தகைய வனப்பகுதியில் அமைந்த எரிபொருள் நிரப்பும் இடத்தில் நிறுத்திச் சாப்பிட இறங்கினோம். இறங்கிச் சாப்பிடவும் பார்த்து ரசிக்கவுமாகச் சின்னச் சின்னக் குடில்களை அமைத்திருந்தனர். குடில்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்ற ஆசையுடன் இறங்கினால் வீசிய காற்றும் குளிரும் திரும்பவும் காருக்குள் விரட்டியது. நம்மூரில் குளிரூட்டப்பட்ட கார்கள் என்றால், இங்கு வெப்பக் காற்று கசியும் கார்கள். காருக்குள் இருந்தபோது தெரியாத குளிர் கதவைத் திறந்தவுடன் தடவி உறைத்தது. காருக்குள் அமர்ந்து சாப்பிட்டுத் திரும்பவும் கிளம்பித் தோருண் போன போது பத்தரைமணி ஆகியிருந்தது.
முன்பதிவு செய்திருந்த ஈடாப் விடுதியில் பொருட்களை இறக்கி வைத்து விட்டு ஒரு மணிநேரம் ஓய்வு. மதிய உணவுக்குப் பின் நடக்கத் தொடங்கி இரவு தொடங்கும் வரை நடந்து கொண்டே இருந்தோம். சுற்றுலாப் பயணிகள் வந்து பார்க்க வேண்டிய இடங்களில்  வாகன நிறுத்தப் பகுதிகள் கிடையாது. காரில் நகரத்துக்குள் செல்லலாம், ஆனால் இறங்கிச் செல்ல முடியாது. காரில் இருந்தபடியே பார்த்துவிட்டுச் செல்பவர்கள் அப்படிச் செய்யலாம். அப்படிப் போனால் தோருன் நகரத்தைப் பார்த்ததாக ஆகாது. 

ஐரோப்பாவின் பெருநகரங்கள் எல்லாவற்றிலும் தொன்மை நகரப் பகுதியொன்றைத் தக்க வைத்திருக் கிறார்களாம். அங்குள்ள சாலைகள் பெரும்பாலும் கல்பாளங்கள் பாவிய சாலைகளாக இருக்கும். தார்ச் சாலைகள் இருக்காது. வார்சாவில் பல்கலைக்கழகம் இருக்கும் பகுதி தொன்மைப்பகுதி.  ஆனால் தோருண் நகரம் முழுவதும் கல்பாளங்களால் ஆன சாலைகள் தான். பெரிய நகரம் அல்ல. நகரசபைதான் அதன் நிர்வாக அளவு. நடுவே தாமிரபரணி திருநெல்வேலியைப் பிரித்து பழைய நகரத்தை நெல்லையாகவும், புதிய நகரத்தைப் பாளையங்கோட்டையாகவும் பிரித்துக் கோடு போடுவது போல தோருன் நகரத்தை விஸ்துலா ஆறு பிரித்து நிற்கிறது. ஆற்றின் கரையோரத்தில் கோட்டைச் சுவருக்குள் இருப்பது போல தோருன் நகரம் இருக்கிறது.
கோபர்நிக்கஸ் சிலையருகே உள்ள கோபுரத்தின் உயரத்தை அதன் திருகல் படிக்கட்டுகளைக் கொண்டு கணக்கிட வேண்டும். உச்சிக்குச் சென்று நகரத்தை நோட்டம் விடலாம். கீழே பார்க்கும்போது தலைசுற்றல் ஏற்படாமல் இருக்க வேண்டும். செவ்வரி படர்ந்ததாகத் தோருன் இருப்பதற்குக் காரணம் பெரும்பாலான கட்டடங்கள் ஓடுகளால் வேயப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். கிறிஸ்தவ சமயத்தின் அனைத்துப் பிரிவுகளும் தங்களுக்கான கோயில் ஒன்றை இந்த நகரத்தில் கட்டியுள்ளதைப் பார்க்க முடிகிறது. எல்லா நகரங்களிலும் அவை இருக்கும் என்றாலும் இவ்வளவு பக்கத்தில் இருப்பது தோருன் நகரத்தில் தான் என்று சொன்னார்கள். கோபுரத்திலிருந்து இறங்கி மூன்றடுக்குக் கட்டிடத்தில் நிற்கும் ஓவியங்களையும் புகைப்படங்களையும் சிற்பங்களையும் நின்று நிதானமாகப் பார்க்க சில நாட்கள் வேண்டும். வைக்கப்பட்டிருக்கும் விதமும் ஒளியமைப்பும் ஒவ்வொன்றையும் கண்ணின் அருகில் நிறுத்துகின்றன. ஒரு அரங்கில் வரிசையாக சுவரோரத்தில் நாற்காலிகள் வரிசையாகப் போட்டப்பட்டிருப்பதே அழகாக இருக்கிறது. ஒவ்வொரு அரங்கத்திலும் காட்சியகப் பணியாளர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். படம் எடுக்கத் தடை சொல்வதில்லை. ஆனால் விளக்கை உமிழ்ந்து படம் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீற வேண்டாம் என்பதை நினைவுபடுத்தவே அவர்கள் நிற்கிறார்கள்.
காட்சியகத்தின் உள்ளேயும் வெளியேயும் புறாக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருக்கின்றன. இன்னொருபுறம் ரோஜாக்களை விற்கும் கடைகள் வரிசையாக நிற்கின்றன. நினைவுப்பொருட்களை விற்கும் கடைகளும் இருக்கின்றன. இந்தியப் பொருட்களை விற்கும் கடைகூட ஒன்று இருக்கிறது. பெரிய கதீட்ரல் பக்கத்தில் இருக்கிறது. அமைதியாக உட்கார்ந்து வெளிச்சத்தை நோக்கிய பிரார்த்தனைகள் நடக்கின்றன. அவசரம் இல்லாமல் பலரும் நடக்கின்றனர். அங்கிருக்கும் போலந்துக் காரர்கள் கூட வார்சாவில் இருப்பவர்களை விடப் பழைமை படிந்தவர் களாகவே இருக்கிறார்கள்.  நம்மூரில் காலில் சலங்கை கட்டிக் கண்கட்டு வித்தை, வளையம் சுத்துதல், சின்னதாக ஆட்டம்போடுதல் போன்ற தெருவோரக் காட்சியை அங்கும் காண முடிந்தது. அவர்களிருவரும் கணவன் மனைவியா என்று தெரியவில்லை. ஆண் உயரமாகவும் அவ்வளவு உயரத்துக்குப் பொருந்தாத உயரத்துடன் ஒரு பெண்ணும் அந்த வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். நீளமான காவல்கம்பு போன்ற கம்பைத் தனது உடலில் கழுத்திலிருந்து இடுப்பிற்கும், இடுப்பிலிருந்து கழுத்துக்கும் கையால் பிடிக்காமல் உருட்டி ஏற்றி இறக்கிக்காட்டினார் அவர். அந்தப் பெண்ணோ மூன்று வண்ணங்களில் இருந்த மூன்று கட்டைகளைக் கீழே விழாமல் மாற்றி மாற்றித் தூக்கிப் போட்டுப் பிடித்துக் காட்டினாள். கைவசம் உள்ள தொப்பி, கயிறு போன்ற பல பொருட்களைப் பயன்படுத்திக் காட்டப்பட்ட வித்தையைக் கூட்டமாக நின்று ஒருவரும் ரசிக்கவில்லை. போகும்போது ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு விலகிக் கொண்டிருந்தார்கள்.
நகரத்தின் நடுவே ஓடும் நதியில் சின்னச் சின்னச் சுழிப்புடன் ஓடிக் கொண்டிருந்தது தண்ணீர். பனிக் கட்டியாகும் நாட்களில் மேலே பளிங்கு போலக் கட்டி மூடியிருக்க அடியில் நீர் ஓடுமாம். பனிக்கட்டி உருகத்தொடங்கும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டாம். மழை பெய்தால் ஏற்படும் வெள்ளப் பெருக்கை விடக் கூடுதலாக வெயில் தொடங்கும்போது இருக்குமாம். திடீரென்று ஒரே நாளில் பனிக்கட்டிகள் உருகும்போது ஆறு கரையைக் கடக்க முயற்சி செய்யும் போலும். அந்தக் காட்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. வார்சாவிலும் ஒரு நதி ஓடுகிறது பார்த்துக் கொள்ளலாம். அரைகிலோமீட்டர் அளவுக்கு விரியும் நதியின் கரைகள் இரும்புப் பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளன.
படகுகள் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன விஸ்துலா ஆற்றில் கோடைகாலத்தில் படகு போக்குவரத்து இருக்கும் போலும்..  பூங்காக்கள் கவனத்துடன் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்க முடிந்தது. ஆற்றின் ஓரமாக நடந்து செல்லப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆற்றுக்குள் இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள் கிரிக்கெட் மைதானக் காலரிகள் போல அமைந்துள்ளன. குளிர் மட்டும் இல்லையென்றால் குறைந்தது ஒருமணிநேரம் உட்கார்ந்து விட்டு வந்திருப்பேன். கண்கள் காணும் காட்சியிலிருந்து உடனடியாக விலக்கி விடும் வேலையை உடல் செய்து கொண்டே இருக்கிறது. மதுபானங்கள் அருந்தும் பார்கள் பெரும்பாலும் தரைத்தளத்திற்கு அடியில் இருக்கும் விதமாகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. பாலியல் அனுபவங்களைத் தரும் கடைகளும் எல்லாக் கடைகளையும் போலவே கடைவீதியின் ஒன்றாக இருந்தன.
இரண்டு நாளும் நடந்து நடந்து பெரும்பெரும் கட்டிடங்களுக்குள் நுழைந்து காட்சிப் பொருட்களையும் வண்ணம் தீட்டப்பட்ட மதில்களையும் பார்த்துப் பார்த்துக் கண்களுக்கு அலுக்கவில்லை. குளிரில் நடக்கும் சக்தியைக் கால்களுக்குள் ஏற்றுவது அவ்வளவு சுலபமாக இல்லை. தொன்மையைத் தக்கவைத்துள்ள தோருண் நகரத்தை வானியல் அறிஞன் நிக்கோலஸ் கோபர்நிக்கஸோடு இணைத்து விட்டுள்ளார்கள் போலந்துக்காரர்கள். நகரின் நடுவில் அவனது பிரமாண்டமான சிலை இருக்கும் இடத்திலுள்ள காட்சியகங்களைப் பார்ப்பதற்கே சில நாட்கள் வேண்டும். அவனது பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் வீடே ஐந்து மாடிக் கட்டிடமாக இருக்கிறது. அவனோடு தொடர்புடைய எல்லாவகைப் பொருட்களும் பத்திரமாகக் காட்சிப்படுத்தப்பட்டுப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அவனைப் பற்றிய புத்தகங்களும் நினைவுப்பொருட்களும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அந்த வீடு இருக்கும் சாலையே கோபர்நிக்காவ் சாலை என்றே பெயரிடப்பட்டுள்ளது. அநேகமாக அந்தச் சாலைதான் நகரத்தின் மையமாக ஓடும் பெருஞ்சாலையாக இருக்கும்போல் தோன்றியது. அதன் இருபுறமும் பிரியும் சாலைகளில் பழைமையைத் தக்க வைக்கும் கட்டட அமைப்புகள் புதுமைக்குள் நுழையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. செங்கல்லும் சுண்ணாம்பும் வைத்துக் கட்டப்பட்ட உயரமான கட்டிடங்கள்.
ஒரு பல்கலைக்கழகம் அவனது பெயரால் ஒரு நிறுவனத்தை அங்கு நிறுவியுள்ளது. மாணவர் களோ ஆசிரியர் களோ அங்கு இல்லை. அவனைப் பற்றிச் சொல்லவும் விளக்கவும் மட்டுமே அந்த நிறுவனம். கோபர்நிகஸுக்கும் இந்த நகருக்கும் என்ன தொடர்பு என்று ஒருவருக்கும் தெரிய வில்லை. இந்த ஊரில் தான் அவன் பிறந்தானா என்று கூடச் சொல்லப்படவில்லை. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த காலத்தில் தான் புது வகை ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறான். சூரிய மையமும் கோள்களின் சுழற்சியும் என்ற கருத்தியல் தான் இன்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தியல். போலந்துக்காரனான கோபர்நிகஸின் கடைசி ஆண்டுகள் ஜெர்மனியில் முடிந்திருக்கின்றன. எனவே அவனை ஜெர்மானியர்களும் தங்கள் சொத்துக்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள். ஆனால் தோருன் நகரம் இப்போதும் கோபர்நிகஸின் பெயரையே மூச்சாக விடுகிறது என்று சொல்லுமளவிற்கு எங்கு பார்த்தாலும் அந்தப் பெயர் பலவற்றோடு பிணைக்கப்பட்டிருக்கிறது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கூட அப்படியொரு சின்ன முயற்சியை எட்டயபுரத்தில் செய்துள்ளது. பாரதியைப் பற்றிச் சொல்லவும், படிக்கவும் ஒரு நூலகத்தோடு கூடிய நினைவகத்தை வைத்துள்ளது. தமிழக அரசும் இந்திய அரசும், தமிழ் இலக்கியவாதிகளும் மனம் வைத்தால் எட்டயபுரத்தின் ஒவ்வொரு மரத்தையும் காற்றின் திசையையும் பாரதியின் பெயர் சொல்லும் காற்றாகவும் மரமாகவும் மாற்றி விடலாம். நிகழ்காலப் போட்டியில் பின் தங்க நேரிடும் சூழலில் தொன்மைப் பெருமையில் நம்மைக் கண்டுகொண்டு அடையாளப் படுத்திக் கொள்வது, இருத்தலின் விதிகளில் ஒன்று தான். எப்படியாவது நாம் இருந்தாக வேண்டும்.
தோருண் என்னும் சிறுநகரம் கோபர்நிகஸோடு இருக்கிறது. கால்களில் நடப்பதற்கான தெம்பும் கண்களில் காண்பதற்கான ஆசையும் கனவும் நிரம்பியவர்கள் தோருண் நகரில் சில நாட்கள் தங்கியிருக்கலாம்.


No comments :