December 29, 2012

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…


மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கேலியும் கிண்டலுமாகப் பதிவு செய்யும் நபர்கள் தான் எனது முகநூல் வட்டத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிக் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தங்களை இடதுசாரிகள் அல்லது இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் எனக் கருதிக் கொள்பவர்கள்.  நானும் கூட என்னை இடதுசாரிக் கருத்தியலிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் நம்பிக்கை கொண்டவ னாகவே இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மற்றவர் களுக்குத் தோன்றுவது போல போகிற போக்கில் புறங்கையால் ஒரு பதிவைப் போட்டுக் கேலியாக ஒதுங்கிப் போக மனம் தயாராக இல்லை.

December 16, 2012

ஜோடிப் பொருத்தம்

எளிய வரவேற்பறை.
பேராசிரியர் சர்மாவும் திருமதி சர்மாவும் யாருடைய வரவுக்காகவோ காத்துள்ளனர். பேராசிரியர் செய்தித்தாள் வாசிப்பதிலும், திருமதி சர்மா பின்னல் வேலையிலும் கவனமாக உள்ளனர். அவர்கள் அமைதியாக இருக்க, தேவதத்தன் அவர்களைக் கவனிக்காமல் கடந்து செல்கிறான். அவன் அவர்கள் முன் சென்று, கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறான்.

December 03, 2012

காதலும் வன்முறையும்: நிகழ்வுகளும் புனைவும்
” யதார்த்தம் செத்து விட்டது” எனவும் ”நடப்பியல் பாணி எழுத்தின் காலம் முடிந்து விட்டது” எனவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரமாக உச்சரிக்கப் பட்டதைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த உச்சரிப்பின் ஓங்காரம் கேட்டுப் பல எழுத்தாளர்கள் மிரண்டு போய் எழுத்துப் பயணத்தில் எந்தத் திசையில் தொடர்வது எனத் திகைத்து நின்றார்கள். நேர்கோட்டுக் கதைசொல்லலில் தான் யதார்த்தம் உருவாக்கப்படுவதாக நம்பி அதைக் கைவிட்டு நேர்கோடற்ற எழுத்து பாணியை முயன்று பார்த்தனர். அம்முயற்சி கைகூடாத நிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டு ஓய்வில் போய்விட்டார்கள். இன்னும் சிலரோ, அ-புனைவு எழுத்தாளர்களாக மாறிப் போனார்கள்.

November 19, 2012

நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த தாய்க்கிராமம் எழுமலையில், எம்.ஜி.ஆர்- பானுமதி நடித்த கலையரசியை இரண்டாம் ஆட்டமாகப் பார்த்துவிட்டு நள்ளிரவுக்குப் பின்னால் வீடு வந்து சேர்ந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.

November 14, 2012

சாபம்:புகழ்பெற்ற கவிதையிலிருந்து உருவாக்கப்பெற்ற நாடகம்.


              

மேடைத் தளம் இரண்டு மரப்படிகள் நடுவில் ஒரு செவ்வக மேடை..
அதற்குள் உயரமான கூம்பு ஒன்று நிறுத்தப்பட்டு கப்பலின் குறியீட்டுத்
தோற்றம் உண்டாக்கப்பட வேண்டும்.


இந்த நாடகத்தை மேடையில் நிகழ்த்த மொத்தம் ஒன்பது நடிகர்கள் தேவை
. அவர்களில் ஒருவர் பெண்ணாக இருந்தால் நல்லது
.அந்தப் பெண்ணுக்கு ஆல்பட் ரோஸ் என்ற பறவையின் பாத்திரத்தை வழங்கலாம்
 (1.).கடல்பயணத்தின்  விருப்பமுள்ள  அவள் வயதான கிழவன்
 (2) ஒரு இளைஞனும் இருக்கிறான்
 (3.) இவர்களோடு  சக பயணிகளாக நான்கு பேர்  (4-7)
 (8) சாவும்
 (9) ச்மாதான சக வாழ்வும் 
கூடப் பாத்திரங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளனர்.

November 07, 2012

சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக் குழுமங்கள்: ஒரு நேரடி அனுபவம்


சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டுக்குழுமங்களுக்கு அனுமதி என்ற கொள்கை முடிவை மத்திய அரசு  எடுத்து  விட்டது. ஊடகங்களிலும் மேடைப் பேச்சிலும் எதிராக இருப்பது போலப் பாவனை பண்ணும் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிகளும், ஆளுங்கூட்டணியை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிகளும் வெளியில் மட்டுமல்ல; பாராளுமன்றத்திலும் எதிர்த்துப் பேசத்தான் போகிறார்கள்.

November 04, 2012

இந்த ஒரேயொரு கவிதைக்காக....


உலக மொழிகள் பலவற்றில் இருந்தும் மொழிபெயர்க்கப்பெற்று உலகக் கவிதைகள் என்றொரு தொகுப்பு வெளியிடப்படுகிறது என்றால் தமிழிலிருந்து யார்யாரையெல்லாம் பரிந்துரை செய்வீர்கள்? என்றொரு கேள்வியை ஒரு இந்தியவியல் அறிஞர் என்னிடம் கேட்டார்.

October 05, 2012

இடிந்தகரை X கூடங்குளம் : நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்
”ஆத்துக்குப் போனயா? அழகரைச் சேவிச்சயா?” – இந்தச் சொற்றொடரை மதுரை மாவட்டத்துக்காரர்கள் தன் வாழ்நாளில் பல தடவை உச்சரிக்க நான் கேட்டிருக்கிறேன். வாயால் சொல்லியிருக்கா விட்டாலும் யார் வாயாவது சொல்லத் தங்கள் செவி வழியாகவாவது பலரும் கேட்டிருப்பார்கள். செவிக்கும் வாய்க்கும் பழக்கப்பட்ட இந்தச் சொற்றொடர் தரும் அனுபவத்தை நேரில் பெற விருப்பம் காட்டுவது வட்டாரம் சார்ந்த வாழ்தலின் அடையாளம்.

September 27, 2012

இந்தியச் செவ்வியல் மொழிகள் இரண்டு: தமிழும் சமஸ்கிருதமும்


                                                                  முன்குறிப்பு:
இந்தியவியல் அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட் இந்தியச் செவ்வியல் மொழிகள் பற்றிச் சொன்ன ஒரு குறிப்பை அண்மையில் ரவிக்குமார் தனது நிறப்பிரிகை என்னும் வலைப்பூவில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். அதன் தமிழ் வடிவம் பலருக்கும் படிக்கக் கிடைத்தால் நல்லது என்பதால் தமிழாக்கிப் பதிவு செய்துள்ளேன்.

September 20, 2012

தொல்கதையிலிருந்து ஒரு நாடகம்


மூட தேசத்து முட்டாள் ராஜா
 ===============================================================================
இந்த நாடகத்தின் கதைப்பகுதி நாட்டுப் புறக்கதை ஒன்றைத் தழுவியது. இந்திய மொழிகள் பலவற்றில் இந்தக் கதையை- . சின்னச் சின்ன மாறுபாடுகளுடன் இந்தக் கதையைக் கேட்க முடியும். தொல்கதையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்நாடகத்தை மேடை ஏற்ற விரும்புபவர்கள் எனக்கு ஒரு தகவல் மட்டும் அனுப்பினால் போதும். அனுமதியெல்லாம் பெற வேண்டியதில்லை.
===============================================

September 11, 2012

சிவகாமியின் பழையன கழிதலும்… : தலைமுறை இடைவெளியின் இன்னொரு பரிமாணம்


இலக்கிய இயக்கங்களில் அதிகம் கொண்டாடப்படாத இயக்கியம் நடப்பியல் (Realisam) இயக்கம் ஆனால் நீண்ட கால வாழ்வையும் நிகழ்காலத் தேவையையும் கொண்ட இயக்கமாக இருப்பது. நடப்பியலின் சிறப்பு. அதன்  விளைநிலம் புனைகதை. புனைகதையின் வரவோடு நடப்பியல் வந்ததா? நடப்பியலின் தோற்றத்தோடு புனைகதைகள் உருவாக்கப் பட்டனவா? என்ற ஐயத்தைத்

September 07, 2012

விடியல் சிவா :நினைவுக்குறிப்புகள்..


எனது முதல் பதிப்பாளர்
=========================
நேர்க்காட்சியில் விடியல் சிவஞானத்தைக் கடைசியாக பார்த்தது 2011 மதுரை புத்தகக் காட்சியில். போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்திற்கு வரப் போகப் போகிறேன் என்ற தகவல் அப்போதே தெரிந்திருந்தது. சொன்னேன். சொன்னவுடன் ”அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தோழர் து.மூர்த்தி ஏற்கெனவே வார்சாவுக்குப் போய்ப் பணியாற்றியவர். அவரது தொலைபேசி எண் இருக்கிறது: உங்களுக்கு அறிமுகம் உண்டா?. தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். பேரா. து.மூர்த்தியை

September 05, 2012

அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாழ்க்கை


தூங்கும் குழந்தைப் பொம்மைகள்
அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை தமிழ்நாட்டின் எல்லா நகரங் களுக்கும் பொதுவானதாக இன்னும் மாறிவிடவில்லை. நான் வசித்துக் கொண்டிருந்த திருநெல் வேலி நகரத்தில் அதிகபட்சம் ஐந்து மாடிக் கட்டங்களைத் தாண்டியதாகக் குடியிருப்புகள் கட்டப்படவில்லை. அரசாங்க ஊழியர்களுக்குக் கட்டிக் கொடுக்கும் என்.ஜி.ஓ. காலனிகளும் கூட ஒரு மனையளவு நிலத்தில் இரண்டு வீடுகள் அல்லது கீழே இரண்டு மேலே இரண்டு என நான்கு வீடுகள் கொண்டதாகவும் தான் கட்டப்பட்டுள்ளன. மிகக் குறைந்த

September 03, 2012

நாயக்கர் காலத்தில் சமூக அசைவியக்கங்கள்


 இந்திய சாதீய முறை, இந்தியச் சமுதாய வரலாறு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கின்ற அதே நேரத்தில் அவர்களுக்கு அறைகூவல் விடுக்கும் சிக்கலாகவும் இருக்கிறது.இந்திய வரலாற்றையறிய உதவும் சான்றுகளுள் மிகத் தொன்மையானவைகளாகக் கருதப்படும் வேதங்களின் காலத்திலிருந்தே தொடர்ந்து சாதிப்பிரிவுகள் இருந்து வந்துள்ளன. தமிழ் நிலப்பரப்பிற்குள் ஆகத்  தொன்மையான தனிநூல் தொல்காப்பியம். அதன் முன்பின் இலக்கியங்கள் சங்கக் கவிதைகள்.  இவைகளும் ஒருவித சாதிவேறுபாடுகளைக் காட்டியுள்ளன.  இந்தக்கட்டுரை தமிழக வரலாற்றில் சாதியமைப்பு இறுக்கமும் பெருக்கமும் பெற்றதாகக் கருதப்படும் நாயக்கர்களின் காலத்தில் சாதிகளின் இருப்பு நிலையை மையப்படுத்தி அக்கால சமூக அசைவியக்கம் எவ்வாறு இருந்நது எனப் பேச முயல்கிறது.  அம்முயற்சியில் முதலில் சாதிகள் பற்றிய தகவல்களையும் அவற்றின் இயல்புகளையும் விவரித்துவிட்டு, அதன்பின்னர் அதன் கட்டமைப்பையும்  அசைவுகளையும் பற்றிப்  பேசுவது என்ற முறையிலைப் பின்பற்றியுள்ளது.

September 01, 2012

விலானொவ் அரண்மனை : இயற்கையும் செயற்கையும்போலந்து நாட்டில் எதையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற விவரங் களைத் தருவதில் என்னுடைய மூன்றாமாண்டு மாணவிகள் காஸ் யாவும் மரிஸ்யாவும் போட்டி போட்டுக் கொண்டே இருப்பார்கள். முதலில் பார்க்க வேண்டிய நகரம் க்ரோக்கோ எனச் சொன்னதோடு அங்கு பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றியும்  சொன்ன காஸ்யாவிடம் க்ராக்கோ பயணத்திற்குப் பின் பேசிக் கொண்டிருந்தபோது,. வாவெல் அரண்மனையையும் அங்கு சேமிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள் உண்டாக்கிய பிரமிப்பையும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

August 28, 2012

இன்னொரு தேசத்தில்: இருப்பும் இயக்கமும்போலந்துக்கு வந்து சேர்ந்த முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களைப் பத்து மாதங்களுக்குப் பின்னர் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன்.  ஓராண்டு முடியப் போகும்போது நான் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளை மற்றவர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டி யதிருக்கும். எவர் ஒருவரும் இன்னொரு நாட்டிற்குப் போய் நீண்டகாலம் தங்க நேரிடும் போது சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் இவை என்பதால் கொஞ்சம் கூடுதலாக அவற்றை விளக்கலாம் என நினைக்கிறேன். இதனை இருப்பும் இயக்கமும் சார்ந்த பிரச்சினைகள் எனச் சுருக்கிச் சொல்லலாம். மனிதன் வாழ்கிறான் என்றால் ஓரிடத்தில்இருக்கிறான் என்பதும் அங்கிருந்து இயங்குகிறான் என்பதும் தானே பொருள்.

August 23, 2012

க்ராக்கோ நகரத்து உப்புச் சுரங்கம்


நுழைவுச் சீட்டு
க்ராக்கோவுக்குப் போகிறேன் என்று சொன்னபோது ’உப்புச்சுரங்கத்திற்கும்  போய் விட்டு வாருங்கள்’ எனச் சொன்னது அன்புக்குரிய மாணவி காஸ்யா. எங்களுக்கு வழிகாட்ட ஜெக்லோனியப் பல்கலைக்கழக இந்தியவியல் துறை மாணவி எம்மிலி மாதவியை ஏற்பாடு செய்திருந்தார் அதன் பேராசிரியர்.

August 21, 2012

பாரம்பரியம் பேணும் பழைய நகரங்கள்


சலவைக்கல்லில் தேற்றங்கள்

போலந்தின் பெருநகரங்கள் ஒவ்வொன்றிலும் பழைய நகரம் என ஒரு பகுதி இருக்கிறது எனச் சொல்கிறார்கள். இதுவரை நான் போன நான்கு நகரங்களிலும் பழைய நகரப் பகுதிகளைப் பார்த்து விட்டேன். இன்னும் சில நகரங்களுக்குப் போக வேண்டும். போலந்தில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் பழைய நகரங்கள் பேணப் படுகின்றனவாம். பார்க்க வேண்டும்.

August 15, 2012

இந்தியத்தனம் நிரம்பிய நவீன நாடகங்கள் : இந்திரா பார்த்தசாரதி, கிரிஷ் கர்னாட் ஓர் ஒப்பீடு


 ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு இந்தியாவின் கொடை என்ன? என்ற கேள்விக்கு, " இந்தியத்தனம் தான் இந்தியாவின் கொடை; அது மட்டும் இல்லையென்றால்,வெறும் கைகளில் ஏந்திய கிண்ணத்துடன் தான் உலகத்தின் முன்னால் இந்தியா நின்றிருக்க வேண்டும்" என்று புகழ்பெற்ற கலைவிமரிசகரும் வரலாற்றாய்வாளருமான ஆனந்த குமாரசாமி சொன்னதாக ஒப்பியல் அறிஞர் சி.டி.நரசிம்மய்யா எழுதியுள்ளார் [C.D.Narasimhaiah,2003,P.5]. தொடர்ந்து சி.டி.நரசிம்மய்யா, இந்தியத்தனத்தின் கூறுகள் எவையெனக் கூறுவதை ஏற்றுக் கொள்வதில் அறிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

August 14, 2012

முதல் நேர்காணல்: மரத்தில் மறைந்த மாமத யானை


முதல் நேர்காணலிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. அதனைத் தவறு விட்டதன் பின்னணியில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற எனது லட்சியம் இருந்தது.
இப்படி நான் நினைத்துக் கொண்டிருப்பதை ’நிறைவேறாத செயலுக்கான கற்பனை வடிவம்’ என்பது போல அண்ணன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்த அந்த வார்த்தைகள் உறுதி செய்து கொண்டிருந்தன.

August 11, 2012

அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு: நிலவியல் வரலாற்றுப் பின்னணியில் மனிதர்கள்முதலில் ஒரு நிலவியல் குறிப்பு:
அசோகமித்திரன்
பூமியுருண்டையின் மீது கோடுகள் வரையப்பட்டிருப்பதை நிலவியல் ஆசிரியர்கள் காண்பித்திருப்பார்கள். கற்பனையான இந்தக் கோடுகளுக்குச் சில பயன்பாடுகள் உண்டு. தென் வடலாகச் செல்வதாக நம்பப்படும் தீர்க்கரேகைகள் காலக்கணக்குப் பயன்படுகின்றன. கிரின்விச் நகரத்தின் வழியே செல்லும் கற்பனைக் கோட்டை சுழியன் எனக் கணக்கு வைத்துக் கொண்டு ஒவ்வொரு தீர்க்கரேகையையும் சூரியன் தாண்டிச் செல்ல நான்கு நிமிட நேரம் ஆகிறது எனக் கணக்கிடுகிறார்கள். அதேபோல்  பூமிப் பந்தின் மத்தியில் ஓடும் கோட்டை புவிமத்தியக் கோடு எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கு மேலே இருப்பன அட்ச ரேகைகள்;

August 05, 2012

அரங்கியல் கலை என்னும் கூட்டுக்கக்கலை: அரங்கியல் அறிவோம்உடலின் இயக்கமே உயிரியின் அடையாளம். மனித இயக்கத்தைச் சொல்லத் தமிழில் உள்ள வார்த்தைகள் வினை, செயல், செயல்பாடு போன்றன. உடலின் இயக்கம் எதையாவது அடுத்த உயிரிக்குச் சொல்லும்போது –உணர்த்தும்போது அவ்வியக்கம் வினையாகிறது. அவ்வினையின் வேறுபாட்டிற்கேற்ப வினைச்சொற்களை ஒவ்வொரு மொழியும் உருவாக்கிக் கொள்கின்றன.

August 04, 2012

பாடத்திட்ட உருவாக்கமும் பங்கேற்பு அரசியலும்
இந்திய அளவிலான பள்ளிக்கல்விப் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற இரண்டு கேலிச் சித்திரங்கள் கண்டனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். அதே நேரத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் இடம் பெற்றதாகச் சொல்லப்பட்ட சிறுகதை ஒன்றும் கண்டனத்தைச் சந்தித்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்புக்கான பகுதி -1 (தமிழ்) பாடத்தில் இடம் பெற்ற டி. செல்வராஜின் நோன்பு சிறுகதை அது.

August 03, 2012

பாத்திரம்: அரங்கியல் அறிவோம்-4

பாத்திரம் (Charactor) - நாடகம் எழுதும் ஆசிரியன், ஒரு கருத்தை அல்லது சிந்தனையை விவாதிக்கவே நாடகம் எழுதுகிறான் என்றாலும் அதனை விளங்க வைக்க ஒரு நபரின் வாழ்க்கைக் கதையையே வழியாகக் கொள்கிறான். அப்படிக் கொள்ளப்படும் மனிதனே பாத்திரம் எனப் படுகிறது.

August 02, 2012

நடிப்பு : அரங்கியல் அறிவோம்-3

நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு
எழுதப்பட்ட பிரதிக்குரிய அர்த்தத்தைத் தனது உடல், குரல், மனம் ஆகியவற்றின் ஒருங் கிணைப்பால் உண்டாக்கும் வினை நடிப்பு(Acting) என்பது. இயல்பானதிலிருந்து உண்டாக்கப் படுவது கலையின் பொதுக்கூறு என்ற அடிப்படையில் நடிப்பும் கலையாகக் கருதப்படுகிறதுஇக்கலையின் முதல் கட்டத் திறன் போலச் செய்தல் தான்.  நடிப்புக் கலையில் ஈடுபடும் நபர் நடிகர் என அழைக்கப்படுகிறார்.

July 30, 2012

மேடைத் தளங்கள்: அரங்கியல் அறிவோம்,2:நிகழ்வுகள் நடக்கும் மேடையை பகுதிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்துப் பேசும் முறை ப்ரொசீனிய அரங்கு (PROCENIUM THEATRE) என அறியப்பட்ட படச்சட்டக மேடை யோடு நேரடித் தொடர்புடையது. என்றாலும் இவ்வாறு பகுத்துப் புரிந்து கொள்ளுதல் எல்லாவகை அரங்குகளுக்கும் பயன்படக்கூடிய ஒன்றுதான். நடிகர்கள், பார்வை யாளர்களைப் பார்த்து நிற்பதை மையமாகக் கொண்டு இப்பகுப்பு முறை அமைகிறது.

July 22, 2012

ஜரீதா பீடா போட்டேனா.. ஜூர்ர்ன்னு ஏறிடுச்சு:முதல் சென்னைப் பயணம்


திருச்சிக்கு வடக்கே சென்னையை நோக்கி முதன் பயணம் செய்த போது வயது 25. அதற்கு முன்பு தனியாகவும் நண்பர்களோடு கும்பலாகவும் பயணம் செய்த ஊர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் தான் இருந்தன. படிப்புக்காலச் சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் பேருந்தில் தான். பழனி, கோயம்புத்தூர், ஊட்டி எனப் பள்ளிப் படிப்பின்போது சென்ற பயணங்களில் எல்லாம் நாலுவரிசைக்கு ஓருத்தர் எனக் கணக்குப் போட்டு ஆசிரியர்களும் ஆசிரியைகளும் கண்கொத்திப் பாம்பாய்க் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.

July 09, 2012

விளிம்பு

விளிம்பு 
விளிம்பு 
[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]


இப்சனின் பொம்மை வீடு நாடகத்தின் உச்சநிலைக்காட்சியின் சாயல் கொண்ட விளிம்பு (THE EDGE ) ஓரங்க நாடகம் ஒன்றின் மாதிரி. தனியொரு நடிகையாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்ட மாணவிகளுக்காக எழுதப் பட்டது.புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவிகள் அவ்வப்போது மேடை ஏற்றிப் பார்த்திருக்கிறார்கள். 

July 07, 2012

வரங்களும் சாபங்களும் - தொன்மங்களைத் திரும்ப எழுதுதல் எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ


பொழுதுபோக்கு எழுத்திலிருந்து தீவிர எழுத்தைப் பிரித்துக் காட்டும் வரையறைகளைக் கறாரான விமரிசன அளவுகோல்கள் கொண்டு இதுவரை யாரும் விளக்கிக் காட்டவில்லை. அப்படி விளக்கிக் காட்ட நினைக்கும் விமரிசகன் முதலில் கவனப் படுத்த வேண்டியது எழுத்தில் வெளிப்படும் காலப் பிரக்ஞை என்பதாகத் தான் இருக்க முடியும்.

July 03, 2012

ஆடிய காலும் பாடிய வாயும்


லீணா மணிமேகலையை நோக்கிச் சுட்டு விரலை நீட்டிய கண்ணனைக் காணாமல் போகச் செய்யும் விதமாக ஜெயமோகன் வீசிய அம்புகள் நாலாபக்கமும் பாய்ந்து கொண்டிருந்த போது கை பரபரப்புடன் அரித்தது.

வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லை


ஆதியிலே வார்த்தை இருந்தது; அது தேவனாயிருந்தது; தேவனோடு இருந்தது என ஆதியாகத்தின் முதல் வசனம் ஆரம்பிப்பது போலச் சில வரலாற்று நூல்களில், “ஆதியிலே பாரதவர்ஷம் என்றொரு கண்டம் இருந்தது; அக்கண்டத்திற்குள் 56 தேசங்கள் இருந்தன; அத்தேசங்களின் ராஜாக்கள் அவ்வப்போது நடக்கும் சுயம்வரங்களில் தலையை நீட்டுவதற்காக வரிசையில் நிற்பார்கள் எனப் பலரும் படித்திருக்கலாம். படிக்கவில்லை என்றால் பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பெரிய எழுத்துக் கதைகளை வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். 

தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள்- முன்னும் பின்னும்தமிழில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு பல்வேறு திசை வழிகளில் சென்று கொண்டிருக்கிறது.நாட்டார் வழக்காற்றியலைப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் உள்ளிட்ட வாய்மொழி மரபு (Oral Tradition) எனவும், சடங்கு சார்ந்த, பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த கூத்து, ஆட்டமரபுகள் அடங்கிய கலைகள் (Folk Arts) எனவும், சமய நம்பிக்கையோடு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், அவை சார்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஊர்ப்பெயர், மக்கட்பெயர் உள்ளிட்ட பண்பாட்டுக் கோலங்கள் (Customs and Manners) எனவும் பகுத்துக் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன.

July 02, 2012

நாட்டுப்புற இயலைச் சுற்றி


         தேசப்பற்று, தேசிய ஒருமைப்பாடு, வலிமையான பாரதம் எனத்    தனக்குப் பிடித்தமான கருத்தியலின் நோக்கிலிருந்து ஆய்வுகளின் பின்னணி நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஜெயமோகனோடு ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கும் இந்தக் கட்டுரை ஆறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. தீம்தரிகிட இதழில் வந்த கட்டுரையைச் சூழலின் தேவை கருதிப் பதிவேற்றம் செய்கிறேன். 

July 01, 2012

அரங்கிலிருந்து சடங்கை நோக்கி-முருகபூபதியின் சோதனை முயற்சிகள்


மானுடவியல் அறிஞர் விக்டர்டர்னர் சடங்கிலிருந்து அரங்குக்கு’ (From Ritual To Theatre) என்றொரு புகழ் மிக்க சொற் றொடரைப் பயன்படுத்தியுள்ளார். சடங்கு களிலிருந்து தான் நாடகக்கலை உருவாகியது என மேற்கத்தியச் சிந்தனை களும்  அதன் வழியான ஆய்வுகளும் சொல்லியுள்ளன. உலகத்திலுள்ள நாடகப் பள்ளி களும் நாடக ஆர்வலர்களும்  ஓரளவு அது உண்மைதான் என ஒத்துக் கொண்டுள்ளனர்.

June 28, 2012

தொலைக்காட்சியைப் படித்தல்: பங்கேற்பும் விலகலும்நிகழ்த்துக்கலைகள் கண்வழிப்பட்டவை; செவி வழிப்பட்டவை. நிகழ்த்துக்கலைகளுள் ஒன்றான நாடகக் கலை, பாத்திரங்களின் வார்த்தை மொழியின் உதவியால் பிற நிகழ்த்துக் கலைகளிலிருந்து  தன்னை வேறு படுத்திக் கொள்கிறது. மேடை நிகழ்வில் உற்பத்தியாகும் வார்த்தைமொழி (Verbal language) காட்சி ரூபம் (Visual) ஒலிரூபம் (Sound) என மூன்று நிலைகளில் தன்னை வந்தடையும் குறிகளின் மூலம் பார்வையாளர்கள் மேடை நிகழ்வோடு பரிவர்த்தனை கொள்கிறார்கள்.

பாடத்திட்டம்: பாஸ்டன் பாலாவின் கேள்வி: எனது பதிலும் விளக்கங்களும்எனது முகநூல் சுவரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாகத் தினத்தந்தியின் செய்தி ஒன்று இருந்தது. அதை எனது சுவரில் ஒட்டிய பாஸ்டன் பாலா என்பவர், ”இது குறித்து தங்கள் எண்ணம்  என்ன? ”  என்று கேட்டிருந்தார். http://www.dailythanthi.com/article.asp?NewsID=740129&disdate=6%2F26%2F2012 
பாஸ்டன் பாலா! உங்கள் கேள்விக்கு முதலில் எனது கருத்தைச் சொல்லி விடுகிறேன்: 
நவீனத்துவ அடிப்படைகளற்ற நம்பிக்கைகள் சார்ந்து எழுப்பப்படும் கண்டனங்கள் ஏற்கத்தக்கன அல்ல என்பது என்னுடைய பொதுவான கருத்து. பக்தர்களின்நம்பிக்கைக்கும், ”பாட்டாளி மக்களின்” ” தார்மீகக் கோபத்திற்கும், ஆதிக்கக் குழுமங்களின்கண்ணசைப்புக்கும் ஏற்பப் பாடத்திட்டத்தை அமைப்பது என முடிவு செய்து விட்டால் பாடத்திட்டம் உருவாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

June 23, 2012

தீர்ப்பளிக்கப்படாத வழக்கு


[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ]
THE JUDGEMENT RESERVED 
THE PLAY READING
BY 
A.RAMASAMY 

காட்சி ;1
நாடகம் தொடங்கும்போது முன் மேடையில் ஒரு நபர் சுழல் நாற்காலியில் அமர்ந்துள்ளான். தலையில் கௌபாய் தொப்பி. கையில் ஒன்றரை அடி நீள உருட்டுக்கோல். இருபுறமும் உலோகப் பூண் . அவன் நாடகத்தின் இயக்குநராகக் கருதுபவன்.பெர்முடாஸ், பேன்ஸி பனியன் என வித்தியாசமான ஆடைகள் அணிந்துள்ளான். அவனுக்கு முன் உயரம் குறைந்த மேசை உள்ளது . அதில் நாடகப்பிரதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவன் பார்வையாளர் களுக்கு முதுகு காட்டி அமர்ந்துள்ளான்.

பின் மேடை இருட்டாக உள்ளது. பகலில் நடப்பது என்றால் திரையிட்டு மூடி இருக்கலாம். திரைக்குப் பின் ஒரு நீதிமன்றத்தின் மிகக் குறைந்த வடிவம் இருக்க வேண்டும்.
சுழல் நாற்காலியையும் கையில் உள்ள கோலையும் சுழற்றியபடி திரும்பிய

June 10, 2012

திரும்பத்திரும்ப வரும் கண்ணகி :


[ முன் குறிப்பு:சின்னங்களும் அடையாளங்களும் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரையில் வரும் தகவல் குறிப்புகள் பழையனவாக இருந்த போதிலும், தமிழ்நாட்டின் அறிவுத்தள முரண்பாடாக ஊடாடிக் கொண்டிருக்கும் ஒன்றின் நிகழ்காலப் பொருத்தப் பாட்டைப் பேசுகின்றது என்ற அடிப்படையில் திரும்பவும் பதிவேற்றம் செய்யப்படுகிறது ]

June 08, 2012

வாவெல் கோட்டை: இரண்டாவது உலக அதிசயம்.


பேரன் நந்தாவுடன் மகள்

நாற்பது வயதுக்கு மேற்பட்ட போலந்துக்காரர்களின் மனதில் வார்சாவை விட க்ராக்கோவின் பெருமைகளும் காட்சிகளும் நிரம்பி வழிவதை அவர்களிடம் பேசும்போது உணரலாம். போலந்தின் வரலாறு, பண்பாடு, நிலவியல் அறிந்த நிகழ்காலத்து இளம்பெண்களும் பையன்களும் கூட க்ரோக்கோவைப் பற்றிய நினைவுகளில் மூழ்குவதைப் பார்த்திருக்கிறேன். என்னிடம் பயிலும் மாணவிகள் போலந்தில் பார்க்க வேண்டிய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை அந்த நகரத்திற்கே வழங்கினார்கள்.

June 06, 2012

கூட்டம்.. கூட்டம்.. கூட்டம்… கூட்டம் காட்டக் கூட்டம்.. கூட்டம்.. கூட்டம்; சாதிவாரிக் கணக்கெடுப்பை முன் வைத்து.தமிழகம் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கியது. நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் ஈடுபடும் வருவாய் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முதல், வீடு வீடாக சென்று மக்களின் சமூக, பொருளாதார, ஜாதிவாரியாக தகவல்கள் பதிவு செய்து வருகின்றனர்.

June 01, 2012

மாம்பழக்கன்னங்கள்; மது ஊறும் கிண்ணங்கள்.அக்கினி நட்சத்திரத்திற்கும் மாம்பழ சீசனுக்கும் தொடர்பு உண்டா என்று தெரியவில்லை. ஆனால் அக்கினி  வெயில் தான் மாங்காயைப் பொன்னிற மாக்கிப் பழுக்க வைக்கிறது என நினைத்துக் கொள்வேன். அக்கினி முடிந்தவுடன் வாங்க ஆரம்பித்தால் சீசன் முடியும் வரை மாம்பழ வாசம் வீட்டில் கமகமத்துக் கொண்டுதான் இருக்கும். வார்சாவில் இருக்கப் போகும் இந்த இரண்டு ஆண்டுகளில் மாம்பழ மணம் இல்லாமல் கழியப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மாம்பழம் அவ்வளவு சுலபமாக விட்டு விடுவதாகத் தெரியவில்லை.

May 04, 2012

சரஸ்வதி சம்மான் விருது பெற்ற பேரா.அ.அ. மணவாளன் அவர்களை முன் வைத்து சில கேள்விகள்


மரபு இலக்கியம் : நவீன இலக்கியம் 

 இணை கோடுகளல்ல, இணைய வேண்டிய புள்ளிகள்

விமரிசனமும் விருதும் கவனிக்கப்படுதலின் அடையாளங்கள். கவனிக்கப்படுதலை எதிர்பார்த்து உயிரினங்கள் ஏங்கி நிற்கின்றன. முள் கொடுக்கு களில் உரசி விலகிச் சென்ற வண்டுகளுக்காகவே பூக்கின்றன ரோஜாச்செடிகள் என்பது ஒரு கவிதை வரி.பச்சை இலைகளோடு இருக்கும் தாவரங்கள் பூப்பதன் மூலம் கவனம் பெறுகின்றன.  காய்ப்பதும் பழுப்பதும்  தன்னைப் பிறவற்றிற்குத் தருதலின் வெளிப்பாடுகள். இயற்கையின் எல்லா இருப்புகளும் இச்சுழற்சியிலிருந்து விலகி விடுவதில்லை. மனித உயிரிகள் உள்பட

April 25, 2012

தமிழச்சியின் கவி உலகம்


அவரவர்க்கான மழைத்துளிகளும் 
அவரவர்க்கான கவிதைகளும்.

                                                                                                              முன்னுரை
கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகவும், அரங்கவியல் செயல் பாட்டாளருமாக அறியப் பட்டிருந்த கவி தமிழச்சியின் முதல் தொகுதியான   எஞ்சோட்டுப் பெண் பெறாத கவனத்தை அவரது இரண்டாவது தொகுதியான வனப்பேச்சி பெற்றுள்ளது. மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸின் தயாரிப்பான எஞ்சோட்டுப் பெண் மிகுந்த கவனத்துடன் அதிகப் பணச் செலவிலும் தயாரித்து வெளியிடப் பட்ட  கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. நூலாக்கத்தில் முதல் தொகுப்பிற்குச் செலுத்திய கவனத்தில் பாதி தான் வனப்பேச்சிக்கு இருந்திருக்கும். என்றாலும் முதல் தொகுதியை விடவும் இரண்டாவது தொகுதி கூடுதலான விமரிசன மேடைகளையும் வாசகக் கவனத்தையும் மதிப்புரைகளையும் பெற்றது.

April 23, 2012

ஜெயமோகனின் கொற்றவை திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து


ஜெயமோகன் தனது 25 ஆவது  வயதில் முகிழ்த்த கருவை 43 ஆவது வயதில் எழுதி முடித்த பிரதி கொற்றவை. 600 பக்கங்களில் டெம்மி அளவில் , அச்சுத் தொழிலின் நுட்பங்கள் கைவரப் பெற்ற தொழிலாளர்கள்-பதிப்பாசிரியரின் கூட்டுத் தயாரிப்பில் அச்சிடப் பட்டு 2005 இன் வெளியீடாக வந்தது.கொற்றவைக்கு முன்பு ஜெயமோகனின் எழுத்துகள் பல வடிவங்களில்,சில வகைப்பாடுகளுடன் அடையாளப்படுத்தத் தக்கனவாய் அச்சிடப்பட்டிருந்தாலும், அவர் அதிகம் அறியப்பட்டது புனைகதை ஆசிரியராகத் தான். சிறுகதை ஆசிரியராக முதலில் வெளிப்பட்ட போதிலும் விரிவான காலம் மற்றும் வெளி சார்ந்த எல்லைகளுக்குள் கதாபாத்திரங்களை அலையவிடும் நாவல் வடிவமே அவருக்கு லாவகமான வடிவமாக இருக்கிறது.

April 15, 2012

தினமணியில் நேர்காணல்

போலந்தின் தலைநகர் வார்சாவிற்கு வந்து ஆறுமாதங்கள் முடிந்து விட்டன இந்த மாத அனுபவங்களுடன் வழங்கிய நேர்காணல் இது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இங்கு இருக்கப்போகிறேன். முடியும்போது கூடுதல் அனுபவங்களுக்கு வாய்ப்பிருக்கிறது

April 14, 2012

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே : எழுத்ததிகாரம் தொலைக்கும் எழுத்து


எல்லாச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது அதிகாரத்தின் மீதான பற்றும், அதை அடைவதற்கான முயற்சிகளும்  என்பது அரசியல் சொல்லாடல் என்பதாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் செலுத்துதல் என்பது மற்றவர்களைத் தன்பால் ஈர்த்தலில் தொடங்குகிறது. அடுத்தகட்டம் அவர்களின் நிலையைக் குலைத்துத் தன் நிலையை நிறுவி அதன்படி செயல் படத் தூண்டுதலில் முடிகிறது.

April 12, 2012

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்: பண்டங்களாக்கப்படும் பண்டிகைகள்தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல் தேதியில் கொண்டாடுவதைக் கைவிட்டு விட வேண்டும்; அதற்குப் பதிலாக தை முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடலாம் எ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கம் அறிவித்தது. சட்டசபையில் அந்த அறிவிப்புச் செய்யப்பட்டபோது அப்போதிருந்த மக்கள் பிரதிநிதிகள் ஒருவரும் எந்தவித எதிர்ப்பையும் எழுப்பவில்லை.

April 09, 2012

வசந்தபாலனின் அரவான்: படைப்பாளுமை அற்ற வெளிப்பாடு


திரைப்பிம்பங்கள் பேசும்மொழி, அம்பிங்கள் உலவும் வெளி, பிம்பங்களின் தன்னிலையையும் பிறநிலையையும் கட்டமைக்கும் வாழ்நிலை ஆகிய மூன்றுமே ஒரு திரைப்படத்திற்கான அடையாளத்தை உருவாக்கக் கூடியன. இம்மூன்றும் ஓர்மை கெடாமல் அமையும் சினிமாவே தனித்த அடையாளமுள்ள சினிமாவாக வகைப்படுத்தத்தக்கது. நமது சினிமாக்காரர்கள், அவர்கள் உருவாக்கும் திரைப்படங்களைப் பார்வையாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க நினைத்து அதன் விளம்பரங்களில் ‘தமிழ், தமிழர்கள்’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதெல்லாம்  ”தமிழ்ச் சினிமா”  என்பதின் அடையாளத்தை எதனைக் கொண்டு இயக்குநர் உருவாக்கியிருப்பார் என்ற கேள்வியோடு தான் படம் பார்க்கச் செல்வேன்; கவனமாகச் சினிமாவைப் பார்த்துப் பேசும் ஒவ்வொருவரும் அப்படித்தான் செல்ல வேண்டும்.

April 08, 2012

நடத்துநர்கள் இல்லை; சோதனைகள் உண்டு


ஏப்ரல் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை. முட்டாள் தனமாக ஏமாந்து விடக் கூடாது என்று நினைத்து எங்கும் கிளம்ப வில்லைஅடுத்த நாள்  திங்கட்கிழமை ஊர் சுற்றிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. எங்கே போவது என்ற திட்டம் எதுவும் இல்லை.  வீட்டிற்கு அருகில் இருக்கும் அல் –அலோயோனிக்கோவ் நிறுத்தத்தில் டிராம் ஏறி விலோஷ்னோவாவில் இறங்கி மெட்ரோ ரயிலில் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் ஏறி விட்டார்சோதனை செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் விலோனோவ்ஸ்காவில் இறங்கவில்லை.

March 26, 2012

இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படும் நேரம் 23 மணி நேரம் தான்


காலையில் வழக்கம் போல எழுந்து காலைக் கடன்களை முடித்து கணிணியின் திரையைத் திறந்தபோது 06.15,2012 மார்ச் 25 எனக்காட்டியது. எல்லா நாளும் இரவு 11.00 மணியை ஒட்டித் தூங்குவது வழக்கம். எத்தனை மணிக்குப் படுத்தாலும் ஆறு மணி நேரம் கழித்து விழிப்பு வந்து விடும். அதிகாலை 05.00 யை ஒட்டி எழுந்து விடுவேன். நேற்று இரவு 11. 00 மணியளவில் தான் தூங்கப் போனேன். ஆனால் எழுந்து பார்த்தபோது கணிணியின் திரை 06.15 எனக் காட்டியது. அலைபேசியின் திரையிலும் 06.15 என்று தான் இருந்தது. அலமாரியில் பத்து நாட்களாகவே வெளியே நல்ல வெளிச்சம். கடந்த இருந்த கடிகாரத்தில் நேரம் 05.15 மணி என்றிருந்தது.

March 09, 2012

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி


விடுதலைக்குப் பிந்திய இந்திய சமூகத்தின் திசை வழிகள் சரியானவை தானா? என்ற கேள்வியைப் பல்வேறு தளங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த கால கட்டமாக 1950-களின் பின் பாதியையும் 60-களின் முன்பாதியையும் சொல்ல வேண்டும்.. சிந்தனை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளை இந்தியர்கள் உள்வாங்க வேண்டும் என நம்பிய ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலம் அது. அவரது நிலை பாடுகளுக்கு எதிராக இருந்தவர்கள் பண்பாட்டு வெளியை முன்னிறுத்திப் பலவகையான சொல்லாடல்களை உருவாக்கினார்கள். குறிப்பாக  ஐரோப்பிய வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது அதிகப் படியான எதிர்ப்புணர்வுகளை வெளிப் படுத்தினர்.

March 07, 2012

மீட்டெடுக்க வேண்டிய தனித்தன்மை


நம்முன் நிகழும் நிகழ்வுகளுள் எவை நம்பிக்கை சார்ந்தவை? எவை பாவனை சார்ந்தவை எனக் கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சுலபமல்ல. அப்படிக் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவர்களும் கூட தொடர்ச்சி யான கவனிப்பின் மூலமே சாத்தியப் படுத்து கின்றனர். சாத்தியப்படும் நிலையில் சிலவற்றை நம்பிக்கைகள் என்கிறார்கள்; சிலவற்றைப் பாவனைகள் என்கின்றனர். நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; பாவனைகள் அம்பலமாக்கப்படுகின்றன.

March 02, 2012

பெயரிலும் இருக்கிறது; முகவரியிலும் இருக்கிறதுமுன்குறிப்பு:
இந்தக்கட்டுரையில் இடம்பெறும் பெயர்களும் தகவல்களும் உண்மையானவை; உண்மையத் தவிர வேறில்லை; உண்மையை உறுதி செய்வதற்காகக் கற்பனை தவிர்க்கப் பட்டுள்ளது.
=============================================
உலக நாடக இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரைத் தமிழில் ‘செகசுப்பியர்’ என்று ஒருவர் மொழிபெயர்த்து எழுதி இருந்தார் ஒருவர். செகப்பிரியர், செகசிற்பியர் என்ற மொழிபெயர்ப்புகள் எல்லாம் அந்தப் பெயருக்குத் தமிழில் உண்டு.
எனக்கோ பொல்லாத கோபம். பெயரை மொழிபெயர்க்கலாமா? பெயரின் உச்சரிப்பை – ஓசையை மாற்றலாமா?

February 24, 2012

ஆவணப்படுத்துதலின் அரசியல்: நகரும் நாட்டுப் புறங்கள்முன்குறிப்பு:
திரும்பவும் எழுத வந்துள்ள விமலாதித்த மாமல்லன் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நடந்த இலக்கிய சர்ச்சைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். வலைப்பூவிலும் முகப்பனுவலிலும் அவர் தட்டிவிடும்  ஒவ்வொன்றும் மைய உருவாக்கத்தை அழிக்கும் தடாலடியாக இருக்கிறது. அவர் வேகத்திற்கோ, அவரோடு மோதும் எழுத்து ஜாம்பவான்களின் வேகத்திற்கோ ஈடுகொடுக்கும் வேகம் என்னிடம் இல்லை.  எம்.டி.முத்துக் குமாரசாமியின் தேசிய நாட்டுப் புறவியல் மையம் செய்து வரும் ”ஆவணப்படுத்துதலின் பின்னணிகள்” பற்றிய குறிப்பொன்றை எழுதியுள்ளார். மிரட்டிப் பணிய வைப்பது அல்லது பணம் கரந்து விடுவது என்பது மாமல்லனின் நோக்கமாக இருக்கலாம்  என அந்தக் குறிப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் எம்.டி. எம்.மின் கூற்று அங்கதத்தின் உச்சம் என நினைத்துக் கொண்டிருந்த போது, ஆவணப்படுத்துதலில் ’சந்தேகங்கள் எழுப்ப வேண்டியதில்லை’ என, அப்பாவியாகக் கருத்து சொன்ன ராஜன்குறை விலா நோகச் சிரிக்க வைத்துவிட்டார். தன்னை மானுடவியல் மாணவர் எனச் சொல்லும் ராஜன்குறை அதிலிருந்து தோன்றிய நாட்டுப்புறவியலைத் தனக்குச் சம்பந்தம் இல்லாத துறையாகச் சொன்னது கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.