தொலைந்து போகுமோ வெள்ளைக் கிறிஸ்துமஸ்.


டிசம்பர் முதல் வாரத்தில் இரண்டொரு நாள் பூஜ்யத்திற்கும் கீழே வெப்பநிலை போன போது துறைத்தலைவர் டேனுதா ஸ்டாய்ஸ்டிக் சொன்ன எச்சரிக்கைக் குறிப்புகள் நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு நாளும் அறைக்குள் வந்து தான் அவரது கையுறையைக் கழற்றுவார். . வெளியில் நடக்கும்போது கையுறைகளைக் கழற்ற வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே மேலும் சில குறிப்புகளைச் சொன்னார். உறையைக் கழற்றி மாட்டிக் கொள்வதற்குள் கைகள் விறைத்து விடும் வாய்ப்புண்டு என்று சொன்னவருக்கு இந்தியாவின் தட்பவெப்பம் பற்றியும் தெரியும். டெல்லிக்கும் திருநெல்வேலிக்கும் இடைவெளி தூரத்தில் மட்டுமல்ல தட்பவெப்பத்திலும் உண்டு என ஒருமுறை சொன்னார். டிசம்பர் மாதம் டெல்லியிலும் மேமாதம் குமரியிலும் இருந்திருக்கிறார். இந்தியாவின் வேறுபாட்டை அறிந்து கொள்ள அது ஒன்றே போதும் எனச் சொன்னதின் அர்த்தங்கள் புரிந்து பலமாகச் சிரித்தோம். 
இந்தியவியல் துறையின் தலைவியான டேனுதா இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். போலந்து, ஆங்கிலம் மற்றுமல்லாது ஐரோப்பிய மொழிகளின் மூல மொழியான லத்தீனும் தெரிந்தவர். இந்திய இலக்கியங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே போலந்தின் பனிக்காலம் இன்னும் ஆரம்பமாகவில்லை என்று சொன்ன அந்த நாள் – 2 டிகிரி செல்சியஸ். கிறிஸ்துமஸ் நேரத்தில் – 15 முதல் -20 வரைகூடக் குறையலாம் தடிமனான ஷூவுக்குள் இரண்டு ஷாக்ஸுகள் போட்டு உள்ளாடைக்குள் சொருகிக் கொண்டால் கால் வழியாகக் குளிர் ஏறாது. அதே போல் கழுத்து, காது, மூக்கு முதலான பகுதிகளைப் பனியிலிருந்து பாதுகாத்துக் கொண்டு பனியை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். சாலைகளெல்லாம் பனிப்பாளங்கள் உடைக்கப்பட்டு ஓரங்களில் குவிக்கப்படும் நாட்கள் இன்னும் ஓரிரண்டு வாரத்தில் வந்து விடும். நடக்கும் போது கவனமாக நடக்கவில்லை என்றால் வழுக்கி விழும் ஆபத்தும் உண்டு என்று சொன்னதெல்லாம் பயமுறுத்தலா? அக்கறையா? எனக் குழப்பமாக இருந்தது.

துறைத்தலைவருடன்

தம் ஊருக்கு வரும் அந்நியர்களுக்கு உதவுவது போல நாம் தரும் தகவல்கள் வழியாக நம்மைச் சார்ந்தே இருக்கும்படி ஆக்கிக் கொள்வது மனிதர்களின் பொது இயல்பு. அதையெல்லாம் சொல்லிவிட்டு, “ஆம் போலந்தில் எப்போதும் கிறிஸ்துமஸ் வொயிட் கிறிஸ்துமஸ் தான்” என்று சொன்ன போது பயமுறுத்தவில்லை; பனியை அவர் விரும்புகிறார் என்பது புரிந்தது.
அவர் சொல்லி நான் எதிர்பார்த்த வெண்பனிக்கிறிஸ்துமஸ் வந்துவிடும் அறிகுறிகள் கிறிஸ்துமஸுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு - டிசம்பர் 21 இரவு தொடங்கின. பனிப்பொழிவோடு கூடிய காற்று சீறிக் கொண்டு வீசிய நள்ளிரவில் சாளரங்கள் வழியே வெளியே பார்த்தேன். விளக்குகள் ஒளியை உமிழ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. சாளரங்களுக்கு வழியே தெரியும் கட்டடங்கள் எதுவும் தெரியவில்லை. தூருவது மழை அல்ல; பனிப்பொழிவு என உறுதியாக நினைத்துக் கொண்டேன். ஆலங்கட்டி மழை விழுந்ததைப் பார்த்திருக்கிறேன். பனிக்கட்டியாக இல்லாமல் மல்லிகைப்பூவைச் சொரிவதைப் போல வானம் பொழிவதை அன்றிரவு தான் பார்த்தேன்.


காஸ்சாவின் தலைமை

பகலாக இருந்தால் இந்தக் காட்சி இன்னும் இன்பமாக இருந்திருக்கக் கூடும். காலையில் பனிக்கட்டுகள் காணாமல் போய்விடக் கூடும் என நினைத்துக் கொண்டு படுத்த போது தூக்கம் வர நீண்ட நேரம் ஆனது. தாமதாகவே எழுந்து பார்த்தபோது. சாலையில் வரிசையாக நின்றிருந்த கார்கள் எல்லாம் படுதாப் போட்டு மூடியதுபோலப் பனித் தகட்டால் மூடப்பட்டிருந்தன. சாலையோரங்கள் உப்பளங்களில் படிந்து கிடக்கும் வெள்ளை உப்புப் போல பனித்திட்டுகளும் துண்டுகளுமாகக் காட்சி தந்தன. 22-12-2011, புதன்கிழமை, கிறிஸ்துமஸுக்கு முந்திய கடைசி வேலை நாள். எனக்கு வகுப்பு இல்லையென்றாலும் பல்கலைக்கழகத்திற்குக் கிளம்ப வேண்டும். நான் மட்டுமல்லாமல் என் மனைவியையும் அழைத்து வருவதாகச் சொல்லி இருந்தேன். தென்னாசியவியல் துறையின் சார்பில் நடக்கும் கிறிஸ்துமஸ் விழாவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று காஸ்சா சொல்லி இருந்தாள். அவள் தமிழ் மாணவி; தென்னாசியவியல் துறைகளுக்கான மாணவிப் பிரதிநிதி. அவள் பொறுப்பேற்று நடத்தும் விழாவில் அவளது ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளும்போது மறுக்க முடியாதே.

துறையில் எளிமையாக நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மாணவிகள் உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். தலைவி காஸ்சா வழங்கிய அப்பத்தை எடுத்து ஒவ்வொருவரும் பரிமாறிக் கொண்ட பின் பேராசிரியர் பெர்சி ரிக் வேதத் திலிருந்து சில வசனங்களைப் படித்தார். கூடியாட்டம் பற்றியும் நாட்டிய சாஸ்திரம் பற்றியும், காளிதாசன் பற்றியும் ஆழ்ந்த புலமை கொண்ட அவரைப் போலந்தில் இருக்கும் இந்தியக் களஞ்சியம் என்றே மதிக்கிறார்கள். வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை திறப் பட்டதில் இவருடைய பங்கே முதன்மையானது. பேராசிரியராக இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பே இந்தியாவுக்கான தூதராக இருந்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணனோடு வேதங்களைப் பற்றி உரையாடிய அனுபவம் பெற்றவர். இப்போதும் மூத்த பேராசிரியராக வாரம் ஒருமுறை துறைக்கு வந்து போகிறார். கிறிஸ்துமஸ் விழாவில் இந்துமதம் சார்ந்த ரிக் வேதத்திலிருந்து வாசகங்கள் சொல்ல வேண்டு மெனக் கேட்ட போது இந்தியவியல் துறை சமயஞ்சாராத துறையெனப் பதில் சொன்னார்கள். மத நல்லிணக்கத்தின் அடையாளம் அது என்றாள் என் மாணவி காஸ்சா. பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் சரஸ்வதி பூஜையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் கொண்டாடப்படும் போது திரளும் மற்றமைத் தன்மையும் நினைவுக்கு வந்தது. புதுவைப் பல்கலைக்கழகத்தைப் பிராமணிய மதத்தின் குறியீடாக அதன் முதல் துணைவேந்தர் வேங்கட சுப்பிரமணியன் மாற்றிய காலத்தில் நான் அங்கு இருந்தேன். மனோன்மணியத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உச்சம் பெற்ற சிந்தியா பாண்டியன் காலத்தையும் பார்த்திருக் கிறேன். அதிகாரத்தின் சகிப்பின்மை உணர்த்தப்பட்ட காலங்கள்.
போலந்து ஒரு கத்தோலிக்கக் கிறித்தவ நாடு. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தேசியக் கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். பொது விடுமுறை நாட்கள் எதுவானாலும் அலுவலகங்கள் மட்டுமல்லாது எல்லாக் கடைகளும் மூடப்பட்டு விடும். சொந்தக் கடைக்காரர் முதல் சில ஆயிரம்பேர் வேலை பார்க்கும் பேரங்காடிகள் வரை விதி விலக்கே கிடையாது. அத்தியாவசியப் பொருட்களான தண்ணீர், பால், தயிர், உணவுப் பண்டங்கள் எல்லாம் முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்துக் கூடக் குறைக்கப்படுகிறது. வெளியில் நடமாட்டம் குறைவாகவே இருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கூடுதல் விசேஷமான நாள் என்பதால் அமைதி இன்னும் அதிகமாக இருந்தது.

அக்டோபர் தொடங்கி எல்லா இலைகளையும் உதிர்த்து விட்டு காய்ஞ்ச விறகாக நிற்கும் மரங்கள் துளிர்க்க இன்னும் சில மாதங்கள் ஆகுமாம். ஆனால் கிறிஸ்துமஸ் மரங்கள் மட்டும் பச்சை பசேல் எனக் கூம்பு வடிவத்தில் துளிர்த்து நிற்கின்றன. பொங்கலுக்கு மாவிலை, வேப்பந்தழை, கண்ணுப்பீழைப் பூ கலந்து காப்புக் கட்டுவது போல ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்துமஸ் மரங்களை வைக்கிறார்கள். நம்ம ஊரில் நட்சத்திரங்களைக் கட்டித் தொங்க விடுவது போல ஒரு வீட்டிலும் செய்யவில்லை. திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் மரம் இல்லாததால் நட்சத்திரங்களைக் கட்டித் தொங்க விடுகிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான அடையாளங்கள் பழைய வார்சாவில் தான் அதிகம். பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியிலிருந்து பழைய வார்சா நகரம் தொடங்குகிறது. பல்கலைக்கழகத்திற்கு அடுத்த கட்டடம் ஜான் பால் (போப்பாகத் தேர்வு செய்யப்பட்ட போலந்துக்காரர்) பொறுப்பில் இருந்த அந்தப் பழைய ஆலயம் இருக்கிறது. அதைத் தாண்டிப் போனால் அதைவிடப் பெரிய ஆலயங்கள் பல வருகின்றன.


கலாசார மாளிகை, ஜனாதிபதி மாளிகை, வார்சா ஸ்டேடியம், கோபர்நிகஸ் மியூசியம், தூதரக வீதி என ஒவ்வொரு தெருவிலும் விதம் விதமான விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. 24 –ந்தேதி நள்ளிரவு இந்த அலங்காரங் களையெல்லாம் பார்க்கலாம் எனத் திட்டமிட்டிருந்தாலும்,
பனிக்கட்டியின் அளவு கூடும்போது அது சாத்திய மாகமல் போகலாம் என நினைத்து 22 இரவே விளக்குத் தோரணங்களைப் பார்த்து விடுவது எனக் கிளம்பியிருந்தோம். டாடா மோட்டார்ஸ் சந்ரு, இந்த ஆண்டுடன் போலந்தை விட்டுக் கிளம்புவதால் இன்னொரு வாய்ப்பு வராது எனச் சொல்லி அவர் காரில் எங்களையும் சேர்த்துக் கொண்டார். பல்கலைக்கழகக் கட்டடங்களே ஒளியமைப்பின் பின்னணியில் புத்துணர்ச்சியோடு நின்றன. நட்சத்திர விடுதிகளும், பூங்காக்களும் கூட விளக்குத் தோரணங்களால் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

வெண்பனிக் கிறிஸ்துமஸை நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் பனிக்குப் பதிலாக மழைதான் தூறியது. 24 –ந்தேதி இரவும் நகர்வலம் கிளம்பினோம். வார்சா மக்கள் எப்படிக் கொண்டாடுகிறார்கள் எனப் பார்க்கும் ஆசை. 11.30 –க்கு வெளியே வந்த போது சாலையில் கார்களின் வரிசைதான் இருந்தது. மனிதர்கள் நடமாட்டம் இல்லை. கிளம்பிய வாகனங்களும் சர்ச்சுகளின் முன்னால் வரிசை கட்டி நின்றன. நள்ளிரவு ஜெபங்களுக்காக ஆலயமணிகள் அதிகச்சத்தமில்லாமல் ஒலித்தன.
 பழைய வார்சாவின் நீண்ட சாலைகளின் ஓரத்தில்இருவர் இருவராக நடந்து போகும் இணைகள் கைகளில் மதுப்பாட்டில்கள் இருந்தன. நின்று அணைத்து முத்தமிட்டுக் கொண்டே நடந்தவர்களைப் படம் எடுத்தால் பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால் தைரியம் வரவில்லை.

இந்த வருடக் கிறிஸ்துமஸ் வொயிட் கிறிஸ்துமஸாக இல்லாமல் வெளிச்சக் கிறிஸ்துமஸாகப் போனதில் பலர் வருத்தப்பட்டது அடுத்தநாள் பேச்சில் தெரிந்தது. வெளிச்சக் கிறிஸ்துமஸ் என்று சொல்வதைவிட வறட்டுக் கிறிஸ்துமஸ் எனச் சொல்லலாம் எனத் தோன்றியது. அடைமழை பேயாமல் தாண்டிப் போகும் தீபாவளியை எங்களூரில் வறட்டுத் தீபாவளி என்று தான் சொல்வார்கள். இந்த வருடத் தீபாவளி அப்படிப் போகவில்லை என்றுதான் நினைக்கிறேன். தமிழ்நாட்டில் தீபாவளி தொடங்கி நல்ல மழை பெய்து வருவதைச் செய்திகள் வழியாகப் பார்க்கிறேன். ஆனால் இந்த ஆண்டு குற்றாலத்தில் சாரல் ஒழுங்காக இல்லை என்பதை நானறிவேன்.

மே,ஜூனில் தொடங்கும் குற்றாலச் சாரல் பொய்த்துப் போனதை உலகச் சூட்டின் மாற்றம் (குளோபல் வார்மிங்) என நண்பர்களோடு பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. போலந்தில் இந்த ஆண்டு தொலைந்து போன வெண்பனிக் கிறிஸ்துமஸுக்கும் கூட உலகச் சூட்டின் மாற்றமே காரணம் எனப் பேசிக்கொண்டார்கள். மனிதர்கள் இயற்கையை வெற்றி கொண்டு உருவாக்கும் செயற்கை எவ்வளவு நாள் நம் கூட வரும் எனச் சொல்ல முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்