December 21, 2011

மாறிக் கொண்டிருக்கும் குடும்ப அமைப்புகள்: புதுவகைக் கலப்புத்திருமணங்கள் பற்றி ஒரு கலந்துரையாடல்


        உலகமயம், தாராளமயம், தனியார் மயம் எனக் கடந்த 20 ஆண்டுகளாகப் பேசப் படும் பின்னணியில் பொருளா தார மாற்றங்கள் பெரும ளவில் நடந்து விட்டன. நாடுகளின் எல்லைக் கோ டுகள் கற்பனைக் கோடு களாக மாறிக் கொண்டிருக் கின்றன. பொருளாதார மென்னும் அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேல் கட்டுமானங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற மார்க்ஸின் கண்டு பிடிப்பு மொழி,கலை, இலக்கியம்,பண்பாடு என்னும்பொது வெளிகளில் ஏற்கெனவே உண்மையாகி விட்டன. அவற்றில் எல்லாம் உலகமயத்தின் அடையாளங்களைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பொதுவெளியைத் தாண்டி தனிமனிதர்களின் அந்தரங்க வெளிகளுக்குள் - சமயம், குடும்பம், காதல் போன்றனவற்றிற்குள் மெல்ல மெல்லப் பரவி வருவதை இப்போது உணர முடிகிறது. இந்த உணர்வுக்குப் போலந்து வாழ்க்கை ஒரு கண் திறப்பாக இருக்கிறது கூடுதல் தகவல்
வார்சாவிற்கு வருவதற்கு முன் இங்கிருக்கும் யாரிடமாவது தொடர்பு கொள்ளலாம் எனக்கருதி முகநூலில் ஒரு முன்மொழிவு செய்தேன். வார்சாவில் தமிழர்கள் என்ற அந்தக் குறிப்புக்கு ஒரு பதிலும் வரவில்லை. பிறகு அதன் எல்லையை விரித்து போலந்தில் தமிழர்கள் எனப் போட்டேன்.. அதற்கும் எதிர்வினை எதுவும் இல்லை. அதன் பிறகு தமிழர்களை இந்திய எல்லைக்குள் நகர்த்தினேன். வார்சாவில் இந்தியர்கள் என மாற்றிய போது அங்கிருக்கும் குழுமம் என்னை வரவேற்றது. நான் வார்சா வருவதற்கு முன்பே அதன் உறுப்பினராகி விட்டுத் தான் வந்தேன். அதில் ஒருசில தமிழர்களும் இருப்பது தெரிகிறது.
இப்போதெல்லாம். தினசரி ஒருமுறை அந்தக் குழுமத்திற்குள் நுழைந்து வெளியேறுகிறேன். இந்திய உணவு விடுதிகள், கடைகள், கூட்டங்கள், நபர்கள் எனப் பலவற்றைத் தெரிந்து கொள்வதும் விரும்பினால் தொடர்பு கொள்வதும் சாத்தியம். 27 இந்திய ஓட்டல்கள் இருப்பதாக ஒரு பட்டியல் கிடைத்தது. தீபாவளிக்கு வாழ்த்துகள் வந்து சேர்ந்தன. அண்மையில் ஒரு சுவாரசியமான விவாதம் அதில் நடந்தது. அதனையே இங்கே மொழி பெயர்த்துள்ளேன். இந்தியாவில் கலப்புத் திருமணம் பற்றிய பேச்சுக்கு ஒரு நூற்றாண்டுக்கால வரலாறு உண்டு. ஒரு சாதிக்குள்ளும் அதன் குலங்களுக்குள்ளும் குடிகளுக்குள்ளும் நிகழும் அகமண முறையே சாதி அமைப்பைத் தக்க வைப்பதில் பெரும்பங்காற்றுகின்றன எனத் தனது விமரிசனத்தை வைத்த அம்பேத்கர் அகமண முறையை ஒழிக்காமல் சாதி ஒழிப்பு சாத்தியமல்ல என்றார்.  ஒருமனிதனும் மனுஷியும் செய்து கொள்ளும் திருமண ஒப்பந்தத்திற்குக் கலப்புத் திருமணம் எனப் பெயரிட்டுப் பெருமை பாராட்டுவது கூடச் சரியல்ல. இரண்டு பெரும் மனிதர்கள் தானே. ஒருவர் மனிதராகவும் இன்னொன்று விலங்காகவும் இருந்தால் அதனை கலப்புத் திருமணம் எனச் சொல்லலாம் எனக் கடுமையாகப் பேசினார் பெரியார். அம்பேத்கரும் பெரியாரும் இந்திய சமுதாயத்தை மாற்றும் கருவியாக நினைத்த கலப்புத் திருமணம் உலகமயத்திற்குப் பின் வேறு பரிமாணங்களை எடுத்து வருவதை நான் போலந்தில் பார்க்கிறேன்.
படிப்பதற்காக, வேலை பார்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ள இந்திய ஆண்களில் சிலர் அந்தந்த தேசங்களின் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தோடு இருக்கின்றனர்.போலந்துக்கு வந்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த இரண்டு மாதத்தில் நான்கு இந்தியர்களை – போலந்துப் பெண்ணை மணந்து கொண்டு இங்கு தங்கியிருக்கும் – இந்தியர்களைச் சந்தித்து விட்டேன். அந்நால்வரில் இருவர் தமிழர்கள். அவர்கள் ஐரோப்பாவில் நிரந்தரமாகத் தங்கிவிட இந்தத் திருமணங்கள் உதவும் என்ற குறுகிய லாபம் பின்னணியில் இருந்தாலும், அதற்காகத் தனது அந்தரங்க வாழ்வையும் நீண்ட காலத்தையும் கொடுக்கத் தயாராகும் மனநிலையைச் சுலபமாக ஒதுக்கி விட முடியாது.
போலந்துப் பெண்கள் கடும் உழைப்பாளிகளாகவும் அழகிகளாகவும் இருப்பது இன்னோரு காரணமாக இருக்கலாம். வெண்பட்டுக் கூந்தலும் மிகச் சிறிய கண்களுமாகப் புன்சிரிப்பை உமிழ்ந்து ஜிந்தாப்ரேத் சொல்லும் போலந்து யுவதிகள் போலவே நீண்ட கருங்கூந்தலைச் சடையாகப் பின்னிக் கொண்டும், பின் கொண்டை போட்டுக் கொண்டும் இந்தியப் பெண்களின் சாயலிலும் கூடப் போலந்து யுவதிகள் நடக்கும் அழகே தனிதான். இந்திய ஆண்கள் அவர்களோடு நடந்து செல்லும் வேகம் கொண்டவர்களாக இருப்பார்களா? என்பதுதான் எனது பெரிய சந்தேகம். அவர்களின் வேகம் அப்படி. கையில் புகையும் சிகரெட்டும் சிமிட்டும் கண்களும் பேசும் மொழி போலிஷ் மொழியாக இருந்தால் என்ன? இந்திய மொழிகளில் ஒன்றாக இருந்தால் என்ன? என்று நினைத்துவிடும் வாய்ப்புகள் கூடுதல் தான். போலந்துக் கிராமங்களுக்கு நான் இன்னும் செல்லவில்லை. போன பின்பு அவர்களைப் பற்றி எழுதுகிறேன். முகநூலில் போலந்து நாட்டு, வார்சாவில் இந்தியர்கள் என்ற குழுமத்தில் நடந்த விவாதம் என்னைக் 
கவர்ந்தது. அதை உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன்.
குறிப்பு:. அந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் பெயர்கள் சுருக்கப்பட்டுள்ளன. பெயர்கள் முக்கியமல்ல. விவாதத்தைத் தொடங்கியவர் பு.அ., புதிதாகக் கலப்புத் திருமணம் எண்னத்தில் இருப்பவர். அவர் தொடங்கிய விவாதத்தில் இந்தியர்களை மணந்து கொண்ட போலந்துப் பெண்கள் மனந்திறந்து பேசுகிறார்கள். அதில் ஒருவர் சீக்கியரை மணந்த போலந்துப் பெண். இன்னொருத்தி சென்னையைச் சேர்ந்த கிறித்தவரை மணந்த போலந்துக்காரி. போலந்துக்காரிகளை மணந்த இந்திய ஆண்களும் விவாதத்தில் இருக்கிறார்கள். நமது இந்தியப் பெண்களும் ஆண்களும் திருமணம் பற்றியும், திருமணத்திற்குப் பிந்திய வாழ்க்கை பற்றியும் மனந்திறந்து பேசும் நாட்களை எதிர்பார்க்கிறேன். படித்துப் பாருங்கள்.
=======================================================================

பு.அ.: ஒரு இந்திய ஆண் போலந்துப் பெண்ணை அல்லது இதற்கு மாறான ஜோடியாக இருப்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நான் இந்திய-போலந்து கலப்புத் திருமணத்தை விரும்புகிறேன். ஏற்றுக் கொள்ள நினைக்கிறேன். உங்களிடமிருந்து ஆலோசனை களையும் வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறேன். 
ம.சி. : அனுபவங்களை எதிர்பார்ப்பது சரி. என்னமாதிரியான அனுபவங்கள் வேண்டுமென்று சொல்லவில்லையே.
பு.அ.: வேறுபட்ட பண்பாட்டுக் கூறுகள் தரும் அனுபவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? அதற்குள் இருக்கும் குணாதிசயங்கள் எவ்வளவு தூரம் உங்களைக் கவர்வதாக இருக்கும். அந்தக் கவர்ச்சி எவ்வளவு காலம்  தக்க வைக்கக் கூடியதாக இருக்கும்? என்பது மாதிரியான கேள்விகள் தான்?
ம.சி. மற்றவர்களின் அனுபவங்கள் பற்றி நான் சொல்வது சரியாக இருக்காது. என்னுடைய அனுபவத்திலிருந்தே பேசுகிறேன்.  “ உங்கள் வினாக்களுக்கான விடையாக எதையும் சுலபமாக விளக்கி விட முடியாது என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். ஒரு பண்பாட்டைச் சேர்ந்த ஒருவர்,இன்னொரு பண்பாட்டுக் கூறுகளோடு கொண்டிருக்கும் ஒப்பந்தம் அல்லது ஏற்புநிலை தான் அதைத் தீர்மானிக்கும். எனக்கு இந்தியப் பண்பாட்டின் எந்த அம்சம் கவர்ச்சியானதாக இருந்ததுன்னா “குடும்ப அமைப்பை விரும்பறதும், பெரியவர்களை மதிப்பதும் தான். அப்புறம் இன்னொன்றையும் கவனித்திருக்கிறேன். இந்துக்கள், தன்னோடு பிரியமாக இருக்கும் ஒருவர் , இன்னொருவர் மீது பிரியமாக இருப்பதை கடுமையாகவும் வெறுப்பாகவும் பார்க்கிறார்கள்”. நல்லவேளை என்னுடைய கணவர் அப்படி இல்லை. அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஆனால் அப்படி இருக்கும் பலரை எனக்குத் தெரியும்.
ம.சி.  ஏன் மறைத்துப் பேச வேண்டும். வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். இந்திய ஆண்கள் கையாள்வதற்குச் சுலபமானவர்கள் அல்ல.
ம.சி.  ஐரோப்பியப் பெண்கள் சுதந்திரமானவர்கள் எப்போதாவது தான் இந்தியப் பண்பாட்டுக்குத் தங்களை ஒப்புக் கொடுப்பார்கள்.
பு.அ.: முதலில் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்; பாராட்டுகிறேன். ஆழமான புரிதலோடும் அனுபவத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒரு உதாரணத்தை வைத்துக் கொண்டு பொதுமைப் படுத்திவிட முடியாது எனவும் நினைக்கிறேன். ஒவ்வொரு பண்பாட்டிலும் நிகழ்காலத்துக்குப் பொருந்தக் கூடியனவைகளும் இருக்கும்; பொருத்தமற்றனவும் இருக்கும். அதற்குள்  இறங்கிப் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து. இறங்கிப் பார்த்தால் அவற்றிற்கிடையே காணப்படும் அதிகபட்ச ஒற்றுமைகளைக் கண்டறிய முடியும். அத்தோடு இரண்டு பண்பாடுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்பது அதை விட முக்கியம்.
பு.அ.: உங்கள் பெயரிலிருந்து உங்கள் கணவர் ஒரு இந்து ஆண் அல்ல என்பதை உணர்கிறேன்(சிங் என முடியும் பெயர்) . அதனால் உங்களுக்குச் சில பிரச்சினைகள் தெரியவில்லை. நான் ஒரு இந்து என்பதால் மற்ற பண்பாட்டுக் கூறுகளில் காணப்படும் வேறுபாடுகளை நன்கு அறிவேன். அதே நேரத்தில் நேரடியாக எந்தப் பண்பாட்டையும் குறிப்பிட்டு விமரிசனம் செய்வதும் சரியல்ல என நினைக்கிறேன். உங்கள் விமரிசனக் குறிப்புகள் இப்போதும் வரவேற்கப்படுகின்றன. யாரையும் புண்படுத்தாத வகையில் உங்கள் கருத்துக்களை இன்னும் கூடுதல் அறிவுடன் பகிர்ந்து கொண்டு தெளிவுபடுத்துவதுடன் வேறுபாடுகளைச் சரி செய்ய முடியும் எனவும் நினைக்கிறேன். 
ம.சி. இந்து ஆண்களைக் கணவனாக அடைந்துள்ள போலீஷ் பெண்களுக்கும் இதே அனுபவம் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். ஒவ்வொரு பண்பாட்டிலும் நல்லதும் கெட்டதும் இருக்கிறது என்பதை நானும் அறிவேன். ஆனால் அது எங்கே ஆரம்பிக்கிறது என்பது தான் முக்கியம். நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன். படித்த பெண்களைக் கூடப் குழந்தைப் பராமரிப்புக்காக வீட்டில் இருக்கச் செய்து விடுகிறீர்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது என நினைக்கிறேன்.
பு.அ.: ஆமாம். மற்றவர்களை உதாரணங்காட்டிப் பேசுவது மேலும் சிக்கலாகவே அமையும் எனவே என்னையே உதாரணமாக்கிக் கொள்கிறேன். நீண்ட காலமாக எனது பெண் தோழியாக இருக்கும் அந்தப் பெண்ணை எனது மனைவியாக்கிக் கொள்ளப் போகிறேன். அவள் வெளியே போவதற்கும் நண்பர்களோடு வேடிக்கையாகப் பழகுவதற்கும் எந்தத் தடையும் விதிக்கப் போவதில்லை. இல்லத்தரசியாக மட்டுமே இல்லாமல் வெளியில் சென்று கடுமையாக இருவரும் வேலை செய்யப்போகிறோம். நான் போன வாரம் தான் இந்தியாவிலிருந்து திரும்பி வந்தேன். அங்கே பெரும் மாற்றங்கள் – புரட்சிகரமான சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கண் கூடாகப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் – பெண்களைச் சுதந்திரமாக வெளியில் அனுப்பி வேலை செய்ய அனுமதிக்கும் – பெற்றோர்களைப் பார்க்கிறேன். பையன்களை விடவும் மகள்கள் வேலை செய்வதைப் பெருமையாகக் கருதும் இந்துக் குடும்பங்கள் இப்போது நிரம்பி விட்டன. தன்னளவிலேயே மாறத்தொடங்கி விட்ட இந்துப் பண்பாடு அடுத்தவர்களின் மீது அதன் மதிப்பீடுகளைத் திணிக்கும் எனச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பு.அ.: இந்துத்துவத்திற்குள் ஒருபகுதியாக நினைக்கப் பட்டாலும் பண்பாட்டு வேறுபாடு எனப் பார்க்கும் போது சீக்கியம் பெரிய வேறுபாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. அதற்குள் இருக்கும் பழைமை வாதிகள் உருவாக்கும் கருத்துகளே அதனை முன்னெடுத்துச் செல்கிறது.  இந்தியாவில் இந்துக்களே பெரும் பான்மையாக இருந்த போதிலும் அங்கு சீக்கியம் மட்டுமல்ல-எல்லா மதத்தவர்களும்- கத்தோலிக்கர்கள், இசுலாமியர்கள், யூதர்கள், என எல்லோரும் மதிக்கப்படுகிறார்கள்; ஏற்றுக் கொள்ளப் படுகிறார்கள்.
ம.சி. அனுபவங்கள் வேண்டுமென்று கேட்டீர்கள், அதனால் எழுதினேன். கடவுள் உங்களோடு இருப்பாராக.
பு.அ.:அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். நன்றி சொல்கிறேன். இடை யில் ஏற்பட்ட தவறான புரிதலைச் சரி செய்துவிட்டேன் என நினைக் கிறேன். வாழ்த்துகள். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கடவுள் நல்லருள் புரியட்டும்
ஜெ.வெ.: நீயொரு அதிர்ஷ்டசாலி.
ஆ.சி.:ஆர்வமூட்டிய விவாதம் கடைசியில் இன வாதப் பிரச்சினைக்குள் நுழைந்த போது ஆர்வம் வடிந்து விட்டது.
ம.சி.நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர் எனவும் ஆர்வக்கோளாறான ஆள் எனவும் நினைக் கிறேன். விவாதம் எப்போதும் இன வாதத்தைத் தொடவில்லை. புனித் இதைத்தான் தெரிந்து கொள்ள விரும்பினார். இந்தியக் கணவன் களோடு வாழ்பவர்கள் பற்றித் தெரிந்து கொள்ளவே விரும்பினார். அவர்கள் தானே பங்கேற்க முடியும்.
ஆ.சி.:இனமல்ல மதம். நாம் பண்பாடு/ மதம்/ வட்டாரம் சார்ந்து தீர்ப்புகளை உருவாக்கி விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்.
ம.சி.திருமணம் சார்ந்த அனுபவம் என்றால் இதைத்தவிர வேறொன்றையும் சொல்ல முடியாது. யாரொருவரும் மதத்தை விட்டு விலகிப் போய்விட முடியாது. நான் ஒரு இந்தியரை மணந்து கொண்டு வாழும் வாழ்க்கையைத் தான் எனது அனுபவமாகச் சொல்ல முடியும்.
இந்திய ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழும் போலந்துப் பெண்கள் அவனது மதத்தை ஏற்றுக் கொண்டவர்களாக – அவனது மதத்திற்கு மாறத் தயாரானவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இது சரியா? தவறா? எனச் சொல்லத் தெரியவில்லை. 
ஜெ.வெ.: ரொம்பவும் சரியானது.
ம.சி. அதனால் தான் அவர்கள் விரும்பப்படுகிறார்கள். ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். அப்படித்தானே
பு.அ.: இந்த விவாதம் ரொம்பவும் ஆர்வமூட்டும் விவாதமாக ஆகிவிட்டது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கமில்லாமல், தனிப்பட்ட வருத்தங்களை உருவாக்கி விடாமல் இன்னும் இன்னும் கூடுதல் தகவல்களோடும் அனுபவங்களோடும் பங்கெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கா.ஸ்.: எனது கணவரை நான் பெரிய வரமாகவே கருதுகிறேன். என்னை – எனது சுதந்திரத்தை- எனது பழக்கவழங்கங்களை அப்படியே ஏற்றுக் கொண்டவர் அவர்.கடந்த ஐந்தாண்டுகளாக என்னைக் காதலில் குதூகலிக்கச் செய்யும் கணவரோடு ஒரு தடவை கூட பண்பாடு, மதம் போன்ற வற்றைப் பற்றிப் பெரிதாக விவாதம் ஏற்பட்டதில்லை. ஆனால் ஒரேயொரு முறை – அதுவும் சில நாட்களுக்கு முன்பு நாங்கள் சென்னைக்குக் கிளம்பத் தயாரான போது எனது நம்பிக்கை சார்ந்து திரும்பத்திரும்பச் சொன்ன போது அந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சரி உங்களோடான விவாதத்தைச் சென்னையிலிருந்து தொடர்கிறேன். போய் வருகிறேன். வாழ்த்துங்கள். 
பு.அ.:நன்றி கா.ஸ். அவர்களே.. இந்தியாவில் நீங்கள் இருக்கும் நாட்கள் மகிழ்ச்சியாக அமையட்டும். போய் நிறைய எழுதுங்கள்.
ஐ.ப. நன்றி பு அவர்களே. எனது கருத்தை விரும்பியதற்கு.
நான் இந்து. எனது மனைவி போலிஷ். நாங்கள் இருவரும் மற்றவர்களின் பண்பாட்டை சமமாக மதிக்கிறோம். நாங்கள் இந்தியாவில் தீபாவளையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.கிறிஸ்துமஸுக்குப் போலந்தில் இருக்கும்போது போலீஷ் பெண்கள் ரொம்பவும் இனிமையானவர்கள் என்று என் மனைவியிடம் சொல்வேன்.
ப.சிங். நான் எனது மனைவியையும் மகளையும் காதலிக்கும் அதே வேளையில் ஒப்புக் கொள்ள முடியாத அம்சங்களும் இருப்பதாகவே நினைக்கிறேன். நாங்கள் எங்களையும் எங்கள் பண்பாட்டையும் மதிக்கிறோம். பண்பாடு என்பது ஒரு பழக்க வழக்கம் என்பதைத் தாண்டி வேறென்ன?  அதே நேரத்தில் கலப்புத் திருமணங்களை உண்மை யிலேயே வரவேற்று எழுதுகிறவர்கள் ஒருவரும் இல்லை என்பதும் உண்மை.
பு.அ.நன்றி. ப.சி.&ஹ.ப., அவர்களே. உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன். ப.சி. அதிகமாகவே தனது கருத்துக்களைச் சொல்லியுள்ளார். நம்மில் பலரும் கலப்புத் திருமணங்களைப் பற்றி- அதன் தேவைகளைப் பற்றி- சாத்தியங்களைப் பற்றி எழுதுவதில்லை; பேசுவதில்லை. திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அதைப் பற்றிப் பேசுவதில்லை என்பது உண்மை தான்.
ப.சி.: ஒருவேளை நான் எழுதியது தவறாகக் கூட இருக்கலாம். நான் நினைப்பது நமது திருமண வாழ்க்கைக்குள் நடப்பதை நாம் எழுதுவதில்லை என்பதைத் தான். என் திருமண வாழ்க்கை ரொம்பவும் சிக்கலாகிக் கொண்டு வருகிறது என்று மற்றவர்களிடம் சொல்வதில்லை. எப்போதும், ‘ நமது திருமண வாழ்க்கை சந்தோசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளவும், எனது மனைவி/ கணவன் அன்போடு இருப்பதாகக் காட்டிக் கொள்ளவுமே விரும்புகிறோம். பொய்மையான தோற்றத்தை உருவாக்குவதை யாராலும் மறுக்க முடியாது. மூடிக் கிடக்கும் கதவுகளுக்குப் பின்னே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை.
பு.அ.: எல்லாத் தம்பதிகளும் அப்படிச் சொல்லிக் கொள்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நண்பர்களோடு விவாதித்துத் தீர்வுகளை அடைந்தவர்களும் உண்டு. இங்கே – இந்த விவாதத்தில் இருவேறுபட்ட பண்பாட்டுக் கலப்புசார்ந்த திருமணங்கள் குறித்தே அதிகம் மையப்படுத்தி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அதை நினைவில் கொண்டு விவாதிக்கலாம்.
ம.சி.:திருமண வாழ்க்கை பற்றி நண்பர்களோடு விவாதிப்பதைவிட வரப்போகும் கணவனிடம்/ மனைவியிடம் விவாதிப்பதே சரியானது. அங்கு உருவாகும் தீர்வுகளே ரொம்பவும் சரியாக அமையும்.
பு.சி. அவர்களே. உங்கள் மனைவி உங்களோடு அதிகமாகச் சண்டை போட்டால் அதை உங்கள் நண்பர்களிடம் சொல்வீர்களா? .அப்படிச் சொல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் உங்கள் திருமணப் பிரச்சினைகளையும் கருத வேண்டும்
ம.சி. அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சில நேரங்களில் வேறுபாடுகளைத் தனது இணையோடு விவாதிப்பதில் தீர்வுகள் கிடைப்பதைவிட முரண்பாடுகளே அதிகமாகி விடுவதுமுண்டு. தொடர்ந்து கலப்புத் திருமண வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் எப்படிப்பட்டவை? அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றிப் பேசலாம் என நினைக்கிறேன். இந்த வாய்ப்பை எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பாகக் கருதித் தான் இப்படிக் கோருகிறேன்
ம.சி. நீங்கள் தப்பு செய்கிறீர்கள் என்பதை நம்புங்கள். நண்பர்கள் பொறாமைக்காரர்கள். எப்போதும் உங்களுக்காக உங்கள் பிரச்சினைக்காகப் பேசுவார்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருப்பது எப்போதும் மகிழ்ச்சியடையவே செய்கிறார்கள். என்னுடைய நல்ல ஆலோசனை இதுதான். உங்களுடைய மனைவி/ தோழிகளிடம் உங்கள் பிரச்சினையைப் பேசித் தீர்வுகாண்பதே சரியானது. நண்பர்களிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது. அவள்தான் உங்கள் வாழ்க்கையின் பகுதி: நண்பர்கள் அல்ல. உங்கள் நண்பர்கள் வருவார்கள்; போவார்கள். ஆனால் அவள் உங்கள் கூடவே இருப்பாள்; கடைசி வரை வருவாள்
பு.சி. ம.சிக்கு: நல்லவேளையாக என்னுடைய தோழியோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஏற்பட்டாலும் நாங்களிருவரும் பேசித் தீர்த்துக் கொள்வோம். இங்கே பண்பாட்டு கலப்புப் திருமணங்களில் ஏற்படும் சிக்கல் பற்றி விவாதிக்கிறோம் என்ற மையத்தை விட்டு அவ்வப்போது விலகிப் போய் விடுகிறோம். தயவு செய்து அந்த மையத்தை விவாதிப்பது இன்னும் பலன் தரும்.
ஹெச்.எஸ்: . எனது குறிப்பை விரும்பியதற்கு நன்றி பு.அ. அவர்களே.
ம.சி. அவர்களே.உங்கள் நண்பர்கள் சிலர் அவர்களிடம் விவாதித்த போது தவறான வழியைக் காட்டியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. எனவே நானும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். நம் பிரச்சினையை என் மனைவியிடம் அல்லது தோழியிடம் விவாதிப்பதே சரியானது என நினைக்கிறேன். உங்கள் பிரச்சினைக்கான தீர்வை நீங்களே உருவாக்குவதுதான் சரியானது.
ஹெச். பி.பி. உங்கள் மனைவி உங்களின் நல்ல தோழி / நண்பர் என்பதை முதலில் நம்புங்கள் அதுவே பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி நகர்த்திவிடும்.


1 comment :

குட்டி மணி said...

கட்டுரை அருமையா இருக்கு மண சீர்திருத்தம் என்பது உலக பொதுமைக்கு ஈடாக பரிணாமிக்க வேண்டும் என்ற கருத்தானது வரும்காலங்களில் அமலாகும் நு நெனைக்கேன்