இவனே இல்லையென்றால் யார்தான் மாகவி?



கவி பாரதி எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் பலவிதப் பதிப்புகளில் கிடைக்கின்றன. கவிதைகள் அனைத்தும் இணையம் வழியாக வாசிக்கக் கிடைப்பதும், அவனது கவிதை சார்ந்த கருத்துக்கள் நேரடி மொழிபெயர்ப்பாகவும், சாராம்சம் சார்ந்த சுருக்கமாகவும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அதன் காரணமாக அவனது படைப்புகளும், படைப்பு வழியே முன் வைக்கப்பட்ட கருத்துக்களும் உலகம் தழுவிய இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகமாயுள்ளன.
விரிவான விமரிசனங்களும் வெளி வந்துள்ளன. ஆனால் அவனது கவிதைகளில் அவனைப் பற்றியும், அவனது கவிதைகளின் இலக்குகள் பற்றியும் எழுதி வைத்துள்ள குறிப்புகள் விரிவான விவாதங்களுக்கு உட்படுத்தப் படவில்லை. இன்னும் சொல்வதானால் கவி பாரதி என்னும் தனிமனிதத் தன்னிலையை அடையாளப்படுத்தும் அப்பிரதிகள் பொருட்படுத்தத் தக்க பிரதிகளாகக் கூடக் கருதப்படவில்லை. அதற்கு மாறாக அவன் மகாகவி அல்ல என்ற வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
 
கலைக்கோட்பாடு:
ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப் பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக்கோட்பாடு அல்லது இலக்கியக் கோட்பாடு என்ற சொல் உள்ளது. படைப்பியக்கம் என்பது படைப்பு சார்ந்த நுட்பங்கள் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. படைப்புப் பொருள், படைப்புமுறை, படைப்பு நோக்கம் எனப் படைப்பு நுட்பம் விரியக் கூடியது. படைப்பு சார்ந்த இவை படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல், அதன் நுகர்வோனாகிய வாசகனிடமும் சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைகின்றது. ஆக, ஒரு கலைக்கோட்பாட்டைப் பற்றிய சொல்லாடல் என்பது படைப்பாளி, படைப்பு, அதன் வாசகன் என்ற மூன்று மையங்களைப் பற்றிய பேச்சாக இருக்கும்; இருக்க வேண்டும். இம்மூன்றில் ஏதொன்றையும் தவிர்த்து விட்டு அந்தக் கலைக்கோட்பாட்டைப் பேச முடியாது. மூன்றில் ஒன்றைத் தவிர்க்க முடியாது என்பது எப்படி உண்மையோ அதுபோல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசவும் முடியாது.
 
உலக இலக்கிய வரலாற்றில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யும் ஓர் இலக்கிய மாணவன் இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியம் செய்யப் பட்டதற்கும், செய்யப்பட்ட இலக்கியங்களை விளக்குவதற்கு இலக்கியக் கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டதற்கும் உதாரணங்களைக் காட்ட முடியும். தமிழ் இலக்கியப் பரப்பும் இதற்கு விலக்கானதில்லை. தமிழ் இலக்கியப்பரப்பை வாசிக்கும் நாம் தமிழில் உள்ள பனுவல்களை எவ்வாறு வாசித்து வந்துள்ளோம் அல்லது வாசிக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொள்வோம். அல்லது நமக்கு முன்பு வாசித்தவர்கள், அவர்களின் வாசிப்பிற்கேற்ப கட்டுரைகளை அல்லது நூல்களை எவ்வாறு எழுதியுள்ளனர் என்று யோசித்துப் பார்ப்போம். இரண்டு விதமான போக்குகளும் தமிழில் இருந்துள்ளன என்பதுதான் உண்மை. சில நேரங்களில் கிடைக்கின்ற இலக்கியக் கோட்பாட்டின் பின்னணியில் வாசித்திருக்கிறார்கள். சில நேரங்களில் இலக்கியக் கோட்பாடுகள் எதனையும் பின்பற்றாமல் நேரடியாகப் பனுவலை வாசித்துப் பொருள் கொள்வதும் நடந்துள்ளன.
 
தமிழின் தொன்மை இலக்கியங்களான செவ்வியல் பிரதிகள் பெரும்பாலும் தொல்காப்பியம் முன் வைத்துள்ள இலக்கியக் கோட்பாட்டின் வழியே தான் வாசிக்கப் பட்டுள்ளன. ஆனால் பின்னர் வந்த நீதிநூல்களையும், பக்திக் கவிதைகளையும், காப்பியங்களையும் வாசிக்க எந்தவிதக் கோட்பாட்டு நூல்களும் இல்லை. தமிழ்க் காப்பியங்களை வாசிக்கப் பயன்படும் தண்டியலங்காரத்தின் விதிகள் கூட தமிழ் மொழி சார்ந்த இலக்கியக் கோட்பாட்டு உருவாக்கம் அல்ல. வடமொழிக் காவ்யதரிசனத்தின் தாக்கம் பெற்றது. சிலம்பும் மேகலையும் காவ்யதரிசனத்தின் விதிகளுக்குள் அடங்காமல் தொடர்நிலைச் செய்யுள் என்னும் இலக்கியவகைக்குள் நிற்கக் கூடியன. தொடர்நிலைச் செய்யுள் என்ற சொல்தொடர் கிடைக்கிறதே யொழிய, அதன் கட்டமைப்பு, வடிவம், கூற்றுமுறை, இடம் பெறும் அழகியல் கூறுகள் போன்றனவற்றை விளக்கிக் காட்டப் போதிய கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. நாடகத்தமிழை எங்ஙனம் வாசிப்பது என்று விளக்கும் நூல்களும் இல்லை. இதன் தொடர்ச்சியையே இக்கால இலக்கிய வகைகளை வாசிக்கும் போதும் உணர்கிறோம்.
 
நிகழ்காலத் தமிழில் வாசிக்கக் கிடைக்கும் சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வகைகளை வாசிக்கத் தேவையான கோட்பாட்டு விளக்க நூல்களை ஐரோப்பியர்களிடமிருந்தே பெற்றுப் பயன் படுத்துகிறோம். பயன்படுத்தும் போது இருவேறு மாதிரிகள் இங்கு பின்பற்றப் படுகிறது. ஒரு படைப்பாளியின் படைப்புகள் வழியாகவும், அதனால் உண்டாகும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் வழியாகவும் படைப்பாளியின் கலையியலைக் கண்டறிவது ஒரு முறையியல். அதற்கு மாறான முறையியல், ஒரு படைப்பாளியின் பனுவல்களுக்குள் காணப் படும் தன்னிலை சார்ந்த குறிப்புகளைக் கொண்டு அவனது கலையியல் கோட்பாட்டைக் கண்டறிவது.
இவ்விருவகை முறையியல் வழியாகவும் திறனாய்வாளர்கள் அடையும் முடிவுகள் ஒன்றிணைந்து நிற்கும் வாய்ப்புகளே அதிகம். ஆனால் சில நேரங்களில் முரண்படுதலுக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அப்படியான முரண் பாடுகள் கண்டறியப்படும் நிலையில், படைப்பாளியின் தன்னுணர்வு கேள்விக்குள்ளாக்கப்படுதல் தவிரிக்க முடியாதது. காணப்படும் வேறுபாட்டின் அளவுக்கேற்ப அந்தப் படைப்பாளி , தன்னுணர்வுடன் உருவான படைப்பாளி அல்ல; அதற்கு மாறாக அவனது காலத்தாலும், சமூகச் சூழலாலும் உருவாக்கப்பட்ட படைப்பாளி என்னும் அடை யாளத்தைப் பெறுவான். இத்தகைய முறையியல் வழியாகத் திறனாய் வாளர்கள் அடையும் முக்கியமான முடிவு இதுவே. இத்தகைய திறனாய்வுக்குப் படைப்பாளியின் வாழ்க்கை ரகசியங்கள் குறைந்த அளவுடன் கிடைத்தாலும், திறப்புகளைக் கொண்டதாகவும் கிடைக்க வேண்டும். பாரதியின் வாழ்க்கை ரகசியங்களும் படைப்புகளும் அப்படித்தான் விரித்துப் பரப்பட்டுள்ளன.

பாரதி: பன்முக அடையாளம்:

ஒரு கவியின் அடையாளங்களைப் பேசும் போது அவன் வாழ்ந்த காலத்திலும் அவன் மறைந்த காலத்திலும் அவனது படைப்புகளை நிறுத்திப் பேச வேண்டும். பாரதியின் வாழ்நாட் காலம் ஒரு சாதாரண மனிதனின் சராசரி வாழ்நாள் கூட இல்லை. வெறும் 39 ஆண்டுகளே (1882 -1921). அக்குறுகிய வாழ்க்கைக்குள் தனது காலத்தின் பொது வாழ்க்கையையும், தேசத்தின் ஆன்மத் துடிப்பையும், கனன்று எரிந்த விடுதலைத் தீயையும் அறிந்தவனாக இருந்தான் பாரதி. பொதுப்புத்தி சார்ந்த இலக்கிய அணுகல் வழியே பாரதியின் கலையியல் பார்வையாக நமக்குக் கிடைப்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவனைப் பல நேரங்களில் தேச விடுதலையை முன் வைத்துக் கவிதைகளை எழுதிய ‘தேசியக் கவி’ என்னும் அடையாளத்தை முதன்மைப் படுத்தி பேசுவது இந்தப் பின்னணியில் தான்.
 
சின்னஞ்சிறு தேசங்களாக எல்லை வகுத்துக் கொண்டு பிரிந்து கிடந்த பல தேசங்களைக் கிழக்கிந்தியக் கம்பெனியும் பிரித்தானிய ஆட்சியும் ஒன்றிணைந்த தேசமாக அடையாளப்படுத்திக் காட்டியதைப் பாரதி அப்படியே உள்வாங்கிய வனாகத் தனது கவிதைகளில் வெளிப்பட்டான். மன்னும் இமையமலை எங்கள் மலையே - மாநிலத்தில் அதற் கீடிணையில்லேயே என வடக்கெல்லையை அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்குட்பட்ட இந்திய தேசம் அடிமைப்பட்ட வரலாற்றையும், அதனால் இந்தியப் பொருளாதார, சமூக, பண்பாட்டு வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் அவனது கவிதைகளில் இடம் பெறச் செய்துள்ளான்.

தனது காலத்தில் நின்று கொண்டு கண் முன்னே நடக்கும் நாட்டு விடுதலையின் வேட்கையைப் பற்றிப் பேசும் எந்தவொரு கவியும் தன்னை யறியாமல் கடந்த காலத்திற்குள் செல்லவும் செய்வான். நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குள் செல்வதோடு நின்றிருந்தால் பாரதி இன்று வரை நினைத்துப் பார்க்கப்படும் கவியாக- கவி ஆளுமையாக ஆகியிருக்க மாட்டான். அவனது ஆளுமையின் தனி அடையாளமே நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் பயணம் செய்தது போலவே எதிர்காலத்திற்குள்ளும் பயணம் செய்தான் என்பதுதான். போகின்ற பாரதமும், வருகின்ற பாரதமும் அவனது கவிப் பொருளாக இருந்தது. விடுதலை அடையும் பாரதம், எத்தகைய பரிமாணங்கள் கொண்டதாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டும் நோக்கங்களையே பாரத சமுதாயம், புதிய பாரதம் போன்ற கவிதைகளில் அவன் வாசிக்கத் தந்துள்ளான். கடந்த காலத்திற்குள் பயணம் செய்யும் போது இந்தியாவின் பல்வேறு மரபுகளின் தொல் மனங்களின் உறைவுகளையும் மிதவைகளையும் கவிச் சொல்லாகவும் கவிக்குறிப்புகளாகவும் தந்துள்ளான். வேதமரபுகளை உள்வாங்கியது போலவே நாட்டார் மரபுகளையும் சுயமாக்கிக் கொண்டவன் பாரதி. திருமால், ஆதிசிவன் எனப் பேசும் கவிதை வடிவங்களைப் போலவே முத்துமாரியையும், காளியையும், சுடலையையும் நினைவுக்குக் கொண்டு வரும் கவிதைகளையும் தந்துள்ளான். என்றாலும் அதிகமாக மிதந்து கொண்டிருப்பவை வைதீக சமயத்தின் குமிழிகளும் நகர்வுகளும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
 
தேச விடுதலைப் போராட்டக் காலத்தோடு இணைத்துப் பேசப்பட்ட பாரதியின் தேசியக்கவி என்னும் அடையாளம், காலனிய ஆட்சியின் முடிவுக்குப் பின், உண்டான பின் காலனிய மனநிலையில் வேறு வேறு அடையாளங் களுக்குள் நகர்த்தப் பட்டது. அவனைப் புரட்சிக் கவி எனவும், சர்வ தேசப் புரட்சியை வரவேற்ற முன்னோடி எனவும் அடையாளப் படுத்திக் காட்டினர். சோவியத் யூனியனில் நடந்த மாற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ‘ஆகாவென்றெழுந்ததுபார் யுகப் புரட்சி’ எனவும், ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை; ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை’ எனவும் அவன் எழுதிய வரிகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டன. சமதர்ம சமுதாயம் குறித்த அவனது கவிதைப் பதிவுகளும் கட்டுரைக் குறிப்புகளும் சேர்ந்து அவனை உலகக் கவியாகவும், புரட்சிக்கவியாகவும் அடையாளங்காட்டின

பின் காலனிய இந்தியாவில் எழுந்த புதிய நடைமுறைகளும், அதிகாரப் படிநிலைகளும், தேர்தல் அரசியலும் நடைமுறை வாழ்க்கை சார்ந்த மாற்றங்கள் பலவற்றைக் கொண்டு வந்து சேர்த்தன. புதிய விழிப்புணர்வுகள் பலவற்றை இந்திய வாழ்க்கை எதிகொண்டது. குறிப்பாகச் சமூக அமைப்பின் படிநிலைகளைத் தீர்மானித்த வருணக் கோட்பாடு ஆட்டம் கண்டது; பாலினம் சார்ந்த வேறுபாடுகள் கேள்விக் குள்ளாக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கரின் கருத்தியல்களின் வழியாக உருவான சமூக நீதியும், அதற்குக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் முக்கிய விளைவுகளை உண்டாக்கின. அதே போல் பாலினம் சார்ந்த மறுமலர்ச்சிக் கருத்துக்களும் புதிய திசை வழிகளைக் காட்டியுள்ளன. தமிழில் இத்தகைய கருத்தோட்டங்களின் முன்னணிப் படையாக- அதற்கான முதல் பேச்சாக இருப்பவை, பாரதியின் கவிதைகளும் கட்டுரை களும் என்பதை எடுத்துக் காட்டுகள் மூலம் நிறுவ வேண்டியதில்லை.
 
இந்திய சமூகத்தில் நிலவிய சாதிய வேறுபாடுகளும் பாலின வேறுபாடுகளும் ஆதிக்க நிலையும் சுதந்திர இந்தியாவில் இருக்காது என்றே கனவு கண்டவன் அவன். ‘பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே’ எனக் கட்டியங் கூறியதோடு, “சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறு உண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி; சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரம் அன்று சதி என்று கண்டோம்” என்று சொல்லிச் சாடி முடிக்கும் அந்த கவிதையை (உயிர் பெற்ற தமிழர் பாட்டு) “ மனிதரில் ஆயிரம் சாதி என்ற வஞ்சக வார்த்தையை ஒப்புவது இல்லை” என்று தொடங்கியவன் பாரதி. அதே போல் இந்தியப் பெண்களின் நிலையில் பெருமளவு மாற்றங்கள் வேண்டுமெனச் சொன்னவனும் பாரதிதான். ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்றும், ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ எனப் பெண்களின் குரலாகவே மாறிப்பேசியவனும் அவனே. உச்சமாகக் ‘கற்புநிலை என்று சொல்ல வந்தால்- இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ என்று எழுதினான். இத்தகைய கவிதை வரிகளே அவனைச் ’சமூகச் சீர்திருத்தக் கவி’ யாகவும், ’பெண்ணிய மறுமலர்ச்சிக்கான கவி’ யாகவும் அடையாளப்படுத்தின.
காலனிய ஆட்சியைக் கடுமையாக எதிர்த்தவன் என்றாலும், ஐரோப்பிய அறிவு, ஐரோப்பியப் பண்பாடு, ஐரோப்பியச் சிந்தனை முறை, ஐரோப்பியக் குடும்ப அமைப்பு, ஐரோப்பியக் கல்வி முறை, ஆண் - பெண் உறவுகளில் அவர்களின் நடைமுறை போன்றவற்றை முழுமையாக எதிர்த்தவன் அல்ல பாரதி. பல நேரங்களில் அதனை விரும்புகிறவனாகவும் கூட இருந்துள்ளான். எட்டுத்திக்கும் சென்று, செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தைச் சொன்னவன். அவன் சொன்ன செல்வங்கள் பொருள்சார்ந்த செல்வங்கள் மட்டுமல்ல; கல்வி அறிவும் கலைகளின் பெருமையும் என்பதைப் பாரதியின் உரைநடை நூல்களை வாசிப்பவர்கள் உணர முடியும். கருத்தியல் சார்ந்த மாற்றங்களையும் அறிவையும் தேடி அடைய வேண்டிய செல்வமாகப் பாரதி தான் நமக்கு முதலில் சொன்னான்.

தேசியக்கவி, சமூக சீர்திருத்தக் கவி, பெண்ணியக் கவி என்ற அடையாளங்கள் எல்லாம் பாரதியைப் பொதுவெளியில் அடையாளப் படுத்தும் நோக்கம் கொண்டவை என்றால், அவன் எழுதிய குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, வசன கவிதை, தோத்திரப்பாடல்கள் வழி உருவாக்கப் படும் அடையாளங்கள் தனிமனித வாழ்க்கை சார்ந்த – தன்னிலை யுணர்வுடன்- அகம் சார்ந்த பயணத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. இந்தியச் சமயமரபான வைதீகம் கடவுள் பற்றியும், மனிதன் பற்றியும், இரண்டிற்குமான உறவைத் தீர்மானிக்கும் வாழ்க்கைமுறை பற்றியும் பேசும் கருத்தியல்களை இவ்வகைக்கவிதைகளில் நேரடியாகவும் மறைமுக மாகவும் பேசுவதன் வழியாகத் தன்னை இந்திய மரபின் ஆழத்திற்குள் சென்று நிற்கின்ற ஒரு ஞானக் கவியாகவும் , வாசிப்பவர்களிடம் காட்டிக் கொள்ளும் சாத்தியங்கள் கொண்டவன் பாரதி.
இத்தகைய அடையாளங்களோடு அறியப்படும் பாரதி தனது பிரதிகளுக்குள் கவி என்பவனின் இருப்பு, சமூகப் பார்வை, எதிர்பார்ப்புகள், அவை நிறைவேறாத போது கொள்ளும் மனச்சிக்கல் போன்றனவற்றையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளான். அவை அவனது இலக்கியவியல் சார்ந்த தன்னிலையைக் காட்டும் குறிப்புகள்.‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ எனப் பேசிய பாரதி இன்னோர் இடத்தில் ”கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்றும் எழுதியுள்ளார். இரண்டும் ஒன்றாக இருப்பது ஒரு வகையில் அத்வைத வேதாந்தத்தின் சாரம் போலத் தோன்றினாலும், கவிதையும் கவியும் வேறு வேறாக இருக்கக் கூடாது என்பதையே அவன் இலக்கிய நெறியாகக் கொள்ள விரும்பினான், ஆனால் அவனது சொந்த வாழ்க்கையும், சூழலும் அவனை அவ்வாறு இருக்க அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள அவன் எழுதிய பல கவிதைகளும் சுயசரிதையும் நமக்குச் சான்றுகளாக இருக்கின்றன. அனைத்துக் கவிதைகளின் வரிகளுக்குள்ளும் சென்று இதனை உணர்த்துவதற்குப் பதிலாக சில முக்கியமான கவிதைகளை மட்டும் வாசிக்கத் தருகிறேன்.
”நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ? எனத் தொடங்கி,
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன், - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ சத்தியைப் படுநல் லகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன், -இ வை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?”
என நீளும் கவிதையின் தலைப்பு: கேட்பன.
இக்கவிதைக்குள் இருக்கும் பாத்திரத்தின் தன்னிலை கவிஞனின் அகம் சார்ந்த தன்னிலை. கவிஞனது விருப்பமும் ஆசையும் நிறைவேறத்தக்க எளியனவாகவே இருந்த போதிலும் நடப்பு வாழ்க்கையின் துயரம் வேறு எங்கோ அழைத்துச் செல்வதைப் பாடும் குரலாக அக்கவிதை வெளிப்பட்டுள்ளது. இதனை வேறு ஒரு கவிதையில் உருவகமாகப் பாரதி சொல்லியிருக்கிறான். அந்தக் கவிதையின் தலைப்பு கவிதா தேவி அருள் வேண்டல் என்பதாகும்.
உபநிஷத்தில் இடம் பெறும் ஒன்றைக் கவிதை ரூபத்தில் சொல்கிறான். முனிவனாக இருந்த ஒருவன் சாபத்தால் பன்றியாக நேரிடுகிறது. அவனது மகனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தலை வெட்டப்படும் போது மீண்டும் முனிவனாக - சாப விமோசனம் பெறும் வரம் தரப்படுகிறது. சாபத்தைச் சங்கடத்துடன் ஏற்றுப் பன்றியாக மாறிய முனிவன், அதன் அழுக்கு வாழ்க்கையில் சுகம் கண்டு திரும்பவும் முனிவனாக மாறிட விரும்பாமல் பன்றியாகவே வாழ ஆசைப்பட்டான் என உருவகமாகக் கூறும் கதையே தனது வாழ்க்கையாக ஆகிவிட்டது எனப் பாரதி பேசுவதாகக் கொள்ள வாய்ப்புண்டு. மனம் விரும்பிய கவிதைகளை எழுதாமல், வறுமையைப் போக்கிக் கொள்ளவும், நிகழ்கால நடப்பிற்கேற்ப வார்த்தைகளை உருக்கிப் பேசவும் நேர்ந்த வாழ்க்கை மனம் விரும்பிய வாழ்க்கை அன்று என அவன் வருந்திய வருத்தம் அக்கவிதையில் வெளிப்படுகிறது.
 
” வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே” எனத் தொடங்கும் அக்கவிதை,
”இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்.
சின்னாள் கழிந்தபின் -- யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப விளைவினால்
பன்றியா வீழ்ந்திடு முன்னர்த் தன்மக னிடை
‘என் தனயநீ யான்புலைப்பன்றியாம் போது
பார்த்துநில் லாதே! விரைவிலோர் வாள்கொடு
வெறுப்புடை யவ்வுடல் துணித்தெனைக் கொன்று
தொலைத்தலுன் கடனாம். பாவமிங் கில்லையென்
பணிப்பிஃ தாகலின்! “
என வேண்டியதாக நீள்கிறது. ஆனால் உரிய நேரத்தில் தந்தைக்குச் சாப விமோசனம் கொடுக்கச் சென்ற தனையனைப் பார்த்து, பன்றியுருவில் இருந்த தந்தை,
“செல்லடா; செல்கத் தீக்குணத் திழிஞ! எனக்கிவ்
வாழ்க்கை இன்புடைத் தேயாம் என்று கூறி
இருந்தவப் பன்றிதன்இனத்தொடும் ஓடி
இன்னுயிர் காத்தது”
என நீள்கிறது. அக்கதையை கூறும் கவி பாரதி இறுதியில்
“ஒரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை”
எனக்கூறி முடிக்கிறார்.


ஸ்தோத்திரப் பாடல்கள் என்னும் பகுதிக்குள் தொகுக்கப்பட்டுள்ள பல கவிதைகள் பாரதியின் வாழ்க்கை சார்ந்த இயலாமையையும், ஆன்மீகத் தேடல் சார்ந்து கவிதைகள் இயற்றிக் கொண்டு இவ்வுலக வாழ்க்கை தரும் நெருக்கடியிலிருந்து விடுபட்டவனாய் வாழ நினைத்தான் என்பதாக அமைந்துள்ளன. இக்கவிதைகள் எல்லாம் பாரதியின் கடைசிக் காலத்தில் எழுதப் பட்ட கவிதைகள் என்ற குறிப்புகளின் அடிப்படையில், பாரதியின் கவிதைக் கோட்பாடு அல்லது கலையியல் கோட்பாடு, வாழ்க்கையையும் சூழலையையும் பாடும் கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து ஆன்மீகத் தேடலுக்குள் நகர்ந்தது என நினைக்கத் தோன்றுகிறது. அவன் எப்போதும் ஒரே கலையியல் கொள்கையின்படி இலக்கியம் செய்த கவிஞன் அல்ல; நீர்வழிப் படூஉம் புனைபோலக் காலத்தின் இழுப்பிற்கேற்பக் கவிதைப் பொருளைத் தேர்வு செய்து கொண்டு பயணம் செய்தவன். அப்படிப் பட்ட அந்த மாமனிதனை மகாகவி என்ற ஆகப் பெரும் அளவுகோலை வைத்து அளக்கப் பார்த்தாலும் தள்ளிப் போய் நின்று சிரித்துக் கொண்டிருப்பான். அவனையும் விட்டு விட்டால் தமிழுக்கு யாரைத் தான் மகாகவி எனச் சொல்லுவது?









பின் குறிப்பு:1.


இன்று பாரதி பிறந்த நாள் .


பின் குறிப்பு:2


ஜெயமோகன் பாரதி மகாகவி அல்ல என எழுதியதற்கும் இந்தக் கட்டுரைக்கும் நேரடித்தொடர்பு எதுவும் இல்லை]

கருத்துகள்

மதன்மணி இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்