பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”



அது போன்ற விருந்தோன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவில் கிடைத்ததில்லை. ‘தாராளமாகக் குடிக்கலாம்’ என அனுமதிக்கும் பாண்டிச்சேரியில் ஏழரை ஆண்டுகள் இருந்தும் இந்த அனுபவத்திற்காக வார்சா வர வேண்டியதாகி விட்டது. இதுபோலப் பல அனுபவங்களை வார்சா தர இருக்கிறது என்பதை ஒரு மாத காலத்திற்குள் புரிந்து கொண்டு விட்டேன்.


 “என்ன பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?” இந்திப் பேராசிரியரிடமிருந்து வந்த அந்தத் தொலைபேசியின் முதல் குரலை இப்படித் தான் மொழி பெயர்க்க வேண்டும். நேரிலும்சரி தொலைபேசியிலும்சரி அப்படித் தொடங்கிவிட்டுத் தான் பேச்சைத் தொடருவார் இந்திப் பேராசிரியர். வார்சா பல்கலைக்கழக இந்தியவியல் துறையில் வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளெல்லாம் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் வருகைதரு பேராசிரியர்கள் கிடையாது. இந்திய அரசின் செலவில் வருகைதரு பேராசிரியர்கள் வந்து போகும் இருக்கைகள் தமிழ், இந்தி என்ற இரண்டுக்கு மட்டும்தான் இருக்கின்றன.

1932 இல் தொடங்கப் பட்ட வார்சாப் பல்கலைக்கழகத்தில் முதலில் கற்பிக்கப்பட்ட இந்திய மொழி சமஸ்கிருதம். பிறகு வங்காளமும், இந்தியும் தற்கால இந்திய மொழிகள் என்றநிலையில் கற்பிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகுதான் தமிழ் சேர்க்கப் பட்டுள்ளது. இப்போதும் மதிப்புறு பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோப் பெர்ஷ்கியின் பெருமுயற்சியில் தமிழ் நுழைந்துள்ளது. 1973 இல் தொடங்கப் பட்ட தமிழுக்குத் தொடக்கத் திலிருந்தே இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் பண்பாட்டுப் பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழ் பேராசிரியரை அனுப்பி வைக்கிறது. அவருக்கு அங்கு பெயரே தமிழ் இருக்கை ஆசிரியர் தான். தமிழுக்கு அளிக்கப்பட்ட இருக்கை நிலையை இந்திக்கு 1983 இல் தான் இந்திய அரசு வழங்கி இருக்கிறது. வருகைதரு பேராசிரியர்களின் முக்கியமான வேலையே இன்றும் பேசப்படும் தமிழ் மற்றும் இந்தி மொழியின் இருப்பு நிலையைக் கற்பிப்பதுதான். செவ்வியல் மொழியாக இருந்தாலும் தமிழ் பேச்சு மொழியாகவும் இருப்பதால், அதற்கெனச் சொந்த ஊரிலிருந்து ஒரு பேராசிரியரை வரவழைத்துப் பேச்சுத்தமிழையும், தமிழின் நிகழ்கால இருப்பையும் அறிந்து கொள்கிறார்கள். இன்னொரு செவ்வியல் மொழியான சமஸ்கிருதத்திற்குப் பேச்சு வழக்கு இல்லையென்பதால் அதன் வழித் தோன்றலான இந்திக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இந்திக்கான வருகைதரு பேராசிரியராக இருப்பவர் டெல்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கிறார். வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து விட்டு திரும்பவும் தொடர்கிறார். அந்த வகையில் போலந்தும் வார்சாவும் பல்கலைக் கழகமும் இந்தியத் தூதரகமும் அவருக்குப் பழையன.

‘எதுவும் சரியில்லை’என்பதாக ஒரு தடவை கூட நான் சொன்னதில்லை. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் தொடங்குகிறார்.. ’வாழ்க வளமுடன்’ எனச் சொல்வதாக நினைத்து இப்படிச் சொல்கிறார் என இப்போது சமாதானமாகி விட்டேன். “என்ன பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?” எனக் கேட்டுத் தொடங்கினாலும் அவரிடமிருந்து வரும் தொலைபேசி எதாவது ஒரு தகவலையும் தருகிறது என்ற சுயநலமும் அந்தச் சமாதானத்திற்குப் பின் இருக்கிறது. குறிப்பாக இந்தி பேசும் கூட்டம் நிரம்பி வழியும் இந்தியத் தூதரகத்துச் செய்திகளை அவரிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அன்றும் அப்படியொரு தகவலைச் சொல்லவே அழைத்தார்.

அடுத்த வாரக் கடைசி வேலை நாளான வெள்ளி இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும்; குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அழுத்தினார். சரி குறித்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு இடம், பாதை பற்றிக் கேட்டேன். “ எனக்குத் தெரியும்; இருவரும் சேர்ந்து போகலாம்” என்றார். கொஞ்சம் தயக்கமாக இருந்தது. உறுதியைக் குறைத்து ‘ பார்க்கலாம் ‘ என்பதாகச் சொன்ன போது, ” அவர் ஒரு பெயரைச் சொல்லி விட்டு, இந்தியத் தூதரகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி; அவர் வீட்டில் தான் அந்த விருந்து என்பதையும் சொன்னார். இது போன்ற விருந்துகளைத் தவிர்க்கக் கூடாது என்று ஆலோசனையும் வழங்கினார். அவரது அழைப்பையே உங்களுக்குச் சொல்கிறேன்; இப்போது நான் சொல்வதுதான் முறைப்படியான அழைப்பு என்பது போலச் சொன்னார். தயக்கம் கொஞ்சம் கூடியது. அதிகாரம் பெரிதென்றாலும் அழைக்காத விருந்தில் எப்படிக் கலந்து கொள்வது? அதுவும் இந்தி பேராசிரியர் வழியாக ஒரு தமிழ்ப் பேராசிரியருக்கு அழைப்பு விடுத்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஒட்டு மொத்தத் தமிழர்களின் தன்மானம் என் முன்னால் நின்று தலை விரித்தாடியது.

நல்லவேளை அந்த அதிகாரி தமிழர்களின் தன்மானத்தோடு விளையாடவில்லை. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பின்னால் அவரே என்னைத் தொலைபேசியில் அழைத்தார். இந்திப் பேராசிரியர் வழியாக விடுத்த அழைப்பை நினைவூட்டினார். தொடர்ந்து எனது இணைய முகவரி வேண்டும் எனக் கேட்டார். தந்தேன். அதன் வழியாகவும் முறையான அழைப்பு வரும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன் வழியாக வேறு ஒரு அழைப்பு வந்தது. இந்தியப் பண்பாட்டுப் பரிவர்த்தனைக்கான கழகம்- இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுமம் ஆகியவற்றின் சார்பில் அடுத்த வாரம் ஒரு கூட்டம் இருப்பதாகவும் மாலை நேரத்தில் வார்சா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகத்தில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மனமுவந்து அழைக்கப்பட்டிருந்தேன். அக்கூட்டத்தில் இந்தியத்தூதரும் போலந்து நாட்டு வெளிவிவகாரத்துறையின் துணை அமைச்சரும் கலந்து கொள்ளுகிறார்கள் என்ற குறிப்பும் இருந்ததால் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டிய கூட்டம் எனக் கைபேசியின் நினைவூட்டுப் பக்கத்தில் குறித்துக் கொண்டேன். ஒரு வாரம் முன்பு ஒரு முறையும் ஒருநாளைக்கு முன்னால் ஒருமுறையும் நினைவூட்டும்படி உத்தரவும் கொடுத்து விட்டேன்.

இன்று காலை தொலைபேசியின் நினைவூட்டலை வாசித்த போது இந்திப் பேராசிரியர் சொன்ன தேதியைக் குறித்துக் கொள்ளவில்லை என்பது நினைவுக்கு வந்தது. முதல் வாரம் வீட்டில் விருந்து; அடுத்தவாரம் பரிவர்த்தனைக் கழகக் கூட்டம் என்பது நினைவில் இருந்ததும் ஒரு காரணம். தூதரக அதிகாரியின் விருந்தைப் புறக்கணிப்பது நாகரிகமல்ல என்ற முடிவுக்கு வந்த போது இந்திப் பேராசிரியரை நானே தொடர்பு கொண்டு கிளம்பவேண்டிய நேரத்தை கேட்டுக் கொண்டேன். சரியாக மாலை 06.30 க்குக் கீழே இருக்கும் வரவேற்புக் கூடத்தில் சந்தித்துக் கொண்டு கிளம்பலாம் என்று சொல்லி விட்டார். ஆறரை மணிக்குக் கீழே இருக்க வேண்டுமென்றால் ஆறு மணிக்குத் தொடங்கியாக வேண்டும். கவச உடைகளுக்குள் உடல் மறைத்துக் கிளம்பும் யுத்தம் அரை மணி நேரத்துக்கும் குறையாது.சரியாக ஆறரை மணிக்கு இந்திப் பேராசிரியரிடம் குலுக்கிய கையை விடவே இல்லை. அவரது கையைப் பிடித்துக் கொண்டு போய் விட வேண்டும் என்று மனம் எடுத்த முடிவைக் கை நினைவூட்டிக் கொண்டது.

வார்சா நகரத்தில் தனித்தனி வீடுகள் அல்லது பங்களாக்கள் என்ற நிலை மிகவும் குறைவு. நகரத்தை விட்டு விலகிப் புதிதாக உருவாகும் நகர் வளாகங்களில் தனித்தனி வீடுகள் உள்ளன. அவையும் வரிசையாகக் கட்டப்பட்டு ஒற்றை வளாகமாக ஆக்கப்பட்டு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் கொண்டனவாக இருக்கின்றன. அந்த வளாகத்திற்குள் நுழைவதும் வெளியேறுவதும் ஒற்றை வழியில் தான் இருக்கும். அந்த வாசலில் காவலர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அனுமதியோடு தான் உள்ளே நுழையமுடியும்.
நகரத்தின் மையப்பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிரம்பி நிற்கின்றன. பெரிய பெரிய அதிகாரிகளும் அதிலும் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருந்து வந்து வாடகைக்கு குடியிருக்க விரும்புபவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வரப்பிரசாதம். வாடகைக்கு கிடைக்கும் எல்லாக் குடியிருப்புகளும் குடும்பம் நடத்தத் தேவையான அனைத்துத் தளவாடச் சாமான்களுடனும் இருக்கின்றன, கட்டில், மெத்தை, பீரோ, நாற்காலி என எதுவும் வாங்க வேண்டியதில்லை. நம்முடைய வாடகைக்கு ஏற்ற குடியிருப்பைத் தேர்வு செய்து விட்டால், அதற்கேற்ற சாமான்கள் உள்ளே இருக்கும். நவீன சமையல் கருவிகளான குக்கர்களும் அடிப்படைப் பாத்திரங்களும் கூட வீட்டுச் சொந்தக்காரரிடம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். கேஸ் கிடைக்குமா? டெலிபோன் தொடர்பு, தொலைக்காட்சிப் பெட்டிக்குப் படங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் கேபிள் தொடர்பு போன்றவற்றிற்கு யாரைப் பார்க்க வேண்டும்? என்ற கவலையெல்லாம் கிடையாது. வாடகை அதிகமாக அதிகமாக துவைக்கும் சலவைப் பெட்டி, பாத்திரம் கழுவும் ’டிஷ் வாஸர்’ போன்றனவும் தனித்தனியாகக் கிடைக்கும். சில குடியிருப்புகளில் பொது இடத்தில் நிறுவப்பட்டு வாடகைக்கு விடப் படுகின்றன. சலவை செய்யப்படும் துணிகளுக்கேற்ப வாடகையை கொடுத்து விட்டுச் சலவைசெய்து காயப்போட்டு எடுத்துப் போய்க் கொள்ளலாம். வீடு கூட்டும் துடைப்பானும் வாடகைக்கு கிடைக்கும். வாரத்தில் ஒரு நாள் வாங்கி வீட்டைச் சுத்தமாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு தொகுப்பும் வயர்லெஸ் இண்டர்நெட் வசதிகளோடு இருக்கின்றன. உங்களுக்கான ரகசியக் குறியீட்டை வாங்கிக் கொண்டு உலகத்தோடு 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கலாம். அதற்கெனத் தனியாகப் பணம் செலுத்த வேண்டியதில்லை.

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வரிசையில் 100 வீடுகள் கூட இருக்கின்றன. ஐந்து மாடிகள் முதல் பத்து மாடிகள் வரை உயர்ந்து நிற்கும் அந்த வீடுகளுக்குள் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. கொஞ்சம் பழைய வீடுகளாக இருந்தால் ஒவ்வொரு வீட்டுத் தொகுப்புக்கும் கீழே ஒரு அலுவலகம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டோடும் தொடர்பு கொள்ளும் வசதியோடு அந்த அலுவலகம் இருக்கிறது. தொகுப்பு வீடானாலும் சரி, வளாக அமைப்பாக இருந்தாலும் சரி நாம் யார்? யாரைப் பார்க்க வேண்டும் என்ற தகவலைத் தெரிவிக்காமல் நுழைந்து விட முடியாது. நாம் சொல்லும் நபர் அந்தத் தொகுப்பில் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுவிட்டு மேலே அனுப்புகிறார்கள். இல்லையென்றால் நம்மை அழைத்தவர் எங்கள் வீட்டில் விருந்தொன்று நடக்க இருக்கிறது; இன்னார் இன்னாரெல்லாம் வருவார்கள் எனச் சொல்லி இருக்க வேண்டும். ஏறத்தாழ நம்மூர் லாட்ஜுகளில் தங்கியிருக்கும் நண்பரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்புவது போல விருந்தினர்கள் வந்து போக வேண்டும். இதெல்லாம் கொஞ்சம் பழைய வீட்டுத் தொகுப்புகளில் தான். நவீனத்தொகுப்பு வீட்டு வரிசைகள் கணிணி வழிக்கதவுகளால் பூட்டப் பட்டுள்ளன. அவற்றுக்குள் நுழைந்து திரும்பும் கதை இன்னும் சுவாரசியமானது.

எங்களை விருந்துக்கு அழைத்தவர் வார்சா நகரத்தின் டெலிவி(ஷன்)சா நிலையத்துக்குப் பக்கத்தில் நவீன அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் குடியிருந்தார். அவரிடமிருந்து முறையான அழைப்பைப் பெற்றிருந்த இந்திப் பேராசிரியர் மூன்று வருட அனுபவம் கொண்டவர் என்பதால் எல்லாவற்றையும் சரியாக வைத்திருப்பார் என்று உறுதியாக நம்பித்தான் அவர் கைப்பிடித்துப் போனேன். இருந்தாலும் ஒரு முறை கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்துக் கேட்டேன். கேட்ட இடம் நாங்கள் வழக்கமாக டிராம் ஏறும் நிறுத்தம். அப்போது சந்தேகமாகச் சொன்னால் கூடத் திரும்பி வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நினைப்பு தான். நான் மட்டும் இல்லாமல் அவரையும் சேர்த்து அழைத்துக் கொண்டு திரும்பி விடலாம் என்ற ஆசைதான்.

 “பேராசிரியரே! எல்லாம் சரியாக இருக்கிறது; கவலைப் படாதீர்கள். ஏற்கெனவே இரண்டு முறை அந்த வீட்டுக்கு விருந்துக்குப் போயிருக்கிறேன்” என்றார். விருந்துக்குப் போகாமல் திரும்பும் வாய்ப்பே இல்லை என்பது உறுதியானதால் புதுவகை விருந்தில் பங்கேற்கும் மனநிலைக்குத் தயாராகி டிராம் ஏறி விட்டேன். மூன்று நிறுத்தம் தாண்டி இருக்கும் மெட்ரோ ஸ்டேசனில் இறங்கிவிட்டோம். வார்சாவின் குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகளும் பேருந்துகளும் போகின்றன என்றால், மெட்ரோ ரயில் பூமிக்கடியில் ஒரு வட்டப் பாதையில் போவதாகச் சொன்னார்கள். இன்று தான் அந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யப்போகிறேன். அதில் ஏறி மூன்று நிறுத்தங்களுக்குப் பிறகு இறங்கித் தரைத் தளத்துக்கு வந்த போது இரவின் ஜொலிப்பில் பனித்துளிகள் மிதந்து கொண்டிருந்தன.

இந்திப் பேராசிரியர் கோட்டுப் பைக்குள்ளிருந்து சின்னதான காகிதத்தை எடுத்துப் பார்த்த போது கொஞ்சம் கலக்கமாக இருந்தது.வரைபடத்தின் உதவியோடு குத்துமதிப்பாகத் தான் என்னை அழைத்துப் போகிறார் என்பது தான் கலக்கத்திற்குக் காரணம். கூகிள் வரைபடத்தில் இருந்த கோடுகளை ரோடுகளாகக் கருதி நடந்து சரியான முகவரியை அடைந்த போது வளாகத்தைச் சுற்றி நின்ற கம்பி வலைப்பின்னல் எங்களைத் தடுத்தது. நுழைவு வாசலில் பூட்டுகள் எதுவும் இல்லை. தொட்டுத் தள்ளிய போது குளிரின் சில்லிப்பு உள்ளங்கை வழியாக அடி வயிற்றுக்குள் இறங்கியது. ஆனாலும் கதவுகள் நகரவில்லை. உள்புறமாகத் தள்ளும் கதவுகளாக இல்லாமல் இடப்புறமும் வலதுபுறம் நகர்த்தும் விதமாக இருந்தது. நகர்த்தினால் உள்ளுக்குள் சொருகிக் கொள்ளும் அமைப்பு. தள்ளிப் பார்த்தேன்; அசையவில்லை. பக்கத்தில் காவலர்க்கான அறையும் இல்லை. நாய்கள் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.கதவிடுக்கில் கால் வைத்து ஏறிக் குதித்தால் உள்ளே போய் விடலாம். ஏறிக் குதித்தால் எத்தகைய இக்கட்டு வந்து சேரும் என்பது தெரியாததால் அவரைப் பார்த்தேன். கலக்கம் அவர் முகத்திலும் இருந்தது.


திரும்பவும் காகிதத்தை எடுத்துப்பார்த்து விட்டுச் சிரித்து, பின்பக்கம் திருப்பினார். பையிலிருந்த காகிதத்தின் பின்புறம் ஒரு குறியீட்டு எண் இருந்தது. ஆறு குறியீடுகள் இருந்தன. ஒவ்வொன்றாகத் தடவிக் கொடுத்தார். இப்போதும் கதவு திறக்கவில்லை. இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தார். தாள் திறப்பதாக இல்லை. கொட்டும் பனித்துளைகளை மார்கழிப் பனியாக நினைத்து ஆண்டாள் பாசுரம் ஒன்றைப் பாடலாமா? என்று சொல்லியிருந்தால் அவர் சிரிப்பாரா மாட்டாரா என்பது தெரியாததால் சிரிப்பை எனக்குள் அடக்கிக் கொண்டேன். குறியீட்டு எண்கள் உதவாத நிலையில் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் மாறி அடுத்த முயற்சிக்குத் தாவினார்.

விருந்துக்கு அழைத்த அதிகாரியின் கைபேசி எண் அவரிடமிருந்தது. தொடர்பு கொண்டு இந்தியில் பேசினார். என்ன பேசினார் என்பதை ஊகிக்க முடிந்தது. அவரிடம் இருக்கும் குறியீட்டெண் கட்டிடத்தின் லிப்ட் பகுதிக்குள் நுழைவதற்கான குறியீட்டெண் என்பதும், வளாகக் கதவைத் திறக்கும் எண் பொதுவானது எனவும் சொல்லி விட்டு சங்கேதக் குறியீட்டை சொல்வதற்குப் பதிலாக நானே வருகிறேன் எனச் சொல்லி இறங்கி வந்து விட்டார். ஐந்தாவது மாடியிலிருந்து மூன்றாவது நிமிடத்தில் வந்து விட்டார். இந்திப் பேராசிரியரிடம் கைகுலுக்கி விட்டு என்னிடம் கையைக் கொடுத்தார். அவரது கையைப் பிடித்துக் கொண்டே லிப்டுக்குள் நுழைந்து அவரது குடியிருப்பின் வாசலில் பிரித்தேன்.
உள்ளே நுழைந்து கவச உடைகளைக் களைந்து விசாலமான வீட்டின் மைய அறைக்குப் போன போது அதிகாரியையும் சேர்த்து மூன்று பேர் தான் இருந்தனர். இரண்டு பேர் போலந்துக்காரர்கள் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. ஆனால் இந்தியில் நமஸ்காரம் சொன்னார்கள். விருந்தினர்களைத் தாய்மொழியில் வரவேற்றால் அந்நியோன்யம் ஏற்படக்கூடும் என்பது பன்னாட்டு உறவு சார்ந்த நடைமுறை . விருந்துக்கு அழைத்திருந்த தூதரக அதிகாரி என்னிடம் தமிழில் வணக்கம் சொல்லி விட்டு ஆங்கிலத்திற்கு மாறிய போது திரும்பவும் உணர முடிந்தது. அதிகாரியின் மனைவி ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கவில்லை. இந்தி தான் அவருக்குத் தெரிந்த மொழியாக இருக்க வேண்டும். நானும் இந்திப் பேராசிரியரும் மனைவிமார்களோடு வந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும் என்பது அவரது கண்களில் தெரிந்தது. இந்தியில் அவர் கேட்டதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார் பேராசிரியர்.

யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை என்பது போல் விருந்து தொடங்கிவிட்டது. அதிகாரியின் வட்டம் இருபதுக்குக் குறையாமல் விரியும் என நினைத்திருந்தேன். இந்தியர்கள் இரண்டு பேர்; போலந்துக்காரர்கள் இரண்டு பேர் என நான்கு பேருக்காக ஒரு விருந்தா? எனக் குழப்பமாக இருந்தது. அந்த இருவரும் ஊர் சுற்றுவதிலும் சாகசப் பயணங்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்று அறிமுகப் படுத்தினார் அதிகாரி. இரண்டு பேருக்கும் இந்தியும் ஆங்கிலமும் போலிசும் ஒரே மொழி என்பது போலப் பேசினார்கள். நட்சத்திர விடுதிப் பணியாளர் போல உடையணிந்த ஒருவர் உள்ளே இருந்து வந்து மஞ்சள் திரவம் நிரப்பிய கண்ணாடி டம்ளர்களை வைத்து விட்டுப் போனார். பக்கத்திலிருந்த பீங்கான் தட்டில் தூள் பஜ்ஜியும் இரண்டு வகைச் சட்டினிகளும் இருந்தன.

கண்ணாடி டம்ளர்களில் இருப்பன என்ன வகையான மதுவாக இருக்கும் என்று புரியாமலேயே சியர்ஸ் சொல்லக் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்து உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கி விட்டனர். நானும் குடித்தபோது பழரசம் என்பது தெரிந்தது. பழரசம் மதுபானம் இல்லையென்பதால் உற்சாக வார்த்தையை ஒலித்துத் தொடங்க வேண்டும் என்பதில்லை தானே. வெறும் பழரச விருந்தோடு அனுப்பி, காந்தியின் தேசத்துத் தூதரக அதிகாரி என்பதைக் காட்டி விடுவார் என நினைத்துக் கொண்டிருந்த போது தூள் பஜ்ஜியை ஆளு பக்கோடா எனச் சொன்ன அதிகாரியின் மனைவி எப்படி இருக்கிறது எனக் கேட்டார். இந்திப் பேராசிரியர் பாராட்டு வார்த்தைகளைச் சொல்லி முடித்த போது கவிதை வாசிப்பது போல இருந்தது. நானும் ஆங்கிலத்தில் பாராட்டுச் சொல்லொன்றைச் சொல்லி வைத்தேன். கண்ணாடி டம்ளர்கள் உள்ளே போன பின்பு தாமதம் இல்லாமல் மதுக்குப்பிகள் வந்தன. யாருக்கு என்ன வகையான மது எனக்கேட்டுக் கேட்டு ஊற்றி கொடுத்தார் பணியாளர். நாங்கள் நாலு பேர்தான் என்றாலும் நான்கு வண்ணங்களில் குப்பிகள் நிரம்பியிருந்தன. சிவப்பு ஒயின், நிறமற்ற வோட்கா, மஞ்சள் விஸ்கி, நீலமும் பச்சையும் கலந்த ஜெர்மன் மதுபானம் என ஒவ்வொன்றும் ஒரு வண்ணமாக இருந்தது சியர்ஸுக்காகக் குப்பிகள் உயர்த்தப் பட்டன. பக்கத்தில் இருந்த கண்ணாடிக் காட்சிப் பெட்டிக்குள் பலவிதமான மதுக்குப்பிகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. தூதரக அதிகாரத்தின் -டிப்ளமேட்டிக் பவர் –அடையாளங்கள் எனப் பேராசிரியர் எனக்கு விளக்கிச் சொன்னார். இருபத்தஞ்சு மில்லி லிட்டர் முதல் இருநூறு மில்லி லிட்டர் நிரப்பக் கூடிய குடுவைகளின் அணி வகுப்பு காட்சி அழகுக்கா? நினைப்பின் சுகத்துக்கா எனத் தெரியவில்லை.

பேச்சு இந்தியாவைப் பற்றித் திரும்பியது. நான் ஜெயலலிதாவின் விசுவாசியா? கருணாநிதியின் தொண்டனா என்பதைத் தெரிந்து கொள்ளும் விதமாகக் கேள்விகளைக் கேட்டுப் பார்த்தார்கள் பிடி கொடுக்காமல் நழுவி விட்டதாக நினைத்துக் கொண்டேன். இரண்டு பேரையும் விமரிசிக்கும் தொனியை வெளிப்படுத்தியதால் அதிகாரி சகஜமாகி விட்டார். பழைய காஞ்சிபுரம், இப்போதைய மாமல்லபுரம் என ஆரம்பித்த பேச்சு மதுரை வழியாகத் திருவனந்த புரம் போய் கேரளாவில் குடி கொண்டது. என்னிடமிருந்து நகர்ந்து இந்திப் பேராசிரியரிடம் போகும் போது அலிகார், காசி, கங்கா, கல்கத்தா என நகர்ந்தது. பாதையைக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பதைத் தாண்டி இந்திய மனம், வடக்கிலும் தெற்கிலுமாக எப்படிப் பிரிந்து கிடக்கிறது என்பதைக் கவனித்துப் புரிந்து கொள்ளும் நோக்கம் அந்த இரண்டு பேருக்கும் இருந்தது.
சுனாமி வந்த போது பாண்டிச்சேரிக்குப் போகாமல் திரும்பி விட்ட சோகத்தைச் சொன்ன ஒருவர் கட்டாயம் பாண்டிச்சேரி போக வேண்டும் என்பதைச் சொல்லி விட்டு புதுச்சேரியில் இருக்கும் பிரெஞ்ச் இண்ஸ்டிடியூட் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைக் காட்டினார். இந்தியாவில் படிக்கும் வாய்ப்பு, பார்க்க வேண்டிய இடங்கள் எனச் சுற்றி வந்து முடிந்தபோது மூன்று சுற்று மதுபானங்களும் உள்ளே போயிருந்தன. போலந்து நாட்டுச் சமையல்காரர் சமைத்த இந்திய உணவு வகைகள் வரிசையாக இருந்த சாப்பிட்டு மேசையில் தட்டுகளும் வரிசைப்படுத்தப் பட்டிருந்தன. எதற்காக இந்த விருந்து என்பதைக் கடைசி வரை தெரியாமலேயே சாப்பிட்டு முடித்துக் கைகூப்பிக் கிளம்பிய போது எதற்கு அந்த விருந்து என்பதும் தெரிந்து விட்டது.

”நண்பர்களே எல்லாம் சரியாக இருந்ததா! போதும் தானே? “ எனக் கேட்ட போது ரொம்பத் திருப்தி எனச் சொல்லிக் கைகுலுக்கத் தயாரானார்கள். சட்டென்று நினைவுக்கு வந்து கைபேசி எண்களையும் வாங்கிக் கொண்டு அதன் வழி அழைப்பை அனுப்பித் தங்கள் எண்ணையும் பதிவு செய்து கொள்ளச் சொன்னார்கள். கைகுலுக்கும் போது வெளிப்பட்ட சந்தோசத்தை அதிகாரியின் முகத்துக்கு அனுப்பி விட்டு வெளியேறினார்கள். இந்தியாவைப் பற்றித்தெரிந்து கொள்ள விரும்பிய இரண்டு பேருக்கும் இரண்டு இந்தியப் பேராசிரியர்களைக் கொண்டு திகட்டத் திகட்டச் செய்திகளைச் சொல்ல வைத்து அனுப்பியதாக அந்த அதிகாரி திருப்தியுடன் அவர்களை அனுப்பி வைத்தார். இந்த விருந்துக்குப் பின்னால் இப்படியொரு டிப்ளமேட்டிக் ரகசியம் இருப்பது அப்போதுதான் புரிந்தது.

மெட்ரோ ரயிலேறி, டிராம் பிடித்து நாங்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டிற்குள்ளிருந்து வெளியேறும் போது இந்திப் பேராசிரியர் “பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”. எனக்கேட்ட போது “ ஒன்றும் சரியாக இல்லை” எனச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பேராசிரியரே! எல்லாம் சரியாகி விட்டதா?”

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்