November 28, 2011

தமிழ் வாழ்க்கை ஏன் தமிழ்ப் படத்தில் இல்லை


தமிழில் பெயர் வைத்தாலேயே தமிழ்ச் சினிமாவாக ஆகி விடும் என்று கருதிய தமிழக  அரசின் நம்பிக்கையை மூட நம்பிக்கையாக ஆக்கியது தமிழ்த் திரையுலகம். ரோபோ என்ற பெயருக்குப் பதிலாக எந்திரன் என்றொரு பெயரைச் சூட்டி வரி விலக்குப் பெற்று கல்லாக் கட்டும் வல்லமை அவர்களிடம் உண்டு. சினிமா என்றாலே லாபம் ஈட்டும் தொழில் மட்டுமே என நினைக்கும் சினிமாத் தயாரிப்பாளர்களிடமிருந்து தமிழ் வாழ்வும், தமிழ் மண்ணும், தமிழ்ச் சமூகமும் தமிழ் மனமும் பதிவாகும் என எதிர்பார்ப்பது அதிகப்படியான ஆசை தான்.
தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஒன்றே நோக்கம் என்றால், அதற்குள் செயல்படும் இயக்குநர்களில் பலர் சொந்த மூளையைப் பயன்படுத்த விரும்பாதவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு காரணமாக இருக்கிறது.
சினிமா தரும் பிரபலம் மற்றும் பணத்தைக் கருதி உதவி இயக்குநர்களாக வந்து சேரும் பலரும் அவர்களின் குருநாதர்களின் பாணிகளையே பின்பற்றுகிறார்கள். குருநாதர்களோ, பிறநாட்டு, பிறமொழிப் படங்களின் கதை முடிச்சையும், நிகழ்ச்சிக் கோர்வைகளையும் தமிழ்நாட்டிற்குரியதாக ஆக்கித் திரைப்படம் எடுக்கும் பாணியில் இருப்பவர்கள். ஒவ்வொரு வருடமும் அரங்கிற்கு வரும் தமிழ்ச் சினிமாக்களில் முக்கால்வாசிப் படங்கள், அத்தகைய முயற்சிகளாகவே இருக்கின்றன. இன்னும் சிலரோ, சில பத்தாண்டுகளுக்கு முன்பு வெற்றி பெற்ற படங்களை இன்றைக்குரியதாக ஆக்கித் திருப்பிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வெளிப்பாட்டிற்குக் காரணம் என்ன என்றால், தமிழ்ச் சமூகத்தினூடாகப் பயணம் செய்து படைப்பாற்றலை உருவாக்கும் பயிற்சி அவர்களுக்கு இல்லை என்பதை மட்டும் தான் காரணமாகச் சொல்ல முடியும்.
சொந்த மூளையைப் பயன்படுத்தித் தமிழ்ச் சினிமா எடுக்க நினைக்கும் இயக்குநர் ஒருவர் தமிழர்களை மூன்று காலங்களிலும் நிறுத்திப் பார்க்கும் படைப்பாற்றல் கொண்டவராக இருக்க வேண்டும் . தமிழர்களின் வாழ்வு சார்ந்த கடந்த காலத்திற்குள் பயணம் செய்து, அதன் நீண்டகாலப் பிரச்சினைகள் எவை எனக் கண்டறியும் வல்லமையை உருவாக்கிக் கொள்ளுதல் படைப்பாளியாதலின் முதல் படி. வரலாறு என்றவுடன் அரசியல் சார்ந்த வரலாறு என நினைத்துப் பயப்பட வேண்டியதில்லை. நிகழ்காலத்தில் தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவனை உள்ளடக்கிய சமூகக் குழுவுக்கும், அக்குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய மற்ற குழுக்களுக்குமிடையே உள்ள  உறவுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு. ஒரு மனிதனைத் தமிழ்ச் சமூக வரலாற்றின் கண்ணியில் வைத்து உருவாக்குவது மட்டுமல்லாமல், புதிது புதிதாகத் தோன்றும் சமூக நிறுவனங்களுக்குள் அவனை நிறுத்திப் பார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதனைச் செய்யும் எத்தணிப்பில் தான் தமிழ் வாழ்வு சார்ந்த திரைப்படங்களை உருவாக்க முடியும். இத்தகைய பயிற்சியை நமது திரைப்பட உலகம் உருவாக்கிக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல உருவாக்கக் கூடாது என்று நினைக்கிறதோ என்ற சந்தேகம் கூட அண்மைக்காலம் வரை இருந்தது. இப்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது. அந்த மாற்றத்தின் முக்கியமான அடையாளமாகப் பாலு மகேந்திரா வெளிப்பட்டுள்ளார்.
பாலு மகேந்திராவின் சமகாலத்தவர்களான பாரதிராஜாவும், மகேந்திரனும் தமிழ் வாழ்வின் அடையாளங்களோடு படம் தந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. பதினாறு வயதினிலேயும், முதல் மரியாதையும் தமிழ்ப் படங்கள் என்ற தகுதியை மட்டும் கொண்ட படங்கள். உதிரிப்பூக்களும், மெட்டியும், முள்ளும் மலரும் தமிழ் மனிதர்களின் சிலவிதக் குணங்களின் வெளிப்பாடுகள். பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம் போன்ற படங்களோடு அவரது சிஷ்யர்களான பாலா, அமீர், வெற்றிமாறன், சசிகுமார் போன்றவர்களும் தமிழ் வாழ்வின் மீது காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அமீரின் பருத்தி வீரனும், தங்கர் பச்சானின் சொல்ல மறந்த கதையும் ஒன்பது ரூபாய் நோட்டும் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக்குள் பயணம் செய்ததின் விளைவுகள் என்றால், வசந்த பாலனி அங்காடித்தெரு நிகழ்காலத் தமிழ் வாழ்வின் துயரத்தை நேரடியாகப் பார்க்கத் தெரிந்த கண்களின் கண்டு பிடிப்பு. இவையெல்லாம் சின்னச் சின்ன நம்பிக்கைகள் தான். பெரும் வெள்ளமாக வரும் தமிழ் அடையாளமற்ற  சினிமாக்களுக்குள் இந்த நம்பிக்கைகள் பல நேரங்களில் திருவிழாவில் தொலைந்த குழந்தைகளாக ஆகி விடும் வாய்ப்புகளும் உண்டு.
  

No comments :