November 15, 2011

குளியலறையில் குளிக்கக் கூடாது.வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு செய்து முடிக்க வேண்டும் எனப் போட்ட பட்டியலில் பாபநாசம் கீழணைக் குளியலும் ஒன்று. திருநெல்வேலிக்குப் போன பிறகு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை பாபநாசம் கீழணையில் குளித்து வருகிறேன். ஏதாவது வாய்ப்புக் கிடைத்தால் பாபநாசம் போய் விடவே எப்போதும் விரும்புவேன். திருநெல்வேலிக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் விரும்புவது குற்றாலம் தான். ஆனால் குற்றாலம் எனக்கு அலுத்துப் போய்விட்டது. அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து குளித்து வெளியேறுவதில் ஏற்படும் எந்தப் பிரச்சினையும் பாபநாசத்தில் இல்லை.

கீழணைக்குளியலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் பாத்ரூமில் குளிக்கக் கூடாது என்ற தடையைச் சந்தித்ததைச் சொல்ல வேண்டும். வார்சாவிற்குப் போனவுடன் நாங்கள் சந்தித்த குளியல் அறைச் சம்பவம் சுவாரசியமானது. திருநெல்வேலியில் ஆத்திலும் அருவியிலும் குளிக்கும் வாய்ப்புகள் இருந்தாலும் தினசரிக் குளியல் என்னவோ வாளித்தண்ணீரை அள்ளி ஊற்றிக் குளிப்பதுதான். அதற்கு வார்சாவில் விடுதலை கிடைத்தது. கழிப்பறையோடு கூடிய குளியலறையில் ’பாத் டப்’ இருந்தது. வெந்நீரையும் தண்ணீரையும் நிரப்பிக் கொஞ்ச நேரம் மூச்சடக்கி மூழ்கி மிதக்கலாம். அப்புறம் பூச்சுவாலையாக வரும் நீரில் உடம்பை கழுவி வெளியேறலாம் என்பதில் மகிழ்ச்சி.
நான் தங்கியிருக்கும் இடம் பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருக்கும் ஒரு விடுதி. அயல் தேச மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தங்குவதற்காகப் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த ஒன்பது மாடிக் கட்டிடத்தைச் சொந்தமாக வைத்திருக்கிறது. பல்கலைக்கழகம் வளாகத்தில் இல்லாமல் இவ்வளவு தூரத்தில் இருப்பது கொஞ்சம் கஷ்டம் என்றாலும் வசதிக் குறைவு எனச் சொல்ல முடியாது. கணவன் – மனைவி அல்லது தோழன் தோழி என  இரண்டு பேர் தங்கிக் கொள்ளப் போதுமான இட வசதி கொண்டது. அலமாரிகளும் சோபாக்களும் கொண்ட வாசிப்பு அறை, இரட்டைப் படுக்கையறை, பொருட்களுக்கான வைப்பறை, உணவுப் பரிமாற்றத்தோடு கூடிய சமையல் அறை என இருந்தாலும் இருபது வருடங்களுக்கு முன்பு கட்டியது என்பதால் பழைமை தெரியும். வெளியே பழைமையாக இருந்தாலும் குளியலறைப் பொருட்கள் புதியனவாக இருந்தன.
காலையில் ஒரு முறை, இரவில் ஒரு முறை குளிக்கும் எனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல்  வார்சாவிற்குப் போய் முதலிரண்டு நாளும் ஆசை தீரக் குளித்தேன். மூன்றாவது நாள் விடுதியின் வரவேற்பறையிலிருந்து அழைத்த பெண்ணின் குரல் உங்கள் வீட்டுக் குழாய்கள் எல்லாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? எனச் சோதனை செய்யுங்கள் என்று சொன்னது. சோதனை செய்ய என்ன இருக்கிறது? எல்லாமே சரியாக மூடப்பட்டிருந்தது என்பதால் ‘சரியாகவே இருக்கிறது’ எனச் சொன்னேன். ஆனால் ஆறாவது மாடியில் என் வீட்டிற்கு நேர் கீழே இருப்பவர் தண்ணீர் கொட்டுவதாகப் புகார் செய்திருப்பதால் அரை மணி நேரத்தில் பரிசோதிக்க ஆட்கள் வருவார்கள் என்றார். சொன்ன நேரம் இரவு 9.
சொன்னபடி அரைமணி நேரம் கழித்து கையில் சில கருவிகளுடன் இரண்டு பேர் வந்தார்கள். அவர்களோடு வரவேற்பில் இருக்கும் பெண்ணும் இருந்தாள். நுழைந்தவர்கள் சமையலறைக் குழாய்களை நோட்டம் விட்டார்கள். தண்ணீர்க் கசிவு எதுவும் இல்லை என்பது உறுதியானபின் குளியலறைக்குள் நுழைந்தவுடன் போலீஷ் மொழியில் பேசிக் கொண்டார்கள்.  குளியலறை முழுக்க ஈரமாக இருந்ததும், தண்ணீர் ஊற்றிக் கழுவப்பட்டதும் அவர் களுடைய சந்தேகத்தை உறுதி செய்து விடவே, எப்படிக் குளிப்பது என டெமாண்ஸ்ட்ரேஷன் செய்து காட்டினார். குளியலறையின் தரையில் போடப் பட்டுள்ளது மரப்பலகை என்பதால் நனைந்து கீழ் வீட்டில் தண்ணீர் இறங்குகிறது என்றார்.
குளியல் அறையில் வெளியில் நின்று குளிக்கக் கூடாது. பாத்டப் பிற்குள்ளாகவே குளிக்க வேண்டும். அதற்குள் மட்டுமே தண்ணீர் சிந்த வேண்டும்; அதற்கு வெளியே ஒரு சொட்டுத் தண்ணீர் சிந்தக் கூடாது எனவும்,சொல்லி விட்டுக் கழிப்பறைக் கோப்பையிலிருந்தும் தண்ணீர் வெளியே வரக் கூடாது எனச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அடுத்த நாள் மலம் துடைப்பதற்கான காகித உருளையைத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. மேற்கத்தியக் கழிப்பறை என்பது மலம் துடைக்கும் காகிதமும் சேர்ந்தது என்பதை போலந்து வந்த பிறகுதான் புரிந்து கொண்டேம். பல அடுக்கு மாடிகளின் சுற்றுச் சுவர் மட்டுமே கல் அல்லது செங்கல் வைத்துச் சிமெண்ட் போட்டுக் கட்டியிருக்கிறார்கள். உள்புறச் சுவர்களும், தரைத்தளங்களும் மரம் தான். மரத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்தால் ஊறித்தானே போகும்.
விக்கிரமசிங்கபுரம் பஞ்சுமில்லுக்கு நேரடியாகத் தண்ணீர் போகும்படி ஏற்பாடு செய்யவே வெள்ளைக்காரன் இந்தக் கீழணையைக் கட்டி நீரைத் தேக்கி இருக்கிறான். பாபநாசம் போனால் அருவியிலும் குளிக்கலாம்.கீழணையில் நீச்சலும் அடிக்கலாம்; மீன்கடிகளை ரசிக்கலாம். என்னுடைய ஒருநாள் சுற்றுப் பயணத் திட்டத்தில் எப்போதும் பாபநாசம் கீழணைக் குளியலும் உள்ளடக்கமாகவே இருக்கும். மணிமுத்தாறு, மாஞ்சோலை, பாபநாசம் என்று சொல்லி விட்டுக் கடைசியில் தான் குற்றாலம் என்று சொல்வேன்.
பாபநாசம் போகும்போதெல்லாம் மணிமுத்தாறு போகலாம் என்று நினைத்தாலும் மணிமுத்தாறு அருவி யில் எல்லாக் காலங்களிலும் நீர் வரத்து இருக்காது. அதேபோல் நினைத்த போதெல்லாம் மாஞ் சோலைக்கும் போய்விட முடியாது. மாஞ்சோலை சுற்றுலா வரைபடத்தில் இருக்கும் இடமில்லை. ஆங்கிலே யர்கள் காலத்திலிருந்தே மும்மை யில் இருக்கும் முகம் தெரியாத முதலாளியிடம் தேயிலைத் தோட்டம் அது. மாஞ்சோலை, நாலு முக்கு.  ஊத்து, குதிரை வெட்டி எனச் சின்னச் சின்னக்கிராமங்கள் இருந்தாலும் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் என்று தான் பிரபலம். அம்பாசமுத்திரம் பக்கம் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் அந்தத் தோட்டத்தில் பங்கு இருப்பதாக அங்கு வேலை பார்க்கும் தோட்டத் தொழிலாளர்கள் நினைக்கிறார்கள். நம்பவும் செய்கிறார்கள். அவருக்கு பராமரிப்பு உரிமை இருக்கக் கூடும். முழு விவரம் யாருக்கும் தெரியவில்லை. மிகக்குறைவான தொழிலாளர்கள், கங்காணிகளுடன் மாஞ்சோலையின் குளுமையும் வளமும் வெளியில் தெரியாமல் பராமரிக்கப்படுகிறது. குறைந்த பட்சக் கூலிக்காகப் போராடிய மாஞ்சோலைத் தொழிலாளர்களின் பிரச்சினையைப் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தான் வெளியே கொண்டு வந்தார். கொடைக்கானல், ஊட்டிக்கெல்லாம் போயிருக்கிறேன். மாஞ்சோலையின் இதமான குளிரும் பசுமையெழில் காட்சிகளுக்கும் கண்களை விட்டு அகலாத காட்சிகள். வனப் பராமரிப்பாளர்களிடமும் தோட்ட உரிமையாளர்களிடமும் அனுமதி பெற்றுத் தந்த நண்பர்களின் உதவியோடு இரண்டு தடவை மாஞ்சோலைக்குப் போன அனுபவம் காட்சி இன்பத்தின் சிகரங்கள்.
வார்சாவிற்குக் கிளம்புவதற்கு முன்பு பாபநாசம் குளியல் முடித்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பேரன் நந்தாவும் வந்து விட்டான். இரண்டரை வயதே ஆனாலும் தாமிரபரணியிலும் பாபநாசம் அணையிலும் குளிப்பதில் இப்போதே ஆர்வம். திருநெல் வேலிக்குக் கிளம்பினாலே “ தாத்தா …தைய் தைய்.. ” என ஆற்றுக் குளியலைத் தான் முதலில் சொல்வான். நீரில் முங்கிக் கண்களில் நீர்வழிய எழுந்து பார்க்கும் போது அவனுக்கு என்ன உணர்வு இருக்கும் எனத் தெரியாது. பயமற்ற ஆச்சரியத்துடன் சிரிப்பான். மகள் சிநேகலதா, மருமகன் பிர்ஜித் எனக் கிளம்பிப் போய் ஆசைதீரக் குளித்து விட்டு வந்தோம்.
பாபநாசம் குளியல் மீது பிரிக்க முடியாத பந்தம் ஏற்படக் காரணம் என்னவாக இருக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.ஒரு வேளை திருநெல்வேலியில் வேலைக்குச் சேர்ந்து முதல் வாரத்திலேயே ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இருக்கலாம். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கருத்தரங்கம் ஒருவிதத்தில் தன்னார்வத்தின் வெளிப்பாடு எனச் சொல்லக்கூடிய கருத்தரங்கம். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை மாணவர்கள் தங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்கித் தங்களுக்கான வேலை வாய்ப்பை உறுதி செய்ய முயன்ற முயற்சியின் விளைவு அது. கருத்தரங்கைத் தொடங்கி வைக்க பேரா. தே.லூர்துவும், தஞ்சை பல்கலைக் கழக நாட்டார் வழக்காற்றியல் துறையின் ஆறு .இராமனாதனும் வந்திருந்தார்கள். தொடங்கி வைத்து விட்டுப் போய்விட்டார்கள்.
நான் வெறும் பார்வையாளனாகவே போயிருந்தேன். பொதுவாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் மீது எனக்கு எப்போதும் எதிர்மறை விமரிசனங்கள் உண்டு. அடையாளம், பாரம்பரியம் என்ற பெயரில் சாதி மதக் குப்பைகளைத் தூக்கிச் சுமப்பதை நியாயப்படுத்துகிறவர்களுக்கு இந்திய நாட்டுப் புறவியல் உதவுவதாக இருக்கும் அதே நேரத்தில் மேற்கத்திய அறிவாளிகளின் கோட்பாடுகளைப் பொருத்தி பார்க்கும் சோதனைச் சாலையாக மூன்றாம் உலக நாடுகளை வைத்து வேடிக்கை பார்க்கும் ஒரு துறை என்பது என் கருத்து. இரண்டு நாள் கருத்தரங்கில் பகலில் கட்டுரை வாசிப்பு,. மாலையில் குளியல், இரவில் ஆற்றோர மண்டபத்தில் படுக்கை  எனத் திட்டமிட்டிருந்தனர்.  
பல்கலைக்கழகப் பேராசிரியரான நான் மண்டபத்தில் தங்க ஒத்துக் கொள்வேனா என்ற தயக்கம் இருந்ததால் பக்கத்தில் விடுதி  இருக்கிறது தங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆற்று மணலிலும் கட்டாந்தரையிலும் படுப்பதில் இருக்கும் சுகம் பற்றி அவர்களுக்குக் கதைகள் சொன்ன பிறகுதான் என்னை அழைத்துப் போவதில் இருந்த தயக்கத்தைத் தூரப் போட்டார்கள். திருநெல்வேலிக்கும் பாபநாசத்திற்கும் இடையே உள்ள  தூரம் 65 லிருந்து 70 கி.மீ. இருக்கும். பேருந்தில் போகாமல் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் போய். சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கீழணையிலும்  அகஸ்தியர் அருவியிலும் மாறிமாறிக் குளித்த  சுகம் தான் திரும்பத்திரும்ப இழுத்துக் கொண்டே இருக்கிறது.
அகஸ்தியர் அருவிக்கும் மேலே பாணதீர்த்த அருவியென ஒரு அருவி இருக்கிறது. ரோஜா படத்தில் பாவாடை தாவணியில் மதுபாலா சின்னச் சின்ன ஆசை எனக் குதியாட்டம் போடும்  அருவி தான் பாணதீர்த்த அருவி. பாபநாசம் அணைக்குக் கணிசமான நீரைக் கொண்டு வந்து சேர்க்கும் பாண தீர்த்த அருவியைப் போலச் சில அருவிகளும் பல ஓடைகளும் மலைக்குள் இருக்கின்றன. நகரத்து மனிதர்களின் நடமாட்டமில்லாத அந்த இடங்களைப் பார்க்க நினைத்தால் கொஞ்ச நாள் மேலே இருக்கும் காணிகளின் குடியிருப்பில் தங்க வேண்டும். அவர்களோடு கால்நடையாய் நடந்து போக வேண்டும். மான்களையும் மிளாவையும் பார்ப்பதோடு கரடிகளையும் சிறுத்தைகளையும் கூடப் பார்க்கலாம். இத்தகைய சாகசங்கள் செய்யும் ஆசையெல்லாம் இப்போதும் இருந்தாலும் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது என்பதும் உண்மை. கிராமத்து உடம்பை நகரத்து உணவு காவு வாங்கிச் சில பத்தாண்டுகள் ஓடிய பின்னும் கிராமத்து மனத்தோடு அலைவது சரியில்லை தான். ஆனாலும் அருவிக் குளியலும் ஆத்துக் குளியலையும் விட்டு விட முடியாது.
அமெரிக்கன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது குற்றாலத்திற்கு மதுரையிலிருந்து சைக்கிளில் சென்றது சாகசப் பயணம் தான். இரண்டு நாள் அங்கேயே தங்கிச் சைக்கிளில் குற்றாலத்தின் பேரருவிக்கும் ஐந்தருவிக்கும் பழைய குற்றால அருவிக்கும் போவதில் காட்டிய ஆர்வத்தை அருவிக்குளியலில் காட்டவில்லை. சாரலில் நனைந்தபடி சைக்கிள் ஓட்டுவதில் இருந்த சுகம் இப்போது நினைத்தாலும் வராது. கடையநல்லூரை எங்கள் சைக்கிள்கள் நெருங்கியபோதே  அலையலையாய் வரும் மேகங்களோடு நெற்பயிர்களும் மெல்லிதாய் அசைந்து கொண்டிருந்தன. தென்காசியைத் தாண்டினால் கூந்தல் நனைந்து சொட்டச் சொட்ட நடந்து போகும் பெண்களின் கவனத்தை கவர நினைத்து சைக்கிள் ஓட்டியதில் ஒவ்வொரு நண்பரும் ஒருதடவையாவது விழுந்து எழுந்தார்கள் என்பதும் இப்போதும் நினைவில் இருக்கிறது.
பாபநாசத்தில் பாணதீர்த்தத்துக்கும் கீழணைக்கும் இடையில் இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்போதும் கூட்டம் நெரிபடும். அருவியில் குளிப்பதை விட தேங்கி நிற்கும் பள்ளங்களில் குளிக்கும் போது மீன்களின் கடியை ரசிக்கலாம். அகஸ்தியர் அருவிக்கும் மேலே போய் கீழே சுழன்று ஓடும் நீரின் காட்சியைப் பார்த்த போது தலை கொஞ்சம் சுற்றவே செய்தது. அப்படியொரு தலை சுற்றலில் தான் வ.வே.சு. அய்யர் மேலே இருந்து கீழே விழுந்து சுழலில் மாட்டிச் செத்திருக்க வேண்டும் என ஒருவர் ஐயம் கிளப்பினார். ஆனால் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் எனப் படித்த ஞாபகத்தைச் சொன்னேன். அந்த நண்பர் ஒத்துக் கொள்ளவில்லை. விபத்தைத் தற்கொலை எனச் சொல்லி அனுதாபம் உண்டாக்கினார்கள் என்பது அவரது வாதமாக இருந்தது. சிறுகதை முன்னோடி, முதல் திறனாய்வாளர் என முதல்களைச் சொந்தமாக்கிய வ.வே.சு. அய்யருக்கு முதன் முதலாகக் ’குற்றவுணர்வில் தற்கொலை செய்து செத்துப் போன படைப்பாளி ’ என்ற பெருமையை உருவாக்கும் முயற்சியில் பிராமணச் சதி அப்படி வேலை செய்ததாக ஆணித்தரமாகச் சொன்னார். தமிழ் நாட்டில் என்ன பேச்சும், விவாதமும் கடைசியில் பிராமணர்xபிராமணரல்லாதார் முரண்பாடாக ஆகிவிடும் மாயம்  2011 லும் தொடரத்தான் செய்கிறது.  
இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பியக் குளிரில் அருவிக்குளியலுக்கும் ஆற்றுக் குளியலுக்கும் எங்கு போவது. தினசரி வாளித் தண்ணீரை ஊத்திக் குளீத்ததற்குப் பதிலாக பாத் டப்பில் வெந்நீரையும் தண்ணீரையும் கலந்து  நிரப்பிக் குளித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மாதக் கடைசியில் உறைபனியில் வழுக்கிப் பார்க்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. உறைபனிக்காகப் போலந்துக்காரர்கள் அடுக்கடுக்காய் மடிந்து உருளும் ஆடைகளையும், முழங்கால் வரை மூடி இறுக்கும் பூட்ஸ்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நானும் வாங்கி விட்டேன் என்றாலும் ஒருநாளாவது கொட்டும் பனியில் குளித்துப் பார்க்கும் ஆசையும் இருக்கிறது.

1 comment :

Ramani said...

சௌக்கியமா ?
வார்ஸாவில் குளியலறையில் தண்ணீர் ஒழுகலைத் தொடர்ந்து
தங்கள் நினைவுகள் உலகை பழைய நினைவுகளைச் சுற்றி வந்ததை
நினைத்து அதிசயித்துப் போனேன்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதைத்தானோ ?
படங்களுடன் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்