சங்கப் பெண்கவிகளின் கவிதையியல்-புறம்


கவிதையியல் என்னும் கலைக்கோட்பாடு:
ஓரு படைப்பாளி அல்லது ஓர் இலக்கிய இயக்கம் பின்பற்றும் படைப்பியக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே கலைக் கோட்பாடு என்னும் பொதுவரையறை அர்த்தம் பெற்றுள்ளது. பொதுவரையறையின் அர்த்தம் கவிதையியல் என்னும் அதன் கூறுக்கும் பொருந்தும். நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழில் கவிதையியல் என்பதற்கும் இலக்கியக் கோட்பாடு என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. ஐரோப்பியர்களின் வருகைக்கும் பின்னால் சில மாற்றங்கள் உள்ளன என்றாலும் கவிதையியலும் இலக்கியக் கோட்பாடும் நேரெதிரானவை அல்ல. இலக்கியக் கோட்பாடு முதன்மையாகக் கருதுவது படைப்பியக்கத்தை; படைப்பியக்கம் முதன்மையாக முன் வைப்பது படைப்பு சார்ந்த நுட்பங்களை. படைப்புப் பொருள்,படைப்புமுறை, படைப்பு நோக்கம் என படைப்பு நுட்பங்கள் விரியக் கூடியன. படைப்பு சார்ந்த இவையெல்லாம் படைப்பில் வெளிப்படுகின்றன என்று காட்டுவது மட்டுமல்லாமல், அதன் நுகர்வோராகிய வாசகர்களிடம் சென்று சேர்வதில் தான் படைப்பியக்கம் முழுமை அடைவதாக அண்மைக்காலத் திறனாய்வுகள் பேசுகின்றன.

ஒரு கலைக்கோட்பாட்டைப் பற்றிய சொல்லாடல் என்பது படைப்பாளி, படைப்பு , அதன் வாசகர்கள் என்ற மூன்ற மையங்களைப் பற்றிய பேச்சாக இருக்கிறது. இம்மூன்றில் ஏதொன்றையும் தவிர்த்து விட்டு அந்தக் கலைக் கோட்பாட்டைப் பேச முடியாது. மூன்றில் ஒன்றைத் தவிர்க்க முடியாது என்பது எப்படி உண்மையோ அதுபோல் ஒன்றைப் பற்றி மட்டுமே பேசவும் முடியாது. உலக இலக்கிய வரலாற்றில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்யும் ஓர் இலக்கிய மாணவர் இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் இலக்கியங்கள் செய்யப்பட்டதற்கும், செய்யப்பட்ட இலக்கியங்களை விளக்குவதற்கு இலக்கியக் கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டதற்கும் உதாரணங்களைக் காட்ட முடியும். தமிழ் இலக்கியப் பரப்பும் இதற்கு விலக்கானதில்லை.

தமிழ் இலக்கியப்பரப்பை வாசிக்கும் நாம் தமிழில் உள்ள பனுவல்களை எவ்வாறு வாசித்து வந்துள்ளோம் அல்லது வாசிக்கிறோம் என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம். அல்லது நமக்கு முன்பு வாசித்தவர்கள், அவர்களின் வாசிப்பிற்கேற்ப கட்டுரைகளை அல்லது நூல்களை எவ்வாறு எழுதியுள்ளனர் என்று யோசித்தால் இரண்டு விதமான போக்குகள் தமிழில் இருந்துள்ளன என்ற உண்மையை உணர முடியும். சில நேரங்களில் கிடைக்கின்ற இலக்கியக் கோட்பாட்டின் பின்னணியில் வாசித்திருக்கிறார்கள். சில நேரங்களில் இலக்கியக் கோட்பாடுகள் எதனையும் பின்பற்றாமல் நேரடியாகப் பனுவலை வாசித்துப் பொருள் கொள்வதும் நடந்துள்ளது. ஆங்கிலேயர்கள் வந்த பின்பு - இலக்கியக் கொள்கைகள், கோட்பாடுகள் என்ற சொல்லாட்சிகளின் பயன்பாடுகள் வந்ததற்குப் பின்பு எழுதப்பட்ட படைப்புகளைத் தள்ளி வைத்து விட்டுப் பழைய இலக்கியங்களின் ஊடே பின்னோக்கிப் பார்த்தால் இது புரியலாம்.

தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களை வாசிக்க, பாட்டியல் நூல்கள் வரையறைகளைத் தந்துள்ளன. அவற்றுக்கு முன்பு தோன்றிய பெருங்காப்பியங்களையும் சிறுகாப்பியங்களையும் வாசிக்க நாம் பின்பற்றுவது தண்டியலங்காரம் என்னும் தழுவல் நூலை. கதை தழுவிய நீள்கவிதையை-சமஸ்கிருதத்தின் காவ்யங்களின் மொழிதல் நுட்பங்களை- அணிகளை விளக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட தண்டியலங்காரம், தமிழின் காப்பியங்களை வாசிப்பதற்கான அடிப்படைக் கோட்பாடாக ஆன காலம் எது? எனத் தெரியவில்லை. அதனை இன்றளவும் மறுபரிசீலனை செய்யாமல் இருக்கிறோம் என்பதும் ஏனென்று புரியவில்லை. அந்நூல் தமிழில் உள்ள எல்லாக் காப்பியங்களையும் வாசிக்கப் போதுமான இலக்கியக் கோட்பாட்டு நூல்தானா? என்று கேள்வியைக் கேட்டாலே அந்நூல் தானாகப் பின் தங்கிக் கொள்ளும். தமிழின் மிக முக்கியப் படைப்புகளான சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் வாசிக்கத் தண்டியலங்காரம் சிறிதும் உதவவில்லை. இவ்விரண்டும் காப்பியங்கள் இல்லை; தொடர்நிலைச் செய்யுள்கள் என்று நாம் வகைப்படுத்தினால் தொடர் நிலைச்செய்யுள் என்பதை எந்த அடிப்படையில் வாசிப்பது என்ற கேள்வி எழக்கூடும். அதே போல் தமிழ்க் கவிதை மரபில் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும் பக்திக் கவிதைகளையும் தத்துவக் கவிதைகளையும், உலகியல் கவிதைகளான தனிப்பாடல் திரட்டுகளையும் வாசிப்பதற்கான கோட்பாடுகள் நம்மிடம் உள்ளனவா? என்று கேட்டால், 'இல்லை' என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அறக் கருத்துகளை வலியுறுத்திய நீதிநூல்கள் கூட எந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டன அல்லது விளக்கப் பட்டன என்ற விவரங்கள் இல்லை. அவை நேரடியாகவே பொருள் புரிவனவாக இருப்பதாகக் கருதுவதால், அவற்றின் பின்னணியில் இருந்திருக்கக் கூடிய கோட்பாட்டைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்க வில்லை. வாசிப்பவரின் வாசிப்பனுபவம் சார்ந்தே பொருள் சொல்லுவதும், சொல்லாடல்களை உருவாக்கிக் கொள்வதும் நடந்துள்ளது.

இந்த நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை சங்கக்கவிதைகள். சங்கக் கவிதைகளை அவை புறக்கவிதை களாயினும், அகக்கவிதைகளாயினும் வாசக அனுபவம் சார்ந்து அவற்றை வாசிப்பதில்லை ; விளக்குவதுமில்லை. திட்டமான இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் அவற்றை வாசிக்கிறோம்; விளக்குகிறோம். சங்கக் கவிதைகளுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு அல்லது தனித்துவம் ? இத்தனித்துவம் தான் செவ்வியல் இலக்கியப் பண்புகளுள் தலையாயது.

 

மறைக்கும் மதயானைகள்.

தமிழ் இலக்கிய மாணவர்கள் சங்கச் செவ்வியல் கவிதைகளை மட்டும் தனித்துவமான வாசிப்பு முறையில் வாசிக்க முக்கியக் காரணம் தொல்காப்பியம் தான் என்று சொல்வது புதிய செய்தி இல்லை. ஆனால் அப்படி வாசிப்பது பொருத்தமான வாசிப்பு தானா? என்று கேள்வி எழுப்புவது புதிய செய்தி. தொல்காப்பியத்தையும் சங்கக் கவிதை களையும் அருகருகே வைத்து வாசித்துப் பழகிவிட்ட நமக்கு இக்கேள்வி திகைப்பூட்டக் கூடிய கேள்வி.இந்த இடத்தில் திருமூலரின் வரியொன்று நினைவுக்கு வருகிறது.'மரத்தை மறைத்தது மாமதயானை; மரத்தில் மறைந்தது மாமத யானை' என்ற வரி தான் அது. சங்கக் கவிதைகளை விளக்கப் பயன்படும் தொல்காப்பியம் ஒரு மதயானையா..? அல்லது தொல்காப்பியத்தால் விளக்கம் பெற முடியாமல் திணறும் சங்கக் கவிதைகள் தான் மதயானைகளா? இந்த விவாதம் முன்னுரிமை பெற்று விவாதிக்க வேண்டிய ஒன்று. இப்படிச் சொல்வதால் தொல்காப்பியம் என்னும் உச்சபட்சக் கவிதையியல் பாடநூலைக் குறைத்து மதிப்பிடுவதாக நினைத்து விட வேண்டியதில்லை. தொல்காப்பியம் பற்றியும், சங்கக் கவிதைகள் பற்றியும், இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள தொடர்புகள் பற்றியும் தமிழர்களாகிய நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் பலதரப்பட்டவை;பல நோக்கங்கள் கொண்டவை. ஆனால் அவை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியவை என்பதை இந்தக் கட்டுரை முன் வைக்கிறது.

தொல்காப்பியக் கவிதைக் கோட்பாட்டுக்குள் பெண்வெளிப்பாடு
தொல்காப்பியம்,கவிதைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற வரையறைகளை ஒரே இடத்தில் தொகுத்துச் சொல்ல வில்லை. மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தில் ஒவ்வொரு இயலிலும்சில கூறுகள் கிடைக்கின்றன. கவிதையின் உருவம் அல்லது கட்டமைப்பு பற்றிப் பேசும் செய்யுளியல் கவிதைகளின் உள்ளடக்க வேறுபாட்டை மனதில் கொண்டு எழுதப்பட்ட இயல் அல்ல என்பது போல் தோன்றுகிறது. ஆனால் பொருளதிகாரத்தின் முதல் நான்கு இயல்களான அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் என்பவை அந்த வேறுபாட்டை உணர்ந்து எழுதப்பட்டுள்ளன.

தொல்காப்பியம் செய்யுளியல் பாக்களையும், அவற்றின் தன்மைகளையும் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் கவிதைகளை வகைப்படுத்தவில்லை. என்றாலும் தரப்பட்டுள்ள விதிகளைக் கொண்டு அகக்கவிதை, புறக்கவிதை என்ற இரண்டு வகைக் கவிதைகளின் இயல்புகளைத் தொல்காப்பியர் பேசுவதாகப் புரிந்து கொண்டுள்ளோம். புறத்திணையியலில் முழுமையாகவும், பொருளியல், செய்யுளியல் முதலான இயல்களில் ஒரு சில விதிகளிலும் புறக்கவிதைகளின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன. அதே போல் அகக்கவிதைகளின் இயல்புகளை அகத்திணையியல், களவியல், கற்பியல் முதலானவற்றில் தந்துள்ளார்.

ஒரு கவிதையில் முதல்,கரு,உரி என்ற மூன்று பொருள்கள் அமைவது பற்றியும் அம்மூன்றில் உரிப்பொருளே கவிதையின் ஆதாரம் என்பது பற்றியும் பேசும் அகத்திணையியல் கடைசிச் சூத்திரமாக,

மக்கள் நுதலிய அகனைந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்

என்றொரு விதியைச் சொல்கிறது. இவ்விதி அகக்கவிதையைக் கண்டறிய அல்லது புறக்கவிதையிலிருந்து அகக்கவிதையினைப் பிரித்து அறிய உதவும் விதியாகப் பயன்பட்டு வருகிறது. இவ்விதிகளோடு அகக் கவிதைக்குள் இடம்பெறும் அகத்திணை மாந்தர்களான கிழவன், கிழத்தி, தோழி, செவிலி, நற்றாய்,தமர்,பரத்தை,வாயில்கள், கண்டோர், போன்றவர்களுக்குக் கூற்று நிகழும் இடங்களும், பேசும் முறைகளும் கூடக் கூறப்பட்டுள்ளன. பாத்திரங்களின் வெளிப்பாட்டைப் பொதுநிலையில் பேசும் தொல்காப்பியம் பாத்திரங்கள் பெண்பாலினராக இருந்தால் அவர்கள் எவ்வாறு வெளிப்பட வேண்டும் என்பது பற்றிச் சிறப்பு விதிகளையும் சொல்கிறது.

காமத் திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான. [தொல்.களவியல்:17]என்பது ஒரு சிறப்பு விதி. இவ்விதியின் தொடர்ச்சியாகக் களவியலில்,
காமம் சொல்லா நாட்டம் இன்மையின்
ஏமுற இரண்டும் உளஎன மொழிப [களவியல்:18]
சொல்எதிர் மொழிதல் அருமைத்து ஆகலின்
அல்ல கூற்று மொழி அவள் வயினான. [களவியல்:19]
வரைவு இடைவைத்த காலத்து வருந்தினும்
வரையா நாளிடை வந்தோன் முட்டினும்
உரை எனத்தோழிக்கு உரைத்தற் கண்ணும்
தானே கூறும் காலமும் உளவே. [களவியல்:21]
உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக்கிழவன் உள்வழிப் படினும்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே [களவியல்:22]

தன்னுறு வேட்கைக் கிழவன் முன்கிளத்தல்
எண்ணும் காலைக் கிழத்திக்கு இல்லைப்
பிறதீர் மாக்களின் இன்றிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப [தொல்.களவியல்:27 எனச் சிறப்பு விதிகள் கூறப்பட்டுள்ளன.
 
அகத்திணை மாந்தர்களில் பெண்மாந்தர்களின் தன்னிலை வெளிப்பாட்டைத் தடை செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ள இச்சிறப்பு விதிகளின் நோக்கம் என்னவாக இருக்கும்.?ஆண் மாந்தர்களுக்கெனச் சிறப்பு விதிகள் எதுவும் சொல்லப் படாமல் பெண்மாந்தர்களின் வெளிப்பாட்டிற்காக மட்டும் இத்தகைய சிறப்பு விதிகள் ஏன் செய்யப் படவேண்டும்.? இவை இன்று எழுகின்ற கேள்விகள். இத்தகைய கேள்விகள் எழக்காரணமாக இருக்கும் கலைக் கோட்பாடு பெண்ணியவாதம் என்னும் கலைக் கோட்பாடன்றி வேறில்லை.
 
’மனிதர்கள்’ என்னும் பொது உயிரியின் குணங்களில் ’பெண் ’என்னும் உயிரியும் அடங்கும் என்னும் வாதம் இருந்த போதும், வேறுபாடுகள் இருப்பதாகவும், அந்த வேறுபாடுகள் இயற்கையாக உருவானவை அல்ல என்றும், ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஆண் என்னும் உயிர்க்கூட்டம் உருவாக்கி வளர்த்தவை எனவும் திரும்பத் திரும்பப் பெண்ணியம் சொல்லிக் கொண்டிருக்கிறது. இதுவரை செவிகொடுக்காத மேதமைக் கூட்டங்களும் ஆதிக்க மனமும் இனியும் அவ்வாறு தொடர முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே தான் ’மகளிர்’, ’பெண்கள்’, எனத் தனித்துவ நிலைகளுக்குள் ஆய்வுகளை மேற்கொள்கிறோம்.
 
பெண்ணியவாதத் திறனாய்வு என்ன செய்யும்? என்பதைப் பட்டியலிட்டும் விளக்கியும் காட்டும் பெர்ரி பீட்டர்,[Beginning Theory] என்னும் திறனாய்வாளர் பதினோரு பணிகளைப் பெண்ணியத் திறனாய்வின் வேலை களாகக் கூறியுள்ளார் .(இணைப்பு-1) அவற்றுள்,“பெண்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்தல்” என்பதும்,“ பனுவல்களில் வெளிப்படும் பெண்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்தல்” என்பதுமாக இரண்டு பணிகள் கவனப் படுத்தப்பட்டுள்ளன. பதினொன்றில் இரண்டு என்பதாக இவை இடம் பெறவில்லை. முதலில் செய்ய வேண்டியன என்பதாக வலியுறுத்தப் பட்டுள்ளன. இந்த நோக்கத்திற்கேற்பத் தமிழின் தொடக்கக் கவிதைகளான செவ்வியல் கவிதைகளில் பெண்கள் எழுதிய கவிதைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைத் தான் இந்தக் கருத்தரங்கம் முக்கிய நோக்கமாக ஆக்கியிருக்கிறது.
 
இந்தக்கட்டுரை, அகக் கவிதைகள், புறக்கவிதைகள் என்ற பாடுபொருள் சார்ந்து பிரிக்கப்படும் பொதுவான பிரிவை முதலில் ஏற்கிறது. ஏற்றுக் கொண்டு அகக்கவிதைகளில் வெளிப்படும் பெண்நிலை வெளிப்பாட்டை முதலிலும், புறக் கவிதைகளை இரண்டாவதாகவும் நிறுத்துகிறது. அப்படி வைப்பதற்கு எண்ணிக்கை மட்டுமே முதன்மைக் காரணமல்ல. அகக்கவிதைகளே பெண் தன்னிலையை வெளிப்படுத்தும் முதன்மைப் பனுவல்களாக உள்ளன என்னும் இலக்கியம்சார் காரணமே காரணம். அகக்கவிதைகளை மையப் படுத்தி அதில் பெண் தன்னிலை வெளிப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை விளக்கும் கட்டுரையை, புதுச்சேரிப் பல்கலைக்கழகப் பாரதியார் உயராய்வு மையத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் சிறப்பு நிதித் திட்டக் கருத்தரங்கில் வாசித்துள்ளேன். அக்கட்டுரையை அம்மையம் வெளியிட்டுள்ள நூலில் வாசிக்கலாம். (சங்க இலக்கியங்களும் கலைக் கோட்பாடுகளும், முனைவர் அ.அறிவுநம்பி& முனைவர் மு.மதியழகன், சங்க இலக்கியங்களும் கோட்பாடுகளும், பாரதியார் உயராய்வு மையம் வெளியீடு, புதுவைப்பல்கலைக்கழகம், 2007, ( பக். 205-241)அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஐயங்களும் முடிவுகளும் பகுதியை மட்டும் திரும்பவும் இங்கே தருகிறேன்:
 
ஐயங்களும் முடிவுகளும்

சங்க அகக் கவிதைகளில் பெண் கவிகளின் கவிதைகளையும் பெயரில்லாக் கவிதைகளையும் தனியாகப் பிரித்து வாசிக்கும் நிலையில் எழுகின்ற ஐயங்களில் முதன்மையானது இக்கவிகள் தொல்காப்பியர் கூறும் கவிதைக் கோட்பாட்டினை அறிந்தவர்கள் தானா..? என்ற ஐயமே. பெண்களின் கவிதைகளில் அவர்களின் உடல் மற்றும் மன உணர்வுகள் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளதன் மூலம் தொல்காப்பியரின் விதிகளை அவர்கள் மீறியுள்ளதைக் காண்கிறோம். அகத்திணைப் பெண்மாந்தர்கள் தவிர்க்க வேண்டிய உணர்வுகளாகத் தொல்காப்பியம் குறிப்பிடும் எதனையும் இப்பெண் கவிகள் ஏற்றுக் கொண்டவர்களாகத் தெரியவில்லை.

கவிதைகளில் வெளிப்படும் உணர்வுகளை, மாந்தர்களின் உணர்வுகள் என்றுதான் பார்க்க வேண்டும்; அதை விடுத்து எழுதிய கவியின் உணர்வுகளாகப் பார்க்க வேண்டியதில்லை என்பது நிகழ்காலக் கவிதைக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கிறது. படைப்பாளி படைப்பிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற வாதமும் அதன் தொடர்ச்சியாக சொல்முறைகளில் மூன்றாமிடச் சொல்முறையான படர்க்கைக் கூற்றே மிகச் சிறந்த கூற்று முறை என்றும் அக்கொள்கை வலியுறுத்துவதையும் காண்கிறோம். படைப்பாளியைக் கடவுளின் இடத்தில் நிறுத்தி அதன் சிறப்பைக் காட்டக் கண்ணுக்குப் புலப்படாக் கூற்று முறை[Omnicient Narration] என்றும் அதனைப் பாராட்டிச் சொல்வர். ஆனால் இக்கொள்கையைப் பெண்ணியவாதம் அதிகமும் ஏற்றுக் கொள்வதில்லை. பெண்ணியவாதம் தனக்கான கூற்றுமுறையாகத் தன்னிலைக் கூற்று முறையையே முதன்மையாக முன் மொழிகிறது. பெண்ணின் இருப்பு, அவளின் விழிப்பு, அவளுள் ஏற்பட்டுள்ள மாற்றம், அவளது எதிர்நிலை, அவளுடைய அக மற்றும் புற ஆசைகள் எனப் பெண்ணைச் சுற்றியே எழுதும் பெண்ணியப் படைப்பு அதிகமும் தன்மைக் கூற்றையே அதன் கூற்று வடிவமாகக் (Narrative form) கொள்கிறது. எதிர்நிலைகளைப் பேசும் போது மட்டும் முன்னிலைக் கூற்றையும், ஆசைகளையும் விருப்பங் களையும் பேசும் போது படர்க்கைக் கூற்றையும் வடிவமாக ஏற்றுக் கொள்கிறது. [John Morreall, The Myth of the Omnicient Narrator, The Journal of Aesthetics and Art Criticism 52:4 Fall,1994]

பொதுவாக ஒடுக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்ட தன்னிலைகளின் வெளிப்பாட்டு வடிவத்தில் இத்தகைய அம்சங்களைத் தான் காண முடிகிறது. நிறரீதியாக ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதும் கருப்பினப் படைப்பாளி களும், பொருளாதாரரீதியாக சுரண்டப்பட்டவர்களாக இருக்கும் பாட்டாளிகளுக்காக எழுதும் இடதுசாரிப் படைப்பாளிகளும், சாதியடுக்குகள் காரணமாக ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் தலித்தியப் படைப்பாளி களும் இத்தகைய சொல் முறையையே கைக்கொள்கின்றனர் என்பது இலக்கியப் பொது நிலை.

சங்க அகக்கவிதைகளில் பெண்கள் எழுதிய கவிதைகள் அனைத்துமே தன்னிலை வெளிப்பாட்டை மையப்படுத்திய தன்மைக் கூற்றையும், முன்னிலைக் கூற்றையுமே கொண்டுள்ளன. அதே போல் பெயரற்ற கவிதைகளிலும் இக்கூற்று முறைகளே அதிகம் பின்பற்றப்பட்டுள்ளன. இக்கூற்றுமுறையும், உடல் மற்றும் மனத்தின் ஆற்றாமையையும், வலியையும் வெளிப்படையாகப் பேசும் குரலும் பெண்களின் மொழியாகவும் வெளிப்பாட்டு முறையாகவும் இருந்துள்ளன. தொல்காப்பியரின் காலத்துக்கு முந்திய இப்பெண்கவிகளின் கலைக் கோட்பாடாகத் தன்னிலையை எழுதுதல் என்பது இருந்துள்ளது. தன்னிலையை எழுதுதல் என்பது வெறும் மனத்தை எழுதுதல் மட்டுமல்ல; உடலையும் சேர்த்தே எழுதுதல் என்பதாகவே கருதப்பட்டுள்ளது. பெயரிட்டுத் தங்கள் கவிதைகளை எழுதிய பெண்கள் தன்னிலையை எழுதினார்கள் என்றும், பெயரைத் தவிர்த்தவர்கள் தன்னிலையைத் தாங்களே அழித்துக் கொள்ளவும் முயன்றார்கள் என்றும் கூட இந்தக் கோட்பாட்டை விரித்துக் கொள்ளலாம்.

 

சமஸ்கிருத மரபை ஓரளவு உள்வாங்கித் தமிழ் நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற பாகுபாட்டுக்குள் அடக்கிக் காட்ட முயன்ற தொல்காப்பியம் [மரபியல்] அறிவுப் புலத்திலிருந்து பெண்களை விலக்கி வைக்கும் இலக்கியக் கோட்பாட்டையும் உள்வாங்கிக் கொள்ளத் தயாராகவே இருந்திருக்க வாய்ப்புண்டு. அல்லது அத்தகைய வரையறைகளை உருவாக்கியவர்கள் தொல்காப்பியப் பனுவலுக்குள் இவற்றையும் சேர்த்திருக்கலாம். தொல்காப்பியம் எனும் இலக்கணப் பனுவல் ஒருவர் எழுதியதா? இருவர் எழுதியதா? அல்லது பல இடைச்செருகல்கள் கொண்ட பனுவலா என்ற விவாதங்கள் ஏற்கெனவே இருப்பவை தான். பெண்ணியம் சார்ந்த பார்வையும் அந்த விவாதத்திற்கு மேலும் வலுவூட்டவே செய்கின்றது. அத்துடன், தொல்காப்பியம் எனும் பனுவல்,சங்க இலக்கியத்தில் கிடைக்கும் பெண்கவிகளின் கவிதைகளுக்குப் பின்னால் தோன்றி ஆண்மையச் சிந்தனையை உள்வாங்கி விதிகளை உருவாக்கியுள்ள ஒரு பனுவல் என்ற விவாதத்தையும் இனிச் சேர்த்து விவாதிக்க வேண்டிய நெருக்கடியைப் பெண்ணியவாதப் பார்வை உருவாக்கியுள்ளது. அகக்கவிதைகள் சார்ந்த இந்த ஐயங்களோடு சங்கப் பெண்கவிகளின் புறக்கவிதைகளுக்குள் பயணம் செய்யலாம்.

பெண்களின் புறக்கவிதைகள்- சிலவிவரங்கள்: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களான சங்கக் கவிதைகளில் 18 பெண்கள் புறக்கவிதைகளை எழுதியுள்ளர். அவை புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புறநானூற்றில் 63; பதிற்றுப்பத்தில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் எழுதிய 6 ஆம் பத்து ஆகியன அவை. புறநானூற்றில் இடம் பெற்றுள்ள 63 புறக்கவிதைகளில் ஔவை எழுதியன மட்டும் 33. அவருக்கு அடுத்தபடியாக மாறோக்கத்து நப்பசலை 7 கவிதைகளை எழுதியுள்ளாள். அடுத்த நிலையில் 3 கவிதைகளை எழுதியவர்களாகப் பொன்முடியாரும், பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையும், உள்ளனர். அள்ளுர் நன்முல்லையும், மாற்பித்தியும், வெறிபாடிய காமக்கண்ணியும் 2 கவிதைகளை எழுதியுள்ளனர். ஒரு கவிதையை மட்டும் எழுதியவர்களாக ஒக்கூர் மாசாத்தி, காவற்பெண்டு, காக்கைப் பாடினி நச்செள்ளை, குறமகள் இளவெயினி, தாயங்கண்ணி, பாரி மகளிர், பூங்கண் உத்திரை, பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, பேய்மகள் இளவெயினி, வெண்ணிக்குயத்தி, வெள்ளைமாளர் எனப் பதினொரு கவிகளின் பெயர்களைக் காண்கிறோம்.

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை எழுதியதாக மூன்று பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளை மீது கொண்ட கைக்கிளைக் காதல் கொண்டு அவள் எதிர்கொண்ட பழிச்சுதல் செய்யும் நிலையைச் சொல்லும் இம்மூன்று பாடல்களும் புறநானூற்றில் இடம் பெற்றிருந்தாலும் (புறம் 83-85) அகப்பாடல்களே. கைக்கிளையைப் புறத்திணையாகக் கருதும் புறப்பொருள் வெண்பாமாலையின் அடிப்படையில் புறநானூறு தொகுக்கப் பட்டுள்ளதால் இவ்வாறு இடம் பெற்றுவிட்டன. அதே போல் தன் தலைவனை சொல்வலை வேட்டுவன் எனப் பாராட்டி மனம் மகிழும் தலைவியைக் காட்டும் மாற்பித்தை பாடிய இரண்டு கவிதைகள் புறநானூற்றில் 251,252 என வரிசைப் படுத்தப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறவுமில்லை; இன்னார் மீது பாடப்பெற்றது என்ற குறிப்பையும் தரமுடியாது. கவிதையில் போர் சார்ந்த குறிப்புகளும் இடம்பெறவில்லை. தலைவன் முன்பு அருகில் இருந்தான்;இப்போது அருகில் இல்லை என்பதைச் சொல்லும் பெண்ணின் மனம் தான் அதில் வெளிப்பட்டுள்ளது. எனவே இவ்வைந்து கவிதைகளையும் அகக் கவிதைகளாகக் கொள்ளுதலே பொருந்தும் என்ற குறிப்பைச் சொல்லி விட்டு புற நானூற்றுக் கவிதைகளுக்குள் பயணம் செய்கிறது இக்கட்டுரை.

பெண் தன்னிலை உருவாக்கமும் வெளிப்பாடுகளும்:

பெண்கவிகளின் கவிதைகளைத் தனியே தொகுத்துக் கவிதையியல் நோக்கில் வாசிக்கும் போது அகக் கவிதைகளில் காணப்படும் பொதுக்கூறு புறக்கவிதைகளாகத் தொகுக்கப்பட்ட கவிதைகளிலும் காணப்படுகிறது என்பதை முக்கியமாகச் சுட்டிக் காட்ட வேண்டும். உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தின் வழியாக இன்னொரு உருவாக்கப்பட்ட பாத்திரத்தோடு உரையாடும்- உறவாடும்- தன்மை அகக்கவிதையின் பொதுக் கட்டமைப்பு. உருவாக்கப்படும் இவ்விரு பாத்திரங்களும் பெயர் சுட்டப்படாமல் பொதுவகைப் பாத்திரங்களாக – அகத்திணை மாந்தர்களாக- இருந்த நிலையில் அக்கவிதை அகக் கவிதைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துரைப்பவள் ஒரு பெண் என்ற தன்னிலை உருவாக்கத்தை அகக்கவிதைகள் போலவே பெண்கள் எழுதிய புறக்கவிதையிலும் முதன்மையாகக் காண முடிகின்றது. ஆனால் கேட்போர் இடத்தில் இன்னொரு பாத்திரத்தை உருவாக்கி அதனுடன் பேசுவதாக அமைக்காமல், புறக்கவிதையின் பொது இயல்பான பலருக்கும் –உலகத்தோர்க்குச் சொல்லுதல்- என்ற கட்டமைப்பைக் கொண்டனவாக ஆக்கப்பட்டிருப்பதன் மூலமே அக்கவிதைகள் புறக்கவிதை களாகியிருக்கின்றன.

பேசுவோருக்கும் கேட்போருக்கும் இடையே பேசப்படும் பொருள் சார்ந்தே ஒரு கவிதையியல் தனி அடையாளம் பெற்று அதன் வழியாகவே அழைக்கப்பெறும். அகக்கவிதைகள் அகத்திணை மாந்தர்களின் மனம் மற்றும் உடலின் இருப்பை காமம் மற்றும் காதல் சார்ந்த பேசுபொருளாக ஆக்கியுள்ளன. ஆனால் புறக்கவிதைகள் உடலின் இருப்பைப் பேசுவதைக் குறைத்துக் கொண்டு உருவாக்கப்படும் பாத்திரத்தைப் பொதுவெளிக்குரியதாக மாற்றி நிறுத்தியுள்ளன. அதனால் பொது வெளியில் முக்கியத்துவம் பெறும் அரசன், அவன் நடத்தும் போர்கள், அவன் அளிக்கும் கொடைகள், தனக்குக் கட்டுப்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது அவனுக்குள்ள ஆளுமை ஆகியவற்றை அதிகம் பேசுகின்றன. போர்களின் வழியாக உருவான தலைவர்களே அன்றைய சமூகத்தின் பொதுவெளிக்குரியனவற்றைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர் என்பதால் புறக்கவிதைகளில் போர் பற்றிய கவிதைகள் அதிகம் இருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. போர்களை அடுத்து அதிகம் பேசப்பட்ட பொருள் உலகத்தில் மனிதர்கள் இருக்க நேர்வதும் இல்லாமல் போவதும் பற்றியதாகும். சமண பௌத்த சமயங்களின் முக்கியக் கருத்தியலான நிலையாமையாகப் பின்னர் வடிவம் பெற்ற இருப்பும் இருப்பின்மையும் புறக்கவிதைகளின் முக்கிய பாடுபொருளாக ஆகியுள்ளன. அதனைத் தொடர்ந்த மனிதர்களை மேம்படுத்தும் என நம்பப்படும் அறிவு, கடமை, உரிமை, அன்பு, பாசம், மேல்- கீழ் என்னும் படிநிலைகளின் இருப்பும், அவற்றை நிராகரிப்பதன் வழியாக உருவாக்கப்படும் சமூகக் கட்டமைப்பின் தன்மையும் என எல்லாக் காலங்களிலும் பொதுவெளியில் முன் வைக்கப்படும் சொல்லாடல்கள் சங்கக் கவிதைகளின் உரிப்பொருளாகவும் ஆகியுள்ளன.

திணை எனத் தொல்காப்பியம் சுட்டுவதை உரிப்பொருள் எனக் கொள்வதில் பிழையெதுவும் இல்லை. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே எனச் சொல்லும் நூற்பாவின் வழி திணையின் அடையாளமாக இருப்பதே அவற்றின் உரிப்பொருள் தான் என்பது ஏற்க வேண்டிய ஒன்று. அகத்திணைக்குரிய உரிப்பொருளுக்குக் காலமும் வெளியும் (இடம்) சுட்டுவது போல முதல், கரு சொன்ன தொல்காப்பியம் புறத்திணைக்கு அவற்றைச் சொல்லவில்லை என்றாலும் புறத்திணை ஒவ்வொன்றிற்கும் வெளிசார் அடையாளங்கள் சுட்டப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். புறத்திணைகளாகத் தொல்காப்பியம் சொல்லும் வெட்சி, உழிஞை, வஞ்சி, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு உரிப்பொருள்களோடு, அவற்றின் உட்பிரிவுகளான துறைகளையும் அவற்றிலிருந்து பின்னர் வளர்ச்சி பெற்று வகைப்படுத்தப் பட்ட பொதுவியல் போன்ற உரிப்பொருட்களையும் புறக்கவிதைகளில் காண்கிறோம். புறநானூற்றில் அவ்வுரிப்பொருட்கள் பல்நிலைப் பட்டதாகவும் பல பரிமாணங்கள் கொண்டதாகவும் இருக்க, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஆற்றுப்படைகள் போன்றனவற்றில் ஒற்றைப் பரிமாணத்தோடு ஏதாவது ஒரு புறச் சொல்லாடல் பல அடுக்குகளாகப் பேசப்பட்டுள்ளன.

பெண்களின் புறக்கவிதைகளைத் தனியாகத் தொகுத்துப் பார்க்கும் போது ஆண்களின் புறக்கவிதைகளிலிருந்து பெருமளவு மாற்றத்தையும் காண முடிகிறது. ஆண் தலைமை தாங்கும் குடும்ப அமைப்பும், ஆணைச் சார்ந்து வாழும் பெண்ணும் தான் அதிகமான பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ‘எனது இயங்குவெளி குடும்பம் என்ற எல்லைக்குள் இருக்கிறது; எனது இயக்கம் ஆணொருவனைச் சார்ந்ததாக இருக்கிறது; அவனது இருப்போடும், மகிழ்ச்சியோடும் எனது இருப்பும் இணைந்ததாக இருக்கிறது; அவனது இன்மை எனது வாழ்விலும் இன்மைக்கீடான நிலையையே உணர்த்துகிறது’ எனப் புறநானூற்றில் பெண் கவிகள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளனர். இந்நிலையைத் தாங்களே விரும்பி ஏற்றுக் கொண்டதாகச் சிலரும், சமூகம் தரும் நெருக்கடியால் அப்படியான உணர்வு ஏற்பட்டுள்ளது என்று சிலரும் சொல்கின்றனர். அப்படிச் சொல்லும்போது அன்றைய சமூகம் முக்கியமானதாகக் கருதிய போர்களையும், அதன் விளைவுகளையும் பெண்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே கவிதைகளின் உள்ளடக்கமும், வெளிப்படும் தொனியும் காட்டுகின்றன. ஆனால் இந்தப் போக்கு முழுமையான போக்கு அல்ல என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கவே செய்கின்றன. போரெனும் பெருநிகழ்வு ஏற்படுத்தும் இழப்பை மிகுந்த துயரத்துடன் எதிர்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்களும், அதனை மென்மையாகக் கடிந்துரைக்கும் வரிகளை எழுதிய பெண்களும் அவர்களுக்குள் இருக்கிறார்கள் என்பதும் முக்கியமான பதிவுகளாகக் கொள்ள வேண்டியவை.

ஏற்பு மனநிலையையும் விலகில் மனநிலையையும்

போர் புரிவதையும் அதன் வழியாகச் சமூக உருவாக்கத்தை நிலைநிறுத்துவதையும் முதன்மையாகக் கருதி நகர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அப்போக்கை எல்லா வகைப் படைப்பாளிகளும் அதனை ஏற்றுச் சமூகத்தின் மைய நீரோட்டத்தோடு இணைந்தே செயல்படுவார்கள் என்பதில்லை. புதிதாக உருவாகப் போகும் சமூக அமைப்பு யாருக்கெல்லாம் பயன்படுமோ அவர்கள் மட்டுமே அதனை ஏற்றுப் பாராட்டுவார்கள். அவ்வாறி ல்லாமல் தனக்கும் தன்னையொத்த மனிதர்களுக்கும், தான் சார்ந்த சமூகக் குழுவிற்கும் உள்ள உரிமைகளைப் புதிதாக உருவாகும் அமைப்பு அழித்து விடும் அல்லது பறித்து விடும் என நினைக்கும்போது அதற்கெதிரான மனநிலையைப் படைப்புகள் வெளிப்படுத்தவே செய்யும். அத்தகைய மனநிலையில் மைய நீரோட்டத்தோடு ஒத்துப் போகின்றவர்கள் அமைப்புகளின் ஆதரவாளர்களுக்கான பாராட்டுக்களையும் பட்டங்களையும் பெறுவர். விலகி நிற்பவர்கள் எதிர்ப்பாளர்களாகவும், வளர்ச்சியின் அல்லது மாற்றத்தின் போக்கை விரும்பாதவர்களாகவும் கணிக்கப்படுவர். இப்போக்கு இன்றைய மனநிலை மட்டுமல்ல. எல்லாவகை மாற்றங்களின் போதும் இதுவே நிலை..

புறநானூற்றில் எண்ணிக்கையில் அதிகமான கவிதைகளை எழுதிய ஒளவையும் மாறோக்கத்து நப்பசலையும் மட்டுமே பலவிதமான பாடுபொருளை- வெவ்வேறு தொனியில் எழுதியுள்ளனர். அத்தோடு அவர்களின் கவிதைக்குள் சொல்லும் இடத்தில் இருக்கும் நபர் பெண் தன்னிலையை உருவாக்கும் நோக்கத்தை முதன்மையாகக் கருதவும் இல்லை. அந்தக் கவிதைக்குள் இருக்கும் நபர் ஆணாகவும் இருக்கலாம்; பெண்ணாகவும் இருக்கலாம் என்பதான கட்டமைப்பையே அக்கவிதைகள் கொண்டுள்ளன. அதற்கு மாறான தன்மையை குறைவான – ஒன்றிரண்டு கவிதைகளை எழுதியவர்களிடம் காண முடிகிறது. அக்கவிதைகளில் பெண் தன்னிலை உருவாக்கம் முக்கியக் கூறாக இருக்கிறது. அதே போல் அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் தொனியும் ஒற்றைத் தொனியாகவே இருக்கிறது என்பதும் கவிதையியல் பற்றிய சொல்லாடலில் முக்கியத் தகவல்கள். இனி இக்கூற்றுகளுக்கான ஆதாரங்களை வாசித்துப் பார்க்கலாம்.
சங்ககாலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்; அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப்படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் ஏற்கெனவே நிறுவியுள்ளன. அதற்கான சான்றுகள் புறக்கவிதைகளில் ஏராளமாக உள்ளன என்றாலும் கவி பொன்முடியின் இந்தக் கவிதை முதன்மையான ஆதாரம் எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது.
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
 
என முடியும் (புறம். 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை வரிகளை ஒரு பெண்ணின் தன்னிலையிலிருந்து -நிகழ்காலத்தில் சமூகம் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக எழுதப்பட்ட கவிதையாக நாம் வாசிக்க முடியும். என் தலைக்கடன் என அவள் ஆரம்பித்துச் சொல்லும் அந்த வார்த்தைகளின் வழியாக இன்று சமூகவியலாளர்கள் சொல்லும் குடும்பஅமைப்பும், அதன் இருப்பில் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கடமையும் சொல்லப்படுவதோடு, அவற்றையெல்லாம் இணைத்து சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பில் வேந்தன் இருந்தான் எனவும் விரிவான சித்திரம் ஒன்றைத் தருவதை நாம் அவதானிக்கலாம். தனது பெண் தன்னிலையைக் கட்டமைத்துத் தரும் பொன்முடியின் வரிகள் அக்கால கட்டத்துச் சமூகம் போரை மையப்படுத்திய சமூகம் என்பதை மட்டுமல்ல; குடும்ப அமைப்பும் வலுப்பெற்ற சமூகம் என்பதையும் உணர்த்துகிறது. பொன்முடி எழுதிய மற்ற இரண்டு பாடல்களும் கூட இந்தக் கூற்றை வலுப்படுத்தவே செய்கின்றன. புறம். 310 இல் அவள் விரித்துக் காட்டும் சித்திரம் போர்க்களத்தில் முந்நாள் வீழ்ந்த உரவோர் மகனின் பயமின்மையைக் கூறும் சித்திரமாகவும், புறம் 299 இல் காட்டும் சித்திரம் போருக்குப் பின் ஓய்வெடுக்கும் குதிரைகளின் நிலையை முருகன் கோட்டத்துக் கலம் தொடா மகளிரின் நிலையோடு ஒத்துப் பேசும் சித்திரமாகவும் இருக்கின்றன. இப்பாடல்களின் வழி, போர்ச் சமூகமே அவளது காலத்துச் சமூகம் என்பதையும் , பெண்களுக்கு நேரிடையாகப் போரில் பங்கில்லை; அதற்கு மாறாகக் குடும்ப அமைப்பையும் கடமைகளையும் தனது கடமையாகப் பெண்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் அவள் சொல்லியுள்ளாள் என்பதை நாம் உணர முடியும். பொன்முடி போரை ஏற்றும் விரும்பியும் பேசுவது போலவே ஒக்கூர் மாசாத்தி ,
கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே! (புறம்: 279)
 
என ஒரு பெண்ணின் போர் விருப்பத்தைப் பாராட்டிப் பேசுவதைக் காட்டுகிறாள். இவ்வரிகளில் ஒக்கூர் மாசாத்தி தன் குடும்ப உறுப்பினர்களைப் போர்க்களத்துக்கு அனுப்பி வைத்த பெண்ணின் சித்திரத்தை தருவதைப் போலவே போர்க்களத்தில் தன் மகன் இருக்கிறான் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு தாயின் மனநிலையைக் காவற்பெண்டுவின்,
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! (புறம்: 86)
 
என்ற வரிகளிலும் காண்கிறோம். கவி காவற் பெண்டுவை விடவும் கூடுதலாகக் காக்கைபாடினி நச்செள்ளையின் கவிதையில் இடம்பெறும் தாய் போர்க் களத்தில் வீரமரணம் அடைந்த மகனின் சிதைந்த உடலைக் கண்டு ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே! (புறம். 278 ) எனச் சொல்கிறாள். புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அள்ளூர் நன்முல்லையின் கவிதைகள் தங்கள் அரசனுக்காகப் போர்க்களம் செல்ல விரும்பும் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளனர் என்கின்றன(306.340). கவி பூங்கணுத்திரையாரின் கவிதை (277) தன் மகன் களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே எனவும் பேசுகிறது.

போரும், போரில் பங்கேற்றலும் அப்போர்களில் தன் குடும்ப உறுப்பினர்களின் வீரமரணமும் பெண்களுக்கு உவகை கொள்ளும் ஒன்றாக இருந்துள்ளது. வெறிபாடிய காமக்கண்ணியின் கவிதை(புறம்.302) குதிரைப் படை நடத்திய போர்க் களக்காட்சியை விரித்துச் சொல்கிறது.குறமகள் இளவெயினி தனது அரசனுக்காகப் போரிட்ட இளைஞனைப் பாராட்டு கிறாள் (புறம்.157).சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடியதாக இடம் பெற்றுள்ள வெண்ணிக்குயத்தியின் கவிதையை நுட்பமாக வாசித்தால் அவனிடம் புறமுதுகிட்டதால் நாணி வடக்கிருந்தவனை அவள் பாராட்டுவதை உணரலாம்.
 
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே! (புறம்.66)
 
என்ற வரிகளின் வழியே வடக்கிருந்து இறந்த செயல் பாராட்டப்படுகிறது. போரில் வெல்வது அல்லது வீரமரணம் அடைவது என்பதைப் பெண்கள் ஏற்றுக் கொண்டதையும், அவ்வாறு அடைய முடியவில்லை என்றால் அதற்குப் பின் வடக்கிருந்தாவது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் எனப் பேசுவதும் போரின் மீதான ஈர்ப்பையும் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையையும் வெளிப்படுத்துவன அல்லாமல் வேறில்லை.
ஒக்கூர் மாசாத்தியார், காக்கைபாடினியார் நச்செள்ளையார், குறமகள் இளவெயினி,பூங்கணுத்திரையார்,வெண்ணிக் குயத்தி ஆகியோர் போர்க்களக்காட்சி, போர் விருப்பம், போரில்படுதல் போன்றவற்றைத் தங்கள் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளதற்கு மாறாக போரினால் பெண்கள் படும் துயரம் குறித்த கவிதைகளும் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. தனது புதல்வனின் தந்தைப் போர்க்களம் என்னும் பெருங்காடு ஏகிப் பட்டபின்னர் பெண்னுக்கு ஏற்படும் துயரக் காட்சியை விரிவாகத் தருகிறாள் தாயங்கண்ணியார் என்னும் பெண்கவி (புறம் 250)
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,
அல்லி உணவின் மனைவியடு, இனியே
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.
 
தாயங்கண்ணியார் தரும் துயரக்காட்சியைப் போன்றதொரு காட்சியை விவரிக்கும் பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டுவின் கவிதை வரிகள் ( புறம்.246) சமூகவிதிகளை உருவாக்கி நடைமுறைப் படுத்தும் நிலையில் இருக்கும் பலவகை அறிவாளிகளையும் பார்த்துக் கணவன் போரில் மாண்டபின் உயிரோடு இருப்பது கொடுமையானது எனச் சொல்லிவிட்டு,
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
 
பொய்கையும் தீயும் ஒன்றே எனப் பேசும் பெருங்கோப்பெண்டுவின் துயரம் தன் கணவனின் மரணத்திற்குக் காரணமான போரையும், போரில் தன் கணவன் இறந்த பின் வாழ வேண்டிய கைம்மை நிலையையும் ஒருசேரக் கோபத்துடன் பேசுவதை நாம் வாசித்திருக்கிறோம். இன்றைய முழுநிலவு நாளின் துயரம் இதற்கு முந்திய முழுநிலவு நாளில் இருந்ததில்லை; அன்று இருந்ததெல்லாம் மகிழ்ச்சி தான் எனப் பேசும் பாரிமகளிரின் துயரம் தோய்ந்த வரிகளின் பின்னணியில் இருப்பதும் போரின் விளைவே எனச் சொல்ல வேண்டியதில்லை. இரண்டு முழுநிலவு நாட்களுக்கும் இடையில் நடந்த போரில் தங்களின் தந்தை பாரியின் மரணத்திற்கான போர் நிகழ்ந்து முடிந்து விட்டது என நேரிடையாகப் பேசாமல்
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்,
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! (புறம்.112)
 
எனப் பேசும் கவிதை வரிகளினூடாக இடையில் நிகழ்ந்த போரின் மீதான பாரி மகளிரின் வெறுப்புக் குரலை வாசிக்காமல் விட்டு விட முடியாது. இக்கவிதைகள் அனைத்திலும் எழுதிய பெண்களின் கூற்றாக அல்லது ஒரு பெண்ணின் பாத்திரக் கூற்றாக அமைந்து பெண் தன்னிலையை உருவாக்கி, போர் என்னும் அக்கால கட்டத்திய மைய நீரோட்டப் பெருநிகழ்வை ஏற்றும் விலகியும் பேசியதன் காரணங்களாகப் பார்க்கிறோம். அத்தோடு பெண்ணுக்கான இயங்குவெளி குடும்பம் என்பதையும், சமூகத்தின் அடித்தளமான நுண் அலகே குடும்பம் தான் என்பதையும் உணர்ந்தவர்களாக வெளிப்படும் அக்கால கட்டப் பெண்கள், சமூகத்தின் பெரும் போக்கோடு தனது குடும்ப உறுப்பினர்களுக்கு இருந்த ஈடுபாட்டிற்காக மகிழ்ச்சியையும் உவகையையும் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இத்தகைய போர்கள் பெண்களின் வாழ்வில் பெருந்துயரங்களைக் கொண்டு வந்தன என்பதை உணர்ந்து, அதை விமரிசனம் செய்யும் தாபதநிலை, கையறுநிலை, ஆனந்தப் பையுள் என்னும் உணர்வுகளையும் கூட அக்கவிதைகள் மூலம் நாம் வாசிக்கலாம். போருக்குச் சென்றவன் வந்துவிட்டால் எல்லாத்துயரமும் போய்விடும் எனச் சொல்லும் வெள்ளைமாலரின் கவிதைகளும், (புறம். 271, 296.), துயரத்தோடும் அச்சத்தோடும் சித்திரிக்கின்றன.
 
பொதுவெளியில் பெண்ணின் எல்லைகள்:
குடும்பம் என்னும் எல்லையைத் தாண்டிப் பொது வெளியில் இயங்கும் மனிதர்களும், அதிகாரப் பொறுப்பில் இருக்கும் தலைவர்களும் அரசர்களும் செயல்படும் முறையைப் பேசும் கவிதைகளை எழுதிய பெண்களாக மூன்று பேரை மட்டுமே சுட்டிக் காட்ட முடிகிறது. புறநானூற்றில் 33 கவிதைகளைப் பாடிய ஒளவையும், 7 கவிதைகளைப் பாடிய மாறோக்கத்து நப்பசலையும் பதிற்றுப் பத்தில் 6 ஆம் பத்தைப் பாடிய காக்கை பாடினியும் மட்டுமே ஆண்களின் புறக்கவிதையில் இடம் பெறும் பாடுபொருட்களைப் பாடியுள்ளனர். சேரமன்னர்கள் பத்துப்பேரைப் பற்றிய பத்துப் பாடல்கள் என்னும் அமைப்பைக் கொண்ட பதிற்றுப் பத்து வெவ்வேறு காலகட்டத்தில் பாடப் பெற்றதா? அல்லது சேரமன்னர்களின் பரம்பரையைப் பாராட்டுவதற்காக ஒரே நேரத்தில் பத்துப் பேரால் எழுதப்பட்டுத் தொகுக்கப் பெற்ற நூலா என்ற ஐயத்தைத் தரும் அந்நூலில் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் வீரம், காதல், கொடை, ஆட்சிச் சிறப்பு , அழகு என அனைத்துக் கூறுகளும் போற்றப்படுகின்றன. வஞ்சித்துறை, பாடாண் பாட்டு,குரவைநிலை, செந்துறைப் பாடாண், காட்சி வாழ்த்து, செந்துறைப் பாடாண், ஒள்வாள் அமலை, விறலி ஆற்றுப்படை, செந்துறைப் பாடாண், மாகூர் திங்கள் , விறலி ஆற்றுப்படை, பதிகம் என அமைந்துள்ள அப்பதிற்றுப் பத்தில் பாராட்டும் போற்றுதலும் தவிர பிற பரிமாணங்கள் எவையும் இடம் பெறவில்லை. ஆனால் அதே காக்கை பாடினி நச்செள்ளை பாடிய தும்பைத் திணையின் உவகைக் கலுழ்ச்சித்துறைப் பாடலில் பெண்ணின் தன்னிலை உருவாக்கத்தோடு (புறம். 278 ) வீரமும் அதன் தொடர்ச்சியாக இழப்பும் இடம் பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இந்தத்தன்மையை மாறோக்கத்து நப்பசலையாரிடம் வேறுவிதமாகக் காண முடிகிறது.அவர் தான் பாடிய ஏழு பாடல்களில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், மலையமான் திருமுடிக்காரி. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன், அவியன் ஆகிய நான்கு பேரைப் பாடியுள்ளார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மூன்று பாடல்களில் பாடப் பெற்றுள்ளான், இரண்டு பாடல்கள்(37,39) அவனது பரம்பரைப் பெருமை, போர்த்திறம் பற்றிச் சொல்ல, ஒரு பாடல் (226)அவனது இறப்பு நெருங்கிய நிலையில் ஏற்பட்ட கையறுநிலையாக வெளிப்பட்டுள்ளது. திருமுடிக்காரி(126) , ஏனாதி திருக்கண்ணன்(174), அவியன்(280) ஆகியோரிடம் பொருள் பெறும் பொருட்டுப் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. ஒரு பாடல் மட்டும் ஆனந்தப் பையுள் (383) திணையில் மார்பில் புண் பட்டு வேதனைப் படும் ஒருவனின் வலியைச் சொல்லும் போது போர் தரும் துயரத்தைப் பேசுவதாக அமைந்துள்ளது.

புறநானூற்றில் அதிக எண்ணிக்கையில் கவிதை பாடிய பெண் கவி ஔவை. அவள் பாடிய 33 கவிதைகளில் 24 கவிதைகள் அதியமான் நெடுமானஞ்சியையும் ஒருபாடல் அவன் மகன் பொகுட்டெழினியையும் பாராட்டிப் பேசுகின்றன. நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய ஒருபாடலும், யாரைப் பற்றிய பாடல் என்ற குறிப்பின்றி இருக்கும் வெட்சி மற்றும் கரந்தைத் திணைப்பாடல்களும் போர் விருப்பு, போர்க்களக் காட்சி, போரில் வென்ற அரசனின் பெருமை, அவனது கொடைச் சிறப்பு எனப் பேசுகின்றன. பெரும்பாலும் அதியமான் நெடுமானஞ்சியின் வீரம், கொடை, வல்லாண்மை ஆகியன ஒற்றைப் பரிமாணத்தோடு பலபடப் பாராட்டப்பெற்றுள்ளன என்றாலும் பொதுவியல் திணையில் அமைந்த மூன்று பாடல்களும், சேரமான் பெருமானும் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கிருந்த போது பாடிய பாடலும் வாழ்க்கையின் நிலையாமை குறித்து விரிவாகப் பேசுகின்றன. பொதுவியல் திணையில் பொருண்மொழிக்காஞ்சியாகத் (187 ) ஔவையார் எழுதிய
நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே!
 
என்ற புகழ் மிக்க வரிகள் அவரது காலச் சமூகம் ஆண்களால் வழி நடத்தப்படும் சமூகம் என்பதைச் சொல்லும் முக்கியமான கவிதை வரிகள் என்பதை யார் மறுக்க முடியும். இந்த வரிகளை எழுதிய ஔவையின் மனநிலை அதனை ஏற்றுக் கொண்டு அடங்கிப் போக விரும்பிய ஏற்பு மனநிலை சார்ந்ததா? பெண்களுக்கு எந்த உரிமையையும் இந்தச் சமூகம் தரவில்லை என்ற விமரிசனத்தைக் கோபமாகச் சொல்லும் மனநிலையா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
முடிவுரை:
இக்கட்டுரையின் விவாதிக்கப்பட்ட கவிதையியலின் வழியாகப் பின்வருவனவற்றை முடிவுகளாகக் கூறலாம். 
பெண்களின் புறக்கவிதைகளும் அகக் கவிதைகளைப் போலவே பெண் தன்னிலையை உருவாக்கிப் பேசும் கூற்று முறையையே புறக்கவிதைகளும் கொண்டுள்ளன. அகக்கவிதையில் கேட்போர் யார் என வெளிப்படுவது போலப் புறக்கவிதையில் வெளிப்பட வேண்டும் என நினைக்கவில்லை. இத்தன்மை புறக்கவிதையின் பொதுத்தன்மை. இப்பொதுத்தன்மை பெண்களின் புறக்கவிதைகளிலும் வெளிப்பட்டுள்ளன.

 

கவிதைக்குள் உருவாக்கப்பெற்ற பெண் தன்னிலை வழியாகத் தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் போர் மீதும், போரைப் பொறுப்பேற்று நடத்தும் அரசன் அல்லது தலைவன் மீதும் கொண்ட பற்றை வெளிப்படுத்தப் பெண்கள் விரும்பியுள்ளனர். அதே நேரத்தில் போர் தரும் வலியும் இழப்பும், துயரமும் தன்னை நேரடியாகப் பாதித்த நிலையில் போர் வெறுப்புக் கவிதைகளையும் பெண்கள் எழுதியுள்ளனர்.

 

சமூக வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளையும் பாடுகிறவர்களாகப் பெண்கள் வெளிப்படவில்லை என்றாலும் வாழ்க்கையின் நிலையாமையையும், இன்மையின் தவிர்க்க இயலாத் தன்மையையும் ஒரு சில கவிகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளனர்,



===================================  

  1. இணைப்பு-I
  2. பெண்ணியத்திறனாய்வு என்ன செய்யும்?
  3. 1.பெண்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்யும்.
  4. 2.பனுவல்களில் வெளிப்படும் பெண்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்யும்
  5. 3.பெண்களாலும் ஆண்களாலும் எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்களில் இடம்பெறும் பெண்பாத்திரங்களை ஆய்வுக்குட் படுத்தும்
  6. 4.இதுவரை எழுதப்பட்டபிரதிகளில் இடம் பெற்றுள்ளபெண்பாத்திரங்கள்,'இயல்பானவர்களாக'[ nature]' குறையுடையவர் களாக'[lack]' மற்றவர்களாக' [other]சித்திரிக்கப்பட்டிருப்பதின் காரணங்களைக் கண்டறியும் கேள்விக் குட்படுத்தும்.
  7. 5.நடப்பு வாழ்க்கைக்கும், பனுவலில் காட்டப்படும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகப் பனுவலைக் கட்டுடைத்து, அதனை அரசியல் பிரதியாக முன்வைத்து, அதில் செயல்படும் தந்தைவழி ஆணாதிக்க அதிகார நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும்.
  8. 6.இலக்கியத்திலும், சமூகத்திலும் பெண்களின் இயல்புகளை அல்லது இயல்பான பெண்களின் குணம் என்று காட்டப் பயன்படும் மொழியின் பாத்திரத்தைக் கண்டறிதல்.
  9. 7.உயிரியல் ரீதியாகவும் சமுகவியல் ரீதியாகவும் பெண்கள்,ஆண்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை இயல்பான உண்மையா.?அல்லது கட்டமைக்கப்பட்ட உண்மையா என்பதைக் கேள்வியாக எழுப்பி ஆய்வு செய்தல்.
  10. 8.பெண்ணிய மொழி என்பது பெண்மையைக் கொண்டாடுவதாக இருக்கும் என்பதும், அப்படிக் கொண்டாடுவது, ஆண்களுக்கும் தேவையாக இருப்பது என்பதையும் கேள்விக்குள்ளாக்குவது.
  11. 9.ஆண் அடையாளம், பெண் அடையாளம் என்பதிற்குள் செயற்படும் சாராம்சம், குறியீடுகளை உளவியல் பகுப்பாய்வுக் குட்படுத்துவது.
  12. 10. கறுப்பின அல்லது ஓரினப் பெண் எழுத்தில் அவர்களின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது நிருபிக்கப் பட்டபின் வந்துள்ள ஆசிரியரின் சாவு என்னும் சொல்லாடலும் நிலைபாடுகளும் கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்ற கோணத்தில் ஆய்வு செய்தல்.
  13. 11.இலக்கிய விளக்கம் தரும் பொதுப்போக்குப் பார்வை அல்லது நடுநிலைப்பார்வை என்பவற்றில் இருந்து விலகி சரியான,உறுதியான கருத்தியல் அடிப்படைகளை உருவாக்குதல்.
  14. [Barry Peter, “Beginning Theory-An Introduction to Literary and Cultural theory” First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995)

===================================

இணைப்பு-II

பெண் கவிகளின் அகக்கவிதைகள்


கவிகள்
மொத்தப் பாடல்
பனுவலும் எண்ணும்
திணை
துறை

அஞ்சிஅத்தைமகள் நாகை
1
அகம்.325
குறிஞ்சி
வரைந்தெய்திய பின்றை மணமனைக்கட் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது, வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம்

அஞ்சில் அஞ்சி
1
நற். 90.
மருதம்
தலைமகளுக்குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுத்தது

அள்ளூர் நன்முல்லை
10
அகம்.46
மருதம்
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது

குறுந்.9/32
குறிஞ்சி
பின்னின்றான் கூறியது

67
பாலை
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது

68
குறிஞ்சி
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது

93
மருதம்
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயின் மறுத்தது

96
குறிஞ்சி
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டுந் தோழிக்குத்தலைமகள் இயற்படச் சொல்லியது

140
பாலை
பொருள்வயின் பிரிந்தவிடத்து நீ ஆற்றுகின்றிலையென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது

157
மருதம்
பூப்பெய்திய தலைமகள் உரைத்தது

202
மருதம்
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள்வாயில் மறுத்தது

237
பாலை
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது.

ஆதிமந்தி
1
குறுந்.1/31
மருதம்
நொதுமலர் வரைவழித் தோழிக்குத் தலை மகள் அறத்தொடு நின்றது

ஊண்பித்தை
1
குறுந்.1/ 232
பாலை
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது

ஒக்கூர் மாசாத்தி
7
அகம்.2/324
முல்லை
வினைமுற்றிய தலைமகன் கருத்துணர்ந்து உழையச் சொல்லியது.

384
முல்லை
அதுவே

குறுந்.5/126
முல்லை
பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

139
மருதம்
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.

186
முல்லை
பருவவரவின்கண் ஆற்றாள் எனக்கவன்ற தோழிக்குக் கிழத்தியுரைத்தது

220
முல்லை
பருவவரவின் கண் கிழத்தி தோழிக்குரைத்தது

275
முல்லை
பருவவரவின்கண் வரைவு நிமித்தந் தோன்றத் தலைமகட்கு உரைத்தது

ஒளவையார்
26
அகம். 4/11
பாலை
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு
ஆற்றாளாய தோழிக்குத் தலைமகன் ஆற்றுவலென்பது படச் சொல்லியது.

147
பாலை
செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது

273
பாலை
பிரிவின்கண் தலைமகள் அறிவுமயங்கிச் சொல்லியது

26
303
பாலை
தலைமகன் பிரிவின்கண் வேட்கைமீதூர்ந்த தலை மகள் நெஞ்சிற்குச் சொல்லியது

நற்.7 /129
குறிஞ்சி
பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது

187
நெய்தல்
தலைமகன் பகற்குறிவந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே செல்லுவாளாய்ச் சொல்லியது

295
நெய்தல்
தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது;சிறைப்புறமுமாம்

371
முல்லை
வினைமுற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது

381
முல்லை
பிரிவிடை யாற்றாளாகிய தலைமகள் பருவவரவின்கண் சொல்லியது

390
மருதம்
பாங்காயின வாயில் கேட்ப நெருங்கிச் சொல்லியது. தலைமகள் தோழிக்குரைப்பாளாய் வாயிலாகப் புக்கார் கேட்பச்சொல்லியதூஉமாம்.



394
முல்லை
வினைமுற்றி மறுத்தராநின்ற தலைமகளை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. வன்சொல்லாற் குறைநயப்பித்த
தோழி தந்தளித்ததூஉமாம்

குறுந்.15/15
பாலை
உடன்போயின பின்றைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள்: நிற்பச் செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது

23
குறிஞ்சி
கட்டுக்காணிய நின்றவிடத்துத் தோழி அறத்தொடுநின்றது

28
பாலை
வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தியுரைத்தது.

29
குறிஞ்சி
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன் இவர்எம்மை மறுத்தாரென்று வரைந்து கொள்ள நினையாது பின்னுங் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினைநோக்கிக் கூறியது.



39
பாலை
பிரிவிடை ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்கு யாங்ஙனம் ஆற்றுவேனெனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத்
தலைமகள் கூறியது





43
பாலை
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது

80
மருதம்
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது

91
மருதம்
பரத்தையர் மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்க வழித் தன்வரைத்தன்றி அவன் வரைத்தாகித்தன்னெஞ்சு நெகிழ்ந்துழித் தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது. பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதூஉமாம்.

99
முல்லை
பொருண்முற்றிப் புகுந்த தலைமகன், 'எம்மை நினைத்தும் அறிதிரோ' என்ற தோழிக்குச் சொல்லியது.

102
நெய்தல்
ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யான் யாங்ஙனம் ஆற்றுவேன் என்றது.

158
குறிஞ்சி
தலைமகன் இரவுக் குறி வந்துழி அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லியது



183
முல்லை
பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி யுரைத்தது

200
மருதம்
பருவவரவின் கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி பருவமன்று வம்பு என்றவழித் தலைமகள் சொல்லியது

364
பாலை
வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது

388
பாலை
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமையுணர்ந்த தலைமகன் சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையுங் குறித்துச் செலவழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது

கச்சிப்பேட்டுநன்னாகை
5
குறுந்.5/30
பாலை
அவர்நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும்நீ ஆற்றியிராது, ஆற்றாயாகின்றது ஏன்? எனவினாய தோழிக்குத் தலைமகள்," யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னைஇங்ஙனம் நலிந்தது" எனக்கூறியது.

172
நெய்தல்
வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு தலைமகள்கூறியது.

180
பாலை
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது

192
பாலை
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிரி அழிந்து கிழத்தி உரைத்தது

197
நெய்தல்
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கழார்க்கீரனெயிற்றி
8
அகம்.4/163
பாலை
பிரிவின்கண் வற்புறைக்குந் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது

217
பாலை
பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது

235
பாலை
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது

294
முல்லை
பருவவரவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது

நற்.2/ 281
பாலை
வன்பொறை எதிரழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது ஆற்றாளெனக் கவன்ற தோழி தலைமகட்குரைத்ததூஉமாம்

312
பாலை
பொருள் வலிந்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.

குறுந்.2/135
மருதம்
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது

261
குறிஞ்சி
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

காக்கைப்பாடினி நச்செள்ளை
1
குறுந்.1/210
முல்லை
பிரிந்துவந்த தலைமகன் நன்காற்றுவித்தாய் என்றாற்குச் சொல்லியது

காமக்கனிப் பசலை
1
நற்.1/243
பாலை
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

குமிழிஞாழலார்நப்பசலை[
1
அகம் 1/160
நெய்தல்
தோழி வரைவு மலிந்து சொல்லியது

குன்றியனார்






குன்றியனார்
10
அகம்.2/40
நெய்தல்
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழிக்கிழத்தி தோழிக்குச் சொல்லியது

41
பாலை
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை நினைந்து சொல்லியது.



நற்.2/117
நெய்தல்
வரைவு நீட ஆற்றாளாகிய தலைவி வன்புறையெதிரழிந்து சொல்லியது. சிறைப்புறமாம்.

239
நெய்தல்
தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது

குறுந். 6/50
மருதம்
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக்கிழத்தி சொல்லியது

51
நெய்தல்
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்கு தோழி வரைவு மலிவு கூறியது.

117
நெய்தல்
வரைவு நீட்டித்தவிடத்து தலைமகட்குத்தோழிசொல்லியது

238
மருதம்
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து வாயில் வேண்டித் தோழி யிடைச் சென்று தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது

301
குறிஞ்சி
வரைவிடை வைப்ப ஆற்றகிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது

336
குறிஞ்சி
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.

குறமகள் குறியெயினி
1
நற்.357
குறிஞ்சி
தலைமகன் வரைவு நீடியவிடத்து ஆற்றலென்பது படச் சொல்லியது.மனைமருண்டு வேறுபாடாயினாயென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்

நக்கண்ணை
3
நற்.2/ 19
நெய்தல்
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது

87
நெய்தல்
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு தோழிக்குரைத்தது.

அகம்.1/252
குறிஞ்சி
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது

நல்வெள்ளி
3
நற்.2/7
பாலை
பட்டபின்றை வரையாது கிழவோள் நெட்டிடைக் கழிந்து பொருள் வயின் பிரிய, ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது

47
குறிஞ்சி
சிறைப்புறமாகத் தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது

அகம்.1/32
குறிஞ்சி
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலை மகட்குக் குறை நயப்பக் கூறியது.தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்

நன்னாகை
2
குறுந். 2 /118
நெய்தல்
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுதுகண்டு, தோழிக்குச் சொல்லியது

325
நெய்தல்
பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்துரைத்தது.

நெடும்பல்லியத்தை
1
குறுந்.1/178
மருதம்
கடிநகர் புக்க தோழி தலைமகன் புணர்ச்சி விதும்பல்கண்டு, முன்னர்க் களவுக்காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது.

பூங்கண் உத்திரை


பூங்கண் உத்திரை
2
குறுந்.2/48
பாலை
பகற்குறிக்கண் காணும்பொழுதினுங் காணாப் பொழுது பெரிதாகலின் வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.

171
மருதம்
வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது

பொதும்பிற்புல்லாளங்கண்ணி
1
அகம்.1/154
முல்லை
வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது

பொன்மணி
1
குறுந்.1/ 391
முல்லை
பிரிவிடை பருவவரவின் ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது

போந்தைப்பசலை
1
அகம்.1/110
நெய்தல்
தோழி செவிலித்தாய்க்குக்கு அறத்தொடு நின்றது

மதுரைஓலைக்கடை நல்வெள்ளை
2
நற். 250
மருதம்
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றாளாய்ப் பாணற்கு
உரைத்தது.

369
நெய்தல்
பட்டபின்றை வரையாது பொருள்வயின் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

மாறோக்கத்துநப்பசலை
1
நற்.1/243
பாலை
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது

முள்ளியூர்ப் பூதி
1
அகம்.1/173
பாலை
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது.

வருமுலையாரித்தி
1
குறுந்.176
குறிஞ்சி
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது

வெண்பூதி
3
குறுந்.3/97
நெய்தல்
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச்
சொல்லியது.

174
பாலை
பிரிவுணர்த்திய தோழிக்குத் தோழி சொல்லியது

219
நெய்தல்
சிறைப்புறம்

வெள்ளிவீதி
13
குறுந்.8/27
பாலை
பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி
உரைத்தது

44
பாலை
இடைச்சுரத்து செவிலித்தாய் கையுற்றுச் சொல்லியது

58
குறிஞ்சி
கழற்றெதிர் மறை

130
பாலை
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூமாம்

146
குறிஞ்சி
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி,
வரைவு மறுப்பவோ? எனக் கவன்ற தலைமகட்குத்
தோழி சொல்லியது

149
பாலை
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது

169
மருதம்
கற்புக் காலத்துத் தெளிவுடை விளங்கியது. இனித் தோழி,வரைவு நீட்டித்த வழி வரைவு கடாயதூஉமாம்

386
நெய்தல்
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.

நற்.3/70
மருதம்
காமம் மிக்க கழிபடர் கிளவி

335
நெய்தல்
காமம் மிக்க கழிபடர் கிளவி மீதூர்ந்த தலைமகள் சொல்லியது

348
நெய்தல்
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர் கின்றாள் சொல்லியது.

அகம் 2/45
பாலை
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது



362
குறிஞ்சி
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது

வெறிபாடிய காமக்கண்ணி
3
நற்.1/268
குறிஞ்சி
தலைமகட்குச் சொல்லியது; தலைமகன் வந்தொழுகவும்
வேறுபாடு கண்டாள்,' அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்' என்றதூஉமாம்

3
அகம். 2/22
குறிஞ்சி
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து தலைமகள் ஆற்றாளாக, தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்படமொழிந்தது; தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉமாம்

98
குறிஞ்சி
தலைமகன் சிறைப்புறைத்தானாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

இணைப்பு-III
பாடலால் பெயர் பெற்ற புலவர்கள்

அணிலாடுமுன்றிலார்
1
குறுந்.40[41]
குறிஞ்சி
இயற்கைப்புணர்ச்சி புணர்த்தபின்னர் பிரிவெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடுகண்டு தலைமகன் கூறியாது

ஓரில் பிச்சையார்
1
குறுந்.277
பாலை
தலைமகன் பிரிந்தவழி அவன் குறித்த பருவம்
வரவு. தோழி அறிவரைக் கண்டு வினாவியது

ஓரேருழவனார்
1
குறுந்.131
பாலை
வினைமுற்றிய தலைமகன் பருவ வரைவின் கண் சொல்லியது.

கங்குல் வெள்ளத்தார்
1
குறுந்.387
முல்லை
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி
வன்புறை எதிரழிந்து கூறியது.

கல்பொருசிறுநுரையார்
1
குறுந்.290
நெய்தல்
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது

காலெறி கடிகையார்
1
குறுந்.267
பாலை
மேல்நின்றும் ஆடவர் பொருட்குப்பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையின் இளமையது அருமையும் கூறி செலவழுங்கியது.

குப்பைக்கோழியார்
1
குறுந்.305
மருதம்
காப்பு மிகுதிக்கண்,தோழி அறத்தொடுநிற்பாளாக,
தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.

குறியிறையார்
1
குறுந்.394
குறிஞ்சி
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்று
விக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது.

செம்புலப்பெயல் நீரார்
1
குறுந்.
40[ 41]
குறிஞ்சி
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர் பிரிவ'
எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு
கண்டு தலைமகன் கூறியது.

சுவைமகன்
1
குறுந்.324
நெய்தல்
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாரா வரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து வரைவு கடாயது.

நெடுவெண்ணிலவினார்
1
குறுந்.47
குறிஞ்சி
இராவந்து ஒழுகுங்காலை முன்னிலைப்
புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது.



பதடி வைகலார்
1
குறுந்.323
முல்லை
வினை முற்றினான் பாகற்கு சொல்லியது

மீனெறி தூண்டிலார்
1
குறுந்.54
குறிஞ்சி
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

விட்டகுதிரையார்
1
குறுந்.74
குறிஞ்சி
தோழி தலைமகன் குறை மாறாதவற்றால்கூறியது

வில்லக விரலினார்
1
குறுந்.370
முல்லை
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்ட பரத்தை அவட்குப் பாங்காயினர் கேட்கச் சொல்லியது

கள்ளில் அத்திரையார்
1
குறுந்.293
மருதம்
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப்புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது

தேய்புரிப்பழங்கயிற்றினார்
1
நற். 284
பாலை
பொருள் முடிய நின்ற தலைமகள் ஆற்றாளாகிச் சொல்லியது

தனிமகனார்
1
நற். 153
பாலை
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது

ஊட்டியார்
1
அகம். 68
குறிஞ்சி
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.

ஊட்டியார்
1
அகம்.388
குறிஞ்சி
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.

















இணைப்பு-IV
பெண் கவிகளின் புறக்கவிதைகள்






பாடியவர்
பாடல்
திணை
துறை
பாடப்பெற்றோர்
பெண்ணிலை வெளிப்பாட்டு வரிகள்

1.அள்ளுர் நன்முல்லை[2]
306
வாகை
மூதின் முல்லை
---
தன் மகன், குடும்பப் பெருமை

340
காஞ்சி
மகட்பாற்காஞ்சி
---
தன் மகன், குடும்பப் பெருமை

2.ஒக்கூர் மாசாத்தி[1]
279
வாகை
மூதின் முல்லை
---
தன் மகன், குடும்பப் பெருமை



3. ஔவை[33]


87
தும்பை
தானை மறம்
அதியமான் நெடு மானஞ்சி -1
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

88
தும்பை
தானை மறம்
அதியமான் நெடு மானஞ்சி-2
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

89
தும்பை
தானை மறம்
அதியமான் நெடு மானஞ்சி-3
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

90
தும்பை
தானை மறம்
அதியமான் நெடு மானஞ்சி -4
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

91
பாடாண்
வாழ்த்தியல்
அதியமான் நெடு மானஞ்சி-5
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

92
பாடாண்
இயன்மொழி
அதியமான் நெடு மானஞ்சி-6
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

93
வாகை
அரசவாகை
அதியமான் நெடு மானஞ்சி-7
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

94
வாகை
அரசவாகை
அதியமான் நெடு மானஞ்சி-8
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

95
பாடாண்
வாள்மங்கலம்
அதியமான் நெடு மானஞ்சி-9
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

96
பாடாண்
இயன்மொழி
அதியமான் நெடு மானஞ்சி-10
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

97
பாடாண்
இயன்மொழி
அதியமான் நெடு மானஞ்சி-11
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

98
வாகை
அரசவாகை
அதியமான் நெடு மானஞ்சி-12
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

9
வாகை
அரசவாகை
அதியமான் நெடு மானஞ்சி-13
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

100
வாகை
அரசவாகை
அதியமான் நெடு மானஞ்சி-14
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

101
பாடாண்
பரிசில் கடாநிலை
அதியமான் நெடு மானஞ்சி-15
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

102
பாடாண்
இயன்மொழி
அதியமான் நெடு மானஞ்சி-16
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

103
பாடாண்
விறலியாற்றுப்படை
அதியமான் நெடு மானஞ்சி-17
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

104
வாகை
அரசவாகை
அதியமான் நெடு மானஞ்சி-18
அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு

140
பாடாண்
பரிசில்விடை
நாஞ்சில் வள்ளுவன்/ ஆய் அண்டிரன்
நாஞ்சில் வள்ளுவன் அரிசி வேண்டியவர்க்கு யானையைக் கொடுத்தது பற்றி

187
பொதுவியல்
பொருண்மொழிக்காஞ்சி
---
நாடு, காடு, மேடு, பள்ளம் என எல்லாம் ஆடவர் சார்ந்தது.

206
பாடாண்
பரிசில் துறை
அதியமான் நெடு மானஞ்சி-19
பரிசல் நீட்டித்தவழிக் கடிந்து கூறியது

231
பொதுவியல்
கையறுநிலை
அதியமான் நெடு மானஞ்சி-20
அதியமானின் இறப்புக்குப்பின் அவனின் இன்மை சார்ந்த கையறுநிலை

232
பொதுவியல்
கையறுநிலை
அதியமான் நெடு மானஞ்சி-21
அதியமானின் இறப்புக்குப்பின் அவனின் இன்மை சார்ந்த கையறுநிலை

235
பொதுவியல்
கையறுநிலை
அதியமான் நெடு மானஞ்சி-22
அதியமானின் இறப்புக்குப்பின் அவனைப் போலக் கொடுப்பதற்கு யாருமில்லை எனப் பாடிய கையறுநிலை

269
வெட்சி
உண்டாட்டு
---
கரந்தைப்போரில் ஈடுபட்ட வீரனின் வாளைப்பாடியது

286
கரந்தை
வேத்தியல்
கரந்தைப்போரில் ஈடுபடக் காத்திருக்கும் வீரனின் கூற்று



290
கரந்தை
குடிநிலை உரைத்தல்
---
கரந்தைப்போரில் ஈடுபடக் காத்திருக்கும் ஒருகுடியின் வீரனை மதித்துக் கள் தருமாறு கூறல்

295
கரந்தை
உவகைக் கலுழ்ச்சி
---
உடல் பிளக்கப்பட்ட தன் மகன்/ கணவன் மறப்பண்பு கண்டு முலை சுரத்தல்

311
கரந்தை
பாண்பாட்டு
---
போரில் வீரமரணம்- வெள்ளாடை போர்த்தல்

315
வாகை
வல்லாண்முல்லை
அதியமான் நெடு மானஞ்சி-23
அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரம், கொடை சார்ந்த வல்லாண்மை

390
பாடாண்
இயன்மொழி
அதியமான் நெடு மானஞ்சி-24
அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு

367 பாடாண் வாழ்த்தியல் சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியல் கானப்பேர் தந்த உக்கிரப் பெரு வழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை ஔவையார் பாடியது- இதற்குக் காஞ்சித்திணை எனக்குறித்தலே பொருந்தும்


நாடு, அரசு போன்றன நிலையாமை உடையன; இறப்பின் போது இவை எதுவும் உடன் வருவதில்லை எனக்ககூறல்

392
பாடாண்
கடைநிலை
அதியமான் மகன் பொகுட்டெழினி
மகனைப் பாடும்போதும் அதியமான் நெடுமான் அஞ்சியின் படைச்சிறப்பு பேசுதல்

4.காவற்பெண்டு [1]
86
வாகை
ஏறாண் முல்லை
---
இழப்பின் துயரம் பற்றிப் பேசும் பெண்

5.காக்கைப் பாடினி
நச்செள்ளை[1]
278
தும்பை
உவகைக் கலுழ்ச்சி
---
இழப்பும் வீரமும்

பதிற்றுப்பத்து
6-ம் பத்து
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்

காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடிய பத்துப் பாட்டு.


வஞ்சித்துறை- பாடாண் பாட்டு/குரவைநிலை/ செந்துறைப் பாடாண்/ காட்சி வாழ்த்து/ செந்துறைப் பாடாண்/ ஒள்வாள் அமலை/ விறலி ஆற்றுப்படை/ செந்துறைப் பாடாண்/ மாகூர் திங்கள் / விறலி ஆற்றுப்படை/ பதிகம்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
வீரம், காதல், கொடை, ஆட்சிச் சிறப்பு , அழகு என அனைத்துக் கூறுகளும் போற்றப்படுகின்றன.

6.குறமகள் இளவெயினி[1]
157
பாடாண்
இயன்மொழி
ஏறைக்கோன்
காதல் தன்னிலை

7. தாயங் கண்ணி[1]
250
பொதுவியல்
தாபதநிலை
---
இழப்பின் துயரம்

8.பாரி மகளிர்[1]
112
பொதுவியல்
கையறுநிலை
---
இழப்பின் வெளிப்பாடு

9.பூங்கண் உத்திரை[1]
277
தும்பை
உவகைக் கலுழ்ச்சி
---
இழப்பின் துயரம் பற்றிப் பேசும் பெண்

10.பூதப்பாண்டியன் தேவி பெருங் கோப்பெண்டு[1]
246
பொதுவியல்
ஆனந்தப்பையுள்
---
குடும்ப அமைப்பில் கணவன் இன்மையை உணர்தல்

11.பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை[3
83
கைக் கிளை
பழிச்சுதல்
சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி
காமமும் காதலும் வெளிப்படும் பேச்சு சார் தன்னிலை

84
கைக் கிளை
பழிச்சுதல்

காமமும் காதலும் வெளிப்படும் பேச்சு சார் தன்னிலை

85
கைக்
கிளை
பழிச்சுதல்

காமமும் காதலும் வெளிப்படும் பேச்சு சார் தன்னிலை

12.பேய்மகள் இளவெயினி[1]
11
பாடாண்
பரிசில் கடாநிலை
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
மற்றவர் பரிசு பெற்றுவிடத் தான் ஏதும் பெறவில்லை எனக் கூறல்

13.பொன்முடி[3]
299
நொச்சி
குதிரைமறம்
---
பெண்நிலைப் பேச்சுகள்

310
தும்பை
நூழிலாட்டு
---
பெண்நிலைப் பேச்சுகள்

312
வாகை
மூதின்முல்லை
---
பெண்நிலைப் பேச்சுகள்

14.மாற்பித்தி[2]
251
வாகை
தாபதவாகை
---
பெண்நிலைப் பேச்சுகள்

252
வாகை
தாபதவாகை
---
காதல் தன்னிலை

15.மாறோக்கத்து நப்பசலை [7]
37
வாகை
அரசவாகை
சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
சோழன் கிள்ளிவளவனின் போர்த்திறம் கூறல்

39
பாடாண்
இயன்மொழி

சோழ வம்சத்தின் அடையாளமான சிபியைச் சுட்டி, கிள்ளிவளவனின் போர்த்திறம் கூறல்

126
பாடாண்
பரிசில்துறை
மலையமான் திருமுடிக்காரி
கபிலன் என்னும் பெருங்கவிஞனால் பாடப்பட்ட சிறப்புடைய உன்னை மற்றவர்கள் பாடுவது சிறப்பன்று; எனினும் வறுமைகாரணமாக மற்றவர்களும் வாழ்த்துகின்றார்கள்; நீயும் வழங்கிடு என வேண்டல்.

174
வாகை
அரசவாகை
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
வெற்றிகளைக் கூறிப் பரிசு வேண்டல்

226
பொதுவியல்
கையறுநிலை
சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
சோழனின் இறுதிநாளை முடிவு செய்யும் கூற்றும் கூடப் பாடுவோர் போல வந்தே வேலையை முடிக்க வேண்டும் எனல்

280
பொதுவியல்
ஆனந்தப்பையுள்
---
மார்பில் புண்பட்ட தலைவன் இறப்பிற்குப் பின் அடையப்போகும் வேதனையைச் சொல்லல்

383
பாடாண்
கடைநிலை
அவியன்
வாழ்வில் ஏற்பட்ட மாறுபாடுகளால் பிறரைப் பாடிப் பரிசில் பெற வேண்டிய நிலை. தன் தலைவனாகிய அவியன் மாற்றம் இல்லாதவன் எனச் சொல்கின்றாள்

16.வெண்ணிக் குயத்தி[1]
66
வாகை
அரசவாகை
சோழன் கரிகால் பெருவளத்தான்
இழப்பின் வெளிப்பாடு

17வெள்ளை மாளர்[1]
296
வாகை
ஏறாண் முல்லை
---
பகைவயின் பிரிவு

18.வெறிபாடிய காமக்கண்ணி [2]
271
நொச்சி
செருவிடை வீழ்தல்
---
தலைவனின் இழப்பு

302
தும்பை
குதிரை மறம்
---
வீரம் போற்றும் பெண்


· புறநானூற்றில் பெண்கள் பாடியன: 63
· வெட்சி -1 / கரந்தை -4/ நொச்சி -2/ தும்பை-8 /வாகை-17/பாடாண் -18/பொதுவியல்-9/காஞ்சி -1/கைக்கிளை-3
================================================================================================================
சென்னையில் இயங்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
2011,மே, 20,21,22 தேதிகளில் நடத்தும் சங்ககால மகளிர்
என்னும் பொருண்மையிலான கருத்தரங்கில் வாசிப்பதற்கு எழுதப்பெற்ற கட்டுரை

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
படிக்கப் படிக்க என்றும் சுவை குன்றாத சங்கஇலக்கியங்களைப் பற்றி இப்படியொரு ஆய்வுக்கட்டுரையை வகைப்பாடுகளுடன் இவ்விணைய வெளியில் காண்பது அரிது

தொடர்க தங்கள் தமிழ்ப்பணி.
semmozhiththamizharam இவ்வாறு கூறியுள்ளார்…
கூர்மையான கட்டுரை அய்யா ...!
இதன்வழியே , போர்ச் சூழலில் சங்ககாலப் பெண்ணின் வாழ்நிலை குறித்து விரிவாக எழுதுமாறு கனிவுடன் வேண்டுகிறேன் அய்யா ....!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்