நீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்


விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் தொழில் நுட்பக் கல்வி X சமூக அறிவியல் கல்வி என்ற தலைப்பிலான விவாதத்தின் விருந்தினராக அழைக்கப்பட்ட நான் அன்னா ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவைப் பற்றிய விவாதத்திலும் கலந்து கொள்ள நேர்ந்ததைத் தற்செயல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.
என்னைப் போலவே  அந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரியும் அன்னா ஹசாரே பற்றிய விவாதத்திலும் கலந்து கொண்டார்.
ஹசாரே குழுவினர்  முன் வைத்த ஜன் லோக்பால் மசோதாவைப் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டு நிலைக்குழுவிற்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்ட பின் உடனடியாக அந்த விவாதப் பொருள் திட்டமிடப்பட்டது என அதன் இயக்குநர் சொன்னார். அத்தோடு அன்னாவின் பன்னிரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டமும் முடிவுக்கு வந்திருந்தது. இது அன்னாவையும் அவர் முன் வைக்கும் ஜன் லோக்பால் மசோதாவையும் விவாதிக்க வேண்டிய தருணம் என்று சொன்னார். அன்னா ஹசாரேவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனிப்பவன் இல்லை என்றாலும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கான தலைவராக மாறிக் கொண்டிருக்கும் அவரைப் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்ளலாம் என்று தோன்றியது. நானும் இருக்கிறேன் என்று சொல்லிக் கலந்து கொண்டேன்.
சென்னையில் திருவான்மியூரில் பதிரோரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்கள் அதே ஆர்வத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் பேசுகிறவர்களாக இல்லை என்றாலும், இரண்டு மூன்று பேர் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார்கள்; சில பத்தாயிரம் வருமானத்தை விட்டு விட்டு வந்திருப்பதாகவும் சொன்னார்கள். பொதுச்சமூகத்தில் நேர்மையும் ஒழுக்கமின்மையும் ஏற்பட்டதால் ஏற்பட்ட கோபமும், தங்களின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளும் அவர்களுக்குள் இருப்பதை உணர முடிந்தது. திறமையின்மை மதிக்கப்படுவதன் மூலமே  லஞ்சமும் ஊழலும் வளர்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.தொடர்ந்து அரசு நிறுவனங்களின் மீதும், ஜனநாயக நடைமுறை மீதும் வைத்திருந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போன எரிச்சலும் கோபமும் அவர்களிடம் வெளிப்பட்டது. அந்த இளைஞர்களோடு சேர்ந்து அன்னாவை ஆதரித்துப் பேச வந்திருந்த முகங்களில் எனக்குத் தெரிந்த முகங்களாகச் சில இருந்தன. பத்ரி சேஷாத்திரி, வழக்குரைஞர் புகழேந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொக்கர், சொந்த முயற்சியால் இளைஞர்கள் தொழில் முனைவோராக ஆக முடியும் என்பதற்கு மாதிரியாக அறியப்பட்ட சரத்பாபு, காலச்சுவடின் முன்னாள் ஆசிரியர் அரவிந்தன், போன்றோர் அந்தப் பக்கம் இருந்தனர். நான் இருந்த பக்கமும் சில பிரபல முகங்கள் இருந்தன. வழக்குரைஞர் அஜீதா, பெண்ணியச் சிந்தனை முன்னோடி ஓவியா,களப்பணியாளர் முத்துகிருஷ்ணன்,, எழுத்தாளர் முருகானந்தம், எமது பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பவணந்தி வேம்புலு போன்றோருடன் சில அரசியல் கட்சிப் பிரமுகர்களும் இருந்து ஐயங்களை எழுப்பிக் கொண்டிருந்தோம்.
அன்னா ஹசாரே என்ற பிம்பம்  ஊடகங்களால் உருவாக்கம் பெற்ற விதம், அவரது போராட்ட முறை அவருக்குப் பின்னால் இருக்கும் நபர்கள், நிதியுதவியாளர்கள், போன்றன உருவாக்கும் ஐயங்களோடு அவரது முன்மொழிவான ஜன் லோக்பால் மசோதாவின் நோக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டியவை என்பதை எனது பக்கம் இருந்தவர்கள் புள்ளி விவரங்களோடு முன் வைத்தனர். நாட்டின் பொருளாதார உற்பத்தியும், வளர்ச்சி விகிதமும் சமநிலையின்றிப் பங்கீடு செய்யப்படும் தேசங்களில் ஊழலும் லஞ்சமும் தவிர்க்க முடியாதவை. அதுவும் பன்னெடுங்காலமாகக் கேள்விகளற்று அனுபவித்த சிறு கூட்டத்திடமிருந்து அதிகாரமும் பணப்பரிவர்த்தனையும் கைமாறி அவற்றின் கணபரிமாணங்களை அறிந்திராதவர்களின் கைகளுக்கு வரும் போது என்ன மாதிரியான சிக்கல்களும் தெளிவின்மையும் ஏற்படும் என்பதற்கான அடையாளங்களை நிகழ்கால இந்திய அரசியல் காட்டிக் கொண்டிருக்கின்றன. அதனோடு புதிய தாராள மயம் வேறு சேர்ந்து கொண்டு ஊதிப் பெருக்கியதன் விளைவாக ஆயிரங்கள், லட்சங்கள் என்ற அளவில் இருந்த லஞ்சமும் ஊழலும் இன்று கோடிகளுக்கு மாறி விட்டன. உயர் மட்ட ஊழல்கள், நூறு, ஆயிரம், லட்சம் கோடிகளில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. என்பதாக மாறிக்கொண்டிருக்கும் சூழல் தான் தேசத்தின் விவாதப் பொருள் என்பதைப் புரிந்து கொள்ளாமல், அவற்றின் துணைவிளைவான ஊழலையும், அதனைத் தனியாக ஒழித்து விடுவதைப் பற்றியும் பேசி அதற்கான மசோதாவாக ஜன் லோக்பாலை முன் மொழிகிறது
அன்னா ஹசாரா குழு. அன்னாவின் பின்னணியையும் அவரது குழுவினரின் வேலைத்திட்டங்களையும் முத்துக் கிருஷ்ணன் விரிவாகவே ஐயத்திற்குள்ளாக்கினார். மத அடிப்படைவாதப் பாசிசத்தின் மங்கலான ரேகைகள் அவரது கடந்த காலத்தில் இருப்பதை யாரும் மறுத்து விடவில்லை. மையப் பிரச்சினையான பாராளுமன்றத்தைப் பொறுப்புடையதாகவும் வலுவானதாகவும் ஆக்குவதை விவாதிப்பதற்குப் பதிலாகத் தற்காலிக அதிகாரங்கள் கொண்ட அமைப்புகளைப் பற்றிப் பேசிப் பயன் என்ன என்ற கேள்வியை நான் எழுப்பினேன். அத்தோடு இத்தகைய அமைப்புகளின் வழி சமூகநீதிக்கும் இடது ஒதுக்கீட்டிற்கும் குந்தகம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக் காட்டிப் பேசினேன். ஆழமான விவாதங்களுக்குள் செல்ல மனம் தயங்கிக் கொண்டே இருந்தது. காரணம் அன்னா ஹசாரேவை விசாரணைக்குள்ளாக்குவதன் மூலம் அதன் எதிர்நிலையான ஊழல் ஆதரவு, காங்கிரஸ் ஆதரவு என்ற நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து இருப்பதை உணர்ந்ததுதான் காரணம். அரசியல் நிகழ்வுகள் சார்ந்த விவாதங்களில் இரட்டை எதிர்வுகளில் ஒன்றை ஆதரிப்பதில் இருக்கும் ஆபத்து உணரப் பட வேண்டிய ஒன்று. ஆனால் நீயா ? நானா? போன்ற நிகழ்ச்சி அமைப்பில் இரட்டை எதிர்வில் நின்று விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதும் தவிர்க்க முடியாத ஒன்று.
விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா?வின் வெற்றி,  இத்தகைய திட்டமிடலோடு எவ்வாறு விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தீர்மானிப்பதிலும் தான் இருக்கிறது என்பதை முன்பே எனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளேன். பட்டிமன்றம், கருத்து மேடை, அரட்டை அரங்கம் போன்ற பேச்சுக் கச்சேரிகளில் எந்த அணி வெற்றி பெற்றது என்பதற்குத் தரும் முக்கியத்துவம் நீயா நானாவில் முக்கியமாக ஆக்கப்படுவதில்லை. இந்த விவாதத்தில் இதுதான் ஏற்கத்தக்க முடிவு என்று திணிப்பதில் ஆர்வம் காட்டாமல், இத்தகைய பார்வைகள் எல்லாம் உள்ளன என்பதை அதன் இயக்குநர் ஆண்டனியும் வர்ணனையாளர் கோபிநாத்தும் திட்டமிட்டு முன் வைக்கிறார்கள். அதே போல உடனடியாக விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் எவை? அவசரம் காட்டாமல் நிதானமாக விவாதிக்கப்பட வேண்டியவை எவை எனத் திட்டமிடுவதிலும் இயக்குநர் ஆண்டனி காட்டியுள்ள திறமைக்குப் பல உதாரணங்கள் உள்ளன. விவாதிக்கப்படும் ஒவ்வொன்றிலும் அவருக்கென்று ஒரு தெளிவான பார்வையும் கருத்தும் முடிவும் கொண்டிருந்த போதிலும் பங்கேற்பாளர்களின் கருத்துக்களை வாங்கி விவாதத்தை நகர்த்தும் திறன் வெளிப்படும் நிகழ்ச்சியாக நீயா நானாவை அமைப்பதன் மூலம் தமிழர்களின் கவனத்திற்குரிய நிகழ்ச்சிகளில் அது முதலிடத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. நான்கைந்து ஆண்டுகளாக முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் அதனையொத்த நகல்கள் எப்போதும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவரவே இல்லை.
தமிழர்களின் ஆழ் மனதிற்குள் தங்கியிருக்கும் கருத்துக்களின் மீது மாற்றுப் பார்வையைச் செலுத்தும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளை அதிகமாகவும், உடனடியாக விவாதிக்க வேண்டிய அரசியல் சர்ச்சைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை எண்ணிக்கையளவில் குறைவாகவும் ஏற்பாடு செய்யும் ஆண்டனியின் நோக்கம் தெளிவானவை. இறுக்கமும் கெட்டிதட்டிப் போனதுமான மரபான தமிழ்ச் சமூகத்திற்குள் – அதன் பொது மனத்திற்குள் - மாற்றங்களைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்பதே அவரது முதன்மை நோக்கம். அதற்காக எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு மேற்கத்திய மனிதர்களாக ஆக்கி விட வேண்டும் என்ற நினைப்பும் அவரிடம் இல்லை. தமிழுக்கென்று இருக்கக் கூடிய தனிச் சிறப்புகளைத் தேடிப் பிடித்துப் பேச வைப்பதும், தமிழகத்தின் அடையாளம் மாறாமல், வளர்ச்சியை முன்னெடுக்கும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உண்டாக்குவதும் அவருக்குள் இருக்கும் பார்வை என்பதை அவரோடு பேசிய கணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
நானே இருவகையான நீயா நானாவிலும் கலந்து கொண்டிருக்கிறேன். கிராமியத் திருவிழாக்களில் ஆட்ட பாட்டங்களைத் தடை செய்ய வேண்டுமா? வேண்டாமாஎன்பதில் தடை செய்யக் கூடாது எனப் பேசினேன். வட்டாரம் சார்ந்த பேச்சு மொழியைக் கேலி செய்வது சரியா? தவறா என்ற தலைப்பில் சரியல்ல என்று விவாதித்தேன். பண்பாட்டையும் பன்முகத் தன்மையையும் மையப்படுத்திய இந்நிகழ்ச்சிகளின் முடிவுகள் தமிழின் அடையாளத்தை நகர வாசிகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கத்தை முன்நிபந்தனையாகக் கொண்டவை. அவை சரியாகவே பார்வையாளர்களிடம் போய்ச் சேர்ந்தது என்பதைப் பலரும் என்னிடம் பேசியதின் மூலம் அறிந்தேன். இவையல்லாமல் ஒரு சுதந்திர தினச் சிறப்பு நிகழ்ச்சியில் உலக மயப் பொருளாதாரத்திற்குப் பிந்திய இந்தியாவைப் பற்றி வல்லுநர்களாகக் கலந்து கொண்டு விவாதித்தோம். இன்னொரு முறை இலவசத்திட்டங்களின் தேவை/ தேவையின்மை பற்றியும் விவாதித்தோம். அதில் தேவையில்லை என்று நினைப்பவர்கள் கூட நான் சொன்ன வரலாற்றுக் காரணங்களை ஏற்கவே செய்தனர். அந்த முறை மங்கள் & மங்கள் நிறுவனத்தின் 10000 ரூபாய் பரிசுக் கூப்பனையும் பெற்று கொண்டேன்.
அன்னா ஹசாரேவும் அவர் முன் மொழியும் ஜன் லோக் பாலும் காட்சி ஊடகங்களுக்கான காட்சிப் பொருளாகவும் விவாதப் பொருளாகவும் மட்டும் நின்று போகும் வாய்ப்புகளே அதிகம் என்பது எனது கணிப்பு. அதையும் தாண்டி நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்குமென்றால் மகிழ்ச்சி அடையும் இந்தியக் குடிமகன்களில் ஒருவராக நானும் இருப்பேன். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்