தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்க!!

தமிழுக்கென்று தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கடைசியாக வந்து சேர இருந்தது உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம். கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, மதுரையில் அந்நிறுவனத்திற்கென நிலத்தையும் அளித்திருந்தது முந்திய திராவிட முன்னேற்றக் கழக அரசு.
அடிப்படைக் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றுவதற்காக 100 கோடி ரூபாயையும் ஒதுக்கியபின், அதன் செயலாக்கங்களாக   
  • ·   குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவது.
  • ·       திராவிட மொழிகளின் கலை, பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
  • ·          மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது
  • · சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
என முன்மொழிவுகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த நிறுவனம் இப்போது தொடங்கப்படுமா? ஒதுக்கப்பட்ட நிதி அதற்கெனப் பயன்படுத்தப் படுமா? கேள்வியை இங்கே யாரும் எழுப்ப முடியாது. ஏனென்றால் தோற்கடிக்கப்பட்ட அரசின் திட்டங்களையும் முன் மொழிதல்களையும் அடுத்துவரும் அரசு தொடர வேண்டும் என்ற நியதி அல்லது மரபு காக்கப்படுவது திராவிட இயக்கப் பண்பாடு அல்லவே.

மதுரையில் தொடங்கப்பட இருந்த உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் படாமல் நின்று போகும் என்ற வருத்தத்தில் இதைச் சொல்லவில்லை. மற்ற திட்டங்களில் செயல்படும் எதிரும் புதிருமான மனநிலை தமிழ்மொழி வளர்ச்சி என்னும் திராவிட இயக்கங்களின் ஆதாரக் கொள்கையிலும் செயல்படுகிறது என்னும் வேதனையின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.

தமிழ் சார்ந்து எதிரெதிர் கோணங்களில் செயல்படுவதில் திமுகவும் அஇஅதிமுகவும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை முதலிலேயே சொல்லி விட்டே கட்டுரையைத் தொடங்கலாம். குறிப்பிட்ட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மனிதக் கூட்டம் உயிர் வாழ்வதற்கான ஆதாரத் தேவை வாழிட வளமும், அது சார்ந்த பொருளாதார உற்பத்தியும் என்பது மொழி அறிவியல் கூறும் விதி. அவை இல்லாத நிலையில் அந்த மொழியைப் பேசும் மனிதர்கள் புலம் பெயர நேர்வதும், அப்புலங்களின் பெரும்பான்மை மொழியை அல்லது தொடர்பு மொழியைத் தமதாக்கிக் கொள்வதும் தவிர்க்க முடியாமல் நடந்துவிடும். தொடர்பு மொழியின் பயன்பாடு அதிகரிக்கச் சொந்த மொழியின் பயன்பாடுகள் குறைவதும், முடிவில் தாய் மொழி அடையாளம் தொலைத்த மனிதர்களாக ஆகி விடுவார்கள் என்பதையும் வரலாற்று மொழியியல் விரிவாக விளக்கியுள்ளது. இதைத் தடுக்க விரும்பும் மனிதர்கள் தங்கள் தாய்மொழியை அனைத்துவிதப் பயன்பாட்டிலும் உயிர்ப்போடு இருப்பதற்கான வேலைகளைச் செய்வார்கள். தங்கள் வசம் பொருளாதார பலம் இருந்தால் மொழியைப் பயன்படுத்தும் பலதளச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் அமைப்புகளையும் நிறுவனங்களையும் உருவாக்குவார்கள். தனி நபர்களும் தனியார் நிறுவனங்களும் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது எனக் கருதும் போது அரசின் கவனத்தை ஈர்த்து அதன் நிதியை பயன்படுத்தி மொழியின் உயிர்ப்பை- இருப்பை- உறுதி செய்யப் பாடுபடுவார்கள். 

ஒரு மொழி பேச்சு மொழியாக இருப்பதன் வழியாகவே தனது இருப்பைத் தொடர்ந்து தக்க வைக்கிறது. அதே நேரத்தில் பேச்சு மொழி மிக எளிதாகப் பிறமொழியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் இயல்பு கொண்டது; தன்னுணர்வின்றி பிறமொழியின் பயன்பாட்டை அங்கீகரித்துவிடும். எனவே மொழியின் இருப்பைக் கவனப்படுத்துபவர்கள் பேச்சுமொழியைத் தூய்மைப் படுத்துவதை விடவும் எழுத்துமொழியை வளர்த்தெடுப்பதிலும், அதன் பயன்பாட்டை விரிப்பதிலுமே அக்கறை கொள்வார்கள். தமிழின் எழுத்து மரபு அதிகமும் படைப்பு சார்ந்த எழுத்தாக மட்டுமே இருந்துள்ளது. அதனைத் தாண்டி தமிழ் வெவ்வேறு அறிவுத்துறைகளை எழுதித் தக்க வைக்கும் மொழியாகவும், பயன்படுத்தும் மொழியாகவும் ஆக வேண்டும். அதன் வழியாகவே தமிழ் கல்வித்துறையின் மொழியாக மட்டுமல்லாமல் நிர்வாகம், சட்டம், சமயம், தத்துவம் ஆகியவற்றின் மொழியாகவும் மாற முடியும். தமிழ்மொழி கல்விக்கூடங்களின் மொழியாக விளங்க வேண்டும் என வலியுறுத்தும் பின்னணியை இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

“தமிழ் வாழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்” என்ற பரப்புரையைத் தொடர்ந்து முன் வைக்கும் தமிழக அரசியல்வாதிகள் இதையெல்லாம் புரிந்து கொண்டு தான் பேசுகிறார்களா? என்று தெரியவில்லை. அவர்கள் வாழ வைக்கப் போவதாகச் சொல்லும் ’தமிழ்’ என்பது எது? அவர்கள் பேசும் அடுக்குமொழிப் பேச்சா? அல்லது பட்டிமன்றப் பாத்திரங்களின் பாவனை மொழியா? ஊடகங்களில் வெளிப்படும் தமிங்கிலிஷா? திருக்குறள் வழி நிகழ்த்தப்படும் அறிவுரைகளா? சங்க இலக்கியக் காட்சிகளா? சில ஆயிரம் ஆண்டுப் பழைமை கொண்ட தமிழைப் பற்றி விதந்து விதந்து பேசுவதன் வழியாகவே தமிழ் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை கடந்து 50 ஆண்டுகளில் திரும்பத் திரும்பத் தமிழர்களின் காதுகளில் மோதி அர்த்தமற்ற வாக்கியங்களாகி விட்டன. அதையும் உணர்ந்து கொள்ளாமல் தங்கள் ஆட்சிக்காலத்தில் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்தித் தமிழை வளர்ப்போம் என அடம் பிடிக்கின்றனர்.

ஒரு மொழிக்கு ஆய்வு மாநாடுகள் தேவை என்பதைக் கல்வியாளர்களும் திறனாய்வாளர்களும் மறுப்பதில்லை. ஆனால் அதன் தொடக்க விழாக்களில் இடம் பெறும் களியாட்டங்களும் கொண்டாட்டங்களும் மட்டுமே அம்மாநாடுகளில் மிஞ்சும் என்றால் மாநாடுகளின் விளைவுகள் மொழி வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் பலன்கள் என்னவாக இருக்கும்?  இதை உணர்ந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டின் முடிவில் உலகத்தரமான தமிழியல் ஆய்வு நிறுவத்தின் தேவையை தமிழ் அறிஞர்கள் வலியுறுத்தினார்கள். அறிஞர் சேவியர் தனிநாயகம், கபில் சுவலபில், வ.அய்.சுப்பிரமண்யம் போன்ற தமிழியல் அறிஞர்களின் வலியுறுத்தலை அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரை ஏற்றுக் கொண்டார். அவர் நடத்திய இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் நினைவுச் சின்னங்களாக சென்னைக் கடற்கரையில் நிற்கும் சிலைகளைச் சாதாரண மனிதர்கள் காட்டுவார்கள். ஆனால் தமிழறிஞர்கள் காட்டும் நினைவுச் சின்னம் அச்சிலைகளாக இருக்காது. சென்னை தரமணியில் தொடங்கப்பட்ட உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமாகவே இருக்கும். உலகம் முழுவதும் இயங்கும் பல்வேறு தமிழ் ஆய்வு நிறுவனங் களோடு உறவு கொள்வதும், பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களின் ஆய்வை மேம்படுத்தி உலகத்தோடு தமிழர்கள் கொள்ளும் உறவை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் பயன்பட வேண்டும். அத்தோடு மொழி இலக்கிய ஆய்வு நிறுவனமாக மட்டுமாக இல்லாமல் தமிழ் மக்கள் சார்ந்த சமூக, பண்பாட்டுத் தளங்களிலும் ஆய்வை மேம்படுத்தும் தமிழியல் நிறுவனமாக விளங்க வேண்டும் என்பதற்காக 1970 இல் திரு மு.கருணாநிதி முதல்வர் ஆன பின் செயல்படத் தொடங்கியது. ஆனால் விதையைப் போட்டவர் அண்ணா என்பதை அனைவரும் அறிவர்.

அண்ணா ஆரம்பித்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அடுத்த பத்தாண்டு களில் எந்தெந்தத் துறையில் சாதனைகளைச் செய்தது; எந்தெந்த இலக்கு களை எட்டியது; எந்தெந்தக் காரியங்கள் கைகூடாமல் போனது என்ற விசாரணைகளும் மறு மதிப்பீடுகளும் செய்யப்படாமலேயே அடுத்தொரு தமிழ் உயராய்வு நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது. தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொடக்க நோக்கம் இப்போது செயல்படுவது போல பட்டதாரிகளை உருவாக்குவது அல்ல. உலகத்தரமான ஆய்வுகளைச் செய்வதோடு தமிழ் மொழிக்கு உலகச் செல்வங்கள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்ப்பதே முதன்மை நோக்கமாக முன் வைக்கப்பட்டது. பொதுக் கலைக் களஞ்சியத்தையும், துறைசார் களஞ்சியங்களையும், அகராதிகளையும் உருவாக்கித் தொடர் தன்மையை உருவாக்கு வதோடு தமிழோடு தொடர்புடைய சீனம், ஜப்பான், மலாய், சிங்களம், ஆங்கிலம், லத்தீன், பர்மியன் மொழிகளைக் கற்ற அறிஞர்களை உருவாக்கி, அவற்றோடு தமிழுக்கு உள்ள தொடர்புகளையும் நேரடித் தரவுகளின் மூலம் ஆய்வு செய்வது அதன் முதன்மை நோக்கங்கள். அத்துடன் நிகழ்கால இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மாற்றும் நோக்கமும் அப்பல்கலைக் கழகத்தின் பணிகளாகத் திட்டமிடப்பட்டன. ஆனால் இந்த நோக்கங்களையும் பணிகளையும் நிறைவேற்றாமல் தமிழ்ப் பல்கலைக் கழகமும் அதன் துறைகளும் மற்ற பல்கலைக்கழகத்தமிழ்த் துறைகள் பட்டதாரிகளை உற்பத்தி செய்வதைப் போலப் பட்டதாரிகளை உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கின்றன. திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் ஆரம்பித்த பல்கலைக் கழகத்தை அடுத்த வந்த ஆட்சிகள் கவனிக்காமல் விட்ட நிலையில் எல்லாப் பல்கலைக்கழகங்களும் தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்கத் தொலைநெறிக் கல்வி இயக்ககத்தை ஆரம்பிப்பது போலத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் தொலைநெறிக் கல்வி இயக்ககத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. நல்லவேளை தஞ்சையில் இன்னொரு உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய செல்வி ஜெ.ஜெயலலிதா எந்தவொரு தமிழாய்வு நிறுவனத்தையும் தொடங்கவில்லை.

தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதோடு மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கமும் தொடங்கப்படும் எனவும் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அறிவித்தார். அவ்வறிவிப்பின் மாற்று தான் கோவை செம்மொழி மாநாட்டிற்குப் பின் உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம் என்ற கருணாநிதியின் அறிவிப்பு. ஏற்கெனவே இருப்பனவற்றையும் புதிதாகத் தொடங்குவனவற்றையும் தன்னுடையதாக ஆக்கும் கலையில் கைதேர்ந்த மு.கருணாநிதி பெயர் வைப்பது தொடங்கி எல்லாவற்றிலும் தன் கருத்தையும் தன் காரியத்தையும் முன்னிறுத்தித் தமிழுக்குத் தொண்டாற்றுபவர். தனக்கு மைய அரசில் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழ் அறிஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பணி அவரது ஆட்சி அதிகாரம் சார்ந்தது என்பதை உணராமல், எல்லாமும் தன்னால் நிகழ்ந்தது என நம்பத்தொடங்கி அவர் செய்த பல காரியங்கள் தமிழ் வளர்ச்சிக்கு எதிராகவே திரும்பியுள்ளன.

சமஸ்கிருதத்தைச் செவ்வியல் மொழியாக அறிவித்த பின் அதனை உயிர்ப்பிக்கும் அத்தனைத் தளங்களுக்கும் மத்திய அரசு தரும் நிதியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமது செம்மொழி நிறுவனமோ பண்டைத்தமிழ் ஆய்வுகளுக்கு மட்டுமே அந்நிதியைப் பயன் படுத்த வேண்டும் என வரையறையை உருவாக்கிக் கொண்டுள்ளது. கிளாசிக்கல் (Classical) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குச் செவ்வியல் என்னும் கருத்தியல் சார்ந்த சொல் ஏற்கெனவே இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளாமல் செம்மொழி நிறுவனம் எனப் பெயர் சூட்டியதோடு, அதன் ஆய்வு எல்லையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களான 42 –க்குள் முடக்கியதிலும் முன்னாள் முதல்வரின் பங்கு இருந்தது. அவ்வாறு வரையறை செய்த குழுவினர் தமிழின் நிகழ்காலத்தேவையை உணர்ந்த மொழியியல் அறிஞர்களோ, திறனாய்வாளர்களோ, பண்பாட்டு ஆய்வாளர்களோ அல்ல. முதல்வரின் முன் மொழிதலில் உருவான ஐம்பெருங்குழுவிலும் எண்பேராயத்திலும் இருந்த பழந்தமிழ் அறிஞர்கள் மட்டுமே. அக்குழுக்களில் இருந்த 13 பேரும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ஆற்றிய பங்கை மறுபரிசீலனை செய்யவில்லை. அக்குழுவின் உறுப்பினர்கள் மாற்றப் படக் கூடியவர்கள் என்பது போன்ற நம்பிக்கையைக் கூட உண்டாக்கவில்லை. அந்தப் பதின்மூன்று பேரும் அவர்களுக்கு வேண்டியவர்களை – ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களை- ஆய்வறிஞர் பணியில் சேர்த்து விட்டுச் செம்மொழி நிறுவனத்தை அகவை கூடியோர் அவையாக மாற்றி விட்டதுதான் இதுவரை நடந்துள்ளது. இக்கால இலக்கியங்கள், இலக்கியப் போக்குகள் பற்றியெல்லாம் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், கனிமொழியும் கூடக் கலைஞர் கருணாநிதியின் மனம் கோணக்கூடாது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அவர்களைப் போலவே சிறுபத்திரிகைகளோடு தொடர்பும் வாசிப்பும் வைத்திருந்த – இப்போது திரும்பவும் தொடங்கப்பட்டுள்ள கணையாழியின் ஆசிரியர் ம.ராசேந் திரனும் கூடத் தங்களின் எண்ணங்களைச் செயல்படுத்த நினைக்காமல் கலைஞர் மு.கருணாநிதியின் எண்ணங்களுக்கும் கருத்துருக்களுக்கும் வடிவம் கொடுக்கவே முயன்றனர். அதன் வெளிப்பாடுகளே ஜனநாயக நடைமுறைகளையும், சீரிய ஆய்வு மனப்பான்மைகளையும் புறமொதுக்கிய செம்மொழி மாநாடும், அதில் நடந்தேறிய வெற்றுக் கூக்குரல்களும் என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழ்ச் செவ்வியல் மொழி  நிறுவனத்தை முழுமையான இயக்குநரின் கீழ் செயல்படும் வாய்ப்பைத் தள்ளிப் போட்டதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதும் தெரியவில்லை. தொடர்ந்து பொறுப்பு அதிகாரி களைக் கொண்டும் பொறுப்பு இயக்குநரைக் கொண்டும் தனது பணிகளைச் செய்யும் அந்நிறுவனத்திற்குரிய இடத்தைக் கறாராக உறுதி செய்யாத நிலையில் அதன் நூலகத்தில் சேமிக்கப்பட்ட நூல்களும் ஆவணங்களும் பயனற்றுக் கிடக்கின்றன. பாலாறு இல்லத்தில் செயல்பட்ட நிறுவனச் செயல்பாடுகள் அந்தரத்தில் நிற்கின்றன. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழித்தமிழ் உயராய்வு நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகன் போன்றன இங்குள்ள பல்கலைக்கழகத்தமிழியல் துறையின் தலைவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்து இதுவரைத் தமிழில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளை மறுபரிசீலனை செய்யவும், இனிச் செய்ய வேண்டிய ஆய்வுகள் எவையெனத் திட்டமிடவும் கூட முயற்சி செய்யவில்லை. தமிழின் முக்கிய எழுத்தாளர்களோடு பல்கலைக்கழகங்களும் தமிழாய்வு நிறுவனங்களும் உறவை ஏற்படுத்தத் தடையாக இருக்கும் புள்ளிகள் எவை என்பதைக் கூட அவை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் பல்கலைக் கழகங்கள் ஆண்டுக்குச் சில நூறு ஆய்வுப்பட்டங்களைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

தமிழ் ஆய்வு நிறுவனங்களின் செயல்பாடுகள் தோற்ற இலக்குகளிலிருந்து நகர மறுக்கின்றன என்றால் மைய அரசின் மனிதவளம் மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் கலை பண்பாட்டுத்துறைகளும் திசைக்குழப்பத்திலேயே இருப்பதாக அண்டை மாநிலங்களில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமிழ் அறிஞர்களும் சொல்கிறார்கள். மைய அரசின் சாகித்ய, சங்கீத, லலித் கலா அகடெமிகளின் நிதியை பெறுவதில் அக்கறை காட்டாமலும், அதன் செயல்பாடுகளோடு ஒத்துப் போகாமலும் விலகிச் செல்லும் தமிழகக் கலை பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைகள் ஒவ்வோர் ஆண்டும் பரிசுகளை வழங்குவதன் வாயிலாகவும், மானியங்கள் தருவதன் மூலமாகவும் மட்டுமே தனது இருப்பைக் காட்டி வருகின்றன. ஆனால் அண்டை மாநிலங்களான கேரளத்திலும் கர்நாடகத்திலும் மைய அரசின் நிதியைப் பயன்படுத்தித் தங்கள் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்து கொண்ட திட்டங்களும் ஏற்பாடுகளும் நிரந்தரமான பலன்களைத் தந்து கொண்டிருக்கின்றன. ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் வாயிலாகக் கன்னடமும் மலையாளமும் தங்கள் மொழிக்குள் கொண்டு வந்தவை ஏராளம்; உலக மொழிகளுக்குள் கொண்டு சேர்த்தவையும் ஏராளம்.
இப்படியான பரிவர்த்தனைகள் தமிழில் நிகழ மறுப்பது ஏன் எனக் கேள்வி கேட்டுப் பின்னோக்கிப் பயணம் செய்தால் பல காரணங்கள் வரிசையில் நிற்கும். அவற்றுள் முதன்மையானதாகத் தோன்றுவது மொழிப்பற்று என்ற பெயரில் நாம் கடைப்பிடித்த மொழி வெறுப்பு என்பது புரிய வரலாம். தமிழ் வளர்ச்சிக்கு இந்திய மொழிகளும் உலக மொழிகளும் பயன்படும் என்பதை உணராமல் தமிழால் முடியும் என்னும் பரப்புரையை ஏற்றுத் தமிழை மட்டும் கற்ற தலைமுறையினர் இன்று தமிழ்த்துறைகளிலும் தமிழாய்வு நிறுவனங்களிலும் தலைமைப் பொறுப்பில் இருக்க நேரிட்டுள்ளது; நான் உட்பட.  உலகத்தின் சாளரமான ஆங்கிலத்தில் உரையாடவும் உறவாடவும் முடியாத இந்தத் தலைமுறை, அடுத்த தலைமுறைத் தமிழ் மாணாக்கர்களுக்குத் தமிழ் இலக்கியம் குறித்த முழுமையான அறிவைக் கூட வழங்காமல் கைகழுவிக் கொண்டிருக்கிறது.

நான்’நான் சுவரொட்டி’ ; நீ’நீ சுவரொட்டி’ - இந்தவசனம் ந.முத்துசாமியின் சுவரொட்டிகள் நாடகத்தில் வரும் வசனம். திரும்பத்திரும்ப அந்த வசனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் உச்சத்திலிருக்கும் விளம்பரப் பண்பாட்டின் அபத்தத்தைக் குறியீடாக்கிக் காட்டியிருப்பார். அந்த வசனம் அரசியல் சார்ந்த விளம்பரப் பண்பாட்டின் உச்சம் என்பதை ஒவ்வொரு துறையிலும் நடக்கும் நான் நீ என்ற இருமுனை எதிர்வுகளில் கண்டு களிக்கத் தயாராக இருக்கிறார்கள் தமிழர்கள். எதுவும் நடக்கவில்லையென்றாலும் தமிழ் வாழ்க எனச் சொல்லி முடிப்பது தானே நமது மரபு. அப்படியே இந்தக் கட்டுரையையும் சொல்லி முடிக்கலாம்.

தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்க!!
========================
ஜூன் , அம்ருதா 

கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழக அரசியல்வாதிகள் இதையெல்லாம் புரிந்து கொண்டு தான் பேசுகிறார்களா? என்று தெரியவில்லை. அவர்கள் வாழ வைக்கப் போவதாகச் சொல்லும் ’தமிழ்’ என்பது எது? அவர்கள் பேசும் அடுக்குமொழிப் பேச்சா?

என் கருத்து, தமிழக திராவிட கட்சி அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களால் (கா காளிமுத்து, வைகோ, விடுதலை விரும்பி, எல் கணேசன், கலைஞர்) கண்டிப்பாக பல இளைஞர்களுக்கு தமிழ் மீது ஆர்வம் வந்தது.

கல்லூரியில் ஆய்வு, செமினார் , வழக்காடு மன்றம் என்று தமிழ் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களின் அயர்ச்சி தரும் பேச்சுக்களை விட, தமிழக அரசியல்வாதிகளின் பங்கு அதிகம், நிறைவானதே .
அ.ராமசாமி இவ்வாறு கூறியுள்ளார்…
பேச்சுத்தமிழ் ஆர்வம் மட்டும் தமிழ் என நம்ப வைத்ததின் விளைவுகளைத் தான் கேள்விக்குள்ளாக்கிட வேண்டியுள்ளது
அ.ரா
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஐயா வணக்கம்

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html

நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்