June 30, 2011

அரபு நாட்டில் முதல் இரவு


பொதுவாக விமான நிலையங்கள் நகர எல்லையிலிருந்து பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலேயே அமைக்கப்படுகின்றன. நான் முதன் முதலில் பார்த்த விமான நிலையம் மதுரை விமான நிலையம் தான். மதுரை நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அவனியாபுரம் என்னும் சிற்றூருக்கு அருகில் இருந்தது.
பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிற்குப் பிறகு கல்லூரிகளைத் தேடி அலைந்த போது அவனியாபுரத்தில் இருந்த சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கலாம் என விரும்பி விண்ணப்பம் வாங்கச் சென்றேன். அந்தக் கல்லூரிக்கு அவனியாபுரத்தில் இறங்கி நடந்து தான் போக வேண்டும். அப்படிப் போகும் போது விமான நிலையம் பார்வையில் படும் தூரம் தான். ஒரேயொரு விமானம் நின்றிருந்தது. விண்ணப்பம் வாங்கி நிரப்பிக் கல்லூரி அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது பெருஞ்சப்தத்துடன் அந்த விமானம் மேலெழும்பிச் சென்றது.  வெள்ளியாலான பெருங்கொக்கொன்று இறக்கைகளை ஆட்டாமல் மேல் எழுப்பிய அந்தக் காட்சியை தம்மாம் விமான நிலையத்தை விட்டுக் காரில் கிளம்பிய போது நினைத்துக் கொண்டேன்.
என்னை அழைத்துச் செல்ல வந்திருந்த இஸ்மாயில் கொட்டில் காரை கிளப்புப் போது ஒரு விமானம் விசுக்கென்று கிளம்பி மேலே போன போது விமானம் தெரியவில்லை. விளக்குகள் அணைந்து பற்றுவதன் மூலம்  அதன் கணபரிமாணங்களை உணர முடிந்தது. பத்து நிமிட இடைவெளிக்குப் பின் இன்னொரு விமானம் கிளம்பியது. சர்வதேச விமான நிலையங்களிலிருந்து இரவு நேரங்களில் கிளம்பும் விமானங்களில் எண்ணிக்கை அதிகம் எனக் காரை ஓட்டிக் கொண்டே இஸ்மாயில் சொன்னார். இடையிடையே தொலைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார். ஓட்டுநர் இருக்கை காரின் இடதுபுறம் இருப்பதை அப்போது தான் கவனித்தேன். எல்லாக் கார்களிலும் இடது புறம் தான் இருக்குமாம். வலதுகை ஓட்டுதல் அங்கு கிடையாது. இடது கைத் திருப்பம் தான் அங்கு. அகலமான சாலைகளில் கார் மெதுவாகச் செல்ல முடியாது என்றார்.
ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதே மலையாளத்திற்கு மாறினார். அந்தப் பேச்சு முடியுமுன்பே இன்னொரு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் அதை எடுத்து அரபியில் பேசினார். அதிலிருந்து கொஞ்சம் விலகி இந்திக்கு மாறினார். என்னிடம் மலையாளம் கலந்த தமிழில் பேசினார். அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை. அரபு நாடுகளில் வேலை தேடிப் போய் இருபது வருடங்களுக்கும் மேல் இருக்கும் என்றார். முதலில் சென்றது துபாய்க்கு. அங்கிருந்து குவைத், சவுதி அரேபியா என மாறிமாறிப் பல இடங்களில் வேலை செய்திருக்கிறார். கார் ஓட்டுவதில் அவர் ரொம்பவும் கெட்டிக்காரர் என்பது தெரிந்தது. ஜவுளி வியாபாரம், குழந்தைகளுக்கான பொம்மைகள் விற்பது எனத் தொடங்கி இப்போது டிராவல் ஏஜென்சியின் தம்மாம் கிளையின் மேனேஜராக இருக்கிறார். நான் பார்வையிடச் சென்றுள்ள கல்வி நிறுவனத்தை நடத்துபவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். ஆனால் அரபு நாடுகள் பலவற்றில் வியாபார ரீதியான தொடர்புகளையும் சொந்த வீடுகளையும் வைத்திருக்கும் பெரும் பணக்காரர் என்றார். எனக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஓய்வெடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் பணியை அவரிடம் ஒப்படைத்து இருப்பதாகச் சொன்னார்.
தம்மாம் நகரின் நட்சத்திர விடுதிகளில் ஒன்றான பார்க் இன் விடுதியில் தங்க வைக்கப்பட்டேன். உள்ளே நுழைந்த போது நல்ல குளிராக இருந்தது. எனக்காக அறையை உறுதி செய்து விட்டு விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறினார். காலையில் விடுதியில் உணவு உண்டு விட்டுப் பகலிலும் ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு மூன்று நாளின் திட்டங்களைக் கேட்டார். முதல் நாள் தம்மாமில் அவர்கள் தொடங்க உள்ள மையத்தையும் அதற்கான வசதிகளையும் பார்வையிட வேண்டும். முடிந்தால் அன்றிரவு அந்த நகரின் வீதிகளைக் காரில் சென்று பார்க்கலாம் . இரண்டாவது நாளில் இன்னொரு மையமான ரியாத் செல்ல வேண்டும். அங்கும் இதே போல் பார்த்துவிட்டு மையங்களின் ஒருங்கிணைப்பாளருடன் பேச வேண்டும். அவர்களது ஏற்பாடுகளையும் மாணாக்கர்களின் சேர்க்கை வாய்ப்புகளையும் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும்.  அன்றிரவு அங்கேயே தங்கலாம்; அல்லது திரும்பலாம். மூன்றாவது நாள் ஊர் சுற்றிப் பார்க்கலாம். விலை குறைவாகவும், இந்த நாட்டில் கிடைக்கக் கூடிய சிறப்பான பொருட்கள் இருந்தால் வாங்கலாம் என எனது திட்டங்களைச் சொன்னேன். சரி இரவு நல்லிரவாக ஆகட்டும் எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார்.
வழக்கமாகக் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவது எனது பழக்கம். தூங்க ஆரம்பித்தால் ஆறு மணி நேரத்துக்குமேல் என்னுடம்பு தூங்காது. ஏற்கெனவே விமானத்தில் மூன்று மணி நேரம் தூங்கிய உடம்பு கொஞ்சம் குழம்பி விட்டது என்றே நினைக்கிறேன். அறையில் படுத்தேன். உடனே தூக்கம் வரவில்லை. அங்கே இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் என்னென்ன அலைவரிசைகள் வருகின்றன எனத் தேடினேன். பெரும்பாலான அலைவரிசைகளில் அரபியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அரேபியாவில் தேசிய ஆடையான முழு வெள்ளைக் குர்தாவும் தலைப்பாகையுமாக ஆண்கள் மட்டுமே அலுங்காமல் குலுங்காமல் நின்று பேசினார்கள். தொடர்ந்து அரை மணிநேரம் தேடியும் ஆட்டம் பாட்டு என எந்த ஒரு அலைவரிசையிலும் பார்க்க முடியவில்லை. சர்வதேசச் செய்தி அலைவரிசைகளில் பி.பி.சி. மட்டும் இருந்தது. அதிலும் கீழே அரபி எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தன. கணிணியைத் திறந்து இணையத்தைத் தொடர்பு கொள்ள விரும்பினேன். ஆனால் அதற்கான வசதி எந்த இடத்தில் இருக்கிறது என்று அந்த நேரத்தில் கேட்க முடியாது. கணிணியின் சேமிப்பில் இருக்கும் ஸ்பைடர் சாலிடர் என்ற சீட்டு விளையாட்டை விளையாடிய போது கண்கள் களைப்படைந்தன. நிறுத்தி விட்டுத் தூங்கி விட்டேன். காலையில் கண் விழித்த போது கால எட்டு மணி எனத் திருப்பி வைக்கப்பட்ட கடிகாரம் காட்டியது.
காலையில் பருகுவதற்கான தேநீர், காபி போன்றவற்றை அறையிலேயே தயார் செய்து கொள்ளும் விதமாகப் பால், சர்க்கரை, பொடி, வெந்நீர் வைக்கும் மின்சார அடுப்பு வசதி என அனைத்தும் அறையின் ஒரு மூளையில் இருந்தது. தேநீர் தயாரித்துக் கொண்டு திரைச்சீலையை விளக்கிய போது ஜன்னல் வழியாக வெளிச்சம் பரவியது. கறுப்புக் கண்ணாடி வழியே சூரியக்கதிர்கள் நுழையவில்லை என்றாலும் நிழலற்ற வெளிச்சம் கசகசப்பை உணரச் செய்தது. இரவில் அதிகப்படுத்தியிருந்த அறையின் வெப்ப அளவைக் குறைக்கத் தோன்றவில்லை. தம்மாம் நகரத்தின் நீண்டதொரு தெரு வளைவின்றி ஓடியது. தொடர்ச்சியாகச் செல்லும் வாகனங்களையே பெருநகரங்களில் பார்த்துப் பழகிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்போதாவது ஒரு கார் வேகமாகச் சென்றது. இரு சக்கர வாகனங்களே கண்ணில் தட்டுப் படவில்லை. பேருந்துகளின் ஓசையும் அசைவும் இல்லை. கல்வி நிறுவனங்களின் சீராடைகள் அணிந்து வரும் பிள்ளைகளைத் தேடினேன். அவசரம் அவசரமாக ஆட்டோவிலும் சைக்கிள் ரிக்சாவிலும் திணிக்கப்பட்டு நசுங்கிச் செல்லும் பள்ளிப் பிள்ளைகளைக் காலையில் எட்டு மணிக்குத் தமிழ்நாட்டின் எல்லாச் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் பார்த்துப் பழகிய எனது கண்கள் தேடிப் பார்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஒருவேளை பள்ளிகள் அதிகாலையிலேயே தொடங்கியிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டேன்.
வளைகுடா நாடுகளுக்கும் கேரளத்திற்கும் உள்ள தொடர்பு எல்லோருக்கும் தெரிந்தது. துபாய், பஹைரன், மஸ்கட், ஈரான், ஈராக், சவுதி அரேபியா என எல்லா நாடுகளிலும் அவற்றின் முக்கிய நகரங்களில் கேரளத்தின் மலையாள வாசனை வீசிக்கொண்டே இருக்குமாம். நான் போன சவுதி அரேபியாவிலும் அதே வாசனைதான்.  திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்கோடியில் இருப்பதால் வளைகுடா நாடுகளுக்கு இந்தப் பல்கலைக்கழகம் கொஞ்சம் அருகில் இருப்பது போலத் தோன்றுகிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டின் மற்ற பல்கலைக்கழகங்களை விடவும் அதிகமான கேரள மாணாக்கர்களைக் கவரும் பல்கலைக்கழகமாகவும் எமது பல்கலைக்கழகம் தான் இருக்கிறது. அதிகமான படித்தவர்கள் இருக்கும் கேரளத்தில் உயர்கல்வியைத் தரும் நிறுவனங்கள் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், தொழில் நுட்பம் போன்றவற்றில் உயர்கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்களின் போதாமையையும் கேரள மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டக் கல்லூரிகளில் ஆண்களும் பெண்களுமாக மலையாளக்குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். அரசியலை ஆணையில் வைப்போம் எனச் செயல்படும் இடதுசாரிச் சித்தாந்தம் தலைவிரித்தாடும் கேரளத்தில் அரசியலைத் தவிர்க்கப் பார்க்கும் தொழில் கல்வி வாய்ப்பை உருவாக்காமல் தவிர்க்கிறார்கள் என நினைக்கிறேன். அரசு தரும் கல்வியைப் படிக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படும் கேரள மாணாக்கர்கள் தொழில் கல்விக்காக அண்டை மாநிலங்களுக்கு வருகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டில் தனியார் தொடங்கியுள்ள பொறியியல் கல்லூரிகளும் பாண்டிச்சேரியின் மருத்துவக்கல்லூரிகளும் கேரள மாணாக்கர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பவை என்றால் மிகையல்ல. கேரளத்தைப் போலவே கேரளத்தோடு தொடர்புடைய அரபு நாடுகளும் கல்வி வாய்ப்புகளைக் குறைவாகவே கொண்டுள்ளன. அதிலும் கல்லூரிக் கல்வியைக் கொடுப்பதில் இவ்வளவு காலமும் தீவிர அக்கறைகளைக் காட்டியவை அல்ல.
ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளின் இசுலாமிய அரசுகள் தொடர்ந்து உள்நாட்டு நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் பின்னணியில் உயர்கல்வி வாய்ப்புகள் இல்லாமையும் ஒரு காரணம் தான். பெட்ரோலியம் சார்ந்த பொருளாதார பலத்தை மட்டும் நம்பியிருக்கும் அரபி நாடுகள் வளம் கொழிப்பதாகப் பலரும் நம்புகின்றோம். ஆனால் அந்நாடுகளின் அனைத்து மக்களும் வளம் கொழிக்க வாழ்கிறார்களா? என்றால் இல்லை. அரசாங்கத்தோடு நேரடித்தொடர்பும், அதிகாரத்தொடர்பும் கொண்ட குடும்பங்களும் அதன் உறுப்பினர்களும் மட்டுமே வளமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதற்கடுத்து மேற்கத்திய நாடுகளின் பன்னாட்டு குழுமங்களில் பணியாற்றும் பன்னாட்டு மக்களும் நகரங்களில் வளமாக வாழ்கிறார்கள். ஆனால் அந்நாடுகளின் பூர்வகுடிகள் எப்படி வாழ்கிறார்கள் என்ற கேள்வி கூட வெளியே தெரியாமல் அடக்கப்படுவதுதான் உண்மை .
பார்க் இன்னில் காலை உணவாகப் பல நாட்டு உணவுப் பொருட்கள் இருந்தன. கோதுமை ரொட்டி, முட்டை,  முந்திரி, காரட், தேநீர் என எடுத்துக் கொண்டு தோட்டம் போல நீளும் அதன் வெளியில் அமர்ந்து தனியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். தொலைபேசியில் இஸ்மாயில் அழைத்து காலை உணவு முடிந்ததா? எனக் கேட்டார். பிற்பகல் நாலு மணிக்கு வந்து அழைத்துச் செல்வதாகவும் மதிய உணவை அறைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளதாகவும் சொன்னார். நாலு மணியிலிருந்து இரவு 11 மணி வரை வெளியில் தான் இருப்போம் என்பதையும் சொன்னார். பொதுவாகத் தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ ஆரம்பிக்கப்படும் கல்வி மையங்களைப் பார்வையிட ஆகும் நேரம் ஒரு மணி நேரம் தான். வகுப்பறை வசதி, சோதனைச்சாலை வசதி, கழிப்பறை மற்றும் ஓய்வறைகள், அலுவலகம்,  ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் தகுதிக்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அதற்கான ஆதாரங்களையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து விடுவோம். அந்த மையம் இருக்குமிடம் ஆரம்பிக்கப்போகும் அமைப்பிற்கு அல்லது அறக்கட்டளைக்குச் சொந்தமா என்பதைப் பத்திரங்களின் வழியாகப் பார்த்து முடிவு செய்வோம். இதையெல்லாம் முன்பே தயாராக வைத்திருப்பார்கள். போனவுடன் அவர்கள் தரும் தேநீரைப் பருகி விட்டு, அவர்கள் தரும் காகிதங்களின் உண்மைத்தன்மையைச் சோதனை செய்து பார்ப்பது முக்கியமான ஒன்று. அவற்றை வாங்கி வந்து அறிக்கை தருவது நடைமுறையில் இருக்கும் வேலை தான். ஆனால் வெளிநாட்டில் அதுவும் அனைத்துச் சான்றுகளும் ஆங்கிலத்தில் இல்லாமல் அரபி மொழியில் எழுதப்பட்டிருக்கும் நிலையில் எனது வேலை கொஞ்சம் கடினமானது


அன்று நான்கு மணிக்கு இஸ்மாயிலுடன்  கிளம்பி தம்மம் நகரத்தின் மையத்தில் இருந்த கம்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பக்கத்தில் இருந்த நீளமான அறைகளில் தான் ஆரம்பிக்கப் போகும் கல்வி மையத்தின் பணிகள் நடக்கும் எனக் காட்டினார்.

1 comment :

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லாருக்கு சார், தொடர்ந்து எழுதுங்க! வெர்ட் வெரிஃபிகேசனை எடுத்துடுங்களேன்!