May 27, 2011

காற்றில் மிதக்கும் கனவு


2011 மே, ஏழாம் தேதி திருவனந்தபுரத்தில் விமான நிலையத்திற்குள் நுழைந்த போது அயல் தேசப் பயணம் செல்வது இது முதல் முறை என்பதை நினைத்தவுடன் கூச்சமாக இருந்தது. 52 வயதுவரை விமானம் ஏறாத பேராசிரியராக இருந்து விட்டோமே என்ற நினைப்பு கவலையாக இல்லை என்றாலும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஜெட் ஏர்லைன்ஸில் ஒரு பயணிக்கு அனுமதிக்கும் 30 கிலோ எடை அளவு கூட என்னிடம் இல்லை.
பயண ஆடையாக ஆறு பைகள் வைத்த பேண்ட்டும் டீ சர்ட்டும் அணிவது அண்மைக்கால வழக்கமாக ஆகி விட்டது. பயண வாகனத்தில் தூங்க நேரும் போது பணம் இருக்கும் பை, அலைபேசி, சாவி, கடிகாரம் என ஒவ்வொன்றையும் ஒரு பையில் போட்டு மூடி விடலாம். கீழே விழாது என்ற நம்பிக்கையில் நிம்மதியாகத் தூங்கலாம். ரயிலில் படுத்துக் கொண்டு செல்வது போல விமானத்தில் வசதிகள் இருக்காது என்பது தெரியும். சாய்ந்து உட்கார்ந்து தூங்க வேண்டும். நான்கு நாட்கள் சவுதியில் இருக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு நாளும் அணிய உள்ளாடைகள் எடுத்துக்கொண்டேன். ஆனால் இரண்டு கால்சட்டைகள் மூன்று சட்டைகள், ஒரு வேட்டி என ஆடைகள் பெட்டியில் இருந்தது. பெட்டிக்குள் இருந்ததில் எடையுள்ள ஒரே பொருள் மடிக்கணினி மட்டும் தான். அதன் துணைக் கருவிகளோடு சேர்த்து மூன்றரைக் கிலோவாவது இருக்கும்.
என்னை வழியனுப்ப ஒருவரும் வரவில்லை. சக்கரங்கள் பொருத்திய் பெட்டியை இழுத்துக் கொண்டு விசாவைச் சரி பார்க்கும் வரிசையில் நின்றேன். மூன்று நிமிடத்தில் சரி பார்த்து விட்டு உள்ளே அனுப்பி விட்டார்கள். அடுத்து விமானத்தில் உட்காரும் இடத்தைக் குறிப்பிட்டு டிக்கெட் பெற வேண்டும். நான் செல்லும் போயிங்-737, ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குப் போர்டிங் டிக்கெட்  தர மூன்று வரிசைகள் இருந்தன. வெளிநாட்டுப் பயணிகளுக்கான வரிசையில் நிற்பவர்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தனர். இந்தியக் குடிமக்களுக்கு இரண்டு வரிசைகள். நான் நின்ற வரிசைக்கு புன்சிரிப்பைத் தவற விடாத பெண்ணொருத்தி பொறுப்பாக இருந்தாள். எனது பாஸ்போர்ட்டைப் பார்த்து விட்டு என்ன வேலையாகப் போகிறீர்கள் என்று கேட்டாள். அவள் ஆங்கிலத்தில் கேட்டது மலையாளத்தில் கேட்பது போல இருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர் நான். எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பில் சவுதியில் ஆரம்பிக்கப்பட உள்ள கல்வி மையத்தை பார்வையிடச் செல்கிறேன் என நான் ஆங்கிலத்தில் சொன்னது தமிழில் சொல்வது போலத் தோன்றியிருக்க வேண்டும். உங்களுக்கு முதல் வரிசையில் இருக்கை தந்துள்ளேன் எனச் சொல்லி விட்டுச் சிரித்தாள். நன்றி சொல்லி விட்டு வரிசையிலிருந்து விலகிப் போய் பயணிகள் அமரும் இடத்தில் அமர்ந்து விட நினைத்தேன். ஆனால் அங்கிருந்த கடைகளை பார்க்க வேண்டும் எனத் தோன்றியதால் ஒவ்வொரு கடையாகச் சென்று பார்த்து விட்டுத் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது நான் செல்ல வேண்டிய விமானம் தயாராக இருப்பதாகவும் நான்காவது வாசல் வழியாகப் போனால் போய் அமர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு செய்தார்கள். அறிவிப்பைக் கேட்டுத் திரும்பிய போது எனக்கு முதல்வரிசையில்  இருக்கை தந்திருப்பதாகச் சொன்ன பெண் என் முன்னே வந்து கொண்டிருந்தாள். பயணிகள் அனைவருக்கும் இருக்கை ஒதுக்கும் பணி முடிந்து விட்டதால் ஓய்வுக்காக உள்ளே வந்திருக்க வேண்டும். இப்போது அவளைப் பார்த்து நான் சிரித்தேன். அறிவிப்பில் சொல்லப்பட்ட நான்காவது வாசல் இருக்கும் திசையைக் காட்டி விட்டுத் திரும்பவும் சிரித்து விட்டுப் போனாள். இந்தப் பெண் நான் செல்லும் விமானத்திலும் வரக்கூடும் என நினைத்துக் கொண்டேன். வந்தால் திரும்பத் திரும்பச் சிரிக்க வேண்டியதிருக்கும் எனவும் நினைத்துக் கொண்டேன்.
விமானத்திற்குச் செல்லும் பாதை இரண்டு மூன்று திருப்பங்களுடன் வளைந்து வளைந்து சென்றது. குகைப் பயணம் போல சென்ற பாதையின் முடிவில் காத்திருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் விமானத்தின் வாசலில் இறக்கி விட்டது. இரவு நேரம் என்பதால் எங்கும் விளக்கு வெளிச்சம் தான். பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் நின்றிருந்தன. போயிங்-737, ஜெட் ஏர்வேஸ் விமானமே இன்னொன்றும் நின்று கொண்டிருந்தது.  விமானத்திற்குள் நுழையும் போது நல்ல உயரத்துடன் கறுப்பு ஆடை அணிந்த பெண்ணொருத்தியும் ஆணொருவரும் வரவேற்று அனுப்பினார்கள். எகானமிப் பிரிவில் எனக்கான இருக்கை முதல் வரிசையில் இருந்தது. என்னருகில் கைக்குழந்தை சகிதமாகக் கணவன் –மனைவி வந்து அமர்ந்தனர். அவர்கள் ஏற்கெனவே பல தடவை விமானத்தில் பயணம் செய்தவர்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளின் மூலம் அறிந்து கொண்டேன். காதை அடைக்கும் வேலையை எல்லாம் செய்யவில்லை. இடுப்பு பெல்டைக் கூட எச்சரிக்கையுடனும் போட்டுக் கொள்ளவில்லை. இருக்கமின்றி போட்டுக் கொண்டு முன்னாள் இருக்கும் சின்னத் தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இரவு 8.20 –க்குக் கிளம்ப வேண்டிய விமானம், பயணிகள் அனைவரும் வந்து அமர்ந்து விட்டதால் பத்து நிமிடம் முன்னதாகவே நகர ஆரம்பித்து விட்டது. ஒருவேளை தரையிலிருந்து ஆகாயத்தில் ஏறும் நேரம் தான் 8.20 எனக் குறிக்கப்பட்டிருந்ததோ என்னவோ, பத்து நிமிட நேரம் விமான நிலையத்தில் சுற்றி விட்டு ஒரு குலுங்குக் குலுங்கி காற்றில் நுழைந்து விட்டது.  விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது; எந்தத்திசையில் போகும் என்பதைக் காட்டும் விவரங்களைத் தொலைக்காட்சியில் வரவைத்துப் பார்த்துக் கொண்டே சென்ற நான் திரும்பிப் பார்த்தேன். பலரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். எனக்குத் தூக்கமே வரவில்லை.
பள்ளிப் பருவவயதில் வயசாகிப் படுக்கையில் கிடந்த ஒரு தாத்தாவுக்குச் சக்கரவர்த்தித் திருமகனைப் படித்துக் காட்டிய போது விமானத்தில் பறப்பதை நான் கற்பனை செய்திருக்கிறேன். மாரீசனை மானாக ஓட வைத்து  ஜானகியின் ஆசையைத் தூண்டிய ராவணன், லட்சுமணனை அப்புறப்படுத்தி விட்டு அப்படியே தரையோடு பெயர்த்து ஆகாயமார்க்கமாகப் போனான் என்று படித்த போது ஆகாய மார்க்கமாகப் பயணம் செய்வது பற்றிய கற்பனை மட்டுமல்ல, ஜடாயுவோடு போட்ட சண்டையையும் கூட எனக்கு உண்மையாக்கிக் காட்டியவை தமிழ்ச் சினிமாக்கள் தான். புராணப் படங்களில் இடம் பெறும் ஆகாய மார்க்கப் பயணங்கள் போன்றதே ஜெட் ஏர்வேஸ் பயணம் என்று சொன்னால் நீங்கள் சிரிக்கக் கூடும். கற்பனையும் யதார்த்தமும் எப்போதும் ஒன்றாகக் கலந்து விடுவதில்லை தானே?
நானும் தொலைக்காட்சியில் தேடிய போது வட்டாரமொழிப் படங்கள் என்ற வரிசையில் இரண்டு மலையாளப்படங்கள், ஒரு கன்னடப்படம், இரண்டு தமிழ்ப்படங்கள் பட்டியலில் இருந்தன. தமிழில் பாஸ் என்ற பாஸ்கரனும் கனிமொழியும் இருந்தன. இரண்டு படங்களும் நான் பார்க்காத படம் தான். பாஸ்(எ) பாஸ்கரன் படத்தைப் பார்ப்பது என்று முடிவு செய்து பார்க்கத் தொடங்கினேன். படம் முடியும் போது நள்ளிரவு 12.00 என எனது கடிகாரம் நேரம் காட்டியது. அது இந்திய நேரம். இன்னும் ஒரு மணிநேரத்தில் சவுதி அரேபியாவின் தம்மாம் நகரத்தின் அரசர் ஃபக்ருத் சர்வதேச விமான நிலையத்தில் நான் இறங்கி விடுவேன் என நினைத்துக் கொண்ட போது கண் இமைகள் சொக்கின.
விமானத்திலிருந்த ஒலிபெருக்கி மெதுவாக அறிவிப்புக்களைத் தொடங்கியது. வெளியே வெப்பத்தின் அளவு சொல்லப்பட்டது. நேரம் இரவு 10.50 எனச் சொன்ன குரல், அது அரேபிய நேரம் எனச் சொல்லி விட்டு உங்கள் கடிகாரங்களை அதற்கேற்பத் திருப்பி வைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டது. அனைவரும் திரும்பவும் இடுப்புப் பெல்டுகளை அணியத்தொடங்கினார்கள். குலுங்கலுடன் நின்ற விமானத்திலிருந்து வெளியே வந்து தம்மாம் விமான நிலையத்தைப் பார்க்க நினைத்த எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. விமானத்தின் வாசல் நேரடியாக நடைபாதையுடன் இணைக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்தின் தரையில் நிற்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. விமானத்திலிருந்து இறங்கிவிட்டாலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வர ஒன்றரை மணி நேரம் ஆகி விட்டது. புதிதாக அரேபியாவிற்குள் நுழையும் நபர்களைத் தனியாக வரிசைப்படுத்தி விசா விவரங்களைச் சரி பார்ப்பதுடன் கடுமையான சோதனைகளைச் செய்கிறார்கள். கை ரேகைகள், முகம், கண்கள் எனத் தனித்தனியாகவும் முழு உடம்பாகவும் படம் எடுத்துப் பதிவு செய்து விட்டுத்தான் அனுப்புகிறார்கள். நீண்ட வரிசை மெதுவாக நகர நகர மனம் பலவற்றை நினைக்கத்தூண்டியது.
நான் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே சவுதியில் பயன்படுமாறு ஒரு சிம்கார்டு வாங்கி எனது அலைபேசியில் போட்டுக் கொண்டு வராமல் விட்ட தவறு காரணமாக எனது பயம் கூடிக் கொண்டே இருந்தது. என்னைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய இஸ்மாயில் கொட்டில் வரவில்லையென்றால் என்ன செய்வது என்ற கவலை தான் பயம் தோன்றக் காரணம். இஸ்மாயில் கொட்டில் கேரளத்திலிருந்து போன மலையாளி தான் என்றாலும் அவரைப் பார்ப்பது வரை பதற்றம் தான். ஒரு வழியாக எல்லாச் சோதனைகளும் முடிந்து வெளியே வந்தேன். ஆங்கிலத்திலும் அரபியிலும் பெயர்கள் எழுதிய அட்டைகளுடன் நின்றவர்களை வரிசையாகக் கடந்து சென்றேன். எந்த அட்டையிலும் எனது பெயர் இல்லை. நினைத்தது போலவே இஸ்மாயில் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு திகைத்து நின்றேன்.  எனது பெயர் எழுதி வரவேற்கும் அட்டையைத் தாங்கும் மனித அப்போதே தோன்ற ஆரம்பித்து விட்டது. என்னுடைய புகைப்படம் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவரது புகைப்படம் என்னிடம் இல்லை. அவரைத் தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியாது. நான் வைத்திருக்கும் தொலைபேசியில் அந்த வசதியை உருவாக்கிக் கொள்ளாமல் வந்து விட்டேன்.
விமான நிலையக் கழிப்பறைக்குப் போய்விட்டு வந்து நம்மூர் எஸ்டிடி பூத் போல எதாவது இருந்தால் , அதன் மூலம் இஸ்மாயிலைத் தொடர்பு கொள்ளலாம் என்றால் என்னிடம் அரேபியப் பணம் இல்லை. ’அதெல்லாம் எதுவும் வேண்டாம்; நீங்கள் வந்து இறங்கி விடுங்கள்; இறங்கியது முதல் திரும்பவும் விமானம் ஏறும் வரை உங்களைக் கவனித்துக் கொள்வது எங்கள் பொறுப்பு என அவர்கள் தந்திருந்த உத்தரவாதத்தின் பேரில் போய் இறங்கியது எவ்வளவு தவறு என அப்போது உணர்ந்தேன். கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து யோசித்தபோது மடிக்கணினி கையில் இருப்பது நினைவுக்கு வந்தது. பொதுவாக விமான நிலையங்களில் இண்டர்நெட் வசதி இருக்கும் என்பதால், சவுதியில் கல்வி மையம் தொடங்கும் சொயப் அலிக்கு இணையம் வழியாகத் தகவல் தெரிவிக்கலாம் என்று தோன்றியது. எனது மடிக்கணிணியில் அஞ்சல் பெட்டியைத் திறக்கும் போதெல்லாம் சொயப் அலி தொடர்பிலேயே இருப்பார் என்பதால் அந்த முயற்சிக்காகப் பெட்டியைத் திறந்து மடிக்கணிணியை மடியில் வைத்தேன். அதற்குள் அந்தக் குரல் மலையாள வாடையோடு கூடிய ஆங்கிலத்தில் என்னைத் திருப்பியது. உள்ளே ஜெட் ஏர்வேஸில் இறங்கியவர்கள் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டது. இருக்க மாட்டார்கள். ஏனென்றால் நான் வந்த பிறகு இரண்டு பேர் இருந்தார்கள்; அவர்களும் வந்திருப்பார்கள் என்றேன். எனது பேச்சை வைத்து நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளீர்களா? என்று நேரடியாக மலையாளத்தில் கேட்டார். நானும் மலையாளத்தில் ஒம் என்றேன். அவர் தேடி வந்த ஆள் ராமசாமி நான் தான் என்றான போது அவருக்கு என்ன உணர்வு இருந்ததோ தெரியாது. எனக்கு எல்லாக் கவலைகளும் ஓடிப் போய்விட்டது. 

2 comments :

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
ராம்ஜி_யாஹூ said...

சார் நல்ல கட்டுரை. ஆனால் பன்னாட்டு சிம் கார்ட் கொண்டு செல்ல வில்லை, ஒருவேளை வரவேற்கும் நபர வரத் தவறினால் மாற்று வழி என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமலா ஒரு பேராசிரியர் சென்று இருப்பார்.
சற்று செயற்கையாக இருக்கிறது கட்டுரை. ஒரு வேளை விகடன், குமுதத்தில் தொடராக வரப் போகிறதோ. அவ்வாசகரகளைக் குறி வைத்து எழுதி இருந்தால் சரி