தொலைநெறிக் கல்வி என்னும் மாய யதார்த்தம்


இந்தப் பயணம் 2010 டிசம்பரிலேயே போய் வந்திருக்க வேண்டிய பயணம். நிர்வாகக் காரணங்களாலும் சொந்தக் காரணங்களாலும் ஆறு மாதத்திற்குப் பின் இப்போதுதான் வாய்த்தது. மே 7 இல் விமானம் ஏறி, மே 11 இல் திரும்பி வந்து விட்டேன். அங்கே இருந்த நாட்கள் சரியாக நான்கு நாட்கள் தான். நான்கு நாட்களும் பணி சார்ந்த பயணம் தான்.


பல்கலைக்கழகங்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புக்களைத் தேட வேண்டும் என மத்திய அரசின் கல்வி அமைச்சர் கபில்சிபல் ஆற்றிய உரையைத் தொடர்ந்தே எமது பல்கலைக்கழகத்தின் தொலைநெறிக் கல்வி இயக்ககம் அயல் தேசங்களிலும் அயல் மாநிலங்களிலும் படிப்பு மையங்கள் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.  அம்முயற்சியின் ஒரு பகுதியாகவே எனக்குச் சவுதி அரேபியா சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது.
1970 -களின் இறுதியில் பல்கலைக்கழகங்களில் தொடங்கப் பட்ட அஞ்சல் வழிக்கல்விமுறைக்குக் குறிப்பான ஒரு நோக்கம் இருந்தது. முறையான கல்லூரிக் கல்வி வாய்ப்புகள் கிடைக்காதவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகத் தொடங்கப்பட்ட முறையே அஞ்சல் வழிக் கல்வி. ஏற்கெனவே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பணி மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட அஞ்சல் வழிக்கல்வி பின்னர் பல பரிமாணங்களை அடைந்து பின்னர் தொலைநிலைக்கல்வி என்ற வடிவத்திற்கு மாறியது. அடுத்த கட்டமாக திறந்த நிலைப் படிப்புகள் , இணைய வழிக் கல்வி எனப் பல பரிமாணங்களை அடைந்து கொண்டிருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் இயங்கும் இந்தியத் தொழில் நுட்பக்கழகம், இந்தியப் பொருளாதாரக் கல்வி மையம், இந்திய நிர்வாகவியல் கல்வி மையம் , பெருநகரங்களில் இயங்கும் வளர்ச்சி சார் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிற்குத் தேவைக்கதிகமான பண உதவி செய்கிறது மைய அரசு. அதனைப் போலவே மையப் பல்கலைக்கழகங்களுக்கும் நிதி உதவிக்குப் பஞ்சமில்லை. ஆனால் மாநிலப் பல்கலைக்கழகங்களைப் பார்த்து உங்கள் நிதி ஆதாரங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றன. பாண்டிச்சேரியில் இயங்கும் மையப்பல்கலைக்கழகத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிதியின் அளவுக்குக் கூட தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சேர்த்து வழங்கப்படவில்லை. மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி எனச் சொல்லி வெற்றுக் கூக்குரல்களைக் கொள்கைகளாகப் பேசும் நமது அரசியல் கட்சிகள் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை.

நாட்டில் நிலவும் பொருளாதார வேறுபாடுகளின் இருப்புக்கேற்பவே கல்வி நிறுவனங்களும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரமும் இருக்கின்றன. ஆனால் ஏதோ எல்லா நிலையிலும் ஒரே மாதிரியான கல்வி வழங்கப்படும் நிலை இருப்பது போல அறிக்கைகளை மட்டும் விடுகின்றனர். பொதுப் பல்கலைக்கழகச் சட்டம், பொதுப் பாடத்திட்டம் எனப் பேசும் கல்வியாளர்கள் நிதி வழங்குவதில் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை. உயர்சாதி/ உயர் வர்க்கத்தாருக்கான கல்வியை மைய அரசின் நேரடி நிதியைப் பெறும் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன். இடைநிலையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கான கல்வியை அண்ணா பல்கலைக்கழகங்களும் அவை போன்ற தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களும் வழங்குகின்றன. அப்பாவிகளாகவும் சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களாகவும் இருக்கும் கிராமத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட சாதியினருக்கும்/ வர்க்கத்தினருக்கும் முழுமையும் பயன்படாத கல்வியை மாநிலப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. உதவித்தொகைகள் வழியாகப் படிக்கும் மாணவர் எண்ணிக்கை தான் மாநிலப் பல்கலைக்கழகங்களின் இலக்குகள். எதாவது ஒரு அரசு தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவித்தொகைகளை நிறுத்தும் முடிவை எடுத்து விட்டால் தமிழ்நாட்டில் இயங்கும் 20 –க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளும் மூட்டையைக் கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
சில நூறு பல்கலைக்கழகங்களையும் அவற்றுக்குள் அடங்கிய சில ஆயிரம் கல்லூரிகளையும் வைத்துக் கொண்டு நூறு கோடியைத் தாண்டிய இந்திய மக்கள் அனைவருக்கும் கல்லூரிக் கல்வியை வழங்க முடியாத நமது அரசுகள் தொலை நெறிக் கல்வியைத் திறந்து விட்டுத் திசை திருப்பும் வேலையையும் செய்கின்றன. தரமான பட்டப்படிப்பு என்பதற்குப் பதிலாக அனைவருக்கும் பட்டப் படிப்பு என்னும் நோக்கத்தோடு அரசுகளும் பல்கலைக்கழகங்களும் செயல் படுகின்றனவோ எனக் கேட்கத்தோன்றும் விதமாகத் தொலை நெறிக்கல்வி இயக்ககங்களின் செயல்பாடுகள் மாறிக் கொண்டிருக்கின்றன. இவ்வியக்ககங்கள் இன்று பல பல்கலைக் கழகங்களுக்குப் பணம் காய்க்கும் மரங்களாக மாறிவிட்டன. பட்டம் வேண்டுமா? பணத்தைக் கட்டு எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பட்டம் இருந்தால் போதாது; அப்பட்டம் தரமான கல்வி மூலம் வந்ததாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு மாணவன் திசை தெரியாமல் குழம்பிக் கிடக்கும் நிலை தான் இந்தத் தொலைநிலைக் கல்வி அமைப்பின் பின்னணி. இந்த விமரிசனத்தைச் சொல்லி விட்டு அதன் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கி விடலாம் தான். அதனால் பெரிதாக எதுவும் நடந்து விடப்போவதில்லை. எனவே பல்கலைக்கழகத்தில் புல முதன்மையர் என்னும் உயரிய பதவி காரணமாக எனக்கு வழங்கப்பட்ட அந்த வாய்ப்பை ஏற்று அயல்நாட்டில் ஆரம்பிக்க உள்ள மையங்களைப் பார்வையிடும் உறுப்பினராகச் செல்ல சம்மதம் தெரிவித்தேன்.

பல்கலைக்கழகத்தின் படிப்பு மையம் ஒன்றைத் தொடங்கி நடத்த விரும்பும் ஒரு நிறுவனத்திற்கு அதற்கான இடம் மற்றும் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களைத்திரட்டும் திறன், மாணவர்களை ஈர்க்கும் தேர்ச்சி, அங்குள்ள அரசோடு அந்நிறுவனத்திற்குள்ள உறவு போன்றவற்றை நேரடியாகப் பார்த்து விட்டு, அதற்கான ஆதாரங்களையும் திரட்டிக் கொண்டு வந்து பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதுதான் எனது வேலை. நான் அளிக்கும் அறிக்கையின் பேரில் அந்நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதும், செய்து கொள்ளாமல் கைவிடுவதும் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கும் முடிவை பொருத்தது.
வளைகுடா நாடுகளில் பரப்பில் பெரியதும் இசுலாமியச் சட்டங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதுமான நாடு சவுதி அரேபியா. அதன் முக்கிய நகரமான டம்மாமிலும், தலைநகர் ரியாத்திலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையத்தைத் தொடங்கி நடத்த அனுமதி கேட்டிருந்தவர்கள் எனது பயண ஏற்பாட்டை- விசா, டிக்கெட் எடுத்தல், விமான நிலையத்தில் வந்து அழைத்துச் செல்லல், தங்குமிட ஏற்பாடு என அனைத்தையும் பார்த்துக் கொள்வார்கள் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் எனக்குக் கூறியிருந்தது. அதனால் எனக்குப் பெரிய சிக்கல்கள் எதுவும் வராது என்று தெரியும். ஆனால் விமானம் ஏறிக் கடல் கடந்து செல்லும் அனுபவம் புதுமையானது தானே. அதுவும் அந்த அனுபவம் முதல் அனுபவமாக இருந்தால் கொஞ்சம் மிரட்சியும் கொஞ்சம் கிளர்ச்சியும் இருக்கத்தானே செய்யும்.

மிரட்சியும் கிளர்ச்சியும் அடுத்த பதிவில்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்