April 20, 2011

தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு -கருத்தரங்கம்


தமிழ்ச் சிறுகதைக்கு நூறு ஆண்டு ஆகும் நிகழ்வைக் கொண்டாடும் விதமாகச் சென்னையில் சாகித்ய அகாடெமி ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளது. ஏப்ரல் 26 ,27 தேதிகளில் சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் நடக்கும் இக்கருத்தரங்கில் தொடக்க விழா,
நிறைவு விழாவோடு ஆறு அமர்வுகள் நடைபெற உள்ளன.
கருத்தரங்க மைய உரையை மாலனும், நிறைவுரையைப் பிரபஞ்சனும் நிகழ்த்துகிறார்கள். பாரதியைத் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்பதை நிறுவும் விதமான அமர்வில் சு.வேங்கடராமன், பெ.சு.மணி, இரா.பிரேமா ஆகியோர் கட்டுரை படிக்கிறார்கள்.  தொடர்ந்து அன்று சிறுகதைச் சிற்பிகள் என்ற பொருளில் இரண்டு அமர்வுகள் நடக்கின்றன. சா.கந்தசாமி வ் நடக்கும் முதல் அமர்வில் அ.ராமசாமி – தி.ஜானகிராமன், ப.கிருஷ்ணசாமி- மௌனி, பா.ஆனந்தகுமார்- புதுமைப்பித்தன் பற்றிக் கட்டுரைகள் படிக்க, நாஞ்சில் நாடன் தலைமையில் நடக்கும் இரண்டாவது அமர்வில் வேதசகாயகுமார் – கு.ப.ரா., கே.எஸ். சுப்பிரமணியம் – ஜெயகாந்தன், பாவண்ணன் –சுந்தரராமசாமி பற்றிக் கட்டுரை படிக்கிறார்கள்
இரண்டாவது நாள் முதல் அமர்வு தமிழ்ச்சிறுகதை- புதிய அலைகள் என்னும் பொருளில் நடக்கிறது. இரா.மோகன் தலைமையில் பத்மாவதி விவேகானந்தன்- பெண்ணியச் சிறுகதைகள், அழகிய பெரியவன் –தலித் சிறுகதைகள், எம்.ஜி.சுரேஷ் – பின் நவீனத்துவச் சிறுகதைகள் பற்றிக் கட்டுரை வழங்குகிறார்கள்.
தென்னிந்தியச் சிறுகதைகளின் செல்நெறிகள் என்னும் பொருளில் நடக்கும் அமர்விற்குத் தாமஸ் மாத்யூ தலைமை தாங்குகிறார். அவ்வமர்வில் மலையாளம் –கே.எஸ்.ரவிக்குமார், தெலுங்கு –சலீம், கன்னடம் – எஸ்.திவாகர்  ஆகியோர் பேசுகின்றனர். பிற்பகல் அமர்வில் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் இரா.காமராசு- மணிக்கொடி& சரஸ்வதி, சுப்ரபாரதி மணியந் தீபமும் அதற்குப் பிறகும், தமிழ்ச்செல்வன் – தாமரை, செம்மலர், சாந்தி, இரா.நடராசன் – வெகுஜன இதழ்கள் என்பதான பொருள்களில் கட்டுரைகள் வழங்குகிறார்கள்.
தொடக்கவிழாவிற்கு கவிஞர் சிற்பியும், நிறைவு விழாவிற்குத் திறனாய்வாளர் தி.சு.நடராசனும் தலைமை தாங்குகின்றார்கள்


1 comment :

கிருஷ்ண பிரபு said...

ஒவ்வொரு நாளும் எத்தனை மணிக்குத் தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறது என்பதைத் தெரிவிக்கவில்லையே?